Tuesday 9 June 2020

சூல்


சூல்

எழுத்தாளர் : சோ.தர்மன்
பதிப்பகம் : அடையாளம்,
விலை: ரூ.380/-
பக்கங்கள் :500
விருது : சாகித்ய அகாடமி பரிசு 2019-2020





இந்த நாவல் எட்டையபுரம் ஜமீனைச் சேர்ந்த " உருளைக்குடி " கிராமத்தின் கதை. உருளைக்குடியில்  பள்ளர், பறையர் , சக்கிலியர் , பிள்ளை , ஆசாரி , ரெட்டியார்  மற்றும்  தேவர் சாதியை சேர்ந்த அனைவரும்  அவரவர்களுக்கு உரிய தொழிலை பார்த்துக் கொண்டு அமைதியாக வாழ்கிறார்கள் அக்கிராமத்தின் ஆணிவேராக உருளைக்குடி கண்மாய் இருக்கிறது.  அய்யனார் , மாடசாமி,  மற்றும் குரவன் சாமி போன்ற கிராம  கடவுள்கள் அந்த கண்மாயை மட்டுமல்ல அந்தக் அக்கிராமத்தையும்  காக்கும் கடவுள்கள்.

மிகப்பெரிய கண்மாயை பராமரிப்பதும் , பாசனத்திற்கு நீர் திறந்து விடுவதும்  மடைக்குடும்பனுக்கும் , நீர்பாய்ச்சி முத்துக்கருப்பனுக்கும் உரிய பணியாக இருக்கிறது.

மகாலிங்கம் பிள்ளை வெற்றிலை பயிரிடும் விவசாயி. உருளைக்குடியில் விளையும் வெற்றிலைக்கு அக்காலத்தில்  தமிழகம் முழுவதும் மிகவும் செல்வாக்கு இருந்துள்ளது.

நாவல்,  இப்படி  உருளைக்குடியில் ஆரம்பித்து  அதனைச் சுற்றியுள்ள பனைப்பட்டி, ஓட்டப்பிடாரம் , ஆறுமுக மங்கலம், சொக்கலிங்கபுரம் , கடலையூர்,  பொத்தையம்பட்டி ,  இருக்கன்குடி , எட்டையபுரம் மற்றும் வேம்பார்  உள்ளிட்ட பல கிராம மக்களின் எளிமையான ஆனால் உயிர்துடிப்பான வாழ்க்கையை பிரதிபலிக்கிறது.

உருளைக்குடியில் வாழும் மடைக்குடும்பன் , நீர்பாய்ச்சியோடு சேர்த்து ,  கொப்புளாயி, நாங்கிரியான் , குப்பாண்டி , எலியன், மகாலிங்கம் பிள்ளை, தொத்தல் பகடை   மற்றும் பிச்சைஆசாரி போன்றவர்களின்  பாத்திரப்படைப்பு நம்மை மிகவும் ஈர்த்துவிடுகிறது.  அதேபோல் சொக்கலிங்கபுரம் சோலைக்குடும்பன் மகன் சித்தாண்டிக்கும் , மாயாண்டிகுடும்பன் மகன் இருளப்பனுக்கும் ஏற்படும்  பகையும் , அதனால் சொக்கலிங்கபுரம் கண்மாய் உடைப்பும் கிராமத்து பகையின் விளைவை படம் பிடித்துக் காட்டுகிறது.

எட்டையபுரம் பாளையக்காரர் எட்டப்பருக்கும்  , பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்மனுக்கும் இடையில் இருக்கும் பகை மேலோட்டமாக சொல்லப்பட்டுள்ளது. கட்டபொம்மன் , ஆங்கிலேயர்களுடான போரில் தோல்வியுற்று  கோல்வார்பட்டி ஜமீனுக்கு தப்பி வரும் போது ,  அவரது குதிரைக்கு லாடம் கழன்று  காயம் ஏற்பட அவர் உருளைக்குடியில் ஒரு நாள் மறைந்திருக்கும் நிலை ஏற்படுகிறது .  தனக்கு உதவிய எலியனுக்கும், பிச்சை ஆசாரிக்கும்  கோல்வார்பட்டி ஜமீன் மூலமாக கட்டபொம்மன் தங்க நகைகளை பரிசளிப்பதும் , அதை அவர்கள் வெள்ளையருக்கும் , எட்டப்பருக்கும் பயந்து அவற்றை பயன்படுத்தாமலே இறந்து போவதும் அன்றைய மக்களின் இழிநிலையை தெரிவிக்கிறது.

