Friday 29 June 2012

மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்


புத்தகம்: மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்
நூல் ஆசிரியர் :  சமயவேல்        Mob.9486102498
பதிப்பகம்: ஆழி பப்ளிசர்ஸ்
விலை :  ரூபாய் :50


கவிஞர் சமயவேல், BSNL இல் ஒரு உதவி பொறியாளர். ஏற்கனவே " காற்றின் பாடல்" மற்றும் " அகாலம்" என்ற இரண்டு  கவிதை தொகுப்பினை வெளியிட்டு இருக்கிறார். இந்நூல் அவரது மூன்றாவது தொகுப்பு. தன்னுடைய கடுமையான பணிகளுக்கிடையிலும்அவருக்கு இவ்வளவு ஆழமான கவிதைகள் எழுத நேரமும் , உத்வேகமும் இருந்திருக்கிறது. பிரபல எழுத்தாளர் கோணங்கி   இவருடைய நூல்களை பாராட்டியுள்ளது இவருக்கு எழுத்துலகில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். சக தோழன் என்ற வகையில் பெருமிதம் கொள்கிறேன்.

மனிதனின் அக உணர்வையும் , இயற்கையையும் கலை நயத்துடன் தமது கவிதைகளில் செதுக்கியுள்ளார் சமயவேல்.உண்மையிலே அவரின் பல கவிதைகள் யதார்த்தமாக இருக்கிறது. குறிப்பாக , " அவளது  மழை" என்ற கவிதையில் விரகதாபத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்;


பயனற்ற அவனுடன்
துவண்ட இரவு
தராத தூக்கம்
தினமும் தொலைந்தது

மார்பில் ததும்பும் தீயில்
எந்த பண்பாட்டையும்
எரிக்க முடியும்.


தகித்தெடுக்கும் நிறைவேறாத காமத்தால் பாதை தவறும் பெண்கள் எத்தனை பேர்! . அந்த பண்பாட்டுச் சிதைவினால் எத்தனை கொலைகள்.அதை  எப்படியெல்லாம் தமிழ் தினசரிகள்  வெளிச்சம் போட்டுக்காட்டி வியாபாரம் செய்கின்றன.

அதேபோல் தினசரி மனிதன் என்ற கவிதையில் ;

புரளப் புரள
தூக்கம், கனவு, விழிப்பு மூன்றும்
புரண்டு புரண்டு விடியத் தொடங்குகிறது
அதிகாலையும், வெயிலும்  இருட்டும்
தினசரி தொடர
அழிந்தது அழிகிறது
கடந்தது கடக்கிறது
காலம் ஒரு பட்டுப்போர்வையை எடுத்து
எல்லாவற்றையும் அழகாக மூடி விடுகிறது

ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை இதைவிட எவ்வாறு அழகாக சொல்லிவிடமுடியும்? . இந்தநூல் பற்றி வாசிப்போர்களத்தில் இன்னும் விரிவாக பேச வேண்டியுள்ளது.

------
சு.கருப்பையா.

Thursday 28 June 2012

பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்


பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்
எழுதியவர்:முனைவர்.வா.நேரு, Mobile:9443571371
வெளியீடு. மானமிகு பதிப்பகம் ,மதுரை.
விலை: ரூபாய்.60









முனைவர்.வா.நேரு BSNL இல் பணிபுரியும் தந்தை பெரியாரின் உண்மையான சீடர். சமூகப்பார்வையும், பகுத்தறிவுக் கொள்கையையும் கொண்ட இவரின்  பல கவிதைகள் "விடுதலை" ஏட்டில் வெளிவந்தன. அதை தொகுத்து  இந்நூலாக வெளியிட்டுள்ளார். படித்த பார்ப்பன நண்பரே என்ற கவிதையில் ஆரம்பித்து சிரிப்பாய் சிரிக்கிறதுவரை 27  கவிதைகள் இந்த நூலில் இடம் பெறுகின்றன. கவிதைகள் முழுவதும் பெரியாரின் கருத்துக்களை பறைசாட்டுவதாக இருந்தாலும் ,
" காதல் வலு
சேர்க்கும் ,
காதல் சமூகத்தின்
ஜாதி நோய் போக்கும்
காதல் சமூகத்தின்
மதப் பொய்மை நீக்கும்,
ஆதலினால் காதலிப்பீர்

