Friday 4 January 2019

கொலைக் களங்களின் வாக்குமூலம்




ஆசிரியர்: அருணன்
பதிப்பகம் : வசந்தம் வெளீட்டகம், மதுரை
விலை: ரூ 120/-

சிறந்த  இடதுசாரிச் சிந்தனையாளரும்  , எழுத்துத்தொழிற்சாலை என்றும் அழைக்கப்படுபவருமான தோழர். அருணன் எழுதிய இந்த நூல் கடந்த காலங்களில் தமிழகத்தில் நடந்தேறிய பஞ்சமர்களின் கொலைகளை பற்றி , அதாவது  நந்தன், காத்தவராயன், மதுரைவீரன் மற்றும் முத்துப்பட்டன் ஆகியோர்களின் கொலைகளைப் பற்றியும் அதற்கான காரணங்களைப் பற்றியும் பேசுகிறது.

இதில்ஆச்சரியம் என்னவென்றால் , இவர்களை தான் நாம் கடவுள்களாகப் பாவித்து,  கோவில்கட்டி  இன்றும் வணங்கி வருகிறோம்.  இதில் நந்தன் , காத்தவராயன் , மதுரைவீரன் போன்றவர்கள் பார்ப்பனர்கள் கற்பித்த வருணாசிரமத்தில்  நான்காம்  பிரிவான சூத்திர சாதியைச்   சேர்ந்தவர்கள்.  அதாவது முறையே புலையர், பறையர் மற்றும் சக்கிலியர் சாதியைச் சேர்ந்தவர்கள். முத்துப்பட்டன் மட்டும் பார்ப்பனன். ஆனாலும் , சக்கிலிய சாதி பெண்களை மணந்து பஞ்சமராக வாழ்ந்தவன்.

நந்தன் எப்படி இறந்தான்?, காத்தவராயன் ஏன் கழுவேற்றப்பட்டான் ? , மதுரைவீரன் ஏன் மாறுகால் , மாறுகை வாங்கப்பட்டான்   ? , முத்துப்பட்டன் எப்படி இறந்தான் ?,  இதற்கான காரணங்களை அறிய , அந்தந்த பகுதிகளுக்கு நேரிடையாகச் சென்று , களஆய்வு செய்து இந்த நூலை எழுதியிருக்கிறார் அருணன். அவரின்   ஆய்வும் , நம்பிக்கையும்  சரியாகவும் , நம்பும் விதமாகவும் இருக்கிறது.

இதோ ! அவருடைய நூலிற்குள் செல்லலாம்.


நந்தன்!... ( காலம் கி.பி. 7-10 நூற்றாண்டாக இருக்கலாம் )





நந்தன் 

மாயவரத்தை அடுத்துள்ள மேலாநல்லூரில் பிறந்தவன் நந்தன். புலையர் குளத்தில் பிறந்த இவனுக்கு சிதம்பரம் நடராஜர் மேல் அளவு கடந்த பக்தி. சிதம்பரத்தில் அவரைக் கண்டு தரிசிக்க விரும்புகிறான். ஆனால், வருணாசிரமம் குறுக்கிடுகிறது. அதனால் சிதம்பரம் கோவில் தெற்கு வாசல் வழியாக கோவிலுக்குள் நுழைந்து விடுகிறான்.  இதைப்பார்த்த தீட்சிதர்கள் அவனைப் பிடித்து தீக்கிரையாக்கி விடுகிறார்கள். அவன் நுழைந்த தெற்கு வாசலையும்  அடைத்து    பூசி  விடுகிறார்கள்.


