Sunday 30 October 2016

அஞ்சல் நிலையம்

நூல் :  அஞ்சல் நிலையம்
ஆங்கிலம்: சார்லஸ் புக்கோவ்ஸ்கி
தமிழில்: பாலகுமார் விஜயராமன்
பதிப்பு : எதிர் வெளியீடு

விலை : 200/-


அமெரிக்க எழுத்தாளரான சார்லஸ் புக்கோவ்ஸ்கியின்  படைப்புகள் விழிம்பு நிலை மக்களின் எளிய வாழ்வு , குடி, பெண்களுடனான தொடர்பு , அடிமைத் தொழில் போன்றவற்றை பேசுகின்றன. ஆயிரக்கணக்கான கவிதைகளையும் நூற்றுக்கணக்கான சிறுகதைகளையும் , ஆறு புதின்ங்களையும் எழுதி இருக்கிற இவரை "டைம்" பத்திரிக்கை " அமெரிக்க கீழ்நிலை வாழ்வின் அரசவைக் கவிஞ்ர்" என்று புகழாரம் சூட்டியுள்ளது. இவரின் போஸ்ட் ஆபீஸ் என்ற இந்த நாவல் கற்பனையானது என்று கூறப்பட்டாலும் , அது அவரின் சொந்த அனுபவமான சுயசரிதம் என்றே கருதப்படுகிறது. அதைத் தான் " அஞ்சல் நிலையமாக " நமக்கு தந்துள்ளார் பாலகுமார் விஜயராமன். 

நம் நாட்டில் அஞ்சல் நிலையம் என்றதும் நமக்கு ஞாபகம் வருவது பரபரப்பாக இயங்கும் அலுவலகம் ,தபால் பட்டுவாடாதந்தி கொடுப்பது, பணப்பரிவர்த்தனை , ஓய்வூதியம் தருவது மற்றும் ஆயிரக்கணக்கான தற்காலிக ஊழியர்களை கொண்டுள்ளது போன்றவைகள் தான் நினைவில் வரும். ஆனால் இந்த அஞ்சல் நிலையம் "சின்னஸ்கி " என்ற தற்காலிக ஊழியனின் தொழில், அவனது பாலியியல் வேட்கை, குடி , அவன் வாழ்வில் குறுக்கிடும் பெண்கள் , அவனது பலவீனம் மற்றும் நேர்மையான மனம்   போன்றவற்றை பேசுகிறது.

அஞ்சல் நிலைய தற்காலிக ஊழியனாக சின்னஸ்கிக்கும் , அவனது மேலாளர் ஜோன்ஸ்டனுக்கும்    ஏற்படும் பணிமுரண்பாடும் பரஸ்பர வெறுப்பும்  நாவல் முழுவதும் வெளிப்படும். குறித்த நேரத்திற்கு வராவிட்டால் எச்சரிக்கை கடிதம் கொடுப்பதும் , சம்பளத்தை குறைப்பதும் தான் ஜோன்ஸ்டனின்   வேலை. அவனுக்கு அடிபணியாமல் நடப்பதே சின்னஸ்கியின் அன்றாட பணியாக இருக்கும். இதனிடையே குடி, குதிரைப் பந்தயம் என்று பணத்தையும் , தூக்கத்தையும் தொலைக்கும் சின்னஸ்கி நாம் சந்திக்கும் சாதாரண ஒரு தொழிலாளியாகத் தெரிவதில் வியப்பில்லை தான். அவனது பாலியியல் வேட்கையை தணிக்க   "பெட்டி" என்ற ஒரு பெண் வேறு இருக்கிறாள்.

சதா குடியுடனும் , அதனால் எழுந்த தலைவலியுடனும் , கிழிந்த செருப்புடனும் கொளுத்தும் வெயிலில் அவன் தெருவில் நடந்து தபால் பட்டுவாடா செய்வது அவனுக்கு வேதனையாக இருக்கும் . வாசிக்கும் நமக்கும் தான்!!! ஒரு முறைஇளம் பெண் ஒருத்தி பதிவு தபாலைப் பெற்றுக் கொண்டு கையெழுத்து இடாமல் சென்று விடுவதும் கையெழுத்தைப் பெற சின்னஸ்கி துரத்திச் செல்வதும் , அந்தப் பெண் இவனைத் தந்திரமாக வீட்டிற்குள் வரவழைத்து அவனது காம வேட்க்கையைத் தூண்டி  புணர வைப்பதும் வித்தியாசமாக இருக்கும். எதுவும் நடக்காதது போல் பணிக்குத் திரும்பும் சின்னஸ்கியைப் பார்த்தால் ஆச்சரியமாகவும் இருக்கும். இந்த இடத்தில் , அந்தப் பெண்ணிற்கும் , சின்னஸ்கிற்கும் நடைபெறும் உரையாடல் பற்றிய பாலகுமாரின் மொழிபெயர்ப்பு விரசம் தெரியாமல் அற்புதமாக இருக்கும். இது போன்ற சம்பவங்கள் அமெரிக்கா போன்ற நாடுகளில் தான் நடக்கும். ஒரு வேளை நம் நாட்டிலும் இது போன்ற சம்பவங்கள் நடந்து,  அது பதிவு செய்யப்படாமல் கூடப் போயிருக்கலாம்.

இதே போல் ஜோய்ஸ் என்ற ஒரு இளம் பெண்ணை ஒரு குதிரைப் பந்தயத்தின் போது பார்க்கிறான் சின்னஸ்கி . சில முரடர்களிடம் இருந்து அவளைக் காப்பாற்றி அழைத்துச் செல்லும் சின்னஸ்கி ஆவலுடன் உறவு வைத்துக் கொள்கிறான் , அதன் பின்னர் அவளை மணம் முடித்தும்  கொள்கிறான். அதிக பாலியியல் உணர்வு உள்ள அவளிடம் சதா உடலுறவு கொள்வதே அவனுக்கு வேலையாகிப் போகிறது.  அதன் பிறகு தான் , அவள் மிகப் பெரிய பணக்காரி என்பதும் வீட்டை விட்டு கோபத்தில் வெளியேறி இருப்பதும் சின்னஸ்கிக்குத் தெரிய வருகிறது .

