Thursday, 17 January 2013

சூர்ப்பணங்கு - நாடகம் அறிமுகம்


சூர்ப்பணங்கு - ஏழு கன்னிமார் கதை



அடைவெறி நீங்காத தாய்க்கோழியின் விரித்த சிறகுகளுக்குள் அரவணைக்கப்பட்டு, தலையை மட்டும் வெளியே நீட்டியபடி கள்ளப்பிராந்தை அண்ணாந்து பார்க்கும் சிறு குஞ்சுகளாகவும், அவற்றை கொடிய உலகில் வாழ்விக்க வழியற்று தானும் அவையும் சேர்ந்து மரிக்க கிணற்றைத் தேடி அலையும் தாய்க்கோழியான நல்லதங்காளாகவும் அறிமுகமாகிறாள் சூர்ப்பணங்கு. ஆண்டாண்டு காலமாய், சென்ம சென்மமாய் அடுப்படிகளிலும், படுக்கையறைகளிலும், இருண்ட வீதி முனைகளிலும், முள்ளுக்காடுகளிலும், திரையரங்குகளிலும், ஊடகங்களிலும், இணையங்களிலும், ஓடும் பேருந்துகளிலும் நார்நாராக கிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்ணுடலின் மொத்த வடிவாய் எழுந்து நிற்கிறாள் சூர்ப்பணங்கு. பாழாய் விரிந்து கிடக்கும் பூமியில் ஊட்ட ஒரு வாய்ச்சோறு கிடைக்காமல் தன் ஏழு பிள்ளைகளுடன் மரணத்தை அணைக்கும் தாய், இறுதியில் ஏழு தனங்களைக் கொண்டவளாய் அவதரித்து உலகுக்கு அமுதூட்டுகிறாள். செவ்விற மேலாடை குருதியால் நனைந்த படியும், வெண்ணிற பாவாடை, சாட்டையடிகளுக்கு ஏற்றவாறு முடிச்சுகளை இறுக்குவதுமாக பெண்ணுடலின் மீதான அதிகாரம் தொன்மம் தொட்டு தொடர்ந்து வருவதை அழுத்தமாக பதிவு செய்கிறாள் சூர்ப்பணங்கு.

வைக்கோல் பிரியை கூந்தலாய் கொண்டு, அதிலும் வண்டுகள் ஊறும் உருவகத்தைக் கொண்டவளாய் வருகிறாள். திசைக்கொன்றாய் முளைக்குச்சிகளடித்து அடைப்புகளை ஏற்படுத்தி, அம்முளைக்குச்சிகளை தன் அடிவயிற்றியிலும் ஏற்றிக் கொள்கிறாள். பின் வெறி கொண்டவளாய் முளைக்குச்சிகளை பிடுங்கி எறியவும் செய்கிறாள். விளக்குமாறையும், முறத்தையும், உலக்கையையும் சடங்குகளின் தொடர்ச்சியாய் சுமந்து கொண்டலைபவள், அவற்றை ஆயுதமாக்கி அதிகாரத்தை நோக்கி இடிமுழக்கமும் இடுகிறாள். ஒரு பார்வைக்கஞ்சும் சிறுபெண்ணாகவும், ஆங்காரங்கொண்டாடும் வனப்பேச்சியாகவும் இருவேறு இயல்பை ஒன்றாய்க் கொண்டவளாய் இருக்கிறாள் அணங்கானவள். பர்தாவுக்குள் உடம்பை குறுக்கிக் கொண்டு கண்மூடிய நிலையிலும் கல்விக்காக அலைமோதுகிறாள். நெல்குத்தும் உலக்கையின் ஒலி அதிர அதிர பூமியைப் பிளக்கும் ஆவேசங்கொண்டவளாய் அடுக்குமுறையை அடிபணிய வைக்கிறாள். ஒவ்வொரு வன்கொடுமையின் போதும் தன் சுயத்தை காத்துக் கொள்ளப் போராடும் அவள், மாரிலடித்துக் கொள்கிறாள், உழன்று தவிக்கிறாள், விடுவித்துக் கொள்ளத் துடிக்கிறாள், இறுதியில் ஒவ்வொரு முறையும் தன்னைத் தானே பலிகொடுத்தே மாண்டு போகிறாள். அவள் கண்ணீரில் வடிந்த உப்பு நீர் உலகை ஆட்கொள்கிறது.

