Monday 13 July 2020

சுளுந்தீ-நாவல்


சுளுந்தீ-நாவல்

ஆசிரியர் : இரா. முத்துநாகு
விலை: ரூ 450/-
பக்கங்கள்: 480
வெளியீடு : ஆதி பதிப்பகம்.
முதல் பாதிப்புடிசம்பர்-2018; நான்காம் பதிப்பு ஜனவரி-2020



சுளுந்தீ……இது பச்சையாகவே எரியும் தன்மையுடைய மரம். இதை வழிப்பயணத்திற்கு விளக்காகவும் பயன்படுத்தலாம்; கொளுத்தவும் பயன்படுத்தலாம்.


கன்னிவாடி ஜாமீன் அல்லது பாளையம், மதுரை நாயக்கர் ஆட்சிக் காலத்தில் அரசு நிர்வாகத்திற்காக உருவாக்கப்பட்ட பாளையங்களில் மிக  முக்கியமானதாக  இருக்கிறது. மேலும் மதுரை நாயக்க மன்னர் சொக்கநாத நாயக்கரின் ( 1659-1682)  முக்கியமான படைத்தளமாகவும்  கன்னிவாடி இருக்கிறது.

அதன் அரண்மனையார் அல்லது பாளையக்காரர் சின்னக் கதிரியப்ப நாயக்கர் , அவரது அரண்மனை நாவிதன் ராமன் , அவன் மகன் செங்குளத்து மாடன் ஆகியோர்களின்   இரகசியமான அல்லது கமுக்கமான வாழ்க்கையை  இந்த நாவல் பேசுகிறது. 

ராமன் பன்றிமலை சித்தரின் சீடன் . அவரிடம் சித்த மருத்துவத்தை நன்றாக கற்றறிந்தவன். அரண்மனையார் சின்னக் கதிரியப்ப  நாயக்கரால் " ராம பாண்டுவன்" என்று பாராட்டப்படுபவன். அவனுக்கு தன் மகனை ஒரு படைவீரனாக பார்க்க வேண்டும் என்று மிகப்பெரிய ஆசை இருக்கிறது.  ஆனால், ஒரு வீரனுக்குரிய அத்தனை திறமைகள் இருந்தும் அரண்மனையார் கதிரியப்ப  நாயக்கர் அவனை ஒரு போர் வீரனாக ஏற்றுக் கொள்ளாமல் அரண்மனை நாவிதனாக நியமனம் செய்வார். மனதளவில் நொறுங்கிப் போய் விடுகிறான் ராமன். பிறகு தன் குலத்தொழிலை முறையாக மாடனுக்கு கற்றுத் தருகிறான் ராமன். இறுதியில் பார்ப்பனியத்தின்  நான்கு வர்ண கோட்பாடு தான் வெல்கிறது.

மதுரை நாயக்க அரசர்கள் அனைவரும் சதுர்வர்ணத்தை தூக்கிப்பிடித்து வாழ்ந்து வந்தவர்களே ! அந்த வகையில் கன்னிவாடியும் ஜமீனும் விதிவிலக்கல்ல . அரண்மனையாரின் தளபதி முத்து இருளப்ப நாயக்கருக்கு ராமனின் செல்வாக்கு மற்றும் பாண்டுவத்தின் மீது மிகப் பெரிய காழ்ப்புணர்ச்சி இருக்கிறது . அவரே தனது மகனின் வளர்ச்சிக்கு தடை போடுகிறார் என்ற குறை ராமனுக்கும் இருக்கிறது.

இருந்தாலும் , மாடன் சிறந்த மல்யுத்த வீரனாக உருவாகிறான். கன்னிவாடி ஜமீன் அவன் வீரத்தைக் கண்டு பயப்படுகிறது . இருந்தாலும், ஒரு நாவிதன் வீரனாக இருப்பதையும் , அவன் குதிரையில் பயணிப்பதையும் கன்னிவாடி மக்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அதனால் அவனிடம் வெறுப்பு கொண்டு யாரும் நாவிதம் செய்து கொள்ள விரும்புவதில்லை . இது அவனை மிகவும் காயப்படுத்துகிறது. அதற்கு எதிர்வினையாக , தன்னை யாராவது மல்யுத்தத்தில் தோற்கடித்தல் தான் சவரத் தொழில்  செய்வதாகவும் , மற்றவர்கள் தோல்வி அடைந்தால் அவர்கள் சவரத் தொழில் செய்ய வேண்டும் என்று சவால் விடுகிறான். மாடன்  வெல்ல முடியாதவனாக மாறிப் போகிறான் .

கன்னிவாடி அடங்கி விடுகிறது.