பின்னர் சின்னஸ்கிக்கும் , ஜோய்ஸ்க்குக்கும் மணமுறிவு ஏற்படுகிறது. அதன் பிறகு அவனுக்கும் "பே" என்ற பெண்ணிற்கும் தொடர்பு ஏற்படுகிறது. அதுவும் முறிகிறது. இப்படியாக சின்னஸ்கி என்கிற சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் பாலியியல் அனுபவங்களை இந்த " அஞ்சல் நிலையம் " சுமந்து செல்கிறது. இடையில் அவனுக்கு அஞ்சல் நிலையத்தில் பணி நிரந்திரம் கிடைக்கிறது. திரும்பவும் பணிக்குச் செல்கிறான். அங்கே முட்டை முட்டையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்  காலாவதியாகிப் போன தபால்களும் , பேப்பர்களும் மக்கிப் போய் நாற்றமடிக்கிறது. அதை அப்புறப்படுத்த நிர்வாகம் தயாராக இல்லாததால் அங்கே தற்செயலாக தீ விபத்து ஏற்படுவது போல் ஏற்பாடு செய்து தீ வைத்து கொளுத்திவிடுகிறான்.  ஒரு வழியாக அந்த தபால் நிலையத்தை சுத்தப்படுத்திய திருப்தி அவனுக்கு ஏற்படுகிறது. இந்த சூழலில் அவனது பழைய காதலி "பெட்டி" மரணமடைகிறாள். அவளுக்குத் தேவையான ஈமச்சடங்கைச்  செவ்வனே செய்கிறான் சின்னஸ்கி . அவளது மரணம் அவனுக்கு பெரிய பாடத்தைத் தருகிறது. வேலையை திரும்பவும் துறந்து விட்டு குதிரை பந்தயத்திற்கேத்  திரும்புகிறான் சின்னஸ்கி. இது தான் " அஞ்சல் நிலையம் " நாவல். 

இந்த நாவலை மிக அழகாக தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார் பாலகுமார். சின்னஸ்கியின்  பாலியியல் உறவு மற்றும் அவன் பேசும் மொழி பற்றிய பல ஆங்கில வார்த்தைகளுக்கு  அப்படியே தமிழில் நேரிடையான வடிவம்  கொடுத்திருப்பார் . அது சிலருக்குத் விரசமான வார்த்தையாக தெரியலாம். ஆனால் , அது தான் ஒரு மொழிபெயர்ப்பானின் கடமை . அப்போது தான் அதில் உயிர் இருக்கும்.  அந்த வகையில் பாலகுமாரின் பணி பாராட்டுக்குரியது. ஆனால் , இந்த நாவல் சின்னஸ்கி (சார்லஸ் புக்கோவ்ஸ்கி)    என்ற மனிதனின் அகம்  மற்றும் புறம் சார்ந்த  உணர்வுகளை  எந்த விதமான சமரசத்திற்கும் இடமில்லாமல் விவரிக்கிறது.  நாவலை படித்து முடித்ததும் ஒரு புதிய மனிதனை தெரிந்து கொண்ட உணர்வு தான் எனக்கு எழுந்தது.

-சு.கருப்பையா.




Saturday 29 October 2016

புறாக்காரர் வீடு

புறாக்காரர் வீடு
பாலகுமார் விஜயராமன்.
நூல்வனம் வெளியீடு.


புறாக்காரர் வீடுஎன்ற இந்நூல் எழுத்தாளர் பாலகுமாரின் முதல் சிறுகதை தொகுப்பு. நூல் வடிவில் வந்த அவரின் முதல் படைப்பு . ஆனால், அவர்  இதற்கு முன்பே சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் "போஸ்ட் ஆபீஸ்" என்ற நாவலை தமிழில் " அஞ்சல் நிலையம்" மொழி பெயர்த்துள்ளார். அப்படிப் பார்த்தால் இதை அவரது இரண்டாவது படைப்பு என்று தான் சொல்ல வேண்டும். இருந்தாலும்  " அஞ்சல் நிலையம் " அடுத்தவரின் பிள்ளை, நமது என்று சொந்தம் கொண்டாட முடியாது  தானே !

இந்தத் தொகுப்பில் உள்ள பெரும்பாலான சிறுகதைகள் அவரின் சோலை அழகுபுரம் , தென்திசை போன்ற அவரின் வலைப்பூவில் எழுதப்பட்டது  தான். சில கதைகள் மலைகள், எழுத்து , தமிழ் மனம் போன்ற தமிழ் வலைத்தளங்களில் படித்ததாகவும் ஞாபகம். இக்கதைகளை மெருகேற்றி இப்போது நூல்வடிவில் தந்துள்ளார்.  பாலகுமாருக்கு "எழுத்து"  என்பது சுவாசத்தைப் போன்றது. அதே போல் அவரது மொழிவளமும் அற்புதமானது. உயிர்ப்பான பல கவிதைகளையும் தமது வலைப்பூவில் எழுதி இருக்கிறார். உண்மையைக் கூறவேண்டுமென்றால் இவர் ஒரு சிறந்த கவிஞர்.

சிறுகதைகள் என்றாலே என் மனதை ஆக்கிரமித்துள்ள எழுத்தாளர்கள் புதுமைப்பித்தன் , ஜெயகாந்தன், மௌனி மற்றும் அம்பை போன்றவர்களே!. இருந்தாலும் அவர்களின் பிம்பத்தை என் மனதிலிருந்து அழித்து விட்டுத் தான் இந்த " புறாக்காரர் வீடடை " வாசித்தேன். பாலகுமார், இச்சிறுகதைத் தொகுப்பில் உள்ள  கதைகளில் தமது சொந்த வாழ்க்கையில் ஏற்படட அனுபவங்கள்  , தான் சந்தித்த, பார்த்த, பழகிய மனிதர்களின் அனுபவங்கள், மன உணர்வுகள் என்று நிஜ வாழ்க்கையின் எதார்த்தங்களையே எழுதியுள்ளார் என்பதை இதை வாசிப்பவர்கள் எளிதாகப் புரிந்து கொள்வார்கள்.  உண்மையைக்கூற வேண்டுமானால் சில சிறுகதைகள் அதற்கான இலக்கண வரம்பிற்குள் வரவில்லை என்றே எனக்குத் தோன்றுகிறது.. உதாரணமாக,  இன்மை உணர்தல், நெகிழ்தல் தோற்றம் மற்றும் திருவாளர் பொதுஜனம் போன்ற சிறுகதைக் கூறலாம். ஆனால் , அதில் ஒரு செய்தியும் இருக்கிறது , அது வெளிக்கொணரும் ஒரு உண்மையும் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.  ஆனால் , புறாக்காரர் வீடுஉரு வெளிதோற்றம் , சமிக்ஞை, மலை வரும் பருவம்கைப்பிடிமண், நாகதேவதை மற்றும் கருப்பு என்னும் காவல்காரன் போன்ற சிறுகதைகள் உண்மையிலேயே கவனிக்கப் படவேண்டியவை. இவைகள் மனிதர்களின் ஏமாற்றம், பேரழிவு, மாயதோற்றம், மூடநம்பிக்கை மற்றும் இழப்பு போன்ற உளவியல் குறியீடுகளை சுட்டிக்காட்டுகின்றன.