என்று  “ஆதலினால் காதலிப்பீர் என்ற கவிதையில் எழுதியுள்ளார். அவருடைய பார்வை சரியானதே. ஆனால்  அது நடைமுறையில் சாத்தியமா? அப்படியென்றால் ஏன் சாதியின் பெயரால் 2010  ஆம் ஆண்டில் மட்டும் 1600 பேர் கொல்லப்பட்டார்கள். அதனால் இந்தியாவில் காதல் அழிக்கப்படும், வளர்க்கப்படமாட்டாது என்பது தான் உண்மை.இருந்தாலும் நேருவின் ஆசை என்றாவது ஒரு நாள் நிறைவேறும் என்று நானும் நம்புகிறேன்.
ஆனால்,
நகரத்தில் நாங்கள் வகிக்கும்
உயர் பதவியால்
உரிமை பெறுகிறோம்
உவகை கொள்கிறோம்
கிராமத்தில்
இன்னும்
சககிலியாய்
பறையராய்
பள்ளராய்
மட்டுமே
பார்க்கப்படுகிறோம்
என்று அய்ந்தே நிமிடத்தில் கவிதையில் எழுதியிருப்பது மிகச் சரிதான்.

அதேபோல் " பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் "  என்ற அடுத்த கவிதையில்
தலைக்கட்டுக்கு
ஆயிரம் ரூபாய் வரி
ஆயிரம் தலைக்கட்டு
இருக்கு ஊரில்
ஜாம் ஜாம்னு
நடத்திடலாம்
பங்குனி பொங்கலை  …….

ஊரில் உள்ள
ஒரே ஒரு பள்ளிக்கூடம்
கரும்பலகையும்
இல்லாமல்
ஒழுகும் கூரையோடு
கேட்பாரற்றுக் கிடக்கிறது
ரொம்ப நாளாய்

அறிவைப் பெருக்கும் பள்ளிக்கூடத்தை கவனிக்காமல் , மூடநம்பிக்கையை தரும் கோவில் பண்டிகையை கொண்டாடும் அறிவிலிகளுக்கு இந்தக்கவிதை ஒரு சவுக்கடி. இக்கவிதை தொகுப்பை படித்தால் ஓரளவு சிந்திப்பார்கள் என்பது உண்மையே!

-------
சு.கருப்பையா.



Tuesday 19 June 2012

சாகித்ய அகாதமி பரிசு பெற்ற தமிழ் நூல்கள்


ஒவ்வொரு ஆண்டும்   இலக்கியத்துறையில் , சாகித்திய அகதாமி பரிசுகள்  அறிவிக்கப்பட்டவுடன் சர்ச்சைகள் உருவாவது பழகிப்போன ஒன்று. ஆனாலும் சிலசமயம் நல்ல நூல்களும் தேர்வாவது உண்டு . உங்களுக்காக தமிழில் கி.பி 1955 முதல்  பரிசு பெற்ற சாகித்திய அகதாமி  நூல்களை கீழே கொடுத்துள்ளேன். நிச்சயமாக விலை அதிகமாகத்தான் இருக்கும். விலைக்கு வாங்கிப் படிக்க முடியாவிட்டாலும் , நூலகதில்லாவது படித்து விடுங்கள்.  இப்போதெல்லாம் தமிழ் நூல்கள் அதிக பக்கங்களைக் கொண்டதாகவும் அதற்கு இணையாக விலையையும் கொண்டும் வெளி வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் திறமையான நல்ல வியாபாரிகள் பதிப்பகத்துறையில் வந்துவிட்டார்கள் என்பதுதான் உண்மை. ஆனால் அதற்காக படிக்கும் பழக்கத்தை  விட்டுவிடாதீர்கள்.


