நூல் அறிமுகம்
நூல்: நாங்கள் நாத்திகரானோம்
[ நாத்திக மேதை கோராவின்
தன் வரலாறு]
தமிழாக்கம் : கலசம்
வெளியீடு: புதுவாழ்வு
பதிப்பகம்
பக்கங்கள்: 208; விலை-
ரூ . 200 /-
“நாங்கள் நாத்திகரானோம்”
இந்த
நூல் , இந்தியாவின் சிறந்த நாத்திகர்களில் ஒருவரான "கோரா" என்று அழைக்கப்படும் "கோபராஜு
ராமச்சந்திர ராவ் " அவர்களின் தன் வரலாறு ஆகும் . கோரா, 15/11/1902 ந்தேதி தெலுங்கு
பிராமணக் குடும்பத்தில் பிறந்து , நாத்திகனாக
வாழ்ந்து 26/08/1975 இந்தேதி இவ்வுலகிலிருந்து மறைந்தார். ஏறத்தாழ 72 ஆண்டுகள் வாழ்ந்த அவரின் சமூப்பணி காலத்துக்கும்
அழியாதது.
தமிழகத்தில்
தந்தை பெரியார் செய்த சமூகப் பணியை , ஆந்திராவில் சிறப்பாகச் செய்தவர் கோரா. தந்தைப் பெரியார் , பகுத்தறிவு, சாதிஒழிப்பு, பெண்விடுதலை
, திராவிடம் மற்றும் சனாதன எதிர்ப்பு என்று
பல்வேறு தளங்களில் செயல்பட்டவர். ஆனால் கோரா , நாத்திகத்தைப் பரப்புவதிலும் , சாதிமறுப்புத் திருமணங்கள் நடத்தி வைப்பதிலும் மட்டுமே செயல்பட்டவர். ஆனாலும், இந்தப் பணியை தனது
இணையர் சரசுவதி மற்றும் தன்னுடைய 9 குழந்தைகள் உள்ளிட்ட அனைத்துக் குடும்பத்தினரும்
மிகவும் அர்ப்பணிப்புடன் செயல்பட்ட வரலாற்றை மிகவும் நேர்மையுடன் பதிவு செய்திருக்கிறார்
கோரா.
மிகவும் நேர்மையான வாழ்ந்து மறைந்த கோராவின் வாழ்க்கையை நாத்திகர்கள் மட்டுமல்ல
, ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
கோரா, தாவரவியலில் முதுகலைப்பட்டம் பெற்றவர் [MA-Botany] . 1922 இல் இவருக்கும் , பத்து வயதான சரசுவதிக்கும் திருமணம்
[ குழந்தைத் திருமணம் 1935 இல் தான் ஒழிக்கப்பட்டது] நடந்தது என்று பதிவு செய்துள்ளார். 1925 ஆம் ஆண்டு
முதல் 1928 ஆம் ஆண்டு வரை கல்லூரி பேராசிரியராக மதுரை [அமெரிக்கன் கல்லூரி], கோயமுத்தூர்
மற்றும் கொழும்பிலும் [ இலங்கை] ஆகிய இடங்களில் பணியாற்றியுள்ளார். கோரா , கல்லூரியில் பயிலும் காலத்திலேயே நாத்திகத்தின்
மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர். நாத்திகம்
ஒன்று தான் மனிதர்களின் வாழ்க்கையில் முற்போக்காக நிலைத்திருக்கக்கூடிய மாறுதலைக் கொடுக்கும்
என்று திடமாக நம்பியவர்.
இவரது
தந்தை கோபராசு வேங்கடசுப்பாராவ் , ஒரு காந்தீயவாதி, சனாதனத்தைப் பேணிப் பாதுகாப்பவர். அவர் 1928 ஆம் ஆண்டு , ஆகஸ்ட் மாதம் , கோராவை பூணுல் அணியுமாறு
கூறுகிறார். ஆனால், கோரா நெஞ்சுறுதியுடன் மறுத்து விடுகிறார். அதனால், கோராவை வீட்டை
விட்டு வெளியேறுமாறு கட்டளையிடுகிறார். கோரா , தனது மனைவி சரசுவதியுடன் வீட்டைவிட்டு
வெளியேறுகிறார். மேலும் , அவரை சாதியிலிருந்து விலக்கம் செய்து விடுகிறார்கள். இந்த நிகழ்வே கோராவின் முழுமையான நாத்திக வாழ்விற்கு அடித்தளம் அமைக்கிறது.