குறிப்பாக , "கைப்பிடி மண்" என்னை யோசிக்க வைத்த சிறுகதை. இக்கதை குறிப்பிடுவது   பிறழ்மனத்தோற்றமா?, கனவுக்குறியீடா? அல்லது அழிவிலிருந்து தப்பிச் செல்ல விரும்பும் ஒரு இனக்குழுவின் தோல்வியா ? , என்று வாசகர்களின் புரிதலுக்கே விட்டு விடுகிறார்.  அதே போல் "நாகதேவதை" என்ற சிறுகதையில் புதுவீடு கட்டுபவர்கள் நம்பும் பூமி பூஜை , புதையல் , பில்லி சூனியம் கழிப்பது , அதற்காக மந்திரவாதியை நம்புவது போன்ற மூடநம்பிக்கைகள் மக்கள் மனதை ஆக்கிரமித்துள்ளதை அப்படியே எழுதி உள்ளார். ஆனால் அதன் பிடியில் இருந்து கதை நாயகன் மாடசாமி முழுவதும் வெளியே வராமல் அதன் சுழற்சிக்குள்ளயே போய் விடுவது ஏமாற்றத்தைத் தருகிறது.

ஆனால் " மழை வரும் பருவம்"  என்ற சிறுகதையில் அனாதையாகிப் போன  செல்வா என்ற   இளைஞ்னின் ஏமாற்றம், புறக்கணிப்பு, துயரம் மற்றும் இழப்பு  போன்றவற்றை அவருடைய தாயின் மரணத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். கல்லூரியில் இருந்து வீட்டிற்கு வரும் வரை அழாமல் இருந்து விட்டு , தனது தாயின் பிணத்தைப் பார்த்ததும் வெடித்துக் கிளம்பும் அழுகையை வெளிப்படுத்தும் அந்த இளைஞ்னின் அழுகையை இடி மின்னலுடன் வரும் " மழை"க்கு ஒப்பீடு. செய்வது  கவித்துவமான  உவமை.

சமிக்ஞை, சிறுகதையில் நில அபகரிப்பு , சுற்றுப்புற சூழல் பாதிப்பு அதனால் பறவை இனம் அழிவது , விவசாயம் செய்ய முடியாத நிலமாகிப் போனதால் விவசாயிகள் நாடோடிகளாக வெளியேறுவது போன்றவற்றை அழகாக பதிவு செய்துள்ளார். ஒரு படைப்பாளனுக்கு  சமூகத்தின் மீது ஆழ்ந்த அக்கறை இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் கதை இது. அடுத்துநூலின் தலைப்புச் சிறுகதையான " புறாக்காரர் வீட்டைப்" பற்றி கடடாயம்  சொல்லித்தான் ஆக வேண்டும். எழுத்தாளர் பாலகுமார்  அந்தப் புறாக்கூட்டில் இருந்து வந்தவர் தான்  என்பதை தனது "சுகவாசி" என்ற முன்னுரையில் தெளிவாக கூறியுள்ளார். ஒரு தந்தையின் கடமை, குடும்பம், உறவுகள் , இழப்புக்கள் போன்ற அனுபவங்கள் எப்படி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் கேட்க்காமலேயே நுழைகிறது என்பதை இந்தக்கதை அற்புதமாக விளக்குகிறது. புறாக்கூட்டம் போல் வாழ்ந்த உறவுகள் அனைத்தும் பிரிந்து போனபிறகு வெறுமையாகிப் போன அந்த வீட்டையும், தனது உறவுகளையும் எண்ணிப்பார்க்கும் ஒரு புறாவாகவே எனக்கு பாலகுமார் தெரிகிறார். இந்த உணர்வு தான் அவரை எழுதத் தூண்டியிருக்கும் என்றும்  நான் கருதுகிறேன்.

பொதுவாக, இந்தச் சிறுகதைகள் அனைத்தும் படைப்பாளனின் மனம், அவனது மனித உறவுகள் சார்ந்த விஷயங்களையே அதிகம் பேசுகிறது. இதை விடுத்து சமூகச் சிக்கல்களையும் , சாதிய அடக்குமுறைகளையும் , மதத்திற்குள் இருக்கும் அரசியலையும் ,பாலியியல் முரண்பாடுகள் மற்றும் அது சந்திக்கும் எதிர் விளைவுகள்  போன்றவற்றையும் பாலகுமார் எழுத வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒரு வேளை, இதைத்தான் இந்நூலுக்கு முன்னுரை எழுதிய எழுத்தாளர் பாவண்ணனனும்  விரும்புகிறாரோ என்னவோ!.

" புறாக்காரர் வீடு" அழகாக இருக்கிறது . அது வாசகர்களை வசீகரிக்கவும் செய்யும்.

-சு.கருப்பையா. 



Friday 14 October 2016

”புறாக்காரர் வீடு” தொகுப்பு குறித்து எழுத்தாளர். பொள்ளாச்சி அபி அவர்களின் விமர்சனம்



வணக்கம் தோழர் பாலா..!

உங்கள் புறாக்காரர் வீடு சிறுகதைத் தொகுப்பை இப்போதுதான் வாசித்து முடித்தேன்.முதல் நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பதையும்.இது உங்கள் முதல் சிறுகதைத் தொகுப்பு என்பதையும் அறிந்து மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.!

உருவெளித் தோற்றம் என்ற முதல் கதையைப் படித்து முடித்தவுடன் சில எண்ணங்கள் மனதிற்குள் தோன்றியது.அது மற்ற கதைகள் அனைத்தும் படித்து முடிக்கும் வரையும் தொடர்ந்தது.அது என்னவென்று இறுதியில் சொல்கிறேன்.

உங்கள் தொகுப்பிற்கான எனது கருத்தை எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் அவர்களுக்கு எழுதுவதா..? அல்லது நண்பன் பாலாவிற்கு எழுதுவதா..? என்ற சிறு குழப்பம் சில நிமிடங்கள் நீடித்தது.பின் நண்கனுக்கே எழுதுவது சரியாக இருக்கும் என்று தீர்மானித்துக் கொண்டே இதனை எழுதத் துணிந்தேன்.

