Friday 22 March 2013

சிறுகதைகள்-மொழிபெயர்ப்பு



மலைகள் வலைத் தளத்தில் வெளிவந்துள்ள ஜப்பானிய எழுத்தாளர் ஹருகி முரகமி அவர்களின்  சிறுகதை: "மனிதனைத் தின்னும் பூனைகள்".

தமிழில் மொழிபெயர்த்தவர் தோழர்.V. பாலகுமார் : சிறுகதை இங்கே சொடுக்கவும்  http://malaigal.com/?p=1758

Thursday 21 March 2013

சூரிய வம்சம் (நாவல்) -சா.கந்தசாமி.


வாசிப்போர்களம்- 12 இல்  தோழர். தேவேந்திரன் அறிமுகம் செய்த நூல்:

சூரிய வம்சம் (நாவல்)
சா.கந்தசாமி
கவிதா பப்ளிகேஷன்
விலை : ரூ.110
பக்கம் : 256
ஆண்டு : டிசம்பர் 2007

தகப்பன் இல்லாத குழந்தையாக , சிறுவயதில் பள்ளிப்படிப்பை இழந்து, குழந்தை  தொழிலாளியாக வாழ்ந்து , அரசு ஊழியனாக  உயர்ந்து , ஒரு தொழிற்சங்கத் தலைவனாக வளர்ந்த செல்லையாவின் கதையே சூரிய வம்சம் . சா.கந்தசாமி, தனது பால்ய நண்பனின் கதையை எழுதி இருக்கிறார் என்பதை அவரது முன்னுரையில் இருந்து தெரிந்து கொள்ள முடிகிறது. 

நல்லூரில் பிறந்த செல்லையா ,எழாம் வகுப்புடன்  தனது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு அல்லியூர்  மணியின் சைக்கிள் கடையில் அவனது தாய் சொர்ணத்தால் வலுக்கட்டாயமாகச் சேர்க்கப்படுகிறான்.  சைக்கிள் கடையுடன், சாராயமும் விற்கும் மணியின் நடவடிக்கையால் போலீஸ் ஸ்டேஷன் வரை செல்லும் செல்லையா  பின்னர் அவனிடமிருந்து விலகி  சாம்பசிவம் சைக்கிள் கடையில் சேருகிறான். அந்தக் கடையை செல்லையா நன்றாக கவனித்துக் கொள்கிறான். அவனது வேலை நுணுக்கமும், நேர்த்தியும்,  பராமரிப்பும் சாம்பசிவத்தை கவருகிறது. சாம்பசிவத்தை பார்க்க வரும்  ராமு, செல்லையா வேலைசெய்யும் பாங்கினைப் பார்த்து அவன் நல்ல மெக்கானிக்காக வரும் தகுதி இருப்பதை அறிந்து தமது ஒர்க்சாப்புக்கு அனுப்புமாறு கேட்கிறான்.  நல்ல மனம் படைத்த சாம்பசிவம்செல்லையா ராமுடன் செல்வதால் நல்ல எதிர்காலம் கிடைக்கும் என்று கருதி அவனுடன் அனுப்புகிறான்.

செல்லையா ராமுவின் ஒர்க்சாப்பில் சேருகிறான்.  தன்னிடம் உள்ள அத்தனை தொழில்நுட்பத்தையும் , திறமைகளையும் செல்லையாவிற்கு சொல்லிக் கொடுக்கிறான். ராமு, ராணுவத்தில் பத்து ஆண்டுகள் பணியாற்றிவிட்டு வந்து தொழில் செய்து வருகிறான். இருந்தாலும் அவன் தன்னுடைய மணைவியை கொலை செய்து விட்டதாக அவன்மேல் பழியும் உள்ளது. அதனால் செல்லையாவின் அம்மா சொர்ணத்திற்கு அவனைப் பிடிப்பதில்லை. ஆனாலும் ராமு,செல்லையா நட்பு பலமாக நீடிக்கிறது. இந்த சந்தர்ப்பத்தில், செல்லையாவின் அக்கா பாப்பாவின் திருமணத்திற்கு ராமு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்கிறான். செல்லையா ராமுவிடம் மிகுந்த மரியாதை கொள்கிறான்.

