Tuesday 31 December 2013

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!




Friday 13 December 2013

வாழ்க்கையைச் சொல்லித் தாருங்கள்!

வாழ்க்கையைச் சொல்லித் தாருங்கள்!

(50 Rules Kids Wont Learn in School)  
ஆசிரியர் சார்லஸ் ஜே.சைக்ஸ்.

ந்தப் புத்தகத்தின் ஆசிரியர் 1990-களில் ஒரு டெலிவிஷன் ஷோவில் சில விஷயங்களை சொல்ல ஆரம்பித்தாராம். அந்த விஷயங்கள் அப்படியே பரவி இன்டர்நெட் உலகில் வெவ்வேறு ரூபம் எடுத்து கடைசியில், பில்கேட்ஸ் சொன்ன ப்ரில்லியன்ட் விஷயங்கள் என இந்தப் புத்தகத்தின் ஆசிரியருக்கே மெயில் வந்ததாம்! இனிமேலும் தாமதிக்கவேண்டாம் என்று நினைத்துதான் இந்தப் புத்தகத்தை எழுத ஆரம்பித்தாராம் புத்தகத்தின் ஆசிரியர் சார்லஸ் ஜே.சைக்ஸ்.

பள்ளியில் படிக்கும் குழந்தைகள் கட்டாயம் ஃபாலோ செய்யவேண்டிய பல விதிகளை இந்தப் புத்தகத்தில் சொல்லி இருக்கிறார் ஆசிரியர்.
இந்தப் புத்தகத்தில் ஆசிரியர் சொல்லும் முதல் ரூலே அதிரடியானது. உலகம் நியாயமானது இல்லை. அநியாயமான இந்த உலகத்தில், உங்கள் குழந்தையை வாழப் பழக்குங்கள் என்பதுதான் அது.

நிஜவாழ்க்கையில் நல்லவனும்  திறமையான வனும் ஜெயிப்பதில்லை. இப்படி சொன்னால் ஒப்புக்கொள்ளமாட்டீர்கள் இல்லையா? உங்கள் குழந்தையின் பள்ளியில் வேலை பார்க்கும் திறமையான கணக்கு மற்றும் அறிவியல் ஆசிரியர்கள் அத்தனைபேரின் சம்பளத்தையும் சேர்த்து ரியாலிட்டி ஷோவில் வரும் கெக்கே-பிக்கே தொகுப்பாளர் ஒரு ஷோவில் வாங்கிக்கொண்டு போகிறார்.

உங்களால் உலகத்தை நியாயமாகச் செயல்படவைக்க ஒருநாளும் முடியாது. ஆனால், இந்த அநியாய உலகின் செயல்பாடுகளுக்கு நீங்கள் எப்படி ரியாக்ட் செய்கிறீர்கள் என்பதை உங்களால் மாற்றிக்கொள்ள முடியும் என்கிறார் ஆசிரியர்.

உங்கள் பள்ளி உங்கள் சுயமரியாதையை எந்த அளவுக்கு காப்பாற்ற நினைக்கிறதோ, அந்த அளவுக்கு உலகம் காப்பாற்ற நினைக்காது. உதாரணத்துக்கு, என்னதான் படிக்கவில்லை  என்றா லும், அட, இவனுக்குன்னு ஏதாவது ஒரு திறமை இருக்கும் என்று சொல்லி சப்பைக்கட்டுகட்டி பள்ளிகள் குழந்தைகளின் சுயமரியாதையைக் காப்பாற்றும். ஆனால், வேலைக்குப் போனாலோ டார்கெட்டை முடிக்கலையா? அடுத்தமாசம் வேலைக்கு வராதே என்பார்கள்.

பள்ளி வாழ்க்கை முழுவதும் உன்னால் முடியும் என்று வீண் நம்பிக்கையை அள்ளித்தெளித்து வளர்த்துவிட்டு சந்தைக்கு வந்தபின் நீ ஒரு வெத்துவேட்டு என்று பொட்டிலடித்தாற்போல் சொல்வது தான் உலகம் என்கிறார் ஆசிரியர். காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது நிதர்சனத்துக்கு அப்பாற்பட்டது என்பதைக்  குழந்தை நிச்சயம் புரிந்துகொள்ளவேண்டும்.

