Wednesday 29 April 2020

பீமா கோரேகான்



பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு.
                                    
 ஆசிரியர்…...முனைவர்.மு. இனியவன்



இந்திய வரலாற்றில், விடுதலைக்காகவும் ,சமத்துவத்துக்காகவும் போராடிய சாமானியர்களின் வரலாறு பற்றிய  செய்திகளை ஏடுகளில் காண்பது அரிதாக இருப்பதை போன்றே ,இந்திய சாதிய சமூகத்தில், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை மீட்பு போராட்ட வரலாறுகளும் தேடினாலும் தென்படுவதில்லை.அது  பற்றிய நூல்களும் தமிழில் அதிகளவு வெளிவரவில்லை . அப்படியே வந்தாலும் சிலவற்றைத் தவிர  பலவும் அரைத்த மாவையே அரைத்தனவே தவிர வரலாற்று சுரங்கங்களை தோண்டித் துருவிய சான்றுகளோடு வெளிவரவில்லை .இந்த நிலையில் முனைவர் மு.இனியவன் எழுதிய” பீமா கோரேகான் .-பேஷ்வாக்களை வீழ்த்திய மகர்களின் வீர வரலாறு “என்ற  வரலாற்று நூல் ,கள ஆய்வுகளோடும்,வரலாற்றுத் தரவுகளோடும், சான்றுகளோடும் வெளிவந்திருப்பது  மகிழ்வைத் தருகிறது.

11 தலைப்புகளில் 160 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த நூலை அறிவாயுதம் பதிப்பகம் ,கோவை, வெளியிட்டு உள்ளது. நூல் சிறியது தான் .ஆனால் கனமானது. .நூலாசிரியரின் கடின உழைப்பை ஓவ்வொரு பக்கத்திலும்  உணரலாம்.. தொடக்கம் முதல் இறுதி வரை சுவை குன்றாமல் சரளமான நடையில் பயணிக்கிற இந்நூல்  புதிய புதிய பல்வேறு  வரலாற்று செய்திகளை   நம் முன் பரிமாறியிருக்கிறது.

மகாராஷ்டிரா மாநிலம் பூனா மாவட்டத்தின் பீமா என்கிற ஆற்றின் கரையில் அமைத்துள்ள கோரேகான் என்ற சிற்றூர் பற்றி பலரும் அறிந்திருக்கலாம். அதுவும் 2018 இல் பீமா கோரேகானின் 200வது ஆண்டு  நினைவு தினத்தன்று  லட்சக்கணக்கான தாழ்த்தப்பட்ட மக்களும் இடதுசாரிகளும் அணிதிரண்டபோது  , சங் பரிவாரங்கள் நடத்திய   திட்டமிட்ட வன்முறைக்குப் பின்  கோரேகான் எல்லோரும் அறிந்த பெயராக மாறியது மட்டுமல்ல அதன் வரலாறு என்ன என்கிற தேடுதலும் அதிகரித்தது.அந்த கோரேகான் வரலாற்று சுவடுகளை தேடியவர்களில் இந்நூலின் ஆசிரியரும் ஒருவர் என்பதை இந்நூல் உணர்த்துகிறது.

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அடிமைபட்டுக் கிடந்த ஒரு இனம் வீறுகொண்டு எழுந்து நின்ற வரலாற்றை பீமா கோரேகான் சுமந்திருக்கிறது  என்பதை ஏராளமான வரலாற்று  சான்றுகளோடு நிறுவ முயன்றுள்ளார்  முனைவர் இனியவன்.

1818 இல் பீமா கோரேகானில்  கிழக்கிந்திய ஆங்கிலேய படைப்பிரிவான மகர் படைப் பிரிவுக்கும், மராட்டிய பார்ப்பன பேஷ்வா படைக்கும் நடைபெற்ற யுத்தமே இந்நூலின் மையம் என்றாலும்  மராட்டியத்தின் வரலாறு,சத்ரபதி சிவாஜியின் எழுச்சி, அதில் மகர்கள் வகித்த பங்கு ,பின்னர் சிவாஜி பார்பனியத்தால் வீழ்த்தப்பட்ட வரலாறு,பார்ப்பன  பேஷ்வாக்களின் கொடுமையான  ஆட்சி,அதில்  ஒடுக்கப்பட்ட மக்களாகிய மகர்,மாங்,மாதாரி,மாதிகா ,சாமர் ,ஆகியோர்  அடைந்த இன்னல்கள், இழிவுகள் நிறைந்த துன்பியல் வாழ்நிலைகள், மற்றும்  ,கோரேகானை வரலாற்றிலிருந்து தூக்கி எறியத்துடிக்கும் பார்ப்பன இந்துத்துவா சக்திகள்,அதற்கு துணை நிற்கும் அரசின் வன்மங்கள்  என  ஏராளமான வரலாற்று செய்திகளுக்குள் இந்நூல் பயணிக்கிறது., 

கிழக்கிந்திய கம்பெனி   இந்தியாவில் கால்பதித்தபின் நடந்த யுத்தங்கள் ஏராளம்.அதன்  200 ஆண்டு கால வரலாறு முழுவதும் யுத்தங்களால் நிரம்பி வழிந்துள்ளன ,ஆனால் .1818 இல் பீமா கோரேகானில் கிழக்கிந்திய ஆங்கிலய மகர் படைப்பிரிவுக்கும்,பார்ப்பன பேஷ்வா படைப் பிரிவுக்கும் நடந்த யுத்தம் என்பது எல்லாவற்றிலும் வேறுபட்டது. ஒரு அடிமை ஆண்டானை வெற்றி கொண்ட வரலாறு அது. பல நம்ப முடியாத அதிசயங்களை நிகழ்த்திக் காட்டியதும் அது தான். பேஸ்வாக்களால் இழிவும் அவமானமும்பட்ட  தாழ்த்தப்பட்ட மக்களாகிய மகர்களை இந்த போர்க்களம்  ஸ்பார்ட்டகஸ்களாக உருமாற்றியது. ஒரு சிறிய படை  பல மடங்கு பலமுடைய பேஸ்வாக்களை வென்று புதிய வரலாறு படைத்தது. . எப்பொழுதாவது நடக்கும் அரிதினும் அரிதான வரலாறு இது. 