அதேபோல் மலையாள மாந்தரீகன் குஞ்ஞான், வேம்பாரில் மீனவர்களுக்கு தொல்லை தந்து கொண்டிருக்கும்  “அனுமன் முனி” யை சங்குக்குள் அடக்கி கொண்டு திருவனந்தபுரம் திரும்பும் வழியில் , அந்த அனுமன் முனி எட்டயபுரத்தில் உள்ள குளத்திற்குள் தாவி தப்பி அரண்மனைக்குள் புகுந்து கொள்வதும் , அதை அடக்க அருங்குளம் கிராமத்தில் இருக்கும் " இருளப்பசாமியை " புடிமண் எடுத்து ஏட்டையாபுரம் கோட்டைக்குள் கொண்டு வரும் நிகழ்வு அன்றைய மக்களின் மூடநம்பிக்கையை அப்பட்டமாக படம் பிடித்துக்காட்டுகிறது.

 இறுதியில், உருளைக்குடி கிராமத்திற்குள் கிறித்துவம் புகுந்து ஏசுவிற்கு கோவில் எழுப்பப்படுகிறது ; அதே போல் பள்ளிக்கூடமும் வருகிறது. பின்னர் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கிறது , அதனைத் தொடர்ந்து சுச்சி நாயக்கர் (பெரியார் ) மூலமாக நாத்திகமும் வருகிறது. நிறைஜூலியாக இருந்து உருளைக்குடியை வாழவைத்த  அந்தக் கண்மாய் வற்றிவிடுகிறது . அதனை புதிய அரசின் மக்கள் பிரதிநிதிகள் எடுத்துக் கொள்கிறார்கள்.  உருளைக்குடி மக்கள்  வாழ்க்கை முற்றிலும் மாறிப்போகிறது என்று நாவல் முடிகிறது.

நாவலின் சிறப்பு:

இந்த நாவலில் வரும் எல்லா கதைமாந்தர்களும் மிகவும் உயிர்ப்புடனும் , யதார்த்தமாகவும் இருக்கிறார்கள். எளிய, வெள்ளேந்தியான கிராமத்து வாழ்க்கையை இம்மி பிசகாமல் அப்படியே கொடுத்திருக்கிறார் சோ. தருமன். உதாரணத்திற்கு சிலரைப் பார்க்கலாம்;

கொப்புளாயி தான் இந்த நாவலின் மிகச் சிறந்த பாத்திரப்படைப்பு. மலடியாகப்போன வாழ்க்கைக்கு அவள் ஒரு  புதிய வடிவம் கொடுக்கிறாள். தனது எருமை மாடுகளை குழந்தைகளாக பாவிப்பதும் , அவைகளோடு பேசி மகிழ்வதும் , அவை தரும்  பால், தயிர் போன்றவற்றை கிராமத்து மக்கள் அனைவருக்கும் இலவசமாக தருவதும் , காட்டுப்பூச்சி என்ற அனாதையை மகனாக பாவித்து வளர்ப்பதும் இந்த சமூகத்திற்கு தேவையான அடையாளத்தைக் காட்டுகிறது.   இருக்கங்குடி மாரியம்மன் கோவிலுக்கு போகும்  பக்தர்களுக்கு நந்தவன தோப்பு அமைத்துக் கொடுப்பதும் , வாழ்நாள் முழுவதும் அவர்களுக்கு மோர் கொடுத்து மகிழ்ந்து வாழ்ந்துவிட்டு மரணித்துப் போகிறாள். இந்த பாத்திரம் மானிடத்தின் அழகியலை மனதிற்கு புகுத்துகிறது. 

