Saturday 22 April 2017

ஒரு கூர்வாளின் நிழலில்

ஒரு கூர்வாளின் நிழலில்
 (தமிழீழப் போராளி தமிழினியின் தன் வரலாறு)

எழுதியவர்: தமிழினி ( 23-04-1972 முதல் 18-10-2015)
பதிப்பகம்: காலச்சுவடு.
பக்கங்கள்: 271
விலை:Rs.145/-


விடுதலைப்புலிகள்  அமைப்பின் மகளிர் படைப் பிரிவின் மகத்தான போராளியாகவும்  , அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளராவும்  இருந்தவர் தமிழினி . இறுதிக் கட்டப்போரின் போது இலங்கை இராணுவத்திடம் சரண் அடைந்தவர். இவரின் தன் வரலாறான இந்தப்புத்தகம் விடுதலைப்புலிகளின் பலத்தையும் , பலவீனத்தையும் , ஏன் தவறுகளையும் பேசுகிறது.


இலங்கையில் , தமிழினப் படுகொலை நடந்தேறி ஏறத்தாழ எட்டு ஆண்டுகள் உருண்டோடி மறைந்துவிட்டன ( மே16-18, 2009). என் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட இத்துயரைச் சம்பவத்தினால்,  குற்றமனப்பான்மை மேலோங்கி மனதிற்குள்ளேயே அழுதது உண்டு. தனது தொப்பூள் கொடி உறவுகள் முள்ளிவாய்க்காலில் அநியாயமாக கொல்லப்பட்ட  பொழுது , எதுவும் செய்ய முடியாத  கையாலாகாத கோழையாக இருந்தவிட்ட அவமானம்  என் மனதை அரித்துக் கொண்டே இருக்கிறது.

மே 2009 இல் தமிழ் மக்களும் விடுதலைப்புலிகளும்  , முள்ளிவாய்க்காலில் கூண்டோடு அழிக்கப்பட்ட சம்பவம் ஒரு வரலாற்றுத் துயரம். இலங்கை அதிபர் பாசிச இராஜபக்சேவின் இந்த தமிழ் இனப்படுகொலை , ஜெர்மனியின் ஹிட்லர்யூத இன மக்களுக்கு எதிராக நிகழ்த்திய படுகொலைக்கு சமமானது.


ஆனால் , எப்போது முன்னாள் பாரதப் பிரதமர் ராஜிவ் காந்தி விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டாரோ அப்போதே தமிழீழ விடுதலைப் போர் தோல்வியில் முடியும் என்பது
எனக்குப் புரிந்து விட்டது. ராஜிவ் காந்தியின் கொலைக்குப் பிறகு , அதற்கு பழி வாங்கும் விதமாக இந்திய உளவுத் துறையினால் சரியாகத் திட்டமிடப்பட்டு , புலிகளுக்கு இடையே வடக்கு,கிழக்கு என்று பிரிவினையை உருவாக்கி , புலிகளின் பலம் படிப்படியாக குறைக்கப்பட்டு , இறுதியில் வீழ்த்தப்பட்டு விட்டார்கள் என்றே கருதுகிறேன்.


தமிழினி  இந்த நூலில் விடுதலைப்புலிகளின்  வீரப்போராட்டத்தையும் ,தோல்வியையும் யதார்த்தமாக பதிவு செய்திருக்கிறார். மனதிற்கு இரணவேதனையைத் தரும் இந்தப் புத்தகத்தை மிகவும் துன்பத்துடன் தான் படித்து முடித்தேன். மனம் சுமந்த வேதனையால் பலப்பக்கங்கள் நகர மறுத்தன. பல உண்மைகள் சுடுகிறது. குறிப்பாக , தமிழீழம் மலராமல் போனதற்கான முக்கிய காரணமாக "கருணாவின் " பிரிவு அமைந்து விட்டது என்றும், அவர்களுக்கிடையே ஏற்பட்ட சகோதரச் சண்டையே விடுதலைப்புலிகளை பலவீனப்படுத்தி தோல்விக்கு வித்திட்டது என்றும் குறிப்பிடுகிறார் தமிழினி.


