Saturday 19 January 2019

சேவல் களம்





நாவல்:        சேவல் களம்



நாவல்:        சேவல் களம்
ஆசிரியர் : முனைவர். பாலகுமார் விஜயராமன்
வெளியீடு: காலச்சுவடு
விலை:       ரூ. 225


சேவற்கட்டியான இராமரின் குடும்ப வரலாறே இந்த “சேவல்களம்”  நாவலின் பேசு பொருளாகவும் , படிமமாகவும் இருக்கிறது.

முள் அடிக்கும் பெருநாழி சேவலை (சண்டை சேவல்)  வளர்த்து வரும் இராமருக்கு துணையாக அவரது நண்பர் ஜான் மிராண்டாவும் , குமாரும் துணையாக இருக்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் போய் சேவல் சண்டைகள் நடத்தி வருவது இராமரின் முக்கிய பணியாகவே இருந்து வருகிறது . அப்படியான ஒரு போட்டி புதுக்கோட்டையில் நடை பெறஇருப்பதால்   " சேவல் சண்டை" க்கான தயாரிப்பு வேளையில் தான் இந்த நாவல் துவங்குகிறது.  

அந்தப் புதுக்கோட்டை போட்டியில் குமாரின் சாம்பல் சேவல் வெற்றி பெறுகிறது; இராமரின் குழுவினருக்கு பாராட்டும் புகழும் கிடைக்கிறது. அதன் பின்னர் இராமரின் பேத்திக்கு வீரக்குடியில் நடைபெறும் நேர்த்திக்கடன் விழாவில்  , அனைத்துக் குடும்ப உறுப்பினர்களும் சந்தித்து சுவையான  கிடா விருந்து சாப்பிடுவதில் நாவல்  நிறைவடைகிறது.

 நாவல் முழுவதும் இராமரின் மகன்கள் ( கண்ணன், ஜீவா ), மனைவி யசோதா, மருமகன்கள் ( இரமேஷ் , சேதுபதி) , சகோதரிகள் ( ஆண்டாள், லட்சுமி ) , மகள்கள் நண்பர் சதாசிவம் மற்றும் அவர் குடும்பத்தினர் ஆகியோர்களின் வாழ்வும், பாசப்பிணைப்பும் மிகவும் நேர்த்தியாக சொல்லப்பட்டுள்ளது.


இந்த நாவலில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் மிகவும் நல்லவர்களாகவும் , நேர்கோட்டில் பயணிப்பவர்களாகவும் இருப்பதால் எந்தப்பாத்திரம் சிறப்பு வாய்ந்தது என்று மதிப்பீடு செய்வதில் தடுமாற்றம் நிகழுவது சாத்தியமே.


இருந்தாலும்,  சேதுபதியின் பாத்திரப்படைப்பு என்னை மிகவும் கவர்ந்தாக இருக்கிறது . ஒரு சாதாரண கூலியாக தன் வாழ்க்கையைத் துவக்கி ,  எப்படியாவது வாழவேண்டும் என்று  வாழ்க்கையைத்  தொடங்கி , பின்னர் தன் சுய முயற்சியாலும் , கடுமையான உழைப்பினாலும் நேர்மையாக முன்னேறும் சேதுபதி மனதில் நிற்கிறான்.  அவனது   அண்ணன் இரமேஷ் நாவலின் ஆரம்பத்திலே  ஒரு போராட்டத்தில் " உயிராயுதம் " தந்து இறப்பது வேதனையான சம்பவம்.  அவனை அந்த நிலைக்கு கொம்பு சீவிவிட்டது இடதுசாரி இயக்கத்தின் படிப்பகம் என்று நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.



அதேபோல் ஜீவாவின் பாத்திரமும் தொழிநுட்பரீதியாக  திறம்பட படைக்கப்பட்டுள்ளது. தமது பட்டறிவை நூலாசிரியர் பாலகுமார் இலாவகமாகக் கையாண்டுள்ளார்.  அவன் ஆன்மீக மடமான  நந்தவனத்திற்குள் சென்று தகவல் சேகரிப்பது சற்று சுவாரசியமாக இருக்கிறது.


