Thursday, 16 August 2012

களம்-4




வாசிப்போர் களம் நான்கு , 10/08/2012 ந் தேதி வெள்ளிகிழமை மாலை 05 .30 மணிக்கு கூடியது. முனைவர் . வா. நேரு மற்றும் தோழர் J . பாலசுப்ரமணியன் ஆகியோர்களால் இரண்டு புதிய நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டது.  அவையாவன;

நூல்-1



நூல்           : அமர்த்தியா சென் -சமூக நீதிப் போராளி
ஆசிரியர்             : ரிச்சா சக்சேனா
தமிழ்                        : சி.எஸ்.தேவநாதன்
பக்கம்            : 174
விலை             : ரூ. 100
பதிப்பகம்              : எதிர் வெளியீடு , பொள்ளாச்சி.
அறிமுகம்              : முனைவர் . வா. நேரு

இந்த நூலின் மொழிபெயர்ப்பாளர் திரு.தேவநாதன் அமர்த்தியா சென்னைப் பற்றிக் குறிப்பிடும் போது , அவர் ஒரு  சிறந்த மனித நேயர், சிந்தனையாளர் , இளைய தலைமுறையினருக்கு எழுச்சியூட்டும் உந்து சக்தி என்பதோடு மட்டுமல்லாமல் , அவர் ஒரு உலகக் குடிமகன் என்றும் குறிப்பிடுகிறார். 

அவரது எல்லையற்ற அறிவு காரணமாகவே ஆக்ஸ்போர்டு , கேம்ப்ரிட்ச்சு போன்ற பல்கலைகழகங்களில் பேராசிரியர் பதவியையும் ,  பல்வேறு கௌரவங்களையும் அவரால் பெற முடிந்தது.  அவரை ஒரு பொருளாதார வல்லுநர் என்கிற அளவிலேயே  மட்டும் நாம் தீர்மானித்து விட முடியாது. அதற்கும் மேலே வறுமை, ஏழைகளின் கல்வி, மருத்துவம், சமத்துவம்  , பெண் விடுதலை போன்ற பல்வேறு கருத்தியல்களிலும் கவனத்தைச் செலுத்தியவர் என்பதை ஆழமாக பதிவு செய்துள்ளது இந்த நூல்.    

அவரது பத்து வயதில் , தனது குழந்தைகளின் பசியைப் போக்க வேலைக்கு வந்த இடத்தில் மதக் கலவரக்காரர்களால் குத்திக் கொல்லப்பட்ட காதர்மியானின் வறுமை, கி,பி, 1943  இல் வங்காளத்தில் ஏற்பட்ட பஞ்சத்தால் மாண்ட மூன்று மில்லியன் மக்களின் துயரம் போன்றவைகளே அமர்த்தியாசென்னை பொருளாதாரத்தைக் கற்கத் தூண்டியது என்பது அழுத்தமான காரணம்.   இதன் அடிப்படையிலே அவர் சோசியல் சாய்ஸ் என்ற கோட்பாட்டைக் கண்டுபிடித்தார். அதற்கே அவருக்கு 1998  இல் பொருளாதாரதிற்க்கான நோபல் பரிசு தரப்பட்டது.   


அவர் சோசியல் சாய்ஸ் என்ற  கோட்பாட்டை இவ்வாறு விவரிக்கிறார், " அது ஒரு அகன்ற பெரிய கட்டுப்பாடு. இது  பலவிதமான தனிப்பட்ட கேள்விகளை தன்னுள் கொண்டுள்ளது. அது புரிந்து கொள்ளுதலின் , அடிப்படையான தனிப்பட்ட ஒருவரது தீர்மானங்கள் மற்றும் விருப்பங்கள் இரண்டுமே கூட்டாகச் சேர்ந்து எடுக்கப்படும் தீர்மானங்களையும் , விருப்பங்களையும் ஒரு மொத்தமான ஒன்று சேர்ந்த எதிர்ப்பையே உருவாக்குகிறது . அது தனக்குள்ளே ஒரு எதிர்ப்புணர்ச்சியை ஏழ்மைநிலை , பொருளாதார ஏற்றத்தாழ்வு , வேலை இல்லாத் திண்டாட்டம் , தேசிய வருமானம், வாழ்க்கைத் தரம் இவைகளின் மீது கொண்டுள்ளது. எனவே இது பொதுநல பொருளாதாரம் மற்றும் ஓட்டுப்போடும் கோட்பாடு ஆகிய இரண்டின் ஒருங்கிணைந்த ஒரு கலவையாகும். உண்மையிலே , இந்தக் கோட்பாடு புரிந்து கொள்வதற்கு சற்று சிக்கலாகவே இருக்கிறது. திரும்பத் திரும்ப வாசிக்கத்தான் வேண்டும்! 
 
