Friday, 22 February 2013

“கோபல்ல கிராமம்” நாவல் பற்றி...

கி.ராஜநாராயணன் அவர்களின் “கோபல்ல கிராமம்” பற்றி திருமதி.ஜெயந்தி அவர்களின் வாசிப்பனுபவம்.

இந்த புத்தகத்தைப் படிக்கும் பொழுது, சுமார் 70 வருடங்களுக்கு முன் இருந்த நம் இந்திய கிராமத்திற்கு, ஒரு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 10 நாட்கள் தங்கி, கிராமத்து சூழலை அனுபவித்த அருமையான உணர்வு ஏற்பட்டது.

மற்றபடி, அதிக ஆசை அழிவுக்குக் காரணமாகிவிடும் என்பதையும், பெண்களைப் போற்றி, பாதுகாத்த எந்தக் குடும்பமும் எப்பொழுதும் உயர்ந்தே இருக்கும் என்பதையும், உழைப்பே உயர்வைத் தரும் என்பதையும், இக்கட்டான நேரத்தில் கூட நல்ல எண்ணம் நற்பண்பு மனிதனுள் இருக்க இயற்கையும், இறையும் துணை புரியும் என்ற பல கருத்துகள் மிகுந்த இந்த நாவலைப் படித்து உணர இனிமையாக இருந்தது.

புத்தக விவரம்: கோபல்ல கிராமம் / கி.ராஜநாராயணன் / காலச்சுவடு பதிப்பகம் / ரூ.100

Sunday, 17 February 2013

என் இலக்கிய நண்பர்கள் - நூல் அறிமுகம்

பிப்ரவரி 09, 2013 அன்று நடந்த வாசிப்போர் களம் கூட்டத்தில் தோழர் முனைவர். வா.நேரு அவர்களால், ந.முருகேச பாண்டியன் அவர்கள் எழுதிய ”என் இலக்கிய நண்பர்கள்” என்ற நூல் அறிமுகப்படுத்தப்பட்டது.

பல்வேறு இலக்கிய ஆளுமைகளுடன் ஆசிரியருக்குண்டான அறிமுகம் மற்றும் நட்பைப் பற்றி விவரிக்கிறது இந்நூல். நூலின் முன்னுரையில் நட்பின் மேன்மை பற்றியும், உயிருக்குயிரான சிநேகம் என்று நம்பியவர்களில் சிலர் காலவெளியில் காணாமல் போனது பற்றியும் விளக்கியுள்ளார் ஆசிரியர். இந்நூலில் சமகால இலக்கிய நண்பர்களைப் பற்றிய தனது கருத்தையும், விமர்சனத்தையும் முன்வைக்கும் போது ஏற்படும் தர்மசங்கடங்களைத் தான் அறிந்து இருப்பதாகவும், தன் நண்பர்களை நட்பையும், விமர்சனத்தையும் பிரித்துணர்ந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

எழுத்தாளர் பிரபஞ்சனைப் பற்றிக் கூறும் போது, பெரியவர்களுடனான தனது நட்பை வைத்து பிழைப்பு தேடிக் கொள்ளத்தெரியாத வெள்ளந்தியானவர் என்றும் தன்னை சந்திக்க வருபவர் எந்த இலக்கிய அறிவுமின்றி ஏதாவது உரையாடிக் கொண்டிருந்தாலும், அவர் மனம் நோகக் கூடாது என்பதற்காக பொறுமையுடன் கேட்டுக் கொண்டிருப்பார் என்று கூறியுள்ளார். அவரது படைப்புகளில் விரியும் உலகம் மிகவும் சுவாரஸ்யமானது. பிரபல சிறுகதை ஆசிரியர் என்ற பிம்பத்தை தனக்குள் ஏற்றிக் கொள்ளாமல எப்போதும் வேடிக்கையுடனும் கேலியுடனுமே வாழ்வை எதிர் கொள்பவர். வாழ்வின் சகல சூத்திரங்களையும் தந்திரங்களையும் கூட அறிந்திருந்தாலும் அவற்றை பிரயோகிக்க அக்கறையற்று புதிய தளங்களைத் தேடிக் கொண்டேயிருக்கிறார் பிரபஞ்சன் என்றும் விளக்கியுள்ளார்.

தமிழின் மிக முக்கியமான இலக்கிய ஆளுமையான நகுலன் பற்றியும் இறுதிக்காலத்தில் அவரது தனிமை பற்றியும், குடும்ப அமைப்பில் சிக்கிக் கொண்டு ஆணும் பெண்ணும் எதிர்கொள்ளும் அவஸ்தைகளைப் பற்றிய அவரது பார்வை பற்றியும் ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளார். அவரது இறுதி நாட்களில் மரணம் குறித்து அவர் கொண்டிருந்த பயத்தைப் பற்றியும், நினைவு தவறிய பின் ஏற்கனவே அறிமுகமானவர்களை அடையாளம் காண அவர் பட்ட சிரமங்களைப் பற்றியும் கூறியுள்ளார்.

