மதுரை புத்தகத்
திருவிழா – 2012 – பரிந்துரை
எதிர்வரும் 30/08/2012 முதல் 09/09/2012 வரை மதுரை தமுக்கம்
மைதானத்தில் நடைபெறவிருக்கும் புத்தக கண்காட்சியில் நண்பர்க்ள் புத்தகங்களை தேர்வு
செய்ய ஏதுவாக சில புத்தகங்களைப் பரிந்துரைக்குமாறு ”வாசிப்போர் களம்” சார்பாக கேட்டனர்.
தரவரிசை என்றெல்லாம்
பிரிக்காமல், மனதுக்கு சட்டென
தோன்றிய சில புத்தகங்களைப் பற்றி சிறுகுறிப்புடன் அளித்திருக்கிறேன். வேறுபட்ட
வாசிப்புத்தளத்தில் உள்ள பல நண்பர்களைக் கொண்டது ”வாசிப்போர் களம்”. அனைவருக்குமே இனிய வாசிப்பனுவம் தரக்கூடிய நூல்கள் இவை என்ற வகையில்
இவற்றைத் தொகுத்திருக்கிறேன்.
வாடிவாசல் / சிசு
செல்லப்பா / காலச்சுவடு பதிப்பகம் / ரூ.40
மாடணைதல் என்ற தமிழர்
வீரவிளையாட்டின் சூட்சமங்களை சொல்லும் நாவல். இரண்டு துடிப்பான மாடுபிடி வீரர்கள்
வேற்றூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு வருகிறார்கள். அதில் ஒருவன் தன் தந்தையை
குத்திச் சாய்த்த ஒரு ”காரி” காளையை அடக்கி, இழந்த பெருமையை நிலைநாட்ட எடுக்கும்
முயற்சி தான் நாவலின் கரு. நாவல் படிக்கும் போதே, களத்தில் மாடு பிடிக்க நாமும் நிற்பதைப் போன்ற உணர்வு எழும்
அளவு தத்ரூபமாக விவரிக்கப்பட்டிருக்கும். தமிழின் மிக முக்கியமான நாவல்களில்
ஒன்று.
கோபல்ல கிராமம் /
கி.ராஜநாராயணன் / காலச்சுவடு பதிப்பகம் / ரூ.100
இது ஒரு இனக்குழுவின்
கதை. ஆந்திர தேசத்தின் ஏதோ ஒரு பகுதியில் செழிப்பாக வாழ்ந்த மக்கள் தங்கள்
குடும்பத்தில் சர்வ லட்சணங்களுடன் இருக்கும் ஒரு பெண்ணின் மானத்தை காக்க வேண்டி
ஊர், நிலம் நீச்சு, சொந்தபந்தம், கால்நடை அனைத்தையும் விட்டு பலநாட்கள் பட்டினியோடும், உடல் ரணங்களோடும் தெற்கு நோக்கி
பயணப்படுகிறார்கள். வழிநெடுக பல இன்னல்களையும், தெய்வாதீன்மான சில நிகழ்வுகளையும் சந்திக்கிறார்கள். ஒரு கட்டத்தில்
மேலும் பயணிக்க முடியாத நிலையில்,
அங்குள்ள
வனப்பகுதியை சீர்திருத்தி விவசாயம் செய்து அந்தப் பகுதியிலேயே தங்கள் வாழ்வை
எவ்வாறு அமைத்துக் கொள்கிறார்கள் என்று அழகாக விவரிக்கப்பட்டிருக்கும் நாவல்.
துணையெழுத்து /
எஸ்.ராமகிருஷ்ணன் / விகடன் பிரசுரம் / ரூ.110
நம்மில்
பெரும்பான்மையோருக்கு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனின் அறிமுகம் ஆனந்த விகடன் இதழில்
தொடராக வந்த “துணையெழுத்து” மூலமாகவே நிகழ்ந்திருக்கும். அன்றாடம் நாம்
கடந்து செல்லும் முகம் தெரியாத ஆயிரக்கணக்கான மனிதர்களை சகபயணியாக உணர்ந்து
எழுதப்பட்ட கட்டுரைத் தொகுப்பு. தெள்ளிய நீரோடையில் மிதந்து செல்லும் தக்கை போல
எளிய மனிதர்களின் மேன்மை பற்றி எதார்த்தமாக பேசும் தொகுப்பு. நாளிதழ்களில் நாம்
காணும் “உயிர்காக்க உதவுங்கள்”அறிவிப்பு கொடுப்பவர்கள், நெடுஞ்சாலை உணவகத்தில் எடுபிடி வேலை
செய்பவர், தெருக்கூத்து
நடிகர்கள் என பல நிலை மனிதர்களின் உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டும் படைப்பு.