தொகுப்பின் முதல் கதையான உருவெளித் தோற்றம்,ஒரு அமானுஷ்யக் கதையைப் போல,நீண்டு சென்று சட்டென்று முடிந்துவிட்டது போல இருந்தது.

சமிக்ஞை,கைப்பிடி மண் ஆகிய கதைகள் சூழலியில் நோக்கில்,இயற்கைக்கு மாறான மனிதனின் செயல்பாடுகளினால் விளையப் போகும் கேடுகளை உணர்த்துகின்ற முக்கியமான குறியீடுகளை கொண்டதாக நான் புரிந்து கொண்டேன்.

புறாக்காரர் வீடு கதையை உங்கள் வாழ்வியல் அனுபவங்களை,அதற்கேயுரிய நுட்பங்களோடு மிக அழகாக விவரித்திருந்திர்கள்.புறாக்களின் வாழ்வோடு இணைந்து வாழப் பழகிவிட்ட ஒரு மனிதரின்,குடும்பத்தின் சிதைவுகளை காலம் எப்படி உருவாக்குகிறதென்றும்,அதனைத் தவிர்க்க முடியாத இயலாமையை சகித்துக் கொண்டு மேலும் வாழ வேண்டியிருக்கின்ற நிர்ப்பந்தத்தையும் அந்தக் கதை வெளிப்படுத்தும் போது,சற்று நேரம் நானும், காணாமல் போன அந்தப் புறாக்களைத் தேடிக் கொண்டு வெட்டவெளி வானத்தில் அலைவதாக ஒரு கற்பனைக்குள்ளானேன்.

நாகதேவதை கதை..என்னதான் கற்பனையென்றாலும்,,ஒரு குழந்தையின் இருப்பு என்பது பணம் காசு புதையல் என எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது என்பதை அருமையாக உணர்த்திற்று.அதிலும் அந்தக் கதையின் நாயகன் இறுதிக் காட்சியில் பதை பதைக்கும்போது.அவனோடு சேர்ந்து நானும் பதைத்து பதறி,பின் கோடாங்கியின் பூசை நிறுத்தப்பட்டதைக் கண்டு நானும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.
மணமுறிவு நாள் எனும் கதை,முடிகிற இடத்திலிருந்து புதிதாகவொரு கதை துவங்குகின்றது என்பதைப் புரிந்து கொள்ளச் செய்வது வாசகனுக்கு நீங்கள் தந்திருக்கும் சுகமான அனுபவம்.

எழுதுவதற்கென்று ஒரு காலத்தில் இருந்த தளங்களும்,அதில் எழுதுபவன் மட்டுமே படைப்பாளி என்றிருந்த நிலை,சமூக வலைத்தளங்கள் வந்தபின்பு எழுதுகிற எல்லோருமே எழுத்தாளர்கள்தான் என்ற பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

இதுவொரு பக்கம் வளர்ச்சியாகப் பார்க்கின்ற அதே சமயத்தில்,எங்கேயும் விளைவுக்கு எதிர் விளைவுண்டு என்ற தத்துவமே போல்,இதிலும் எதனை எழுதினால் அல்லது வெளிப்படுத்தினால் தன்மீதான கவனத்தை ஈர்க்கமுடியும் என்ற தேடல் மிகுந்துவிட்டது.இது வளர்ச்சிக்கு எதிரான வீக்கமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.ஒவ்வொருவரும் தனக்கென தனிப்பாணியை பின்பற்றத் துவங்கிவிடுகின்றனர். அவர்களின் அந்தப்பாணி என்பது சாதி,மத எதிர்ப்பாக இருக்கலாம்,அல்லது ஆதரவாக இருக்கலாம்.மத்திய மாநில அரசுகளின் மீதான விமர்சனமாக இருக்கலாம்.கொலை கற்பழிப்பு செய்திகளாக மட்டுமேகூட இருக்கலாம்.எதிலும் தன்மீதான கவனக்குவிப்பை ஏற்படுத்துகின்ற முயற்சியில் லஞ்ச லாவண்யத்தை,ஊழலை வெளிப்படுத்துகிறேன் பேர்வழி என சிலர் இவ்வாறு கிளம்பியிருப்பதும்,இதற்காகவே அப்பாவிகள் சிலர் பலியாக்கப் படுவதும்-“வாங்கச் சொன்ன ஆபீசர் தப்பிச்சுடுவான்,வாங்கி வெச்ச ப்யூன் சிக்கிக்கிடுவான்..”; என்பது போல-தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதை நானும் சந்தித்துக் கொண்டே இருக்கிறேன். அந்த யதார்த்தம், “திருவாளர் பொதுஜனம்.!” கதையில் வெளிப்பட்டதைக் கண்டு மகிழ்ந்தேன் ரசித்தேன்..!

இப்படி ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு அனுபவத்திற்குள் என்னை இருத்தி வைத்தது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.  

கதைகளுக்கான களம்,அதன் புறச்சூழல்கள் மீதான உங்கள் விவரிப்புகளில் ஒரு கதையாசிரியனின் துல்லியமான பார்வையும் கிரகிப்பும் அழகாக வெளிப்படுகிறது.அதே போல் கதாபாத்திரங்களின் உள்ளக்கிடக்கைகளும், எண்ணவோட்டங்களும் சுலபமாக அந்தப் பாத்திரத்துடன் ஒன்றிவிடச் செய்கிறது. கதைகள் தாங்கி நிற்கின்ற கருவிலும் குறையில்லை பாலா..ஆனால்,அதனை வெளிப்படுத்தும் தொனி மட்டுமே கதை என்பதன் வடிவத்தைச் சாராமல் செய்திகளாகவே நகர்கிறது.