இது தவிர , அமர்தியாசென் அவர்களின் குடும்ப வாழ்வு, அவரையும் தாகூரையும் பற்றிய ஒப்பீடு , அவருக்கும் சாந்தி நிகேதனுக்குமான  தொடர்பு போன்றவற்றை மிக நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது  இந்த நூலில்.

அதே போல் , குடும்ப உறவில் காணப்படும் ஆண்,பெண் பேதங்கள் அவர்களின் குழந்தை பருவத்திலிருந்தே தொடருகிறது என்றும். பெற்றோர்கள் பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பதையும் , அதனால் பெண் ஊட்டச்சத்து குறையுடனே  வளர்கிறாள் என்று  அமிர்த்தியா சென் குறிப்பிட்டுள்ளதை அழகாக கொடுத்துள்ளார் ஆசிரியர்.  மொத்தத்தில் இந்த புத்தகம் ஒவ்வொரு இந்தியனின் இல்லத்திலும் இருக்க வேண்டிய ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  .


 


நூல்-2
  
நூல்          : THE WORLD’S GREATEST BLUNDERS
ஆசிரியர்          : SHITAL KUMAR JAIN
பக்கம்           : 143
விலை           : ரூ.63
பதிப்பகம்         : PUSTAK MAHAL , டெல்லி .
அறிமுகம்           : J . பாலசுப்ரமணியன்


இந்த நூலின் ஆசிரியர் சித்தல் குமார் ஜெயின் , உலக வரலாற்றில் மதம், அறிவியல், உலக அரசியல், இந்திய வரலாறு, பொருளாதாரம் மற்றும் சமூகவியல் போன்ற துறைகளில்  எடுக்கப்பட்ட 58  மிகப்பெரிய தவறான முடிவுகளை பதிவு செய்து உள்ளார். அவற்றில் சில;

·          புத்தர் அசைவ உணவு சாப்பிட்டது
·          இந்து மதம் சுட்டிக்காட்டும் மனு தர்மம்
·          சைனமதம் கடைபிடித்த நிர்வாணம்
·          மக்கள் அலோபதி மருத்துவத்தை பெரிதும் சார்ந்திருப்பது.
·          அமெரிக்கா, ஜப்பான் மீது அணுகுண்டு வீசியது.
·          ஹிட்லரின் ரஷியப் படையெடுப்பு.
·          தலாய் லாமாவிற்கு இந்தியா அடைக்கலம் கொடுத்தது,
·          சதாம் ஹுசைன் குவைத் மீது படையெடுத்தது.
·          ஜின்னா பாகிஸ்தானை உருவாக்கியது.
·          இந்திய அரசர் பிருதிவிராஜ் கோரி முகம்மதுவை மன்னித்தது.
·          சித்தூர் அரசர் ரத்தன் சிங் , தனது மனைவி பத்மினியைப் பார்க்க அலாவுதினை அனுமதித்தது.
·          மகாத்மா காந்தியின் அகிம்சை
·          நேரு ஊழலை தடுக்கத் தவறியது.
·          கார்ல் மார்க்ஸ் சோசலிசக் கோட்பாடு
·          விவசாயத்திற்கு  இலவச மின்சாரம்
·          அம்பேத்கார் அவர்களின் தவறு.

மேற்கண்ட கருத்துகளை சிறிது விளக்கமாகக் கொடுத்துள்ளார் திரு ஜெயின் . இதில் ஜெயின் "தவறு"  என்று குறிப்பிடும் பல கருத்துகளை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது. இருந்தாலும்,  இந்த நூல் ஆசிரியரின் பட்டறிவை தெரிந்து கொள்ள உதவுகிறது. அவ்வளவே!

1 comment:

  1. இரண்டுமே கேள்விப்படாத புத்தகங்கள்தான். நல்ல பதிவு. தங்கள் "வாசிப்போர் களம்" தொடர்ந்து சிறப்பாக நடைபெற வாழ்த்துகள்.

    ReplyDelete