பீமா  கோரேகானின் போர்க்கள  காட்சிகளை நூலாசிரியர்  விவரிக்கும் விதம் அழகும் சுவையும்  நிரம்பியது. .இரு படைப்பு பிரிவுகளின் தளபதிகளும்  , வகுக்கும் போர் உத்திகள், களநிலவரம், படைகளின் அணி வகுப்பு,என ஓவ்வொரு காட்சியையும் ஆசிரியர் எழுத்தில் வடித்துக் காட்டி போர்க்களத்திற்குள் வாசகர்களையும் இழுத்து செல்கிறார் . ஒரு போர் வீரனாக நம்மையும் நிறுத்துகிறார்.

“பேஷ்வா இரண்டாம் பாஜிராவ் தலைமையில் 20,000 குதிரைப்படைப் பிரிவினரும், 8000 காலாட்படையினரும் பீமகோரேகானிலிருந்து 2 கி.மீ,தூரம் தள்ளியிருந்த மலைக்குன்றில் முகாமிட்டிருந்தனர்.மறுபுறத்தில் கிழக்கிந்திய படையணியின்,சுமார் 500 காலட்படைப் பிரிவினரும்,300 குதிரைப்படை வீரர்களும் கேப்டன் ஸ்டாண்டன் தலைமையில் இருந்தனர்.”காலட்படைப் பிரிவில் மகர்களே அதிகளவில் இருந்தனர்.” 

போர் உச்சக்கட்டத்தை அடைகிறது. ஆங்கிலேய படையின் லெப்டினண்ட் சிஸ் ஹோம்மின்  தலை எதிரிகளால் துண்டிக்கப்படுகிறது. ஒரு கட்டத்தில் ஆங்கிலேய படைப் பிரிவுக்கு நீரும் உணவும் ஓய்வும் கிடைக்காமல். தோல்வியின் விளிம்பில் நிற்கின்றனர்.  சரணடைந்து விடலாம் என்ற முடிவை எடுக்க சொல்லி சிலர் கேப்டன் ஸ்டாண்டனிடம் கோரிக்கை வைக்க, ஸ்டாண்டனும் , மகர் படை வீரனான சித்நாக்கும்   “பேஸ்வா படையை வீழ்த்துவதே நமக்கு முக்கியம் . எனவே நமது சக்தியை ஓன்று திரட்டி உயிர் உள்ள வரை போராடுவோம்,” “நாம் உயிர் வாழ வேண்டுமென்றால் சண்டையிட்ட தீர வேண்டும் “ 

என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் ஆற்றிய  உரை சோர்ந்திருத்த, நம்பிக்கை இழந்து கிடந்த படைப்பு பிரிவுகளுக்கு புத்துயிர்  ஊட்ட,, வீறு கொண்டெழுந்த  மகர்கள் தங்களுக்கு ஏற்பட்ட அவமானத்தை எதிரியின் குருதியில் கரைத்தனர் என்று அந்தக் காட்சியை நம் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார் இந்நூலின் ஆசிரியர் முனைவர் இனியவன். 


நூல் இத்துடன் நின்று விடவில்லை. பீமா கோரேகானின் வெற்றிகளை சீரணித்துக் கொள்ள முடியாத பார்ப்பன இந்துத்துவவாதிகள் “அந்நியரான ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனி படையணியில் இணைந்து கொண்டு உள்நாட்டைச் சார்ந்த படையணியை [சாதி இந்துக்களின் பேஸ்வா படை]வீழ்த்தியதை எப்படி உள்நாட்டு மக்களின் வெற்றியாகக் கொண்டாடலாம் “ என்று எழுப்பும் கேள்விகளுக்கு நெற்றியடி கொடுப்பதோடு பீமா கோரேகான் மீதான மோடி அரசின் வன்மத்தையும் தோலுரித்துக் காட்டுகிறார்.


இறுதியில் 


உங்கள்ப் பார்வையில் ,செயலில், சாதி தீண்டாமை இருக்கும் வரை சக மனிதனை சாதியின் பெயரால் நீங்கள் ஒடுக்கு முறைக்கு உள்ளாக்கும் வரையில் ….புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியாரின் வழியில், மார்க்சிய பாதையில் விடுதலைக்கான ஆயிரம் ஆயிரம் பீமா கோரேகான் போரைச் சந்தித்து முழுமுனைப்போடு சாதியத்தை வீழ்த்தும் காலம் வெகு தொலைவில் இல்லை “ என்று நூலை நிறைவு செய்கிறார்.

ஒரு இலக்கோடு விரிந்த பார்வையோடு எழுதப்பட்டுள்ள இந்த நூல் சாதியற்ற தமிழர்கள் பலரையும் தன்னுள் ஈர்த்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன்                                                                                                                                                                     
மு.சங்கையா 

அலைபேசி : 9486100608
[m] ..sangaiahbsnl@googlemail.com                                               
12/2 பாரதிதாசன் தெரு 
ராமமூர்த்தி நகர் 
புது விளாங்குடி 
மதுரை-18




No comments:

Post a Comment