Tuesday 27 August 2013

விருட்சத் திருவிழா


தோழர்களே!

விருட்சத் திருவிழா சென்று வந்த தோழர்.பாலா தமது  அனுபவங்களை " தென்திசை" வலைப்பூவில் பதிவு செய்துள்ளார். வாசித்து மகிழ இங்கே சொடுக்கவும்>>> THENTHISAI



24/08/2013 : மதுரை - கீழக்குயில்குடியில் வருகிற ஞாயிறு (25/08/2013) அன்று விருட்சத்திருவிழா நடைபெற உள்ளது. விருப்பமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.






Wednesday 21 August 2013

நிழல்தரா மரம்-நாவல்







நிழல்தரா மரம்
அருணன்
வசந்தம் வெளியீட்டகம்
நவம்பர் 2003
பக்கம் 320; விலை ரூ.100

இந்த நாவலை  வாசித்திருந்த என் நண்பர்,  நூலாசிரியர் தோழர் அருணன் வரலாற்றுக்கு முரணாக எழுதி இருப்பதாக  மிகவும் வருத்தப்பட்டார். நானும் இந்த நூலை வாசிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களாக காத்திருந்தேன். ஆர்வம் மேலோங்க எனக்கு அந்த நூலை வாசிப்பதற்கு கொடுக்குமாறு கேட்ட பொழுது , அவரிடம் அந்த நூல் இல்லை என்றும், நூலகத்தில் திரும்பச் செலுத்தி விட்டதாக கூறிவிட்டார்.  வழக்கம்போல் நண்பர் புத்தகத்தூதரை **(சடகோபன்) அணுகி ,  எனக்கு " நிழல்தரா மரம்" உடனே வேண்டும் என்று பொறுப்பை ஒப்படைத்து விட்டேன்.  அவர் மதுரையில் உள்ள அத்தனை புத்தக நிலையங்களை சலித்து எடுத்து ஒரு பிரதியை கொண்டு வந்துவிட்டார்.

நாவலை நான் வாசித்து  முடித்தபொழுது காலை 0300 மணி.   முப்பத்தி ஆறு  ஆண்டுகளுக்கு முன்பு கல்கியின் "சிவகாமியின் சபதம்"  என்ற நாவலைத் தான் இப்படி வாசித்திருந்தேன். அடுத்த நாள் முழுவதும் என் மனதில் வஞ்சகத்தால் உயிர் இழந்த 8000 சமணர்கள் தான் உலா வந்தனர். அவர்களை கழுவேற்றிய பாண்டிய மன்னன் அரிகேசரி மாறவர்மன் என்ற கூன் பாண்டியனை என்னால் மன்னிக்க முடியவில்லை. அதற்கு உடந்தையாக இருந்த அமைச்சர்  குலச்சிறையார் மற்றும் திருஞானசம்பந்தர் ஆகியோர்கள் அந்தக் கொலைக்கு உடைந்தையாக இருந்தவர்களாகவே எனக்குத் தென்பட்டார்கள்.

நாவலில் அனல் வாதத்திலும், புனல் வாதத்திலும் நேர்மையாக வாதிட்ட சமணர்கள் தோல்வி அடைந்த வரலாற்றை  நம்பும்படியாக  எழுதி இருந்தார் அருணன். இருந்தாலும் , சமணர்களை கொன்றதற்கு பழி வாங்கவே திருஞானசம்பந்தர், அவரின் திருமணத்தின் போது, சமணர்களால் உயிரோடு கொளுத்தப்பட்டதாக எழுதி இருந்தது சரியா? என்பதை உறுதி செய்ய வேண்டும் என்று எண்ணினேன். இதற்கான விடையும்  மதுரைஆதினத்தின் வலைத் தலத்தில் கிடைத்தது.  இதோ அந்த செய்தி.





ஆக, திருஞான சம்பந்தர் திருமணத்தின் போது மனைவியுடன் " பெருஞ் ஜோதியில் "  கலந்துவிட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்  தான் , சமணர்கள் மூட்டிய தீயாக அருணன் பதிவு செய்துள்ளார் . அவ்வளவே!.

இந்த நாவல்  , சைவச் சித்தாந்தத்தில்  ஊறித் திளைத்து போன என் நண்பருக்கு பிடிக்காமல் போனதில்  உண்மையிலே ஆச்சரியமில்லை தான்இந்த நூல் அருணன் கூறியது போல்  கழு மரத்தில் சமணர்கள் சிந்திய ரத்தத்தில் முகிழ்த்த நாவல் தான். அதுமட்டுமல்ல, மதுரையின் மறக்க முடியாத " இரத்தச் சுவடும் கூட". 

சு.கருப்பையா. 
www.manthanalam@gmail.com 

** 
புத்தகதூதன்
( புத்தகக்கடை : 10% தள்ளுபடி உண்டு )
14, ஆத்திகுளம் சாலை
செல்வம் ஸ்டோர் எதிரில்
ரிசர்வ் லைன், மதுரை-14
MOB: +919443362300

Saturday 17 August 2013

மதுரையில் 8 வது புத்தகத் திருவிழா

தோழர்களே!