நாங்கிரியான் பகடை ஏட்டையாபுரம் அரண்மனையில் மாடுகளை மேய்த்து வருகிறான். கொழுகொழுவென்று இருக்கும் மாடுகளை சாப்பிடுவதற்காக அவற்றின் உறுப்புகளை இரகசியமாக சிதைத்து சாகடித்து பின்னர் தான் சாப்பிடுவதும் , குற்ற உணர்வில் குற்ற உணர்வினால் நோய் ஏற்பட்டு  ஊனமுற்றவனாகி  திருந்தி அழுவதும் அவன் மீது நமக்கு இரக்கத்தை ஏற்படுத்துகிறது. அவன்  மகள் மாதாயி திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் ஆகிவிடுகிறாள். ஆனால் கிராம பஞ்சாயத்தில் அவன் காதலன் கருப்பன் அதை  மறுப்பதும் ,  நாங்கிரியான் அக்குழந்தையை தனது பேரக்குழந்தையாக வளர்த்துக் கொள்கிறேன் என்று ஏற்றுக்கொள்ளும் போது மிக உயர்ந்த இடத்திற்குப் போய்விடுகிறான். வெம்பி வாழும் மாதாயி , கருப்பனை உளியால் தலையை வெட்டி கொன்று விட்டு , தனது வயிற்றைக் கிழித்து அந்த நிறைமாத குழந்தையை வெளியே எடுத்து அவன் மேல் வீசிவிட்டு மடிந்து போகிறாள். அவளின் அறசீற்றத்தின் கோபம் கண்டு   நாம் திகைத்துப் போகிறோம்.

குப்பாண்டி ,  அந்தக்கிராமத்தில்  ஒரு சித்தனாக வாழ்வதும் , உயிருடன் இருக்கும் போதே சமாதி கட்டிக்கொண்டு வாழ்ந்து , இறுதியில் அதில் அடங்கிப் போவதும் ஒரு இல்லறத்துறவியின் புனிதமான வாழ்க்கையை பிரதிபலிக்கிறது .

மகாலிங்கம் பிள்ளை,  வெற்றிலை கொடிக்கால் வளர்க்க , அதன் சூட்சுமத்தை பெரிய நாடாரிடம் கற்றுக்கொண்டு உருளைக்குடியில் அதை செயல் படுத்தும் போது மரணித்துப் போகிறார். அவரின் கனவு நிறைவேறாமல் போவது பரிதாபமாக இருக்கிறது.

எலியனும், பிச்சைஆசாரியும்,  நாவலின் பரிதாபத்திற்கு உரிய பாத்திரங்களாக வளம் வருகிறார்கள். கட்டபொம்மன் தன்னை காப்பாற்றியதற்காக அவர்களுக்கு பரிசளித்த தங்க நகைகளை அனுபவிக்க முடியாமல் , வீட்டுக்குள் புதைத்து வைத்துக் கொண்டு பயந்து வாழ்வது பரிதாபமாக இருக்கிறது. இந்த தங்கப் புதையல்  அவர்களது சந்ததியினருக்கும் கிடைக்காமலே  மர்மமாக காணாமல் போகிவிடுகிறது.

சொக்கலிங்கபுரத்தில் வாழும்  சித்தாண்டி , தனது பங்காளி இருளப்பனை பழிவாங்க நிறை கண்மாயை வெட்டிவிட்டு,  அவன் வயலை அழிப்பதன்மூலம்    , குரோதமும் கிராமவாழ்க்கையின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது  என்பதை பதிவு செய்திருக்கிறார் சோ.தருமன்.

அடுத்து மலையாள மாந்தரீகன் குஞ்ஞான் பாத்திரப்படைப்பு மிகவும் வலிமை வாய்ந்ததாக இருக்கிறது. அவன் அனுமன் முனியை வசப்படுத்துவதும் , அந்த முனியினால் எட்டையாபுரம் அரண்மனைக்குள் குஞ்ஞான் சித்திரவதை அனுபவிப்பதும் , இறுதியில் மரணித்து அரூபவமாக மறைந்து விடுவதாக ஒரு மாயமனிதனாக அவன் வருகிறான். இக்கதை அன்றைய மக்களின் மூட நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறது.