பின்னர், சென்னையில் லாரிக் கம்பெனி வைத்திருக்கும் சதாசிவம் அழைப்பின்பேரில் ராமுவும் , செல்லையாவும் சென்னை வருகிறார்கள். அங்கே பழுதாகி நிற்கும் பல லாரிகளை சரி செய்கிறார்கள். இவர்களின் வேலை பிடித்துப் போனதால் சதாசிவம், ராமுவை தமது கம்பெனியின் தலைமை மெக்கானிக்காக இருக்குமாறு கேட்கிறார். ராமு மறுத்துவிட, அவர் செல்லையாவை விட்டு செல்லுமாறு கேட்கிறார்.  செல்லையாவின் எதிர்கால நல்வாழ்வை எண்ணி ராமுவும் சம்மதிக்கிறான்.  செல்லையா சென்னை வாசியாகிறான்.

அங்கே, சதாசிவத்தின் லாரிக் கம்பெனியில் வேலை செய்யும் டில்லியின் நட்புக் கிடைக்கிறது .  அவனது வீட்டிலேயே தங்கிக் கொள்கிறான். டில்லிக்கு மேரி என்ற தங்கையும்  , எலிசபெத் என்ற சித்தியும் இருக்கிறார்கள்.  டில்லியின் தந்தை  கோவிந்தராஜுலு இணைத்துக் கொண்ட இரண்டாவது மனைவியே சாராயம் விற்கும் எலிசபெத். மேரியும்  கோவிந்தராஜுலுவுக்கு பிறந்தவள் இல்லை.  சென்னையில் டில்லியின் நட்பு கிடைத்த பிறகே, செல்லையா புகைப் பிடிக்கவும், குடிக்கவும் கற்றுக் கொள்கிறான். அத்துடன், மேரியின் அன்பும் கிடைக்கிறது. ஆனால் அது காதல் என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை. டில்லிக்கு இன்னொருவரின் மணைவியான ராணியுடன் தொடர்பு ஏற்படுகிறது. டில்லி, மேரியை அவனது நண்பன் பாபுவிற்கு திருமணம் செய்ய நினைப்பதால் செல்லையாவுடனான நட்பும் விரிசல் அடைகிறது. செல்லையா அவர்களிடமிருந்து பிரிய நேரிடகிறது.

இடையில் செல்லையா,  அரசாங்க மெக்கானிக் வேலைக்கு மனு செய்து இருக்கிறான். சென்னை உரத் தொழிற்சாலையில் மெக்கானிக் வேலை கிடைக்கிறது. அந்த நிறுவனத்தில் அப்போது சம்பள உயர்வு கேட்டு சங்கத் தலைவர் ராமனின் தலைமையில் போராட்டம் நடந்து கொண்டு இருக்கிறது. ஒரு நாள் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட செல்லையா வாழ்க்கை முழுவதும் போராடியே வந்ததால் ஏற்பட்ட உணர்ச்சி மிகுதியில் "ஜிந்தாபாத்! ஜிந்தாபாத்! " என்று பலமாக கோசம் எழுப்புகிறான். அக்குரல் அனைவரையும் அவனை நோக்கித் திரும்பிப் பார்க்கச் செய்கிறது.

அதனைத் தொடர்ந்து நடைபெறும் போராட்டத்திட்டத்தில் செல்லையாவின் பங்கு தொழிற்சங்கத் தலைவர் ராமனை பெரிதும் கவருகிறது. பின்னர்  செல்லையா, அந்தத் தொழிற்சங்கத்தின் துணைச்செயலராக ஒரு மனதாகத் தேர்வு செய்யப் படுகிறான்.  நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தைத் தொழிலாளி , தொழிற்சங்கத் தலைவனாகிறான். இது தான் சூரியவம்சத்தின் சுருக்கமான கதை.

