Friday 5 October 2018

அபசுரமே எட்டி நில்..


" செம்புலப் பெயல்நீர் " போல
எல்லாம் கலந்து விட்ட
இந்தக் காலத்திலுமா
சாதியையும்
வருணத்தையும்
உன் விலாசம் என்கிறாய்?
             
                அந்த விலாசத்தில் தான்
                நீ இருக்கிறாய்?


காலப் புயலில்
உன் வீடு இடிந்து போகவில்லையா?
நீ குடி பெயர்ந்து போகவில்லையா?
நடந்து கலைத்துச்
சத்திரங்களில் தங்கியதில்லையா?

                உன் இரத்தத்தைக் கிளறிப் பார்
               நீயும் ஒரு
               சமுத்திரம் என்பதை அறிவாய்.

சமுத்திரத்தில் ஏது
நதிகளின் விலாசம்?

                "நான், என்பதே
                 இப்போது பன்மைதான்

கைரேகைகளில்
சிக்கல் விழுந்துவிட்ட
இந்தக் காலத்தில்
குலம் என்கிறாய்
கோத்திரம் என்கிறாய்

               குலத்தொழிலைத்தான்
              செய்து கொண்டிருக்கிறாயா
               நீ?

உஞ்ச விருத்தி செய்து தான்
உயிர் வாழ்கிறானா
பிராமணன்?

               ஆட்சி பீடம் தவிர
               வேறெங்கும் அமர்வதில்லையா
               சத்திரியன்?

வைசியன் மட்டும் தான்
தராசு பிடிக்கிறானா ?

                    ஏர் ஓட்டுகிறவனெல்லாம்
                   சூத்திரனா?

வயிற்றுக்காக
முந்தானை விரிக்கத்
தொடங்கிவிட்டபிறகு
இன்னும் எதற்குப்
பத்தினிப் பட்டம்?


                 ஞானிகள் செய்ய முடியாததை
                 விஞ்ஞானிகள் செய்துவிட்டான்

இதோ
நீயே மழித்துக் கொள்கிறாய்
நீயே துவைத்துக் கொள்கிறாய்
           
                  ஏன்
                  கழிப்பறையைக் கூட
                  நீயே கழுவிக் கொள்கிறாய்

இனி
யாரைப் பார்த்து
"எட்டி நில் , என்பாய்?

                  “இல்லை
                  இன்னும் நான்
                  இந்தத் சாதிதான் " என்கிறாயா?

அப்படியென்றால்; பிரேதமே!
உயிருடையவர்கள்  மத்தியில்
உனக்கென்ன வேலை?

                ஒரு புதிய பூபாளத்திற்காகச்
               சுரங்கள் சங்கமிக்கும் நேரமிது
               அபசுரமே!
               எட்டி நில்.


கவிஞர் அப்துல்ரகுமான் "சுட்டுவிரல்" கவிதை நூலிலிருந்து.



பரியேறும் பெருமாள்-திரை விமர்சனம்

பொதுவாக நல்ல திரைப்படங்கள் என்று அறியும் போது அப்படத்தை   பார்த்து ரசிப்பதோடு நின்று விடுவேன். அப்படங்களை பற்றி பொதுவெளியில் விவாதிப்பதோ அல்லது விமர்சனம் செய்வதோ எனது பழக்கம் அல்ல. ஆனால்,  இந்தப்படம் என் மனதை மிகவும் கனக்கச்செய்து விட்டது. படம் முடிந்த பிறகு  " பரியேறும் பெருமாளை" (பரியன்) சுமந்து கொண்டு தான் வீட்டிற்கு வந்தேன்.

இந்தியா முழுவதும் சாதியமும், ஆணவக்கொலைகளுக்கும் தலைவிரித்தாடும்  இந்தச் சூழலில் வெளிவந்திருக்கும் இந்தப்படம் தமிழகத்தில்  திருப்புமுனையை தரும் என்றும் எதிர்பார்க்கிறேன். அப்படி இல்லாவிட்டாலும் ஒரு தாக்கத்தையாவது ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. 

