Friday, 14 October 2016

”புறாக்காரர் வீடு” தொகுப்பு குறித்து எழுத்தாளர். பொள்ளாச்சி அபி அவர்களின் விமர்சனம்



வணக்கம் தோழர் பாலா..!

உங்கள் புறாக்காரர் வீடு சிறுகதைத் தொகுப்பை இப்போதுதான் வாசித்து முடித்தேன்.முதல் நூல் ஒரு மொழிபெயர்ப்பு நூல் என்பதையும்.இது உங்கள் முதல் சிறுகதைத் தொகுப்பு என்பதையும் அறிந்து மிக்க மகிழ்ச்சி.வாழ்த்துக்கள்.!

உருவெளித் தோற்றம் என்ற முதல் கதையைப் படித்து முடித்தவுடன் சில எண்ணங்கள் மனதிற்குள் தோன்றியது.அது மற்ற கதைகள் அனைத்தும் படித்து முடிக்கும் வரையும் தொடர்ந்தது.அது என்னவென்று இறுதியில் சொல்கிறேன்.

உங்கள் தொகுப்பிற்கான எனது கருத்தை எழுத்தாளர் பாலகுமார் விஜயராமன் அவர்களுக்கு எழுதுவதா..? அல்லது நண்பன் பாலாவிற்கு எழுதுவதா..? என்ற சிறு குழப்பம் சில நிமிடங்கள் நீடித்தது.பின் நண்கனுக்கே எழுதுவது சரியாக இருக்கும் என்று தீர்மானித்துக் கொண்டே இதனை எழுதத் துணிந்தேன்.

தொகுப்பின் முதல் கதையான உருவெளித் தோற்றம்,ஒரு அமானுஷ்யக் கதையைப் போல,நீண்டு சென்று சட்டென்று முடிந்துவிட்டது போல இருந்தது.

சமிக்ஞை,கைப்பிடி மண் ஆகிய கதைகள் சூழலியில் நோக்கில்,இயற்கைக்கு மாறான மனிதனின் செயல்பாடுகளினால் விளையப் போகும் கேடுகளை உணர்த்துகின்ற முக்கியமான குறியீடுகளை கொண்டதாக நான் புரிந்து கொண்டேன்.

புறாக்காரர் வீடு கதையை உங்கள் வாழ்வியல் அனுபவங்களை,அதற்கேயுரிய நுட்பங்களோடு மிக அழகாக விவரித்திருந்திர்கள்.புறாக்களின் வாழ்வோடு இணைந்து வாழப் பழகிவிட்ட ஒரு மனிதரின்,குடும்பத்தின் சிதைவுகளை காலம் எப்படி உருவாக்குகிறதென்றும்,அதனைத் தவிர்க்க முடியாத இயலாமையை சகித்துக் கொண்டு மேலும் வாழ வேண்டியிருக்கின்ற நிர்ப்பந்தத்தையும் அந்தக் கதை வெளிப்படுத்தும் போது,சற்று நேரம் நானும், காணாமல் போன அந்தப் புறாக்களைத் தேடிக் கொண்டு வெட்டவெளி வானத்தில் அலைவதாக ஒரு கற்பனைக்குள்ளானேன்.

நாகதேவதை கதை..என்னதான் கற்பனையென்றாலும்,,ஒரு குழந்தையின் இருப்பு என்பது பணம் காசு புதையல் என எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது என்பதை அருமையாக உணர்த்திற்று.அதிலும் அந்தக் கதையின் நாயகன் இறுதிக் காட்சியில் பதை பதைக்கும்போது.அவனோடு சேர்ந்து நானும் பதைத்து பதறி,பின் கோடாங்கியின் பூசை நிறுத்தப்பட்டதைக் கண்டு நானும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டேன்.
மணமுறிவு நாள் எனும் கதை,முடிகிற இடத்திலிருந்து புதிதாகவொரு கதை துவங்குகின்றது என்பதைப் புரிந்து கொள்ளச் செய்வது வாசகனுக்கு நீங்கள் தந்திருக்கும் சுகமான அனுபவம்.

எழுதுவதற்கென்று ஒரு காலத்தில் இருந்த தளங்களும்,அதில் எழுதுபவன் மட்டுமே படைப்பாளி என்றிருந்த நிலை,சமூக வலைத்தளங்கள் வந்தபின்பு எழுதுகிற எல்லோருமே எழுத்தாளர்கள்தான் என்ற பரிணாம வளர்ச்சியை அடைந்திருக்கிறது.