கார்ட்டூன்
பொம்மைக்கு குரல் கொடுப்பவள் / நேசமித்ரன் / உயிர்மை பதிப்பகம் / ரூ.50
தெளிவான நீரோடை போல சீராக
பயணிக்கும் கவிதை மொழி. வாசிக்கும் போது நதிக்கரையோரம் மென் தென்றல் காற்று
முகத்தில் வீச, மெல்லிய புன்னகை
முகத்தில் பரவ நடைபயிலும் அனுபவம். இது ஒரு புறம். இன்னொரு புறம், சிற்சிறு குன்றுகளாக மேலேறி, மலை உச்சி அடைந்து நுரையீரல் ஆழம் வரை பரவ
மூச்சிழுத்து விட்டு, மேலிருந்து கீழே
பார்த்து பரவசமடையும் மலையேற்றம். கவிஞர் நேசமித்ரனின் கவிதைகள் இரண்டாம் வகை. சொற்களை
பகடைகளாக்கி பரமபதம் ஆட வைக்கும் வித்தையை கற்றுத் தரும் இந்தத் தொகுப்பு. நாம்
இதுவரை வாசித்த கவிதைத் தொகுப்புகளிலிருந்து இது நிச்சயம் வித்தியாசமானதாக
இருக்கும். தொடர் வாசிப்பில் சொற்களாலான புதையல் வேட்டையில் புதுப்புது
திறப்புகளும், சுடோகு புதிர்
அவிழ்க்கும் உற்சாகமும் பிறக்கும்.
சேவல்கட்டு /
ம.தவசி / புதுமைப் பித்தன் பதிப்பகம் / ரூ.70
சேவல் சண்டையை மையமாக
வைத்து புனைவும், யதார்த்தமும்
கலந்து எழுதப்பட்ட நாவல். கொண்ட வைராக்கியத்திற்காக தொடர்ந்து தோல்விகளை சந்தித்து
அவமானப்பட்டாலும், தான் அடிபட்ட
களத்திற்குள்ளேயே சுழன்று தன் வாழ்வையே தொலைக்கிறான் ஒருவன். அவன் விட்ட
இடத்திலிருந்து அவனது மகனும் அதே பாதையிலேயே அலைந்து திரிகிறான். போத்தையா என்னும்
அறுபது வயது நபரும் அவரது தந்தை சேவுகப்பாண்டியனும் சேவற்கட்டில் தங்கள் வாழ்வை
இழந்த கதை, மாயா யதார்த்த
நடையில் சொல்லப்பட்டிருக்கிறது. கத்திக்கட்டு சேவல் சண்டையின் நுனுக்கங்களும், பண்டைய காலத்தில் பெண்களில் இந்த
விளையாட்டில் ஈடுபட்டிருந்தது பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.
விழித்திருப்பவனின்
இரவு / எஸ்.ராமகிருஷ்ணன் / உயிர்மை பதிப்பகம் / ரூ.110
உலக இலக்கிய ஆளுமைகளைப்
பற்றிய அருமையான அறிமுகம் தரும் கட்டுரைத் தொகுப்பு. தற்கொலையை தவம் போல செய்யும்
சாமுராயாகட்டும், வண்னத்துப்
பூச்சியை கனவில் காண்பதோ, இல்லை ஒரு
வண்ணத்துப்பூச்சியின் கனவிற்குள் தான் வாழ்வதாக உருவகம் செய்பவராகட்டும், ஒரு வெற்றுக் காகிதத்தை உலகின் மிக சக்தி
வாய்ந்த ஆயுதமாக மதிப்பவராகட்டும், காளைச் சண்டையின் நுணுக்கங்களை தேர்ந்த நடனம் போல் ரசிப்பவராகட்டும்
அவரவர் வாழ்வை அவரவர் வலிகளோடும்,
சிலிர்ப்புகளோடும், போதாமைகளோடும், சுக துக்கங்களோடும் நேர்மையாக பதிவு
செய்திருக்கும் தொகுப்பு. வெறும் தரவுகளாக இல்லாமல், உலக இலக்கிய ஆளுமைகளின் வாழ்வை கதை போல சொல்லியிருக்கும்
கட்டுரைத் தொகுப்பு.
******
நட்புடன்
வி.பாலகுமார்
Tweet | |||||
No comments:
Post a Comment