Saturday, 19 January 2019

சேவல் களம்





நாவல்:        சேவல் களம்



நாவல்:        சேவல் களம்
ஆசிரியர் : முனைவர். பாலகுமார் விஜயராமன்
வெளியீடு: காலச்சுவடு
விலை:       ரூ. 225


சேவற்கட்டியான இராமரின் குடும்ப வரலாறே இந்த “சேவல்களம்”  நாவலின் பேசு பொருளாகவும் , படிமமாகவும் இருக்கிறது.

முள் அடிக்கும் பெருநாழி சேவலை (சண்டை சேவல்)  வளர்த்து வரும் இராமருக்கு துணையாக அவரது நண்பர் ஜான் மிராண்டாவும் , குமாரும் துணையாக இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் போய் சேவல் சண்டைகள் நடத்தி வருவது இராமரின் முக்கிய பணியாகவே இருந்து வருகிறது . அப்படியான ஒரு போட்டி புதுக்கோட்டையில் நடை பெறஇருப்பதால்   " சேவல் சண்டை" க்கான தயாரிப்பு வேளையில் தான் இந்த நாவல் துவங்குகிறது.  

அந்தப் புதுக்கோட்டை போட்டியில் குமாரின் சாம்பல் சேவல் வெற்றி பெறுகிறது; இராமரின் குழுவினருக்கு பாராட்டும் புகழும் கிடைக்கிறது. அதன் பின்னர் இராமரின் பேத்திக்கு வீரக்குடியில் நடைபெறும் நேர்த்திக்கடன் விழாவில்  , அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் சந்தித்து சுவையான  கிடா விருந்து சாப்பிடுவதில் நாவல்  நிறைவடைகிறது.

 நாவல் முழுவதும் இராமரின் மகன்கள் ( கண்ணன், ஜீவா ), மனைவி யசோதா, மருமகன்கள் ( இரமேஷ் , சேதுபதி) , சகோதரிகள் ( ஆண்டாள், லட்சுமி ) , மகள்கள் நண்பர் சதாசிவம் மற்றும் அவர் குடும்பத்தினர் ஆகியோர்களின் வாழ்வும், பாசப்பிணைப்பும் மிகவும் நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது.


இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் மிகவும் நல்லவர்களாகவும் , நேர்கோட்டில் பயணிப்பவர்களாகவும் இருப்பதால் எந்தப்பாத்திரம் சிறப்பு வாய்ந்தது என்று மதிப்பீடு செய்வதில் தடுமாற்றம் நிகழுவது சாத்தியமே.


இருந்தாலும்,  சேதுபதியின் பாத்திரப்படைப்பு என்னை மிகவும் கவர்ந்தாக இருக்கிறது . ஒரு சாதாரண கூலியாக தன் வாழ்க்கையைத் துவக்கி ,  எப்படியாவது வாழவேண்டும் என்று  வாழ்க்கையைத்  தொடங்கி , பின்னர் தன் சுய முயற்சியாலும் , கடுமையான உழைப்பினாலும் நேர்மையாக முன்னேறும் சேதுபதி மனதில் நிற்கிறான்.  அவனது   அண்ணன் இரமேஷ் நாவலின் ஆரம்பத்திலே  ஒரு போராட்டத்தில் " உயிராயுதம் " தந்து இறப்பது வேதனையான சம்பவம்.  அவனை அந்த நிலைக்கு கொம்பு சீவிவிட்டது இடதுசாரி இயக்கத்தின் படிப்பகம் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.



அதேபோல் ஜீவாவின் பாத்திரமும் தொழிநுட்பரீதியாக  திறம்பட படைக்கப்பட்டுள்ளது. தமது பட்டறிவை நூலாசிரியர் பாலகுமார் இலாவகமாகக் கையாண்டுள்ளார்.  அவன் ஆன்மீக மடமான  நந்தவனத்திற்குள் சென்று தகவல் சேகரிப்பது சற்று சுவாரசியமாக இருக்கிறது.


சதாசிவம் நல்லதொரு ஒப்பந்தக்காரராக வருகிறார். அவர் தமது தம்பியின் மகள் வசந்தியை சேதுவுக்கு திருமணம் செய்து வைப்பார் என்று முதலிலே ஊகிக்க முடிந்தது.
அடுத்து , மீனாட்சியம்மன் கோவிலில் யசோதாவிற்கும் , மீனாட்சிக்கும் நடைபெறும் உரையாடல்கள் மிகவும் இதமாக  இருந்தது. முதலில் கண்ணனை மறந்து விட சொல்லும் யசோதா , மீனாட்சியின் நம்பிக்கையான பிடிவாதத்தால் கடைசியில் ஏற்றுக்கொளவதும் நயமாக இருந்தது.

