Thursday 26 September 2013

சிறுவர் இலக்கியம் - நூல் அறிமுகம்

கடந்த 14/09/2013 அன்று வாசிப்போர் களம் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்ட “விழியனின் சிறுவர் உலகம்”, கட்டுரை வடிவில் சொல்வனம் இணைய இதழில் வெளியாகி உள்ளது.

நண்பர்கள் வாசித்து கருத்துரைக்குமாறு வேண்டுகிறேன்.

வி.பாலகுமார்.

கட்டுரைக்கான சுட்டி: http://solvanam.com/?p=29015

Sunday 22 September 2013

வாசிப்போர்களம்-களம் 16


தோழர்களே! கடந்த 14/09/2013 ந் தேதி வாசிப்போர்களத்தின் மாதந்திரக் கூட்டம் நடைபெற்றது . தோழர்கள்  சங்கையா,பாலகுமார்  மற்றும் நேரு ஆகியோர்கள்  வெவ்வேறு தளத்தில் மூன்று நூல்களை அறிமுகப்படுத்தினார்கள். அந்த நூல்கள் இதோ:

1.    தோழர். சங்கையா
காஷ்மீரின் தொடரும் துயரம்
( உண்மை அறியும் குழுவின் ஆய்வறிக்கை- தமிழில்;வெ. கோவிந்தசாமி)
விடியல் பதிப்பகம், கோவை
விலை ரூ.65/-
2.    தோழர். பாலகுமார்

மாக்கடிகாரம்                     - விழியன்
பென்சில்களின் அட்டகாசம்- விழியன்
சிறுவர் இலக்கியம்

3.    முனைவர்.. நேரு

இவர் தாம் புரட்சிக் கவிஞர் பார்
வெளியீடு : நாம் தமிழர் பதிப்பகம்  .
ஆசிரியர்: அறிவுக்கரசு .

காஷ்மீரின் தொடரும் துயரம்- இந்தப்  புத்தகத்தின் மூலம் காஷ்மீரத்தின் வரலாற்றையும் , அதன் பிரச்சனைகளையும் தெளிவாக புரிந்துகொள்ள முடிந்தது. 13 உண்மை அறியும் குழுக்களின் தொகுப்பான இந்த நூலுக்கு தோழர்.அ.மார்க்ஸ் முப்பது பக்கத்தில் முன்னுரை தந்துள்ளார். 1999 இல் எழுதப்பட்ட இப்புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது போன்றே இன்றும் காஷ்மீர் இருப்பது மிகவும் திரதிருஷ்டமானது. தோழர்.சங்கையா தனது உரையை முடித்ததும் காஷ்மீரத்து சகோதரர்களின் துயரம் எங்கள் இதயத்தில் வேதனையை வரவழைத்தது என்பதை சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை என்று கருதுகிறேன்.

தோழர். பாலகுமார் அறிமுகப்படுத்திய விழியனின் நூல்கள் எங்களுக்கு உண்மையிலே மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. குழந்தைகளிடம் மூடநம்பிக்கைகளை விரட்டி, தன்னம்பிக்கையையும் , பகுத்தறிவையும் புகட்டும் விதமாக விழியனின் நூல்கள் இருப்பது மிகவும் மகிழ்ச்சி. குழந்தைகளுக்கு நூல்கள் பரிசளிக்க விரும்புபவர்கள் தைரியமாக விழியனின் நூல்களை வாங்கலாம் என்று தோழர்.பாலா உறுதிபடக் கூறுகிறார்.