கோராவின் போராட்டம் நிறைந்த குடும்ப வாழ்க்கை மனதை நெகிழச்
செய்வதாக இருக்கிறது.........
வீட்டைவிட்டு வெளியேறிய கோரா, அச்சுதாபுரம் என்ற சேரிப்பகுதிக்கு சென்று அங்கே
ஒரு குடிசை அமைத்து கொண்டு வாழத் துவங்குகிறார்.
அப்போது கோரா, காக்கிநாடாவில் உள்ள பி.ஆர்.கல்லூரியில் [தான் பயின்ற] விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். அவர் தமது
மாணவர்களுக்கு, " மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் என்ற நோக்கில் செயல்பட வேண்டும்;
வெட்கப்படாமல் வெளிப்படையாக வாழ வேண்டும்; செய்வதைச் சொல்ல வேண்டும்; சொல்வதைச் செய்ய
வேண்டும்" என்று கற்றுக் கொடுத்தார். இது அவருக்கு மாணவர்களிடையே மிகுந்த மரியாதையைப் பெற்றுத் தந்தது.
அப்போது , கோராவின் மாணவர் பி.வி.டி. நாராயணராவ் என்பவர் ஒரு கையெழுத்து ஏடு நடத்தி வந்தார். அதில் நாத்திகம் பற்றி ஒரு கட்டுரை
எழுதித் தரும்படி கோராவிடம் வேண்டுகோள் வைத்தார். கோரா , கடவுள் கொள்கை [ Concept
of God] என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதிக் கொடுத்தார். அக்கட்டுரையில், " கடவுள் கொள்கை என்பது ஒரு
பொய்மையேயாகும். மற்ற பொய்மைகளைப் போலவே, இதுவும் கடவுள் மீது நம்பிக்கை உருவாவதற்க்காக
மூடத்தனத்தையும் வெறித்த தன்மையையும் ஊட்டுகிறது;
அதன் மூலம் சமுதாயத்தைச் சீரழியத் செய்துவிட்டது. அதனால் உண்மை நிறைந்த வாழ்வையும்
மெய்ப்பாடான ஒற்றுமையையும் பேண வேண்டுமானால் பிற பொய்மைகளைப் போலவே, கடவுள் கொள்கையும்
கைவிடப்பட வேண்டும்" என்று எழுதியிருந்தார்.
பி.ஆர்.கல்லூரி நிர்வாகம் பிரம்மோயிசம் [ Brahmoism] கொள்கையை அடிப்படையாகக்
கொண்டது. அதனால் கோராவிடம் விளக்கம கேட்டது. கோரா, நான் ஆய்ந்துணர்ந்து மனம் மாறிய
நாத்திகன் [Atheist by Conviction] என்றும், அவையெல்லாம் என் கருத்துக்களே என்று உறுதியாக
கூறிவிட்டார். அதனால், கல்லூரி நிர்வாகம் கோராவை
பணிநீக்கம் செய்தது [ 1934 ] . இந்த சூழலில் , கோரா
வறுமையில் வாழ்ந்து வந்தாலும் , தமது பணிக்கு ஆபத்து வரும் என்று தெரிந்தும் கூட ,
தமது கொள்கையில் விடாப்பிடியாக இருந்தார் என்பது
அவர் மனவலிமையை எடுத்துக்காட்டும் விதமாகவே இருக்கிறது.
பின்னர், மசூலிப்பட்டினம் "இந்துக் கல்லூரியில்" விரிவுரையாளராக பணியில்
சேருகிறார். அந்தப்பணியில் இருக்கும் போதும், தொடர்ந்து நாத்திகக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். மேலும்,
மாணவர்களுக்கு நாத்திக கருத்துக்களையும், போராட்ட உணர்வையும் தூண்டுகிறார் என்ற குற்றச்சாட்டும்
எழுகிறது. அதனால் , கல்லூரி நிர்வாகம் இவரை,
1940 இல்
பணிநீக்கம் செய்தது . இது பற்றி கோரா குறிப்பிடும் போது , " நாத்திகமா?