மதுரை தமுக்கம் மைதானத்தில், புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள்  சார்பாக நடைபெறும்  8 வது புத்தகத் திருவிழா வருகிற 30/08/2013 முதல் 09/09/2013 வரை நடைபெற இருக்கிறது. வழக்கம் போல் 10% தள்ளுபடி உண்டு.

அனைவரும் குடும்பத்துடன் சென்று நல்ல நூல்களை வாங்கி பயன் படுத்துமாறு தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.  நூல்கள்,  நல்ல நண்பர்கள் என்பதில் எனக்கு எப்போதும் சந்தேகம் இருந்ததில்லை. வாழ்க்கையில் வெற்றிகள் பல பெற்றவர்களுக்கும் , நல்ல செழுமையான வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்களுக்கும் நூல்கள் மூலம் பெற்ற அறிவும், அனுபவமும் தான் கை கொடுத்துள்ளன என்பது மறுக்க முடியாத உண்மை. 

உங்கள் குழந்தைகளுக்கு பள்ளிப் பாடங்களோடு நின்று விடாமல் சமூகம் சார்ந்த விசயங்களில் தெளிவு பெற மற்ற நூல்களும் அவசியம் என்பதை உணர்த்துங்கள். மேற்க்கத்திய கலாசாரத்தில் மூழ்கி சீரழிய துவங்கி இருக்கும் இந்திய சமூகம் மீண்டெழுந்து வர நமது சமூக வரலாறு புதுப்பிக்க வேண்டிய தருணம் இது என்று நான் கருதுகிறேன்.  வாசிப்போர்களத்தின் உறுப்பினர்களும் , மற்ற தோழர்களும்  தங்களுக்குப் பிடித்த நல்ல  நூல்களை ( email: manithanalam@gmail.com)  பரிந்துரை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

சு,கருப்பையா , ஒருங்கிணைப்பாளர்


Sunday 4 August 2013

முத்திரைக் கவிதைகள்

13/07/2013 அன்று வாசிப்போர் களம் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட “முத்திரைக் கவிதைகள்” புத்தகத்தைப் பற்றிய வாசக பார்வை.

நல்ல வாசிப்பனுபவம் உள்ளவர்களில் கூட பலர் கவிதை என்றால் கொஞ்சம் தூரம் நகர்ந்து கொள்ளும் நிலை தான் இன்றும் இருக்கிறது. அதுவும் கவிதை எழுதுபவனையோ இல்லை கவிதையை சிலாகிப்பவனையோ இந்த சமுதாயம் பார்க்கும் பார்வை கொஞ்சம் “டெரராககத்”தான் இருக்கிறது. உரைநடையைக் காட்டிலும் ஒரு செய்யுளைப் புரிந்து கொள்ள கொஞ்சம் உழைப்பு அதிகமாகவே தேவைப்படுகிறது. அதனாலேயே பெரும்பான்மையினர் கவிதை வாசிப்பின் பக்கம் மழைக்கும் ஒதுங்குவதில்லை. ஆனால் இந்த பஞ்சமெல்லாம் கவிதையை வாசிப்பதற்குத்தான். ஒருவன் பள்ளி வீட்டுப்பாடம் தவிர்த்து பேனாவும் பேப்பரும் எடுக்கிறான் என்றால் சர்வ நிச்சயமாக சொல்லி விடலாம், அவன் கவிதை தான் எழுத முயல்கிறான் என்று. ஆம் எப்படிப் பார்த்தாலும் இன்று கவிதை வாசகப்பரப்பை விட கவிஞர்கள் பரப்பு தான் அதிகமாக இருக்கிறது. அதுவும் புதுக்கவிதைகளின் வரவுக்குப் பின் மடக்கிப் போட்டு எழுதுவது எல்லாமே கவிதை தான்.

இப்படியான சிக்கல்கள் எல்லாம் இல்லாமல், எளிமையை அடையாளமாய்க் கொண்ட உண்மையான 75 கவிதைகளின் தொகுப்பு இந்த “முத்திரைக்கவிதைகள்”. ஆனந்த விகடனின் பவளவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2001ம் ஆண்டு நடந்த கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற 75 கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது இந்நூல். கவிதைகள் வெளிவந்து சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின் புத்தகமாக தொகுக்கப்பட்டு, குறுகிய காலத்திலேயே இரண்டாம் பதிப்பும் கண்டிருக்கிறது. இந்த முத்திரைக் கவிதைகளின் வயது, இத்தனை ஆண்டுகள் தாண்டியும் அவை இளமையாய் இருப்பதற்கான காரணம் அவற்றில் உள்ள நிதர்சனம். அழகியல் தோரணமாக இல்லாமல், வாழ்வின் நுட்பங்களையும், அபத்தங்களையும், தரிசனத்தையும், ஆச்சர்யங்களையும் உண்மையாக பதிவு செய்திருப்பதாலயே இந்தக்கவிதைகள் சாகாவரம் பெற்றிருக்கின்றன.

நல்ல வாசிப்பனுபவம் விரும்புவோர் முத்திரைக்கவிதைகளை நிச்சயம் வாசிக்கலாம்.

விவரம்:
முத்திரைக் கவிதைகள்
விகடம் பிரசுரம்
விலை: ரூ 70
பக்கம்: 88

-வி.பாலகுமார்.