இதுவொரு பக்கம் வளர்ச்சியாகப் பார்க்கின்ற அதே சமயத்தில்,எங்கேயும் விளைவுக்கு எதிர் விளைவுண்டு என்ற தத்துவமே போல்,இதிலும் எதனை எழுதினால் அல்லது வெளிப்படுத்தினால் தன்மீதான கவனத்தை ஈர்க்கமுடியும் என்ற தேடல் மிகுந்துவிட்டது.இது வளர்ச்சிக்கு எதிரான வீக்கமாக வளர்ந்து கொண்டு இருக்கிறது.ஒவ்வொருவரும் தனக்கென தனிப்பாணியை பின்பற்றத் துவங்கிவிடுகின்றனர். அவர்களின் அந்தப்பாணி என்பது சாதி,மத எதிர்ப்பாக இருக்கலாம்,அல்லது ஆதரவாக இருக்கலாம்.மத்திய மாநில அரசுகளின் மீதான விமர்சனமாக இருக்கலாம்.கொலை கற்பழிப்பு செய்திகளாக மட்டுமேகூட இருக்கலாம்.எதிலும் தன்மீதான கவனக்குவிப்பை ஏற்படுத்துகின்ற முயற்சியில் லஞ்ச லாவண்யத்தை,ஊழலை வெளிப்படுத்துகிறேன் பேர்வழி என சிலர் இவ்வாறு கிளம்பியிருப்பதும்,இதற்காகவே அப்பாவிகள் சிலர் பலியாக்கப் படுவதும்-“வாங்கச் சொன்ன ஆபீசர் தப்பிச்சுடுவான்,வாங்கி வெச்ச ப்யூன் சிக்கிக்கிடுவான்..”; என்பது போல-தொடர்ந்து நடந்து கொண்டே இருப்பதை நானும் சந்தித்துக் கொண்டே இருக்கிறேன். அந்த யதார்த்தம், “திருவாளர் பொதுஜனம்.!” கதையில் வெளிப்பட்டதைக் கண்டு மகிழ்ந்தேன் ரசித்தேன்..!

இப்படி ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு அனுபவத்திற்குள் என்னை இருத்தி வைத்தது என்பதையும் சொல்லத்தான் வேண்டும்.  

கதைகளுக்கான களம்,அதன் புறச்சூழல்கள் மீதான உங்கள் விவரிப்புகளில் ஒரு கதையாசிரியனின் துல்லியமான பார்வையும் கிரகிப்பும் அழகாக வெளிப்படுகிறது.அதே போல் கதாபாத்திரங்களின் உள்ளக்கிடக்கைகளும், எண்ணவோட்டங்களும் சுலபமாக அந்தப் பாத்திரத்துடன் ஒன்றிவிடச் செய்கிறது. கதைகள் தாங்கி நிற்கின்ற கருவிலும் குறையில்லை பாலா..ஆனால்,அதனை வெளிப்படுத்தும் தொனி மட்டுமே கதை என்பதன் வடிவத்தைச் சாராமல் செய்திகளாகவே நகர்கிறது.

கதாபாத்திரங்களுக்கான உரையாடல்கள்.உரையாடல்களின் மூலம் நகர்த்த வேண்டிய காட்சிகள் என எதுவுமேயின்றி முழுக்க முழுக்க வாசிப்பவருக்கு சொல்லப்படுகிற செய்தியாகவே சில கதைகள் முடிந்து விடுகின்றன. இவ்வாறான போக்கு வாசகனை வெகு சீக்கிரம் அயர்வடையச் செய்து விடும் ஆபத்து இருக்கிறது.
அதேபோல் பத்திகளைப் பிரித்து எழுதுவதென்பதும் மிக முக்கியமான விஷயம்.சிறு சிறு பத்திகளாக அடுத்தடுத்த காட்சிகள் நகரும்போது வாசிப்புக்கு அது மிகவும் விறுவிறுப்பு கூட்டும்.இதனை அடுத்த தொகுப்பில்..அல்ல அடுத்த கதையிலிருந்தே நீங்கள் துவங்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு.

ஏனெனில் சொல்லப்படுகின்ற கதை,அது தாங்கி நிற்கும் கரு,கதை நிகழும்  களம் என..ஒரு சிறுகதையில் எத்தனையோ விஷயங்கள் உண்டென்பது உங்களுக்குத் தெரியும்.அதனை முழுக்க முழுக்க பின்பற்ற முடியாவிட்டாலும்.இயன்றவரை சரியாகச் செய்வதென்பது நமது எழுத்துக்கு வலுச் சேர்க்கும் என்பதே இங்கு நான் சொல்ல விழைவது.

அதேபோல்..கதை சொல்லுகின்ற உத்தியும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டியதிருக்கிறது. “இன்மை உணர்தல்.” என்ற கதையில் மனைவியைப் பிரிந்திருக்கும் கணவனின் எண்ணவோட்டம் விரிகிறது.அதனை ஒரு கடிதமாக அவன் தீட்டுகிறான். கடிதம் என்ற உத்தி இந்தக்கதைக்குப் பயன்படுத்தப்பட்டதால்,அது அந்தக்கதைக்கு உரிய இடத்தில் மிகச்சரியாகப் பொருந்திப் போகிறது.

மற்ற கதைகளில் அவ்வாறு நீங்கள் கவனத்தில் கொள்ளவில்லையோ..என்ற சந்தேகமும் எனக்கு வருகிறது.கதைகளை செய்தியாக மட்டுமே தரும் பாணி பின்பற்றப்படுவதாலோ என்னவோ,தொகுப்பின் முப்பத்தியேழாம் பக்கத்தில்தான் முதல் வசனமே வருகிறது. தொகுப்பிலுள்ள மொத்த வசனத்தையுமே இரண்டு பக்கங்களில் அடைத்துவிடலாம் போல,அத்தனை சிக்கனமாக இருக்கிறது.

