சூர்ப்பணங்கு - ஏழு கன்னிமார் கதை
அடைவெறி நீங்காத தாய்க்கோழியின் விரித்த சிறகுகளுக்குள் அரவணைக்கப்பட்டு, தலையை மட்டும் வெளியே நீட்டியபடி கள்ளப்பிராந்தை அண்ணாந்து பார்க்கும் சிறு குஞ்சுகளாகவும், அவற்றை கொடிய உலகில் வாழ்விக்க வழியற்று தானும் அவையும் சேர்ந்து மரிக்க கிணற்றைத் தேடி அலையும் தாய்க்கோழியான நல்லதங்காளாகவும் அறிமுகமாகிறாள் சூர்ப்பணங்கு. ஆண்டாண்டு காலமாய், சென்ம சென்மமாய் அடுப்படிகளிலும், படுக்கையறைகளிலும், இருண்ட வீதி முனைகளிலும், முள்ளுக்காடுகளிலும், திரையரங்குகளிலும், ஊடகங்களிலும், இணையங்களிலும், ஓடும் பேருந்துகளிலும் நார்நாராக கிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்ணுடலின் மொத்த வடிவாய் எழுந்து நிற்கிறாள் சூர்ப்பணங்கு. பாழாய் விரிந்து கிடக்கும் பூமியில் ஊட்ட ஒரு வாய்ச்சோறு கிடைக்காமல் தன் ஏழு பிள்ளைகளுடன் மரணத்தை அணைக்கும் தாய், இறுதியில் ஏழு தனங்களைக் கொண்டவளாய் அவதரித்து உலகுக்கு அமுதூட்டுகிறாள். செவ்விற மேலாடை குருதியால் நனைந்த படியும், வெண்ணிற பாவாடை, சாட்டையடிகளுக்கு ஏற்றவாறு முடிச்சுகளை இறுக்குவதுமாக பெண்ணுடலின் மீதான அதிகாரம் தொன்மம் தொட்டு தொடர்ந்து வருவதை அழுத்தமாக பதிவு செய்கிறாள் சூர்ப்பணங்கு.
வைக்கோல் பிரியை கூந்தலாய் கொண்டு, அதிலும் வண்டுகள் ஊறும் உருவகத்தைக் கொண்டவளாய் வருகிறாள். திசைக்கொன்றாய் முளைக்குச்சிகளடித்து அடைப்புகளை ஏற்படுத்தி, அம்முளைக்குச்சிகளை தன் அடிவயிற்றியிலும் ஏற்றிக் கொள்கிறாள். பின் வெறி கொண்டவளாய் முளைக்குச்சிகளை பிடுங்கி எறியவும் செய்கிறாள். விளக்குமாறையும், முறத்தையும், உலக்கையையும் சடங்குகளின் தொடர்ச்சியாய் சுமந்து கொண்டலைபவள், அவற்றை ஆயுதமாக்கி அதிகாரத்தை நோக்கி இடிமுழக்கமும் இடுகிறாள். ஒரு பார்வைக்கஞ்சும் சிறுபெண்ணாகவும், ஆங்காரங்கொண்டாடும் வனப்பேச்சியாகவும் இருவேறு இயல்பை ஒன்றாய்க் கொண்டவளாய் இருக்கிறாள் அணங்கானவள். பர்தாவுக்குள் உடம்பை குறுக்கிக் கொண்டு கண்மூடிய நிலையிலும் கல்விக்காக அலைமோதுகிறாள். நெல்குத்தும் உலக்கையின் ஒலி அதிர அதிர பூமியைப் பிளக்கும் ஆவேசங்கொண்டவளாய் அடுக்குமுறையை அடிபணிய வைக்கிறாள். ஒவ்வொரு வன்கொடுமையின் போதும் தன் சுயத்தை காத்துக் கொள்ளப் போராடும் அவள், மாரிலடித்துக் கொள்கிறாள், உழன்று தவிக்கிறாள், விடுவித்துக் கொள்ளத் துடிக்கிறாள், இறுதியில் ஒவ்வொரு முறையும் தன்னைத் தானே பலிகொடுத்தே மாண்டு போகிறாள். அவள் கண்ணீரில் வடிந்த உப்பு நீர் உலகை ஆட்கொள்கிறது.