இன்று கொடுங்கோலர்களிடமிருந்து மட்டுமல்ல, வீட்டிற்குள்ளே ஒன்றும் வெளியே ஒன்றும் பேசித்திரியும் பெண்ணியவாதிகளிடமிருந்தும், சர்பமாய்த் தீண்டக் காத்திருக்கும் கலாச்சார காவலர்களிடமிருந்தும் தன்னை மீட்டுக் கொள்ள பெண் போராட வேண்டியிருக்கிறது. நிர்கதியாய் நடுரோட்டில் கிடந்த ஒருத்தியை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சமுதாயம் தான் இன்று அவள் சாவிற்கு மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டிருக்கிறது. சமுதாய அக்கறைக்காக பாடுபடுவதாக சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் ”சிறப்புப்பார்வை”க்கு நடுவில் பெண்ணுடலைத் தான் விற்றுக் கொண்டிருக்கின்றன. அவை பெண்ணை உபயோகித்து விட்டு தூக்கி எறியும் ஒரு பண்டமாக காட்டிக் கொண்டே, பெண்ணுரிமையைப் போற்றி சிறப்புக் கட்டணத்தில் குறுஞ்செய்திகள் அனுப்ப அழைப்பு விடுக்கின்றன. அரசாங்கமும், அதிகாரமும் புரையோடிப் போயிருக்கும் புண்ணுக்கு புணுகு பூசும் வேலையைத் தான் காலம்காலமாக செய்து கொண்டிருக்கின்றன.

”மணல்மகுடி” குழுவினர் நடத்திய சூர்ப்பணங்கு நாடகம் மதுரை டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவியர் முன்னே நிகழ்த்தப்பட்டது. கோவில்பட்டி ச.முருகபூபதியின் இயக்கத்தில் நடைபெற்ற இந்த நாடகத்தில் நடித்த இளைஞர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து நடித்திருந்தனர். தேர்ந்த கலைஞனுக்கான நேர்த்தியுடனும், தெளிவான உச்சரிப்புடனும், கணீர் குரல் வளத்துடனும் நூறு சதவீத ஈடுபாட்டுடன் களப்பணியாற்றினர். அமைக்கப்பட்ட மேடை கூட இல்லை, சிறு கற்கள் குத்தும் செம்மண் தரையில் தான் நாடகம் நடந்தேறியது. ஆனாலும் நடித்தவர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. அருள் வந்து ஆவேசங்கொண்டாடுபவர்களைப் போல அர்பணிப்புடனும், முழு ஈடுபாட்டுடனும் தம்மை முழுமையாக சூர்ப்பணங்கிற்கு ஒப்புக் கொடுத்து விட்டது போலிருந்தது. ஒலியமைப்பும், இசையும், வெளிச்ச வடிவமும் நாடகத்துக்கான நிஜத் தன்மையை அதிகரித்தன.

நாடகக்குழுவினர் சொல்ல வந்த கரு அங்கு கூடியிருந்த மாணவியர்களுக்கு முழுமையாய் சென்று சேர்ந்தது என்பதற்கு நாடகம் முடிந்தவுடன் எரிமலை போல் வெடித்துக் கிளம்பிய அந்த பெண்களின் ஆவேசம் கொண்ட கைத்தட்டல்ள் மட்டும் தான் தற்பொழுதைக்குள்ள ஒரே சாட்சி. ஆனாலும் விதைகள் விழுந்திருக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது.

உதவி: 
http://nesamithran.blogspot.in/2011/12/blog-post.html
http://tamizharivu.wordpress.com/2011/10/07/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/
http://livingsmile.blogspot.in/2011/06/blog-post_28.html
******

வி.பாலகுமார்.

Wednesday, 9 January 2013

வாசிப்போர்களம்-9


தோழர்களே!

இந்தப் புதிய ஆண்டின் (2013) முதல் கூட்டம் வருகிற 12/01/13 ந் தேதி  மாலை 04-30 மணிக்கு நமது வழக்கமான இடத்தில் கூடுகிறது. தோழர்கள். பாலகுமாரும், சுந்தரராஜனும் நல்ல நூல்களை அறிமுகம் செய்ய இசைந்துள்ளார்கள். இந்த ஆண்டில் நமது வாசிப்போர்களத்தை விரிவுபடுத்தும் விதமாக புதிய தோழர்களை இணைக்கும் முயற்சியில் நமது உறுப்பினர்கள் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.    

Sunday, 6 January 2013

வரலாற்றுப் பதிவுகளில் திரிபுகள்-2


" இறைவனின் சித்தத்தால் இந்தியா எதிர்காலத்தில் பற்றாக்குறையுள்ள , எதிர்கால நம்பிக்கையற்ற , மனநிறைவற்ற நாடாக இருக்காது. மாறாக தொழில் துறையில் முன்னேற்றமடைந்த நாடுகளில் ஒன்றாக , எழுச்சிபெற்ற, திறமை படைத்த , செல்வம் செழித்தோங்கிய , வளமும் , வசதியும் மூளைமுடுக்கெல்லாம் பரவிய ஒரு நாடாக எதிர்காலத்தில் திகழும்"
----டெல்லி அரசவை கூட்டத்தில் பேசப்பட்ட செய்தி.

