Saturday, 19 January 2013

நிலமெல்லாம் இரத்தம்


புதிய ஆண்டின் முதல் நூல் அறிமுகக் கூட்டத்தில் தோழர். பாலகுமார், "வெட்டுப் புலி" என்ற  தமிழ்மகனின் நாவலையும் அத்துடன்  "சூர்ப்பணங்கு" என்ற நாடகத்தையும் தோழர்.கருப்பையா  "நிலமெல்லாம் இரத்தம்" என்ற பா.ராகவனின் வரலாற்று நூலை அறிமுகம் செய்து வைத்தார்கள். ஏற்கனவே சூர்ப்பணங்கு நாடகம் பற்றிய பதிவினை தோழர். பாலகுமார் தமது "தென் திசை"யிலும் , நமது வாசிப்போர்களத்திலும் வெளியிட்டுள்ளார்.

நிலமெல்லாம் இரத்தம்" பற்றி..

நூல் ஆசிரியர்: பா.ராகவன்
முதல் பதிப்பு : 2005
விலை       : ரூ.300 ( தற்போதைய விலை ரூ.475/-)
பதிப்பு        : கிழக்குப் பதிப்பகம்

இந்நூலைப் பற்றி அதன் ஆசிரியர் பா.ராகவன்  தமது முகப்புப் பகுதியில், இஸ்ரேல் பாலஸ்தீன எரியும் பிரச்சனையின் புரியும் வடிவம்" என்று அடைமொழி கொடுத்திருப்பார்.  நூலை வாசித்து முடித்ததும், இந்த வார்த்தைகள் உண்மையானதாகவே  எனக்குத் தோன்றியது.

நூலில் , கி.மு.44 இல் துவங்கி கி.பி.2004 ஆண்டு வரையிலான மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் வரலாற்றை ( இஸ்ரேல்,எகிப்து,சிரியா,ஜோர்டான்,துருக்கி, லெபனான் மற்றும் பாலஸ்தீனம்) நடுநிலைமையோடு பா.ராகவன் பதிவு செய்திருக்கிறார் என்று கருத இடமுண்டு.  எத்தனைப் போர்கள்! எத்தனை உயிர் பலிகள்!  ஆயினும் இன்னும் சுதந்திர பாலஸ்தீனம் உருவாகவில்லை! இஸ்ரேல் அதை அனுமதிக்கவே இல்லை. இன்றும் கூட காஸாப் பகுதியில் குண்டு வெடிக்காத நாட்களே கிடையாது. இந்த நீண்ட இரத்தம் தோய்ந்த வரலாறு மனதை வலிக்கவே செய்கிறது!

இந்தப் புத்தகம் , இஸ்லாம், கிறித்துவம் மற்றும் யூதர்கள் என்ற மூன்று மதத்தவர்களின்  மூலத்தந்தையான ஆபிரஹாம் காலம் தொடங்கியாசிர் அராபத் மரணம் வரை பேசுகிறது. ஆபிரஹாம் அவர்களுக்கு சாரா, ஆகார் என்று இரண்டு மனைவிகள். சாரா மூத்த மனைவி. இவருக்கு குழந்தை பிறக்காததால், அவரது வேலைக்காரப் பெண்மணி ஆகாரை தமது கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கிறார்.  அவருக்கு இஸ்மாயில் என்ற மகன் பிறக்கிறான்.  குடும்பம் மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கும் போது, பொறாமையில் பீடிக்கப்பட்ட சாரா, ஆகாரை குழந்தையுடன் வீட்டைவிட்டு துரத்துகிறார்.   பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து சாராவிற்கும் "ஈஸாக்"  ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.  இந்த "ஈஸாக்" கின் வழித்தோன்றல்களே "யூதர்கள்'. இஸ்மாயிலின் வழி வந்தவர்கள் தான் " பாலஸ்தீனியர்கள்". ஆகவே, பாலஸ்தீனியர்கள் , யூதர்களைவிட பனிரெண்டு ஆண்டுகள் மூத்தவர்கள்.