பள்ளியில் குழந்தை கனவு காண்பதையெல்லாம் அடைய முடியாது என்பதைப் புரியவைக்க வேண்டும் என்று சொல்லும் ஆசிரியர், பள்ளிக்கூடத்தில் வேண்டுமென்றால் ஃபெயில் போடுவதை நிறுத்திவிட்டு, ரீ-அப்பியரன்ஸ் என்று போட்டு சர்ட்டிஃபிகேட் தரலாம். ஆனால், வாழ்க்கையில் பாஸ்/ஃபெயில் என்ற இரண்டே நிலைதான். ரீ-அப்பியரன்ஸுக்கு சான்ஸே இல்லை என்று கிண்டலடிக்கிறார் ஆசிரியர்.  

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது, எல்லோரிடமும் ஒரு திறமை இருக்குதுன்னு சால்ஜாப்பெல்லாம் சொல்லி வழியனுப்பிவிடுவார்கள். ஆனால், வேலையில் நீங்கள் போட்டிபோடப்போவது பெரும் புத்திசாலிகளுடன் என்பதை நினைவில்கொள்ளுங்கள் என்கிறார் ஆசிரியர்.

மிக முக்கியமாக அவமானத்தைப் பற்றி ஆசிரியர் சொல்லும்போது, பள்ளியில் அவமானத்தை எதிர்கொள்ளாதக் குழந்தை முழுமனிதனானபின் எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் என்கிறார். அவமானத்தை எப்படி எதிர்கொள்வது என்பதை குழந்தைகள் தெரிந்துவைத்துக் கொண்டேயாக வேண்டும் என்று ஆணித்தரமாக வாதிடுகிறார்.

பதின்வயதில் வரும் முட்டாள்தனமான எண்ணங்களாகிய 'நான் சின்னப்பிள்ளையாவே இருந்திருக்கலாமோ’, 'அந்த வீட்டில் பிறந்திருக்கலாமோ’, ’என் தம்பியா அவன் இருந்திருக்கலாமோ என்ற அகராதித்தனமான எண்ணங்களை அகற்ற கற்றுத்தர வேண்டும்என்கிறார் ஆசிரியர்.
மிகவும் சுவாரஸ்யமாகச் செய்யும் மற்றொரு ஒப்பீடு, வாழ்க்கையும் படிப்பும். வாழ்க்கையில் தொடர் ஓட்டம்தான். பள்ளி, கல்லூரியில் செமஸ்டர் விடுமுறைபோல வாழ்க்கையிலும் இதே சிஸ்டம்தான் என்று நினைத்துக்கொள்ளாதீர்கள். ஓய்வுக்கே வாய்ப்பில்லை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்கிறார்.

உங்களுக்கு கோபம் வருதா? அதனால் என்ன? என்றுதான் உலகம் நினைக்கவும் செயல்படவும் செய்யும். கோபம் வந்தால் சமாதானப்படுத்த உலகத்தில் யாருமிருக்கமாட்டார்கள் என்பதை யும், பெரிய ஆளாகும்போது இதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூலாகக் குழந்தைகளிடம் சொல்லுங்கள் என்றும் சொல்கிறார் ஆசிரியர்.

உன்னை யாராவது அல்லது எதாவது எப்போதும் கண்காணித்துக்கொண்டே இருப்பார்கள்/இருக்கும். இன்டர்நெட், க்ளாஸ் ரூம், ஆபீஸ், சிக்னல் என்று எல்லா இடத்திலும் கண்காணிப்பு தொடர்கிறது. ரகசியமாகச் செய்கிறேன் என்பது இந்த உலகில் எதுவுமில்லை என்பதையும் விளக்கிச் சொல்லவேண்டியதன் அவசியத்தை நிறைய உதாரணங்களின் மூலம் விளக்கியுள்ளார் ஆசிரியர்.