நாடக ஆசிரியர் மு.ராமசாமி அவர்களைக் குறிப்பிடும் போது, இளவயதிலிருந்தே நவீன நாடகங்களில் தீவிர ஈடுபாடு உடையவர் என்றும், ஆனால் தான் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்ட பிற்கு அவரது செயல் தீவிரம் குறைந்து விட்டது என்றும், இன்று பத்தோடு ஒன்றாக ஒரு துணை நடிகரைப் போல ஆகி விட்டார் என்றும் கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

எழுத்தாள இரட்டையர்கள் பிரேம்-ரமேஷ் அவர்களைப் பற்றி, இடைவிடாத உரையாடல்களால் மனம் கவர்ந்தவர்கள் என்றும், போலி கவுரவத்திற்கு மரியாதை தராதவர்கள் என்றும் சிறுபத்திரிக்கை உலகின் உள்ளரசியலைத் தாண்டிய வெளிப்படையான மனிதர்கள் என்றும் கூறியுள்ளார்.

கவிஞர் கலாபிரியா, ஒரு காலத்தில் அவர் மீதிருந்த பிரமிப்பு கால ஓட்டத்தில் அவரது சமரச சூழ்நிலையால் அடிபட்டுப் போயிற்று என்று கூறியுள்ளார். குற்றாலத்தில் தொடர்ச்சியாக அவர் நடத்தி வந்த இலக்கிய நிகழ்வான “பதிவுகள்” மூலம் அவர்களுக்குள்  வேர்விட்ட நட்பு இன்றும் தொடர்வதாகவும், கலாப்ரியாவுடனான நட்பு என்றும் தனக்கு பெருமிதம் தருவதாகவும் கூறியுள்ளார்.

எழுத்தில் கடினத்தை வருத்தி வரவழைக்கும் கோணங்கி அவர்கள் பற்றியும், இயல்பான குடும்ப சூழ்நிலை மட்டுமன்றி மொத்த குடும்பமும் விருந்தோம்பலில் சிறந்து விளங்கும் பண்புடைய வண்னநிலவனின் தன்னடக்கம் பற்றியும் தனித்தனி கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தத்தில் பிரபஞ்சன், நகுலன், விக்ரமாதித்யன், பிரேம்-ரமேஷ், மு.ராமசாமி, கலாப்ரியா, ராஜமார்த்தாண்டன், கோணங்கி, வண்ணநிலவன், சுந்தர ராமசாமி, மணா, அப்பாஸ், யவனிகா ஸ்ரீராம், ப.சிங்காரம், கந்தர்வன் என்று பதினைந்து இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும் அவர்களின் இலக்கிய செயல்பாடுகள், படைப்புகள் பற்றியும் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றமாக அமைந்துள்ளது இந்நூல்.

நூல்: என் இலக்கிய நண்பர்கள்
ஆசிரியர்: ந.முருகேச பாண்டியன்
வெளியீடு: உயிமை பதிப்பகம்
விலை: ரூ 70. பக்கம்: 120.

நூல் அறிமுகம் முனைவர் வா.நேரு.

தொகுப்பு: வி.பாலகுமார்.

Wednesday, 13 February 2013

நல்ல நூல்கள் நல்ல நண்பன்! களம் -11


வாசிப்போர்களம் நல்லமுறையில் இயங்குவதாக பல தோழர்களிடமிருந்து பாராட்டுக் கிடைத்துள்ளது.  நல்ல நூல்களை வாசிப்பதும், கேட்பதும்  மனதை பக்குவப் படுத்துகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த மாத கூட்டத்தில் "தெற்கிலிருந்து " என்னும் நூலினை தோழர் மு.சங்கையா முதலில் அறிமுகம் செய்தார். தொடர்ந்து ' எனது இலக்கிய நண்பர்கள் ' என்னும் நூலினை தோழர் வா. நேரு அறிமுகம் செய்தார்.
இனி,

நூலின் தலைப்பு : "தெற்கிலிருந்து'- சமூகவியல் ஆய்வுக்கட்டுரைகள்
நூலின் ஆசிரியர் :  பொன்னீலன்
வெளியீடு              : மக்கள் வெளியீடு
முதல் பதிப்பு        : நவம்பர் 2001
மொத்த பக்கங்கள் : 200 , விலை ரூ 60

                                         தெற்கிலிருந்து நூலின் அறிமுகத்தினை, அந்த நூலின் ஆசிரியர் பொன்னீலன் பற்றிய செய்திகளைக் குறிப்பிட்டு ஆரம்பித்தார் தோழர் மு.சங்கையா. கலை இலக்கியப் பெருமன்றத்தின் பொறுப்பாளர், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினைச்சேர்ந்தவர் , சமூக அக்கறையுடன் நிறைய நூல்களை எழுதியுள்ள பொன்னீலனின் 8 கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல் என்பதனைக் குறிப்பிட்டார். 