வடக்கு, கிழக்கு என்று பிராந்திய பிரிவினையால்  தான் புலிகளுக்கிடையே பிளவு ஏற்பட்டது என்று  தமிழினி  பதிவு செய்திருந்தாலும் , அது சாதீய வேறுபாடுகளின் காரணமாகத் தான் எழுந்திருக்க முடியும் என்று நம்ப வாய்ப்பு உள்ளதுஏனென்றால் , விடுதலைப்புலிகளின் அமைப்பிற்கு ஆணிவேராக இருந்தவர்கள் தலித் இனத்தைச் சார்ந்த போராளிகள்  என்று குறிப்பிட்ட கட்டுரையை சில வருடங்களுக்கு முன்பு நான் வாசித்திருக்கிறேன். அதனால் RAW INDIA , இலகுவாக சாதி பிரச்சனைத் தூண்டி தான் புலிகளின் ஒற்றுமையைக் குலைத்திருப்பார்கள் என்று நம்ப இடமுண்டு.


அடுத்து, இறந்து போன போராளிகளின் இழப்பைச் சரிக்கட்ட வலுக்கட்டாயமாக  அப்பாவி மக்களையும் , சிறுவர்களையும் மற்றும் பயிற்சி இல்லாதவர்களையும் படைகளில் சேர்த்ததும், கட்டாய  வரி வசூல் செய்ததும் புலிகளின் மீது மக்களுக்கு  வெறுப்பு ஏற்படச்செய்தது  என்று குறிப்பிடுகிறார். இறுதிப்போரில் மக்களை கேடயமாக பயன்படுத்திய புலிகள்,  அவர்களை அழிவிற்கு அழைத்துச் சென்றதை கனத்த இதயத்தோடு பதிவு செய்திருக்கிறார்.


தன் கண் முன்னாலேயே செத்து விழுந்த  சக போராளிகளையும் , சொந்தங்களையும் பார்த்து திகைத்துப் போய் நின்றிந்த தமிழினியை நினைக்கும் போது கடும் வேதனை எழுகிறது.  தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொள்வதா ? அல்லது சயனைடு சாப்பிட்டு சாவதா ? என்று குழம்பித் தவித்து , இறுதியில் மக்களோடு மக்களாகத் தள்ளப்பட்டு இலங்கை   இராணுவத்திடன் சரணடைந்த தமிழினியின் மனப்போராட்டம் கண்ணீரை வரவழைக்கும்.


மிகவும் “கட்டமைப்போடு உருவாக்கப்பட்ட  விடுதலை இயக்கம் என்று உலகம்  பிரமிப்போடு பார்த்த விடுதலைப்புலிகளின்  போராட்டம் தோல்வியில் முடிந்த இந்த சோக வரலாறு காலத்திற்கும் பேசப்படும்.  தமிழினி இந்த நூலை எழுதி முடித்தவுடன் 18-10-2015 இல் புற்று நோயின் காரணமாக இறந்து விட்டார் என்று அவரது கணவர் ஜெயகுமரன் குறிப்பிடுகிறார். ஒரு ஆரோக்கியமான போராளி எப்படி  இவ்வளவு விரைவாக இறக்க நேரிடும் ?, என்ற சந்தேகம் எனக்கு எழுந்தது.


ஆனால் .....


தன்னிடம் சரணடைந்த ஆயிரக்கணக்கான புலிகளை , புனர்வாழ்வு மையத்திற்கு அனுப்பி அங்கே தடுப்பூசி என்ற பெயரில் புற்று நோய்க்கிருமிகளை,   இலங்கை இராணுவம் செலுத்தியிருக்கிறது என்ற உண்மையை இரண்டு தினங்களுக்கு முன்பு தான் தெரிந்து கொண்டேன் .  வஞ்சனையும் , கபடமும் கொண்ட இந்த  இரக்கமற்ற  காட்டுமிராண்டிகள் வாழும் இலங்கை உலக  மக்களால் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் அல்லது அழிக்கப்பட வேண்டும் என்று சபிப்பதைத் தவிர  இந்த சாமானியனால் என்ன செய்து விட முடியும்.

இன்று அந்த வீரப் போராளியின் பிறந்தநாள் ! அவரை நினைவு கூறுவதோடு .... அவர்களை நிராதரவாக தவிக்க விட்ட தமிழர்களின் நானும் ஒருவன் என்ற அடிப்படையில் மன்னிப்பும் கோருகிறேன்.



சு.கருப்பையா
23-04-2017