வரிசை    ஆண்டு          நூல்                                         இனம்                                                   ஆசிரியர்
1          1955       தமிழ் இன்பம்          கட்டுரைகள்                                    ரா.பி. சேதுப்பிள்ளை
2.         1956       அலை ஓசை                                         நாவல்                                             கல்கி
3.         1958       சக்கரவர்த்தித் திருமகன்     இராமாயணக் கதை                                 ராஜாஜி
4.         1961       அகல்விளக்கு                                   நாவல்                                                   மு. வரதராசன்
5.         1962       அக்கரைச் சீமையிலே               பயண இலக்கியம்                             மீ.ப. சோமசுந்தரம்
6.         1963       வேங்கையின் மைந்தன்          வரலாற்று நாவல்                             அகிலன்
7.         1965       இராமானுஜர்                           வாழ்க்கை வரலாறு                             ஆச்சாரியா
8.         1966       வள்ளலார் கண்ட  ஒருமைப்பாடு    திறனாய்வு                               ம.பொ. சிவஞானம்
9.         1967       வீரர் உலகம்                                    கட்டுரை                                                 சி.வா. ஜகந்நாதன்
10.        1968       வெள்ளைப் பறவை                     கவிதை                                                 அ. சீனிவாசராகவன்
11.        1969       பிசிராந்தையார்                        நாடகம்                                                 பாரதிதாசன்
12.        1970       அன்பளிப்பு                                     சிறுகதை                                                  கு. அழகிரிசாமி
13.        1971       சமுதாய வீதி                                  நாவல்                                                       நா. பார்த்தசாரதி
14.        1972       சில நேரங்களில் சில  மனிதர்கள்       நாவல்                                     ஜெயகாந்தன்
15.        1973       வேருக்கு நீர்                                     நாவல்                                                   ராஜம் கிருஷ்ணன்
16.        1974       திருக்குறள் நீதி இலக்கியம்     திறனாய்வு                                          க.த. திருநாவுக்கரசு
17.        1975       தற்கால தமிழ் இலக்கியம்        திறனாய்வு                                          இரா. தண்டாயுதம்
18.        1977       குருதிப்புனல்                                     நாவல்                  இந்திரா பார்த்தசாரதி
19.        1978       புதுக்கவிதைகளின்   தோற்றமும்      திறனாய்வு                              வல்லிக்கண்ணன்
20.        1979       சக்தி வைத்தியம்                           சிறுகதைகள்                                     தி. ஜானகிராமன்
21.        1980       சேரமான் காதலி                            நாவல்                     கவிஞர் கண்ணதாசன்
22.        1981       புதிய உரைநடை                           திறனாய்வு                                        மா. இராமலிங்கம்
23.        1982       மணிக்கொடிக் காலம்                  திறனாய்வு                                         பி.எஸ். இராமையா
24.        1983       பாரதி காலமும் கருத்தும்          திறனாய்வு                                       தொ.மு.சி. ரகுநாதன்
25.        1984       ஒரு காவிரியைப் போல             நாவல்                    திரிபுரசுந்தரி (லட்சுமி)
26.        1985       கம்பன் : புதிய பார்வை              திறனாய்வு                                       அ.ச. ஞானசம்பந்தன்
27.        1986       இலக்கியத்துக்கு ஓர்   இயக்கம்        திறனாய்வு                              க.நா. சுப்பிரமணியம்
28.        1987       இரவுக்கு முன் வருவது  மாலை          சிறுகதைகள்                    ஆதவன்
29.        1988       வாழும் வள்ளுவம்                          திறனாய்வு                                    வா.செ. குழந்தைசாமி
30.        1989       சிந்தாந்தி                                              தன் வரலாறு                                 லா.ச. ராமாமிருதம்
31.        1990       வேரில் பழுத்த பலா                      நாவல்                                              சு. சுமுத்திரம்
32.        1991       கோபல்லபுரத்து மக்கள்               நாவல்                                              கி. இராஜநாராயணன்
33.        1992       குற்றாலக் குறவஞ்சி                    வரலாற்று நாவல்                      கோவி. மணிசேகரன்
34.        1993       காதுகள்                                                நாவல்                        எம்.வி. வெங்கட்ராம்
35.        1994       புதிய தரிசனங்கள்                          நாவல்                                               பொன்னீலன்
36.        1995       வானம் வசப்படும்                          நாவல்                                               பிரபஞ்சன்
37.        1996       அப்பாவின் சினேகிதர்                  சிறுகதை                      தோப்பில் முகம்மது மீரான்
38.        1997       சாய்வு நாற்காலி                             நாவல்                                               அசோகமித்திரன்
39.        1998       விசாரணைக் கமிஷன்                 நாவல்                                               சா. கந்தசாமி
40.        1999       ஆலாபனை                                        கவிதை                                             அப்துல் ரகுமான்
41.        2000       விமரிசனங்கள் மதிப்புரைகள்     பேட்டிகள்                                      தி.க. சிவசங்கரன்
42.        2001       சுதந்திர தாகம்                                    நாவல்                                             சி.சு. செல்லப்பா
43.        2002       ஒரு கிராமத்து நதி                          கவிதை              சிற்பி பாலசுப்பிரமணியம்
44.        2003       கள்ளிக்காட்டு இதிகாசம்               நாவல்                                             கவிஞர் வைரமுத்து
45.        2004       வணக்கம் வள்ளுவ                         கவிதை                                           கவிஞர் தமிழன்பன்
46.        2005       கல்மரம்                                                  நாவல்                                             ஜி. திலகவதி
47.        2006       ஆகாயத்துக்கு அடுத்தவீடு          கவிதை                                          மு.மேத்தா
48.        2007      இலையுதிர் காலம்                            நாவல்                                             நீல பத்மநாபன் 
49.        2008       மின்சாரப்பூ                             சிறுகதைகள்                மேலாண்மைப் பொன்னுசாமி
50.        2009       கையொப்பம்                                       கவிதை                                            புவியரசு
51.        2010      சூடிய பூ சூடற்க                                  சிறுகதைகள்                              நாஞ்சில் நாடன்
52.        2011      காவல்கோட்டம்                               நாவல்                                              சு.வெங்கடேசன் 
53.        2012      தோல்                                                      நாவல்                                              டி.செல்வராஜ்
54.        2013      கொற்கை                                               நாவல்                                              ஜோ.டி.குருஸ்
55         2014        அஞ்ஞாடி                                                   நாவல்                                              பூமணி 
56         2015       இலக்கிய சுவடுகள்                                  நாவல்                                                ஆ.மாதவன் 
57         2016       ஒரு சிறு இசை                                 சிறுகதை தொகுப்பு                                     வண்ணதாசன்