                                  முதல் கட்டுரையான இந்தியச்சாதி அமைப்பு. சாதியின் முதல் பண்பான அதனுள் இயங்கும் இரத்த உறவு, இரண்டாவது பண்பான பரம்பரையாக சாதியை தொடர்புபடுத்தும் தொழில் , சாதி என்பது  ஒரு ஒடுக்குமுறை அமைப்பு ஏன் ? சாதி எவ்வாறு உருவானது போன்றவை பற்றி பல்வேறு ஆய்வாளர்கள் தருகின்ற கருத்துக்களை பொன்னீலன் குறிப்பிடுகின்றார். வர்ணம் என்பது எப்படி வலுப்பெற்றது? ரிக் வேதத்தில் வர்ண முறை பற்றிய குறிப்புகள் போன்றவற்றைக் குறிப்பிட்டு " வர்ணக் கலப்பில் பிறந்தவர்களின் பரம்பரைகளே சாதிகள் என்கிறது மனுதர்மம்" என்பதனைக் குறிப்பிட்ட தோழர் சங்கையா "ஒரு ஆண் தன் வர்ண அடுக்குக்கு மேல் உள்ள அடுக்கில் பெண் எடுப்பதை இந்து தர்மம் முற்றாகத் தடுக்கிறது, ஆனால் தனக்குக் கீழே உள்ள அடுக்கில் பெண் கொள்ளும்போது , அவை புதிய சாதிகளாக உருவாயின " என்று கூறுவதைக் குறிப்பிட்டார். இந்தியச்சாதி அமைப்பு பற்றி பல்வேறு கருத்துக்களைக் கூறும் ஆசிரியர் பொன்னீலன் தனது கருத்தாக, முடிவாக இதுதான், இப்படித்தான் இந்தியச்சாதியின் தோற்றம் என்று கூறவில்லை என்பதனைக் குறிப்பிட்டார். 

                                  இரண்டாவது மூன்றாவது  கட்டுரைகளான  'தெற்கில் முதல் வெளிச்சம் '  மற்றும் 'தென் திருவிதாங்கூர் தோள் சீலைப் போராட்டம் ' பற்றித் தோழர் சங்கையா விரிவாகவே பேசினார். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் அன்று இருந்த சாதிக்கட்டுமான இறுக்கம், சாதி வேறுபாடுகள் 16 அடி, 36 அடி, 66 அடி எனக் கடைப்பிடிக்கப்பட்ட கொடுமை, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு விதிக்கப்பட்ட பல்வேறு வரிகள், மார்புக்கு மேலே சேலை கட்டக்கூடாது எனும் வழக்கம், அதனை எதிர்த்து நடந்த போராட்டம் போன்றவற்றையும் , நாடார்கள் என்னும் சாதியினரின் அன்றைய சமூக நிலமை, அவர்கள் சந்தித்த சாதிய ரீதியான ஒடுக்குமுறைகள் பொண்றவற்றை புத்தகத்தின் பகுதிகளை வாசித்துக்காட்டி ,தோழர் சங்கையா எடுத்துக்காட்டியபோது இப்படியெல்லாம் ஒரு 150 ,160 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்ததா ? எனத் தோழர்கள் கேள்வி எழுப்பி, அறிந்து கொள்ள உதவியது.

                            வைகுண்டசாமி அவர்களைப் பற்றிய கட்டுரையினைத் தொகுத்தளித்த தோழர் சங்கையா , வைகுணடரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தார். கோயில் நுழைவுப்போராட்டங்கள் என்னும் தலைப்பிலான கட்டுரையில் , கோயில் நுழைவுப்போராட்டங்கள் எப்போது ஆரம்பமானது, 1854-ல் வெள்ளையன் நாடார் தலைமையில் நடந்த குமாரகோயில் நுழைவுப்போராட்டம், கலகத்தினால் 150 பேர் பலியானது, 1870-ல் மூக்கன் நாடார் தலைமையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் நிகழந்த ஆலயப்பிரவேசம் , நாடார்கள் கோவிலுக்குள் சென்று வழிபடுவதற்காக நடத்திய போராட்டங்கள், அருப்புக்கோட்டை(1860), திருச்செந்தூர் (1872), மதுரை (1874 &1890), திருத்தங்கல் (1876-78), ...சிவகாசியில் (1899)  போன்றவற்றை பொன்னீலன் சுட்டிக்காட்டுவதைக் குறிப்பிட்டார். 1885-ல் நடந்த கமுதி கலவரம், வெள்ளைச்சாமித்தேவர் என்பவர் நாடார்களை ஒதுக்கிவைத்தமை, நாடார்களின் கட்டை விரல்களைச் சேர்த்துக்கட்டி ஒன்றரை ஆண்டுகள் ஒதுக்கிவைத்த கொடுமை ,பின்பு வெள்ளைச்சாமித்தேவர் என்பவர் சிறையில் அடைக்கப்பட்ட பின்னரே பிரச்சனை முடிவுக்கு வந்தது  போன்ற செய்திகளை நூலில் இருந்து தோழர் சங்கையா வாசித்தே காட்டினார். 