அதேபோல் இறுதி அத்தியாயத்தில்   நாவலில் வரும் அனைத்து பாத்திரங்களும் " வீரக்குடி" விருந்தால் சந்திப்பது என்பது  மிகவும் அபூர்வமான நிகழ்வு . எனக்குத் தெரிந்து எந்த நாவல் ஆசிரியரும் இப்படி சிந்தித்தது  இல்லை.

அடுத்து , தவறாமல் குறிப்பிடப்பட வேண்டியது என்னெவென்றால்,  சேவல் சண்டை பற்றிய நுணுக்கங்களையும் , சேவல் பராமரிப்பு பற்றியும் நாவலில் மிக நுட்பமாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். குறிப்பாக புதுக்கோட்டை போட்டி நடக்கும் போது நாவலாசிரியரின் வர்ணனை மிகவும் நயமாக இருக்கும். வாழ்த்துக்கள் பாலகுமார்!.

இருந்தாலும் சில  எனக்கு சரியெனப் படாத  சில விஷயங்களை சொல்லித் தான் ஆக வேண்டும்.

1.       பெங்களூர் அழகிப் போட்டிக்காக , இரமேஷ் உயிராயுதம் ஏந்தியத்திற்கு அவனுக்கு அந்த கோட்பாட்டை சொல்லிக்கொடுத்தது அவன் படித்த "படிப்பகம்" என்றும் ( இடது சாரி), அதன் பிறகு ரமேஷின் குடும்பத்தை அவர்கள்   கண்டு கொள்ளவில்லை என்று சேது  புலம்புகிறார். ஆனால் , இரமேஷை உயிராயுதப் போராட்டத்திற்கு (கம்யூனிஸ்டுகள் ) தூண்டியதற்கான வலுவான காட்சி எதுவும் நாவலில் சொல்லப்படவில்லை. மேலும் , இடஒதுக்கீட்டு பிரச்சசினையின் போது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போது சில இடங்களில் மாணவர்கள் தீக்குளிப்பில் ஈடுபட்டார்கள். ஆனால் , அழகிப்போட்டி அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துமா ? என்று நம்பமுடியவில்லை,

2.       நந்தவனத்தில் ஆளும் கட்சி அமைச்சர் ( நாத்திக வாதி என்று செல்லப்படுகிறார்)   நிர்வாண  மூலிகை வைத்தியமும் , பூசையும் செய்வதாக  சொல்லிவிட்டு;  ஊரெல்லாம்   நாத்திகம்  பேசிக்கொண்டு , நிர்வாண பூசை பண்ணிட்டு அலையுதுக ! என்று குறிப்பிடுகிறார். நாவலுக்கு இது பொருத்தமாக இருந்தாலும் , எல்லா நாத்திகவாதிகளும் இப்படி தான் இருக்கிறார்களோ என்ற பிம்பத்தை தோற்றுவித்து விடும் அபாயம் இருப்பதாக எனக்குத் தோன்றியது. இவர்கள் போலிகள்; அதனால்  நாத்திகவாதிகள் கணக்கில் இவர்களை சேர்க்கக்கூடாது என்பது என் எண்ணம் . உண்மையான நாத்திகவாதிகள் இப்படி இருக்க மாட்டார்கள்.

3.       ஒரு சிறந்த சேவற்கட்டியின் மகனான படைப்பாளி ,ஏன்? அந்த சேவல்  களத்தை விட்டொழித்தார்? . அந்த " பெருநாழி சேவல்கள் எங்கே?. 

இப்பகுதிகளை இன்னும் தெளிவாக குறிப்பிட்டு இருக்கலாம் என்று கருதுகிறேன். மொத்தத்தில் , நீண்ட நாட்களுக்கு பிறகு " சேவல் களத்தை" ஒரே மூச்சில் வாசித்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.  இதுவே பாலகுமாரின் வெற்றியாக   எனக்குத் தோன்றுகிறது.

சு,கருப்பையா.


Friday, 18 January 2019

களப்பால் குப்பு


களப்பால் குப்பு


பிறப்பு : 1911
இறப்பு: 18/04/1948

நூலாசிரியர்: வாய்மைநாதன்
வெளியீடு : NCBH
விலை : ரூ 100/-


தஞசை, திருவாரூர் மாவட்டத்தில் வாழ்ந்த விவசாயிகளின் விடிவெள்ளியாக திகழ்ந்த தோழர் களப்பால் குப்புசாமியின் வரலாறு , அப்பகுதியின் செங்கொடி வரலாற்றோடு இணைந்தது.

