Monday 23 January 2017

ஜல்லிக்கட்டு-தமிழக மாணவர்களின் புரட்சி.

தமிழர்களின் வீர விளையாட்டான ஏறுதழுவுதல் அல்லது மஞ்சுவிரட்டு அல்லது ஜல்லிக்கட்டு தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக  நடைபெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய அரசு எருதுகள் அல்லது ஜல்லிக்கட்டுக்கு காளைகளை காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் சேர்த்ததால் , மிருகங்களைப் பாதுகாக்கும் “PETA “ அமைப்பு ( மற்றும் சில அமைப்புகள் உட்பட )ஜல்லிகட்டுக் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்று கூறி வழக்குத் தொடர்ந்ததால்  " ஜல்லிக்கட்டு " நிறுத்தப்பட்டது. இதில் இந்திய காளைகள் , பசுக்களை ஒழித்து , அந்நிய நாட்டின் "ஜெர்சி" இன மாடுகளை புகுத்தி அதன் மூலமாக இந்திய பால் உற்பத்தியை அழிக்க PETA வின்  சதி இருப்பதாக நம்பப்படுகிறது. அதனால் ஜல்லிக்கட்டை நடத்துவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை இருந்தது; அல்லது நடத்த முடியவில்லை. இருந்தாலும் தமிழக மக்கள் தொடர்ந்து நல்லவர்களாகவே இருந்து வந்தார்கள்.


தமிழத்தின் கலாச்சாரத்தின் மேல் மட்டுமல்லாமல் , வளர்ச்சியின் மீதும்  மத்திய அரசின் தொடர்ந்த  தாக்குதல் இருந்து கொண்டே இருப்பதற்கு கீழ்காணும்  சில உதாரணங்களைப் பார்க்கலாம்:

Ø  இலங்கை தமிழர்கள் அழிக்கப்பட்டதால் இந்தியாவின் பங்கு இருக்கிறது. அழியாத வடு!
Ø  தமிழக மீனவர்கள் , இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் போதெல்லாம் இந்திய அரசு தலையிடுவதில்லை. ஊடகங்கள் கூட தமிழக மீனவர்கள் என்று போடுவார்களேயொழிய " இந்திய மீனவர்கள் " என்று சொல்லுவதில்லை.
Ø  தமிழகமே எதிர்த்தாலும் கூடங்குளம் அணுஉலை நிறுவப்பட்டது.
Ø  தாமிரபரணி ஆற்றை  பெப்சி மற்றும் கொக்ககோலா   நிறுவனங்களுக்கு தாரை வார்த்தது.
Ø  நியூட்ரினா திட்டம் தேவாரத்தில் கொண்டுவரப்பட்டது. விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன.
Ø  தஞ்சை வயல் வெளிகளை அழிக்க "மீத்தேன் வாயுத் திட்டம் " கொண்டுவரப்பட்டது. கடும் எதிர்ப்பிற்குப் பிறகு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Ø  காவிரி நீர் பங்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுவிட்டது . கர்நாடக அரசு உயர்மன்றத்தின் தீர்ப்பை மதிக்கவில்லை. தண்ணீரும் கிடைக்கவில்லை . சுமார் 250௦ விவசாயிகள் தற்கொலையும், மனம் வெதும்பி இறந்தும் விடடார்கள் .
Ø  புயல், மழை , வறட்சி போன்ற   இயற்கைச் சீற்றங்களின் போது தமிழகத்திற்கு மத்திய அரசின் போதுமான உதவி கிடைப்பதில்லை. 

மேற்கண்ட பிரச்சனைகளில் தமிழக அரசும் , மக்களும் சகிப்புத்தன்மையை கடைபிடித்து வந்தார்கள். குறிப்பாக , காவிரி நீர் பிரச்சனைக்காக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படட போது தமிழக மக்கள் கூனி குறுகி ஒன்றும் செய்ய இயலாதவராக இருந்தார்கள்.  இதெல்லாம் என்மனதில் தோன்றி பலமுறை அழுதிருக்கிறேன். வந்தவரையெல்லாம்   வாழ வைத்த /வைக்கும்   எம்மக்களுக்கா இந்தக் கதி  ?. அந்தோ பரிதாபம் !!  இதற்கு முடிவே இல்லையா? . தவித்திருக்கிறேன்.