இவற்றையெல்லாம்விட அதிமுக்கியமாக ஏமாற்றுத்தனத்தை எதிர்கொள்வது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும். உள்ளன்று வைத்து புறமொன்று பேசுவோர்கள் தொடர்பு இல்லாமல் வாழ ஆசைப்படலாம். ஆனால், முடியாது. எனவே, இவர்களைக் கையாளும் திறனை குழந்தைகளுக்குச் சொல்லித்தந்தேயாக வேண்டும் என்கிறார் ஆசிரியர்.

என்னால் தப்பைப் பொறுத்துக்கொள்ளவே முடியாது என்று சொல்லி வளர்க்காதீர்கள். அதேமாதிரி, உங்கள் குழந்தையும் பெரியவனாகி சிறுதவறையும் பொறுத்துக்கொள்ளும் தன்மை யில்லாமல் புகைந்தால் அவனை ஒரு காமன்சென்ஸ் இல்லாதவனாகத்தான் உலகம் பார்க்கும் என்கிறார். நிர்வாகம் என்றால் கொஞ்சம் முன்னேபின்னேதான் இருக்கும் என்பதைப் புரியவையுங்கள் என்கிறார் ஆசிரியர்.

டெலிவிஷன் வாழ்க்கையல்ல என்பதைப் புட்டுப்புட்டு வைக்கும் ஆசிரியர், உங்கள் பிரச்னைக்கு முப்பது நிமிடம் (மைனஸ் கமர்ஷியல் ப்ரேக் டைம்) போதவேபோதாது. ரியாலிட்டி டிவி என்பதே ரியாலிட்டி இல்லை. பல டேக்குகள் வாங்குகிறார்கள் என்பதைக் கடைசியில் காண்பிக்கிறார்களே பார்த்ததில்லையா என்கிறார்.

மனிதர்களைச் சந்திக்கும்போது கண்ணைப் பார்த்து கணிக்க சொல்லிக்கொடுங்கள் என்கிறார். அடுத்தவரின் வெற்றி உங்களை ஒருபோதும் சோர்வடையச் செய்யாமல் இருக்கவேண்டும் என்று சொல்லிப் பழக்குங்கள் என்கிறார்.

நண்பர்கள், குடும்பம் ஆகியவற்றுக்கு இருக்கவேண்டிய எல்லைகளை சுத்தமாகச் சொல்லுங்கள் என்கிறார் ஆசிரியர். 'நீ ஒன்றும் பெர்ஃபெக்ட் இல்லை. அப்படி இருக்கவேண்டும் என்று எந்தக்  கட்டாயமும் உலகத்தில் இல்லை என்று சொல்லித்தாருங்கள்என்று சொல்லும் ஆசிரியர், கடைசி ரூலாய் ஒரேமுறை வாழும் வாழ்வில் இன்றைய நிஜத்தில் இருக்கும் நல்ல விஷயங்களை அனுபவிக்கச் சொல்லித் தாருங்கள் என்று சொல்லி முடிக்கிறார்.

இது குழந்தைகளுக்கான புத்தகம் என்றாலும், குழந்தையாக இருக்கும்போது நாம் படிக்காதக் கருத்துகள் பலவற்றைச் சொல்கிறது. நம் குழந்தைகளுக்கு நாம் சொல்லவேண்டிய நல்ல விஷயங்கள் பலவற்றைக்கொண்ட இந்தப் புத்தகத்தை நிச்சயம் விரும்பிப் படிக்கலாம்.


COURTESY: Senthil.T Mob: 9443100035

Saturday 30 November 2013

வருத்தம்!

தோழர்களே!