இப்படி தேசப்பற்றுடன் பேசியவர் ஒரு இந்திய அரசியல் தலைவராக இருப்பார் என்று நீங்கள் நினைத்திருந்தால் நிச்சயம் ஏமாந்துபோவீர்கள். ஆமாம்! மேற்கண்ட வார்த்தைகளுக்குச் சொந்தக்காரர் பிரிட்டிஷ் இந்தியாவின் வைசிராய் மற்றும் கவர்னர் ஜெனரல் கர்சான் பிரபு.  இது கி.பி.1903 ஆம் ஆண்டு டெல்லி அரசவைக் கூட்டத்தில் கர்சான் நிகழ்த்திய உரையே! 

மேற்கண்ட பகுதியை நான் வாசித்தது இந்திய வரலாற்றில் பகவத்கீதைஎன்ற நூலில் தான். அதை எழுதியவர் பிரேம்நாத் பசாஸ், தமிழ் வடிவம் கொடுத்தவர் கே.சுப்ரமணியன்.  இந்நூலின் 29 அத்தியாயத்தில் , இந்தியாவின் பொற்காலம் என்று குறிப்பிட்டால் அது ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலமே என்று பதிவு செய்துள்ளார். அதற்கு அவர் கொடுத்திருக்கும் காரணங்களும் எனக்குத் சரியாவே தோன்றுகிறது.   
            
பொதுவாக மனிதகுல வாழ்வையும் உலக வரலாற்றையும்  குறிப்பாக நம் நாட்டின் வரலாற்றை கற்பதில் எனக்கு எப்போதும் தணியாத ஆர்வம் உண்டு.. இளம் வயதில் பள்ளியில்  "குப்தர்களின் காலம் இந்தியாவின் பொற்காலம்" என்றும், ஆங்கிலயர்கள் இந்தியாவை அடிமைபடுத்தி நம்மை அடிமைகளாக வைத்திருந்தனர், அவர்களது பிரித்து ஆளும் சூழ்ச்சியினால் தான் நமது ஒற்றுமை சிதைந்து நாம் அவர்களுக்கு அடிமைகளாக 300 ஆண்டுகள் இருந்தோம் என்றும் சொல்லிக் கொடுத்த போது அவைகளை அப்படியே நம்பினேன். ஆனால், இந்திய வரலாறு சரியான வகையில் எழுதப்படவில்லை என்பதை புரிந்து கொள்வதற்கு எனக்கு பல ஆண்டுகள் தேவைப் பட்டது. எந்த ஆங்கில ஆட்சியின் மீது எனக்குள் கோபமும் வெறுப்பும் திணிக்கப்பட்டதோ  அவர்களே இந்தியாவை ஒருங்கிணைத்தவர்கள் என்றும், பல ஆங்கிலேய அதிகாரிகள் நம் நாட்டையும்,மக்களையும் நேசித்துள்ளார்கள் என்று அறியும் போது மனதிற்குள் நெகிழ்வும் அவர்கள் மீது மரியாதையும் ஏற்பட்டது.

அதிலும் , கர்சான் காலத்தில் தான் ( கி.பி. 1899-1905) இந்தியாவின் வரவு செலவு திட்டம் (BUDGET )  உபரியாக இருந்தது. அதன் விபரம் இதோ;

கி.பி 1898-99     ரூ,1.30 கோடி உபரி.
கி.பி 1900-91     ரூ,1.50 கோடி உபரி.
கி.பி 1902-93     ரூ,4.50 கோடி உபரி.

{இதற்குப் பிறகு , இந்தியாவின் வரவு செலவு திட்டம் உபரியாக இருந்ததாக எனக்குத் தெரியவில்லை.அதுவும் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேல் பற்றாக்குறை பட்ஜெட்டைப் பார்த்து எனக்குப் பழகிப் போய்விட்டது. உபரி பட்ஜெட் என்பது இந்தியாவில் இனி இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது}

இவற்றைத் தவிர, கல்வித்திட்டம் சட்டஆணையம், போக்குவரத்து மற்றும் "சதி" என்ற உடன்கட்டை ஏறும் வழக்கத்தை ஒழித்தது போன்றவை நடந்தேறியது இந்தக்காலக் கட்டத்தில் தான். அதனால் , இந்திய வரலாற்றில் பொற்காலம் என்று உண்டு என்றால் அது பௌத்தர்கள் கூறிவது போல் மௌரியர் காலமும் அல்ல, இந்துக்கள் கூறுவது போல் குப்தர்கள் காலமும் அல்ல, இஸ்லாமியர்கள் கூறுவது போல் முகலாயர்கள் காலமும் அல்ல. மாறாக 19 ஆம் நூற்றாண்டில் இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டிஷார் காலமே என்று பிரேம்நாத் பசாஸ் எழுதிருப்பதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

(“இந்திய வரலாற்றில் பகவத்கீதை விடியல் பதிப்பகம் . விலை. ரூ.350/-
எழுதியவர் பிரேம்நாத் பசாஸ், தமிழ் வடிவம் கொடுத்தவர் கே.சுப்ரமணியன்.  பதிப்பு-2006
பக்கங்கள்-950)
---சு.கருப்பையா.