களப்பாலை     சேர்ந்த அருணாசலம்-சமுத்திரத்தம்மாள் தம்பதியினருக்கு  மகனாகப் பிறந்தவர் குப்புசாமி. தலையாரியான அருணாசலம் அவர்களுக்கு  தமது  படிக்க  வைக்க  ஆசை . ஆனால் விவசாய கூலிகளுக்கு பள்ளியில் இடம் கிடையாது. அதனால் தனக்கு மகன் பிறந்ததையே மறைத்து விடுகிறார். தலையாரியின் மகன் என்பதால் குப்புசாமியை பள்ளியில் சேர்த்துக் கொள்கிறார் வாத்தியார் . ஆனால் இவன் வாத்தியாரையோ, மற்ற உயர் சாதி குழந்தைகளையோ தொட்டுவிடக்கூடாது என்பதால் திண்ணையில் நின்று தான் படிக்க வேண்டும். சிறிய தவறு தெரிந்தாலும்  பிரம்படிதான்.   எப்படியோ ஆறாம் வகுப்பு வரை படித்து விடுகிறான் குப்பு. அதன் பின்பு பண்ணையார் தொப்பையா முதலியாரின் தலையீட்டால்  படிப்பை தொடரமுடியாத நிலை ஏற்படுகிறது., அவர் வீட்டில் பண்ணையாளாகி விடுகிறான்.


ஏழை சூத்திர மக்களுக்கு அங்கு நிகழும் கொடுமைகளைக்   கண்டு கொதித்து எழும் குப்பு , ஒரு நாள் தன்னை அடிக்க வரும் பண்ணை மணியம் காதர் பாட்சாவின்   சாட்டையை பிடுங்கி அவரை வெளுத்து வாங்குகிறான். ஆடிப்போய் விடுகிறது பண்ணை.   பண்ணையாரின் பிடியிலிருந்து தப்பிக்க  குப்பு களப்பாலை விட்டு வெளியேறுகிறான்.


பிறகு ஓவரூரை சேர்ந்த குப்பம்மாளை திருமணம் செய்கிறார் ; ஆனால் சிறிது   காலத்திற்கு பிறகு இவர் பிரிந்து சென்று விடுகிறார். அதன் பின்பு தலை ஞாயிறுவை சேர்ந்த வாஞ்சாலையை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு சோலையம்மாள் என்ற மகளும், கணேசன், பக்கிரிசாமி மற்றும் சிவஞானம் என்ற மகன்களும் பிறக்கிறார்கள்.

நிலப்பிரபுத்துவக் கோட்டையாக திகழ்ந்த தென்பரை, களப்பால் பகுதியில் வாழ்ந்து வந்த விவசாயக் கூலிகளை இணைத்து சங்கம் அமைக்கவும் , கொடூரமும் , வக்கிரமும் நிறைந்த பண்ணையார்களுக்கு   எதிராக போராடவும் பெரிதும் காரணமாக இருந்தவர் களப்பால் குப்பு. சமூக நீதிக்காகவும், ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் போராடும் ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்க வேண்டிய போராளி தோழர். களப்பால் குப்பு.


கி.பி. 1943 ஆம் ஆண்டு தான் விவசாயிகள் சங்கம் தஞ்சைப்பகுதிகளில் வேரூன்றத் தொடங்கியது. அதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் ; வேதபுரம் ரெங்கசாமி , நரசிங்கபுரம் கொள்கைவீரர் பி. வெங்கடேச சோழகர் ஆவார்கள். அதன் பின்பு தோழர் .பி. சீனிவாச ராவின் வருகை விவசாயிகளின் போராட்டத்தை எழுச்சியுடன் வழி நடத்தியது.

அவ்வாறு தென்பரையில் துவக்கப்பட்ட விவசாயிகள் சங்கத்தில் தான் தமது பணியைத் துவக்கினார் களப்பால் குப்பு . அவரின் வீரமான போராட்டத்தினால் விவசாயக் கூலிகளின் மீது தொடுக்கப்பட்ட சவுக்கடி,  சாணிப்பால் திணிப்பு ஒழிந்தது. அதனால் தஞ்சை மாவட்டத்தில் இருந்த  கூலி உழவர்கள், பண்ணையாட்கள் , குத்தகையாளர்கள், வார சாகுபடியாளர்கள் , சிறுசிறு விவசாயிகள் ஆகியோர்களுக்கு தாரக மந்திரமாக “சங்கம்”  இருந்தது.