கருப்பி என்ற பரியேறும் பெருமாளின் பெண் நாய்  இரயில் தண்டவாளத்தில்  கொல்லப்படுவதிலிருந்து  ஆரம்பிக்கும் கதை, பரியனையும் அதே சூழலுக்குள் தள்ளி,  அவன் விழித்தெழுந்து  , போராடி வெல்லும் வரை உயிர் துடிப்போடு நகருகிறது. 

சட்டக்கல்லூரியில் பரியனுடன் படிக்கும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த ஜோதிலட்சுமி, பரியனிடம் இயல்பாக பழகுவதும், அது கனிந்து அவளுக்குள் காதலாக மலருவதும் எளிய கவிதை போல் இயல்பாக சொல்லப்பட்டிருக்கும் விதம் கவித்துவமாக இருக்கிறது.   அவளது காதலையும் , அவளையும் புரிந்து கொள்ளும் முன்பே  அவளின் உறவினர்கள்  பரியனை அடித்து நொறுக்கும் காட்சி  மனதை  நெகிழச் செய்வதோடு ,  கனக்கவும் செய்கிறது.


அவளது தந்தை , பரியனிடம் தமது மகளை மறந்து விடுமாறு சொல்வதும் , அப்படி இல்லாவிட்டால் அவனோடு சேர்ந்து தனது மகளையும் கொன்று விடுவார்கள் என்று மனம் கலங்கிச் சொல்லும் போது சாதிவெறி புரையோடிக் போயிருக்கும் தென் தமிழகத்தின் நிலைத் தெளிவாகத் தெரிய வரும். 

கூத்துக் கலைஞரான  பரியனின் தந்தையை சட்டக் கல்லூரியின் முன்  அவமானப்படுத்தி நிர்வாணப்படுத்தும் காட்சி , திரையரங்கில் அமர்ந்திருக்கும் அனைவரையும் உறையச் செய்துவிடும் என்பதில் சந்தேகமேயில்லை. 

இத்தனைக்கும் காரணம்...

பெண்.

அவளை உடமையாகாக் கருதும் இந்த சாதீயக் கட்டமைப்பு. அதற்கு துணைபோகும் அகமணைமுறை திருமணம். பெண்ணை  தன் சாதியத்தை காக்கும் அடையாளமாக கருதும் வரை இந்தச் சமுதாயம் மாறப்  போவதில்லை. ஆணவப்படுகொலைகளும் நிற்கபோவதில்லை.  

இதற்குத் தீர்வு தான் என்ன?
பெண் விடுதலை தான்!.

மிருகங்கள் கூட தமது இணையைத் தேர்ந்தெடுக்கும் உரிமையை பெற்று உள்ளது. ஆனால் , ஆறறிவு பெற்ற மனிதகுலம் அதை மறுப்பது வெட்கக்கேடு!.  அதனால்  தான் தந்தை பெரியாரும் , அண்ணல் அம்பேத்காரும் பெண்ணுரிமையை வலியுறுத்தியுள்ளார்கள்.

உயிர்போராட்டத்தின் இறுதியில்  பரியன் கோபக்கனல் தெறிக்க , " முதலில் மனிதர்களாக இருங்கள்" என்று ஜோதிலட்சுமியின் தந்தையிடம் கூறுவது மிகவும் "யதார்த்தம்"! .

இறுதிக்காட்சியின்   உரையாடலில் ,  ஜோதிலட்சுமியின் தந்தை பரியனைப் புரிந்து கொள்வதும் , அவர்கள் நட்பை ஏற்றுக்கொள்வதும் நேர்மறை எண்ணத்தின் வெளிப்பாடாகவும் , சமூக மாற்றத்திற்கான அடையாளமாகவும் இருக்கிறது.  இங்கே தான் "மாரி செல்வராஜ்"  என்ற படைப்பாளி - சமூக சீர்திருத்தவாதி வெற்றி பெறுகிறான்.!!

உண்மையாகக் கூற வேண்டுமென்றால் இப்படத்தில் யாரும் நடித்திருப்பதாகத் தெரியவில்லை . வாழ்ந்திருக்கிறார்கள். அதனால் இது திரைப்படமாக இல்லாமல்  தமிழகத்தை மாற்றத்திற்கு அழைத்துச் செல்லும் ஆவணமாகவே தெரிகிறது!!.

வாழ்த்துக்கள் மாரி செல்வராஜ். 

சு.கருப்பையா
மதுரை.