Friday, 4 January 2013

வரலாற்றுப் பதிவுகளில் திரிபுகள்!


சில சமயம் நல்ல எழுத்தாளர்கள் கூட நமக்கு குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.  அப்படி ஒரு செய்தி தான் இது. சமீபத்தில் நியூ செஞ்சுரியின்   சிறுநூல் வரிசையில் வந்த பிரபல எழுத்தாளர் பொன்னீலன் அவர்களின் " பகவான் புத்தர்" என்ற சிறு படைப்பை வாசித்தேன். அதில் சித்தார்த்தன் கி.மு.623 இல் பிறந்தார் (பக்கம் -7) எனவும் , கி.மு. .542 இல் சுந்தன் என்ற கொல்லர் வீட்டில் பன்றி மாசிச உணவு உண்டு அவர் இறந்தார் (பக்கம்-14) எனவும் பதிவு செய்திருந்தார். இதை ஏற்றுக் கொள்வதில் எனக்கு சிறிது நெருடல் ஏற்பட்டது.

காரணம் , திரு.பிரேம்நாத் பசாஸ் எழுதிய " இந்திய வரலாற்றில் பகவத்கீதை" (விடியல் பதிப்பகம்) என்ற சிறப்பான நூலில், புத்தர் கி.மு.543 இல் பிறந்தார் (பக்கம் -154) எனவும், கி.மு. .483 இல் சுந்தன் என்ற கருமான்   வீட்டில் காளான் உணவு உண்டு அதனால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு அவர் இறந்தார் (பக்கம்-163) எனவும் பதிவு செய்திருந்தார்.  இது மிகச் சிறந்த ஆய்வுநூல், இந்நூல் பற்றி விபரமாக பின்னர் எழுதுகிறேன்.

சரி! வலைத்தளங்கள் என்ன பதிவு செய்திருக்கின்றன என்று பார்க்கலாம் என்று  தேடினால்  http://www.humanjourney.us/buddhism2.html  எனக்கு மேலும் குழப்பம் ஏற்பட்டது. ஆம்! இங்கே கொடுப்பட்டுள்ள வலைத்தளத்தில் புத்தரின் காலம் கி.மு.490-410  என பதிவு செய்து இருந்தார்கள்!
அடுத்து விக்கி பீடியாவிற்கு ஓடினேன். விபரம் இதோ;
புத்தர் பிறப்பு: கி.மு.563;
புத்தர் இறப்பு: கி.மு.483 அல்லது கி.மு.411-400.

ஆனால் எல்லோரும்,  புத்தர் 80 வயதில் இறந்தார் என்று மட்டும் தெளிவாக பதிவு செய்திருந்தனர். இதில்  புத்தரின் மறைவில் விக்கி பீடியாவின் கருத்து சற்று  வித்தியாசமாகவும்   கொஞ்சம் நம்புமாறும் இருக்கிறது! அதாவது புத்தரின் இறப்பு காளான் உணவினால் என்று "சைவ" உணவு உண்பவரும், பன்றிக்கறி உணவினால்  என்று  அசைவ உணவு உண்பவர்களும் பதிவு செய்து இருக்கிறார்கள். ஆனால் அவர் முதுமைபருவத்தின் காரணமாகவே இயற்கை எய்தினார் என குறிப்பிட்டுள்ளது.    

இந்திய வரலாற்று சுவட்டில் , நம் நாடு பெற்றெடுத்த மிகச்சிறந்த மனிதனின் வரலாற்றைக்கூட சரியாக பதிவு செய்யாதது மிகவும் வேதனையாக இருக்கிறது.  புத்தரின் உண்மையான காலத்தை  யாரவது கூறுங்களேன் !

----சு.கருப்பையா.

Monday, 31 December 2012

வாசிப்போர்களம்-8


தோழர்களே! இந்த ஆண்டின் இறுதி கூட்டம் 25-12-2012 ந் தேதி சிறப்பாக நடைபெற்றது. தோழர்.அருணாசலம் , "மோகமுள்" என்ற நூலினையும் , தோழர். தெய்வேந்திரன் " ஆற்றங்கரை ஓரம்”  என்ற நூலினையும் அறிமுகம் செய்து வைத்தனர். இதில்  தி.ஜ.ரா வின் மோகமுள் நூல் 1950 களில் வெளிவந்து மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்திய நூல். பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது.