இறுதியில் ,  தளபதி முத்து இருளப்ப நாயக்கர் , உசிலம்பட்டிக்கு அருகில் உள்ள கீரிப்பட்டி " வங்காரன் " மூலமாக சூழ்ச்சி செய்து  மல்யுத்தத்தில் மாடனை கொல்கிறார்.  கன்னிவாடி ஜமீனை எரிய  வைத்துக் கொண்டிருந்த சுளுந்தீ அணைக்கப்படுகிறது.

 பின்னர் , மல்யுத்தத்தில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக வங்காரனும் மடிகிறான்.  

மாடனின் மைத்துனன் நாவிதன் பெருமாள் பயன்படுத்திய மாடனின்நஞ்சு தடவிய கத்தியின்” மூலம் சவரம் செய்யப்படுவதால் தளபதியும் கொல்லப்படுகிறார்.  அந்தப்புரத்தின் வழியாக அதிகாரத்தை கைப்பற்ற துடிக்கும் தளபதி முத்து இருளப்ப நாயக்கர் கொல்லப்பட வேண்டும் என்பதே அரண்மனையார் சின்னக் கதிரியப்ப நாயக்கர் மாடனுக்கு இட்ட கட்டளை என்பது அரண்மனை ரகசியமாகவே இருந்து  விடுகிறது.  

இது தான் " சுளுந்தீயின்" கதை . 

இந்த நாவல்  பன்றி மலை சித்தர் வழியாக  சித்த மருத்துவத்தின் சிறப்பு, நாவிதர்களுக்கும் சித்த மருத்துவத்திற்குமான தொடர்பு, கன்னிவாடி ஜமீனில் நிலவி வந்த குலநீக்க தடைச்சட்டம், அம்மக்களின் வாழ்வாதார சிக்கல்   என்று பல விஷயங்களை வெளிக் கொணருகிறது. அதுமட்டுமல்லாமல் கன்னிவாடி ஜமீனில் வாழும் பல்வேறு சாதீய மக்களின் உறவு , தொழில் மற்றும் வாழ்க்கைநெறி போன்றவை மிக நேர்த்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

குறிப்பாக , சித்தமருத்துவம் கோலோச்சுகிறது. மனிதர்களுக்கு ஏற்படும் அத்தனை நோய்களையும் நலமாக்கும் சித்த மருத்துவ களஞ்சியம் நாவல் முழுவதும் நிறைந்திருக்கிறது. குறிப்பாக நாவலாசிரியர் முத்துநாகுவே ஒரு சித்தமருத்துவராக இருப்பதும் ,  அம்மருத்துவம் சார்ந்த குறிப்புகளை நாவலுக்குள் எழுதியிருப்பதும்   மெருகூட்டுகிறது. உப்புமூலமாக வெடி மருந்து தயாரிப்பதையும் , செந்தூரம் தயாரிக்க பயன்படும் மூலப்பொருள்களை பற்றிய  நாவலாசிரியரின்  விளக்கமும்  பிரமிக்க வைக்கிறது.

சவ அடக்கத்தின் போது நாவிதர்கள் செய்ய வேண்டிய பணி அதாவது  சாதி வாரியாக எப்படி பாடை கட்டுவது, அடக்கம் செய்வது மற்றும் சடங்குகள் செய்வது என்பது பற்றி மிகத் தெளிவான குறிப்புகளைக் கொடுத்திருக்கிறார் முத்துநாகு. அதேபோல் கிராமங்களில் துணி துவைக்கும் சலவைத் தொழிலாளிகள்  இடும் அடையாளக் குறிகளில் கூட " சாதி" இருப்பதை வெளிக்கொணர்ந்திருக்கிறார் முத்துநாகு.

நாம்  மலைத்துப் போகும் வாழ்வியல் குறிப்புகள்  நாவல் முழுவதும் பரவிக்  கிடக்கிறது.

குலநீக்கம் செய்யப்பட்ட கட்டக்காமக்குடும்பன் தமது மக்களின் வாழ்வாதாரத்திற்காக கிணறு வெட்டுவதும்  , அதற்கு உதவும் விதமாக மருதமுத்து ஆசாரி " வெடிமருந்து " தயாரிக்கும் முறையைக் கற்றுத் தருவதும் ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியைக் காட்டுகிறது.

அதே போல் அந்தந்த சாதிகளுக்கு பிடித்தவாறு மரங்கள் இருப்பதைக்  கூட  இந்த நாவல் பேசுகிறது. குறிப்பாக மதுரை மாவட்டத்தின் சாலைகள் அனைத்திலும் புளிய மரம் இருப்பது ஏன் ? என்ற கேள்வி எனக்குள் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அந்தப் புளியமரம் , நாயக்கர்களின் குலமரம் என்பதையும் , அதனாலேயே அம்மரங்கள் சாலைகள் முழுவதும் நடப்பட்டுள்ளன என்பதை இந்த நாவல் மூலம் தான் அறிந்து கொண்டேன்.  