ஆனால், நமக்குத் தெரிந்த நந்தன் வரலாறு என்பது, நடராஜரை தரிசிக்க வந்த நந்தன்,   நெருப்பில் மூழ்கி எழுந்து, தன்னை புனிதப்படுத்திக் கொண்டு, கோவிலிற்குள் நுழைந்து நடராஜரைப் பார்த்த பின்பு அவரோடு  ஜோதியில் கரைந்தான் என்பது தான். இது எப்படி சாத்தியமாகும்?  என்கிறார் அருணன்.
அவரின் கணிப்பின்படி , நந்தன் தீயில் புகுந்து கோவிலுக்குள் போகவில்லை ; கோவிலுக்குள் போனதால் தான் தீக்குள் புகுத்தப்பட்டான் !.  என்பது தான் உண்மையாக இருக்க முடியும் என்கிறார் ,  மேலும் , இதுவே வருணாசிரம அடக்குமுறைக்கு எதிராக நடைபெற்ற முதல் கோவில் நுழைவுப் போராட்டம்  என்றும் கூறுகிறார் அருணன்.  


காத்தவராயன்!....( 11 -12 ஆம் நூற்றாண்டாக  இருக்கலாம் )



காத்தவராயன்

காத்தவராயன் பறையர் குலத்தில் பிறந்தவன் . திருச்சி அரசரின் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியான   குணசீல மங்கலம்புத்தூர் , பாச்சூர்  மற்றும் வாத்தலை ஆகிய  பகுதியில் இக்கதை நிகழ்ந்துள்ளது.  காத்தவராயன் சிறந்த வீரன் ; அத்தோடு ஒரு இசைவாணனும் கூட . இவனது பாடலில் மயங்கிய சோமாசி பட்டரின் மகள் ஆரியமாலை அவனைக் காதலிக்கிறாள். அளவில்லாக் காதலின்  ஆரியமாலை காத்தவராயன் பின்னால் வந்து விடுகிறாள் . அதனால் அவளை மணந்து கொள்கிறான்.

அதேபோல் , ஒந்தாயி என்ற செட்டியார் வீட்டுப் பெண்ணும் காத்தவராயனை காதலிக்கிறாள். அவளையும் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறான். வருணாசிரமக் கொள்கை தலைவிரித்தாடிய அந்தக்காலத்தில் இதை எப்படி ஆதிக்க சாதியினர் பொறுத்துக் கொள்வார்கள்?. சோமாசிப்பட்டார் திருச்சி அரசரிடம் முறையிடுகிறார் . அவரின் கட்டளைப்படி காத்தவராயனின்  தந்தை  சேப்பிள்ளையான் (அரசரின் தளபதி) , அவனை கைது செய்ய பெரும் படையுடன் வருகிறார்.    ஆனால் , காத்தவராயனை வெல்ல முடியவில்லை .

அவமானமடைந்த திருச்சி அரசர் , காத்தவராயன் சரணடைய வேண்டும் ; இல்லையென்றால் அவனது தந்தை சேப்பிள்ளையானுக்கு மரண தண்டனை கொடுக்கப்படும் என்று பறை அறிவிக்கிறார், தந்தையின் மீது இருந்த அன்பினால் காத்தவராயன் சரணடைகிறேன். பின்னர் , காத்தவராயன் பாச்சூரில் 60 அடி உயர கழுமரத்தில் ஏற்றப்பட்டு கொல்லப்படுகிறான். அதாவது, பிராமணக்குலத்தைச் சேர்ந்த ஆரியமாலையையும் , செட்டியார் குலத்தைச் சேர்ந்த ஒந்தாயியையும் திருமணம் செய்து கொண்டதாலேயே காத்தவராயன் கொல்லப்படுகிறான்.

பின்னர் காத்தவராயனுக்கு கோவில் கட்டி  கடவுளாக்கப்படுகிறான.  இந்தக் கோவில் வாத்தலையில் இன்றும் உள்ளது. இவனது கதையை சிவாஜி நடித்த " காத்தவராயன் " படத்திலும் பார்க்கலாம். ஆனாலும் , உண்மையான வரலாறு என்பது எப்போதும் மாறுபட்டு தான் இருக்கும் என்பதை இந்தநூலின் மூலம் அறியலாம்.