அதே போல் உருளைக்குடி தொத்தல் பகடையின் " கள்ளின்" அனுபவம்,  இச்சியன் கிறித்துவமதத்திற்கு  மாறி ஈசாப்பாக வடிவெடுத்து கோட்டுபோட்டுக் கொண்டு அலைவது, சாயல்குடி அத்தர் விற்கும் யூசுப்பாய் , தற்கொலை செய்து கொள்ளும் அவர் மனைவி தௌலத்பீவி என்று பல மனிதர்களின் அடுக்கடுக்கான  சுவாரசியமான வாழ்க்கையை இந்த நாவல் பேசுகிறது.

சோ. தர்மனின்   மொழி வளம் நாவல் முழுவதும் நன்றாக சிதறி இருக்கிறது . அது மிகவும் அற்புதமாகவும் இரசிக்கும் படியும் உள்ளது. உதாரணத்திற்கு சிலவற்றை பார்க்கலாம்  ;

Ø  கோடை உழவு, நிலம் மணப்பெண்ணாய் கனிந்து கிடக்கும். மழைநீர் தேங்கி மண் மகிர்ந்து உரம் கலந்து விதைப்பதற்குத் தயாராய் இருக்கும்.

Ø  கண்மாய் , கருவுறக் காத்திருக்கும்  புதுப்பெண்ணின் வயிறாய் விரிந்து கிடக்கும்.

Ø  மறஞ்சு இருந்தா தான் யோனி , மறைக்காம இருந்தா ஏணி. ஏணியில் எல்லோரும் ஏறுவான், யோனியில் எல்லோரும் எற மாட்டான்.

Ø  கொப்புளாயி பால் கறப்பதென்பது அவள் லயித்துச் செய்யும் வேலைகளில் ஒன்று. ஒரு வேளை வேறு சுகம் காண்கிறாளோ என்னவோ!

Ø  இருக்கன்குடியில் ஓடும் இரண்டு ஆறுகளிலும் தண்ணீர் மட்டும் ஓடவில்லை.  கொப்புளாயி செய்து வரும் புண்ணியமும் சேர்ந்தே ஓடியது.

Ø  அள்ள அள்ளக் கொறையாது பள்ளனோட  களம், பாங்களத்தை (பாழாப்போன களம்) பாக்காது  பள்ளனோட கண்ணு .

Ø  குற்றம் மனிதர்களால் இயற்றப்பட்ட சட்ட ஒழுங்கு விதிகளை மீறுவது . பாவம், தெய்வங்களாலும் , மத நம்பிக்கைகளாலும் , ஞானிகளாலும் , ஆச்சார ரிஷிகளாலும் போதிக்கப்பட்ட நெறிகளை மீறுவது.

Ø  “மனுஷர்களுக்கு மாதிரியே சாமிகளுக்கும் ஆசாபாசம் இருக்காதா? இப்ப நம்ம ஊரு சாமி காளியம்மா இருக்கு, பக்கத்திலே வைரவ சாமி இருக்கு. அதே மாதிரி வேற ஊரு ஆம்பளைச் சாமி , பொம்பளைச் சாமிக நம்ம ஊரு சாமிகளோட தொடுப்பு வச்சிருக்கும் . நம்ம ஊரு ஆம்பளைச் சாமி , பொம்பளைச் சாமிக வேற ஊரு சாமிகளோட தொடுப்பு வச்சிருக்கும்”.

Ø  மாடு இல்லாதவன் மகாராஜன், பொண்டாட்டி இல்லாதவன் புண்ணியவாளன் என்பது கிராமத்து சொலவாடை.

Ø  உருளைக்குடி ஆட்களின் அத்தனை பேர்களின் வயிறும் ஒரே வயிறாக மாறிப்போனதே கண்மாய்.