நூலின் சுவையான பகுதிகளை இப்பொழுது பார்க்கலாம்.

-1-


புத்தகம்     : ஆற்றங்கரை ஓரம்
ஆசிரியர்  : வெ.இறையன்பு.இ.ஆ.ப.
பதிப்பு       : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
வருடம்   :  2004
பக்கங்கள் : 203
விலை      : ரூ.55.00
அறிமுகம் : தோழர். தெய்வேந்திரன்

இந்த நாவல்,  “சிந்தூர் என்ற கிராமத்தின் அழகையும் அதனூடே நிகழ்ந்த அவலங்களையும் மனிதாபிமான நோக்கில் எழுதப்பட்டது. மலைவாழ் மக்களின் குடியிருப்பான சிந்தூரையும் அதையொட்டி பாயும் நதியையும், இயற்கை வளம் கொழிக்கும் அப்பகுதியை  மூழ்கடிக்கும் "அணைத்திட்டதையும்" நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திருக்கிறார் நாவலின் ஆசிரியர்.  இது கற்பனையாகப் புனையப்பட்ட நாவல் அல்ல அதற்கு மாறாக இந்திய துணைக்கண்டத்தில் நடந்த உண்மை நிகழ்வு என்பதை நாவலை படிக்கத் தொடங்கிய உடனே   நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆம் ! நர்மதா அணையின் குறுக்கே கட்டப்பட்ட அணைதிட்டதையும் அதற்கு எதிராக நடைபெற்ற மேதா பட்கரின் நீண்ட போராட்டத்தையும் கருவாகக் கொண்டுள்ளது தான் இதன் சிறப்பு.

சிந்தூரைச் சேர்ந்த இளைஞன் சிமன் தான் நாவலின் நாயகன். ஓரளவு படித்தவனான இவனது வர்க்க உணர்வும் ,அணைகட்டுவதற்கு எதிரான  போராட்ட உணர்வும் , அவனது  தோல்வியும்  மிகவும் யதார்த்தமாக எழுதப்பட்டுள்ளது. சமூகப்போராளி வீரப்பெண்மணி ராதாப் படேங்கருடன் சேர்ந்து அணைக்கட்டுவதற்கு எதிராகப் சிமன் போராடும் போதும் , தனது மனம் கவர்ந்த பெண் மிருதுளா புலம் பெயர்ந்து காணாமல் போன போதும் , தனது தந்தை கோவிந்த்பாயி ஆற்று நீரில் மூழ்கி இறந்த பின்னர் ஏற்படும் அவனது துயரமும் நம்மை பாதிக்கவே செய்யும்.  

அணை கட்டுவதால் வெளியேற்றப்படும் மக்களுக்கு நிவாரணம் அளிக்க வரும் நேர்மையான அதிகாரி "சுதிர்"  மற்றும் அவருக்கு தொல்லை தரும் கலெக்டர் குல்கர்னி , நீர்ப் பாசான மந்திரி சுக்லா  என அனைத்துப் பாத்திரங்களும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டுத் திட்டத்தினால் வெளியேற்றப்படும் மக்களுக்கு கொடுக்கப்படும் குறைவான நிவாரணம் மற்றும் பயனில்லாத தருசு நிலங்கள் போன்றவற்றை நேரில் பார்த்து மனம் வருந்தும் சுதிர், அரசு செயலருக்கு எழுதும் கடிதம் ஒரு நேர்மையான மனிதரின் மனசாட்சி என்பதை நம்மால் உணர முடியும். இருந்தும் சுதிரின் கருத்திற்கு மதிப்பில்லாமல் போவதும் , அவர் அரசு இயந்திரத்தால் மாற்றப் படுவதும் இன்றும்  நிலவும்  யதார்த்தம்.

