Wednesday 3 June 2020

கங்காபுரம்


கங்காபுரம்
(சரித்திர நாவல்)

நூல் ஆசிரியர் : அ. வெண்ணிலா
வெளியீடு : அகநி
பக்கங்கள்: 559
விலை: ரூ . 450/-
பதிப்பு: டிசம்பர் 2018





ராஜராஜ சோழனின் 27 ஆம் ஆட்சி ஆண்டில் , அதாவது கி.பி. 1011 இல் இந்த நாவல் துவங்குகிறது. கி.பி.1044 இல் , இராஜேந்திர சோழனின் 28 ஆம் ஆட்சி ஆண்டில் நாவல் நிறைவடைகிறது.

ஏறத்தாழ 37 ஆண்டு  கால சோழ வரலாற்றை நாவலாக எழுதியிருக்கிறார் அ. வெண்ணிலா. குறிப்பாக,  சோழர்களின் பொற்கால அரசன் என்று அழைக்கப்படும் இராஜராஜ சோழனும், அவனது மகனும் , இந்திய வரலாற்றின் ஆகச் சிறந்த மாவீரனுமான இராஜேந்திர சோழன் ஆகிய இருவரின் மரணமும் இந்த நாவலில் நிகழ்கிறது .

உண்மையிலேயே , வலுவான ஒரு கதை களத்தை தமது நாவலுக்கான களமாக எடுத்துக் கொண்டிருக்கிறார் . குறிப்பாக , மாமன்னன் இராஜராஜனின் மரணமும் , இராஜேந்திர சோழனின் தலைநகர் மாற்றமும் பல்வேறு ஊகங்களை உள்ளடக்கிய வரலாற்றின் பக்கங்களாக இது வரை இருந்து வருகிறது.

அதே போல் , பல போர்களில் வெற்றி பெற்ற மாபெரும் வீரனான இராஜேந்திரனுக்கு ,அவனது 50 வது வயது வரை  இளவரசுபட்டம் ஏன்  சூட்டப்படவில்லை?  என்ற கேள்வியும் வரலாற்றில் தொக்கி நின்றுள்ளது. இதற்கான விடைகளை உளவியல் ரீதியாக இந்த நாவலில் பேசி இருக்கிறார் அ. வெண்ணிலா. உண்மையில் நாவல்  சுவாரசியமாகவே இருக்கிறது.

தஞ்சை பெரிய கோவிலிலும் , தில்லை நடராஜர் கோவிலிலும் பார்ப்பன புரோகிதர்களுக்கு இடம் கொடுத்து வரலாற்றில் பெரும் பிழையை செய்தவன் இராஜராஜன் என்று வரலாறு குறிப்பிடுகிறது. அதே போல் தேவரடியார் என்று அழைக்கப்படும்   தேவதாசிகள் 400 பேர்களை தஞ்சை பெரிய கோவிலிலும்  ஒரு சிலரை தில்லை , திருவாரூர் கோவில்களிலும் சேர்த்தவன் இராஜராஜன். அதில் திருவாரூரில் தேவரடியாராக இருந்த பரவை நங்கை என்பவருக்கும் இராஜேந்திரனுக்கும் இருந்த உறவை சோழர் வரலாறு பதிவு செய்து இருக்கிறது . அதை இந்த நாவலிலும் கையாண்டிருக்கிறார் ஆசிரியர். ஆனால், அத்தகைய  தேவதாசிகள் மீதான பாலியியல் மீறலை இந்த நாவல் பேசவில்லை . 



தஞ்சை பெரிய கோவில் 


இராஜராஜன் என்ற சூரியனுக்கு கீழ் மறைக்கப்பட்ட மிகப்பெரிய வெற்றியாளன் இராஜேந்திரன் எனவும் , அவனது கசப்பான , துயர நினைவுகளின் வேர்களை தேடித் செல்லும் பயணமே இந்த “கங்காபுரம்” நாவல் என்று குறிப்பிடுகிறார் அ. வெண்ணிலா. 

