தோழர்களே! இந்த ஆண்டின் இறுதி கூட்டம்
25-12-2012 ந் தேதி சிறப்பாக நடைபெற்றது.
தோழர்.அருணாசலம் , "மோகமுள்" என்ற நூலினையும்
, தோழர். தெய்வேந்திரன் " ஆற்றங்கரை ஓரம்” என்ற நூலினையும் அறிமுகம் செய்து வைத்தனர். இதில் தி.ஜ.ரா வின் மோகமுள் நூல் 1950 களில் வெளிவந்து மிகப் பெரிய சலசலப்பை ஏற்படுத்திய
நூல். பின்னர் திரைப்படமாகவும் வெளிவந்தது.
நூலின் சுவையான பகுதிகளை இப்பொழுது பார்க்கலாம்.
-1-
ஆசிரியர் : வெ.இறையன்பு.இ.ஆ.ப.
பதிப்பு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை
வருடம் : 2004
பக்கங்கள் : 203
விலை : ரூ.55.00
அறிமுகம் : தோழர். தெய்வேந்திரன்
இந்த நாவல், “சிந்தூர்” என்ற கிராமத்தின் அழகையும் அதனூடே நிகழ்ந்த அவலங்களையும் மனிதாபிமான
நோக்கில் எழுதப்பட்டது. மலைவாழ் மக்களின் குடியிருப்பான
சிந்தூரையும் அதையொட்டி பாயும் நதியையும், இயற்கை வளம் கொழிக்கும் அப்பகுதியை மூழ்கடிக்கும் "அணைத்திட்டதையும்" நம்
கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திருக்கிறார் நாவலின் ஆசிரியர். இது கற்பனையாகப் புனையப்பட்ட நாவல் அல்ல அதற்கு
மாறாக இந்திய துணைக்கண்டத்தில் நடந்த உண்மை நிகழ்வு என்பதை நாவலை படிக்கத்
தொடங்கிய உடனே நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஆம் ! நர்மதா அணையின் குறுக்கே கட்டப்பட்ட அணைதிட்டதையும் அதற்கு
எதிராக நடைபெற்ற மேதா பட்கரின் நீண்ட போராட்டத்தையும் கருவாகக் கொண்டுள்ளது தான் இதன்
சிறப்பு.
சிந்தூரைச் சேர்ந்த இளைஞன் சிமன் தான் நாவலின் நாயகன்.
ஓரளவு படித்தவனான இவனது வர்க்க உணர்வும் ,அணைகட்டுவதற்கு எதிரான போராட்ட உணர்வும் , அவனது தோல்வியும் மிகவும்
யதார்த்தமாக எழுதப்பட்டுள்ளது. சமூகப்போராளி , வீரப்பெண்மணி ராதாப் படேங்கருடன்
சேர்ந்து அணைக்கட்டுவதற்கு எதிராகப் சிமன் போராடும் போதும் , தனது மனம் கவர்ந்த பெண் மிருதுளா
புலம் பெயர்ந்து காணாமல் போன போதும் , தனது தந்தை கோவிந்த்பாயி ஆற்று நீரில் மூழ்கி இறந்த
பின்னர் ஏற்படும் அவனது துயரமும் நம்மை பாதிக்கவே செய்யும்.
அணை கட்டுவதால் வெளியேற்றப்படும் மக்களுக்கு நிவாரணம்
அளிக்க வரும் நேர்மையான அதிகாரி "சுதிர்" மற்றும் அவருக்கு தொல்லை தரும் கலெக்டர் குல்கர்னி
, நீர்ப் பாசான மந்திரி சுக்லா என அனைத்துப் பாத்திரங்களும் யதார்த்தமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. அணைக்கட்டுத் திட்டத்தினால் வெளியேற்றப்படும்
மக்களுக்கு கொடுக்கப்படும் குறைவான நிவாரணம் மற்றும் பயனில்லாத தருசு நிலங்கள் போன்றவற்றை
நேரில் பார்த்து மனம் வருந்தும் சுதிர், அரசு செயலருக்கு எழுதும் கடிதம் ஒரு நேர்மையான மனிதரின்
மனசாட்சி என்பதை நம்மால் உணர முடியும். இருந்தும் சுதிரின் கருத்திற்கு மதிப்பில்லாமல்
போவதும் , அவர் அரசு இயந்திரத்தால் மாற்றப் படுவதும் இன்றும் நிலவும்
யதார்த்தம்.