                             தொடர்ந்து  நூலில் உள்ள கட்டுரைகளான நாராயண குரு, அய்யன் காளி பற்றிக் குறிப்பிட்ட தோழர் சங்கையா வைகுண்டசாமி, நாராயண குரு போன்றவர்கள் அமைதியான வழியில் , ஆன்மிகத்தின் வழியாக சாதியை ஒழிக்க முயற்சி செய்தவர்கள், அய்யன் காளி(1863)  மக்களைத் திரட்டி, போராட்டத்தின் வழியாக சாதி ஒழியப் பாடுபட்டவர் என்பதனைக் குறிப்பிட்டார். 1871-81 40000 புலையர்கள் முஸ்லிம்களாக மாறினார்கள் , கல்மாலை அறுப்புப்போர் என்பதனை 1915-1916 களில் மக்களைத் திரட்டி மகான் அய்யன் காளி நடத்தினார் என்பதனைக் குறிப்பிட்டார்
.
தொகுப்பு: முனைவர்.வா.நேரு.
(எனது இலக்கிய நண்பர்கள் பற்றிய குறிப்புகள் பின்னர் வெளிவரும்)

Wednesday, 6 February 2013

தோழர்களே நலமா?


வாருங்கள்!  09/02/2013 ந் தேதி மாலை 04-30 மணிக்குச் சந்திப்போம்! சிந்திப்போம். ஆம்! நமது சிந்தனைக்கு நல்ல நூல்கள் காத்திருக்கின்றன!

தோழமையுள்ள
சு.கருப்பையா.

Saturday, 19 January 2013

நிலமெல்லாம் இரத்தம்


புதிய ஆண்டின் முதல் நூல் அறிமுகக் கூட்டத்தில் தோழர். பாலகுமார், "வெட்டுப் புலி" என்ற  தமிழ்மகனின் நாவலையும் அத்துடன்  "சூர்ப்பணங்கு" என்ற நாடகத்தையும் ,  தோழர்.கருப்பையா  "நிலமெல்லாம் இரத்தம்" என்ற பா.ராகவனின் வரலாற்று நூலை அறிமுகம் செய்து வைத்தார்கள். ஏற்கனவே சூர்ப்பணங்கு நாடகம் பற்றிய பதிவினை தோழர். பாலகுமார் தமது "தென் திசை"யிலும் , நமது வாசிப்போர்களத்திலும் வெளியிட்டுள்ளார்.

“நிலமெல்லாம் இரத்தம்" பற்றி..

நூல் ஆசிரியர்: பா.ராகவன்
முதல் பதிப்பு : 2005
விலை       : ரூ.300 ( தற்போதைய விலை ரூ.475/-)
பதிப்பு        : கிழக்குப் பதிப்பகம்

இந்நூலைப் பற்றி அதன் ஆசிரியர் பா.ராகவன்  தமது முகப்புப் பகுதியில், இஸ்ரேல் பாலஸ்தீன எரியும் பிரச்சனையின் புரியும் வடிவம்" என்று அடைமொழி கொடுத்திருப்பார்.  நூலை வாசித்து முடித்ததும், இந்த வார்த்தைகள் உண்மையானதாகவே  எனக்குத் தோன்றியது.

நூலில் , கி.மு.44 இல் துவங்கி கி.பி.2004 ஆண்டு வரையிலான மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் வரலாற்றை ( இஸ்ரேல்,எகிப்து,சிரியா,ஜோர்டான்,துருக்கி, லெபனான் மற்றும் பாலஸ்தீனம்) நடுநிலைமையோடு பா.ராகவன் பதிவு செய்திருக்கிறார் என்று கருத இடமுண்டு.  எத்தனைப் போர்கள்! எத்தனை உயிர் பலிகள்!  ஆயினும் இன்னும் சுதந்திர பாலஸ்தீனம் உருவாகவில்லை! இஸ்ரேல் அதை அனுமதிக்கவே இல்லை. இன்றும் கூட காஸாப் பகுதியில் குண்டு வெடிக்காத நாட்களே கிடையாது. இந்த நீண்ட இரத்தம் தோய்ந்த வரலாறு மனதை வலிக்கவே செய்கிறது!

