Saturday 26 October 2019

மருது சகோதரர்கள்




பெரிய மருது : பிறப்பு 17-12-1748: இறப்பு  24-10-1801
சின்ன மருது : பிறப்பு 1753:  இறப்பு 24-10-1801


மருதிருவர் என்று அழைக்கப்படும் மருது சகோதரர்கள் பரம்பரை ஆட்சி உரிமை பெற்ற பாளையக்காரர்கள் அல்லர். அவர்கள் திறமையாலும் , உழைப்பாலும் , போராட்டத்தாலும் மக்களின் அன்பினாலும் உருவெடுத்த உண்மையான மக்கள்  தலைவர்கள் . இராமநாதபுரம் நரிக்குடிக்கு அருகே முக்குளம் எனும் கிராமத்தில் மொக்கப் பழனியப்பன் சேர்வை எனும் சாதாரணப் படைவீரனுக்கும்  பொன்னாத்தாள் எனும் எளிய பெண்மணிக்கும் பிறந்த மருது சகோதரர்களை அவர்களுடைய தந்தை சிவகங்கை அரசர்முத்து வடுக நாதரிடம் வேலைக்குச் சேர்த்து விடுகிறார். ஆரம்பத்தில் மன்னரது குதிரைகளையும் , வேட்டை நாய்களையும் பராமரிக்கும் எளிய வேலைகளை மருதிருவர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கட்டாய வரி வசூல் கொள்ளை நடத்தி வந்த சுகபோகியாக ஆற்காட்டு நவாப் வரி வசூலை ஆங்கிலேயர்களுடன் பங்கிட்டுக் கொள்வதற்காக ஒப்பந்தம் செய்து கொண்டு அவர்களது இராணுவத்தைப் பயன்படுத்துகிறான்.கொள்ளையில் தங்கள் பங்கை அதிகரிப்பதற்காக கிழக்கிந்தியக் கம்பெனிக்கான வரி பல இடங்களில் 100 சதவீதம் உயர்த்தப்படுகிறது.

இப்படித்தான் ஜோசப் ஸ்மித் தலைமையிலான கம்பெனிப்படை 1772  இல் இராமநாதபுரத்தைக் கைப்பற்றுகிறது. அடுத்து சிவகங்கை . வெள்ளையன் தாக்குதலை எதிர்பாராத அரசர் முத்துவடுகநாதர் காளையார் கோவில் போரில் கொல்லப்படுகிறார். சிவகங்கைச் சீமையின் வீரவரலாற்றில் முதல் களப்பலியாகிறார். அவரது பட்டத்தரசி வேலு நாச்சியார் , மகள் வெள்ளச்சி , அமைச்சர் தாண்டவராயன்பிள்ளை , மற்றும் மருதிருவரும் விருப்பாட்சிக்குத் தப்பிச் செல்கின்றனர்.

விருப்பாட்சியை உள்ளடக்கிய திண்டுக்கல் பகுதி அப்போது ஹைதர் அலியின் ஆட்சியில் இருந்தது.  அமைச்சர் தாண்டவராயன் சிவகங்கையை மீட்பதற்கு ஹைதரிடம்  உதவி கோருகிறார். சிவகங்கை மட்டுமல்ல ஏனைய பாளையங்களையும் விடுதலை செய்வதாக ஹைதரும் உறுதியளிக்கிறார்.  இதனிடையில் அமைச்சர் மரணமடைய பாளையத்தை மீட்கும் பொறுப்பு மருது சகோதரர்களிடம் வருகின்றது. இந்தப் போராட்டத்தினூடாகத் தான் இவர்கள் காலனியாதிக்க எதிர்ப்பில் உறுதியடைகின்றனர். நவாப்பின் ஆட்சியை எதிர்த்துக் கலக்கம் செய்ய சிவகங்கை மக்களைத் திரட்டுகிறார் சின்னமருது. இராமநாதபுரம், சிவகங்கை மக்கள் கிளர்ச்சி செய்கின்றனர். மருதிருவரின் தலைமை போராட்டத்தைத் தீவிரப்படுத்துகிறது. இதே காலகட்டத்தில் , 1780  ஆம் ஆண்டு வெள்ளையர்கள் மீது படையெடுக்கிறார் ஹைதர்.  ஹைதரின் திண்டுக்கல் தளபதி சையத் சாகிபு அளித்த சிறு படையின் உதவியுடன் மருதிருவரும் சிவகங்கையை மீட்க போர் தொடுகின்றனர். சிவகங்கை மீட்கப்படுகிறது. வெள்ளச்சி அரசியாகவும், பெரிய மருது தளபதியாகவும் , சின்ன மருது அமைச்சராகவும் பதிவியேற்கின்றனர். மருதிருவரின் வீரம் மக்களிடையே புகழாகவும் செல்வாக்காகவும் பரவத் தொடங்குகிறது. ஆத்திரம் கொண்ட நவாப் கம்பெனியின் உதவியுடன் சிவகங்கை மீது படையெடுக்கிறான். 1783  இல் கர்னல் புல்லர்டன் தலைமையிலும் , 1789  இல் ஜேம்ஸ் ஸ்டூவர்ட் தலைமையிலும் கம்பெனிப் படைகள் சிவகங்கையை ஆக்கிரமிக்க முயன்றன. இத்தாக்குதலின் போது தாற்காலிகமாகப் பின் வாங்கிய மருதிருவர் கம்பெனிப் படைகள் அகன்றதும் தமது பாளையத்தை மீண்டும் கைப்பற்றுகின்றனர். இறந்து போன மன்னர் முத்துவடுக நாதன் மகள் வெள்ளச்சியை, அல்லது தந்தை வழி உறவினரான வெங்கம் பெரிய உடையது தேவருக்கு மணம் செய்து கொடுத்து , அவரையே சிவகங்கையின் அரசராகவும்   ஆக்குகின்றனர்.

இக்காலகட்டத்தில் மாவீரன் திப்புவை ஒழிப்பதற்குக் கவனம் செலுத்தி வந்த கம்பெனி சிவகங்கையோடு முரண்பாடுகளை வளர்த்துக் கொள்ள விரும்பவில்லை. மருதிருவருடன் ஒத்துப் போகுமாறு நவாப்பையும் அறிவுறுத்தியது.

இப்படி வெள்ளையர்கள் மற்றும் ஆற்காட்டு நவாப்பின் சூழ்ச்சிகள் , படையெடுப்புகளை முறியடித்து சிவகங்கையைக் காப்பாற்றிய மருதிருவர் 1790  முதல் அமைதியாக ஆட்சி புரிந்தனர்.

" சின்ன மருது எளியவர். செழிப்பான நாட்டின் உண்மையான மக்கள் தலைவர் ; அனைவரிடமும் வேறுபாடின்றி பழகும் இயல்பினர்; அவரது தலையசைப்பையே சட்டமாகக் கருதி அதற்குக் கீழ்ப்படிய மக்கள் தயாராக இருந்தனர்; தனக்கென்ன ஒரு மெய்க்காப்பாளனைக் கூட வைத்துக் கொள்ளாத அவரை 1795  இல் அவரது சிறுவயல் அரண்மனையில் சந்திக்கச் சென்றேன். எளிதில் மக்கள் சென்று வரும் வகையில் அமைந்திருந்தது அவ்வரண்மனை. அவருக்கு கடவுளின் அருள் கிட்ட வேண்டும் என் மக்கள் வேண்டியதையும் கேட்டறிந்தேன். மருதிருவர் நினைத்திருந்தால் வெள்ளையர்களுடன் சமரசமாகப் போயிருக்கலாம். அவர்களுக்கு நாங்கள் எந்தக்குறையும் வைக்கவில்லை. அதனால் அவர்கள் எங்கள் மீது சினங்கொண்டு போர் தொடுத்தார்கள் என்பதும் எனக்கு விளங்கவில்லை " என்று ஆங்கிலேயத் தளபதி ஜேம்ஸ் வெல்ஷ் தமது நூலில் குறிப்பிடுகின்றான்.