ஏ  தாழ்ந்த தமிழக மக்களே ! நீங்கள் வஞ்சிக்கப்பட்டு விட்டீர்கள் ! எப்போது தான் போராட போகிறீர்கள் ? உங்கள் உரிமையை மீட்டெடுக்க என்ன செய்யப்  போகிறீர்கள்? இது தான் என் கேள்வியாக இருந்தது. கூடவே , நவீன தகவல்  தொழில்நுட்பமான முகநூல் , வாட்ஸஅப் , செல்பி  போன்றவற்றிற்குள் மூழ்கி கிடக்கும் இளம் தலைமுறையின் மீது கடுமையான கோபமும் , ஆழ்ந்த வருத்தமும் இருந்தது. தமிழகத்தில்  சாதீய ஆணவக்கொலைகள் நடக்கும் பொழுது கண்டுகொள்ளாமல் இருப்பது, கண்முன் நடக்கும்  அக்கிரமத்தை தட்டிக் கேட்க்காமல் கடந்து செல்வது, விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயலாமல் போட்டோ எடுத்து வாட்சப்பில் பகிருவது போன்ற செயல்கள் என்னை மிகவும் பாதித்திருக்கிறது. அவர்களை சபித்தும் இருக்கிறேன்!

ஆனால் இன்று.....!!!

என் இளம் தலைமுறையினர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள் ! . "ஜல்லிக்கட்டு"  வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து கடந்த 17-01-17 ந்தேதி முதல் தமிழகமெங்கும்  அமைதி போராட்டம் இல்லை...புரட்சி வெடித்தது. சாதி , மதம் கடந்த ஒற்றுமை . நாடே மிரண்டது! உலகமே பிரமித்தது! 21-01-17 ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசால் அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டது.  மாபெரும் வெற்றி ! இந்தியாவின் போராட்ட வரலாறு திருத்தி எழுதப்பட்டது.

மனம் மகிழ்ந்தது. ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் கொண்டுவரப்பட்டதற்காக அல்ல!!!

இந்த போராட்டக்களத்தில் ஜல்லிக்கட்டு மட்டும் பேசப்படவில்லை . பி.ஜே.பி அரசின் செல்லாத நோட்டு பேசப்பட்டது. காவிரி நீரை பகிர்ந்தளிக்காத கர்நாடகத்தின்  வஞ்சகம் பேசப்பட்டது. முல்லை பெரியாறு பேசப்பட்டது . கோக் , பெப்சி தூக்கி எறியப்பட்டது. தமிழனின் பண்பாடும் , கலாச்சாரமும் மற்றும் வீரமும் பட்டை தீட்டப்பட்டது. எம்மக்கள் விழித்துக் கொண்டார்கள். இதுவே என் மகிழ்ச்சிக்கான காரணம்!!!

இனி ஊழல் அரசியல்வாதிகள் தூக்கி எறியப்படுவார்கள்! சாதீயம் கடந்த சமுதாயம் என் அகக்கண்களில் தெரிகிறது. புதியபாதையும்  தெரிகிறது....... !

சு.கருப்பையா.
மதுரை.


Tuesday 17 January 2017

எனக்குப் பிடித்த புத்தகங்கள் : கழிசடை




கழிசடை



ஆசிரியர்: அறிவழகன்
பதிப்பகம்: அலைகள் வெளியீட்டகம்
பக்கங்கள் : 248
விலை : ரூ .160


இந்திய சமூகத்தில் பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் கொடுமைகளில் முக்கியமானது " சாதீயக்  கொடுமை" , அதிலும் மிகக் கொடுமையானது தீண்டாமை. அந்த வகையில், சில சாதீய மக்களை ஒடுக்கி  அவர்களது சமூக வளர்ச்சியைக் கட்டுப்படுத்தி , தங்கள் ஆதிக்கத்திற்குள் முடக்கி வைக்கிற போக்கு இன்றளவும் இந்தியாவில் நிலவி வருகிறது. இதனால்  அதிகம் நசுக்குண்டு கிடப்பவர்கள் பழங்குடி மக்களும் , ஒடுக்கப்பட்ட இனத்தவர்களும் ஆவார்கள். குறிப்பாக மலத்தோடு , சாக்கடைக்குழிகளோடு காலங்காலமாக, குடும்பம் குடும்பமாக வாழ நிர்பந்தப்பட்டுக் கிடக்கின்ற ஒரு சமூகம் "துப்புரவுத் தொழிலாளர்கள் . இவர்களை பற்றி பேசுகிற நாவலே இந்த " கழிசடை".