இந்தப் புத்தகம் , இஸ்லாம், கிறித்துவம் மற்றும் யூதர்கள் என்ற மூன்று மதத்தவர்களின்  மூலத்தந்தையான ஆபிரஹாம் காலம் தொடங்கி,  யாசிர் அராபத் மரணம் வரை பேசுகிறது. ஆபிரஹாம் அவர்களுக்கு சாரா, ஆகார் என்று இரண்டு மனைவிகள். சாரா மூத்த மனைவி. இவருக்கு குழந்தை பிறக்காததால், அவரது வேலைக்காரப் பெண்மணி ஆகாரை தமது கணவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கிறார்.  அவருக்கு “இஸ்மாயில்” என்ற மகன் பிறக்கிறான்.  குடும்பம் மகிழ்ச்சியாக போய்க் கொண்டிருக்கும் போது, பொறாமையில் பீடிக்கப்பட்ட சாரா, ஆகாரை குழந்தையுடன் வீட்டைவிட்டு துரத்துகிறார்.   பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து சாராவிற்கும் "ஈஸாக்"  ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.  இந்த "ஈஸாக்" கின் வழித்தோன்றல்களே "யூதர்கள்'. இஸ்மாயிலின் வழி வந்தவர்கள் தான் " பாலஸ்தீனியர்கள்". ஆகவே, பாலஸ்தீனியர்கள் , யூதர்களைவிட பனிரெண்டு ஆண்டுகள் மூத்தவர்கள்.

ஈஸாக்கின் மூலமாக வந்த யூத குலத்தில்,  கி.மு.5 ஆம் நூற்றாண்டில் பிறந்தவர் தான்  இயேசு கிறிஸ்து.  இவருடைய கருத்துகளும், போதனைகளும் பழமையில் ஊறிப்போன யூத மதகுருக்களுக்கு எதிராக இருந்ததால் இயேசு கிறிஸ்துவை வெறுக்க ஆரம்பித்தனர். அப்பொழுது பாலஸ்தீனம், ரோமானியர்களின் கட்டுப்பாட்டில் அதாவது பான்டியஸ் பிலாட் ( பிலாத்து) என்பவரின் பொறுப்பில் இருந்தது.  இயேசு கிறிஸ்துவின் மேல் வெறுப்பில் இருந்த யூத மதகுருக்கள் , பிலாத்து மூலமாக அவரை சிலுவையில் ஏற்றினார்கள். இது நடந்த காலம் கி.பி.30-35 இருக்கலாம். இயேசுவின் இறப்பிற்குப் பிறகும் அவரது புகழ் பரவி,  அவரது கருத்துகளை ஏற்றுக் கொண்டவர்கள் " கிறித்துவ" மதத்தை தோற்றுவித்தனர்.  இந்நிலையில், ஜெருசலம் நகரில் இருந்த , ஏறத்தாழ  950 ஆண்டுகள் பழமை வாய்ந்த, யூதர்களின் புனித ஆலயம் ( சாலமன்)  கி.பி.70 இல் கிறித்துவர்களால் ( டைட்டஸ் என்ற ரோமானிய மன்னன்)  இடித்துத் தள்ளப்பட்டது. இதுவே பாலஸ்தீனப் பிரச்சனையின் ஆணிவேராக உள்ளது. [ இந்த கோவிலின் அருகில் உள்ள குன்றில் தான் இஸ்லாமியர்களின் முகம்மது வானில் இருந்து இறங்கியதாக நம்பிக்கை. இதன் கீழே மசூதியும் கட்டப்பட்டது] . அங்கே, கிறித்துவ ஆலயமும் எழுப்பப்பட்டது. இதனைத் தொடர்ந்து கி.பி.133 இல் ரோமானியப் பேரரசர் கான்ஸ்டன்டைன் கிறித்துவ மதத்திற்கு மாறி " கிறித்துவ மதத்தையே" மக்கள் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு போட்டதால், பாலஸ்தீனப் பகுதிகளில் கிறித்துவம் வளரத் துவங்கியது. அதனால் கிறித்தவர்களுக்கும், யூதர்களுக்கும் தொடர்ந்து மோதல்கள் ஏற்ப்பட்டன.

இந்தச் சூழ்நிலையில் பாலஸ்தீனக் கிளையில் கி.பி.571 இல் முகம்மது நபிகள் பிறக்கிறார்.  முகம்மது நபிகளுக்கு " ஜிப்ரீல்" என்ற அசிரிறீ  மூலமாக அருளப்பட்ட போதனைகளை அவர் மக்கள் மத்தியிலே பரப்புகிறார்.  இதுவே "குரான்" ஆகும். அத்துடன் புதிய இஸ்லாம் மதமும் உருவானது. முகம்மது நபியின் ஒழுக்கத்தினாலும், அன்பினாலும்  மற்றும்  செயலாலும் கவரப்பட்ட பெருவாரியான பாலஸ்தீனியர்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். கூடவே யூதர்களும் தான்.  