( சாகித்ய அகாதமி பரிசு  பெறாத ஆண்டுகள்  1957, 1959, 1960, 1964 & 1976)
நன்றி   :   கீற்று மற்றும் விக்கிபீடியா

Monday 18 June 2012

விடுதலைப் போரின் வீர மரபு



வாசிப்போர் களத்தின் இரண்டாவது கூட்டம் 16 /06 /2012  மாலை நடந்தது.  நிறைய  புதிய உறுப்பினர்கள் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. அதுமட்டும்மல்லாமல்  வாசிப்போர் களம் வளருகிறது என்பதையும் இது நிரூபிக்கிறது . இன்று புதிய இரண்டு நூல்களை தோழர் பாலகுமார் அவர்களும் , தோழர் கருப்பையா அவர்களும்  அறிமுகப்படுத்தினார்கள்.

1
புத்தகம்            விடுதலைப் போரின் வீர மரபு!
வெளியீடு        :  கீழைக்காற்று வெளியீட்டகம்
விலை               :  ரூபாய்.65
அறிமுகம்        :   சு.கருப்பையா

 ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்க அரும்பாடுபட்ட உன்னதமான வீரர்கள் ஹைதர் அலி முதல் பகத்சிங் வரை மிகச் சுருக்கமாக எழுதப்பட்ட புத்தகம் இது.  புதிய கலாச்சாரம் மாத இதழ் இந்த நூலை தமது  நவம்பர் 2006 இதழில்  சிறப்பு  வெளியீடாக கொண்டு வந்தது ஒருசிலருக்கு தெரிந்திருக்கும்.

ஹைதர் அலி, திப்புசுல்தான் , கட்டபொம்மன், தூந்தாஜிவாக், விருப்பாட்சி கோபால் நாயக்கர், மருது சகோதரர்கள்,ஊமைத்துரை,தீரன் சின்னமலை, ..சி  மற்றும்  பகத்சிங் போன்ற தேச பக்த போராளிகளை பதிவு செய்திருக்கும் அதேவேளையில் , தேச துரோகிகளான தொண்டைமான், ஆர்க்காட்டு நவாபு மற்றும் சரபோஜி போன்ற துரோகிகளையும் அடையாளம் காட்டத் தவறவில்லை இந்நூல்.