கதாபாத்திரங்களுக்கான உரையாடல்கள்.உரையாடல்களின் மூலம் நகர்த்த வேண்டிய காட்சிகள் என எதுவுமேயின்றி முழுக்க முழுக்க வாசிப்பவருக்கு சொல்லப்படுகிற செய்தியாகவே சில கதைகள் முடிந்து விடுகின்றன. இவ்வாறான போக்கு வாசகனை வெகு சீக்கிரம் அயர்வடையச் செய்து விடும் ஆபத்து இருக்கிறது.
அதேபோல் பத்திகளைப் பிரித்து எழுதுவதென்பதும் மிக முக்கியமான விஷயம்.சிறு சிறு பத்திகளாக அடுத்தடுத்த காட்சிகள் நகரும்போது வாசிப்புக்கு அது மிகவும் விறுவிறுப்பு கூட்டும்.இதனை அடுத்த தொகுப்பில்..அல்ல அடுத்த கதையிலிருந்தே நீங்கள் துவங்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

ஏனெனில் சொல்லப்படுகின்ற கதை,அது தாங்கி நிற்கும் கரு,கதை நிகழும்  களம் என..ஒரு சிறுகதையில் எத்தனையோ விஷயங்கள் உண்டென்பது உங்களுக்குத் தெரியும்.அதனை முழுக்க முழுக்க பின்பற்ற முடியாவிட்டாலும்.இயன்றவரை சரியாகச் செய்வதென்பது நமது எழுத்துக்கு வலுச் சேர்க்கும் என்பதே இங்கு நான் சொல்ல விழைவது.

அதேபோல்..கதை சொல்லுகின்ற உத்தியும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது. “இன்மை உணர்தல்.” என்ற கதையில் மனைவியைப் பிரிந்திருக்கும் கணவனின் எண்ணவோட்டம் விரிகிறது.அதனை ஒரு கடிதமாக அவன் தீட்டுகிறான். கடிதம் என்ற உத்தி இந்தக்கதைக்குப் பயன்படுத்தப்பட்டதால்,அது அந்தக்கதைக்கு உரிய இடத்தில் மிகச்சரியாகப் பொருந்திப் போகிறது.

மற்ற கதைகளில் அவ்வாறு நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லையோ..என்ற சந்தேகமும் எனக்கு வருகிறது.கதைகளை செய்தியாக மட்டுமே தரும் பாணி பின்பற்றப்படுவதாலோ என்னவோ,தொகுப்பின் முப்பத்தியேழாம் பக்கத்தில்தான் முதல் வசனமே வருகிறது. தொகுப்பிலுள்ள மொத்த வசனத்தையுமே இரண்டு பக்கங்களில் அடைத்துவிடலாம் போல,அத்தனை சிக்கனமாக இருக்கிறது.

இது சிறுகதைக்குரிய பாணியாக இல்லை என்பதே சரி.இதுவொரு புதியபாணி அல்லது இது எனது தனிப்பட்ட பாணி என்று நீங்கள் சொன்னால் அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.ஆனால் அது வெற்றிகரமான பாணி அல்ல என்பதே எனது கருத்து.

இரண்டு பாத்திரங்கள் யதார்த்தத்தில் பேசிக் கொள்ளாத அல்லது கதையோடு தொடர்புடைய புறச்சூழல் அல்லது அகச்சூழல்..மட்டுமே எழுத்தாளரின் குரலாக, வாசகனுக்கு தெரியப்படுத்தவேண்டிய தகவலாக செய்தியாக இருந்தால்,அது நன்றாக இருக்கும் பாலா.!

ஒரு விமர்சனமாக இல்லாமல்,இவற்றையெல்லாம் எனது கருத்தாக அல்லது சிறு ஆலோசனையாக சொல்லவேண்டும் என்பதால்தான் நண்பர் பாலாவிற்கு எழுதத்துவங்கினேன் என்று குறிப்பிட்டேன்.நண்பருக்கு எனில்,நாம் பகிரும் கருத்துகளில் சற்று சுதந்திரம் எடுத்துக் கொள்ளலாமே..! மேலும் தாய் தனது குழந்தையை இறுக்கிப் பிடிப்பது அது தவறி விழுந்துவிடாமல் இருக்கவே என்பது போல,இந்த அக்கறையை நண்பன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையும் நமது கருத்து வெளியை இன்னும் பரவலாக்குகிறதல்லவா..!

 “உருவெளித் தோற்றம் என்ற முதல் கதையைப் படித்து முடித்தவுடன் சில எண்ணங்கள் மனதிற்குள் தோன்றியது.அது மற்ற கதைகள் அனைத்தும் படித்து முடிக்கும் வரையும் தொடர்ந்தது.அது என்னவென்று இறுதியில் சொல்கிறேன்..”என்று சொல்லியிருந்தேன் அல்லவா..? அது மேற்கண்ட கருத்துக்கள்தான்.இவற்றைச் சொல்லலாமா வேண்டாமா என்று ஊசலாடிக் கொண்டிருந்தபோதுதான் தொகுப்பை முழுவதுமாகப் படித்துவிட்டு,பின்னர்; பாவண்ணன் அவர்களின் அணிந்துரையை வாசித்தேன்.

அடடே..நமக்குள் ஓடிய எண்ணத்தின் எதிரொலியே போல் இவரும் எழுதி இருக்கிறாரே என்று தோன்றிது. சுரி அவர்தான் எழுதிவிட்டாரே.பின் நாமும் அதனையே விரிவாக எழுதவேண்டுமா.. என்று யோசித்தபடியே உங்கள் முன்னுரையை வாசித்தேன். வுpமர்சனங்களுக்காக எனது காதுகளைத் திறந்து வைத்திருக்கிறேன் என்ற உங்கள் அறிமுகத்தால் தைரியம் வந்தது என்றே வைத்துக் கொள்ளலாம்.

அதனால்தான் வெளிப்படையாக எல்லாமும் இங்கு பகிர்ந்தேன்.

மேற்கண்ட கருத்துக்களை நான் வலியுறுத்துவதற்கு காரணம்.,படைப்பு என்பதன் மூலம் இந்த சமூகத்திற்கு நாம் ஏதோவொன்றை சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் எழுதுகிறோம்.அது என்னைப் போல அவ்வளவாக இலக்கியத் தேர்ச்சியற்ற,நுண்மான் நுழைபுலம் அறியாத ஒரு பாமர வாசகனிடமும் சென்று சேரவேண்டும் என்பதாக இருக்கும்போது,எனக்குப் புரிந்து கொள்ள வசதியாக அல்லது எனது புரிதலை சுலபமாக்கும் வகையில் தொடர்ந்து நான் வாசிக்கும்படியாக என்னை அந்த எழுத்து தன்னுடன் பிணைத்து வைத்திருக்க வேண்டுமல்லவா..? அதனால்தான் இந்தக் கோரிக்கைகள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் இந்தக் கருத்துக்கள் சரிதானா..என்பதையும் ஆய்வு செய்யுங்கள் தோழர் பாலா..!  தொடர்ந்து இன்னும் நிறைய எழுதுங்கள் ..வாழ்த்துக்கள்..!