மதுரைவீரன்!... (கி.பி.1600- 1660 இருக்கலாம்  )

மதுரைவீரன்

மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கிழக்கு வாசல் அருகில் மதுரை வீரனுக்கு கோவில் உள்ளது. ஆனாலும் , இவனது வரலாறும்  மிகவும் வேதனையானது.

சக்கிலியனான மதுரைவீரன்  சிறந்த வீரன் .  பொம்மனநாயக்கரின் மகள் பொம்மியை காதல் திருமணம் செய்து கொள்கிறான். இவனது வீரத்தைப் பார்த்து திருச்சி அரசர் விஜயரங்க நாயக்கர் இவனை தளபதியாக வைத்துக் கொள்கிறார்.

மதுரையில் கள்ளர்கள் தொல்லை அதிகரித்ததால் , அவர்களை அடக்க திருமலை நாயக்கர் தமது மைத்துனரான விஜயரங்க நாயக்கரிடம் உதவி கிடக்கிறார். அவர், வீரனை மதுரைக்கு அனுப்பி வைக்கிறார். மதுரை வந்த வீரன்  அழகர்மலை  கள்ளர்களின் கொட்டத்தை அடக்குகிறான். அதனால் திருமலை நாயக்கர் மிகவும் மகிழ்கிறார். அவனை,  மீனாட்சியம்மன் கோவிலின் தேவதாசி ( மீனாட்சியின் தொட்டிலை ஆட்டும் கன்னிப்பெண்) வெள்ளையம்மாள் மூலம் ஆரத்தி எடுத்து வரவேற்கிறார்.

அவனுக்கு சிறந்த மரியாதையையும் , முழுஅதிகாரமும் கொடுக்கிறார். அதனால் மதுரை நகருக்குள் இருந்த கொள்ளையர்களும் அடக்கப்பட்டு வீரனின் புகழ் பரவுகிறது. திருமலை நாயக்கர் மிகவும் மகிழ்கிறார்.  எம்.ஜி.ஆர் நடித்த " மதுரை வீரன்"  படத்தில் வரும் திருமலை நாயக்கர் போல் இவர் வில்லன் இல்லை. 

இயல்பாகவே வீரனாகவும் , அழகனாகவும் இருப்பவர்களை பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அந்த வகையில் வீரனுக்கும் பெண்மோகம் இருக்கும்  என்பதையும் நாமும்  மறுத்துவிட  முடியாது. மதுரையின் காவல் அதிகாரியாக இருந்த  கிருஷ்ணப்பரின் மகள் கௌரியுடனும் வீரனுக்கு தொடர்பு இருந்தது என்று அருணன் குறிப்பிடுகிறார்.

அதேபோல் , வெள்ளையம்மாளை பார்த்ததும் வீரனுக்கு அவள் மீது ஆசை எழுகிறது. அவளை அடைய மாறுவேடம்  அணிந்து மீனாட்சியம்மன் கோவிலுக்குள் நுழைகிறான். அவளைத் தூக்கிக் கொண்டு வரும் போது , கோவில் காவல் வீரர்களுக்கும் , வீரனுக்கும் மோதல் ஏற்படுகிறது. அப்போது மீனாட்சியம்மன் கோவில் , அபிடேக பண்டாரம் என்பவரின் பொறுப்பில் தான்  இருந்தது. அவர் , வீரனுக்கு மாறுகால் மாறுகை வாங்க உத்தரவு இடுகிறார். ஏனென்றால் , உயர்சாதி பெண்களைத் தொட்ட சூத்திரனுக்கு  மனுவின் நீதிப்படி இது தான் தண்டனை.