தோழர் பி.சீனிவாச ராவ் கலந்து கொண்ட விவசாய  சங்க கூட்டங்களில் தேன் கூட்டில் மொய்க்கும் தேனீக்களை போல் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடினார்கள். அவரின் ஒவ்வொரு வார்த்தைகளும் மக்களுக்கு புத்துணர்ச்சியை அளித்தது. " சாட்டையால் அடிக்காதே! சாணிப்பாலை நிறுத்து ! அடித்தால் திருப்பி அடிப்போம்! "வாடி போடி " என்றால் " வாடா போடா " என்போம் என்ற வார்த்தைகள் பண்ணையார்களின் மனதில் பயத்தை உருவாக்கின.


களப்பால் குப்பு , சீனிவாசராவை வைத்து பல்வேறு கூட்டங்களை நடத்தி வைத்தார். அதனால் அப்பகுதியில் எப்போதும் பதட்டம் நிலவியது. பிரச்சனையை முடிவிற்கு கொண்டுவர களப்பால் குப்புவை  கொலைசெய்ய திட்டமிட்டு பண்ணையார்கள்  கூலிப்படையை நியமித்தனர் . ஆனால் ஒவ்வொரு முறையும் தமது வீரத்தால் தப்புகிறார் குப்பு. ஒரு முறை இவரை கொலை செய்ய வந்த நான்கு கூலிப்படையினருடன் பேசி , அவர்களை மனம் மாற செய்வதும் , அவர்கள் குப்புவை பாதுகாப்பாக வீட்டில் விட்டு செல்வதும் மனதை நெகிழச்செய்வதாக இருக்கிறது.


இதனைத் தொடர்ந்து களப்பாலில் பிரமாண்டமான ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார் குப்பு. அதனை சீர்குலைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் , குப்புவிற்கு தணடனை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சிந்தித்த  பண்ணையார்கள் கூலிப்படையை ஏவி குப்புவின் மூத்த மகன் கணேசனின் கையில் வெட்டி விடுகிறார்கள். செய்தி கேள்விப்பட்ட குப்புவின் மனைவி அதிர்ச்சியிலும் , ஏற்கனவே இருந்த பெரியம்மை பாதிப்பினாலும் இறந்து விடுகிறார்.


தகவல் அறிந்த குப்புசாமி மிகவும் துயரமடைந்தார்; ஆனாலும் ஒரேயடியாக குலைந்து போகவில்லை. " அவள் இறந்து விட்டாளா?" நொடி நேரம் அவர் அமைதியாக நின்றார்; பிறகு தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னார்: " நான் வந்து என்ன செய்யப் போகிறேன்? நீங்களே அவளை அடக்கம் செய்யுங்கள்!"  என்றார். இத்தகைய நெஞ்சுரம் கொண்ட  இடது சாரி  தோழன் களப்பால் குப்பு.


இறுதியாக குன்னியூர் கிராமத்தில் சேரிவாசிகள்  பண்ணையாட்களின் தாக்குதலுக்கு உள்ளாகி வீடுகளை இழந்தார்கள்; பெண்கள் கேவலப்படுத்தப்பட்டார்கள். பொறுமை கடந்த சேரி மக்கள் வெகுண்டார்; குண்டர்களை எதிர்த்து மோதினார். அந்தக் கைகலப்பில் கூலிப்படையினர் இருவர் இறந்தனர். ஆனால் கொலைப்பழி களப்பால் குப்புவின் மீது விழுந்தது. தஞ்சை அமர்வு நீதிமன்றம் அவருக்கு " தூக்குத் தண்டனை " விதித்தது.


அவர் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்ய கம்யூனிஸ்ட் கட்சி எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. சிறையில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அப்போது அவருக்கு மருந்து கொடுக்கும் சாக்கில் விஷமுள்ள மாத்திரைகள் இராமன் என்ற கைதியால் கொடுக்கப்பட்டது. அதனால் 18/04/1948  ந் தேதி இரத்தவாந்தி எடுத்து அந்த எரிமலையின் வாழ்வு   மரணத்தில் முடிந்தது.    


கி.பி. ஆம் 1911 ஆண்டு  பிறந்த களப்பால் குப்பு இந்த மண்ணில் 37 ஆண்டுகளே  வாழ்ந்தார். அவரின் வாழ்வும் , தியாகமும்  வருங்கால சந்ததிகளுக்கு பாடமாகவே இருக்கிறது. களப்பால் குப்புவின் கதை  பட்டிதொட்டிகளிலெல்லாம் பேசப்பட வேண்டும். சாதியமும், மதவாதமும் மீண்டெழுந்துள்ள இத்தருணத்தில் மக்களை பாதுகாக்க களப்பால் குப்புசாமி போன்ற தோழர்கள் நம் நாட்டிற்கு மிகவும் தேவைப்படுகிறார்கள்!