Ø  சடசடத்து  விழும் நீர்த்துளிகள் உயிர்ப்பின்  விதைகளாய் பூமியில் விழுந்தன. குஞ்ஞான் கரைந்து உருகிக் கொண்டிருந்தான்.

Ø  கழுகின் மேனியில் ஒட்டிக் கொண்டதை உணர்ந்து கொண்டது புறா.

Ø  “சுடுகாடு பிணம் எரிக்கும், பிணம் புதைக்கும் நிலம் மட்டுமல்ல , பல்வேறுபட்ட புத்தகங்கள் துயிலும் பல அடுக்கு புத்தக அலமாரி . மண்ணும் சாம்பலுமே  அழியாத மைகொண்ட எழுத்துக்கள் . தத்துவம் , விசாரம், வியாக்கியானம் , பொய், சூது , வாது, பணம், பதவி, துரோகம், புரட்டு, ஆட்சி, அதிகாரம், காமம், கதி, சல்லாபம் எல்லாவற்றையும் உள்ளடக்கிய கோடானுகோடி வரலாற்றுப் புத்தகங்கள் துயிலும் இடமே சுடுகாடு”.

மொத்தத்தில் இந்த நாவல் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு உருளைகுடிக் கிராமம் மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில்  வாழ்ந்த மக்களின் உணர்வுகளையும் , வாழ்க்கையையும்  , உள்ளதை உள்ளது போல் கூறுவதாக எழுதப்பட்டுள்ளது .


நாவலின் பலவீனம் :

நாவலில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் சாதியின் பெயருடனே வருவதால் சிலருக்கு இந்நாவல் வெறுப்பைத் தந்து விடும் அபாயம் இருக்கிறது. ஆனால் , கதை நிகழும் காலம் கி.பி. 1790 முதல் 1950 வரை என்பதால்  , அன்றைய மக்கள் சாதீய அடையாளங்களோடு தான் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்பது உண்மை.

மற்றும்  , கட்டபொம்மன் , ஊமைத்துரை  காலத்தில் உருளைக்குடியில் வாழ்ந்த குப்பாண்டி , இந்திய விடுதலைக்கு பின்னர் , அதாவது 1950 க்கு  பிறகு  சமாதி அடைவது சற்று குழப்பத்தைத் தருகிறது. ஒரு மனிதன் இவ்வளவு நாட்கள் உயிர் வாழ்ந்திருக்க முடியுமா?

அதேபோல் கட்டபொம்மன், ஊமைத்துரை பெயரை நாவலில் சரளாக பயன்படுத்திய நாவலாசிரியர் , எட்டையாபுரம் ஜமீனை ஆளும் எட்டப்பர் பெயரை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை என்பது ஆச்சரியமாகவே இருக்கிறது.

அடுத்து நாவலின் இறுதிப்பகுதி சற்று நீளமாக இருப்பதால் அலுப்பு தட்டுகிறது. ஒரு நூறு முதல் நூற்றி அம்பது பக்கங்களைக் குறைத்திருந்தால் நாவல் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும் என்று கருதுகிறேன்.

நாவலின் சாரம்:

இந்த நாவல் இந்திய சுதந்திரத்திற்கு முன்பு வாழ்ந்த உருளைக்குடி மக்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபலிப்பதாக எழுதப்பட்டுள்ளது. அக்கிராமத்தின் விவசாயத்திற்கு ஆணிவேராக இருக்கும் அந்த கண்மாய் சார்ந்தே மக்கள் வாழ்த்து வந்து வந்துள்ளார்கள். அம்மக்களின் உழவுத் தொழில், குடும்பம், சாதீப்பிணைப்பு , ஒற்றுமை , காமம், குரோதம்  மற்றும் சோகம் என்று அனைத்தையும் உள்ளடக்கியதாக உள்ள இந்த நாவல்  பின் நவீனத்துவ இலக்கிய சாயலோடு  இருக்கிறது.  சோ. தர்மன், இந்த நாவலை எழுதியதின் மூலம் அவர் பிறந்த "உருளைக்குடி"  கிராமத்தை பற்றி உலகம் முழுவதும் பேச வைத்திருக்கிறார் என்று நம்புகிறேன். இந்த நாவலுக்கு " சாகித்திய அகாடமி விருது" கொடுத்தது  மிகவும் சரியானதே!. அதற்கான முழுத்  தகுதியும் இந்த நாவலுக்கு உண்டு.