தமிழில் கழிசடை என்றால் "மிகக் கேவலமானவன் " அல்லது " ஈனப்பிறவிகள்"  என்று பொருள்படும். அத்தகைய ஈனப்பிறவியான அனுமந்தையா என்ற துப்புரவுத் தொழிலாளியின் வாழ்க்கை தான் இந்த கதை. அவன் மனைவி கொண்டம்மா , வெட்டியான் சுடலை , முனிசிபல் வலுவலகத்தின் ஒட்டுண்ணிகளான  ஆய்வாளர் தியாகராஜன் , ராகவலு மற்றும் மொய்தீன் மேஸ்திரிகள், வட்டிக்கடை மாணிக்கம், சாராயக்கடை ஜோசப்பு மற்றும் அனுமந்தையாவின் சக துப்புரவுத் தொழிலாளிகளான இயேசு ரத்தினம் , சுப்பையா, நாகையா , அந்தோணி, யாகூப் , ஐசக் போன்றவர்களின் வாழ்க்கையை மிகவும் எதார்த்தமாகவும் அழுத்தமாகவும் பதிவு செய்திருக்கிறார் அறிவழகன்.

நாள் முழுவதும் மலக்குழிகளிலும் , சாக்கடையிலும் புழங்கும் அனுமந்தையா சாராயத்திற்கு அடிமையாகிப் போவதும் , அதனால் உடல் நலம் கெட்டு பல நாட்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் சம்பளத்தை இழப்பதும், அவனது ஐந்து குழந்தைகளுக்கு உணவளிக்க வட்டிக்கடை மாணிக்கத்திடம் பணம் வாங்கி விட்டுவட்டி கொடுக்க முடியாமல் போய்விட ,  மாணிக்கத்தைச் சரிக்கட்ட  அனுமந்தையாவின்  மனைவி கொண்டம்மா தன்னையே அவனுக்குத் தாரை வார்ப்பதும் மனதை கலங்கடித்து விடுகிறது. 

தன்னை விரும்பி திருமணம் செய்து கொண்ட மனைவி கொண்டம்மா மாணிக்கத்துடன் உறவு வைத்திருப்பதை பார்த்ததும் வேதனையுடன் குடித்துவிட்டு வந்து அவளை அடித்து நொறுக்கிவிட்டு பின்பு அவளின் பரிசுத்தமான அன்பையும் அரவணைப்பையும் நினைத்துப் அனுமந்தையா புலம்புவது  வெகு இயல்பு. அடியை வாங்கிக் கொண்ட கொண்டம்மா , ஏனய்யா! "அவன்கிடட ஆசைப்பட்டா படுத்தேன்"அவனுக்கு வட்டிப்பணம் கொடுக்க முடியாததால் அவன் உன்னை கஷடப்படுத்துவதை தடுக்க எனக்கு வேறு வழி இல்லாமல் தானே இப்படி நடக்க வேண்டியிருக்கிறது என்று புலம்பும் போது அவள் மீது கழிவிரக்கமே ஏற்படுகிறது.