அம்மாவீரனின் சுருக்கமான வரலாறே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. தியாகம் மிகுந்த முழுக்கதையையும் இந்த நூலை வாசித்து தெரிந்து கொள்ளுங்கள்.

சு.கருப்பையா.


Thursday, 10 January 2019

சேவல்களம் - விமர்சனம் - இரா.இராஜசேகரன்

சேவல்களம் நாவல் குறித்து, நண்பன் இரா.இராஜசேகரனின் விமர்சனம்.





Friday, 4 January 2019

கொலைக் களங்களின் வாக்குமூலம்




ஆசிரியர்: அருணன்
பதிப்பகம் : வசந்தம் வெளீட்டகம், மதுரை
விலை: ரூ 120/-

சிறந்த  இடதுசாரிச் சிந்தனையாளரும்  , எழுத்துத்தொழிற்சாலை என்றும் அழைக்கப்படுபவருமான தோழர். அருணன் எழுதிய இந்த நூல் கடந்த காலங்களில் தமிழகத்தில் நடந்தேறிய பஞ்சமர்களின் கொலைகளை பற்றி , அதாவது  நந்தன், காத்தவராயன், மதுரைவீரன் மற்றும் முத்துப்பட்டன் ஆகியோர்களின் கொலைகளைப் பற்றியும் அதற்கான காரணங்களைப் பற்றியும் பேசுகிறது.

இதில்ஆச்சரியம் என்னவென்றால் , இவர்களை தான் நாம் கடவுள்களாகப் பாவித்து,  கோவில்கட்டி  இன்றும் வணங்கி வருகிறோம்.  இதில் நந்தன் , காத்தவராயன் , மதுரைவீரன் போன்றவர்கள் பார்ப்பனர்கள் கற்பித்த வருணாசிரமத்தில்  நான்காம்  பிரிவான சூத்திர சாதியைச்   சேர்ந்தவர்கள்.  அதாவது முறையே புலையர், பறையர் மற்றும் சக்கிலியர் சாதியைச் சேர்ந்தவர்கள். முத்துப்பட்டன் மட்டும் பார்ப்பனன். ஆனாலும் , சக்கிலிய சாதி பெண்களை மணந்து பஞ்சமராக வாழ்ந்தவன்.

நந்தன் எப்படி இறந்தான்?, காத்தவராயன் ஏன் கழுவேற்றப்பட்டான் ? , மதுரைவீரன் ஏன் மாறுகால் , மாறுகை வாங்கப்பட்டான்   ? , முத்துப்பட்டன் எப்படி இறந்தான் ?,  இதற்கான காரணங்களை அறிய , அந்தந்த பகுதிகளுக்கு நேரிடையாகச் சென்று , களஆய்வு செய்து இந்த நூலை எழுதியிருக்கிறார் அருணன். அவரின்   ஆய்வும் , நம்பிக்கையும்  சரியாகவும் , நம்பும் விதமாகவும் இருக்கிறது.

இதோ ! அவருடைய நூலிற்குள் செல்லலாம்.


நந்தன்!... ( காலம் கி.பி. 7-10 நூற்றாண்டாக இருக்கலாம் )





நந்தன் 

மாயவரத்தை அடுத்துள்ள மேலாநல்லூரில் பிறந்தவன் நந்தன். புலையர் குளத்தில் பிறந்த இவனுக்கு சிதம்பரம் நடராஜர் மேல் அளவு கடந்த பக்தி. சிதம்பரத்தில் அவரைக் கண்டு தரிசிக்க விரும்புகிறான். ஆனால், வருணாசிரமம் குறுக்கிடுகிறது. அதனால் சிதம்பரம் கோவில் தெற்கு வாசல் வழியாக கோவிலுக்குள் நுழைந்து விடுகிறான்.  இதைப்பார்த்த தீட்சிதர்கள் அவனைப் பிடித்து தீக்கிரையாக்கி விடுகிறார்கள். அவன் நுழைந்த தெற்கு வாசலையும்  அடைத்து    பூசி  விடுகிறார்கள்.


ஆனால், நமக்குத் தெரிந்த நந்தன் வரலாறு என்பது, நடராஜரை தரிசிக்க வந்த நந்தன்,   நெருப்பில் மூழ்கி எழுந்து, தன்னை புனிதப்படுத்திக் கொண்டு, கோவிலிற்குள் நுழைந்து நடராஜரைப் பார்த்த பின்பு அவரோடு  ஜோதியில் கரைந்தான் என்பது தான். இது எப்படி சாத்தியமாகும்?  என்கிறார் அருணன்.
அவரின் கணிப்பின்படி , நந்தன் தீயில் புகுந்து கோவிலுக்குள் போகவில்லை ; கோவிலுக்குள் போனதால் தான் தீக்குள் புகுத்தப்பட்டான் !.  என்பது தான் உண்மையாக இருக்க முடியும் என்கிறார் ,  மேலும் , இதுவே வருணாசிரம அடக்குமுறைக்கு எதிராக நடைபெற்ற “முதல் கோவில் நுழைவுப் போராட்டம்”   என்றும் கூறுகிறார் அருணன்.  