புரட்சி கவிஞர் பாரதிதாசனை , உலகப் பெரும் இலக்கிய செல்வர்கள் கிளாட் மெக்கேவேட்ஸ் வொர்த்  மற்றும்  ராபர்ட் பிராட்ஸ் போன்றவர்களுடன் ஒப்பிட்டு அறிவுக்கரசு " இவர் தாம் புரட்சி கவிஞர் பார் " என்ற நூலில் எழுதி உள்ளதை மிகவும் ரசித்தோம். மொழி, இயற்கை, உழவு மற்றும் உழைக்கும் வர்க்கத்தைப் பற்றி பாடிய புலவர்களில் புரட்சிக்கவிஞர் முதன்மையானவர் என்பதை முனைவர் நேரு சுட்டிக்காட்டத் தவறவில்லை.

முனைவர் நேருவின் விரிவான கருத்துரை இங்கே>>>>PURATCHI KAVIGNAR

Friday 6 September 2013

வாசிக்கத் தகுந்த நூல்கள் தொகுதி-2


மதுரை தமுக்கத்தில் புத்தகத் திருவிழா.ஒரு லட்சம் புத்தகங்கள் உங்கள் தேர்வுக்காக காத்திருக்கிறது.அதற்குள் மூழ்கி முத்தெடுங்கள்பகுத்தறிவையும் சமுக உணர்வையும், மனித மாண்பையும்,விடுதலை வேட்கையையும்,நெஞ்சுக்குள் பதியம் போடும் முத்துக்களைத் தேடுங்கள். தோழர். சங்கையா தன்னை கவர்ந்த கீழ்க்காணும் நூல்களை பரிந்துரை செய்கிறார்;

பகுத்தறிவு பாடங்கள்----------டாக்டர்.கோவூர்

இந்திய வரலாற்றில் பகவத் கீதை---விடியல் பதிப்பகம்

குஜராத் 2002-தெகல்கா அம்பலம்-------அ.மார்க்ஸ்

விடுதலைப் போரின் வீரமரபு-------கீழைக் காற்று பதிப்பகம்

உலகமயம்-அடிமைதளையில் இந்தியா--------அரவிந்

ஸ்டாலின் சகாப்தம்

அம்பேத்கரும்-சாதி ஒழிப்பும்-------முனைவர். கோ.கேசவன்

நான் யார்க்கும் அடிமை இல்லை,எனக்கு அடிமை யாருமில்லை----வே. மதிமாறன்

காஸ்மீரின் தொடரும் துயரம்------விடியல் பதிப்பகம்

அர்த்தமற்ற இந்து மதம்-----------மஞ்சை வசந்தன்

ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமுலம்-ஜான் பெர்க்கின்ஸ்

வாசிக்கத் தகுந்த நூல்கள் தொகுதி-1

மதுரையில் புத்தகத் திருவிழா நடைபெறும் இத்தருணத்தில் (தமுக்கம்  30/08/13 to 09/09/13 ) வாங்கி படிக்க நல்ல நூல்களை பரிந்துரை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்திருந்தோம். தோழர்.கோசல்ராமன் தன்னை கவர்ந்த கீழ்க்காணும்  பத்து நூல்களை பரிந்துரை செய்கிறார்;

மோகமுள்                                               - தி.ஜானகிராமன்
ஒரு மனிதன், ஒரு வீடு,ஒரு உலகம் - ஜெயகாந்தன்
சில நேரங்களில் சில மனிதர்கள்        -ஜெயகாந்தன்
கோபல்லக்கிராமம்                                - கி.ராஜநாராயணன்
நாளை இன்னொரு நாளே                    -  ஜி.நாகராஜன்
ஒரு புளியமரத்தின் கதை                     - சுந்தர ராமசாமி
ஒற்றன்                                                     -  அசோகமித்திரன்
பசித்த மானிடம்                                     - கரிச்சான் குஞ்சு
கடல் புரத்தில்                                          -  வண்ண நிலவன்
இடைவெளி                                             -   எஸ்.சம்பத்.