ராதா படேங்கருடன் வரும் அவரது சக தோழர்கள் நிதின் மற்றும் சந்தீப் ஆகியோர்கள் சிந்தூர் கிராமத்தை நேசிப்பதையும் , சிந்தூர் மக்களின் எளிமையும் , அவர்களது வாழ்வாதாரம் பறிக்கப்படுவது கண்டு மனம் வருந்துவதும் இயல்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தின் இடையில் நிதினின் தற்கொலை கண்களில் நீர் சுரக்கச்செய்கிறது. இறுதியில் , ராதாப் படேங்கர் போராட்டத்தில் தோல்வியுற்று சிந்தூரை விட்டு வெளியேறும் போது கலங்குவதும் , அவர் கணவரை ரயிலில் சந்திப்பதும் சுவாரசியம்.  அவர் , போராட்டத்தில் நீ என்ன சாதித்து விட்டாய்? என்று கிண்டல் செய்யும் போது, ராதாப் படேங்கர் ," நாங்கள் தோற்றாலும் இந்தியாவில் கட்டப்படும் கடைசிப் பெரிய அணை இதுவாகத்தான் இருக்கும், இன்னொரு பெரிய அணை இந்த நாட்டில் உருவாகாது என்று பதில் அளிப்பது சரியான பதிலடி . இதில் ஆச்சரியம் என்னவென்றால் , இந்த நாவல் எழுதப்பட்டு 16 ஆண்டுகளுக்குப் பிறகு இதே வார்த்தையை கூடங்குளம் அணு உலைப் போராட்டத்தில்  தோழர். உதயகுமார் குறிப்பட்டார் என்பது நாவலாசிரியர் இறையன்பு அவர்களுக்கு கிடைத்த வெற்றி. அது மட்டுமல்லாமல்  இந்த நூலுக்கு அணிந்துரை வழங்கிய பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் , இந் நாவலில் வருகிற பத்திரங்கள் ஒவ்வொன்றும் பிசிறில்லாமல் வார்க்கப்பட்டுள்ளனர். எல்லோரும் மேன்மையானவர்கள் என்று மனம் திறந்து பாராட்டியுள்ளார்.

நமது தோழர்,வா. நேரு , இறையன்புவின்  18 நூல்களை ஆய்வுக்கு எடுத்து "  இறையன்புவின் படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனிதநேயமும்" என்ற தலைப்பில் தான் ஆய்வுநூல் பதிவு செய்து "முனைவர்"  பட்டம் பெற்றார் என்பது இன்னொரு மகிழ்ச்சியான  செய்தி. இறையன்பு உண்மையிலே வெற்றிகரமான படைப்பாளரே!


-2-


புத்தகம்     : மோகமுள்
ஆசிரியர்   : தி.ஜானகிராமன்
மறு பதிப்பு       : ஐந்திணை பதிப்பகம்
வருடம்   :  2008
பக்கங்கள்:  685
விலை     : ரூ.300.00
அறிமுகம் : தோழர். அருணாசலம்

யமுனா என்ற உன்னதமான பெண்மணியும் , பாபு என்ற இளைஞனையும் முக்கியப் பாத்திரங்களாகக்   கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நாவல் தஞ்சை மற்றும்  கும்பகோணம் பகுதிகளின் பேச்சு, வாழ்க்கைசங்கீதம் மற்றும் மோகம் இவைகளை உள்ளடக்கி எழுதப்பட்ட உளவியல் நாவல் இது.

யமுனா, சுப்பிரமனிய அய்யருக்கும் , பார்வதி என்ற இரண்டாவது மனைவியான மராட்டிய பெண்மணிக்கும் பிறந்தவள். தஞ்சாவூரில் குடியிருக்கும் சுப்பிரமணிய அய்யர், யமுனாவையும் அவளது அம்மாவையும் கும்பகோணத்தில் உள்ள துக்காம்பாளயத்தில் குடிவைக்கிறார். அவர்களுக்கு வருடத்திற்கு பத்துமூடை  நெல் மற்றும் தேவையான உதவிகளை பாபநாசத்தில் வசிக்கும் வைத்தி அய்யர் மூலமாக கொடுத்து வருகிறார்.  அந்த வைத்தி அய்யரின் மகனே பாபு. நாவலின் ஆரம்பத்தில் இருபது வயது வாலிபனாக அறிமுகம் ஆகும் பாபு BA படித்து வருகிறான்.  அப்போது யமுனாவிற்கு 30 வயது.