1790  களில் வெள்ளையர்களோடு சிவகங்கைப் பாளையத்திக்குத் தீவிரமான முரண்பாடுகள் இல்லையென்ற போதிலும் , வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பு நாடெங்கும் அதிகரித்து வருவதை மருதிருவரால் சகித்துக் கொள்ள இயலவில்லை. கட்டபொம்மனைப் போராடத் தூண்டுகிறார் சின்னமருது. 500  வீரர்களை அனுப்பி உதவுகிறார். தென் தமிழகத்தில் கூடடணியை உருவாக்கப் பாடுபடுகிறார். இராமநாதபுரம் கூட்டிணைவிற்குத் தலைமையேற்றதோடு , கட்டபொம்மனைத் திருநெல்வேலிக்கு கூட்டிணைவுக்குத் தலைமை தாங்கவும் வைக்கிறார்கள் மருது சகோதரர்கள்.

1801  - திப்பு சுல்தான் , கட்டபொம்மன், தூந்தாஜி வாக் அனைவரும் கொல்லப்பட்டுவிட்ட காலம் (திப்புவின் வீரமரணம் 04-05-1799,  கட்டபொம்மன் தூக்கிலடப்பட்ட நாள் 17-10-1799, தூந்தாஜி வாக் வீரமரணம் 10-09-1800,  ) . தீபகற்பக் கூட்டிணைவு பெரிதும் தளர்ந்து இருந்த நேரத்தில் மருதிருவர் கிளர்ச்சிக்குத் தலைமையேற்கின்றனர். இராமநாதபுரத்தில் வெள்ளையர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த மைலப்பன் அங்கிருந்து தப்பி மருதிருவரிடம் தஞ்சமடைகிறார்.  அதேபோல் பாஞ்சாலங்குறிச்சியின் வீட்சியைத் தொடர்ந்து மே-28  அன்று ஊமைத்துரையும் சிவத்தையாவும் தம் வீரர்களுடன் சிவகங்கைக்கு வருகின்றனர்.



சிவகங்கையை மையமாகக் கொண்டு , தென் தமிழகமெங்கும் வெள்ளையருக்கெதிரான போராட்டத் தீ பரவத் தொடங்கியது. அஞ்சி நடுங்கிய துரோகி தொண்டைமான் கவர்னருக்குக் கடிதம் எழுதுகிறான்: " சின்னமருது இப்போது சிவத்தையாவுடன் கூட்டு சேர்ந்து கொண்டு நாட்டில் கலகத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறான். திருநாவலூர் , நத்தம், மேலூர் முதலிய கோட்டைகளைக் கைப்பற்றியுள்ளான். ஆங்கில அரசுக்கு உரிமையான இராணுவக் கிடங்குகளைத் தாக்கித் தளவாடங்களை கொள்ளையடித்துத்துள்ளான். மேலும் ஒரு கிளர்ச்சிப்படையை இராமநாதபுரத்துக்கு அனுப்பியுள்ளான். எங்கு நோக்கினும் கலகம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது". தொண்டைமான் இந்த கடிதத்தை எழுதிக் கொண்டிருந்த போதே சின்னமருதுவின் மகன் சிவத்தம்பி தலைமையிலான படை அறந்தாங்கியைக் கைப்பற்றுகிறது. புதுக்கோட்டையும் பறிபோய்விடுமோ என்ற பீதியில் அலறுகிறான் தொண்டைமான்.

ஆனால் " துரோகியானாலும் நம் நாட்டவர்கள் " என்று புதுக்கோட்டையை விட்டு விட்டு கம்பெனியின் நேரடி ஆட்சிப் பகுதிகளை மட்டும் தாக்குகிறது கிளர்ச்சிப்படை. தஞ்சை மாவட்டத்தில் நுழைந்து நாகூர் வரை செல்கிறது.

வடக்கே சத்தியமங்கலம் முதல் தெற்கே நெல்லை மாவட்டம் களக்காடு வரை, இப்போர் நடைபெற்றது. ஊமைத்துரை, சிவத்தையா தலைமையிலான படை மதுரை, திண்டுக்கல் பகுதியிலும் , மைலப்பன், மருதிருவரின் தலைமையிலான படைகள் இராமநாதபுரம் , சிவகங்கைப் பகுதியிலும் போர் புரிந்தனர். வெள்ளையர்களிடமிருந்து பல பகுதிகள், கோட்டைகள் கிளர்ச்சியாளர்களால் கைப்பற்றப்பட்டன. கிளர்ச்சியாளர்களின் கொரில்லாப் போர்முறையினால் வெள்ளையர்களின் படைவரிசை பல இடங்களில் துண்டிக்கப்பட்டது. " திப்புவையே வென்று விட்டோம்"  என்று ஆணவத்துடன் வந்த கம்பெனிப்படை பல தளபதிகளை இழந்து மூக்கறுபட்டது.

அடிபட்டுக் கந்தலாகி, தட்டுத்தடுமாறி இராமநாதபுரம் வந்து சேருகிறது கம்பெனிப்படை . சிவகங்கைப் பாளையத்திலிருந்து ஒரு நாயின் ஆதரவைக் கூடப் பெற முடியாது என்பதைப் புரிந்து கொண்ட கர்னல் அக்னியூ ஒரு அறிக்கை விடுகிறான். " சின்ன மருது பரம்பரைப் பாளையக்காரர் அல்ல; சிவகங்கை மன்னனிடம் அடிமையாக வேலைக்குச் சேர்ந்தவன். எனவே, சிவகங்கைப் பட்டத்துக்கு உரிமை உண்டு என்று நினைப்பவர்கள் எவரும் என்னைச் சந்தித்தால் , இந்தக் கிளர்ச்சி ஒடுக்கப்பட்ட பின் அவர்களுக்கு அரியணை வழங்கப்படும். மாறாக மருதுவை யாராவது ஆதரித்தால்பாஞ்சாலங்குறிச்சி , விருப்பாட்சி போன்ற இடங்களில் மக்களுக்கு நேர்ந்த கதிதான் ஏற்படும்" என்று மிரட்டுகிறான்.

" உண்மையிலேயே அரியணைக்கு பாத்தியதை இருக்க வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. அரியணைக்கு ஆசைப்படுகிறவன் யாராயிருந்தாலும் வா, பதவி தருகிறேன்" என்கிறான்  அக்னியூ. இப்படி ஆசைகாட்டி ஆள்பிடிக்க வேண்டிய அளவுக்கு மருதிருவருக்கு மக்கள் செல்வாக்கு இருந்ததை அக்னீயூவின் அறிவிப்பு நிரூபிக்கிறது.  1801  ஆம் ஆண்டு ஜூன் 12  ஆம் தேதி இராமநாதபுரத்தில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்புக்கு , தனது வரலாற்று சிறப்புமிக்க திருச்சி பிரகடனத்தின் மூலம் 1801 ஜூன் 16  ஆம் தேதி கீழ்வருமாறு பதிலளிக்கிறார் சின்ன மருது;


சின்ன மருதுவின் திருச்சி பிரகடனம்

இதைக் காண்போர் அனைவரும் கவனத்துடன் படிக்கவும். ஜம்பு தீபகற்பத்திலுள்ள ஜம்புத்தீவிவில் வாழும் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள், முசல்மான்கள், முதலான அனைத்து சாதியினருக்கும் தெரியப்படுத்தும் அறிவிப்பு என்னவென்றால்,

மேன்மை தங்கிய நவாபு முகமதுஅலி அவர்கள் முட்டாள்தனமாக ஐரோப்பியர்களுக்கு நம்மிடையே இடங்கொடுத்துவிட்டதன் காரணமாக இப்போது அவர் ஒரு விதவை போல் ஆகிவிட்டார். ஐரோப்பியர்களோ தங்களுடைய வாக்குறுதிகளை மீறி அவருடைய அரசாங்கத்தையே தங்களுடையதாக ஆக்கிக்கொண்டு நாட்டு மக்கள் அனைவரையும் நாய்களாகக் கருதி ஆட்சியதிகாரம் செய்துவருகிறார்கள். உங்களிடையே ஒற்றுமையும் நட்பும் இலாத காரணத்தால்,ஐரோப்பியரின் சூழ்ச்சியைப் புரிந்துகொள்ள இயலாமல், உங்களுள் ஒருவரை ஒருவர் பழி தூற்றிக்கொள்வது மட்டுமின்றி,நாட்டையும் அந்நியரிடம் ஒப்படைத்து விட்டீர்கள். இந்த ஈனர்களால் இப்போது ஆளப்படும் பகுதிகளெல்லாம், மக்கள் பெரிதும் ஏழ்மையில் உழலுகிறார்கள். சோற்றுக்கு பதில் நீராகாரம் தான் உணவு என்றாகிவிட்டது. இப்படி துன்பப்படுவது  தெரிந்தது போதிலும் எக்காரணங்களினால் இத்துன்பங்கள் ஏற்பட்டன என்பதைப் பகுத்தாராயவும் புரிந்து கொள்ளவும் இயலாத நிலையில் மக்கள் இருக்கின்றனர்.

ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக இருந்தாலும் மனிதன் கடைசியில் செத்துத்தான் ஆகவேண்டும். ஆதலால் பாளையங்களில் உள்ள ஒவ்வொருவரும் போர்க்கோலம் பூண்டு ஒன்றுபட வேண்டும். இந்த ஈனர்களின் பெயர்கள் கூட நாட்டில் மிஞ்சி இருக்காமல் செய்ய வேண்டும். அப்போதுதான் ஏழைகளும் இல்லாக்கொடுமையால் அல்லல் படுவோரும் வாழ முடியும்.

அதே நேரத்தில் இந்த ஈனர்களுக்கு தொண்டூழியம் செய்து நாயைப்போல சுக வாழ்வு வாழ விரும்புகிறவன் எவனாவது இருந்தால் அத்தகைய பிறவிகள் ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.

ஆதலால்....மீசை வைத்துக்கொண்டிருக்கும் நீங்கள் எல்லோரும் அதாவது இராணுவம் அல்லது வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் அனைவரும் மற்றும் ஈனமான அந்நியன் கீழ்த்தொண்டு புரியும் சுபேதார்கள், அவில்தார்கள், நாயக்கர்கள், சிப்பாய்கள் மற்றும் போர்க்கருவிகளைப் பயன்படுத்தும் அனைவரும் உங்களுக்கு வீரமிருந்தால், அதைக் கீழ்க்கண்டவாறு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்திட வேண்டும்....இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டூழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்த பிறகு மோட்சம் கிடையாது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்....இதை ஏற்றுக்கொள்ளாதவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடி மயிருக்குச் சமமானது.....இதனை ஏற்றுக்கொள்ளாதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்கு தன்னுடைய மனைவியைக்கூட்டிக் கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே உடம்பில் ஐரோப்பியனின் இரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்!...

இதைப் படிப்பவர்களோ,கேட்பவர்களோ இதில் கூறியிருப்பதைப் பரப்புங்கள்...எவனொருவன் இந்த அறிவிப்பை ஒட்டப்பட்ட சுவர்களிலிருந்து எடுக்கிறானோ அவன் பஞ்சமா பாதகங்களைச் செயதவனாகக் கருதப்படுவான்.

இப்படிக்கு,
மருதுபாண்டியன், பேரரசர்களின் ஊழியன் ஐரோப்பிய ஈனர்களின் ஜென்ம விரோதி.

(1801 ஆம் ஆண்டு ஜுன் பதினாறாம் நாள் வெள்ளையர்களால் கைப்பற்றப்பட்ட இவ்வறிக்கை திருச்சிராப்பள்ளி கோட்டையில் ஒட்டப்பட்டிருந்தது.)

ஒரு பாளையத்தின் அரசுரிமைக்கு ஆசை காட்டுகிறான் அக்னியூ. மருதுவோ தென்னிந்திய மக்கள் ( ஜம்பு தீபகற்பம்) மற்றும் இந்துஸ்தானத்து மக்கள் ( ஜம்புத்தீவு) அனைவரின் விடுதலைக்கு அறைகூவல் விடுக்கிறார். மக்களுக்கு கொலை மிரட்டல் விடுகிறான் அக்னியூ . " ஆயிரம் ஆண்டு வாழ்ந்தாலும் சாவின் நிச்சயம், போராட வா" என்று மக்களைத் தட்டி எழுப்புகிறார் மருது. 

இந்திய வரலாற்றில் பிரிட்டிஷ் ஆட்சிக்கெதிராக மன்னர்களும் , பாளையக்காரர்களும் நடத்திய காலனியாதிக்க எதிர்ப்பு விடுதலைப் போர்கள் , தங்களது அரசுரிமையைப் பாதுகாத்துக் கொள்வது என்பதை மையப்படுத்தியே இருந்திருக்கிறது. முதன்முறையாக மருதுவின் அறிக்கை " நாட்டு விடுதலை" என்பதை மக்கள் நலனுடன் இணைத்துப் பேசுகிறது. சாதி, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு மக்களனைவரையும் காலனியாதிக்க எதிர்ப்புக்காக ஒன்றிணையக் கோரும் முதல் பிரகடனம் இது தான்.

மருது வெளியிட்ட தென்னிந்திய மக்களுக்கான பிரகடனம் அரசியல் மையமான திருச்சிக் கோட்டையிலுள்ள நவாப் அரண்மனையின் வாயிலிலும் , இந்தியா முழுவதற்குமான பிரகடனம் நாடெங்கிலும்பக்தர்கள் வந்து செல்லும் ஸ்ரீரங்கம் கோயிலின் மதிற்சுவரிலும் ஒட்டப்படுகின்றன. உண்மையில் இந்த பிரகடனம் தீபகற்பக் கூட்டிணைவு விடுத்த செயலுக்கான அறைகூவல். “ தீபகற்பக் கூட்டிணைவு ஆங்கிலேயப் பேரரசின் அமைதியையும் பாதுகாப்பையும் அழிக்கும் தன்மையுடையது; பேராபத்தினை விளைவிக்கக் கூடியது." என்று குறிப்பிடுகிறது லண்டன் தலைமையகத்துக்கு இங்கிருந்து அனுப்பப்பட்ட பிரிட்டிஷ் இராணுவத்தின் ஆவணம்.

உண்மைதான் .கிளர்ச்சி துவங்கிய பின் கிழக்குக் கடற்கரையின் எந்தத் துறைமுகத்திலும் கம்பெனியின் கப்பல்கள் சரக்குகளை இறக்க முடியாததால் அவை இலங்கைக்குத் திருப்பி விடப்பட்டன. வரிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட வளமான தஞ்சை மண்ணின் உழவர்களே கிளர்ச்சிப் படையுடன் இணைந்து கொண்டார்கள் எனும் போது, பிற பகுதி உழவர்கள் கிளர்ச்சிக்கு அளித்த ஆதரவைப் பற்றி விவரிக்கத் தேவையில்லை. " கிளர்ச்சிக்காரர்களுடன் சேர்ந்து கொண்ட உழவர்களிடமிருந்து நெல்லைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகளுக்கு மரணதண்டனை" என்று அறிவிக்கிறான் கும்பகோணம் கலெக்டர்.  பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குத் தானியம் கொண்டு செல்வதைத்  தடை செய்த கம்பெனி நிர்வாகம் , அதிலும் கொள்ளை இலாபம் அடித்ததால், பஞ்சம் பாதித்த பகுதி மக்களும் திரள் திரளாகக்  கிளர்ச்சியில் இணைந்தார்கள். வெறும் நாலரை லட்சம் மக்கட்தொகை கொண்ட சிவகங்கைப் பாளையத்திலிருந்து மட்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் மருதுவின் படையில் இணைந்திருந்தார்கள். கம்பெனியின் உள்நாட்டுச் சிப்பாய்களும், நவாப்பின் சிப்பாய்களும் கிளர்ச்சிக்காரர்களை எதிர்த்துப் போரிட மறுத்ததால், மேலும் மேலும் வெள்ளைப் படைகளைக் குவிக்க வேண்டிய கட்டாயம் கம்பெனிக்கு ஏற்பட்டது.