ராதா படேங்கருடன் வரும் அவரது சக தோழர்கள் நிதின் மற்றும்
சந்தீப் ஆகியோர்கள் சிந்தூர் கிராமத்தை நேசிப்பதையும் , சிந்தூர் மக்களின் எளிமையும் , அவர்களது வாழ்வாதாரம் பறிக்கப்படுவது கண்டு மனம் வருந்துவதும் இயல்பாக பதிவு செய்யப்பட்டுள்ளது. போராட்டத்தின் இடையில் நிதினின் தற்கொலை கண்களில் நீர் சுரக்கச்செய்கிறது. இறுதியில் , ராதாப் படேங்கர் போராட்டத்தில் தோல்வியுற்று சிந்தூரை விட்டு வெளியேறும் போது கலங்குவதும்
, அவர் கணவரை ரயிலில் சந்திப்பதும் சுவாரசியம். அவர் , போராட்டத்தில் நீ என்ன சாதித்து
விட்டாய்? என்று கிண்டல் செய்யும் போது, ராதாப் படேங்கர் ," நாங்கள் தோற்றாலும் இந்தியாவில் கட்டப்படும் கடைசிப் பெரிய அணை இதுவாகத்தான் இருக்கும், இன்னொரு பெரிய அணை இந்த நாட்டில் உருவாகாது என்று பதில் அளிப்பது சரியான பதிலடி . இதில் ஆச்சரியம் என்னவென்றால்
, இந்த நாவல் எழுதப்பட்டு 16 ஆண்டுகளுக்குப் பிறகு இதே வார்த்தையை
கூடங்குளம் அணு உலைப் போராட்டத்தில் தோழர். உதயகுமார் குறிப்பட்டார்
என்பது நாவலாசிரியர் இறையன்பு அவர்களுக்கு கிடைத்த வெற்றி. அது மட்டுமல்லாமல் இந்த
நூலுக்கு அணிந்துரை வழங்கிய பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தன் , இந் நாவலில் வருகிற பத்திரங்கள் ஒவ்வொன்றும்
பிசிறில்லாமல் வார்க்கப்பட்டுள்ளனர். எல்லோரும் மேன்மையானவர்கள் என்று மனம் திறந்து
பாராட்டியுள்ளார்.
நமது தோழர்,வா. நேரு , இறையன்புவின் 18 நூல்களை ஆய்வுக்கு எடுத்து " இறையன்புவின்
படைப்புகளில் தன்னம்பிக்கையும் மனிதநேயமும்" என்ற தலைப்பில் தான் ஆய்வுநூல் பதிவு
செய்து "முனைவர்" பட்டம் பெற்றார்
என்பது இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. இறையன்பு உண்மையிலே வெற்றிகரமான படைப்பாளரே!
-2-
ஆசிரியர் : தி.ஜானகிராமன்
மறு பதிப்பு : ஐந்திணை பதிப்பகம்
வருடம் : 2008
பக்கங்கள்: 685
விலை : ரூ.300.00
அறிமுகம் : தோழர். அருணாசலம்
யமுனா என்ற உன்னதமான பெண்மணியும் , பாபு என்ற இளைஞனையும் முக்கியப்
பாத்திரங்களாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த நாவல் தஞ்சை மற்றும் கும்பகோணம் பகுதிகளின் பேச்சு, வாழ்க்கை, சங்கீதம் மற்றும் மோகம் இவைகளை உள்ளடக்கி எழுதப்பட்ட உளவியல்
நாவல் இது.