வேலையா?" என்று வரும் போது நான் நாத்திகத்தையே தேர்ந்தெடுத்தேன் என்கிறார். அப்போது கோராவிற்கு ஆறு குழந்தைகள் இருந்தனர். இருந்தாலும்,
கோராவின் இணையர் சரசுவதியும், அவரது குழந்தைகளும் கோராவின் பக்கமே இருந்தனர். அவரது குழந்தைகளும் நாத்திகத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்கள்!
பின்னர் , 1940 ஆம் ஆண்டு ,ஆகஸ்ட் திங்களில், முதனூர்
கிராமத்தைச் சேர்ந்த "அன்னே அஞ்சைய்யா" என்பவரின் அழைப்பின் பேரில் கோரா , மனைவி மற்றும் தனது ஆறு குழந்தைகளுடன் முதனூர்
என்ற கிராமத்தில் குடியேறுகிறார். இந்தக் கிராமத்திலிருந்து தான் கோராவின் நாத்திகப்பணி
விரிந்து பரவியது.
நாத்திக விழிப்புணர்வு....
முதனூரில்
குடியேறிய பிறகு , கோராவிற்கு வேறு பணியில்
சேருவதற்கு விருப்பமில்லை, முழுநேர நாத்திகப்பணியில் ஈடுபட விரும்பினார். அதனால் தனது
குடிசையில் " நாத்திக மையத்தை " அமைத்தார். 1940 முதல் 1947 வரை இந்த நாத்திக
மையத்திருந்து தான் கோரா இயங்கினார் [1947 ஆம் ஆண்டில் தான் இந்த "நாத்திக மையம்"
விஜயவாடாவில் உள்ள பட மட என்ற இடத்திற்கு மாற்றப்பட்டது]. அத்தோடு, அக்கிராம மக்களுக்கு
கல்வி தரும் விதமாக முதியோர் கல்வி மையத்தையும் துவங்கினார். சில மாதங்களில் முதனூர் கடவுள் இல்லாத சிற்றூராக
மாறியது. எந்த வருமானமும் இல்லாத கோராவின் குடும்பத்திற்கு, முதனூர் மக்கள் தேவையான அனைத்து உதவிகளையும் செய்தனர். முதனூர் மக்களுக்கு , வாழ்நாள் முழுவதும் நாங்கள்
கடமைப்பட்டவர்கள் என்று நன்றியுடன் குறிப்பிடுகிறார் கோரா.
கோராவிற்கு
ஐந்து பெண் குழந்தைகளும் , நான்கு ஆண் குழந்தைகளும் பிறந்தனர். அவருக்கு , 1928 இல்
முதல் பெண் குழந்தை மனோரமாவும், 1930 இல் முதல் ஆண்மகன் லவணமும் பிறந்தனர். 1947 இல்
கடைசி மகள் நவ் பிறந்தாள். தான், ஒரு பகுத்தறிவாளன்
என்ற வகையில் புலனடக்கம் மற்றும் கருத்தடை
முறையை கடைப்பிடித்திருக்க வேண்டும் , ஆனால் தவறிவிட்டேன் என்று நேர்மையாக பதிவு செய்துள்ளார்.
பின்னர், காந்தியை சந்தித்த போது, அவர் இதே கேள்வியை கேட்டு ஆச்சரியம் கொண்டதாகவும்
கூறுகிறார். ஆனாலும், அத்தனை குழந்தைகளுக்கும் முழுச் சுதந்திரமும் , தங்களுக்குத் தேவையவற்றைத் தாங்களே செய்து கொள்வதற்கு உரிய ஆற்றலையும் , தங்கள்
வாழ்க்கைத்துணையை தேர்வு செய்வதற்கான உரிமையையும் கொடுத்துள்ளார் என்பது மனதிற்கு நிறைவாக
இருக்கிறது. குறிப்பாக , தமது முழுக்குடும்பத்தையும் அரசியல்படுத்தி வெற்றிகரமான நாத்திகராக
வாழ்ந்திருக்கிறார் என்பது ஒவ்வொரு நாத்திகருக்குமான பாடமாக இருக்கிறது.