அப்போது கர்னல் அக்னியூ மேலிடத்திற்கு எழுதிய கடிதங்களில் தோல்வி ஏற்படுத்திய சலிப்பும், விரக்தியும் தென்படுகின்றன. போரிட்டு வெல்ல முடியாத வெள்ளையர்கள் சூழ்ச்சியில் இறங்கினார்கள். போர் நடந்து கொண்டிருக்கும் போதே வேலுநாச்சியாரின் உறவினரான கௌரி வல்லப உடையத் தேவன் எனும் துரோகி சிவகங்கையின் புதிய அரசராக வெள்ளையர்களால் அறிவிக்கப்படுகின்றான். உணவையும், சாலை போடுவதற்கான பணியாட்களையும், ஏராளமான வீரர்களையும் அனுப்பி உதவுகிறான் தொண்டைமான். மருதிருவரின் போர்த் திட்டங்களை ஒற்றறிந்து துரோகிகள் வெள்ளையர்களுக்குச் சொல்கின்றனர். தொண்டித் துறைமுகம் வழியாக கிளர்ச்சியாளர்களுக்கு உணவும், வெடிமருந்தும் கிடைத்து வந்ததை அறிந்த வெள்ளையர்கள் அதனைத் தடுத்து நிறுத்துகின்றனர்.

இப்படி துரோகத்தாலும், சதியாலும் பலமடைந்த வெள்ளையர்கள் இறுதியில் தென்னிந்தியா முழுவதுமிருந்த தம் படைகளை ஒன்று குவித்து காளையார் கோவிலை மூன்று திசைகளிலிருந்து முற்றுகையிடுகின்றனர். சுமார் இரண்டு மாதங்கள் நீடித்த இந்த முற்றுகைக்குப் பின் மருதிருவர் மற்றும் சிவகங்கை மக்களின் வீரஞ்செறிந்த போர் முடிவுக்கு வருகிறது. சோழபுரம் காட்டில் சின்னமருதுவும், மதகுபட்டிக்காட்டில் பெரிய மருதுவும் , வத்தலக்குண்டில் ஊமைத்துரையும் , சிவத்தையாவும் கைது செய்யப்பட்டனர்.

துரோகி கௌரி வல்லப உடையதேவன் மருதிருவரிடம் சமாதானம் பேசி வெள்ளையர்களிடம் மன்னிப்பு கேட்குமாறு கோருகிறான். சுற்றார் அனைவரையும் இழப்போமென்று தெரிந்த நிலையிலும் அந்த சிவகங்கைச்  சிங்கங்கள் மண்டியிட மறுக்கின்றனர். இறுதியில் மருதிருவர் மற்றும் அவர்களது வாரிசுகள் , உறவினர், ஏனைய கிளர்ச்சிக்காரர்கள் உட்பட சுமார் 500  வீரர்கள் திருப்பத்தூர்க் கோட்டையில் 1801  ஆம்  ஆண்டு  அக்டோபர் 27  ஆம் நாள் தூக்கிலிடப்படுகின்றனர்*. அவர்களில் மருதிருவரின் மகன்கள், பேரன்கள் உள்ளிட்டு ஒருவரையும் வெள்ளையர்கள் விட்டு வைக்கவில்லை. சின்ன மருதுவின் தலையை வெட்டி எடுத்து காளையார் கோவிலில் நட்டு வைத்தன வெள்ளை மிருகங்கள். ஊமைத்துரையும் , சிவத்தையாவும் பாஞ்சாலங்குறிச்சி  கொண்டு செல்லப்பட்டு அங்கே நவம்பர் மாதம் 16  ஆம் தேதி ( 1801 ஆம்  ஆண்டு  ) தூக்கிலடப்பட்டனர்.

சின்ன மருதுவின் 15  வயது மகன் துரைச்சாமி , சிவகங்கை அரசர் வெங்கம் பெரிய உடையத்தேவர், பாஞ்சாலங்குறிச்சி தளபதி குமாரசாமி நாயக்கர் உள்ளிடட 73  கிளர்ச்சியாளர்கள் மலேசியாவில் இருக்கும் பிரின்ஸ் ஆப் வேல்ஸ் தீவுக்கு  11-02-1802 நாடு கடத்தப்பட்டு அங்கேயே இறந்தும் போயினர். மருதிருவருடைய வீரத்தின் சுவடு கூட மிச்சமிருக்கக்கூடாது என்று கருதிய வெள்ளையர்கள் அவர்களுடைய குடிவழியையே இல்லாதொழித்தனர்.



மக்களோ மருதிருவரை குடி வழியெதுவும் தேவைப்படாத வழிபாட்டுக்குரிய தெய்வங்களாக்கிவிட்டனர். மக்களுடைய அன்பின் வெளிப்பாடான இந்த நடுகல் மரபு கல்லாய் இறுகிப் போன கையறு நிலையின் சாட்சியாய் நம்முன்னே நிற்கிறது. எரிமலையாய்க் குமுறி வெடிக்கும் திருச்சி பிரகடத்தின் சொற்கள் நம் செவிப்பறைகளில் வந்து மோதுகின்றன. சின்ன மருதுவின் ஆணை, வணங்கச் சொல்லவில்லை , வாளேந்தச் சொல்கிறது; பக்தியைக் கோரவில்லை, வீரத்தைக் கோருகிறது.

" ஆதலால் மீசை வைத்து கொண்டிருக்கின்ற நீங்கள் அனைவரும்....." உங்களைத் தான் அழைக்கிறார் சின்னமருது.

நன்றி: கட்டுரை ஆசிரியர் : வேல்ராசன் .
புதிய கலாச்சாரம் இதழ் -நவம்பர் 2006

( இக்கட்டுரை கீழைக்காற்று பதிப்பகம் வெளியிட்ட " விடுதலைப்போரின் வீரமரபு " என்ற நூலிலும் இடம் பெற்றுள்ளது. )

பின்குறிப்பு : இது மருது சகோதரர்கள் பற்றிய வரலாறு அல்ல; மிகச் சிறிய கட்டுரை தான். இக்கட்டுரையில் பல  முக்கியமான குறிப்புகள்  விடுபட்டுள்ளன. அவற்றில் சில;

1.       1793 ஆம் ஆண்டு சிவகங்கை அரசி வெள்ளச்சி நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகிறார்,

2.       1796 ஆம் ஆண்டு அரசி வேலு நாச்சியாரின் மரணத்திற்குப் பிறகு, பெரிய மருது சிவகங்கையின் ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார். சின்ன மருது அமைச்சராகிறார்.

3.       *மருது சகோதரர்கள்  தூக்கிலப்பட்ட நாள் 24-10-1801. அவர்களின்  உடல் காளையார் கோவிலில் அடக்கம் செய்யப்பட்ட நாள் தான்  27-10-1801.

ஆங்கிலேயருக்கு எதிரான காலனிய ஆதிக்க எதிர்ப்புப்போரில்  மருதிருவரின் பங்களிப்பு மகத்தானது. இக்கட்டுரையின் ஆசிரியர் வேலராசன் குறிப்பிட்டது போல் மக்கள் மருது சகோதரர்களை தெய்வங்களாக்கி விட்டார்கள். இருந்தாலும் அம்மாவீரர்களின் மேல் சாதீயக்குறியீடுகள் பூசி , குறிப்பிட்ட சாதியினருக்கு மட்டுமே  சொந்தமானவர் என்ற  பிரமையை ஏற்படுத்தி  விட்டார்கள். இது  மிகவும் வேதனை தரும் விளைவாகும் . ஆனாலும் இந்திய சுதந்திரத்தைப் பற்றி பேசும் போதெல்லாம் இந்த மாவீரர்களின்  வீரமும், தியாகமும்  நம் அனைவரின் நினைவுகளிலும் தவறாமல் வலம் வரும்.