இந்த மாதம் ( நவம்பர்) வாசிப்போர்களத்தின்  புத்தக அறிமுக கூட்டம் நடத்த இயலவில்லை என்ற வருத்தத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். ( அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்பட  நூல் " ஏசு கதைகள்" பற்றிய  கருத்துரையும் நிலுவையில் உள்ளது).  நமது உறுப்பினர்களின் பல்வேறு வேலை பளு மற்றும்  எனது வெளி மாநிலப் பயணம் போன்ற காரணங்கள் இருந்தாலும் , கூட்டத்தை நடத்தாதது குறையாகவே தெரிகிறது. இதை ஈடுகட்டும் விதமாக வருகிற 14/12/2013 ந் தேதி நடைபெற இருக்கும் கூட்டம் திகழும் என்று கருதுகிறேன். டிசம்பர் மாதக் கூட்டம் திட்டமிட்டவாறு நடக்கும்.  நல்ல நூலுக்காக உங்களைப் போல் நானும் காத்திருக்கிறேன்.விரைவில் சந்திப்போம்.

வாசிப்போர்களத்துக்காக

------------சு.கருப்பையா.

Saturday 2 November 2013

ஒரு ரூபாய் டீச்சர்! (நேர் காணல்கள்) -வாசிக்கத் தகுந்த நூல்.

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
யு .மா.வாசுகி
பக்கங்கள் -118
விலை : ரூ.80/-

சமூகத்தில் தான் வாழ்ந்ததிற்க்கான அடையாளத்தை விட்டு சென்றுள்ள மனிதர்களையும், அவர்களது மனத்திண்மையையும், தியாகத்தையும் கடமை உணர்வுடன் வெளிக் கொணர்ந்துள்ளார் யு .மா.வாசுகி. இந்த புத்தகம் என் உள்ளத்தில் ஆழமாக புதைந்து கிடந்த பல உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்து விட்டன. சுருக்கமாக கூறவேண்டுமென்றால் 5 நேர்காணலில் 5 உயர்ந்த மனிதர்களை அடையாளம் காட்டியுள்ளது இந்த நூல்.

அவர்கள்..

1.     வை.கோ.அழகப்பன் ; தனது தந்தை சக்தி கோவிந்தன் பற்றி.
2.     கவிஞர்.சுகுமாரன்.
3.     எழுத்தாளர் கோபி கிருஷ்ணன்.
4.     வெட்டியான் திருமதி.சிந்தாமணி.
5.     திருமதி சரஸ்வதி அம்மாள்- ஒரு ரூபாய் டீச்சர்!


சக்தி கோவிந்தன்

வை.கோ.அழகப்பன் அவர்களின் பேட்டியில் , தனது தந்தை அவரை ஏழ்மையில் தள்ளிவிட்டுப் போய்விட்டதான தொனி தெரிகிறது. ஆனால் எனக்கு என்னவோ,  தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தமிழ் பேசும் இந்த மக்களுக்கு தாரை வார்த்து விட்டு தனது மகன் வை.கோ.அழகப்பனை பெட்டிக்கடை வைத்து (உழைத்து) பிழைத்து கொள் என்று கூறிய அப்பெருமகனின் பேருள்ளம் தான் தெரிகிறது. ஐயா, சக்தி கோவிந்தன் அவர்களே!  தமிழ்வாணன், ரா.கி.ரங்கராஜன் , தி.ஜ.ர , அழகிரிசாமி,ரகுநாதன், விஜயபாஸ்கரன் போன்றவர்களை உங்கள்  சக்திப் பட்டறையில் செதுக்கி உருவாக்கி விட்டும், T.S. சொக்கலிங்கம் அவர்கள் மொழியாக்கத்தில் பல சோவியத் இலக்கியங்களை மிகக் குறைந்த விலையில் வெளியிட்டு  நஷ்டமடைந்தும் ,   பெருந்தலைவர் காமராஜர் கேட்டுக் கொண்டதால் ஒரு ரூபாய்க்கு 500 பக்கங்கள் கொண்ட பாரதியார் கவிதைகளையும், அதே ஒரு ரூபாய்க்கு 500 பக்கங்கள் கொண்ட திருக்குறளையும் வெளியிட்டு மிகப் பெரிய சாதனையை செய்து உள்ளீர்கள்.  மங்கை, மஞ்சரி மற்றும் சக்தி போன்ற பல இதழ்களை தமிழ் மக்களுக்கு அளித்து தமிழ் இலக்கியத்திற்கு தொண்டு செய்துள்ளீர்கள். எப்படி ஐயா உங்களுக்கு மட்டும் இப்படி சிந்திக்க முடிந்தது?  இப்போதெல்லாம் எங்களால் குறைந்த விலையில் தமிழ் நூல்களை வாங்க முடியவில்லையே.  நீங்கள் இருக்கும் போது மலிவு விலையில் நூல்களை வெளிட்ட NCBH கூட இன்று அதிகம் விலை வைக்கும் நிலை. சில தினங்களுக்கு முன்பு "கரமசோவ் சகோதரர்கள்" நூல் ரூ.1300 கொடுத்து வாங்கினேன்!.