1930
முதல் கோராவிற்கும் , காந்திக்கும் கடிதத்
தொடர்பு இருந்துள்ளது . காந்தியின் சத்தியாகிரகப் போராட்டம் கோராவை மிகவும் கவர்ந்துள்ளது. கோரா காந்தியை 1944 இல் சந்திக்கிறார். இது பற்றி
" காந்தியுடன் ஒரு நாத்திகன்" என்ற புத்தகத்தையும் எழுதியிருக்கிறார். மற்றும் கோரா, காந்தியையும், கார்ல் மார்க்ஸையும் ஒப்பிட்டுப் பார்க்கிறார். கார்ல் மார்க்சின் கொள்கைக்கு லெனின் தன்னை முழுவதுமாக ஒப்படைப்பு செய்து கொண்டது போல் ,
நேரு காந்தியின் கொள்கைக்குத் தன்னை ஒப்படைப்பு செய்து கொள்ளவில்லை என்று குற்றம் சாட்டுகிறார். புரட்சிக்குப் பின்னர் ,
லெனின் சாதாரண காவலாளி வீட்டில் குடி இருந்தார். ஆனால் ,
சுதந்திரத்திற்கு பிறகு நேரு ஆடம்பர மாளிகையிலும், காந்தி குடிசையிலும் வாழ்ந்தார்கள் என்று இந்த நூலில் குறிப்பிட்டுள்ளார்.
கோரா, பொதுவுடைமை கட்சியில் சேருவதற்கு வந்த அழைப்பை மறுத்து விடுகிறார் , அதற்கு அவர் தரும் விளக்கம் பொருள் பதிந்ததாக இருக்கிறது;
" இயங்கியல் பொருள்முதல்வாதக் கொள்கை என்பதும் அதனை மனித குல வரலாற்றுக்குப் பொருத்திப்பார்ப்பது என்பதும் தனியொருவனுக்கு உள்ள சிந்தனை உரிமையை அடிப்படையிலேயே மறுத்து விடுகின்றன. நாத்திகம் வலியுறுத்தும் தனிமனிதத் சிந்தனை உரிமை எண்ணத்திற்கு எதிரானதாக இது உள்ளது. மேலும், தலைமறைவு வாழ்க்கையும் ,
இரகசியம் காப்பதும் மார்க்சியக் கொள்கைக்குத் தேவையாகின்றன, அது என்னால் இயலாது " என்று குறிப்பிடுகிறார்.
கோரா, தமது நாத்திகக் கொள்கைகளையும், பொருளியல் சமத்துவத்தையும் பரப்புவதற்கு ,
" சங்கம்"
என்ற பெயரில் ஒரு பத்திரிக்கையை ஆரம்பித்தார். பின்னர், அது
" பொருளியல் சமத்துவம் [ Economic Equality] " என்ற பெயரில் ,
அவரது மகன் லவணத்தை ஆசிரியராக கொண்டு வெளி வந்தது. பின்னர், அது
" நாத்திகம் [ The Atheist] " என்ற பெயரில் ஆங்கிலத்தில் [மாத இதழாக] வெளியிடப்பட்டு உலகம் முழுவதற்கும் சென்றது.
அரசியல் நடவடிக்கை......
இது தவிர, கோராவின் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நேரடி அரசியலிலும் பங்கேற்றார்கள். 1952 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் கோரா போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதே போல் 1972 ஆம் ஆண்டு வரை நடந்த தேர்தல்களிலும் நாத்திக மையத்தைச் சேர்ந்தவர்கள் , "கட்சி சேராத அரசியல்"
போட்டியிட்டு வந்தனர். இது தான், தமிழ்நாட்டில் தந்தை பெரியாரின் தலைமையில் இருந்த " திராவிடர் கழகத்திற்கும்" , விஜயவாடாவில் இருந்த
" நாத்திக மையத்திற்கும்" இடையே இருந்த முக்கிய வேறுபாடாக இருக்கிறது.
