Tuesday, 29 January 2019

பாலகுமாரின் ‘சேவல்களம்’ வாசிப்பு அனுபவம் - எஸ்.சுப்பிரமணியன்


களம் புதிது; பலருக்கு அறிமுகம் இல்லாதது, சேவல் சண்டையைப் பற்றிக் கேள்விபட்டிருக்கிறேன். பார்த்ததில்லை; சண்டை விடுபவர்கள் என்றில்லை, குறைந்தபட்சம் அதைப் பார்த்தவர்களுடன்கூட பரிச்சயமில்லை. முதன்முதலில் அதை ஆடுகளம் திரைப்படத்தில்தான் பார்த்தேன். அதுவும் கணிணி சித்தரிப்பு என்று சொல்லிவிட்டார்கள். ஆக சேவல் சண்டையின் முறையான அறிமுகம், அதன் வீரியம், அது சம்பந்தப்பட்ட மக்களின் ஆர்வம், ஈடுபாடு இன்னும் சொல்லப்போனால் அதன் மகத்துவம் முதலிய அனைத்தும் பாலகுமாரின் சேவல்களத்தின் மூலமாகத்தான் கிடைத்தது.
சேவல் சண்டைக்குத் தயாராகும் சேவல்களை குஞ்சு பொரிக்கப் போடுவது, குஞ்சுகளை தேர்ந்தெடுப்பது, வளர்க்கும் முறை, பயிற்சி அளிப்பது, அதற்கு கொடுக்கும் தீவினம், சண்டையிடும் இடத்தேர்வு, சண்டை பற்றிய வர்ணனை, சண்டையின் இடைவேளையில் தரப்படும் முதல் உதவி, களத்தில் நிலவும் குரு-சிஷ்யன் ஒழுங்கு என அனைத்து விவரங்களையும் மிகவும் நுணுக்கமாகவும், சிறு சிறு தகவல்கள்கூட விடுபடாத அளவு சேவல் சண்டைக்கே தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் அல்லது அது பற்றிய ஆய்வு மேற்கொண்டவர் போன்று, மிக நேர்த்தியாகவும் சுவாரசியமாகவும் பதிவு செய்துள்ளார்.

எளிய சரளமான  நடை. கதாசிரியர் தன்னுடைய திறனை வெளிப்படுத்த வார்த்தை ஜால வித்தைகளில் இறங்காமல், வாசகனை முழுமையாக எந்த சிரமமும் இன்றி நாவலில் இறக்கிவிட்டு விடுகிறார். சம்பவங்கள் ஒரு திரைப்படம் போல் நம்முன் விரிகின்றன. இதிலுள்ள அனைத்துப் பாத்திரங்களும் நமக்குப் பிரியமானவர்களாய் இருக்கிறார்கள்.

எழுத்தாளர்கள் இருவகை.ஒன்று கதையை இயல்பான முறையில்  சொல்லி நேரடியாக வாசகனிடம்  நாவலை ஒப்படைத்துவிட்டு, தான் இருக்குமிடம் தெரியாமல் ஒதுங்கிக் கொள்வது. தான் முக்கியமில்லை; தான் சொல்லும் விஷயமே முக்கியம் என்ற வகை. அசோகமித்திரன், வண்ண நிலவன், .மாதவன் முதலியோர் இப்படிப்பட்டவர்கள். இரண்டாம் வகை வாசகனைத் தன்னுடைய தேர்ந்த புத்திசாலித்தனமான கதை சொல்லும் பாங்கில் ஒவ்வொரு அத்தியாயமாகக் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போவது. வாசிக்கும் வாசகனுக்கு ஒவ்வொரு நிமிடமும் தன்னுடைய  இருப்பை உணர்த்துவது. இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், சுஜாதா போன்றோர் இதில் அடங்குவர். இரண்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்ட வகைதான் என்றாலும் முதல் வகையில் கதையில் ஒன்றி கதாசிரியரை மறந்து வாசிக்கிறோம்; இரண்டாம் வகையில் கதாசிரியருடன் பயணித்து கதையை ரசித்து  வாசிக்கிறோம். இந்த நாவலைப் பொறுத்தவரை பாலகுமார் முதல் வகையில் இருக்கிறார்.என்றாலும் சேவல் கள விவரணைகளின் போது யார் இவர் என்று கவனிக்க வைக்கிறார். பிற சமயங்களில் நாவலின் போக்கில் கதாபாத்திரங்களுடன் நம்மை உலவ விட்டு தன் இருப்பை மறைத்துக் கொள்கிறார்.