சு.கருப்பையா
மதுரை
+919486102431



Wednesday 3 June 2020

கங்காபுரம்


கங்காபுரம்
(சரித்திர நாவல்)

நூல் ஆசிரியர் : அ. வெண்ணிலா
வெளியீடு : அகநி
பக்கங்கள்: 559
விலை: ரூ . 450/-
பதிப்பு: டிசம்பர் 2018





ராஜராஜ சோழனின் 27 ஆம் ஆட்சி ஆண்டில் , அதாவது கி.பி. 1011 இல் இந்த நாவல் துவங்குகிறது. கி.பி.1044 இல் , இராஜேந்திர சோழனின் 28 ஆம் ஆட்சி ஆண்டில் நாவல் நிறைவடைகிறது.

ஏறத்தாழ 37 ஆண்டு  கால சோழ வரலாற்றை நாவலாக எழுதியிருக்கிறார் அ. வெண்ணிலா. குறிப்பாக,  சோழர்களின் பொற்கால அரசன் என்று அழைக்கப்படும் இராஜராஜ சோழனும், அவனது மகனும் , இந்திய வரலாற்றின் ஆகச் சிறந்த மாவீரனுமான இராஜேந்திர சோழன் ஆகிய இருவரின் மரணமும் இந்த நாவலில் நிகழ்கிறது .

உண்மையிலேயே , வலுவான ஒரு கதை களத்தை தமது நாவலுக்கான களமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் . குறிப்பாக , மாமன்னன் இராஜராஜனின் மரணமும் , இராஜேந்திர சோழனின் தலைநகர் மாற்றமும் பல்வேறு ஊகங்களை உள்ளடக்கிய வரலாற்றின் பக்கங்களாக இது வரை இருந்து வருகிறது.

அதே போல் , பல போர்களில் வெற்றி பெற்ற மாபெரும் வீரனான இராஜேந்திரனுக்கு ,அவனது 50 வது வயது வரை  இளவரசுபட்டம் ஏன்  சூட்டப்படவில்லை?  என்ற கேள்வியும் வரலாற்றில் தொக்கி நின்றுள்ளது. இதற்கான விடைகளை உளவியல் ரீதியாக இந்த நாவலில் பேசி இருக்கிறார் அ. வெண்ணிலா. உண்மையில் நாவல்  சுவாரசியமாகவே இருக்கிறது.

தஞ்சை பெரிய கோவிலிலும் , தில்லை நடராஜர் கோவிலிலும் பார்ப்பன புரோகிதர்களுக்கு இடம் கொடுத்து வரலாற்றில் பெரும் பிழையை செய்தவன் இராஜராஜன் என்று வரலாறு குறிப்பிடுகிறது. அதே போல் தேவரடியார் என்று அழைக்கப்படும்   தேவதாசிகள் 400 பேர்களை தஞ்சை பெரிய கோவிலிலும்  ஒரு சிலரை தில்லை , திருவாரூர் கோவில்களிலும் சேர்த்தவன் இராஜராஜன். அதில் திருவாரூரில் தேவரடியாராக இருந்த பரவை நங்கை என்பவருக்கும் இராஜேந்திரனுக்கும் இருந்த உறவை சோழர் வரலாறு பதிவு செய்து இருக்கிறது . அதை இந்த நாவலிலும் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். ஆனால், அத்தகைய  தேவதாசிகள் மீதான பாலியியல் மீறலை இந்த நாவல் பேசவில்லை . 