இந்த நாவலை படித்து  முடித்தவுடன், நம்முடன் கூடவே பயணித்த ஒருவரின் வாழ்க்கையை தெரிந்து கொண்டோம் என்ற உணர்வே பெரிதோங்கி நின்றது. ஆனாலும் மனதை ஈர்க்கச் விதமாக இந்நாவல் அமையவில்லை என்பதும் உண்மை.  குறிப்பாக, செல்லையாவின் அம்மா சொர்ணம், எப்பொழுதும் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதும், மகன் என்ற பாசம் இல்லாமல் செல்லையாவை சிறுவயதில் இருந்தே அடித்துக் கொண்டே இருப்பதும், நல்லவனான செல்லையா,  சொர்ணதிற்கு தெரியாமலே இருப்பதும் சற்று  முரண்பாடாகத் தென்பட்டது. அதேபோல் செல்லையா, மேரி இவர்களது அன்பும்,பிரிவும் அவர்களுக்கிடையே எந்தப் பாதிப்பையும் கொடுக்காதது ஆச்சரியமாகவும் இருக்கிறது.

ஆனால், செல்லையாவின் நல்ல எதிர்காலத்திற்கு வித்திட்ட ராமுவின் பாத்திரம் மிகவும்   வலுவாகவும், எதார்த்தமாகவும், அழுத்தமாகவும் அமைந்துள்ளது.   சதாசிவத்திடம் , இரண்டு ஆண்டுகளாக எனக்கு கைகளாக இருந்துள்ளான் என்று தயங்குவதும் , சென்னை ரயில் நிலையத்தில் செல்லையாவை பிரியும் போது  அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கண் கலங்குவதும் மனதை நெகிழச் செய்தது. மேலும், செல்லையா முதல் முதலாக அழுவதும் ராமுவை பிரியும் போது தான் என்பது அவன் ராமுவின் மேல் வைத்துள்ள அன்பை சுட்டிக்காட்டுகிறது. செல்லையாவின் நண்பரும் , இந்த நாவலின் ஆசிரியருமான  சா.கந்தசாமி எந்த பாத்திரத்தில் வருகிறார் என்று தெரியவில்லை . ஒருவேளை பள்ளிப்பருவ நண்பர்களாக  வரும் தங்கவேல், கோபால் அல்லது குமரேசன் இவர்களில் ஒருவராக இருக்கலாம்.

மொத்தத்தில்,  ஒரு எளிய மனிதனின் உயர்வை வெளிக்கொணருகிறது இந்த நாவல்.

******சு.கருப்பையா.
  

Tuesday 19 March 2013

வாசிப்போர் களம் -12


இந்த மாதக்கூட்டம்  08/03/2013  ந் தேதி சர்வதேச மகளிர் தினத்தில் அமைந்தது மிகவும் எதார்த்தமே! அதிலும் தோழர்.G. பாலசுப்ரமணியன்  இன்று அறிமுகம் செய்த நூல் ச.தமிழ்செல்வனின் "குடும்பம்" . பெண்மையின் உயர்வையும், முக்கியத்துவத்தையும் முன்னிறுத்தும் சிறு நூல். ஆனால் உன்னதமானது. காலங்காலமாக பெண்கள் வஞ்சிக்கப்பட்டதையும் , இந்த ஆணாதிக்கச் சமுதாயம் அவர்களை எப்படியெல்லாம் சிறுமைப் படுத்தியுள்ளது என்பதை ஒரு பதினாறு பக்கங்களில் விவரித்துள்ளது பிரமிக்க வைத்தது. நூல் பற்றிய விபரம் இதோ;

நமக்கான குடும்பம்
ச.தமிழ்ச்செல்வன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.5.00
பக்கம்: 16

இந்த நூலில் ச.தமிழ்ச்செல்வன் முன்வைத்துள்ள கருத்துக்கள் இதோ;