தோழர் மருதையன் உள்ளிட்ட பல தோழர்கள் அரும்பாடுபட்டு இவ்வரலாறினை நமக்கு ஞாபக படித்தியுள்ளனர்.துப்பாக்கிகளுக்கு எதிராக வேல்கம்புகளையும் , பீரங்கிகளுக்கு எதிராக நெஞ்சுரத்தையும்  காட்டிப் போரிட்ட இவர்களின் வீரம் நமது  சுவாசக் காற்றை விடும் வரை நெஞ்சில் நிலைத்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எனது சிறுவயது முதலே திப்பு என்ற சொல் என் நாடி நரம்புகளில் முறுக்கேற்றி வீரத்தினை புகட்டி இருக்கிறதென்றால் அது மிகையாகாது. திப்புவைப் போன்று ஆங்கிலேயர்களை விரட்டவேண்டும் என்பதையே தன் வாழ்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனைகனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை ஆங்கிலேயர்கள் பார்த்திருக்கமாட்டார்கள். தோழர் மருதையன் திப்புவைப்பற்றி நன்றாகவே பதிவு செய்திருக்கிறார்.

அதே போன்று கட்டபொம்மனை தோழர் பாலனும், மருது சகோதரர்களை தோழர் வேல்ராசனும் மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள்.அதுவும் சின்னமருதுவின் திருச்சிப் பிரகடனம் காலத்தால் அழக்க முடியாத பட்டயம். கி.பி.1801 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 16 ஆம் நாள் சின்னமருதுவால் திருச்சி மலைக்கோட்டையில் ஒட்டப்பட்ட பிரகடனத்தின் ஒரு பகுதி இப்படி இருக்கிறது, " ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விட வேண்டும்... இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டு ஊழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடைக்காது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்...இதை எற்றுகொள்ளதாவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடிமயிருக்குச் சமமானது... இதனை எற்றுக்கொள்ளதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக்கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே உடம்பில் ஐரோப்பியர்களின் இரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்”.

 என்னே ஒரு தைரியம்!. சின்னமருது உண்மையிலே மானமிகு தம்ழ்குடிமகனே.  வாழ்கஅவனது மங்கா புகழ்பெற்ற வீரம்.

அதேபோல் திப்புவின் மறைவிற்குப் பிறகு அவரின் புதல்வர்களை சிறை வைத்திருந்த வேலூர் கோட்டையில் கி.பி.1806 ஆம் ஆண்டு  நிகழ்ந்த வேலூர் சிப்பாய் புரட்சியைப் பற்றித் தோழர் சாத்தனும், அதற்குப் பிறகு கி.பி.1857 இல்  நடைபெற்ற வடஇந்திய சுதந்திரப்போரைப் பற்றி தோழர் குப்பண்ணனும் எழுதி இருக்கிறார்கள். இந்த இரண்டு புரட்சிகளும் மிகப்பெரிய நூல்களாக தனித்தனியாகவே வெளி வந்துள்ளது. படியுங்கள் தோழர்களே ! அப்பொழுதுதான் ஜான்சிராணி, நானாசாஹிப் ,தாத்தியாதொபே போன்ற சுதந்திரப்போராட்ட வீரர்களின் வீரத்தைப்பற்றியும் அவர்களை  காட்டிகொடுத்த துரோகிகளைப்பற்றியும் ,அப்போது நிலவிய ஒற்றுமையின்மையை பற்றியும் நாம் அறிந்து கொள்ளமுடியும்.