இது சிறுகதைக்குரிய பாணியாக இல்லை என்பதே சரி.இதுவொரு புதியபாணி அல்லது இது எனது தனிப்பட்ட பாணி என்று நீங்கள் சொன்னால் அப்படியும் வைத்துக் கொள்ளலாம்.ஆனால் அது வெற்றிகரமான பாணி அல்ல என்பதே எனது கருத்து.

இரண்டு பாத்திரங்கள் யதார்த்தத்தில் பேசிக் கொள்ளாத அல்லது கதையோடு தொடர்புடைய புறச்சூழல் அல்லது அகச்சூழல்..மட்டுமே எழுத்தாளரின் குரலாக, வாசகனுக்கு தெரியப்படுத்தவேண்டிய தகவலாக செய்தியாக இருந்தால்,அது நன்றாக இருக்கும் பாலா.!

ஒரு விமர்சனமாக இல்லாமல்,இவற்றையெல்லாம் எனது கருத்தாக அல்லது சிறு ஆலோசனையாக சொல்லவேண்டும் என்பதால்தான் நண்பர் பாலாவிற்கு எழுதத்துவங்கினேன் என்று குறிப்பிட்டேன்.நண்பருக்கு எனில்,நாம் பகிரும் கருத்துகளில் சற்று சுதந்திரம் எடுத்துக் கொள்ளலாமே..! மேலும் தாய் தனது குழந்தையை இறுக்கிப் பிடிப்பது அது தவறி விழுந்துவிடாமல் இருக்கவே என்பது போல,இந்த அக்கறையை நண்பன் புரிந்து கொள்வான் என்ற நம்பிக்கையும் நமது கருத்து வெளியை இன்னும் பரவலாக்குகிறதல்லவா..!

 “உருவெளித் தோற்றம் என்ற முதல் கதையைப் படித்து முடித்தவுடன் சில எண்ணங்கள் மனதிற்குள் தோன்றியது.அது மற்ற கதைகள் அனைத்தும் படித்து முடிக்கும் வரையும் தொடர்ந்தது.அது என்னவென்று இறுதியில் சொல்கிறேன்..”என்று சொல்லியிருந்தேன் அல்லவா..? அது மேற்கண்ட கருத்துக்கள்தான்.இவற்றைச் சொல்லலாமா வேண்டாமா என்று ஊசலாடிக் கொண்டிருந்தபோதுதான் தொகுப்பை முழுவதுமாகப் படித்துவிட்டு,பின்னர்; பாவண்ணன் அவர்களின் அணிந்துரையை வாசித்தேன்.

அடடே..நமக்குள் ஓடிய எண்ணத்தின் எதிரொலியே போல் இவரும் எழுதி இருக்கிறாரே என்று தோன்றிது. சுரி அவர்தான் எழுதிவிட்டாரே.பின் நாமும் அதனையே விரிவாக எழுதவேண்டுமா.. என்று யோசித்தபடியே உங்கள் முன்னுரையை வாசித்தேன். வுpமர்சனங்களுக்காக எனது காதுகளைத் திறந்து வைத்திருக்கிறேன் என்ற உங்கள் அறிமுகத்தால் தைரியம் வந்தது என்றே வைத்துக் கொள்ளலாம்.

அதனால்தான் வெளிப்படையாக எல்லாமும் இங்கு பகிர்ந்தேன்.

மேற்கண்ட கருத்துக்களை நான் வலியுறுத்துவதற்கு காரணம்.,படைப்பு என்பதன் மூலம் இந்த சமூகத்திற்கு நாம் ஏதோவொன்றை சொல்லவேண்டும் என்பதற்காகத்தான் எழுதுகிறோம்.அது என்னைப் போல அவ்வளவாக இலக்கியத் தேர்ச்சியற்ற,நுண்மான் நுழைபுலம் அறியாத ஒரு பாமர வாசகனிடமும் சென்று சேரவேண்டும் என்பதாக இருக்கும்போது,எனக்குப் புரிந்து கொள்ள வசதியாக அல்லது எனது புரிதலை சுலபமாக்கும் வகையில் தொடர்ந்து நான் வாசிக்கும்படியாக என்னை அந்த எழுத்து தன்னுடன் பிணைத்து வைத்திருக்க வேண்டுமல்லவா..? அதனால்தான் இந்தக் கோரிக்கைகள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்களும் இந்தக் கருத்துக்கள் சரிதானா..என்பதையும் ஆய்வு செய்யுங்கள் தோழர் பாலா..!  தொடர்ந்து இன்னும் நிறைய எழுதுங்கள் ..வாழ்த்துக்கள்..!

இதனை வாசித்துவிட்டு உங்கள் கருத்துக்களையும் வாய்ப்பிருக்கும் போது எழுதுங்கள்.மீண்டும் பேசுவோம்..!

அன்புடன் 
பொள்ளாச்சி அபி.

No comments:

Post a Comment