Ø  பெண் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறாள்.
Ø  பெண்ணுக்கும்,ஆணுக்கும் பிறப்பு உறுப்பு வேறுபாடு தவிர வேறு எந்த உயிரியல் ரீதியான வேறுபாடும் கிடையாது.
Ø  பல குடும்பங்களில் ஆண் குழந்தைக்குக் கிடைக்கும் சத்தான உணவு பெண் குழந்தைக்குக்  கிடைப்பதில்லை.
Ø  பெண்ணை வெறும் உடம்பாகப் பார்க்கும் பார்வை நம்மிடம் ஆழமாக வேர் கொண்டுள்ளது.
Ø  அவள் எப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவெடுக்கும் அதிகாரம் அவளிடமில்லை.
Ø  பெண்தான் சமைக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை.
Ø  மண்ணாசை,பொன்னாசை , பெண்ணாசை என்று துறக்க வேண்டிய பட்டியலில் மண்,பொன் போன்ற பொருள்களோடு பெண்ணையும் ஒரு பொருளாக ( மனுசியாக அல்ல) சேர்த்து வைத்தது  மதம்.
Ø  பன்னெடுங்காலமாக இந்தப் படிமங்கள் கட்டமைக்கப் பட்டு வந்தவை என்பதால் பெண்களே ' நாம் பெண்ணாகப் பொறந்திட்டோம் இப்படித்தான் இருக்கணும் என்று ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

இப்படி பல்வேறான கேள்விகளை எழுப்பி, அதை அவர் விளக்கியுள்ள விதம் அருமை. வரலாறு எத்தனையோ தூரங்களைக் கடந்து வந்தபோதும் , நம் வீடுகளில் இன்னும் மாற்றம் வந்த பாடில்லை, பெண்களை இன்னும் கட்டுப்படுத்தியே வருகிறோம் என்பதை திட்டவட்டமாக தெளிவு படுத்தியுள்ளார்.

இவற்றையெல்லாம் களைந்து , ஆண்,பெண் சமத்துவத்தின் அடிப்படையில் அறிவியல் பூர்வமான வேலைப் பிரிவினையோடு கூடியதாக நமது குடும்பங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான காதலே குடும்பத்தின் அடிநாதமாக அமைய வேண்டும் , அந்தக் காதல் சுதந்திரமானதாக -பெருந்தன்மை மிக்கதாக- எந்த நிர்பந்தமும் இல்லாததாக முழு மனதோடு கூடியதாக இருந்தாக வேண்டும் என்று முடிக்கிறார். உண்மையிலே பெண்ணியத்தைத் தூக்கிப் பிடிக்கும் சிறந்த நூலக இது இருக்கிறது.

வளமான சிந்தனைகள்!

*********வாசிப்போர்களத்திற்காக: சு.கருப்பையா.

(தோழர்.தேவேந்திரன் அறிமுகம் செய்த சா.கந்தசாமியின் "சூரிய வம்சம்" நாவல் பற்றிய பதிவு இன்னும் ஓரிரு நாட்களில்)

Tuesday 5 March 2013

மனம் மகிழும் சந்திப்பு!!!


தோழர்களே!

இந்த மாதம் புதிய நூல்கள் நிறைய வெளிவந்துள்ளன. அதே போல் நாட்களும்  மிக விரைவாக செல்கின்றன. ஆகவே நேரத்தைச் சரியாக செலவிட வேண்டும்.  நாமும் சுறுசுறுப்பு அடைய வேண்டியுள்ளது.

இம்மாத இரண்டாவது சனிக்கிழமையில்  பல தோழர்களுக்கு வேலைப் பளு இருப்பதால் கூட்டம் ஒரு நாள் முன்பே நடைபெற  இருக்கிறது.  ஆம் ! இந்த மாதக் கூட்டம் 08/03/2013 வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. தோழர்கள் சிரமத்தைப் பாராமல் தவறாமல் மாலை 0600 மணிக்கு வழக்கமான இடத்தில் கலந்து கொள்ளவும்.