 அடுத்து, உ.சி பற்றி நிறைய செய்திகளை வெளி கொணர்ந்திருக்கிறார் தோழர் மதிவாணன். வ.உ.சி , ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் கம்பெனி  உருவாக்கியது   , தூத்துக்குடி கோரல் ஆலைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம்கப்பல் கம்பெனி நஷ்டமடைந்து  போனதால் அவரின் ஏழ்மை நிலை , கோவைச்சிறையில் செக்கு இழுத்ததுகாங்கிரசின் துரோகம் போன்றவை அப்பெருமகனார்க்கு நேர்ந்த அவலத்தை படம் போட்டுக் கட்டுகிறது.   அதே போல் அவர் பெரியாரை தமது தலைவராக ஏற்றுக்கொண்டதும், அதை தந்தை பெரியார் அவர்கள் பெருந்தன்மையாக மறுத்து காங்கிரசிலே தொடர்ந்து இருக்க அவரை வேண்டிக்கொண்ட விஷயம் ஆச்சரியமான ஒன்று. மேலும் , ..சி அவர்கள் கோவைச் சிறையில் , ' பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால்தான் உண்பேன்" என்று கூறியதையும் , பிற்காலத்தில் அவரின் மனமாற்றத்தையும் பதிவு செய்திருக்கிறார் மதிவாணன்.

இறுதியாக பாஞ்சால  சிங்கம்  பகத் சிங் !

எப்படி மறக்க முடியும் இவனை!  பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ...இந்தப் பெயர்கள் இளைஞர்களின் வேதவாக்கல்லவா? கேளாத செவிகள் கேட்பதற்காக இந்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதையும் , இவர்களுக்கு காந்தி மற்றும் காங்கிரஸ் செய்த துரோகத்தையும்  , கி.பி. 1931 ஆம் ஆண்டு   மார்ச் 23 ந் தேதி பகத் சிங்கை தூக்கிலிடும் போது அவன் கட்டிய நெஞ்சுரம் போன்றவற்றை அறியாத இந்தியன் யாராவது இருப்பார்களா ? .

இந்நூலை வாசித்து முடித்தவுடன் நெஞ்சு கனத்தது மட்டுமல்லாமல் கோபமும் வந்தது உண்மை;  ஆம்!. இந்தப்போர் எங்களோடு தொடங்கவும் இல்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை என்ற பகத் சிங்கின் குரல் என் செவிமடல்களுக்குள் ஒலித்து கொண்டே இருக்கிறது!

சு . .கருப்பையா., email: vasipporkalam@gmail.com , skaruppiah.bsnl@gamil.com

2
நாவல்: வேள்வித் தீ
ஆசிரியர்: எம்.வி.வெங்கட்ராமன்
பதிப்பு: காலச்சுவடு கிளாசிக் வரிசை
அறிமுகம்   . வி.பாலகுமார்

சௌராஸ்ட்ரா சிறுபான்மை சமூகத்தைப் பற்றிய முக்கியமான பதிவுகளை தன் எழுத்தின் மூலம் அழுத்தமாக பதிந்தவர் எம்.வி.வெங்கட்ராமன். இவரது “காதுகள்” நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. எழுபதுகளின் மத்தியில் வெளியான நாவல் “வேள்வித் தீ” கும்பகோணத்தில் கடைநிலையிலிருந்து மத்தியதரத்துக்கு உயர்ந்த ஒரு நெசவாளனது வாழ்க்கை முறையையும் அவனது அகஅலைச்சலையும் பேசுகிறது. இடையே நெசவாளர்கள் மற்றும் அவர்களுக்குத் தொழில் தரும் முதலாளிகள் இவர்களுக்கு இடையே நடக்கும் தொழில்முறை சிக்கல்கள், போராட்டங்கள், மந்தமாகும் சந்தை நிலை, அதிலிருந்து மீண்டு வர அவர்கள் எடுக்கும் முயற்சிகள் என இந்த சமூகத்தின் அன்றைய வாழ்நிலையையும் தொட்டுச் செல்கிறது. ஆனால் கணவனைப் போற்றிப் பேணும், விகல்பமில்லாத மனதையுடைய, தன் உரிமைகளை பிறந்த இடத்தில் விட்டுக் கொடுக்காத, “நீங்க இங்க வந்தா என்ன கொண்டு வருவீங்க.. நான் பிறந்த வீடு வந்தா எனக்கு என்ன செய்வீங்க” என காரியக்காரச் சுட்டியாக இருக்கும் ஒரு இளம்பெண் ஒரு துரோகத்திற்கு பழி வாங்க என்ன முடிவெடுக்கிறாள் என்பது தான் “வேள்வித்தீ”யில் உள்ள தீ.
--- வி.பாலகுமார்