சதாசிவம் நல்லதொரு ஒப்பந்தக்காரராக வருகிறார். அவர் தமது தம்பியின் மகள் வசந்தியை சேதுவுக்கு திருமணம் செய்து வைப்பார் என்று முதலிலே ஊகிக்க முடிந்தது.
அடுத்து , மீனாட்சியம்மன் கோவிலில் யசோதாவிற்கும் , மீனாட்சிக்கும் நடைபெறும் உரையாடல்கள் மிகவும் இதமாக  இருந்தது. முதலில் கண்ணனை மறந்து விட சொல்லும் யசோதா , மீனாட்சியின் நம்பிக்கையான பிடிவாதத்தால் கடைசியில் ஏற்றுக்கொளவதும் நயமாக இருந்தது.

அதேபோல் இறுதி அத்தியாயத்தில்   நாவலில் வரும் அனைத்து பாத்திரங்களும் " வீரக்குடி" விருந்தால் சந்திப்பது என்பது  மிகவும் அபூர்வமான நிகழ்வு . எனக்குத் தெரிந்து எந்த நாவல் ஆசிரியரும் இப்படி சிந்தித்தது  இல்லை.

அடுத்து , தவறாமல் குறிப்பிடப்பட வேண்டியது என்னெவென்றால்,  சேவல் சண்டை பற்றிய நுணுக்கங்களையும் , சேவல் பராமரிப்பு பற்றியும் நாவலில் மிக நுட்பமாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். குறிப்பாக புதுக்கோட்டை போட்டி நடக்கும் போது நாவலாசிரியரின் வர்ணனை மிகவும் நயமாக இருக்கும். வாழ்த்துக்கள் பாலகுமார்!.

இருந்தாலும் சில  எனக்கு சரியெனப் படாத  சில விஷயங்களை சொல்லித் தான் ஆக வேண்டும்.

1.       பெங்களூர் அழகிப் போட்டிக்காக , இரமேஷ் உயிராயுதம் ஏந்தியத்திற்கு அவனுக்கு அந்த கோட்பாட்டை சொல்லிக்கொடுத்தது அவன் படித்த "படிப்பகம்" என்றும் ( இடது சாரி), அதன் பிறகு ரமேஷின் குடும்பத்தை அவர்கள்   கண்டு கொள்ளவில்லை என்று சேது  புலம்புகிறார். ஆனால் , இரமேஷை உயிராயுதப் போராட்டத்திற்கு (கம்யூனிஸ்டுகள் ) தூண்டியதற்கான வலுவான காட்சி எதுவும் நாவலில் சொல்லப்படவில்லை. மேலும் , இடஒதுக்கீட்டு பிரச்சசினையின் போது நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. அப்போது சில இடங்களில் மாணவர்கள் தீக்குளிப்பில் ஈடுபட்டார்கள். ஆனால் , அழகிப்போட்டி அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துமா ? என்று நம்பமுடியவில்லை,

2.       நந்தவனத்தில் ஆளும் கட்சி அமைச்சர் ( நாத்திக வாதி என்று செல்லப்படுகிறார்)   நிர்வாண  மூலிகை வைத்தியமும் , பூசையும் செய்வதாக  சொல்லிவிட்டு;  ஊரெல்லாம்   நாத்திகம்  பேசிக்கொண்டு , நிர்வாண பூசை பண்ணிட்டு அலையுதுக ! என்று குறிப்பிடுகிறார். நாவலுக்கு இது பொருத்தமாக இருந்தாலும் , எல்லா நாத்திகவாதிகளும் இப்படி தான் இருக்கிறார்களோ என்ற பிம்பத்தை தோற்றுவித்து விடும் அபாயம் இருப்பதாக எனக்குத் தோன்றியது. இவர்கள் போலிகள்; அதனால்  நாத்திகவாதிகள் கணக்கில் இவர்களை சேர்க்கக்கூடாது என்பது என் எண்ணம் . உண்மையான நாத்திகவாதிகள் இப்படி இருக்க மாட்டார்கள்.

3.       ஒரு சிறந்த சேவற்கட்டியின் மகனான படைப்பாளி ,ஏன்? அந்த சேவல்  களத்தை விட்டொழித்தார்? . அந்த " பெருநாழி சேவல்கள் எங்கே?. 

இப்பகுதிகளை இன்னும் தெளிவாக குறிப்பிட்டு இருக்கலாம் என்று கருதுகிறேன். மொத்தத்தில் , நீண்ட நாட்களுக்கு பிறகு " சேவல் களத்தை" ஒரே மூச்சில் வாசித்தது எனக்கே ஆச்சரியமாக இருந்தது.  இதுவே பாலகுமாரின் வெற்றியாக   எனக்குத் தோன்றுகிறது.

சு,கருப்பையா.


No comments:

Post a Comment