ஈஸாக்கின் மூலமாக வந்த யூத குலத்தில்,  கி.மு.5 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் தான்  இயேசு கிறிஸ்து.  இவருடைய கருத்துகளும், போதனைகளும் பழமையில் ஊறிப்போன யூத மதகுருக்களுக்கு எதிராக இருந்ததால் இயேசு கிறிஸ்துவை வெறுக்க ஆரம்பித்தனர். அப்பொழுது பாலஸ்தீனம், ரோமானியர்களின் கட்டுப்பாட்டில் அதாவது பான்டியஸ் பிலாட் ( பிலாத்து) என்பவரின் பொறுப்பில் இருந்தது.  இயேசு கிறிஸ்துவின் மேல் வெறுப்பில் இருந்த யூத மதகுருக்கள் , பிலாத்து மூலமாக அவரை சிலுவையில் ஏற்றினார்கள். இது நடந்த காலம் கி.பி.30-35 இருக்கலாம். இயேசுவின் இறப்பிற்குப் பிறகும் அவரது புகழ் பரவிஅவரது கருத்துகளை ஏற்றுக் கொண்டவர்கள் " கிறித்துவ" மதத்தை தோற்றுவித்தனர்.  இந்நிலையில், ஜெருசலம் நகரில் இருந்த , ஏறத்தாழ  950 ஆண்டுகள் பழமை வாய்ந்த, யூதர்களின் புனித ஆலயம் ( சாலமன்)  கி.பி.70 இல் கிறித்துவர்களால் ( டைட்டஸ் என்ற ரோமானிய மன்னன்)  இடித்துத் தள்ளப்பட்டது. இதுவே பாலஸ்தீனப் பிரச்சனையின் ஆணிவேராக உள்ளது. [ இந்த கோவிலின் அருகில் உள்ள குன்றில் தான் இஸ்லாமியர்களின் முகம்மது வானில் இருந்து இறங்கியதாக நம்பிக்கை. இதன் கீழே மசூதியும் கட்டப்பட்டது] . அங்கே, கிறித்துவ ஆலயமும் எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து கி.பி.133 இல் ரோமானியப் பேரரசர் கான்ஸ்டன்டைன் கிறித்துவ மதத்திற்கு மாறி " கிறித்துவ மதத்தையே" மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு போட்டதால், பாலஸ்தீனப் பகுதிகளில் கிறித்துவம் வளரத் துவங்கியது. அதனால் கிறித்தவர்களுக்கும், யூதர்களுக்கும் தொடர்ந்து மோதல்கள் ஏற்ப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில் பாலஸ்தீனக் கிளையில் கி.பி.571 இல் முகம்மது நபிகள் பிறக்கிறார்.  முகம்மது நபிகளுக்கு " ஜிப்ரீல்" என்ற அசிரிறீ  மூலமாக அருளப்பட்ட போதனைகளை அவர் மக்கள் மத்தியிலே பரப்புகிறார்.  இதுவே "குரான்" ஆகும். அத்துடன் புதிய இஸ்லாம் மதமும் உருவானது. முகம்மது நபியின் ஒழுக்கத்தினாலும், அன்பினாலும்  மற்றும்  செயலாலும் கவரப்பட்ட பெருவாரியான பாலஸ்தீனியர்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். கூடவே யூதர்களும் தான்.  

நபிகளின் பிறப்பிற்கு பிறகு , பாலஸ்தீனத்தில் இஸ்லாம் முழுமூச்சில் வளர ஆரம்பித்தது. கி.பி.632 இல் நபிகள் நாயகம் இறந்த பிறகு, அவர் வழியில்  உமர், சலாவுதீன் உள்ளிட்ட கலிபாக்களின் ஆட்சி தொடர்ந்தது. , கூடவே கிறித்துவ இஸ்லாமியப் போர்களும் தான். குறிப்பாக , சுல்தான் சலாவுதீன் கி.பி.1181 இல் ஜெருசலம் நகரைக் கைப்பற்றி இஸ்லாத்தின் பிடியில் வைத்துக் கொண்டார். ஜெருசலத்தை மீட்கத் தொடர்ந்து கிறித்துவர்கள் போரிட்டனர்.  இந்தப் போர்கள்  சிலுவைப்போர்கள் என அழைக்கப்பட்டன.   கி.பி. 1095 முதல்  கி.பி 1250 வரை ,  ஏறத்தாழ ஐந்து சிலுவைப்போர்கள் நடைபெற்று பாலஸ்தீனத்தின் அமைதியை கெடுத்தது.  இதில் வேதனையான விசயம் என்னவென்றால், ஜெருசலம் நகரை கைப்பற்றவே இந்த மூன்று மதத்தவர்களும் சண்டையிட்டார்கள் என்பது தான்.