குறிப்பாக , இராஜேந்திரனுக்கு இளவரசு பட்டம் சூட்டுவதற்கு இராஜராஜனின் பட்டத்தரசி லோகமாதேவி ( உலகமாதேவி ) தடை ஏற்படுத்துவதும் , இராஜராஜன் முடிவெடுக்கமுடியாமல் தவிப்பதும் ,  இராஜேந்திரன் பட்டமேற்பு தள்ளி போனதற்கான காரணங்களாக புதிய பார்வையை  கொடுத்திருக்கிறார் .

அதே போல் இராஜேந்திரனுக்கு பல மனைவிகளும் , குழந்தைகளும் இருந்தாலும் நாவல் முழுவதும் இராஜேந்திரனும் அவனது காதல் மனைவி வீரமாதேவியும் மட்டுமே நிறைந்து இருக்கிறார்கள். மற்றவர்கள் பற்றி அதிகமாக பேசப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் நாவலின் அழுத்தமான பாத்திரப்படைப்பாக வீரமாதேவி இருக்கிறார். இருந்தாலும்  வீரமாதேவியை ,  ஆதிநகர் படையெடுப்பில் அரசன் இந்திர ரதனை சந்திக்க செல்லும்  தூதுவனாக இராஜேந்திரன்  அனுப்புவது நம்பும் படியாக இல்லை; சற்று மிகையான கற்பனையாக இருக்கிறது.

மேலும் , நாவலில் வரும்  இராஜேந்திரனின் தளபதிகள் அரையன் இராஜராஜன், மூவேந்த வேளாளன் (வீரமாதேவியின் அண்ணன்) , இந்திர ரதன்  மற்றும் பரவை நங்கை போன்ற பலபாத்திரங்கள் வரலாற்றில் வருபவர்கள் ஆதலால் மிகவும் கவனமாக எழுதவேண்டிய கட்டாயமும் நாவல் ஆசிரியருக்கு இருந்திருப்பது தெரிகிறது.


கங்கைகொண்ட சோழபுரம்   , கங்கை கொண்ட சோழீஸ்வரர் ஆலையம் மற்றும் சோழகங்கம் ஏரி ஆகியவைகளின் கட்டுமானப்பணிகளை மிகவும் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் . குறிப்பாக கோவில் கட்டுவதற்கு மக்கள் வரி அளிப்பது , ஏரி  கட்டுமானப்பணியில் மக்களின் நேரடி பங்களிப்பு போன்றவை இயல்பாக இருக்கிறது. அதேபோல் கங்கைகொண்ட சோழீஸ்வரர் ஆலய சிற்பப்பணிகளை கலை நுட்பத்துடன் கொடுத்திருக்கிறார்.  மேலும் , சோழ குடிமக்களின்  ஆலயத் திருவிழாக்கள் , இயல், இசை மற்றும் நாடகங்கள் என்று அனைத்தையையும் நாவலுக்குள் கொண்டு வந்திருக்கிறார். 



 கங்கை கொண்ட சோழீஸ்வரர் ஆலயம் 




இராஜேந்திரன் வெட்டிய சோழகங்கம்  ஏரி


இராஜேந்திரன் கங்கை கொண்ட சோழபுரம் கட்டிய வரலாறும் , தலைநகரை தஞ்சையிலிருந்து அந்நகருக்கு மாற்றிய சூழலும் மிகவும் யதார்த்தமாக இருக்கிறது. இருந்தாலும் , இந்தநாவலை படித்து முடித்ததும் ஒருசில கேள்விகள் என்னுள் எழுந்தது!.

மாமன்னன் இராஜராஜனின் மரணம் இன்னும் கேள்விக்குறியான ஒன்றாக இருக்கிறது. சோழ ஆட்சி அதிகாரங்களுக்கு உட்பட்ட எல்லா நிகழ்வுகளையும் செப்புப்பட்டயங்களாக பதிவு செய்திருக்கும் சோழ அரசர்கள் , இராஜராஜனின் மரணத்தை ஏன் பதிவு செய்யவில்லை? ஏன் பள்ளிப்படை எழுப்பவில்லை?. ஆனால் நாவலாசிரியர் இராஜராஜனின் மரணம் இயற்கையான நிகழ்வாக எழுதியிருக்கிறார் !