Wednesday 23 October 2019

அசுரன் திரைப்படம்-ஒரு பார்வை.


அசுரன்  திரைப்படம்-ஒரு பார்வை.










சில வருடங்களுக்கு முன்பு பூமணியின் "வெக்கை" நாவலை படித்த போது, அவர்  எடுத்துக்  கொண்டிருந்த கதைக்களம் மிகவும் ஈர்ப்பாக இருந்தது. ஒரு பதினைந்து வயது பையனான சிதம்பரம்  தனது அண்ணனைக் கொன்ற வடக்கூரானை பழி தீர்த்துவிட்டு தந்தையுடன் காட்டிற்குள் தலை மறைவாகி பிறகு  நீதிமனறத்தில் சரணடைய போகும் வரையிலான நிகழ்வினை  அந்த நாவல் பேசுகிறது. நாவலை வாசித்தபோது பூமணியின் கரிசல் காட்டு நடை மிகவும் சுவாரசியமாகத் தான் இருந்தது. நான் ஒரே மூச்சில் படித்து முடித்த சில நாவல்களில் இதுவும் ஒன்று.

அந்த நாவல் இப்போது வெற்றி மாறனின்  படைப்பில் " அசுரன் " என்ற தலைப்பில் திரைப்படமாக வெளிவந்து மிகவும் நல்ல படம் என்று பேசப்படுகிறது; மிகப் பெரிய பாராட்டையும் பெற்றுள்ளது. ஆனாலும், வெற்றிமாறன் ஒரு பேட்டியில் " வெக்கை " நாவலை படித்தவர்களுக்கு இந்தப் படம் பிடிக்காது என்று அடக்கமாக கூறியிருக்கிறார். இதுவே , இப்படத்தைப் பார்க்க என்னைத் தூண்டியது. ஆனால், நாவலின் பிம்பத்தை என் மனத்திலிருந்து ஒதுக்கி விட்டே  படத்தை  பார்த்தேன்.

முதல் பாதியில் அப்பா சிவசாமியும், மகன் சிதம்பரமும் காட்டிற்குள் ஒளிந்து திரிவதை மிக விறுவிறுப்பாக எடுத்திருக்கிறார் வெற்றி மாறன். அவர்களுடன் நாமும் சேர்ந்து பயணிப்பதாகவே  தோன்றுகிறது. அற்புதமான  படப்பிடிப்பு. அதுவும் இடைவேளைக்கு முன்பு வரும் அந்த சண்டைக்காட்சி  மிகவும் உயிரோட்டமாக இருந்தது. ( பாராட்டுக்கள் பீட்டர் கெய்ன்) பிரமாதம்!. படம் இடைவேளை வரை மிக வேகமாக நகருகிறது.



இரண்டாம் பகுதி சிவசாமியின் கடந்த கால நிகழ்வினை வெளிக்கொணருகிறது. இப்பகுதி நாவலில் இடம்பெறவில்லை . வெற்றிமாறனால் படத்தின் வெற்றிக்காக இணைக்கப்பட்ட பகுதி இது. உண்மையைக் கூற வேண்டுமானால் வெற்றிமாறன் இங்கே தான் வெற்றி பெறுகிறார். அதுவும் சிவசாமி , தான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் மாரியம்மாளுக்கு "செருப்பு" வாங்கி கொடுப்பதும் . அதை அணிந்து  பள்ளிக்குச் கொண்டுசென்ற அவளை ஆதிக்கசாதியினர்  அடித்து அதே செருப்பை தலையில் சுமக்க வைத்து அவமானப்படுத்துவதும் அன்றைய காலத்தில் நிலவிய சாதிக் கொடுமையின் வெக்கையை வெளிக்காட்டியது. அதனால் அவமானத்தால் கூனிக்குருகிப் போன மாரியம்மாள் , இக்கொடுமையை யாரும் தட்டிக்கேட்கவில்லை என்று உடைந்து அழும்போது நெஞ்சம் கனத்துப்போகிறது.

அதேபோல்  பஞ்சமி நிலம்மீட்பு பற்றிய போராட்டத்தையும் , அதையொட்டி ஏற்படும் கலவரத்தின் அடையாளமாக  கீழவெண்மணியில் "ராமையாவின் குடிசையில் " 44  பேர்கள் எரிக்கப்பட்டு இறந்த சம்பவத்தையும் மிகப் பொருத்தமாக இணைத்திருக்கிறார் வெற்றிமாறன். இருந்தாலும் இப்பகுதியின் நீளம் எனக்கு   சற்று சலிப்பை கொடுத்தது உண்மை தான்  . ஆனால் இறுதிப்பகுதி மீண்டும் வேகத்தை கூட்டுகிறது.

உண்மையைக் கூறவேண்டுமென்றால் அடங்கி ஒடுங்கிக் கிடந்த தாழ்ந்த சாதியினர் , ஆதிக்க சாதியினருக்கு எதிராக வெகுண்டெழுந்து அடிக்கு அடி என்று இறங்குவது தான் சரி என்பதை இப்படம் எடுத்துக் காட்டுகிறது. மேலும் காட்சிகளை துவேசம் இல்லாமல் இயல்பாக எடுத்திருப்பது இயக்குனரின் திறமையைக் காட்டுகிறது.

தனுஜின் நடிப்பை பாராட்டாமல் இருக்கவே முடியாது . அதுவும் மூத்த மகனைக் காப்பாற்ற  ஊர் பஞ்சாயத்திற்கு கட்டுப்பட்டு ஒவ்வொருவரின் காலில் விழும் போதும். சின்ன மகனைக் காப்பாற்ற கண்களில் கனல்தெறிக்க போராடும் போதும் நடிப்பின் உச்சம் தொடுகிறார். தனுஷ்  , சிவசாமியாகவே வாழ்ந்திருக்கிறார். இப்படத்தை பார்த்தபிறகு அவர் மீது எனக்கிருந்த எதிர்மறையான   பிம்பங்கள் மறைந்து அவரை மிக உயர்வான இடத்திற்கு கொண்டு சென்றது.



அவரது மூத்த மகனாக நடித்திருக்கும் டிஜேய் அருணாசலம் போலீசாரின் அடியால் உருக்குலைந்து வந்த நிலையிலும் , தந்தை தனுஷ்  வாந்தியெடுப்பதை கையில் ஏந்திச் செல்லும் காட்சியில்  நமக்கும் இப்படியொரு மகன் கிடைக்க வேண்டும் என்று ஏங்கச் செய்யும் விதமாக நடித்திருப்பது உண்மை. அதே போல் சின்ன மகனாக வரும் கென்  கருணாஸின் நடிப்பும் மிகவும் எதார்த்தமாக இருக்கிறது. அவருக்கு நல்ல எதிர் காலம் காத்திருக்கிறது.


இறுதி காட்சியில்  சிதம்பரத்திடம் , " நிலம் இருந்தால் புடுங்கி கிடுவாங்க ; பணம் இருந்தால் புடுங்கி கிடுவாங்க; ஆனால் படிப்பு இருந்தால் அவர்களால் புடுங்க முடியாது" என்று சிவசாமி கூறும் இடம் படத்தின் சிகரமாக இருக்கிறது. தனுஷ் கொலைப்பழியை தான் ஏற்று கொண்டு நீதிமன்றத்தில் சரணடையும் அந்தக்காட்சி.........

மொத்தத்தில் " அசுரன்" ஒரு அற்புதமான படைப்பு. இயக்குனர் வெற்றிமாறனுக்கும் அவரது குழுவிற்கும் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.



இப்படத்தின் மூலம் "பூமணி"  என்ற படைப்பாளனுக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்துள்ளது.  அவர் தன்னுடைய " வெக்கை" நாவலின் முன்னுரையில் "கொலை செய்தது என்னவோ சிதம்பரம் தான்; ஆனால் காட்டில் அலைந்து திரிந்தது நான் தான்" என்று எழுதியிருப்பார். அது எவ்வளவு உயர்ந்த வரிகள் என்பதை  இப்படத்தைப் பார்த்தபிறகு தான்  புரிந்து கொள்ள முடிந்தது.