Tuesday 3 September 2013

உப பாண்டவம்

கடந்த 24/08/2013 ந் தேதி வாசிப்போர்களத்தின் 15 வது கூட்டம் நடந்தது. முதல் நிகழ்வாக , தோழர்.கருப்பையா  எஸ்.ராவின் " உப பாண்டவம் " என்ற நூலை அறிமுகம் செய்து வைத்தார். இரண்டாவது நிகழ்வாக , வாசிப்போர்களத்தின் சார்பாக நடந்த தோழர்.சங்கையாவின் " லண்டன் - ஒரு பழைய சாம்ராச்சியத்தின் அழகிய தலை நகரம்" என்ற நூல் வெளியீடு பற்றிய மதிப்பீடு நடை பெற்றது. தோழர்.சங்கையா , நூல் வெளிவந்த விதம் பற்றி சுவை பட விவரித்தார். ஒருங்கிணைப்பாளர் தோழர்.கருப்பையா , நூல் வெளிவர உதவிய நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.




உப  பாண்டவம்
எஸ்.ராமகிருஷ்ணன்
விஜயா பதிப்பகம்
பக்கங்கள் : 384
விலை : ரூ.225


மகாபாரதம் காட்டும் மனிதர்களின் அக உணர்வின் பிரதிபளிப்பே இந்த நாவல். இதில்  வரும்   சத்தியவதி,  பீஷ்மன், திருதராஜ்டிரன், யுதிஷ்டிரன், பாஞ்சாலி, விதுரன், சகுனி, சிகண்டி, காந்தாரி, குந்தி, யுயுத்சு , விகர்ணன் மற்றும் பலர் உண்மையைப் பேசுவார்கள். அதுமட்டுமல்லாமல் , அவர்கள் அனைவரும் நம்முடன் வாழும் சக மனிதர்கள் போல் சிந்திப்பதும் , பேசுவதும் நம்பும்படி உள்ளது. 

திருதராஜ்டிரன் , யுயுத்சுவை அரச குலத்தை சேர்ந்தவன் அல்ல என்றும், அவன் பணிப்பெண்ணுக்கு பிறந்தவன் என்றும் கூறும் போது அவ்வாறே பிறந்த விதுரனின் வேதனை மிக நயமாக சொல்லப்பட்டிருக்கும். மகாபாரதம் முழுவதும் பல நீதிகளை எடுத்துரைத்த அதே விதுரன், தனது இறுதிக்காலத்தில் பேச விரும்பாமல் வாயில் கூழாங்கல்லை அடைத்துக் கொண்டு வனத்தில் அனாதையாக இறப்பது பரிதாபம்.

மிகவும் அழகான காந்தாரி , தனது கண்களைக் கட்டிக்கொண்டு குருடியாக மாறி அந்தகனின் மனைவியாக வாழப்போவதைக் கண்டு மனம்  வெதும்பிய  சகுனி, அவளுக்குத் துணையாக அஸ்தினாபுரத்தில் தங்கி விடுவதும் , தன்னை ஒரு சேடியாக பாவித்து வாழ்வதும் நயமான சிந்தனை. இது சகுனியின் புதிய பரிமாணமாகத் தெரிகிறது. சத்தியவதி , சந்தனுவிற்கு மனைவியாவதற்கு முன்னரே பீஷ்மரை சந்திப்பது , அவனை விரும்பியது போன்ற கற்பனை சற்று முரணாக உள்ளது. இருந்தாலும்ஒரு பயணியாக மகாபாரத்திற்குள் நுழைந்த எஸ்.ரா பல பாத்திரங்களின்  உள்ளமாக மாறி, அவர்களின் அக உணர்வை வெளிக்கொணர்ந்த விதம் மிக அழகாக உள்ளது. உபபாண்டவம் உண்மையிலே எஸ்.ராவின் வெற்றிகரமான படைப்பே! 

அடுத்து, பணம் பண்ணும் இந்த உலகத்தில் , ஆறு பதிப்புகளாக ஒரே விலையில்   தரமான அச்சில் இந்நூலை வெளியிட்ட விஜயா பதிப்பகத்திற்கு  மனமார்ந்த நன்றி.