இதனை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் வாய்ப்பிருக்கும் போது எழுதுங்கள்.மீண்டும் பேசுவோம்..!

அன்புடன் 
பொள்ளாச்சி அபி.

Wednesday 12 October 2016

'புறாக்காரர் வீடு” சிறுகதைத் தொகுப்பு குறித்து முனைவர். வா.நேரு

அனைவருக்கும் வணக்கம்சிறுகதை என்பது தமிழைப் பொறுத்தவரை ஒரு இரு நூறு ஆண்டுகளுக்குள் மட்டுமே இருக்கக்கூடிய ஒரு இலக்கியம். கவிதையைப் பொறுத்தவரை நமது இலக்கியம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு சொந்தமானது. ஆனால் சிறுகதை என்பது மேற்கத்திய வடிவம். அண்மை நூற்றாண்டுகளில் மட்டுமே தமிழ் இலக்கியத்தில் இடம் பெற்ற வடிவம். ஆனால் மிகப்பெரிய அளவிற்கு இன்றைக்கு பேசப்படுகின்ற இலக்கியம் சிறுகதைகள்தான் .உலகளவில் எடுத்துக்கொண்டால் மாப்பசான், மாக்சிம் கார்க்கி, டால்ஸ்டாய் சிறுகதைகள் - அவர்கள் எழுதி இன்றைக்கு 150 ஆண்டுகள், 160 ஆண்டுகள் இருக்கலாம் ஆனால் படித்தால் இன்றைக்கும் நம்மைப் பாதிக்கும் கதைகளாக இருக்கின்றன. தமிழில் சிறுகதைகளால் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றவர் புதுமைப்பித்தன். தமிழில் சிறுகதை எழுத்தாளர்கள் என்று நினைக்கும்பொழுது புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், அறிஞர் அண்ணா, அழகர்சாமி, கி.ராஜ் நாராயணன் எனப்பலரும் நினைவுக்கு வருகின்றார்கள். நிறைய எழுத்தாளர்கள் சிறுகதை எழுத்தாளர்களாக இன்றைக்கு தமிழ் மொழியில் எழுதிக்கொண்டிருக்கின்றார்கள். நமது தொலைத் தொடர்புத் துறை, பி.எஸ்.என்.எல் நிறுவனம் என்று எடுத்துக்கொண்டால் நிறைய சிறுகதை எழுத்தாளர்கள் இருக்கின்றார்கள். பாவண்ணன் என்னும் அருமையான எழுத்தாளர், சிறுகதை மற்றும் கட்டுரை தொகுப்புகள், நாவல்கள் எனத் தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கின்றார். மொழி பெயர்ப்பு நூல்கள் குறிப்பாக கன்னட மொழியிலிருந்து நிறைய மொழிபெயர்த்து புத்தகங்களாகக் கொடுத்திருக்கின்றார். அவர் அளவிற்கு வேறு யாரும் கன்னட மொழியிலிருந்து தமிழுக்கு கொடுக்கவில்லை, அவ்வளவு கொடுத்திருக்கின்றார். அதேபோல திருப்பூரில் நமது நிறுவனத்தில் வேலை பார்த்த சுப்ரபாரதி மணியன், சின்னச்சின்ன நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதக்கூடியவர். ஆதவன் தீட்சண்யா போன்ற இடதுசாரி இயக்கத்தில் மிகவும் பிடிப்பாகவும், சாதி ஒழிப்பை அடிப்படையாகவும் வைத்து எழுதக்கூடியவர், நமது துறையச்சார்ந்தவர். வலதுசாரி சிந்தனைகளை அடிப்படையாகக்கொண்டு எழுதக்கூடிய ஜெயமோகன் நமது நிறுவனத்தில் வேலை பார்த்தவர். இப்படி நிறைய எழுத்தாளர்கள் உலவிய இடமாகவும் ,உலவும் இடமாகவும் நம்து பி.எஸ்.என்,எல். நிறுவனம் இருக்கிறது. அப்படிப்பட்ட மரபின் அடிப்படையில்  பி.எஸ்.என். எல். நிறுவனத்தில் வேலை பார்க்கும், தனது முதல் சிறுகதைத் தொகுப்பினை அளித்திருக்கும் இந்த நூலின் ஆசிரியர் வி.பாலகுமாரைப் பார்க்கின்றேன். பார்ப்பது பொறியியல் சார்ந்த வேலை என்றாலும், தமிழ் இலக்கியம் சார்ந்து படைப்பாளியாய் தன்னை வெளிப்படுத்தியிருக்கும் பாலகுமாரை முதலில் பாராட்டுகிறேன்
அதுவும் மதுரை பி.எஸ்.என். எல். நிறுவனத்தில் இயங்கும் வாசிப்போர் களத்தின் உறுப்பினர் என்ற முறையில் அவருக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்

                  சிறுகதை வடிவம் என்பது முதலில் மனதில் தோன்றவேண்டும். பின்பு அதனை எழுதவேண்டும். பின்பு அதனைத் தொகுப்பாக, புத்தகமாகக்  கொண்டுவரவேண்டும்.அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பு தோழர் பாலகுமாருக்கு வாய்த்திருக்கிறது.இந்த 'புறாக்காரர் வீடு ' என்னும் புத்தகத்தில் 14 சிறுகதைகள் இருக்கின்றன. 14 சிறுகதையுமே தனித்துவமாய் இருக்கின்றன. எந்தச்சிறுகதையும் இன்னொரு சிறுகதையைப்போல இல்லை.பல எழுத்தாளர்களில் தொகுப்புகள் தனித்தனிக் கதைகள் என்றாலும் ஒவ்வொன்றும் தனித்தன்மையான கதைகளாக இருப்பதில்லை. ஆனால் இந்தத் தொகுப்பு அப்படிப்பட்ட தனித்தன்மையைக் கொண்டிருக்கின்றது. ஒவ்வொரு கதையும் ஒரு மாறுபட்ட முயற்சியாக இருக்கிறது,அதனால் இந்தத் தொகுப்பினை மிகச்சிறப்பாக நான் பார்க்கின்றேன். நூல்வனம் என்னும் பதிப்பகந்தான் இந்த நூலை வெளியிட்டிருக்கின்றார்கள். அட்டைப்படம் மற்றும் வடிவமைப்பு எல்லாம் அருமையாக இருக்கிறது. அதிலும் குறிப்பாக நூலில் எழுத்துப்பிழைகளே இல்லை.இன்று வெளிவரும் பல புத்தகங்களில் எழுத்துப்பிழைகள் மலிந்து கிடக்கின்றன. ஆனால் எழுத்துப்பிழைகளே இல்லாமல் வந்திருப்பது சிறப்பு