தினமும் பசியோடும், நோயோடும் மற்றும் (வேலை போய்விடும் என்ற ) பயத்த்தோடு வாழும் அனுமந்தையாவின் வாழ்க்கை அவனுக்கு மனப்போராட்டத்தையே கொடுக்கிறது.  அவன் மலக்குழியை சுத்தம் செய்துவிட்டு அவ்வழியாக செல்லும் சாக்கடை நீரிலே முகத்தையும்  கழுவி விட்டு , பசியைப் போக்க "அம்மா" சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று இரங்குவது வேதனையை வரவழைக்கிறது. இந்த நிலை தான் இன்றும் சில பகுதியில் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தனது மகன் சீனய்யாவை  தான் செய்யும் வேலைக்கு அனுப்பக்கூடாது வேண்டும் ஆசைப்படும் அனுமந்தையா , மகன்  அதே வேலையைச் செய்யும் சூழ்நிலைக்குத் தள்ளப்படும் போது வேதனையால் குமைவதும் , மனங்கலங்குவதும் ஒரு நல்ல தந்தைக்குரிய பண்பை அடையாளம் காட்டுகிறது. தன்னைக் குடிக்க வேண்டாம் என்று தடுக்கும் மனைவி கொண்டம்மா , மகன் மலக்குழிக்குள்  வேலைசெய்கிறான் என்று தெரிந்து கொண்டு , அந்தச் சுழலுக்குப் பழகிக் கொள்ள "சாராயம்"  வாங்கி வந்து கொடுக்கும் போது ,வேண்டாம் என்று தடுக்க நினைக்கும் அனுமந்தையாவால் , அது முடியாமல் போய்விடும் போது  பரிதாபமாக இருக்கிறது.

தனக்கு பசித்த பொழுதெல்லாம் காசு வாங்காமல் உணவளித்த ஆப்பக்காரக்கிழவி இறந்தபிறகு அனுமந்தையாவிற்கு கழிவிரக்கம் ஏற்படுவதும்  , அவளுக்கு கொள்ளி வைப்பதும் , பின்பு அது சனிக்கிழமை என்று தெரிந்து கொண்டு , " சனிப்பொணம் தனியாகப் போகாது " என்ற மூட நம்பிக்கையை மனதிற் கொண்டு பயந்து சாவதும் , அதன் மூலம் நோய்வாய் படுவதும் பாமர மக்களின் உளவியல் சார்ந்த குறியீடாக பதிவு செய்துள்ளார் நாவலாசிரியர்.   


அனுமந்தையாவின் மனைவி கொண்டம்மா,  இந்த நாவலின் அற்புதமான பாத்திரபடைப்பு. வெட்டியான் சுடலையை திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டு அனுமந்தையாவை திருமணம் செய்து கொள்வதும் , தன் குடும்பத்திற்காக தன்னையே சிதைத்துக் கொள்வதும் , தள்ளாத வறுமை நிலையிலும் குப்பைத் தொட்டியில் கிடந்த அனாதைக் குழந்தை லட்சுமியை தனது முத்த மகளாக எடுத்து வளர்ப்பதும் , பரிசுத்தமான அன்பு என்பது ஏழைகளிடம் தான் அதிகம் இருக்கிறது என்பதை பறை முழங்குகிறது.

அதேபோல் , வெட்டியானாக வரும்  சுடலை மனதில் உயர்ந்து நிற்கிறான். தொழிலின் மீதான அவனது நேர்த்தி , அர்ப்பணிப்பு , பிணம் சுட வருபவர்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு தொல்லை கொடுக்காமல் உதவுவது போன்ற மனிதத்துவத்தை அற்புதமாக வெளிக்கொணருகிறான். சுடுகாட்டில் பிணம் சுடும் வேலைக்கு கூட பினாமிகள் இருப்பதும் , அவர்களுக்கும் சுடலை பங்கு கொடுக்க வேண்டியதிருப்பதும் ,வெட்டியான் வேலையில் கூட ஊழல் மலிந்திருப்பதை அறிவழகன் மிகவும் நுட்பமாக பதிவு செய்திருக்கிறார்.  கொண்டம்மா தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்ட்தால்  பைத்தியமாகிப் போன  சுடலை,   பின்னர் நலமடைந்து தொழிலுக்கு திரும்பி,  கிடைத்த வாழ்க்கையை திருப்தியாக வாழ்வதும் , அனுமந்தையாவை தன்னை வென்றெடுத்த ஒரு போட்டியாளனாக கருதாமல் அவனுடன் இயல்பாக பழகும் விதமும் அற்புதமானது. மனதிற்கு நிறைவைத்  தருகிறது. சாதாரண மக்களுக்குத் தான் இத்தகைய வஞ்சனையற்ற மனம் இருக்கும் என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறது. ஒரு வெட்டியானின் வாழ்க்கையை இதைவிட யாரும் அழகாக கூறவில்லை என்றே கருதுகிறேன்.


