கடந்த 24/08/2013 ந் தேதி வாசிப்போர்களத்தின்
15 வது கூட்டம் நடந்தது. முதல் நிகழ்வாக , தோழர்.கருப்பையா எஸ்.ராவின் " உப பாண்டவம் " என்ற நூலை
அறிமுகம் செய்து வைத்தார். இரண்டாவது நிகழ்வாக , வாசிப்போர்களத்தின் சார்பாக
நடந்த தோழர்.சங்கையாவின் " லண்டன் - ஒரு பழைய சாம்ராச்சியத்தின் அழகிய தலை
நகரம்" என்ற நூல் வெளியீடு பற்றிய மதிப்பீடு நடை பெற்றது. தோழர்.சங்கையா , நூல் வெளிவந்த விதம் பற்றி
சுவை பட விவரித்தார். ஒருங்கிணைப்பாளர் தோழர்.கருப்பையா , நூல் வெளிவர உதவிய
நண்பர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
உப பாண்டவம்
எஸ்.ராமகிருஷ்ணன்
விஜயா பதிப்பகம்
பக்கங்கள் : 384
விலை : ரூ.225
மகாபாரதம் காட்டும் மனிதர்களின் அக உணர்வின் பிரதிபளிப்பே இந்த நாவல்.
இதில் வரும் சத்தியவதி, பீஷ்மன், திருதராஜ்டிரன், யுதிஷ்டிரன், பாஞ்சாலி, விதுரன், சகுனி, சிகண்டி, காந்தாரி, குந்தி, யுயுத்சு , விகர்ணன் மற்றும் பலர் உண்மையைப் பேசுவார்கள். அதுமட்டுமல்லாமல் , அவர்கள் அனைவரும் நம்முடன்
வாழும் சக மனிதர்கள் போல் சிந்திப்பதும் , பேசுவதும் நம்பும்படி உள்ளது.
திருதராஜ்டிரன் , யுயுத்சுவை அரச குலத்தை சேர்ந்தவன் அல்ல என்றும், அவன் பணிப்பெண்ணுக்கு
பிறந்தவன் என்றும் கூறும் போது அவ்வாறே
பிறந்த விதுரனின் வேதனை மிக நயமாக சொல்லப்பட்டிருக்கும். மகாபாரதம் முழுவதும்
பல நீதிகளை எடுத்துரைத்த அதே விதுரன், தனது இறுதிக்காலத்தில் பேச விரும்பாமல் வாயில்
கூழாங்கல்லை அடைத்துக் கொண்டு வனத்தில் அனாதையாக இறப்பது பரிதாபம்.
மிகவும் அழகான காந்தாரி , தனது கண்களைக் கட்டிக்கொண்டு குருடியாக மாறி அந்தகனின்
மனைவியாக வாழப்போவதைக் கண்டு மனம்
வெதும்பிய சகுனி, அவளுக்குத் துணையாக
அஸ்தினாபுரத்தில் தங்கி விடுவதும் , தன்னை ஒரு சேடியாக பாவித்து வாழ்வதும் நயமான
சிந்தனை. இது சகுனியின் புதிய பரிமாணமாகத் தெரிகிறது. சத்தியவதி , சந்தனுவிற்கு மனைவியாவதற்கு
முன்னரே பீஷ்மரை சந்திப்பது , அவனை விரும்பியது போன்ற கற்பனை சற்று முரணாக உள்ளது. இருந்தாலும், ஒரு பயணியாக மகாபாரத்திற்குள் நுழைந்த எஸ்.ரா பல
பாத்திரங்களின் உள்ளமாக மாறி, அவர்களின் அக உணர்வை வெளிக்கொணர்ந்த
விதம் மிக அழகாக உள்ளது. உபபாண்டவம் உண்மையிலே எஸ்.ராவின் வெற்றிகரமான படைப்பே!
அடுத்து,
பணம் பண்ணும் இந்த உலகத்தில்
, ஆறு பதிப்புகளாக ஒரே
விலையில் தரமான அச்சில் இந்நூலை
வெளியிட்ட விஜயா பதிப்பகத்திற்கு
மனமார்ந்த நன்றி.
Tweet | |||||
No comments:
Post a Comment