குடும்ப உறவுகளைப் பிரதானமாக்க் கொண்டு எழுதப்பட்ட நாவலாதலால் நாவல் முழுவதும் சென்டிமெண்ட் நிகழ்வுகள் பரவலாக இருக்கின்றன. பொதுவாக செண்டிமெண்ட் நாவல்களைப் புறம் தள்ளும் தீவிர வாசகனைக்கூட நெளிய வைக்காமல், கொஞ்சம் நிதானப் படுத்தி நெகிழ வைக்கின்றன, உதாரணம் கண்ணன் தன் காதலை வீட்டில் வெளிப்படுத்தும் போது நடக்கும் உரையாடல், வசந்தி-யசோதா இடையே மீனாட்சி அம்மன் கோவிலில் நடக்கும் உரையாடல். எனினும் சேதுபதி அட்வான்ஸ் தொகை வாங்கும் போது காண்ட்ராக்டர் சதாசிவத்தின் மனைவி கைகளில் ஒட்டியிருந்த மஞ்சள் பொடி அவனது உச்சந்தலையில் அட்சதை தூவியது போல படர்ந்திருந்தது என்று எழுதியிருப்பது கொஞ்சம் அதிகப்படி. சென்டிமெண்ட். எழுத்தாளர்கள் லக்ஷ்மி, ரமணிச் சந்திரன், இந்துமதி ஆகியோர்  நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

வழக்கமான நன்கு வரையறுக்கப்பட்ட குடும்பக் கதையில் சேவல் சண்டை, கம்ப்யூட்டர் ஹேக்கிங் சேர்த்து சுவாரசியமாகக் கொடுத்துள்ளார். அதிலும் ஜீவா வருமிடமெல்லாம் ஒரு த்ரில்லருக்கான சாகஸங்களும் சேர்ந்து வருகின்றன. குறிப்பாக தபஸ்கேந்திரா அமைந்துள்ள நந்தவன நிகழ்வுகள் மற்றும் டெண்டர் தொகையை ஹேக் செய்யும் நிகழ்வுகள். பாலகுமாருக்கு த்ரில்லர் வகை நாவல் சிறப்பாக எழுதவரும் என்று தெரிகிறது. முயற்சிக்கலாம், நல்ல கரு கிடைத்தால் (ராஜேஷ் குமார், சுபா வகை த்ரில்லர் தயவு செய்து வேண்டாம்). எனினும் என்னைப் பொறுத்தவரை அந்த தபஸ்கேந்த்ரா சம்பந்தப்பட்ட இரு அத்தியாயங்களும் நாவலுக்கு சம்பந்தமில்லாமல் தனித்து நிற்கின்றன. அது சம்பந்தமான ஒரு உரையாடல் சதாசிவத்தின் தம்பி சொல்லுவதாய் பின்னால் வருவதைத்தவிர. இருப்பினும் அந்த இரு அத்தியாயங்களும் நாவலின் விறு விறுப்புக்கு பெரும் பங்கு வகிக்கின்றன என்பதும் உண்மை

பிரதானப் பாத்திரங்களான இராமர், சேதுபதி, காண்ராக்டர் சதாசிவம், ஜீவா மட்டுமின்றி ஒன்றிரண்டு அத்தியாயங்கள் மட்டும் வரும் ஜான் மிராண்டா, குமார், நியூ ஜென் நெட் பாயிண்ட் பாபுலால், வசந்தி, யசோதா, மாமா மலைச்சாமி முதலிய பாத்திரங்களும் தன்னளவில் முழுமை பெற்று கவனிக்க வைக்கின்றன. 

இராமருக்கும் சேவலுக்கும் உள்ள பந்தம், வையாபுரியின் அரசு அதிகாரிகள் பற்றிய புரிதல், இராமர் - ஜான் மிராண்டா நட்பு, சேவல் சண்டை பற்றிய வர்ணிப்பு, காவல் நிலையத்தில் நடக்கும் சமரச பேச்சு வார்த்தை போன்றவற்றில் நாவலாசிரியர் தனித்துவம் காட்டுகிறார். திகட்டத் திகட்ட அனைவரும்  நல்லவர்களாய் இருக்கிறார்கள். நிறைவான முடிவு.

கதை சொல்லும் பாங்கில் புறாக்காரர் வீடு பாலகுமாருக்கும், சேவல்களம் பாலகுமாருக்கும் நிறைய வித்தியாசங்கள் காணப்படுகின்றன. தன் நடையை எளிமையாகவும், வெகு சரளமாகவும் மாற்றி, வட்டார மொழியை தேவையான இடத்தில் திறம்படப் பயன் படுத்தி, நடையை நன்கு மெருகேற்றி முதல் நாவல் என்று தெரியாத வண்ணம் தேர்ந்த கதை சொல்லி போல் புலிப் பாய்ச்சல் பாய்ந்திருக்கிறார்.

 வாழ்த்துக்கள்.
சுப்பிரமணியன்