அனுமந்தையாவின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வரும் உயர் அதிகாரி குமாரசாமி , தனது பால்ய நண்பன் ராசப்பன் தான் அனுமந்தையா என்று தெரிந்து கொண்டு , அவன் மீது அதே நட்ப்பை வெளிப்படுத்தி  அரவணைக்கும் போது மனம் நெகிழ்ந்து போகிறது.  அனுமந்தையா தனது நண்பரிடம் மகன் சீனய்யாவிற்கு தோட்டி வேலை கொடுக்கும் படி கோரிக்கை வைக்கிறான். அவரும் அந்த வேலையைக் கொடுக்கிறார்; ஆனால் அதுவே சீனய்யாவின் மரணத்திற்கும் காரணமாகி விடுகிறது. ஒரு மலக்குழியையை சுத்தம் செய்யும் போது சீனய்யா விஷவாயுவினால் தீ விபத்து ஏற்பட்டு இறக்கிறான். இறுதியில் , அனுமந்தையாவின்  வாழ்க்கையில் சோகமே மிஞ்சுகிறது.


அறிவழகன் இந்த நாவலின் மூலம் மிக அற்புதமான மனிதர்களை அடையாளம் காட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் , அந்தோணி , ஐசக் என்று கிறித்துவனாக மாறினாலும் , யாகூப் என்று இஸ்லாமியனாக மதம் மாறினாலும் அவர்களை இந்த சமூகம் தோட்டியாகவே பார்க்கும் என்ற உண்மையையும் வெளிப்படுத்துகிறார்.


அவர் இந்த நூலின் முன்னுரையில், “தங்களைப் பற்றியே உணராமல் இச்சமுதாயத்திற்காக சேவை செய்யும் இவர்களது வாழ்க்கை யாரையும் பிரமிக்க வைப்பது. உடலால் தூய்மையற்றவர்களாகயினும் உள்ளத்தால் கள்ளங் கபடமற்ற தூய்மையானவர்கள். இழி நோக்கம் அறியாதவர்கள் . குடும்பத்தினர்களுக்குள்ளேயும் குரோதம் பாராட்டத் தெரியாதவர்கள் . இச்சமுதாயத்திற்காக செருப்பினும் இழிவாய் சேவை செய்யக் கடமைப் பட்டவர்கள் எனும் மனோநிலையில் இயல்பாகவே தங்களைத் தியாகித்துக் கொண்டவர்கள் . சாதி, சமய, இணைப் பாகுபாடின்றி அனைவருக்காகவும் தங்களை அர்பணித்துக் கொண்டவர்களாததால் மற்ற சாதியினரினும் உயர்ந்தவர்கள் " என்று மிக அருமையாக குறிப்பிட்டுள்ளார்.


நான் இந்த "கழிசடை"யை  தமிழில் வெளி வந்த நூறு சிறந்த நாவலுக்குள் ஒன்றாக கருதுகிறேன். ஆனாலும் , துப்பரவுத் தொழிலாளிகள் சுரண்டப்படுவதையும் , ஒடுக்கப்படுவதையும் பற்றித் தான் ந்த நாவல் பேசுகிறதேயொழிய , அடக்குமுறைக்கு எதிரான அவர்களின் எழுச்சியையும் , தேவையையும்  முன்னிறுத்தவில்லை என்ற குறைபாட்டையும் காண்கிறேன். அந்த குறைபாட்டை தகழியின் " தோட்டியின் மகன் " என்ற மலையாள   நாவல் நிறைவு செய்கிறது.

இந்த நாவலை வாசித்து முடிக்கும் வரை அனுமந்தையாவுடன்  நானும் வாழ்ந்தேன் என்பதையும்  , அவன் இறங்கிய மலக்குழிகள் மற்றும் சாக்கடைக்குள் நானும் நுழைந்து வேலை செய்து வெளியேறிய  உணர்வும் எனக்கு ஏற்பட்டது என்பதை மறக்காமல் குறிப்பிட்டுத் தான் ஆகவேண்டும். "கழிசடை " ஒரு அற்புதமான படைப்பு.

சு.கருப்பையா