 “அசுரன் எல்லோரையும் கொள்ளை கொள்கிறான்”.

Saturday 12 October 2019

இவர் தான் ஸ்டாலின்-நா.வீரபாண்டியன்


நூல் விமர்சனம்:

“இவர் தான் ஸ்டாலின்”

ஆசிரியர்: நா.வீரபாண்டியன்
வெளியீடு: சிந்தன் புக்ஸ் , ஆகஸ்ட்-2019
பக்கங்கள்:  269
விலை : ரூ.250/-





இடது சாரி சிந்தனையை உள்வாங்கி கொண்டவரும்  , BSNL நிறுவனத்தில் அதிகாரியாக இருந்து பணி புரிந்து  ஓய்வு பெற்றவரும் , சிறந்த தொழிற்சங்கத் தலைவருமாக திகழ்ந்த தோழர். நா.வீரபாண்டியன் எழுதிய நூல்  இது. பொதுவாக இடது சாரி கொள்கைகளை கடைபிடிக்கும் ஒரு சாரருக்கு  தோழர். ஸ்டாலின் மீது  கடுமையான விமர்சனம்  உண்டு . தோழர் வீரபாண்டிய னும் அந்த அணியைச் சேர்ந்தவர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் முடிந்த வரை  நடுநிலையோடு தகவல்களை சொல்ல முயன்று இருக்கிறேன் என்று அவர் தமது முன்னுரையில் கூறியிருப்பது மிகவும் ஆறுதலாக இருந்தது. அதனால் நானும் எந்த முன்சார்பு கருத்தில்லாமல் நூலிருக்குள் பயணித்தேன்.

இந்த நூலிற்கு மார்க்சிய அறிஞர் கோவை.ஞானி அவர்கள் அணிந்துரை ( நூல் குறிப்புகள்) எழுதியுள்ளார். ஞானி அவர்கள் ஸ்டாலினை பற்றி முன்னுரையில் கூறியுள்ள பல கருத்துக்களை  என்னால் ஏற்றுக் கொள்ளும்படியாக   இல்லை . குறிப்பாக ஸ்டாலின் , லெனினுக்கு நெருக்கமானவர்களையும், கட்சியின் மையக் குழுவிலும் , இராணுவத்திலும் பணிபுரிந்தவர்களையும் , அக்டோபர் புரட்சியிலும் பங்கெடுத்தவர்களையும் குற்றம் சாட்டி கொன்றொழித்தார் என்று குருசேவ் தமது ரகசிய அறிக்கையில் கூறியுள்ளதை முக்கியத்துவம் கொடுத்து பதிவு செய்திருக்கிறார். குருசேவ் , ஸ்டாலின் உயிரோடு இருந்தவரை நம்பிக்கையோடு நடந்து விட்டு அவர் இறந்த பிறகு குற்றம் சுமத்திய மனிதர். அது மட்டுமல்லாமல் , ஸ்டாலின் காலத்தில் ஒரு வேளை லெனின் உயிரோடு இருந்திருந்தால் அவரும் ஒரு குற்றவாளி ஆக்கிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது  என்று அவர் எழுதியிருப்பதை இரசிக்க முடியவில்லை (பக்கம் 18-19 ) . ஸ்டாலின் மீது அவ்வளவு ஞானிக்கு வெறுப்பு. அவர் என்னதான் ஸ்டாலினின் திறமையை மதிப்பதாக எழுதியிருந்தாலும் , அவரை கடுமையாக வெறுக்கிறார் என்பதை அவரின் முன்னுரையிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. முன்னுரையின் இறுதியில் , "ஸ்டாலின் இல்லையென்றால் லெனின் பற்றிக்கூட நாம் பேசியிருக்க முடியாது . ஓர் எதிர்மறை உதாரணம் என்றும் ஸ்டாலின் பயன்படலாம்" என்று விகடமாக எழுதியிருக்கிறார்.  

வரலாற்றில் மாபெரும் புரட்சிக்காரர்களில் ஒருவராக  தனிப் பெருமையுடன் திகழ்ந்தவர் ஸ்டாலின். மார்க்சிய-லெனினிய கோட்பாடுகளை செவ்வனே கடைபிடித்து சோவியத் ரசியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவர். வாழ்ந்த காலத்தில் கடவுளுக்கு நிகராக போற்றப்பட்டு , இறந்த பின்பு “தனிநபர் வழிபாட்டு முறை”யை ( CULT OF PERSONALITY) கொண்டு வந்தவர் என்று அவரது சீடர்களாலும், எதிரிகளாலும், திருத்தல்வாதிகளாலும்  மிக மோசமாக தூற்றப்பட்டவர் ஸ்டாலின்.இருந்தாலும்  ஸ்டாலினைப் பற்றி  தோழர் வீரபாண்டியனின் இந்த நூலில் ஏராளமான விபரங்களுடன் ஏறத்தாழ 22  அத்தியாயங்களில் நேர்மறையாகவே எழுதி  இருக்கிறார். அத்தியாயம் 1  முதல் 16 வரை ஸ்டாலினின் இளமைக்கால வாழ்க்கையிலிருந்து ஆரம்பித்து அரசியல் , சமூக, பொருளாதார மேதையாக  திகழ்ந்தது பற்றியும் ,  சோவியத் ரசியாவின் தலைமை பீடத்தை அலங்கரித்ததையும் மற்றும் இரண்டாம் உலகப் போரின் வெற்றி வீரனாக  மிளிர்ந்து அவர் இறக்கும்  வரையிலான வரலாற்றை சொல்லியிருக்கிறார்.

17 -வது அத்தியாயத்தில்  “போல்ஷ்விக் கட்சியும் , அதிகாரமையமும் -லியான் ட்ராட்ஸ்கி” என்பதைப்பற்றியும் , 18 வது அத்தியாயத்தில் ஸ்டாலின் வரலாற்றை சுருக்கமாகவும் , ஸ்டாலின் எழுதிய நூல்கள் பற்றி 19 வது அத்தியாயத்திலும் ,”  புரட்சி தொடர்கிறது- லெலினிடம் திரும்பச் செல்கிறோம் “ என்று 20 வது அத்தியாயத்திலும் , 21 இல் “ஒவ்வொன்றுக்கும் ஸ்டாலினை குற்றம் சொல்வது, வரலாற்று எளிமைவாதம்” என்ற பகுதியாகவும் , 22 இல் “ஸ்டாலின் -ஸ்டாலினிசம்- ஒரு ஆய்வு” என்ற தலைப்பிலும் விவாத நோக்கத்தில் எழுதி  முடித்திருக்கிறார்.  
ஸ்டாலினைப் பற்றி  தோழர் வீரபாண்டியன் பதிவு செய்திருக்கும் தகவல்கள் ஸ்டாலின் என்ற இரும்பு மனிதனை மேலும் கூடுதலாக  புரிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. அவர் இந்த நூலில் கையாண்டிருக்கும் யுக்தி சற்று வித்தியாசமாக இருக்கிறது. பொதுவாக ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் போது , அவர்களின் பிறப்பிலிருந்து ஆரம்பித்து  கல்வி, திறமை, சாதனைகள் , வெற்றி மற்றும் தோல்வி, புகழ்   மற்றும் இறப்பு வரை நேர்கோட்டில் எழுதுவார்கள். ஆனால் , இந்த நூலில் சோவியத் ரஷியாவில் நடந்த பல்வேறு வரலாற்று சம்பவங்களோடு ஸ்டாலினின் பங்களிப்பை  ஒப்பிட்டு  எழுதியிருப்பது புதுமையாக இருக்கிறது. அவற்றில் சில  முக்கியமான சம்பவங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1.       ஸ்டாலின் 1894 இல், கிறித்துவ மதபோதகராக பயிற்சி பெற டிபிலிஸ்(TIFLIS) இளங்குரு மடத்தில் சேருகிறார். ஆனால் , அங்கே மறைமுக சோஷலிச அமைப்பில் சேருகிறார். அதனால் 1899 இல் மடத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார். 1901 ஆம் ஆண்டு ருஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் டிபிலிஸ் கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். மதகுருவான படிக்கப்போனவர் சோஷலிசவாதியாக மாறினார்.