இயல்பாகவே மிகவும் அழகாகவும்கம்பீரமாகவும் மற்றும் மதிநுட்பமும் படைத்த யமுனா பாபுவை மிகவும் கவர்ந்து விடுகிறாள். அவளுக்கும், அவளது அம்மாவிற்கும் பல உதவிகள் செய்து வருவதால் இவனும் யமுனாவின் குடும்பத்தில் பிரிக்க முடியாத ஒரு  அங்கத்தினன் ஆகிவிடுகிறான். ஆரம்பத்தில் அன்பு மற்றும் நேசித்தல் என்ற கோணத்தில் இருந்த இவர்களது உறவு , யமுனாவை கோவையிலிருந்து ஒருவன் பெண் பார்க்க வந்தவுடன் புது வடிவு எடுக்கிறது. அவன் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் என்றும், யமுனா அவனுக்கு இரண்டாவது மனைவியாகத்தான் போகிறாள் என்றதும் மிகவும் கோபப்படுகிறான். யமுனாவின் தகப்பனார் மராட்டியர் இல்லை என்பதையும் , கலப்புத் திருமணத்தின் மூலம் பிறந்தவள் தான் யமுனா என்பதையும் பாபு மூலம் தெரிந்து கொண்ட கோவை மாப்பிள்ளை தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று கோபத்துடன் சென்று விடுகிறான். அதனால் யமுனாவின் திருமணம் தடை படுகிறது. அப்பொழுது பாபுவின் மனம் சந்தோசம் அடைகிறது. இதுவே , பாபுவின் மனதில் யமுனா ஆழமாக பதிந்து உள்ளாள் என்பதை எடுத்துக்காட்டும் தருணமாக இருக்கிறது. காதலுக்கு வயது இருக்கிறதா என்ன?
அதன் பின்னர்  சுப்பிரமணிய அய்யரின் இறப்பிற்குப் பிறகு யமுனாவின் ஏழ்மை மற்றும் திருமணத்தடை போன்றவைகள் பாபுவின் உதவியை   அடிக்கடி நாடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறது.  அத்துடன் யமுனாவின் அண்ணன் சுந்தரம் இவர்களுக்குச்   சேரவேண்டிய நெல்லையும் உதவியையும் நிறுத்திவிடுகிறான். அதனால் , யமுனா, அவர்களது நகைகளை ஒவ்வொன்றாக விற்க ஆரம்பிக்கிறாள். அதற்கு பாபு தான்  உதவி செய்கிறான். இந்தச் சமயத்தில் தான் பாபுவின் மனம் யமுனாவை ஆழமாக நேசிக்கத் துவங்குகிறது. பாபுவின் நண்பன் ராஜம் பாபுவிற்கு மிகவும் ஆறுதலாகவும், நம்பிக்கை தருபவனாகவும் இருக்கிறான். இவனே பாபுவின் அன்பை யமுனாவிடம் தெரியபடுத்திவிடுகிறான்.

இத்தருணத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த கங்காதரம் பிள்ளை என்பவர்  யமுனாவை தன்னுடன் சேர்த்துக் கொள்வதாகவும் ,    வேண்டிய பொருள் உதவி செய்வதாகவும் பார்வதிக்கு தூது அனுப்புகிறார் . ஏற்கனவே திருமணம் ஆகாமல் தவித்துக் கொண்டிருக்கும் யமுனாவிற்கு , பாபுவின் காதலும் வேதனையைத் தருகிறது. அவர்களுக்கிடையில் இருக்கும் வயது வித்தியாசமும், பாபு குடும்பத்தாரின் நிலையையும் கருத்திற்கொண்டே யமுனா இதற்கு சம்மதிக்கிறாள். ஆனால், பாபு திட்டவட்டமாக எதிர்ப்புத் தெரிவிக்கிறான். இங்கே தான் பாபு தன் அன்பை அவளிடம் தெரிவிக்கிறான். ஆனால், பாபு அதற்கு திட்டவட்டமாக எதிர்ப்புத் தெரிவிக்கிறான். இங்கேதான் பாபு தன் அன்பை அவளிடம் தெரிவிக்கிறான். யமுனா அதை மறுத்து அவனுக்கு புத்திமதி கூறி படிப்பையும், சங்கீதத்தையும் நன்றாக கற்குமாறு வலியுறுத்துகிறாள். பாபு , நிறைவேறாத மோகம் என்னும் முள்ளுடன் சென்னைக்கு செல்கிறான்.

எட்டு ஆண்டுகள்  உருளுகின்றன. பாபு சென்னையில் சிலருக்கு பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறான். பின்னர் , ஒரு இன்சூரன்ஸ் கம்பனியில் PRO  ஆக பணியில் சேருகிறான் . ஒரு நாள், வயதான அம்மாள் ஒருவர் பார்க்க வந்துள்ளதாக அவனுக்கு தகவல் வருகிறது. பாபு யாராக இருக்கும் என்ற யோசனையில் வருகிறான். யமுனா! ஏறத்தாள 39  வயதான யமுனா , 50 வயது கிழத்தோற்றத்தில் ! அதிர்ந்து விடுகிறான் பாபு!

இடையில் நடந்த கதையை  யமுனா விவரிக்கிறாள். கங்காதரம் பிள்ளையுடன் சேர்ந்த வாழ கட்டாயப்படுத்திய அவளது அம்மாவை பிரிந்து தனியாக வாழ்ந்ததாகவும், சரியாக சாப்பிட்டு மூன்று மாதங்கள் ஆகின்றன என்றும், வேறு வழிஇல்லாமல்  பாபு வழி காட்டுவான் என்று வந்து விட்டதாக தெரிவிக்கிறாள்.  பாபு மிகவும் வேதனைப் படுகிறான். கூடவே  அவனுள் இருந்த காதல் விழிக்கத் துவங்குகிறது.

