Tuesday, 29 October 2013

சுமித்ரா (மலையாளம்)


நூல்: சுமித்ரா (மலையாளம்)
ஆசிரியர் : கல்பட்டா நாராயணன்
தமிழில்   : கே.வி.ஷைலஜா
வெளியிடு : வம்சி புக்ஸ்
பக்கங்கள் : 119
விலை      : ரூ.100
தொடர்பு     : 9444867023


கல்பட்டா நாராயணின் இந்த நூல் ஏற்கனவே நாம் வாசித்து பழகி இருந்த நாவலுக்கான இலக்கணத்தை அல்லது அடையாளத்தை உடைத்து புதிய பரிணாமத்தை நமக்குக் காட்டியுள்ளது. சுமித்திராவின் மரணத்தில் துவங்கி அவளை சுடுகாட்டில் எரிக்கப்படும் வரை உள்ள நிகழ்வே இந்த நாவல். இந்த ஒற்றை வரியில் ஒரு நாவலா?

ஆம்!

சுமித்திரா பிணமாகக் கிடத்தப்பட்டிருக்கிறாள்.  அவளுக்கு அஞ்சலி செலுத்தவரும்  பழகிப்போன மனிதர்களின் மன உணர்வின்  மூலம் சுமித்திராவையும் அந்தக் கிராமத்தையும் மிக அழகாகச் சொல்லியுள்ளார் கல்பட்டா நாராயணன். பதினைந்து பகுதிகளைக் கொண்ட இந்த நூறுபக்க நாவலை படிக்க பத்து நாட்களை நான் எடுத்துக்கொண்டேன். சுமித்திராவை தெரிந்து கொண்டவர்களும் அவளது உறவுகளும் அவளைப் இப்படித்தான் பார்த்தார்கள்....

Ø  மரியா: சுமித்திராவிடம் கொடுத்து வைத்திருந்த 5 பவுன் செயினை எப்படி வாங்குவது என்று தவிக்கிறாள்.

Ø  கீதா: எனது  ரகசிய உறவுகளையும் , துயரங்களையும் பகிர்ந்துகொண்டாய். நீ எனக்கு மிகவும் ஆறுதலாய் இருந்தாய்.  என் பிரியமானவளே போய் வா என்று விடை கொடுக்கிறாள். 

Ø  அப்பைக்குருப்பு: சுமித்திராவின் முறைப்பையன். சுமித்திரா ஒருமுறை தனது அழகான மார்பகங்களை கண்ணாடியில் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் போது, இவனும் பார்த்து  ரசிக்கிறான் .  அந்த நினைப்பு மேலோங்க அப்பைக்குருப்பு இப்பொழுதும் அவளை உற்றுப் பார்க்கிறான் .
Ø  கௌடர் : ஆஸ்துமா நோயாளியான தனக்கு உதவியாக  இருந்த சுமித்திராவை மிகவும் நன்றியுடன் நினைத்து கொள்கிறார். அடுத்த முறை ஆஸ்துமா வந்தால் யார் உதவுவார்கள் என்று தவிக்கிறார்.

Ø  சுபைதா: கல்லூரித்தோழி . சிறுவயதில் அவள் வளர்த்த யானைக்குட்டி அவளது ஆடையை பிடித்து இழுத்து அவளை நிர்வாணமாக்கி விடுகிறது. அதனால் அதை கொன்று விடுகிறாள். அந்தக் குற்ற மனப்பான்மையையும்தனது பயத்தையும் சுமித்திரா போக்கியதை நன்றுயுடன் நினைத்துக் கொள்கிறாள்.

Ø  ராகவன் பொதுவாள்: வாசுதேவனின் அழகான மனைவி சுமித்திராவை ரகசியமாகப் புணர்ந்தவன் இவனே! சுமித்திராவின் பலவீனமான நேரத்தில் அவளை வசப்படுத்திய  பாத்திரம்  விற்க வந்த வியாபாரி ராகவன் , அதன் பிறகு அவளை தொந்தரவு செய்தது இல்லை என்பது ஆச்சரியமான விசயம் .  அன்று பாத்திரம் விற்க வரும் போது சுமித்திரா இறந்து விட்டதை அறிந்து அவளைப் பார்க்காமலே திரும்பி விடுகிறான். அவளின் ரகசியம் அவனுடன் மட்டுமே தங்கி விடுகிறது.

Ø  மாதவி : இவள் மாதவ வண்ணானின் மனைவி. அவனுக்கு மட்டுமல்லை. அந்தக்கிராமத்தில் உள்ள அநேக ஆண்களுக்கும் தான். சுமித்திராவின் அந்தரங்கதோழி. சுமித்திரா அவளுடன் பகிர்ந்து கொண்ட விசயங்களை நினைத்துக் கொள்கிறாள்.

Ø  அனுசூயா: அம்மாவைப் பிடிக்காமல் கல்லூரி விடுதிக்குச் சென்று விட்ட அனுசூயா விழுந்தடித்துக்கொண்டு ஓடிவருகிறாள். அம்மாவிற்கு தனது  கடைசி முத்தங்களை கொடுக்கிறாள். இந்தப்பகுதி தாய் மகள் உறவின் கவித்துவமான பகுதியை நமக்கு ஞாபகப்படுத்தும். 

கடைசியாக சுமித்திரா எரிக்கப்படுகிறாள்.

நாமும் எத்தனையோ மரணம் சம்பவிதித்த வீட்டிற்கு சென்று இருப்போம். நமக்கும் இத்தகைய உணர்வு வந்து போய் இருக்கும். ஆனாலும் இந்த நாவல்  என்னுள் மிகப்பெரிய அதிர்வை ஏற்படுத்தியது என்பது மறுக்க முடியாத உண்மை. அத்தோடு சுமித்திரா ஏன் இறந்தாள், எப்படி இறந்தாள் என்பது ரகசியமாகவே இருந்து விடுகிறது.

நாவலாசிரியர் கல்பட்டா நாராயணன், கேரளா வயநாட்டு பகுதியைச் சேர்ந்த கல்பட்டாக் கிராமத்தையும் அந்த மக்களின் வாழ்க்கைச் சித்திரத்தையும் மிகவும் யதார்த்தமாக கொடுத்துள்ளார். அதேபோல் கே.வி.ஷைலஜா, இந்த நாவலை  மிக அழகாக, கச்சிதமாக மொழி பெயர்த்துள்ளார். இலக்கிய தரம் வாய்ந்த உன்னதமான நாவல் இது.

வாசிப்போர்களம் சார்பாக: சு.கருப்பையா.


1 comment:

  1. எதார்த்தம் எப்போதுமே அதிர்ச்சி தருவது மட்டுமல்ல, நம்மை ஒரு உலுக்கு உலுக்குவதும் கூட. வாசிப்போர் களத்தில் இன்னும் விரிவாக பகிர்ந்து கொண்டீர்கள். ...தொடரட்டும் தங்களின் வாசிப்பை நேசித்தலும், நேசித்தலை சரியாக பதிவு செய்யும் பணியும்.

    ReplyDelete