தகவல் அறிந்ததும்  திருமலை நாயக்கருக்கு கோபம் வருகிறது. இருந்தாலும் அவரால் கோவில் நிர்வாகத்திற்கு எதிராக ஒன்றும் செய்ய முடியவில்லை. முடிவில்  வீரனுடன் சேர்ந்து பொம்மியும் . வெள்ளையம்மாளும் இறந்து விடுவதாக கதை வருகிறது. ஆனால் , அவர்கள் எரித்துக் கொல்லப்பட்டிருக்கவே  வாய்ப்பு இருக்கிறது என்கிறார் அருணன்.

மதுரை வீரனின் கொலைக்குப் பிறகே மீனாட்சியம்மன் கோவில் நிர்வாகத்தை  அரசின் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக் கொள்கிறார் திருமலை நாயக்கர். ( இதுவே , பின்னர் திருமலை நாயக்கரின் சாவுக்கும் காரணமாக இருந்தது )

மதுரையில் வீரனின் கொலைக்குப் பிறகு சக்கிலியர்களின் புரட்சி ஏற்பட்டிருக்கலாம் , அதனால் வீரனுக்கு மரியாதை செய்ய அவன் கொல்லப்பட்ட இடத்தில் அவனுக்கு நினைவுக்கல் எழுப்பி மரியாதை செய்யப்பட்டிருக்கலாம் என்று நம்புகிறார் அருணன்.

அதன் பிறகு , மதுரைவீரன், கடவுளாகவும் வணங்கப்படுகிறான்.  உண்மையில் மதுரைவீரனின் கதை , மதுரையின் வரலாற்றோடும் , மீனாட்சியம்மன் கோவிலோடும் எப்போதும் இணைந்தே இருக்கும்.  


முத்துப்பட்டன் !.... (கி.பி.1658- 1738 இருக்கலாம்   )



முத்துப்பட்டன்

முத்துப்பட்டனின் கதை சற்று வித்தியாசமானது. இவன் பிராமணகுலத்தைச் சேர்ந்தவன். சிறந்த வீரன்; முறுக்கு மீசை வைத்த முதல் பிராமணன்.  தனது குடும்பத்தினருடன் எழுந்த மனஸ்தாபத்தால் வீட்டை   விட்டு வெளியேறி,   கொட்டாரக்கரை அரசர் இராஜராஜனிடம் வேலைக்குச் சேருகிறான். அங்கே அவனுக்கு பெரும் புகழும் , செல்வமும் வந்து  சேருகிறது. தகவல் அறிந்த அவனது சகோதரர்கள் , அவனை திரும்ப அழைத்துச்செல்ல வருகிறார்கள். அரசர் மேலும் செல்வத்தைக் கொடுத்து முத்துப்பட்டனை வழியனுப்புகிறார்.

வழியில் பாபநாசத்தில், ஓய்வெடுக்கும் போது முத்துப்பட்டனை மட்டும் விட்டுவிட்டு , செல்வத்தையெல்லாம் எடுத்து கொண்டு அவனது சகோதரர்கள் வீடு திரும்பி விடுகிறார்கள். மனவருத்தமடைந்த முத்துப்பட்டன் பாபநாசத்திலேயே தங்கி விடுகிறான். 


அப்போது , இரண்டு பெண்கள் பாடும் நல்ல  இசை    அவன்   செவிகளில் விழுகிறது. அப்பாடலின் இனிமையில் மெய்மறந்து  போகிறான் .  அப்பாடலை  பாடியவர்கள்   அந்தப்பகுதியைச் சேர்ந்த வாலப்பக்கடையின் மகள்கள்  பொம்மக்கா மற்றும்  திம்மக்கா.  அந்தப் பெண்களின் அழகிலும் , பாட்டிலும் மயங்கிப் போகிறான் முத்துப்பட்டன்.  அவர்களை  திருமணம் செய்தி கொள்ள விரும்பி வாலப்பகடையிடம் பெண் கேட்கிறான். அதிர்ந்து போன வாலப்பகடை தன் பெண்களைத் திருமணம் செய்து கொள்ள வேண்டுமானால் , மாட்டை உரித்து அதன் தோலில் செருப்பு தைத்துக் கொடுக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறான்.  