2.       1905 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்  பின்லாந்தில் நடைபெற்ற போல்ஷ்விக் மாநாட்டில் முதன்முதலாக லெனினை சந்திக்கிறார். லெனின் எளிமை , தன்னடக்கம், ஆரவாரமில்லாத தன்மை போன்றவை ஸ்டாலினை மிகவும் கவர்ந்ததால் , மனித குலத்தின் எளிய மக்களின் புரட்சித் தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன் என்று ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.

3.       1906 இல் மார்க்சியத்தை ஆதரித்து "அராஜவாதமா? அல்லது சோஷலிசமா?" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை ஸ்டாலின் எழுதுகிறார். மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்திற்கு இவரால் அளிக்கப்பட முதலும் , முக்கியமான பங்களிப்பு இது

4.       1912 ஆம் ஆண்டு நடந்த போல்ஷ்விக் கட்சியின் 6 வது மாநாடு   தோழர்கள் லெனின், ஸ்டாலின் , ஸ்வர்கலோவ் ஆகியோர்களை மத்தியக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்தது. அப்போது மார்க்சிய தத்துவ ஞானத்தில் தேறிய அறிவார்ந்த பிளக்கனேவ் , லியான் ட்ராட்ஸ்கி , காமனேவ், ஜினோவியேவ் மற்றும் ரைகோவ் ஆகியோர்களும் கட்சியில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

5.       1914  ஆம்  ஆண்டு "மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சனையும் " என்ற நூலை எழுதுகிறார் ஸ்டாலின் . இந்த நூல் தான் 1917  அக்டோபர்  புரட்சிக்குப் பிறகு போல்ஷ்விக் கட்சியின் அரசாங்கத்தில் தேசிய இன மக்களுக்கான துறையின் அமைச்சர் பொறுப்பை ஸ்டாலினுக்குப் பெற்றுத் தந்தது.

6.       1914 ஜூலை 28 முதல் 1918 நவம்பர் 18  வரை  முதல் உலகப்போர்.

7.       1917  ஆம் ஆண்டு அக்டோபர் 25( நவம்பர் -7) புரட்சி வெற்றி பெற்றது.  சோவியத் ரஷியா என்ற பாட்டாளி வர்க்க அரசு அமைந்தது. லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி அதிகாரத்திற்கு வந்தது. ஸ்டாலின் தேசிய இன மக்களுக்கான துறையின் அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.

8.       கடும் முரண்பாடுகளை உண்டாக்கிய பிரச்சனைகளில் ஸ்டாலின் எப்போதும் லெனினுடைய நிலையையே ஆதரித்து வந்தார். எந்தக்காலத்திலும் , எந்தப் பிரச்சனையிலும் லெனினோடு முரண்பாடற்ற நிலையை எடுத்ததும் , இயற்கையாகவே அவரோடு ஒத்துப் போனதும் , லெனினால் கட்சி மூலம் பணிக்கப்பட்ட பெரும் பொறுப்புகளை தலைமேற்க் கொண்டு செய்து வெற்றி கரமாக நிறைவேற்றியதும் , ஸ்டாலினுக்கு கட்சியின் மத்தியிலும் , மக்கள் மத்தியிலும் செல்வாக்கை அதிகரித்தது.

9.       ருஷ்ய போல்ஷ்விக் கட்சியின் மேல்நிலை தலைவர்களுள் சாமானிய மக்களிடையே வாழ்ந்தும், பழகியும். துயர்களில் பகிர்ந்தும், மக்கள் தலைவராய் உருவானவர் ஸ்டாலின் ஒருவரே.

10.    1922 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்படுதல்.

11.    1924 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதியன்று லெனின் காலமானார். தோழர் ஸ்டாலின் கீழ் வருமாறு பேசினார். " கம்யூனிஸ்ட்களாகிய நாம் ஒரு தனி அச்சில் வார்க்கப்பட்டவர்கள். பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான போர்த்தந்திர நிபுணன் ஆகிய தோழர். லெனினுடைய படை நாம். இந்தப் படையில் வீரனாக வாழ்வதைவிட உயர்வானதும் , அவரை தலைவராகக் கொண்ட கட்சியின் உறுப்பினர் என்பதை விட மேலானதும் வேறொன்றும் இல்லை".

12.    லெனின் மறைவிற்குப் பின்பு இரண்டாம்  இடத்தில் இருந்த  ட்ராட்ஸ்கியை  பின்னுக்குத் தள்ளி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார்.

13.    1924 இல் ட்ராட்ஸ்கியஸத்திற்கு எதிராகவும், லெனினியத்தை விளக்கும் பொருட்டும் , ஸ்டாலின் எழுதிய நூல் " லெனினிசத்தின் அடிப்படைகள்" வெளிவருகிறது.

14.    ஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டமும் , கூட்டுப்பண்ணை இயக்கமும் சோவியத் ருஸ்யாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்றது.

15.    சோவியத் மக்களுக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 1936 ஆகஸ்ட் 23 அன்று ஜினோவியேவ், காமனேவ், சிமிர்னோவ் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1937 ஜனவரி 23 இல் பியாத்தகோவ் , ராடெக், ஜொகால்நிகோவ் , செஸ்ட்ரோவ் மற்றும் 12 பேர்கள் சுட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 1937 மே மாதத்தில் டாம்ஸ்கி தற்கொலை செய்து கொண்டார். 1937 ஜூன் 11 இல் செஞ்சேனையின் தளகர்த்தர்கள் ஏழுபேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் 1938  மார்ச் 2  அன்று புகாரின், ரைகோவ், கிரஸ்டென்ஸ்க்கி ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 

1940  ஆகஸ்ட் 20  இல் லெனினுக்கு இணையான அறிவும், அனுபவமும் கொண்ட ட்ராட்ஸ்கி , நாடுகடத்தப்பட்ட நிலையில்  மெக்சிகோவில் தஞ்சமடைந்திருந்தாலும் , சோசலிச அரசை வீழ்த்த சதி செய்ததாக சொல்லப்பட்டு கொல்லப்படுகிறார். மக்களுடைய இந்த விரோதிகளை , தேசத் துரோகிகளை சோவியத் அரசு தயவு தாட்சண்யம் காட்டாது தண்டித்தது என் போல்ஷ்விக் கட்சி வரலாறு கூறுகிறது.

16.    1939  செப்டம்பர் -1 முதல் 1945 செப்டம்பர் -2  வரை இரண்டாவது உலகப்போர் நடந்தது. .

17.    இரண்டாவது உலகப்போரின் வெற்றியின் மூலம் ஸ்டாலின் உலகமே வியக்கும் மாபெரும் மனிதரானார். ஸ்டாலின் என்னும் பெயர் உலகின் மூளை முடுக்கெல்லாம் வாழ்ந்த மக்களால் உச்சரிக்கப்படும் போது தன்னையறியா உணர்வுச் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. இரண்டாவது உலகப்போரினால் சோவியத் ருஸ்யா மிகவும் மோசமாக பாதிப்படைந்தது. 2  கோடி மக்கள் இறந்தார்கள்; 2 .5  கோடி மக்கள் வீழ்ந்தார்கள்; 1700  நகரங்களும் , 27000  கிராமங்களும் முற்றாக அழிக்கப்பட்டும் , 38000  மைல் நீள இரயில் பாதைகள் தகர்க்கப்பட்டு, நாடே உருமாறிப்போனது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இழப்பைவிட நூறு மடங்கு இழப்பை சோவியத் யூனியன் சந்தித்தது.