காத்தவராயன்!....( 11 -12 ஆம் நூற்றாண்டாக  இருக்கலாம் )



காத்தவராயன்

காத்தவராயன் பறையர் குலத்தில் பிறந்தவன் . திருச்சி அரசரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியான   குணசீல மங்கலம்புத்தூர் , பாச்சூர்  மற்றும் வாத்தலை ஆகிய  பகுதியில் இக்கதை நிகழ்ந்துள்ளது.  காத்தவராயன் சிறந்த வீரன் ; அத்தோடு ஒரு இசைவாணனும் கூட . இவனது பாடலில் மயங்கிய சோமாசி பட்டரின் மகள் ஆரியமாலை அவனைக் காதலிக்கிறாள். அளவில்லாக் காதலின்  ஆரியமாலை காத்தவராயன் பின்னால் வந்து விடுகிறாள் . அதனால் அவளை மணந்து கொள்கிறான்.

அதேபோல் , ஒந்தாயி என்ற செட்டியார் வீட்டுப் பெண்ணும் காத்தவராயனை காதலிக்கிறாள். அவளையும் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான். வருணாசிரமக் கொள்கை தலைவிரித்தாடிய அந்தக்காலத்தில் இதை எப்படி ஆதிக்க சாதியினர் பொறுத்துக் கொள்வார்கள்?. சோமாசிப்பட்டார் திருச்சி அரசரிடம் முறையிடுகிறார் . அவரின் கட்டளைப்படி காத்தவராயனின்  தந்தை  சேப்பிள்ளையான் (அரசரின் தளபதி) , அவனை கைது செய்ய பெரும் படையுடன் வருகிறார்.    ஆனால் , காத்தவராயனை வெல்ல முடியவில்லை .

அவமானமடைந்த திருச்சி அரசர் , காத்தவராயன் சரணடைய வேண்டும் ; இல்லையென்றால் அவனது தந்தை சேப்பிள்ளையானுக்கு மரண தண்டனை கொடுக்கப்படும் என்று பறை அறிவிக்கிறார், தந்தையின் மீது இருந்த அன்பினால் காத்தவராயன் சரணடைகிறேன். பின்னர் , காத்தவராயன் பாச்சூரில் 60 அடி உயர கழுமரத்தில் ஏற்றப்பட்டு கொல்லப்படுகிறான். அதாவது, பிராமணக்குலத்தைச் சேர்ந்த ஆரியமாலையையும் , செட்டியார் குலத்தைச் சேர்ந்த ஒந்தாயியையும் திருமணம் செய்து கொண்டதாலேயே காத்தவராயன் கொல்லப்படுகிறான்.

பின்னர் காத்தவராயனுக்கு கோவில் கட்டி  கடவுளாக்கப்படுகிறான.  இந்தக் கோவில் வாத்தலையில் இன்றும் உள்ளது. இவனது கதையை சிவாஜி நடித்த " காத்தவராயன் " படத்திலும் பார்க்கலாம். ஆனாலும் , உண்மையான வரலாறு என்பது எப்போதும் மாறுபட்டு தான் இருக்கும் என்பதை இந்தநூலின் மூலம் அறியலாம்.


மதுரைவீரன்!... (கி.பி.1600- 1660 இருக்கலாம்  )

மதுரைவீரன்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கிழக்கு வாசல் அருகில் மதுரை வீரனுக்கு கோவில் உள்ளது. ஆனாலும் , இவனது வரலாறும்  மிகவும் வேதனையானது.

சக்கிலியனான மதுரைவீரன்  சிறந்த வீரன் .  பொம்மனநாயக்கரின் மகள் பொம்மியை காதல் திருமணம் செய்து கொள்கிறான். இவனது வீரத்தைப் பார்த்து திருச்சி அரசர் விஜயரங்க நாயக்கர் இவனை தளபதியாக வைத்துக் கொள்கிறார்.

