Tuesday, 19 March 2013

வாசிப்போர் களம் -12


இந்த மாதக்கூட்டம்  08/03/2013  ந் தேதி சர்வதேச மகளிர் தினத்தில் அமைந்தது மிகவும் எதார்த்தமே! அதிலும் தோழர்.G. பாலசுப்ரமணியன்  இன்று அறிமுகம் செய்த நூல் ச.தமிழ்செல்வனின் "குடும்பம்" . பெண்மையின் உயர்வையும், முக்கியத்துவத்தையும் முன்னிறுத்தும் சிறு நூல். ஆனால் உன்னதமானது. காலங்காலமாக பெண்கள் வஞ்சிக்கப்பட்டதையும் , இந்த ஆணாதிக்கச் சமுதாயம் அவர்களை எப்படியெல்லாம் சிறுமைப் படுத்தியுள்ளது என்பதை ஒரு பதினாறு பக்கங்களில் விவரித்துள்ளது பிரமிக்க வைத்தது. நூல் பற்றிய விபரம் இதோ;

நமக்கான குடும்பம்
ச.தமிழ்ச்செல்வன்
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.5.00
பக்கம்: 16

இந்த நூலில் ச.தமிழ்ச்செல்வன் முன்வைத்துள்ள கருத்துக்கள் இதோ;

Ø  பெண் பிறப்பதில்லை; உருவாக்கப்படுகிறாள்.
Ø  பெண்ணுக்கும்,ஆணுக்கும் பிறப்பு உறுப்பு வேறுபாடு தவிர வேறு எந்த உயிரியல் ரீதியான வேறுபாடும் கிடையாது.
Ø  பல குடும்பங்களில் ஆண் குழந்தைக்குக் கிடைக்கும் சத்தான உணவு பெண் குழந்தைக்குக்  கிடைப்பதில்லை.
Ø  பெண்ணை வெறும் உடம்பாகப் பார்க்கும் பார்வை நம்மிடம் ஆழமாக வேர் கொண்டுள்ளது.
Ø  அவள் எப்பொழுது குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற முடிவெடுக்கும் அதிகாரம் அவளிடமில்லை.
Ø  பெண்தான் சமைக்க வேண்டும் என்று இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் இல்லை.
Ø  மண்ணாசை,பொன்னாசை , பெண்ணாசை என்று துறக்க வேண்டிய பட்டியலில் மண்,பொன் போன்ற பொருள்களோடு பெண்ணையும் ஒரு பொருளாக ( மனுசியாக அல்ல) சேர்த்து வைத்தது  மதம்.
Ø  பன்னெடுங்காலமாக இந்தப் படிமங்கள் கட்டமைக்கப் பட்டு வந்தவை என்பதால் பெண்களே ' நாம் பெண்ணாகப் பொறந்திட்டோம் இப்படித்தான் இருக்கணும் என்று ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.

இப்படி பல்வேறான கேள்விகளை எழுப்பி, அதை அவர் விளக்கியுள்ள விதம் அருமை. வரலாறு எத்தனையோ தூரங்களைக் கடந்து வந்தபோதும் , நம் வீடுகளில் இன்னும் மாற்றம் வந்த பாடில்லை, பெண்களை இன்னும் கட்டுப்படுத்தியே வருகிறோம் என்பதை திட்டவட்டமாக தெளிவு படுத்தியுள்ளார்.

இவற்றையெல்லாம் களைந்து , ஆண்,பெண் சமத்துவத்தின் அடிப்படையில் அறிவியல் பூர்வமான வேலைப் பிரிவினையோடு கூடியதாக நமது குடும்பங்கள் மாற்றி அமைக்கப்பட வேண்டும். கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான காதலே குடும்பத்தின் அடிநாதமாக அமைய வேண்டும் , அந்தக் காதல் சுதந்திரமானதாக -பெருந்தன்மை மிக்கதாக- எந்த நிர்பந்தமும் இல்லாததாக முழு மனதோடு கூடியதாக இருந்தாக வேண்டும் என்று முடிக்கிறார். உண்மையிலே பெண்ணியத்தைத் தூக்கிப் பிடிக்கும் சிறந்த நூலக இது இருக்கிறது.

வளமான சிந்தனைகள்!

*********வாசிப்போர்களத்திற்காக: சு.கருப்பையா.

(தோழர்.தேவேந்திரன் அறிமுகம் செய்த சா.கந்தசாமியின் "சூரிய வம்சம்" நாவல் பற்றிய பதிவு இன்னும் ஓரிரு நாட்களில்)

No comments:

Post a Comment