யமுனா, சுப்பிரமனிய அய்யருக்கும் , பார்வதி என்ற இரண்டாவது மனைவியான
மராட்டிய பெண்மணிக்கும் பிறந்தவள். தஞ்சாவூரில் குடியிருக்கும் சுப்பிரமணிய அய்யர், யமுனாவையும் அவளது அம்மாவையும்
கும்பகோணத்தில் உள்ள துக்காம்பாளயத்தில் குடிவைக்கிறார். அவர்களுக்கு வருடத்திற்கு பத்துமூடை நெல் மற்றும் தேவையான உதவிகளை பாபநாசத்தில் வசிக்கும்
வைத்தி அய்யர் மூலமாக கொடுத்து வருகிறார்.
அந்த வைத்தி அய்யரின் மகனே பாபு. நாவலின் ஆரம்பத்தில் இருபது வயது வாலிபனாக அறிமுகம் ஆகும் பாபு BA படித்து வருகிறான். அப்போது யமுனாவிற்கு 30 வயது.
இயல்பாகவே மிகவும் அழகாகவும், கம்பீரமாகவும் மற்றும் மதிநுட்பமும்
படைத்த யமுனா பாபுவை மிகவும் கவர்ந்து விடுகிறாள். அவளுக்கும், அவளது அம்மாவிற்கும் பல உதவிகள் செய்து வருவதால் இவனும் யமுனாவின் குடும்பத்தில்
பிரிக்க முடியாத ஒரு அங்கத்தினன் ஆகிவிடுகிறான். ஆரம்பத்தில் அன்பு மற்றும் நேசித்தல் என்ற கோணத்தில் இருந்த
இவர்களது உறவு , யமுனாவை கோவையிலிருந்து ஒருவன் பெண் பார்க்க வந்தவுடன் புது
வடிவு எடுக்கிறது. அவன் ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தகப்பன் என்றும், யமுனா அவனுக்கு இரண்டாவது மனைவியாகத்தான் போகிறாள் என்றதும் மிகவும் கோபப்படுகிறான். யமுனாவின் தகப்பனார் மராட்டியர்
இல்லை என்பதையும் , கலப்புத் திருமணத்தின் மூலம் பிறந்தவள் தான் யமுனா என்பதையும்
பாபு மூலம் தெரிந்து கொண்ட கோவை மாப்பிள்ளை தன்னை ஏமாற்றி விட்டார்கள் என்று கோபத்துடன்
சென்று விடுகிறான். அதனால் யமுனாவின் திருமணம் தடை
படுகிறது. அப்பொழுது பாபுவின் மனம் சந்தோசம் அடைகிறது. இதுவே , பாபுவின் மனதில் யமுனா ஆழமாக
பதிந்து உள்ளாள் என்பதை எடுத்துக்காட்டும்
தருணமாக இருக்கிறது. காதலுக்கு வயது இருக்கிறதா என்ன?
அதன் பின்னர் சுப்பிரமணிய அய்யரின் இறப்பிற்குப்
பிறகு யமுனாவின் ஏழ்மை மற்றும் திருமணத்தடை போன்றவைகள் பாபுவின் உதவியை அடிக்கடி நாடும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் யமுனாவின் அண்ணன் சுந்தரம் இவர்களுக்குச் சேரவேண்டிய நெல்லையும் உதவியையும் நிறுத்திவிடுகிறான்.