தஞ்சை பெரிய கோவில் 


இராஜராஜன் என்ற சூரியனுக்கு கீழ் மறைக்கப்பட்ட மிகப்பெரிய வெற்றியாளன் இராஜேந்திரன் எனவும் , அவனது கசப்பான , துயர நினைவுகளின் வேர்களை தேடித் செல்லும் பயணமே இந்த “கங்காபுரம்” நாவல் என்று குறிப்பிடுகிறார் அ. வெண்ணிலா. 

குறிப்பாக , இராஜேந்திரனுக்கு இளவரசு பட்டம் சூட்டுவதற்கு இராஜராஜனின் பட்டத்தரசி லோகமாதேவி ( உலகமாதேவி ) தடை ஏற்படுத்துவதும் , இராஜராஜன் முடிவெடுக்கமுடியாமல் தவிப்பதும் ,  இராஜேந்திரன் பட்டமேற்பு தள்ளி போனதற்கான காரணங்களாக புதிய பார்வையை  கொடுத்திருக்கிறார் .

அதே போல் இராஜேந்திரனுக்கு பல மனைவிகளும் , குழந்தைகளும் இருந்தாலும் நாவல் முழுவதும் இராஜேந்திரனும் அவனது காதல் மனைவி வீரமாதேவியும் மட்டுமே நிறைந்து இருக்கிறார்கள். மற்றவர்கள் பற்றி அதிகமாக பேசப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் நாவலின் அழுத்தமான பாத்திரப்படைப்பாக வீரமாதேவி இருக்கிறார். இருந்தாலும்  வீரமாதேவியை ,  ஆதிநகர் படையெடுப்பில் அரசன் இந்திர ரதனை சந்திக்க செல்லும்  தூதுவனாக இராஜேந்திரன்  அனுப்புவது நம்பும் படியாக இல்லை; சற்று மிகையான கற்பனையாக இருக்கிறது.

மேலும் , நாவலில் வரும்  இராஜேந்திரனின் தளபதிகள் அரையன் இராஜராஜன், மூவேந்த வேளாளன் (வீரமாதேவியின் அண்ணன்) , இந்திர ரதன்  மற்றும் பரவை நங்கை போன்ற பலபாத்திரங்கள் வரலாற்றில் வருபவர்கள் ஆதலால் மிகவும் கவனமாக எழுதவேண்டிய கட்டாயமும் நாவல் ஆசிரியருக்கு இருந்திருப்பது தெரிகிறது.


கங்கைகொண்ட சோழபுரம்   , கங்கை கொண்ட சோழீஸ்வரர் ஆலையம் மற்றும் சோழகங்கம் ஏரி ஆகியவைகளின் கட்டுமானப்பணிகளை மிகவும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் . குறிப்பாக கோவில் கட்டுவதற்கு மக்கள் வரி அளிப்பது , ஏரி  கட்டுமானப்பணியில் மக்களின் நேரடி பங்களிப்பு போன்றவை இயல்பாக இருக்கிறது. அதேபோல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் ஆலய சிற்பப்பணிகளை கலை நுட்பத்துடன் கொடுத்திருக்கிறார்.  மேலும் , சோழ குடிமக்களின்  ஆலயத் திருவிழாக்கள் , இயல், இசை மற்றும் நாடகங்கள் என்று அனைத்தையையும் நாவலுக்குள் கொண்டு வந்திருக்கிறார். 



 கங்கை கொண்ட சோழீஸ்வரர் ஆலயம் 




இராஜேந்திரன் வெட்டிய சோழகங்கம்  ஏரி


இராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரம் கட்டிய வரலாறும் , தலைநகரை தஞ்சையிலிருந்து அந்நகருக்கு மாற்றிய சூழலும் மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. இருந்தாலும் , இந்தநாவலை படித்து முடித்ததும் ஒருசில கேள்விகள் என்னுள் எழுந்தது!.

மாமன்னன் இராஜராஜனின் மரணம் இன்னும் கேள்விக்குறியான ஒன்றாக இருக்கிறது. சோழ ஆட்சி அதிகாரங்களுக்கு உட்பட்ட எல்லா நிகழ்வுகளையும் செப்புப்பட்டயங்களாக பதிவு செய்திருக்கும் சோழ அரசர்கள் , இராஜராஜனின் மரணத்தை ஏன் பதிவு செய்யவில்லை? ஏன் பள்ளிப்படை எழுப்பவில்லை?. ஆனால் நாவலாசிரியர் இராஜராஜனின் மரணம் இயற்கையான நிகழ்வாக எழுதியிருக்கிறார் !