இதன் பிறகு, பாலஸ்தீனம் கி.பி. 1517 முதல் 1918 வரை துருக்கியப் பேரரசின் பிடியிலே இருந்தது. இடையில் சில ஆண்டுகள் 1831-1840 வரை மட்டும் எகிப்தின் கீழ் இருந்தது.  இந்தச் சூழ்நிலையில் தான் பாலஸ்தீன மக்களின் விடிவெள்ளியாக வந்த  யாசிர் அராபத் கி.பி.1929 இல் பிறக்கிறார். பாலஸ்தீனத்தை மீட்டுக்க அல்பத்தா ( AL FATAH)  அல்லது புனிதப்போர் என்ற போராளி இயக்கத்தை ஆரம்பிக்கிறார்.  ஆனால் பாலஸ்தீனத் தனி நாடு உருவாகுவதற்குப் பதிலாக, ஐ.நா, மற்றும் அமெரிக்காவின் தலையீட்டால் கி.பி.1948 இல் பாலஸ்தீனம் பிரிக்கப்பட்டு " இஸ்ரேல்"  என்ற நாடு உருவானது.  இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தை உருவாக்க, அல்பத்தாவைப் போன்று அப்போது இருந்த 18 போராளிக்குழுக்கள் இணைந்து கி.பி. 1964 இல்  "பாலஸ்தீன விடுதலை இயக்கம் " [PLO ]  என்ற கூட்டமைப்பை உருவாகியது. அதன் தலைவராக யாசிர் அராபத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தனி நாடு என்பதற்குப் பதிலாக, கி.பி.1994 இல் ,  சுய ஆட்சி அதிகாரம் படைத்த பாலஸ்தீனத்தைத் தான் இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ராபின் அவர்களிடமிருந்து  யாசிர் அராபத்தால் பெற முடிந்தது. அதற்காகவே, இவ்விருவருக்கும் 1994 ஆம் ஆண்டு "அமைதிக்காண நோபல் பரிசு கிடைத்தது".  ஆனால் சுதந்திரத் தனி பாலஸ்தீனம் என்பது,  கி.பி.2004 இல் யாசிர் அராபத் இறக்கும் வரை ஏற்படவே இல்லை!

இது தான் "நிலமெல்லாம் இரத்தம்" நூல்  சுட்டிக்காட்டும் சுருக்கமான வரலாறு.

இந்த நூலை முழுவதுமாக வாசித்தால் இரத்தம் தோய்ந்த பாலஸ்தீனத்தின் வரலாறு ஒவ்வொருவரின் மனதையும் வலிக்கச் செய்யும். படித்துமுடித்த பின்னர், "இஸ்ரேல்-பாலஸ்தீனப்  பிரச்சனை என்பது, தனித்துவம் வாய்ந்த இரண்டு மதங்களின் முரண்பாட்டுப் பின்னணியில் , திறமை மிக்க  அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மக்களின் உணர்வு சார்ந்த பிரச்னை. மதம், அரசியல் மற்றும் உணர்ச்சி -சேரக்கூடாத இந்த மூன்று அம்சங்கள் ஒன்று சேர்ந்த காரணத்தால் இன்று வரை தீர்க்க முடியாத சிக்கலாக இருந்து வருகிறது"  என்று இந்நூல் ஆசிரியர் குறிப்பிடுவது நம் மனதிலும் பதிந்து விடும்.

இந்நூல் உங்களுக்கும் பிடிக்கும்!


( வெட்டுப் புலி நூலின் பகுதி விரைவில்)

No comments:

Post a Comment