மிக நேர்த்தியான, கலைநுட்பத்துடன் கூடிய  ஒரு செருப்பைத் தைத்து கொடுத்து போட்டியில் வெல்கிறான் முத்துப்பட்டன். ஒரு பார்ப்பனன் பகடையாக, பஞ்சமனாக மாறிப்போன தருணம் அது. வாலப்பகடையையும், " தாயுடன் கூடப் பிறந்த அம்மானே" என்றும் அழைக்கிறான்.  வாலப்பகடையும் கொடுத்த  வாக்கை  நிறைவேற்றுகிறேன் . அதனால் சாதியத்தை வீழ்த்தியதில் முத்துப்பட்டன் முதல்வனாக கருதப்படுகிறான் என்று கூறுகிறார் அருணன்.


இந்தச்சூழலில் “பசுக்கிடை விளை” என்று அழைக்கப்படும் பகுதியில் இருந்த வால்பகடையின் கிடையில் இருந்த  மாடுகளை  வன்னியர்கள்  கடத்திச்  சென்று  விடுகிறார்கள். அதை மீட்க தனியொருவனாக சென்று தீரத்துடன் போரிட்டு வன்னியர்களை விரட்டி மாடுகளை மீட்கிறான் . ஆனால் ஒளிந்திருந்த ஒருவன் பின்னால் இருந்து முத்துப்பட்டனைக் குத்தி விடுகிறான். அவனையும் கொன்று விட்டு வீரத்துடன் உயிர் விடுகிறான் முத்துப்பட்டன். பொம்மக்காவும் திம்மாக்காவும் விருப்பத்துடன் அவனோடு  உடன்கட்டையேறி உயிர் விடுகிறார்கள்.

சாதியத்திற்கு சாவுமணியடித்த அந்த மாவீரன் இப்போதும் பாபநாசத்தில்  உள்ள சொரிமுத்து நாயனார் கோவிலுக்கு காவல்தெய்வமாக பட்டவராயன் என்ற பெயரில் இருக்கிறான்; கூடவே பொம்மக்காவும் திம்மாக்காவும் இருக்கிறார்கள். 

எழுத்தாளர் அருணன் , “காலந்தோறும் பிராமணியம்”, “கடவுளின் கதை”, “யுகங்களின் தத்துவம்”  போன்ற  பல நல்ல நூல்களை எழுதியிருந்தாலும் எனக்கென்னவோ இந்த " கொலைக்களங்களின் வாக்குமூலம்" தான் உயிர்ப்புடன் இருப்பதாகத் தோன்றுகிறது.

காரணம்.. இந்தியநாடு முழுவதும் இன்றும் உயர்சாதி பெண்களை திருமணம் செய்த தலித்துகள்/பஞ்சமர்கள் கொல்லப்படுகிறார்கள்.  அதனால் ...கொலைக்களங்கள் இன்றும் தொடருகிறது!.



சு.கருப்பையா
+919486102431


1 comment:

  1. நந்தனுக்கு 63 நாயன்மார்கள் லில் ஒரு இடம் கொடுத்து இருகிறது சைவ மதம்
    காத்தவராயன் தந்தைக்கு தளபதி பதவி கொடுத்து இருக்கிறார் சாதி வெறி பிடித்த அரசர்
    மதுரை வீரனுக்கு தளபதி பதவி கொடுத்து இருக்கிறார் சாதி வெறி பிடித்த நாயக்கர் அரசர்
    முத்து பட்டரை கொலை செய்ததாக நீங்கள் சொல்லும் வன்னியர்கள் தென் மாவட்டங்களில் கிடையாது
    வன்னியன் என்பது முத்து பட்டன் கதையில் வரும் இன்னொரு கிளை கதையின் நாயகன்

    ReplyDelete