ஆனால், இராஜேந்திரன் தஞ்சையை புறக்கணித்தற்கும் , புதிய தலைநகர் உருவாக்கத்திற்கும் , கங்கை கொண்ட சோழீஸ்வரர் ஆலயம் கட்டுவதற்கும் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தத்தான் என்பது நம்பும்படியாக இருந்தாலும், எங்கேயே நெருடல் ஏற்படுகிறது. ஆதித்த கரிகாலனின் கொலை போன்று மாமன்னன் இராஜராஜனின் மரணத்திலும்  பெரும் சந்தேகம்  இன்னும் இருக்கிறது , குறிப்பாக இராஜராஜனுக்கு தஞ்சையில் துர்மரணம் நேர்ந்திருக்க வேண்டும் என்றும் , அதனாலேயே இராஜேந்திரன் தஞ்சையை விலக்கி, கங்கைகொண்ட சோழபுரத்தை நிறுவினான் என்று சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அதே போல், இந்தியாவின் மீது " கஜினி முகம்மது" படையெடுத்த போது, வட நாட்டு அரசர்களுக்கு உதவ    இராஜேந்திர சோழன் படை உதவி செய்தது பற்றிய குறிப்புகள் இல்லை. இராஜேந்திரனின் எல்லா சாதனைகளையும் எழுதியுள்ள நாவலாசிரியர் இதைப்பற்றியும் ஒரு அத்தியாயம் எழுதியிருக்கலாம்.


இருந்தாலும், இந்தியாவின் பெரும்பகுதியையும் , கடாரம்  மற்றும் இலங்கை போன்ற பெரும் நிலப்பரப்பை தன்னுடைய ஆளுகையின் வைத்திருந்த  ராஜேந்திரன் என்ற மாவீரன், நாவலாசிரியர் எண்ணத்தில் மட்டுமல்லாமல்   என்  மனதிலும் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறான். அவனது வீரத்தையும் , ஆட்சிப்பணியையும், , கங்கை கொண்ட சோழ புரத்தையும் அணுஅணுவாக ரசித்தவன் என்ற அடிப்படையில் இந்த “கங்காபுரம்”  நாவல் என்னை மிகவும் கவர்ந்து விட்டது உண்மை.  

இந்த நாவலை எழுத,  தான் நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகவும் , வரலாறு தெரியாத நான் சோழர்களின் வரலாற்றிற்குள் வாழ்ந்து வெளியேறினேன்  என்று கூறியிருக்கிறார் நாவலாசிரியர் அ. வெண்ணிலா.    உண்மையாகவே , நாவலை இவர் நகர்த்தி செல்லும் விதமும்,  கையாண்டிருக்கும் மொழி வளமும் மிக நேர்த்தியாக  இருக்கிறது. ஆனாலும் , நாவலின் பிற்பகுதி விறுவிறுப்பாக இல்லை என்ற மனக்குறையும் எனக்கு உண்டு.  

மனிதன் , தான் வாழ்ந்த வாழ்க்கையின் சாதனைகளை அடையாளமாக விட்டு சென்றவர்கள் சாதனையாளராக கருதப்படுகிறார்கள். அந்தப் பட்டியலில் மாமன்னர்கள் இராஜராஜனுக்கும் , இராஜேந்திரனுக்கும் இந்திய வரலாற்றில் எப்போதும் இடமுண்டு.

அதே போல் இந்த நாவலுக்கான அங்கீகாரமும் ஒரு நாள் கிடைக்கும் என்று நம்புகிறேன். தமிழ் இலக்கியத்திற்கான எந்தப் பரிசையும் பெற இந்த நாவலுக்கு  தகுதியுண்டு.


சு.கருப்பையா
மதுரை
+919486102431