 ஐயா ! வாங்கிய கடனை அடைக்க , நீங்கள் காலமெல்லாம் சேர்த்து  வைத்திருந்த  நூல்களை ராய சொக்கலிங்கத்திற்கு கொடுத்த பொழுது எவ்வளவு வேதனை அடைந்திருப்பீர்கள்?. அதுவும் அவர் வீட்டுக்குப் போய் நூல்களை இரவல் வாங்கிப் படித்துவிட்டு  வந்திருக்கிறீர்கள்! எத்தகைய மனவலிமை உங்களுக்கு.   உங்கள் மகன், உங்களை "எல்லோரும் மறந்திட்டாங்க" என்று கூறியுள்ளார். இல்லை ஐயா! நீங்கள் ஜான் போன்ற சிலரின் மனதில் எப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பீர்கள் நான் உட்பட.

கவிஞர்.சுகுமாரன்

கவிஞர். சுகுமாரனின் பேட்டியில் நேர்மை தென்படுகிறது. மலையாளியான சுகுமாரன் தமிழில் கவிதைகள் புனைவதும், பெரியாரை, புதுமைப்பித்தனை , பிரம்மராஜனை  மற்றும் சுந்தரராமசாமியை பாராட்டுவதும்  யதார்த்தமாக உள்ளது.  அதே சமயத்தில் மிகச் சிறந்த மலையாள எழுத்தாளர் பால் சக்காரியாவையும் நமக்கு ஞாபகம் செய்கிறார். பால் சக்காரியாவின் "ஏசு கதைகள்" என்ற நூலை வாசித்துவிட்டு  நான் மிகவும் பிரமித்துவிட்டேன் (வாசிப்போர்களத்தில் அறிமுகம் செய்துள்ளேன் ).  அதே போல் ஜி.நாகராஜன் , ஜெயகாந்தன் போன்ற சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகளில் உள்ள ஒடுக்கட்டப்பட்ட மக்களின் வாழ்க்கைப் பதிவுகளை தேடுமாறு நமக்கு ஞாபகப்படுத்துகிறார். மலையாளம் தனக்குத் தாய்மொழி என்றாலும், தமிழ் தான்நான் கேட்டமொழி, பேசியமொழி, சிந்தித்த மொழி, கனவு கண்டமொழி என்று கூறுகிறார். மேலும் எழுத்து சாப்பாடு போடும் தொழில் இல்லை என்று கூறுகிறார். அந்த வார்த்தைகளில் உள்ள அழுத்தம் அவரின் உண்மையான வாழ்க்கையை நமக்கு எடுத்துக் கூறுகிறது.