            புறாக்காரர் வீடு என்னும் இந்தப் புத்தகத்திற்கு பாவண்ணன் முன்னுரை எழுதியிருக்கின்றார்.நமது துறையைப் பொறுத்தவரை ஒரு முன்னோடிப் படைப்பாளி என்ற முறையில் பாவண்ணன் இந்த நூலுக்கு முன்னுரை எழுதியிருக்கின்றார். மிக வெளிப்படையான ஒரு முன்னுரை . தனது முன்னுரையில்  பாராட்ட வேண்டியதைப் பாராட்டியும் அதே நேரத்தில் சிலவற்றை சுட்டிக்காட்ட வேண்டியதைச் சுட்டிக்காட்டியும் பாவண்ணன் எழுதியிருக்கின்றார்.பெரும்பாலானோர் முன்னுரையில் வெறும் பாராட்டுக்கள் மட்டும் இருக்கும் .விமர்சனம் இருக்காது. பாவண்ணன் இரண்டையும் கொடுத்திருக்கின்றார். நானுமே பாராட்டையும் , விமர்சனத்தையும் இணைத்தேதான் கொடுக்கப்போகின்றேன். அதுதான் வளரும் எழுத்தாளரான பாலகுமாருக்கு செய்யும் நன்மையாக இருக்கும் எனக்கருதுகின்றேன்

             இந்தப்புறாக்காரர் வீடு என்னும் கதையைப் பற்றிச்சொல்லும் பாவண்ணன், நல்ல சிறுகதை என்பது சொல்லப்பட்ட கதையை விட படித்துமுடித்தபின் சொல்லப்படாத கதையைப் பற்றியும் நம்மைச்சிந்திக்க வைப்பதாக இருக்கவேண்டும். பாவண்ணன் அசோகமித்திரனின் கதையை எடுத்துக்காட்டாக கூறுகின்றார். நான் அப்படிப்பட்ட நிலையில் புதுமைப்பித்தனின் சிறுகதைகளைப் பார்க்கின்றேன். அப்படியே படித்து முடித்துவிட்டோம் என்று புதுமைப்பித்தன் கதைகளை முடித்துவிட்டுச்செல்ல முடியாது. அந்தக் கதையை வாசித்ததன் பாதிப்பாக நம்மை யோசிக்க வைக்கும், நமது அல்லது நம்மைச்சுற்றி இருப்பவர் வாழ்க்கையோடு ஒப்பிட வைக்கும் கதைகள் புதுமைப்பித்தனின் கதைகள். அப்படிப்பட்ட ஒரு கதையாக 'புறாக்காரர் வீடு ' என்னும் கதையை பாவண்ணன் குறிப்பிடுகின்றார். ஒரு அப்பா, அவர் தனது பிள்ளைகளை வளர்க்கும்போதே ,வீட்டில் புறாக்களையும் வளர்க்கின்றார். புறாக்கள் மாடியில் வளர்க்கின்றன, புறாக்களுக்கு பாதுகாப்பான கூடுகளையும், உணவையும் அப்பா கொடுக்கின்றார் பிள்ளைகளுக்கு கொடுப்பதுபோலவே.வீட்டில் அண்ணன், தங்கை ,தம்பி எப்படி வளர்கின்றார்கள் என்பதனை எல்லாம் கதையாசிரியர் விவரித்துக்கொண்டு போகின்றார். ஒரு கட்டத்தில் மூத்த மகனுக்கு திருமணம் நடக்கின்றது. திருமணம் முடிந்தவுடன் மகன் தனக்கு தனி அறை வேண்டுமென மாடியில் கேட்க அப்பா ஒதுக்கிக் கொடுக்கின்றார். புறாக்கள் வளரும் கூண்டு நாற்றமடிக்கிறது என மகன் சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக  புறாக்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகின்றது.முடிவில் புறாக்களே இல்லாமல் வெறும் கூடு மட்டுமே மிஞ்சுகிறது. பாவண்ணன் என்ன சொல்கின்றார் என்றால் இந்தக் கதை மிக நுணுக்கமாக தனிமைப்பட்டுப் போகும் அப்பாவைப் பேசுகிறது. இன்றைக்கு இருக்கும் முதியவர்களின் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் தனிமை. தனிமைதான் இன்றைய முதியவர்களுக்கு மிகப்பெரிய சவால். இயக்க தொடர்பு உள்ளவர்கள், நண்பர்கள் வட்டம் உள்ளவர்கள், வாசிக்கும் பழக்கமுள்ளவர்களாக இருக்கும் முதியவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்.ஆனால் அதிகாரமாக இருந்துவிட்டு, முதுமையில் தனிமைப்பட்டுப்போகும் முதியவர்களின் தனிமை கொடுமை. முதியவர்களை நன்றாக கவனித்துக்கொள்ளும் நாடுகள் என ஒரு பட்டியல் உலக அளவில் போட்டிருக்கின்றார்கள். அதில் கடைசியில் இருந்து 3 வது அல்லது 4-வது இடத்தில்தான் இந்தியா இருக்கிறது. மிக நுணுக்கமாக முதியவர்களின் தனிமையை இந்தக் கதை கூறுவதாக நான் நினைக்கின்றேன். வெறும் சட்டத்தினால் மட்டும் முதியவர்களின் தனிமையை சரிபடுத்திவிடமுடியாது. இன்றைக்கு சட்டம் இருக்கிறது. கவனிக்காத மகனை, மகளைப் பற்றிக் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்று. ஆனால் எத்தனை பெற்றோர்கள் நம் நாட்டில் அப்படிப் புகார் கொடுப்பார்கள்? ஆயிரத்தில் ஒருவர்கூட இருக்கமாட்டார்கள். தனியாய்க் கிடந்து மருந்தைக் குடித்து செத்தாலும் சாவார்களே தவிர புகார் அளிக்கமாட்டார்கள். வாட்ஸ் அப்பில் வந்த ஒரு செய்தி என்னைப் பாதித்தது. 'அப்பாக்கள் சம்பாதிக்கும் சம்பாத்யத்தில் பிள்ளைகளுக்கு செலவழிக்க முழு உரிமை உண்டு , ஆனால் பிள்ளைகள் சம்பாதிக்கும் சம்பாத்தியத்தில் ...' என்று போட்டு விட்டு ஒரு கேள்விக்குறி போட்டிருந்தார்கள். நான் இதனைப் படித்தபிறகுதான் யோசித்தேன். நான் சம்பளம் வாங்கியவுடன் இந்தச்சம்பளம் அம்மாவுக்கு உரியது என்று நினைத்தோமா என்று நினைத்தேன். இல்லை. அம்மாவுக்கு கொடுத்தோம். செய்தோம். அதுவேறு . ஆனால் அப்படி நினைத்தோமா என்றால் இல்லை. ஆனால் எனது பிள்ளைகள் எனது சம்பளத்தை தங்கள் சம்பளமாக இன்று நினைக்கின்றார்கள், நாளை அவர்கள் சம்பளம் வாங்கும்போது அது அப்பா,அம்மாவிற்கும் உரியது என்று நினைப்பார்களா என்றால் உறுதியாக நினைக்கமாட்டார்கள். இப்படி மிக நுட்பமாக மூத்தவர்களின் பிரச்சனையை சொல்லியிருக்கும் கதையாக இந்தத் தொகுப்பில் உள்ள ;புறாக்காரர் வீடு ' என்னும் கதையைப் பார்க்கின்றேன்.இந்தக் கதையைச்சொல்லியிருக்கும் பாங்கு, மொழி அருமையாக உள்ளது
               அதேபோல 'மழை வரும் பருவம் ' என்னும் கதை. கேட்டுக்கொண்டிருக்கும் உங்களில் எத்தனை தோழர்கள் , இறந்து போன உறவினரின் உடலோடு வண்டியில் போயிருக்கின்றீர்கள் என்று தெரியவில்லை. அது ஒரு கொடுமையான அனுபவம். கல்லூரியில் படிக்கும் நண்பன். அந்த நண்பனின் அம்மா இறந்துபோனதாக செய்தி வருகிறது. அம்மாவின் இறப்பிற்குச்செல்லும் நண்பனோடு உடன் செல்லும் நண்பனின் அனுபவமாக இந்தக் கதை அமைகின்றது. வண்டியில் செல்லும் போது எதுவுமே பேசாமல் இறுக்கமாக வரும் நண்பன், எதைக் கேட்டாலும் விட்டேத்தியாக பதில் சொல்லும் நண்பன், நண்பனின் அம்மா எப்படி நண்பனை வளர்த்தார்கள் என்பதெல்லாம் மிக விளக்கமாக இந்தக் கதையில் எழுதப்பட்டுள்ளது. அதிலும் நண்பனின் அப்பா, நண்பன் அம்மாவின் வயிற்றில் கருவாக இருக்கும்போதே இறந்து விட, கண்வனின் இறப்பிற்காக கூடும் கூட்டத்தில் 'நான் சொல்ல ஒரு செய்தி இருக்கிறது ' என்று சொல்லி நெல்லுமணியின் மூலம் தான் கர்ப்பமாக இருப்பதைச்சொல்வதாக கதை நகர்கிறது. எழுத்தாளர் தொ.பரமசிவம் , தனது 'அறியப்படாத தமிழகம்' என்னும் நூலில் , கர்ப்பமாக இருக்கும் நிகழ்வை, கணவன் இறந்துவிட்ட நிலையில் நெல் மணிகள் மூலமாக  ஊர்மக்களுக்கு மனைவி தெரிவிக்கும் நிகழ்வைக் குறிப்பிடுவார். அப்படிப்பட்ட ஒரு நிகழ்வு இக்கதையில் வருகின்றது
ஆழமான கதை.
இப்படி ஒவ்வொரு கதையுமே வேறுபட்ட களம், வேறுபட்ட நோக்கில் இருக்கின்றன. அதேபோல 'திருவாளர் பொதுஜனம் ' என்னும் கதை, மிகவும் நகைச்சுவையாக மக்களின் மனப்பான்மையை எடுத்துக்காட்டும் கதை. மிக நன்றாக இருக்கும் கதை. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் கேட்கலாம், ஆனால் அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு  எதற்காக கேட்கிறீர்கள் என்று சொல்லவேண்டியதில்லை என்னும் அடிப்படையை வைத்து நையாண்டியாக எழுதப்பட்ட கதை.