நபிகளின் பிறப்பிற்கு பிறகு , பாலஸ்தீனத்தில் இஸ்லாம் முழுமூச்சில் வளர ஆரம்பித்தது. கி.பி.632 இல் நபிகள் நாயகம் இறந்த பிறகு, அவர் வழியில்  உமர், சலாவுதீன் உள்ளிட்ட கலிபாக்களின் ஆட்சி தொடர்ந்தது. , கூடவே கிறித்துவ இஸ்லாமியப் போர்களும் தான். குறிப்பாக , சுல்தான் சலாவுதீன் கி.பி.1181 இல் ஜெருசலம் நகரைக் கைப்பற்றி இஸ்லாத்தின் பிடியில் வைத்துக் கொண்டார். ஜெருசலத்தை மீட்கத் தொடர்ந்து கிறித்துவர்கள் போரிட்டனர்.  இந்தப் போர்கள்  சிலுவைப்போர்கள் என அழைக்கப்பட்டன.   கி.பி. 1095 முதல்  கி.பி 1250 வரை ,  ஏறத்தாழ ஐந்து சிலுவைப்போர்கள் நடைபெற்று பாலஸ்தீனத்தின் அமைதியை கெடுத்தது.  இதில் வேதனையான விசயம் என்னவென்றால், ஜெருசலம் நகரை கைப்பற்றவே இந்த மூன்று மதத்தவர்களும் சண்டையிட்டார்கள் என்பது தான்.

இதன் பிறகு, பாலஸ்தீனம் கி.பி. 1517 முதல் 1918 வரை துருக்கியப் பேரரசின் பிடியிலே இருந்தது. இடையில் சில ஆண்டுகள் 1831-1840 வரை மட்டும் எகிப்தின் கீழ் இருந்தது.  இந்தச் சூழ்நிலையில் தான் பாலஸ்தீன மக்களின் விடிவெள்ளியாக வந்த  யாசிர் அராபத் கி.பி.1929 இல் பிறக்கிறார். பாலஸ்தீனத்தை மீட்டுக்க அல்பத்தா ( AL FATAH)  அல்லது புனிதப்போர் என்ற போராளி இயக்கத்தை ஆரம்பிக்கிறார்.  ஆனால் பாலஸ்தீனத் தனி நாடு உருவாகுவதற்குப் பதிலாக, ஐ.நா, மற்றும் அமெரிக்காவின் தலையீட்டால் கி.பி.1948 இல் பாலஸ்தீனம் பிரிக்கப்பட்டு " இஸ்ரேல்"  என்ற நாடு உருவானது.  இதனைத் தொடர்ந்து பாலஸ்தீனத்தை உருவாக்க, அல்பத்தாவைப் போன்று அப்போது இருந்த 18 போராளிக்குழுக்கள் இணைந்து கி.பி. 1964 இல்  "பாலஸ்தீன விடுதலை இயக்கம் " [PLO ]  என்ற கூட்டமைப்பை உருவாகியது. அதன் தலைவராக யாசிர் அராபத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தனி நாடு என்பதற்குப் பதிலாக, கி.பி.1994 இல் ,  சுய ஆட்சி அதிகாரம் படைத்த பாலஸ்தீனத்தைத் தான் இஸ்ரேல் பிரதமர் இட்சாக் ராபின் அவர்களிடமிருந்து  யாசிர் அராபத்தால் பெற முடிந்தது. அதற்காகவே, இவ்விருவருக்கும் 1994 ஆம் ஆண்டு "அமைதிக்காண நோபல் பரிசு கிடைத்தது".  ஆனால் சுதந்திரத் தனி பாலஸ்தீனம் என்பது,  கி.பி.2004 இல் யாசிர் அராபத் இறக்கும் வரை ஏற்படவே இல்லை!

இது தான் "நிலமெல்லாம் இரத்தம்" நூல்  சுட்டிக்காட்டும் சுருக்கமான வரலாறு.

இந்த நூலை முழுவதுமாக வாசித்தால் ,  இரத்தம் தோய்ந்த “பாலஸ்தீனத்தின் வரலாறு”  ஒவ்வொருவரின் மனதையும் வலிக்கச் செய்யும். படித்துமுடித்த பின்னர், "இஸ்ரேல்-பாலஸ்தீனப்  பிரச்சனை என்பது, தனித்துவம் வாய்ந்த இரண்டு மதங்களின் முரண்பாட்டுப் பின்னணியில் , திறமை மிக்க  அரசியல்வாதிகளால் முன்னெடுத்துச் செல்லப்பட்ட மக்களின் உணர்வு சார்ந்த பிரச்னை. மதம், அரசியல் மற்றும் உணர்ச்சி -சேரக்கூடாத இந்த மூன்று அம்சங்கள் ஒன்று சேர்ந்த காரணத்தால் இன்று வரை தீர்க்க முடியாத சிக்கலாக இருந்து வருகிறது"  என்று இந்நூல் ஆசிரியர் குறிப்பிடுவது நம் மனதிலும் பதிந்து விடும்.