கோபி கிருஷ்ணன்

கோபி! நீ ஒரு மன நலம் குன்றிய மனிதனா? மருத்துவ உலகம் உன்னை அப்படித்தான் அழைத்திருக்கும்!. உன் முரண்பட்ட உணர்வுகள், காமம், காதல் தோல்வி போன்றவைகளுக்கு நீ பலியாகிவிட்டாய் என்றே கருதுகிறேன். உன் முதல் காதல் (காமம்) தான் உன்னை நோயாளியாக மாற்றிவிட்டதாக கூறி இருந்தாய்.  உன் மனைவி நான்சி உன்னை மீட்டெடுத்திருக்கலாம் ஆனால்  அவளுடைய முறையற்ற பாலுணர்வு விருப்பத்தால் உன்னை வஞ்சித்து இருக்கிறாள்!. உனது துயரங்களையும் , மனத்துன்பங்களையும் மிகவும் யதார்த்தமாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். நீ ஒரு எழுத்தாளன் என்பதை அறியும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உனது " டேபிள் டென்னிஸ் " நாவலை தேடிக் கொண்டிருக்கிறேன். அதில் உன்னைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ளலாம் தானே!. எனக்கும் உன் போன்ற ஒரு சகோதரன் இருந்தான். ஆனால் உன்னுடைய தைரியம் அவனிடம் இருந்ததில்லை. எங்கோ போய் விட்டான்!. ஆனால் உன் போராட்டம் மிகுந்த வாழ்க்கை பலருக்கு பாடமாக இருக்கும், இருக்க வேண்டும்  . இத்தனை இயல்பாக,  தனது வாழ்க்கையை பகிர்ந்து கொண்டவர்கள் யாரும் இருந்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.

வெட்டியான் திருமதி.சிந்தாமணி

ஒரு பெண் , பிணம் எரிக்கும் வேலையில் ?.  என்ன தைரியம்!  ஒரு பிணம் எரித்தால் ரூ. 300 மிஞ்சும். மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று பிணம் வந்தாலே உனக்கு ரூ.1000/- தான் கிடைக்கும். அதை வைத்தும் , கூலிவேலை செய்தும் உன் மகனை வளர்த்துள்ளாய். அத்தோடு நீ செய்த தொழில் மூலம் ஆணாதிக்கச் சமுதாயத்திற்கு சாவு மணி அடித்திருக்கிறாய்.  நீ எதிர் கொண்ட சாதிப் பூசல்கள் தான் எத்தனை?.

சாமப் பயிர் அழகு சக்கிலியப் பொண்ணு அழகு"இன்னு சொல்றாங்க ? நான் அழகில்லாம இருக்கனா , எம்புள்ள குட்டிய அழகில்லாம இருக்குதுவளா? எல்லாரும் நல்ல அழகா இருக்கிறோம். பிறகு சாதியை சொல்லி ஏன் பிரிச்சு வச்சுட்டாங்க என்ற உன் வேள்விக்கு யாரும் விடை சொல்ல முடியாது! அவர்களுக்கு தெரிந்தாலும் கூடத் தான்.

திருமதி சரஸ்வதி அம்மாள்- ஒரு ரூபாய் டீச்சர்!

உங்களை பற்றி  அறிந்து கொண்ட பின்பு  "தியாகம்" என்ற வார்த்தைக்கு பதமாக " காந்திமதி அம்மாள் " என்று என் மனது எழுதிக் கொண்டது.  காந்தி, கஸ்தூரிபாய் ஆகியோர்களுடன் நேரடித்தொடர்பு, காந்தி சுடப்பட்டு இறந்த அதே நாளில் அதே இடத்தில நடந்த போலிஷ் துப்பாக்கிச் சூட்டில்  உங்கள்  கணவனை இழந்தது இவையெல்லாம்  பெரும்  துயரங்கள். கோட்சே,  காந்தியை மட்டுமல்ல உங்கள் வாழ்க்கையையும் சேர்த்து தான் கொன்று விட்டான். நாக்பூர் போராட்டத்தில் உங்கள் மூன்று குழந்தைகளையும் பறி கொடுத்து விட்டு நீங்கள் பரிதவித்த அவலம் என் கண்களில் கண்ணீரைத் திரளச் செய்தது. கடைசி வரைக்கும் அவர்கள் உங்களுக்கு கிடைக்கவில்லையே தாயே! உங்கள் தாய் மனம் எவ்வளவு வேதனை கொண்டிருக்கும்!. ஆனாலும் நீங்கள் மீண்டு எழுந்துவிட்டீர்கள். என்னே நெஞ்சுறுதி! தாயே! நாங்கள் அனுபவிக்கும் இந்த சுதந்திர வாழ்விற்குப் உங்களைப் போன்ற எத்தனை பெண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து உள்ளார்களோ? . நன்றி அம்மா நன்றி.