அதனால் , யமுனா, அவர்களது நகைகளை ஒவ்வொன்றாக விற்க ஆரம்பிக்கிறாள். அதற்கு பாபு தான் உதவி செய்கிறான். இந்தச் சமயத்தில் தான் பாபுவின்
மனம் யமுனாவை ஆழமாக நேசிக்கத் துவங்குகிறது. பாபுவின் நண்பன் ராஜம் பாபுவிற்கு மிகவும்
ஆறுதலாகவும், நம்பிக்கை தருபவனாகவும் இருக்கிறான். இவனே பாபுவின் அன்பை யமுனாவிடம்
தெரியபடுத்திவிடுகிறான்.
இத்தருணத்தில் தஞ்சாவூரைச் சேர்ந்த கங்காதரம் பிள்ளை
என்பவர் யமுனாவை தன்னுடன் சேர்த்துக் கொள்வதாகவும்
, வேண்டிய பொருள் உதவி செய்வதாகவும்
பார்வதிக்கு தூது அனுப்புகிறார் . ஏற்கனவே திருமணம் ஆகாமல் தவித்துக்
கொண்டிருக்கும் யமுனாவிற்கு , பாபுவின் காதலும் வேதனையைத் தருகிறது.
அவர்களுக்கிடையில் இருக்கும் வயது வித்தியாசமும், பாபு குடும்பத்தாரின் நிலையையும்
கருத்திற்கொண்டே யமுனா இதற்கு சம்மதிக்கிறாள். ஆனால், பாபு திட்டவட்டமாக எதிர்ப்புத்
தெரிவிக்கிறான். இங்கே தான் பாபு தன் அன்பை அவளிடம்
தெரிவிக்கிறான். ஆனால், பாபு அதற்கு திட்டவட்டமாக எதிர்ப்புத் தெரிவிக்கிறான். இங்கேதான் பாபு தன் அன்பை
அவளிடம் தெரிவிக்கிறான். யமுனா அதை மறுத்து அவனுக்கு புத்திமதி கூறி படிப்பையும், சங்கீதத்தையும் நன்றாக கற்குமாறு
வலியுறுத்துகிறாள். பாபு , நிறைவேறாத மோகம் என்னும் முள்ளுடன் சென்னைக்கு செல்கிறான்.
எட்டு ஆண்டுகள்
உருளுகின்றன. பாபு சென்னையில் சிலருக்கு பாட்டுச் சொல்லிக் கொடுக்கிறான். பின்னர்
, ஒரு இன்சூரன்ஸ் கம்பனியில் PRO ஆக பணியில் சேருகிறான் . ஒரு நாள், வயதான அம்மாள் ஒருவர் பார்க்க வந்துள்ளதாக அவனுக்கு தகவல் வருகிறது. பாபு யாராக
இருக்கும் என்ற யோசனையில் வருகிறான். யமுனா! ஏறத்தாள 39 வயதான யமுனா , 50 வயது கிழத்தோற்றத்தில்
! அதிர்ந்து விடுகிறான் பாபு!
இடையில் நடந்த கதையை யமுனா விவரிக்கிறாள். கங்காதரம் பிள்ளையுடன் சேர்ந்த
வாழ கட்டாயப்படுத்திய அவளது அம்மாவை பிரிந்து தனியாக வாழ்ந்ததாகவும், சரியாக சாப்பிட்டு மூன்று மாதங்கள் ஆகின்றன என்றும், வேறு வழிஇல்லாமல் பாபு வழி காட்டுவான் என்று வந்து விட்டதாக தெரிவிக்கிறாள். பாபு மிகவும் வேதனைப் படுகிறான். கூடவே அவனுள் இருந்த காதல் விழிக்கத் துவங்குகிறது.
பாபு, அவளை பத்மாசினி என்ற அம்மையார்
நடத்தும் ஒரு தன்னார்வ மையத்தில் வேலைக்குச் சேர்த்து விடுகிறான். யமுனாவும், பாபுவும் சந்தித்து தங்களது கடந்த கால வாழ்க்கையை பகிர்ந்து கொள்கிறார்கள்.அவனை
எப்போதும் ஏற்றுக்கொள்ளாத யமுனா இப்போது ஏற்றுக் கொள்கிறாள். உன் திருப்திக்காகத்தான் நான் உயிரை வைத்திருக்கிறேன்.