இன்று கொடுங்கோலர்களிடமிருந்து மட்டுமல்ல, வீட்டிற்குள்ளே ஒன்றும் வெளியே ஒன்றும் பேசித்திரியும் பெண்ணியவாதிகளிடமிருந்தும், சர்பமாய்த் தீண்டக் காத்திருக்கும் கலாச்சார காவலர்களிடமிருந்தும் தன்னை மீட்டுக் கொள்ள பெண் போராட வேண்டியிருக்கிறது. நிர்கதியாய் நடுரோட்டில் கிடந்த ஒருத்தியை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சமுதாயம் தான் இன்று அவள் சாவிற்கு மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டிருக்கிறது. சமுதாய அக்கறைக்காக பாடுபடுவதாக சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் ”சிறப்புப்பார்வை”க்கு நடுவில் பெண்ணுடலைத் தான் விற்றுக் கொண்டிருக்கின்றன. அவை பெண்ணை உபயோகித்து விட்டு தூக்கி எறியும் ஒரு பண்டமாக காட்டிக் கொண்டே, பெண்ணுரிமையைப் போற்றி சிறப்புக் கட்டணத்தில் குறுஞ்செய்திகள் அனுப்ப அழைப்பு விடுக்கின்றன. அரசாங்கமும், அதிகாரமும் புரையோடிப் போயிருக்கும் புண்ணுக்கு புணுகு பூசும் வேலையைத் தான் காலம்காலமாக செய்து கொண்டிருக்கின்றன.
”மணல்மகுடி” குழுவினர் நடத்திய சூர்ப்பணங்கு நாடகம் மதுரை டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவியர் முன்னே நிகழ்த்தப்பட்டது. கோவில்பட்டி ச.முருகபூபதியின் இயக்கத்தில் நடைபெற்ற இந்த நாடகத்தில் நடித்த இளைஞர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து நடித்திருந்தனர். தேர்ந்த கலைஞனுக்கான நேர்த்தியுடனும், தெளிவான உச்சரிப்புடனும், கணீர் குரல் வளத்துடனும் நூறு சதவீத ஈடுபாட்டுடன் களப்பணியாற்றினர். அமைக்கப்பட்ட மேடை கூட இல்லை, சிறு கற்கள் குத்தும் செம்மண் தரையில் தான் நாடகம் நடந்தேறியது. ஆனாலும் நடித்தவர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. அருள் வந்து ஆவேசங்கொண்டாடுபவர்களைப் போல அர்பணிப்புடனும், முழு ஈடுபாட்டுடனும் தம்மை முழுமையாக சூர்ப்பணங்கிற்கு ஒப்புக் கொடுத்து விட்டது போலிருந்தது. ஒலியமைப்பும், இசையும், வெளிச்ச வடிவமும் நாடகத்துக்கான நிஜத் தன்மையை அதிகரித்தன.
நாடகக்குழுவினர் சொல்ல வந்த கரு அங்கு கூடியிருந்த மாணவியர்களுக்கு முழுமையாய் சென்று சேர்ந்தது என்பதற்கு நாடகம் முடிந்தவுடன் எரிமலை போல் வெடித்துக் கிளம்பிய அந்த பெண்களின் ஆவேசம் கொண்ட கைத்தட்டல்ள் மட்டும் தான் தற்பொழுதைக்குள்ள ஒரே சாட்சி. ஆனாலும் விதைகள் விழுந்திருக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது.
உதவி:
http://nesamithran.blogspot.in/2011/12/blog-post.html
http://tamizharivu.wordpress.com/2011/10/07/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/
http://livingsmile.blogspot.in/2011/06/blog-post_28.html
******
வி.பாலகுமார்.
Tweet | |||||
No comments:
Post a Comment