மதுரையில் கள்ளர்கள் தொல்லை அதிகரித்ததால் , அவர்களை அடக்க திருமலை நாயக்கர் தமது மைத்துனரான விஜயரங்க நாயக்கரிடம் உதவி கிடக்கிறார். அவர், வீரனை மதுரைக்கு அனுப்பி வைக்கிறார். மதுரை வந்த வீரன்  அழகர்மலை  கள்ளர்களின் கொட்டத்தை அடக்குகிறான். அதனால் திருமலை நாயக்கர் மிகவும் மகிழ்கிறார். அவனை,  மீனாட்சியம்மன் கோவிலின் தேவதாசி ( மீனாட்சியின் தொட்டிலை ஆட்டும் கன்னிப்பெண்) வெள்ளையம்மாள் மூலம் ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்.

அவனுக்கு சிறந்த மரியாதையையும் , முழுஅதிகாரமும் கொடுக்கிறார். அதனால் மதுரை நகருக்குள் இருந்த கொள்ளையர்களும் அடக்கப்பட்டு வீரனின் புகழ் பரவுகிறது. திருமலை நாயக்கர் மிகவும் மகிழ்கிறார்.  எம்.ஜி.ஆர் நடித்த " மதுரை வீரன்"  படத்தில் வரும் திருமலை நாயக்கர் போல் இவர் வில்லன் இல்லை. 

இயல்பாகவே வீரனாகவும் , அழகனாகவும் இருப்பவர்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் வீரனுக்கும் பெண்மோகம் இருக்கும்  என்பதையும் நாமும்  மறுத்துவிட  முடியாது. மதுரையின் காவல் அதிகாரியாக இருந்த  கிருஷ்ணப்பரின் மகள் கௌரியுடனும் வீரனுக்கு தொடர்பு இருந்தது என்று அருணன் குறிப்பிடுகிறார்.

அதேபோல் , வெள்ளையம்மாளை பார்த்ததும் வீரனுக்கு அவள் மீது ஆசை எழுகிறது. அவளை அடைய மாறுவேடம்  அணிந்து மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைகிறான். அவளைத் தூக்கிக் கொண்டு வரும் போது , கோவில் காவல் வீரர்களுக்கும் , வீரனுக்கும் மோதல் ஏற்படுகிறது. அப்போது மீனாட்சியம்மன் கோவில் , அபிடேக பண்டாரம் என்பவரின் பொறுப்பில் தான்  இருந்தது. அவர் , வீரனுக்கு மாறுகால் மாறுகை வாங்க உத்தரவு இடுகிறார். ஏனென்றால் , உயர்சாதி பெண்களைத் தொட்ட சூத்திரனுக்கு  மனுவின் நீதிப்படி இது தான் தண்டனை.

தகவல் அறிந்ததும்  திருமலை நாயக்கருக்கு கோபம் வருகிறது. இருந்தாலும் அவரால் கோவில் நிர்வாகத்திற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியவில்லை. முடிவில்  வீரனுடன் சேர்ந்து பொம்மியும் . வெள்ளையம்மாளும் இறந்து விடுவதாக கதை வருகிறது. ஆனால் , அவர்கள் எரித்துக் கொல்லப்பட்டிருக்கவே  வாய்ப்பு இருக்கிறது என்கிறார் அருணன்.

மதுரை வீரனின் கொலைக்குப் பிறகே மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகத்தை  அரசின் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்கிறார் திருமலை நாயக்கர். ( இதுவே , பின்னர் திருமலை நாயக்கரின் சாவுக்கும் காரணமாக இருந்தது )

மதுரையில் வீரனின் கொலைக்குப் பிறகு சக்கிலியர்களின் புரட்சி ஏற்பட்டிருக்கலாம் , அதனால் வீரனுக்கு மரியாதை செய்ய அவன் கொல்லப்பட்ட இடத்தில் அவனுக்கு நினைவுக்கல் எழுப்பி மரியாதை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புகிறார் அருணன்.

அதன் பிறகு , மதுரைவீரன், கடவுளாகவும் வணங்கப்படுகிறான்.  உண்மையில் மதுரைவீரனின் கதை , மதுரையின் வரலாற்றோடும் , மீனாட்சியம்மன் கோவிலோடும் எப்போதும் இணைந்தே இருக்கும்.  


முத்துப்பட்டன் !.... (கி.பி.1658- 1738 இருக்கலாம்   )



முத்துப்பட்டன்

முத்துப்பட்டனின் கதை சற்று வித்தியாசமானது. இவன் பிராமணகுலத்தைச் சேர்ந்தவன். சிறந்த வீரன்; முறுக்கு மீசை வைத்த முதல் பிராமணன்.  தனது குடும்பத்தினருடன் எழுந்த மனஸ்தாபத்தால் வீட்டை   விட்டு வெளியேறி,   கொட்டாரக்கரை அரசர் இராஜராஜனிடம் வேலைக்குச் சேருகிறான். அங்கே அவனுக்கு பெரும் புகழும் , செல்வமும் வந்து  சேருகிறது. தகவல் அறிந்த அவனது சகோதரர்கள் , அவனை திரும்ப அழைத்துச்செல்ல வருகிறார்கள். அரசர் மேலும் செல்வத்தைக் கொடுத்து முத்துப்பட்டனை வழியனுப்புகிறார்.