இந்நூல் உங்களுக்கும் பிடிக்கும்!


( வெட்டுப் புலி நூலின் பகுதி விரைவில்…)

Thursday, 17 January 2013

சூர்ப்பணங்கு - நாடகம் அறிமுகம்


சூர்ப்பணங்கு - ஏழு கன்னிமார் கதை



அடைவெறி நீங்காத தாய்க்கோழியின் விரித்த சிறகுகளுக்குள் அரவணைக்கப்பட்டு, தலையை மட்டும் வெளியே நீட்டியபடி கள்ளப்பிராந்தை அண்ணாந்து பார்க்கும் சிறு குஞ்சுகளாகவும், அவற்றை கொடிய உலகில் வாழ்விக்க வழியற்று தானும் அவையும் சேர்ந்து மரிக்க கிணற்றைத் தேடி அலையும் தாய்க்கோழியான நல்லதங்காளாகவும் அறிமுகமாகிறாள் சூர்ப்பணங்கு. ஆண்டாண்டு காலமாய், சென்ம சென்மமாய் அடுப்படிகளிலும், படுக்கையறைகளிலும், இருண்ட வீதி முனைகளிலும், முள்ளுக்காடுகளிலும், திரையரங்குகளிலும், ஊடகங்களிலும், இணையங்களிலும், ஓடும் பேருந்துகளிலும் நார்நாராக கிழிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பெண்ணுடலின் மொத்த வடிவாய் எழுந்து நிற்கிறாள் சூர்ப்பணங்கு. பாழாய் விரிந்து கிடக்கும் பூமியில் ஊட்ட ஒரு வாய்ச்சோறு கிடைக்காமல் தன் ஏழு பிள்ளைகளுடன் மரணத்தை அணைக்கும் தாய், இறுதியில் ஏழு தனங்களைக் கொண்டவளாய் அவதரித்து உலகுக்கு அமுதூட்டுகிறாள். செவ்விற மேலாடை குருதியால் நனைந்த படியும், வெண்ணிற பாவாடை, சாட்டையடிகளுக்கு ஏற்றவாறு முடிச்சுகளை இறுக்குவதுமாக பெண்ணுடலின் மீதான அதிகாரம் தொன்மம் தொட்டு தொடர்ந்து வருவதை அழுத்தமாக பதிவு செய்கிறாள் சூர்ப்பணங்கு.

வைக்கோல் பிரியை கூந்தலாய் கொண்டு, அதிலும் வண்டுகள் ஊறும் உருவகத்தைக் கொண்டவளாய் வருகிறாள். திசைக்கொன்றாய் முளைக்குச்சிகளடித்து அடைப்புகளை ஏற்படுத்தி, அம்முளைக்குச்சிகளை தன் அடிவயிற்றியிலும் ஏற்றிக் கொள்கிறாள். பின் வெறி கொண்டவளாய் முளைக்குச்சிகளை பிடுங்கி எறியவும் செய்கிறாள். விளக்குமாறையும், முறத்தையும், உலக்கையையும் சடங்குகளின் தொடர்ச்சியாய் சுமந்து கொண்டலைபவள், அவற்றை ஆயுதமாக்கி அதிகாரத்தை நோக்கி இடிமுழக்கமும் இடுகிறாள். ஒரு பார்வைக்கஞ்சும் சிறுபெண்ணாகவும், ஆங்காரங்கொண்டாடும் வனப்பேச்சியாகவும் இருவேறு இயல்பை ஒன்றாய்க் கொண்டவளாய் இருக்கிறாள் அணங்கானவள். பர்தாவுக்குள் உடம்பை குறுக்கிக் கொண்டு கண்மூடிய நிலையிலும் கல்விக்காக அலைமோதுகிறாள். நெல்குத்தும் உலக்கையின் ஒலி அதிர அதிர பூமியைப் பிளக்கும் ஆவேசங்கொண்டவளாய் அடுக்குமுறையை அடிபணிய வைக்கிறாள். ஒவ்வொரு வன்கொடுமையின் போதும் தன் சுயத்தை காத்துக் கொள்ளப் போராடும் அவள், மாரிலடித்துக் கொள்கிறாள், உழன்று தவிக்கிறாள், விடுவித்துக் கொள்ளத் துடிக்கிறாள், இறுதியில் ஒவ்வொரு முறையும் தன்னைத் தானே பலிகொடுத்தே மாண்டு போகிறாள். அவள் கண்ணீரில் வடிந்த உப்பு நீர் உலகை ஆட்கொள்கிறது.