உன்னைத் திருப்தி செய்யறது தான் என் கடமை.
அதனால்
"எடுத்துக்கோ" என்கிறாள்.
அடுத்த வாரம், சுரத்தில் படுத்திருக்கும் பாபுவை பார்க்க வருகிறாள்
யமுனா. அன்று இரவு; யமுனாவும் பாபுவும் இணைகிறார்கள். எட்டு ஆண்டுகளாக பாபுவின்
மனதை வதைத்த மோகம் என்ற முள் பிடுங்கப்படுகிறது!
காலையில் எழுந்ததும் பாபுவின் கைகளை பிடித்துக் கொண்டே யமுனா," திருப்திதானே" , வருஷக்கணக்காக , எத்தனை வருஷம் , எட்டு வருஷமா இல்லை, விவரம் தெரிந்தது முதல் , பையனாக இருந்தது முதல் தவிச்சதெல்லாம்
இதற்குத்தானே?" என்று கேட்கிறாள். பாபு மௌனமாகிறான்!
அதன் பிறகு , யமுனா முழு விபரங்களையும் பாபுவின்
தந்தை வைத்திக்கும், பத்மாசினிக்கும் தெரிவித்து விடுகிறாள். அவர்களை ஏமாற்ற அவள்
விரும்பவில்லை. அத்துடன் பாபுவிற்கும் கடிதம் எழுதி வேறொரு நல்ல பெண்ணை திருமணம் புரிந்து
கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறாள். ஆனால், மிகுந்த மனவருத்தம் அடைந்திருந்த பாபு சங்கீதம் கற்றுக்கொள்ள
மங்கல்வாடி செல்கிறான். ரயில் நிலையத்தில் அவனது கையில் யமுனா ஒரு கவரைக் கொடுக்கிறாள்.
அதில் யமுனா வைத்திக்கு எழுதியதும் , வைத்தி, யமுனாவிற்கு எழுதிய பதிலும். அக்கடிதத்தில் வைத்தி இவ்வாறு குறிப்பிட்டு இருப்பார்," இவ்வளவு கௌரவப் புத்தியும் நேர்மையும் யோசனையும் இருக்கிற உன்னிடம் யாரையும் ஒப்படைக்கலாம். அப்படியென்றால் பாபுவின் தந்தை அவளை மருமகளாக ஏற்றுக்
கொண்டார் என்று தானே அர்த்தம்?
இந்த நாவலைப் பற்றி எழுத்தாளர். க.ந.சுப்பிரமணியம்;
" மிகவும் சிறப்பாக அமைந்துவிட்ட
ஒரு உன்னதமான சிருஷ்டி . மனிதனின் பலத்தையும் பலவீனத்தையும் துருவி ஆராய்ந்து எழுதப்பட்டுள்ள
நல்லதோர் சாதனை-பெரியதோர் சாதனை"
நல்ல நாவல்களை அறிமுகப் படுத்திய
தோழர்.அருணா மற்றும் தெய்வேந்திரன் ஆகியோர்களுக்கு
நன்றி!
---வாசிப்போர்களம்-மதுரை.
Tweet | |||||
வெவ்வேறு தளத்தில் பயணிக்கும் வித்தியாசமான நாவல்கள். வாசிப்போர் களத்தில் அறிமுகம் செய்த நண்பர்களுக்கு நன்றி.
ReplyDeleteஅதனை மீள்வாசிப்பு செய்து இத்தனை கோர்வையாக பதிவிட்ட உங்களுக்கும் மிக்க நன்றி.
முது முனைவர் இறையன்பு அவர்களின் ஆத்தங்கரையோரம் நூல் விமர்சனம் மிக நன்று .பாராட்டுக்கள் .
Delete