18.    ஸ்டாலின் மகன் யாக்கோப்பு செம்படையில் கர்னலாகப் பணிபுரிந்தார். இரண்டாம் உலகப்போரில் நாஜிக்களால் சிறைபிடிக்கப்பட்டார். அதேபோல் நாஜிப்படைத் தளபதி பிரடெரிக் பவுலோஸ் சோவியத் படையினால் சிறைபிடிக்கப்பட்டார். ஹிட்லர் அவரை விடுவிக்க , பதிலாக ஸ்டாலின் மகனை விடுதலை செய்ய முன்வந்தார். ஆனால் ஸ்டாலின் மறுத்துவிட்டார். இறுதியில் நாஜிகளின் முகாமில் யாக்கோபு சுடப்பட்டு இறந்தார். ஸ்டாலின் ஊருக்கு மனிதர் என்பதற்கு இதைவிட சான்று எதுவுமில்லை.

19.    தொழில் துறை வளர்ச்சி: இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் சோவியத்தை புனரமைப்பதற்கு மிகுந்த அக்கறை எடுத்தார் ஸ்டாலின். அதனால் ,1949  ஆம் ஆண்டில் போருக்கு முந்தைய நிலையை விட தொழில் துறையில் 41  சதவீத வளர்ச்சி அடைந்தது. 1950  ஆண்டு தொழிற்துறை உற்பத்தி நம்பமுடியாத அளவிற்கு 73  சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது.

20.    1953  மார்ச் 1  ந் தேதி மூளையில் இரத்தக்குழாய் வெடித்து நினைவிழந்தார்.   மார்ச் 5  ந் தேதி இரவு மரணமடைந்தார். ஸ்டாலின் என்ற ஒரு மாபெரும் மனிதனின் சகாப்தம் நிறைவிற்கு வந்தது.

மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் ஸ்டாலினின் சிறப்பை விவரிக்கும்  சில உதாரணங்களே! 

திருத்தல்வாதிகளால் ( REVISIONIST) கொடுங்கோலன் , சர்வாதிகாரி என்று கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான  தோழர் ஸ்டாலின் வாழ்ந்த காலம்  சோசலிச ரஷ்யா உருவெடுத்து வளர்ச்சிப் பாதையில் நடைபோட்ட  காலம். ரஷ்யபுரட்சி வெற்றி பெற்ற சில ஆண்டுகளுக்குள் மாமேதை லெனின் மரணமடைந்தார். அவர் மறைவிற்கு பின் ஏழே வயதாகியிருந்த சோசலிச ரஷ்ய குழந்தையை சுற்றிலும் வட்டமிட்ட ஏகாதிபத்திய வல்லூறுகளிடமிருந்து பாதுகாக்க வேண்டிய கடமை ஒருபுறம்; ஏகபோகமாக அனுபவித்து வந்த சுகங்களை இழக்க மனமில்லாமல் எதிர் புரட்சியை ஊக்குவித்து வந்த பெருமுதலாளிகள் மற்றும் நிலப் பிரபுக்கள் கூட்டத்தை வென்றெடுக்க வேண்டிய பொறுப்பு மறுபுறம்; இப்படி சிக்கல்களும், சிரமங்களும் நிறைந்த காலத்தை மனதில் கொண்டு தோழர் ஸ்டாலினின் நடவடிக்கைகளை மதிப்பீடு  செய்ய வேண்டும். மாறாக, ஸ்டாலின் கொடுங்கோலன், தனிமனித வழிபாட்டை விரும்புவர் என்ற கண்ணாடியை அணிந்து கொண்டு பார்த்தால் அவர் குற்றவாளியாகத் தான் தெரிவார்.

தோழர் ஸ்டாலின் தவறுகள் ஒருவேளை செய்திருக்கலாம். ஆனால் , எவர்தான் தவறுகளே செய்யாதவர்?. அதேபோல் ஸ்டாலினும் விமர்சங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல. ஒரு கம்யூனிஸ்டுக்கு சுயவிமர்சனம் என்பது எவ்வளவு  முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தோழர்களுக்கு எடுத்து காட்டியவர் தான் தோழர் ஸ்டாலின். சுயவிமர்சனம் குறித்து ஸ்டாலின் கூறியது;

”நமது கட்சியின் தொண்டர்களில் பலர் சுயவிமர்சனத்தை விரும்புவதில்லை என்பதை நான் அறிவேன். நமது கட்சியின் உணர்வுக்கு முற்றிலும் மாறுபட்டவர்கள் இவர்கள். சுயவிமர்சனம் என்ற கோசத்தைப் புதிய ஒன்றாக கருத முடியாது. கட்சியின் அடைப்படையாக அது உள்ளது. ஒரு கட்சியால் கம்யூனிஸ்டு கட்சியால் வழி நடத்தப்படும் ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ நமது நாட்டில் உள்ளதால் நாம் முன்னேற விரும்பினால் நமது குறைகளை நாமே வெளிப்படுத்தி சரி செய்து கொள்ள வேண்டும். நமது வளர்ச்சியின் மிக முக்கிய உந்து சக்தியாக சுயவிமர்சனம் இருக்க வேண்டும்.

இதையும் தோழர் வீரபாண்டியன் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். இப்படி சொன்னவர் எப்படி தனிநபர் வழிபாட்டை விரும்பியிருப்பார் என்பதை அவரது விமர்சகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சிந்தியுங்கள்!.

உண்மையைக் கூற வேண்டுமானால் தோழர் வீரபாண்டியன், ஸ்டாலின் பற்றிய ஏராளமான விபரங்களை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.  நிறைகள் அதிகமாக இருந்தாலும் கீழ்காணும் சில குறைகளும் இருப்பதாக  எனக்குத் தெரிகிறது.

1.       சில கால விபரங்கள் தவறாக இருக்கிறது. சில இடங்களில் மாதம் , தேதி உள்ளது ஆனால் வருடமில்லை.

2.       வரலாற்றுச் சம்பவங்கள் காலவரிசைப்படி இல்லை. பல அத்தியாயங்கள் குழப்பத்தைத் தருகிறது.

3.       சித்தாந்த நோக்கில் எழுதப்பட்ட  சில அத்தியாயங்கள்   விறுவிறுப்பாக இல்லை. சராசரி வாசகர்களுக்கு சிரமத்தைத் தரும்.

4.       ஒவ்வொரு அத்தியாயமும் பல வரலாற்று சம்பவங்களைச் சொல்கிறது. புரிந்து கொள்வதில் சிரமம் தெரிகிறது.  

5.       ஸ்டாலினுக்கும் மற்ற உலக நாடுகளுக்குமான இராஜாங்க உறவுகள்  அதிகமாக பதிவு செய்யப்படவில்லை.


மொத்தத்தில் , ஸ்டாலின் என்ற ஒரு ஏழை செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் சோவியத் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததை சோவியத் அறிவாளிகளும் , உலக முதலாளித்துவ அதிகாரமும்  , இந்திய சாதீய அமைப்புக்குள் வாழும் மேல்தட்டு மக்களாலும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் ஸ்டாலினை புறந்தள்ளிவிட்டு உலக வரலாற்றை பேச முடியாது. உலகில் கம்யூனிசம் இருக்கும் வரை மார்க்ஸ்,ஏங்கல்ஸ் மற்றும் லெனினோடு ஸ்டாலினும் பேசப்படுவார். மாபெரும் சோவியத் தேசத்தை காக்கத் தவறிய குருசேவ் முகத்தில் காரி உமிழ்வார்கள்.

இந்த நூல் மூலம் ஸ்டாலினைப் பற்றி மேலும் சில தகவல்களை அறிய செய்த தோழர் வீரபாண்டியனுக்கும் ,  "சிந்தன் புக்ஸ் " வெளியீட்டாளருக்கும் மிகவும் நன்றி. ஆனாலும் இந்த நூல் பட்டை தீட்டப்படாத ஒரு வைரமாக என் கைகளில் இருப்பதாகவே எனக்குத்  தோன்றுகிறது!

சு.கருப்பையா
மதுரை
+919486102431