               இதில் ' நாக தேவதை ' என்னும் ஒரு கதை இருக்கிறது.அமானுசம் என்ற அடிப்படையில் எழுதப்பட்ட கதையாக இந்த 'நாகதேவதை 'என்னும் கதை. கனவில் ஒரு சிறுமி, அப்புறம் ஒரு கோடாங்கி , அவனிடம் போய் குறி கேட்கும் நிலை,கோடாங்கி சொல்லும் பரிகாரம், அந்தப் பரிகாரத்தை ஒட்டிய நிகழ்வோடு நிகழும் சில நிகழ்வுகள் என அக்கதை நகர்கின்றது. இந்தக் கதையின் உள்ளடக்கம், இந்தக் கதை தரும் எதிர்மறையான தாக்கம் தேவையில்லாதது என்பது எனது கருத்து. இன்றைக்கு எதற்காக கதை எழுதுகிறோம் என்னும் நோக்கம் இல்லாமல் எழுதக்கூடிய எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். பேய்,பிசாசு என்று சொல்லி கற்பனையாக எழுதி பணம் சம்பாதிக்கும் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இது போன்ற கதைகளை சமூகத்தின் நலன் கருதி தவிர்க்கலாம் என்பது எனது கருத்து

அதுபோல ' கருப்பு ' எனும் கதை நன்றாகச்சொல்லப்பட்டுள்ளது. நிறைய எழுதக்கூடிய ஆற்றல் இருக்கிறது இந்த எழுத்தாளருக்கு. இளைஞர். மொழி வளம் அருமையாக இருக்கிறது. நிறைய இவர் எழுதவேண்டும். இன்னும் பல சிறுகதைகள் தொகுப்பு வரவேண்டும்

(30.09.2016, மதுரை பி.எஸ்.என். எல். வாசிப்போர் களம் நிகழ்ச்சியில், புத்தக அறிமுகமாக வி.பாலகுமார் அவர்கள் எழுதிய 'புறாக்காரர் வீடு ' என்னும் புத்தகத்தைப் பற்றி  முனைவர் வா.நேரு பேசியதின் எழுத்து வடிவம் )