இருந்தாலும் இந்த நாவல் என்னுள் கீழ்காணும்  சில கேள்விகளையும் எழுப்பியது;

Ø  நான்கு வருணக் கோட்பாடுகளை கடைபிடிக்காத தனது குடி மக்களை நாயக்க அரசர்களும் , பாளையக்காரர்களும்  குலநீக்கம் செய்ததற்கான  ஆதாரங்கள்  எங்கிருந்து பெறப்பட்டது ?. இது பற்றி எந்த வரலாற்று ஆசிரியரும் எழுதியதாக தெரியவில்லை.

Ø  பன்றிமலைச் சித்தரின் மருத்துவ முறைகளையும் , ஆசியையும்  முழுமையாகப்  பெற்ற ராமன் " சித்தர்" நிலைக்கு செல்லாமல் ஏன் திரும்பவும் " நாவிதனாக " அரண்மனைக்கு திரும்பினான்? .

Ø  கி.பி. 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளில் இருந்த மன்னர்களும் , பாளையக்காரர்களும் பாலியியல் மீறல்களுக்கு பெயர்பெற்றவர்களாக இருந்திருக்கிறார்கள். ஆனால், இந்த நாவலில் அது பற்றிய பதிவுகள் எதுவுமில்லை என்பது எனக்கு ஆச்சரியத்தைத் தருகிறது.

Ø  அதே போல் , ஒரு நாவலுக்கு சுவாரசியத்தை தரும் திருப்பங்களும் , காதலும் இல்லாமல் நாவல் மெதுவாக நகருவதாக இருக்கிறது. மாடனின் மீது அனந்தவல்லிக்கு இருக்கும் காதலும் கூட அழுத்தமாக இல்லை.

மொத்தத்தில் , இந்த " சுளுந்தீ" நாவல் கன்னிவாடி பாளையக்காரர் சின்னக் கதிரியப்ப நாயக்கர்   பற்றியும் , அவரது குடிமக்களின்  வாழ்க்கை நிலைப் பற்றியும் ஓரளவு சரியாகவே பதிவு செய்திருக்கிறார் என்று கருதுகிறேன். நாவலுக்கான தகவல் சேகரிப்பில் நாவலாசிரியர் முத்துநாகு மிகவும் மெனக்கிட்டு இருக்கிறார் என்பதை பாராட்டியே தீர வேண்டும்.

குறிப்பாக ,  இந்த நாவலை  எழுதுவதற்கு முன்பு  கன்னிவாடி  சென்று அதன் கடைசி ஜமீன்தார் அப்பையா நாயக்கர் அவர்களை சந்தித்து  உரையாடி  களஆய்வு செய்து வந்திருக்கிறார்.  அவர் ஏழ்மையில் உழன்று கொண்டிருந்தாலும் ஜமீனுக்கு உரிய மிடுக்குடன் வாழ்ந்து  வருவதை ஒரு கட்டுரையில் சொல்லியிருக்கிறார் முத்துநாகு. அதில் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால் நாங்கள் பட்டத்தை ஏற்கும் போது " நான்கு வர்ணத்தை காப்போம்" என்று உறுதிமொழி கூறித் தான் பதவி ஏற்போம் என்று சொல்லியிருக்கிறார்.

இந்த 21 ஆம் நூற்றாண்டிலேயே  அப்பையா நாயக்கர்  இப்படிச் சொல்லியிருக்கும் போது , 17-18, ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சின்னக் கதிரியப்ப நாயக்கர் எப்படி இருந்திருப்பார் என்பதை நம்மால் யூகிக்க முடியும்.

அந்த கன்னிவாடி ஜமீனில் தான் ,குலத்தொழிலை விட்டொழித்து மற்ற குடியினர் போல் நாமும் வாழ வேண்டும் என்று போராடி ராமபண்டுவனும், மாடனும் அழிந்து போகிறார்கள். அவர்கள் கொளுத்திப் பிடித்தசுளுந்தீஅணைந்து போகிறது.  

முத்துநாகு இந்த  "சுளுந்தீ"யின்   மூலம் நாவிதர்களின் அர்ப்பணிப்பான  வாழ்க்கையையும் , அவர்களிடமிருந்த சித்த மருத்துவத்தையும்  ஆவணப்படுத்தி இருக்கிறார்  . இந்த நாவல் கன்னிவாடி ஜமீனைத் தாங்கி நிற்கும் ஒரு வரலாற்றுப் பெட்டகமாகவே இருக்கிறது.


கருப்பையா.சு
+919486102431
மதுரை