அது மட்டுமல்லாமல் பெயரளவுக்கு  ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு எத்தனை குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து உள்ளீர்கள். அந்தக் குழந்தைகள் அளப்பறிய சந்தோசத்துடன் எவ்வளவு அழகாக உங்களை " ஒரு ரூபாய் டீச்சர்" என்று அழைத்திருக்கும். அந்த வார்த்தைகள் உங்கள் காயங்களுக்கு சிறிதளவாவது மருந்தாக இருந்திருக்கும் அப்படித் தானே அம்மா? உங்கள் தியாகம் எங்களுக்கு எப்போதும் நினைவிருக்கும் அம்மா!

இறுதியாக நூலாசிரியர் யு.மா.வாசுகி அவர்களுக்கு நன்றி. ஒரு நூல் வெளியீட்டாளர், இலக்கியவாதி, படைப்பாளன், ஒடுக்கப்பட்ட ஒருத்தி, தியாகச் செம்மல் என்று 5 வெவ்வேறு தள மனிதர்களை அடையாளம் காணச் செய்து உள்ளீர்கள்! அதுமட்டுமல்ல  இவர்களைப் போன்று  சமூகத்திற்கு உரமாகிப் போன மனிதர்களை அடையாளம் காட்டவேண்டிய கடமை உனக்கும் இருக்கிறது என்பதை புரிய வைத்து விட்டீர்கள். மீண்டும் நன்றி.

வாசிப்போர்களம் சார்பாக: சு.கருப்பையா.



Tuesday 29 October 2013

சுமித்ரா (மலையாளம்)


நூல்: சுமித்ரா (மலையாளம்)
ஆசிரியர் : கல்பட்டா நாராயணன்
தமிழில்   : கே.வி.ஷைலஜா
வெளியிடு : வம்சி புக்ஸ்
பக்கங்கள் : 119
விலை      : ரூ.100
தொடர்பு     : 9444867023


கல்பட்டா நாராயணின் இந்த நூல் ஏற்கனவே நாம் வாசித்து பழகி இருந்த நாவலுக்கான இலக்கணத்தை அல்லது அடையாளத்தை உடைத்து புதிய பரிணாமத்தை நமக்குக் காட்டியுள்ளது. சுமித்திராவின் மரணத்தில் துவங்கி அவளை சுடுகாட்டில் எரிக்கப்படும் வரை உள்ள நிகழ்வே இந்த நாவல். இந்த ஒற்றை வரியில் ஒரு நாவலா?

ஆம்!

சுமித்திரா பிணமாகக் கிடத்தப்பட்டிருக்கிறாள்.  அவளுக்கு அஞ்சலி செலுத்தவரும்  பழகிப்போன மனிதர்களின் மன உணர்வின்  மூலம் சுமித்திராவையும் அந்தக் கிராமத்தையும் மிக அழகாகச் சொல்லியுள்ளார் கல்பட்டா நாராயணன். பதினைந்து பகுதிகளைக் கொண்ட இந்த நூறுபக்க நாவலை படிக்க பத்து நாட்களை நான் எடுத்துக்கொண்டேன். சுமித்திராவை தெரிந்து கொண்டவர்களும் அவளது உறவுகளும் அவளைப் இப்படித்தான் பார்த்தார்கள்....

Ø  மரியா: சுமித்திராவிடம் கொடுத்து வைத்திருந்த 5 பவுன் செயினை எப்படி வாங்குவது என்று தவிக்கிறாள்.

Ø  கீதா: எனது  ரகசிய உறவுகளையும் , துயரங்களையும் பகிர்ந்துகொண்டாய். நீ எனக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தாய்.  என் பிரியமானவளே போய் வா என்று விடை கொடுக்கிறாள். 

