நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
யு .மா.வாசுகி
பக்கங்கள் -118
விலை : ரூ.80/-
சமூகத்தில் தான் வாழ்ந்ததிற்க்கான அடையாளத்தை விட்டு சென்றுள்ள மனிதர்களையும், அவர்களது மனத்திண்மையையும், தியாகத்தையும் கடமை உணர்வுடன் வெளிக்
கொணர்ந்துள்ளார் யு .மா.வாசுகி. இந்த புத்தகம் என் உள்ளத்தில் ஆழமாக புதைந்து
கிடந்த பல உணர்வுகளை கிளர்ந்தெழச் செய்து விட்டன. சுருக்கமாக
கூறவேண்டுமென்றால் 5 நேர்காணலில் 5 உயர்ந்த மனிதர்களை
அடையாளம் காட்டியுள்ளது இந்த நூல்.
அவர்கள்..
1.
வை.கோ.அழகப்பன் ;
தனது தந்தை சக்தி
கோவிந்தன் பற்றி.
2.
கவிஞர்.சுகுமாரன்.
3.
எழுத்தாளர் கோபி கிருஷ்ணன்.
4.
வெட்டியான் திருமதி.சிந்தாமணி.
5.
திருமதி சரஸ்வதி அம்மாள்- ஒரு ரூபாய் டீச்சர்!
சக்தி கோவிந்தன்
வை.கோ.அழகப்பன் அவர்களின் பேட்டியில் , தனது தந்தை அவரை ஏழ்மையில் தள்ளிவிட்டுப்
போய்விட்டதான தொனி தெரிகிறது. ஆனால் எனக்கு என்னவோ, தனது உடல், பொருள், ஆவி அனைத்தையும் தமிழ் பேசும் இந்த மக்களுக்கு தாரை
வார்த்து விட்டு தனது மகன் வை.கோ.அழகப்பனை பெட்டிக்கடை வைத்து (உழைத்து) பிழைத்து கொள் என்று கூறிய அப்பெருமகனின் பேருள்ளம் தான் தெரிகிறது. ஐயா, சக்தி கோவிந்தன்
அவர்களே! தமிழ்வாணன், ரா.கி.ரங்கராஜன் , தி.ஜ.ர , அழகிரிசாமி,ரகுநாதன், விஜயபாஸ்கரன் போன்றவர்களை
உங்கள் சக்திப் பட்டறையில் செதுக்கி
உருவாக்கி விட்டும்,
T.S. சொக்கலிங்கம்
அவர்கள் மொழியாக்கத்தில் பல சோவியத் இலக்கியங்களை மிகக் குறைந்த விலையில்
வெளியிட்டு நஷ்டமடைந்தும் , பெருந்தலைவர் காமராஜர் கேட்டுக் கொண்டதால் ஒரு ரூபாய்க்கு 500 பக்கங்கள் கொண்ட பாரதியார்
கவிதைகளையும்,
அதே ஒரு ரூபாய்க்கு 500 பக்கங்கள் கொண்ட
திருக்குறளையும் வெளியிட்டு மிகப் பெரிய சாதனையை செய்து உள்ளீர்கள். மங்கை, மஞ்சரி மற்றும் சக்தி போன்ற
பல இதழ்களை தமிழ் மக்களுக்கு அளித்து தமிழ் இலக்கியத்திற்கு தொண்டு
செய்துள்ளீர்கள். எப்படி ஐயா உங்களுக்கு மட்டும் இப்படி சிந்திக்க முடிந்தது? இப்போதெல்லாம் எங்களால் குறைந்த விலையில் தமிழ்
நூல்களை வாங்க முடியவில்லையே.
நீங்கள் இருக்கும் போது மலிவு விலையில் நூல்களை வெளிட்ட NCBH கூட இன்று அதிகம் விலை வைக்கும் நிலை. சில தினங்களுக்கு முன்பு "கரமசோவ்
சகோதரர்கள்" நூல் ரூ.1300 கொடுத்து வாங்கினேன்!.
ஐயா ! வாங்கிய கடனை அடைக்க , நீங்கள் காலமெல்லாம்
சேர்த்து வைத்திருந்த நூல்களை ராய சொக்கலிங்கத்திற்கு கொடுத்த பொழுது
எவ்வளவு வேதனை அடைந்திருப்பீர்கள்?. அதுவும் அவர் வீட்டுக்குப் போய் நூல்களை இரவல் வாங்கிப்
படித்துவிட்டு வந்திருக்கிறீர்கள்!