இருந்தாலும், கோராவின் தலைமையில் இருந்த நாத்திக மையம் தமிழ்நாட்டிலும் , சமூக சீர்திருத்தத் திருமணம், சமத்துவ விருந்து ,
பன்றி-மாட்டிறைச்சி உண்ணுதல் போன்ற பல நிகழ்வுகளை நடத்தியுள்ளது. கோயமுத்தூரில் நடைபெற்ற மாட்டிறைச்சி உண்ணும் விருந்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார் என்று கோரா பதிவு செய்துள்ளார். இருந்தாலும், தந்தைப் பெரியாருக்கும் ,
கோராவிற்குமான தொடர்பு வலுவாக இல்லை என்பதை இந்த நூலின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும். கோராவிற்கு ,
காந்தியுடன் இருந்த அளவிற்கு ,
ஒத்த கருத்துடைய தந்தை பெரியாருடன் உறவு இல்லையென்பதும் ஆச்சரியமளிக்கிறது. ஆனாலும், கோராவின் நாத்திக
மையம் , அமெரிக்காவில் டெக்சாசு நகரிலும், ஆஸ்திரேலியாவில் அடிலெய்டு நகரிலும் தங்களது கிளைகளை அமைத்துள்ளது கோராவின் செயற்பாட்டிற்கு கிடைத்த அங்கீகாரமாக இருக்கிறது.
இறுதியாக, நாத்திகத்திற்காக வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட கோரா, 1975 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் நாள் மாலை விஜயவாடாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில், " நாட்டுப்புற இந்தியாவில் சமுதாய மாற்றம் " என்னும் தலைப்பில் பேசிக்கொண்டிருந்த வேளையில் , மூளைக்குச் செல்லும் இரத்தக்குழாய் வெடித்து இயற்கை எய்தினார். சம்பிரதாயப்படி கோராவிற்கு அவரது மகன் லவணம் கொள்ளி வைப்பதற்குப் பதிலாக, சமுதாய புரட்சிக்கு அடையாளமாக ஆதிதிராவிட தோழர் சத்தியானந்தம் கோராவின் உடலுக்குத் தீ மூட்டினார். கோரா என்ற மாமனிதர் நாத்திகராக வாழ்ந்து, நாத்திகராகவே மறைந்தார்!!!
கோரா,
" நாங்கள் நாத்திகரானோம்" என்று இந்த நூலுக்கு வைத்த தலைப்பு சாலப்பொருந்துகிறது.
இந்த நூலை
வாசித்து முடித்தவுடன் , உண்மையில் கோரா,
இந்தத் தன் வரலாற்று நூலின் மூலம் ஒவ்வொரு நாத்திகனுக்கும், பகுத்தறிவாளனுக்கும்
, ஏன் இடது சாரிகளுக்கும் அவர்களின் எதிர்காலத்
திட்டங்களுக்கான வரைபடத்தை விட்டுச் சென்றிருக்கிறார் என்றே எனக்குத் தோன்றியது.
பின் குறிப்பு:
1. “கலசம்” அவர்களின் மொழிபெயர்ப்பு பாராட்டும்படி உள்ளது. அவரின் "கடவுளுக்கு மேலானவன் பிராமணன் – இக்கருத்தியல்
எப்படித் தோன்றியது" எவ்வாறு முறியடிக்கப்பட்டது?" என்ற ஆய்வுக்கட்டுரையும் இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளது.
அவருக்கு எனது பாராட்டுக்கள்.
2. நான் பயின்ற மதுரை அமெரிக்கன் கல்லூரியின் மேனாள் பேராசிரியர் " கோரா" அவர்களுக்கு எனது மரியாதையைத்
தெரிவித்துக் கொள்கிறேன்.
3. இந்த அருமையான நூலை எனக்கு பரிசளித்து, வாசிக்கத்தூண்டிய எனது
மரியாதைக்குரிய நண்பர் திரு.ஜெயகோபால், வாழ்க வளமுடன் புத் அக மையம் , திண்டுக்கல் , அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் காண்கிறேன். அவர் இந்தப் புத்தகத்தில்
எழுதியிருந்த வாசகம் என்னை மிகவும் கவர்ந்தது. அது, " சாதி, மதம், இனம், மொழி, தேசம், தனியார் சொத்துரிமை ஆகியவை குற்றங்கள் என்றே பெயரிடப்படாத குற்றங்கள் ஆகும் ".
சு.கருப்பையா
மதுரை
09/01/2026.
+919486102431
| Tweet | |||||