ஆனால், இராஜேந்திரன் தஞ்சையை புறக்கணித்தற்கும் , புதிய தலைநகர் உருவாக்கத்திற்கும் , கங்கை கொண்ட சோழீஸ்வரர் ஆலயம் கட்டுவதற்கும் தன்னுடைய ஆளுமையை வெளிப்படுத்தத்தான் என்பது நம்பும்படியாக இருந்தாலும், எங்கேயே நெருடல் ஏற்படுகிறது. ஆதித்த கரிகாலனின் கொலை போன்று மாமன்னன் இராஜராஜனின் மரணத்திலும்  பெரும் சந்தேகம்  இன்னும் இருக்கிறது , குறிப்பாக இராஜராஜனுக்கு தஞ்சையில் துர்மரணம் நேர்ந்திருக்க வேண்டும் என்றும் , அதனாலேயே இராஜேந்திரன் தஞ்சையை விலக்கி, கங்கைகொண்ட சோழபுரத்தை நிறுவினான் என்று சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.

அதே போல், இந்தியாவின் மீது " கஜினி முகம்மது" படையெடுத்த போது, வட நாட்டு அரசர்களுக்கு உதவ    இராஜேந்திர சோழன் படை உதவி செய்தது பற்றிய குறிப்புகள் இல்லை. இராஜேந்திரனின் எல்லா சாதனைகளையும் எழுதியுள்ள நாவலாசிரியர் இதைப்பற்றியும் ஒரு அத்தியாயம் எழுதியிருக்கலாம்.


இருந்தாலும், இந்தியாவின் பெரும்பகுதியையும் , கடாரம்  மற்றும் இலங்கை போன்ற பெரும் நிலப்பரப்பை தன்னுடைய ஆளுகையின் வைத்திருந்த  ராஜேந்திரன் என்ற மாவீரன், நாவலாசிரியர் எண்ணத்தில் மட்டுமல்லாமல்   என்  மனதிலும் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறான். அவனது வீரத்தையும் , ஆட்சிப்பணியையும், , கங்கை கொண்ட சோழ புரத்தையும் அணுஅணுவாக ரசித்தவன் என்ற அடிப்படையில் இந்த “கங்காபுரம்”  நாவல் என்னை மிகவும் கவர்ந்து விட்டது உண்மை.  

இந்த நாவலை எழுத,  தான் நான்கு ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாகவும் , வரலாறு தெரியாத நான் சோழர்களின் வரலாற்றிற்குள் வாழ்ந்து வெளியேறினேன்  என்று கூறியிருக்கிறார் நாவலாசிரியர் அ. வெண்ணிலா.    உண்மையாகவே , நாவலை இவர் நகர்த்தி செல்லும் விதமும்,  கையாண்டிருக்கும் மொழி வளமும் மிக நேர்த்தியாக  இருக்கிறது. ஆனாலும் , நாவலின் பிற்பகுதி விறுவிறுப்பாக இல்லை என்ற மனக்குறையும் எனக்கு உண்டு.  

மனிதன் , தான் வாழ்ந்த வாழ்க்கையின் சாதனைகளை அடையாளமாக விட்டு சென்றவர்கள் சாதனையாளராக கருதப்படுகிறார்கள். அந்தப் பட்டியலில் மாமன்னர்கள் இராஜராஜனுக்கும் , இராஜேந்திரனுக்கும் இந்திய வரலாற்றில் எப்போதும் இடமுண்டு.

அதே போல் இந்த நாவலுக்கான அங்கீகாரமும் ஒரு நாள் கிடைக்கும் என்று நம்புகிறேன். தமிழ் இலக்கியத்திற்கான எந்தப் பரிசையும் பெற இந்த நாவலுக்கு  தகுதியுண்டு.


சு.கருப்பையா
மதுரை
+919486102431






No comments:

Post a Comment