எத்தகைய மனவலிமை உங்களுக்கு. உங்கள் மகன், உங்களை "எல்லோரும்
மறந்திட்டாங்க" என்று கூறியுள்ளார். இல்லை ஐயா! நீங்கள் ஜான் போன்ற சிலரின்
மனதில் எப்போதும் வாழ்ந்து கொண்டு தான் இருப்பீர்கள் நான் உட்பட.
கவிஞர்.சுகுமாரன்
கவிஞர். சுகுமாரனின் பேட்டியில் நேர்மை தென்படுகிறது. மலையாளியான சுகுமாரன் தமிழில்
கவிதைகள் புனைவதும்,
பெரியாரை, புதுமைப்பித்தனை , பிரம்மராஜனை மற்றும் சுந்தரராமசாமியை பாராட்டுவதும் யதார்த்தமாக உள்ளது. அதே சமயத்தில் மிகச் சிறந்த மலையாள எழுத்தாளர்
பால் சக்காரியாவையும் நமக்கு ஞாபகம் செய்கிறார். பால்
சக்காரியாவின் "ஏசு கதைகள்" என்ற நூலை வாசித்துவிட்டு நான் மிகவும் பிரமித்துவிட்டேன் (வாசிப்போர்களத்தில்
அறிமுகம் செய்துள்ளேன் ). அதே போல் ஜி.நாகராஜன் , ஜெயகாந்தன் போன்ற சிறந்த
எழுத்தாளர்களின் படைப்புகளில் உள்ள ஒடுக்கட்டப்பட்ட மக்களின் வாழ்க்கைப் பதிவுகளை
தேடுமாறு நமக்கு ஞாபகப்படுத்துகிறார். மலையாளம் தனக்குத் தாய்மொழி என்றாலும், தமிழ் தான், நான் கேட்டமொழி, பேசியமொழி, சிந்தித்த மொழி, கனவு கண்டமொழி என்று கூறுகிறார். மேலும் எழுத்து
சாப்பாடு போடும் தொழில் இல்லை என்று கூறுகிறார். அந்த வார்த்தைகளில்
உள்ள அழுத்தம் அவரின் உண்மையான வாழ்க்கையை நமக்கு
எடுத்துக் கூறுகிறது.
கோபி கிருஷ்ணன்
கோபி! நீ ஒரு மன நலம் குன்றிய மனிதனா? மருத்துவ உலகம் உன்னை அப்படித்தான்
அழைத்திருக்கும்!. உன் முரண்பட்ட உணர்வுகள், காமம், காதல் தோல்வி போன்றவைகளுக்கு நீ பலியாகிவிட்டாய் என்றே கருதுகிறேன்.
உன் முதல் காதல் (காமம்) தான் உன்னை நோயாளியாக மாற்றிவிட்டதாக கூறி
இருந்தாய். உன் மனைவி நான்சி உன்னை
மீட்டெடுத்திருக்கலாம் ஆனால் அவளுடைய
முறையற்ற பாலுணர்வு விருப்பத்தால் உன்னை வஞ்சித்து இருக்கிறாள்!. உனது துயரங்களையும் , மனத்துன்பங்களையும் மிகவும்
யதார்த்தமாக பகிர்ந்து கொண்டுள்ளீர்கள். நீ ஒரு எழுத்தாளன் என்பதை அறியும்
போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உனது " டேபிள் டென்னிஸ் " நாவலை
தேடிக் கொண்டிருக்கிறேன். அதில் உன்னைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ளலாம்
தானே!. எனக்கும் உன் போன்ற ஒரு சகோதரன் இருந்தான். ஆனால் உன்னுடைய
தைரியம் அவனிடம் இருந்ததில்லை. எங்கோ போய் விட்டான்!. ஆனால் உன் போராட்டம்
மிகுந்த வாழ்க்கை பலருக்கு பாடமாக இருக்கும், இருக்க வேண்டும் . இத்தனை இயல்பாக, தனது வாழ்க்கையை பகிர்ந்து கொண்டவர்கள் யாரும்
இருந்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகிறேன்.
வெட்டியான் திருமதி.சிந்தாமணி
ஒரு பெண் , பிணம் எரிக்கும் வேலையில் ?. என்ன தைரியம்! ஒரு பிணம் எரித்தால் ரூ. 300 மிஞ்சும்.
மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று பிணம் வந்தாலே உனக்கு ரூ.1000/- தான்
கிடைக்கும். அதை வைத்தும் ,
கூலிவேலை செய்தும்
உன் மகனை வளர்த்துள்ளாய். அத்தோடு நீ செய்த தொழில்
மூலம் ஆணாதிக்கச் சமுதாயத்திற்கு சாவு மணி அடித்திருக்கிறாய். நீ எதிர் கொண்ட சாதிப்
பூசல்கள் தான் எத்தனை?.