பாபு, அவளை பத்மாசினி என்ற அம்மையார் நடத்தும் ஒரு தன்னார்வ மையத்தில் வேலைக்குச் சேர்த்து விடுகிறான். யமுனாவும், பாபுவும் சந்தித்து தங்களது கடந்த கால வாழ்க்கையை பகிர்ந்து கொள்கிறார்கள்.அவனை எப்போதும் ஏற்றுக்கொள்ளாத யமுனா இப்போது ஏற்றுக் கொள்கிறாள்.  உன் திருப்திக்காகத்தான் நான் உயிரை வைத்திருக்கிறேன். உன்னைத் திருப்தி செய்யறது தான் என் கடமை.
அதனால்  "எடுத்துக்கோ" என்கிறாள்.

அடுத்த வாரம்,  சுரத்தில் படுத்திருக்கும் பாபுவை பார்க்க வருகிறாள் யமுனா. அன்று இரவு; யமுனாவும் பாபுவும் இணைகிறார்கள். எட்டு ஆண்டுகளாக பாபுவின் மனதை வதைத்த மோகம் என்ற முள் பிடுங்கப்படுகிறது!    

காலையில் எழுந்ததும்  பாபுவின் கைகளை பிடித்துக் கொண்டே  யமுனா," திருப்திதானே" , வருஷக்கணக்காக , எத்தனை வருஷம் , எட்டு வருஷமா இல்லை, விவரம் தெரிந்தது முதல் , பையனாக இருந்தது முதல் தவிச்சதெல்லாம் இதற்குத்தானே?" என்று கேட்கிறாள். பாபு மௌனமாகிறான்!

அதன் பிறகு , யமுனா முழு விபரங்களையும் பாபுவின் தந்தை வைத்திக்கும், பத்மாசினிக்கும் தெரிவித்து விடுகிறாள். அவர்களை ஏமாற்ற அவள் விரும்பவில்லை. அத்துடன் பாபுவிற்கும் கடிதம் எழுதி வேறொரு நல்ல பெண்ணை திருமணம் புரிந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறாள். ஆனால், மிகுந்த மனவருத்தம் அடைந்திருந்த பாபு சங்கீதம் கற்றுக்கொள்ள மங்கல்வாடி செல்கிறான். ரயில் நிலையத்தில் அவனது கையில் யமுனா ஒரு கவரைக் கொடுக்கிறாள். அதில்  யமுனா வைத்திக்கு எழுதியதும் , வைத்தி, யமுனாவிற்கு எழுதிய பதிலும்.   அக்கடிதத்தில்  வைத்தி இவ்வாறு குறிப்பிட்டு இருப்பார்," இவ்வளவு கௌரவப் புத்தியும் நேர்மையும் யோசனையும் இருக்கிற உன்னிடம் யாரையும் ஒப்படைக்கலாம்.   அப்படியென்றால் பாபுவின் தந்தை அவளை மருமகளாக ஏற்றுக் கொண்டார் என்று தானே அர்த்தம்


இந்த நாவலைப் பற்றி எழுத்தாளர். க.ந.சுப்பிரமணியம்;

" மிகவும் சிறப்பாக அமைந்துவிட்ட ஒரு உன்னதமான சிருஷ்டி . மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள நல்லதோர் சாதனை-பெரியதோர் சாதனை"

நல்ல நாவல்களை அறிமுகப் படுத்திய தோழர்.அருணா  மற்றும் தெய்வேந்திரன் ஆகியோர்களுக்கு
நன்றி!
---வாசிப்போர்களம்-மதுரை.





Sunday, 23 December 2012

வாசிப்போர்களம் - சந்திப்பு!


தோழர்களே! நாளை 25/12/2012 ந் தேதி மாலை 04.30 மணிக்கு  நமது களம் கூடுகிறது. தோழர். அருணாவும், தெய்வேந்திரனும் நல்ல நூல்களை அறிமுகம் செய்கிறார்கள். அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள். புதிய தோழர்கள் கலந்துகொள்ள விரும்பினால் அழைத்து வாருங்கள்.

வாசிப்போம், கற்போம், செயல் படுத்துவோம்!

Tuesday, 18 December 2012

நமது கூட்டம்

தோழர்களே! வாசிப்போர்களத்தின் இந்த மாதக்கூட்டம் தவிர்க்கமுடியாத காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் ஓரிரு தினங்களில் சரியான நாள் அறிவிக்கப்படும். விரைவில் சந்திப்போம்.