இன்று கொடுங்கோலர்களிடமிருந்து மட்டுமல்ல, வீட்டிற்குள்ளே ஒன்றும் வெளியே ஒன்றும் பேசித்திரியும் பெண்ணியவாதிகளிடமிருந்தும், சர்பமாய்த் தீண்டக் காத்திருக்கும் கலாச்சார காவலர்களிடமிருந்தும் தன்னை மீட்டுக் கொள்ள பெண் போராட வேண்டியிருக்கிறது. நிர்கதியாய் நடுரோட்டில் கிடந்த ஒருத்தியை வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சமுதாயம் தான் இன்று அவள் சாவிற்கு மெழுகுவர்த்தி ஏற்றிக் கொண்டிருக்கிறது. சமுதாய அக்கறைக்காக பாடுபடுவதாக சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் ”சிறப்புப்பார்வை”க்கு நடுவில் பெண்ணுடலைத் தான் விற்றுக் கொண்டிருக்கின்றன. அவை பெண்ணை உபயோகித்து விட்டு தூக்கி எறியும் ஒரு பண்டமாக காட்டிக் கொண்டே, பெண்ணுரிமையைப் போற்றி சிறப்புக் கட்டணத்தில் குறுஞ்செய்திகள் அனுப்ப அழைப்பு விடுக்கின்றன. அரசாங்கமும், அதிகாரமும் புரையோடிப் போயிருக்கும் புண்ணுக்கு புணுகு பூசும் வேலையைத் தான் காலம்காலமாக செய்து கொண்டிருக்கின்றன.

”மணல்மகுடி” குழுவினர் நடத்திய சூர்ப்பணங்கு நாடகம் மதுரை டோக் பெருமாட்டி மகளிர் கல்லூரியில் நூற்றுக்கணக்கான மாணவியர் முன்னே நிகழ்த்தப்பட்டது. கோவில்பட்டி ச.முருகபூபதியின் இயக்கத்தில் நடைபெற்ற இந்த நாடகத்தில் நடித்த இளைஞர்கள் தங்கள் உயிரைக் கொடுத்து நடித்திருந்தனர். தேர்ந்த கலைஞனுக்கான நேர்த்தியுடனும், தெளிவான உச்சரிப்புடனும், கணீர் குரல் வளத்துடனும் நூறு சதவீத ஈடுபாட்டுடன் களப்பணியாற்றினர். அமைக்கப்பட்ட மேடை கூட இல்லை, சிறு கற்கள் குத்தும் செம்மண் தரையில் தான் நாடகம் நடந்தேறியது. ஆனாலும் நடித்தவர்கள் அதைப் பற்றியெல்லாம் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. அருள் வந்து ஆவேசங்கொண்டாடுபவர்களைப் போல அர்பணிப்புடனும், முழு ஈடுபாட்டுடனும் தம்மை முழுமையாக சூர்ப்பணங்கிற்கு ஒப்புக் கொடுத்து விட்டது போலிருந்தது. ஒலியமைப்பும், இசையும், வெளிச்ச வடிவமும் நாடகத்துக்கான நிஜத் தன்மையை அதிகரித்தன.

நாடகக்குழுவினர் சொல்ல வந்த கரு அங்கு கூடியிருந்த மாணவியர்களுக்கு முழுமையாய் சென்று சேர்ந்தது என்பதற்கு நாடகம் முடிந்தவுடன் எரிமலை போல் வெடித்துக் கிளம்பிய அந்த பெண்களின் ஆவேசம் கொண்ட கைத்தட்டல்ள் மட்டும் தான் தற்பொழுதைக்குள்ள ஒரே சாட்சி. ஆனாலும் விதைகள் விழுந்திருக்கும் என்ற நம்பிக்கையிருக்கிறது.

உதவி: 
http://nesamithran.blogspot.in/2011/12/blog-post.html
http://tamizharivu.wordpress.com/2011/10/07/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95/
http://livingsmile.blogspot.in/2011/06/blog-post_28.html
******

வி.பாலகுமார்.

Wednesday, 9 January 2013

வாசிப்போர்களம்-9


தோழர்களே!

இந்தப் புதிய ஆண்டின் (2013) முதல் கூட்டம் வருகிற 12/01/13 ந் தேதி  மாலை 04-30 மணிக்கு நமது வழக்கமான இடத்தில் கூடுகிறது. தோழர்கள். பாலகுமாரும், சுந்தரராஜனும் நல்ல நூல்களை அறிமுகம் செய்ய இசைந்துள்ளார்கள். இந்த ஆண்டில் நமது வாசிப்போர்களத்தை விரிவுபடுத்தும் விதமாக புதிய தோழர்களை இணைக்கும் முயற்சியில் நமது உறுப்பினர்கள் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.