வழியில் பாபநாசத்தில், ஓய்வெடுக்கும் போது முத்துப்பட்டனை மட்டும் விட்டுவிட்டு , செல்வத்தையெல்லாம் எடுத்து கொண்டு அவனது சகோதரர்கள் வீடு திரும்பி விடுகிறார்கள். மனவருத்தமடைந்த முத்துப்பட்டன் பாபநாசத்திலேயே தங்கி விடுகிறான். 


அப்போது , இரண்டு பெண்கள் பாடும் நல்ல  இசை    அவன்   செவிகளில் விழுகிறது. அப்பாடலின் இனிமையில் மெய்மறந்து  போகிறான் .  அப்பாடலை  பாடியவர்கள்   அந்தப்பகுதியைச் சேர்ந்த வாலப்பக்கடையின் மகள்கள்  பொம்மக்கா மற்றும்  திம்மக்கா.  அந்தப் பெண்களின் அழகிலும் , பாட்டிலும் மயங்கிப் போகிறான் முத்துப்பட்டன்.  அவர்களை  திருமணம் செய்தி கொள்ள விரும்பி வாலப்பகடையிடம் பெண் கேட்கிறான். அதிர்ந்து போன வாலப்பகடை தன் பெண்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் , மாட்டை உரித்து அதன் தோலில் செருப்பு தைத்துக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறான்.  


மிக நேர்த்தியான, கலைநுட்பத்துடன் கூடிய  ஒரு செருப்பைத் தைத்து கொடுத்து போட்டியில் வெல்கிறான் முத்துப்பட்டன். ஒரு பார்ப்பனன் பகடையாக, பஞ்சமனாக மாறிப்போன தருணம் அது. வாலப்பகடையையும், " தாயுடன் கூடப் பிறந்த அம்மானே" என்றும் அழைக்கிறான்.  வாலப்பகடையும் கொடுத்த  வாக்கை  நிறைவேற்றுகிறேன் . அதனால் சாதியத்தை வீழ்த்தியதில் முத்துப்பட்டன் முதல்வனாக கருதப்படுகிறான் என்று கூறுகிறார் அருணன்.


இந்தச்சூழலில் “பசுக்கிடை விளை” என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்த வால்பகடையின் கிடையில் இருந்த  மாடுகளை  வன்னியர்கள்  கடத்திச்  சென்று  விடுகிறார்கள். அதை மீட்க தனியொருவனாக சென்று தீரத்துடன் போரிட்டு வன்னியர்களை விரட்டி மாடுகளை மீட்கிறான் . ஆனால் ஒளிந்திருந்த ஒருவன் பின்னால் இருந்து முத்துப்பட்டனைக் குத்தி விடுகிறான். அவனையும் கொன்று விட்டு வீரத்துடன் உயிர் விடுகிறான் முத்துப்பட்டன். பொம்மக்காவும் திம்மாக்காவும் விருப்பத்துடன் அவனோடு  உடன்கட்டையேறி உயிர் விடுகிறார்கள்.

சாதியத்திற்கு சாவுமணியடித்த அந்த மாவீரன் இப்போதும் பாபநாசத்தில்  உள்ள சொரிமுத்து நாயனார் கோவிலுக்கு காவல்தெய்வமாக பட்டவராயன் என்ற பெயரில் இருக்கிறான்; கூடவே பொம்மக்காவும் திம்மாக்காவும் இருக்கிறார்கள். 

எழுத்தாளர் அருணன் , “காலந்தோறும் பிராமணியம்”, “கடவுளின் கதை”, “யுகங்களின் தத்துவம்”  போன்ற  பல நல்ல நூல்களை எழுதியிருந்தாலும் எனக்கென்னவோ இந்த " கொலைக்களங்களின் வாக்குமூலம்" தான் உயிர்ப்புடன் இருப்பதாகத் தோன்றுகிறது.

காரணம்.. இந்தியநாடு முழுவதும் இன்றும் உயர்சாதி பெண்களை திருமணம் செய்த தலித்துகள்/பஞ்சமர்கள் கொல்லப்படுகிறார்கள்.  அதனால் ...கொலைக்களங்கள் இன்றும் தொடருகிறது!.



சு.கருப்பையா
+919486102431