“சாமப் பயிர் அழகு சக்கிலியப்
பொண்ணு அழகு"இன்னு சொல்றாங்க ? நான் அழகில்லாம இருக்கனா , எம்புள்ள குட்டிய அழகில்லாம
இருக்குதுவளா?
எல்லாரும் நல்ல அழகா
இருக்கிறோம். பிறகு சாதியை சொல்லி ஏன் பிரிச்சு வச்சுட்டாங்க என்ற உன் வேள்விக்கு யாரும்
விடை சொல்ல முடியாது! அவர்களுக்கு
தெரிந்தாலும் கூடத் தான்.
திருமதி சரஸ்வதி அம்மாள்- ஒரு ரூபாய் டீச்சர்!
உங்களை பற்றி அறிந்து கொண்ட
பின்பு "தியாகம்" என்ற
வார்த்தைக்கு பதமாக " காந்திமதி அம்மாள் " என்று என் மனது எழுதிக்
கொண்டது. காந்தி, கஸ்தூரிபாய் ஆகியோர்களுடன்
நேரடித்தொடர்பு,
காந்தி சுடப்பட்டு
இறந்த அதே நாளில் அதே இடத்தில நடந்த போலிஷ் துப்பாக்கிச் சூட்டில் உங்கள் கணவனை இழந்தது இவையெல்லாம் பெரும்
துயரங்கள். கோட்சே, காந்தியை மட்டுமல்ல உங்கள் வாழ்க்கையையும்
சேர்த்து தான் கொன்று விட்டான். நாக்பூர்
போராட்டத்தில் உங்கள் மூன்று குழந்தைகளையும் பறி கொடுத்து விட்டு நீங்கள்
பரிதவித்த அவலம் என் கண்களில் கண்ணீரைத் திரளச் செய்தது. கடைசி வரைக்கும் அவர்கள்
உங்களுக்கு கிடைக்கவில்லையே தாயே! உங்கள் தாய் மனம்
எவ்வளவு வேதனை கொண்டிருக்கும்!. ஆனாலும் நீங்கள் மீண்டு எழுந்துவிட்டீர்கள். என்னே நெஞ்சுறுதி!
தாயே! நாங்கள் அனுபவிக்கும் இந்த சுதந்திர வாழ்விற்குப் உங்களைப் போன்ற எத்தனை
பெண்கள் தங்கள் வாழ்க்கையை தொலைத்து உள்ளார்களோ? . நன்றி அம்மா நன்றி.
அது மட்டுமல்லாமல் பெயரளவுக்கு ஒரு
ரூபாய் வாங்கிக் கொண்டு எத்தனை குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்து
உள்ளீர்கள். அந்தக் குழந்தைகள்
அளப்பறிய சந்தோசத்துடன் எவ்வளவு அழகாக உங்களை " ஒரு ரூபாய் டீச்சர்"
என்று அழைத்திருக்கும். அந்த வார்த்தைகள் உங்கள்
காயங்களுக்கு சிறிதளவாவது மருந்தாக இருந்திருக்கும் அப்படித் தானே அம்மா? உங்கள் தியாகம் எங்களுக்கு
எப்போதும் நினைவிருக்கும் அம்மா!
இறுதியாக நூலாசிரியர் யு.மா.வாசுகி அவர்களுக்கு நன்றி. ஒரு நூல் வெளியீட்டாளர், இலக்கியவாதி, படைப்பாளன், ஒடுக்கப்பட்ட ஒருத்தி, தியாகச் செம்மல் என்று 5 வெவ்வேறு தள மனிதர்களை அடையாளம்
காணச் செய்து உள்ளீர்கள்! அதுமட்டுமல்ல இவர்களைப்
போன்று சமூகத்திற்கு உரமாகிப் போன
மனிதர்களை அடையாளம் காட்டவேண்டிய கடமை உனக்கும் இருக்கிறது என்பதை புரிய வைத்து
விட்டீர்கள். மீண்டும் நன்றி.
வாசிப்போர்களம் சார்பாக: சு.கருப்பையா.
Tweet | |||||
அறிமுகமே, அந்த நூலைத் தேடிச்சென்று படிக்க வேண்டும் என்னும் ஆவலை உண்டாக்கியுள்ளது. கொடுங்கள் அல்லது சொல்லுங்கள் வாங்கிப் படிக்க...
ReplyDelete