Tuesday 13 November 2012

அமைப்பு விவாதம்



தோழர்களே ! வாசிப்போர்களத்தின் ஏழாவது கூட்டம் 10/11/2012  ந் தேதி , புத்தக அறிமுகமும் , விவாதமும் இல்லாமல் ஒரு பொதுக்குழுக்  கூட்டமாக  நடைபெற்றது. தோழர்கள் சங்கையா , நேரு , சௌந்தர் மற்றும் தெய்வேந்திரன்  ஆகியோர்கள் நல்ல கருத்துக்களை பகிர்ந்து  கொண்டார்கள் . இறுதியாக கீழ் காணும் முடிவுகளை செயல் படுத்துவது என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

1. வாசிப்போர்களத்தின்  உறுப்பினர்களை அதிகப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்.

2. இங்கே அணைத்து கருத்துக்களையும் உள்ளடக்கிய  நூல்கள் அறிமுகம் செய்யப்படுகிறது என்பதை      
    பரப்ப வேண்டும்.

3. பொருள்முதவாத , பகுத்தறிவு மற்றும் இடதுசாரி தோழர்கள் மட்டுமே இதன் உறுப்பினர்களாக  
   இருப்பார்களோ என்ற எண்ணம் உருவாகி இருந்தால் அதை மாற்ற முயற்சி எடுக்க வேண்டும்.

4. இந்தக் களம் , குறுகிய எண்ணம் கொண்ட சாதீய கோட்பாடு நீங்கலான பிற கருத்துக்களை உள்ளடக்கிய
    அணைத்து தோழர்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு தளம் என்பதை உணர்த்தவேண்டும் .

அடுத்த கூட்டத்தில் புதிய நூல்களை தோழர்கள் அருணாசலம் மற்றும் தெய்வேந்திரன் ஆகியோர்கள் அறிமுகம் செய்வார்கள்.

Friday 9 November 2012

நமது கூட்டம்



தோழர்களே!  நமது கூட்டம் நாளை 10/11/2012,  மாலை 04 -30  மணிக்கு நடைபெறுகிறது. அணைத்து தோழர்களும் தவறாது கலந்து கொள்ளவும். வாசிப்போர் களத்தை செழுமை படுத்துவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டமாகவும் இது இருக்கிறது. நாளை சிந்திப்போம்.

Thursday 8 November 2012

நெஞ்சைப் பிழிந்த கவிதைகள்!


தோழர்களே!

எனக்கு இமெயில் மூலம் வந்த கீழ்காணும் இரண்டு கவிதைகளை உங்களுக்குக் கொடுத்துள்ளேன். வாசியுங்கள்....

முதியோர் இல்லத்தில் தாயின் கண்ணீர்

நீ இருக்க
ஒரு
கருவறை இருந்தது
என்
வயிற்றில்...

ஆனால்
நான் இருக்க 
ஒரு
இருட்டறை கூடவா
இல்லை உன் வீட்டில்...

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது

வசதியாகத்தான் இருக்கிறது மகனே
நீ கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது..!

முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்..!

இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக
மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில்
தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று
இப்போது அறிகிறேன்..!


இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்
ஆயினும்
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு
நான் கற்றுக்கொடுத்தேன்
உனக்கு
வாழ்க்கை இதுதானென்று
நீ கற்றுக் கொடுக்கிறாய்
எனக்கு
உறவுகள் இதுதானென்று..!

உங்கள் இதயம் நொறுங்குவதை என்னால் உணர முடிகிறது. இந்த கவிதைகளை எழுதிய பெயர் தெரியாத அந்தக் கவிஞர்களுக்கு நன்றி!!!. 

Sunday 4 November 2012

இணைப்பு


தோழர்களே! நமது வாசிப்போர்களத்தின் உறுப்பினர்களும், சிறந்த பதிவர்களுமான தோழர்.பாலா (தென்திசை),தோழர். சமயவேல் ( அகாலம்) , தோழர் அருணாசலம் (எதிர்நீச்சல்)  மற்றும் தோழர் வா,நேரு ஆகியோர்களின் வலைப்பூக்கள் நமது வலைப்பூவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வலைப்பூக்களில் நுழைந்து சிறந்த கருத்துகளையும், சமூக நலனில் அக்கறையும் கொண்ட பல நல்ல பதிவுகளையும் வாசிக்கும் நல்ல  வாய்ப்பை  வாசிப்போர்களம் உங்களுக்குக் கொடுத்துள்ளது. வாசித்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள்!