Ø  அப்பைக்குருப்பு: சுமித்திராவின் முறைப்பையன். சுமித்திரா ஒருமுறை தனது அழகான மார்பகங்களை கண்ணாடியில் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் போது, இவனும் பார்த்து  ரசிக்கிறான் .  அந்த நினைப்பு மேலோங்க அப்பைக்குருப்பு இப்பொழுதும் அவளை உற்றுப் பார்க்கிறான் .
Ø  கௌடர் : ஆஸ்துமா நோயாளியான தனக்கு உதவியாக  இருந்த சுமித்திராவை மிகவும் நன்றியுடன் நினைத்து கொள்கிறார். அடுத்த முறை ஆஸ்துமா வந்தால் யார் உதவுவார்கள் என்று தவிக்கிறார்.

Ø  சுபைதா: கல்லூரித்தோழி . சிறுவயதில் அவள் வளர்த்த யானைக்குட்டி அவளது ஆடையை பிடித்து இழுத்து அவளை நிர்வாணமாக்கி விடுகிறது. அதனால் அதை கொன்று விடுகிறாள். அந்தக் குற்ற மனப்பான்மையையும்தனது பயத்தையும் சுமித்திரா போக்கியதை நன்றுயுடன் நினைத்துக் கொள்கிறாள்.

Ø  ராகவன் பொதுவாள்: வாசுதேவனின் அழகான மனைவி சுமித்திராவை ரகசியமாகப் புணர்ந்தவன் இவனே! சுமித்திராவின் பலவீனமான நேரத்தில் அவளை வசப்படுத்திய  பாத்திரம்  விற்க வந்த வியாபாரி ராகவன் , அதன் பிறகு அவளை தொந்தரவு செய்தது இல்லை என்பது ஆச்சரியமான விசயம் .  அன்று பாத்திரம் விற்க வரும் போது சுமித்திரா இறந்து விட்டதை அறிந்து அவளைப் பார்க்காமலே திரும்பி விடுகிறான். அவளின் ரகசியம் அவனுடன் மட்டுமே தங்கி விடுகிறது.

Ø  மாதவி : இவள் மாதவ வண்ணானின் மனைவி. அவனுக்கு மட்டுமல்லை. அந்தக்கிராமத்தில் உள்ள அநேக ஆண்களுக்கும் தான். சுமித்திராவின் அந்தரங்கதோழி. சுமித்திரா அவளுடன் பகிர்ந்து கொண்ட விசயங்களை நினைத்துக் கொள்கிறாள்.

Ø  அனுசூயா: அம்மாவைப் பிடிக்காமல் கல்லூரி விடுதிக்குச் சென்று விட்ட அனுசூயா விழுந்தடித்துக்கொண்டு ஓடிவருகிறாள். அம்மாவிற்கு தனது  கடைசி முத்தங்களை கொடுக்கிறாள். இந்தப்பகுதி தாய் மகள் உறவின் கவித்துவமான பகுதியை நமக்கு ஞாபகப்படுத்தும். 

கடைசியாக சுமித்திரா எரிக்கப்படுகிறாள்.

நாமும் எத்தனையோ மரணம் சம்பவிதித்த வீட்டிற்கு சென்று இருப்போம். நமக்கும் இத்தகைய உணர்வு வந்து போய் இருக்கும். ஆனாலும் இந்த நாவல்  என்னுள் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. அத்தோடு சுமித்திரா ஏன் இறந்தாள், எப்படி இறந்தாள் என்பது ரகசியமாகவே இருந்து விடுகிறது.

நாவலாசிரியர் கல்பட்டா நாராயணன், கேரளா வயநாட்டு பகுதியைச் சேர்ந்த கல்பட்டாக் கிராமத்தையும் அந்த மக்களின் வாழ்க்கைச் சித்திரத்தையும் மிகவும் யதார்த்தமாக கொடுத்துள்ளார். அதேபோல் கே.வி.ஷைலஜா, இந்த நாவலை  மிக அழகாக, கச்சிதமாக மொழி பெயர்த்துள்ளார். இலக்கிய தரம் வாய்ந்த உன்னதமான நாவல் இது.

வாசிப்போர்களம் சார்பாக: சு.கருப்பையா.