Tuesday, 13 November 2012

அமைப்பு விவாதம்



தோழர்களே ! வாசிப்போர்களத்தின் ஏழாவது கூட்டம் 10/11/2012  ந் தேதி , புத்தக அறிமுகமும் , விவாதமும் இல்லாமல் ஒரு பொதுக்குழுக்  கூட்டமாக  நடைபெற்றது. தோழர்கள் சங்கையா , நேரு , சௌந்தர் மற்றும் தெய்வேந்திரன்  ஆகியோர்கள் நல்ல கருத்துக்களை பகிர்ந்து  கொண்டார்கள் . இறுதியாக கீழ் காணும் முடிவுகளை செயல் படுத்துவது என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது.

1. வாசிப்போர்களத்தின்  உறுப்பினர்களை அதிகப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும்.

2. இங்கே அணைத்து கருத்துக்களையும் உள்ளடக்கிய  நூல்கள் அறிமுகம் செய்யப்படுகிறது என்பதை      
    பரப்ப வேண்டும்.

3. பொருள்முதவாத , பகுத்தறிவு மற்றும் இடதுசாரி தோழர்கள் மட்டுமே இதன் உறுப்பினர்களாக  
   இருப்பார்களோ என்ற எண்ணம் உருவாகி இருந்தால் அதை மாற்ற முயற்சி எடுக்க வேண்டும்.

4. இந்தக் களம் , குறுகிய எண்ணம் கொண்ட சாதீய கோட்பாடு நீங்கலான பிற கருத்துக்களை உள்ளடக்கிய
    அணைத்து தோழர்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு தளம் என்பதை உணர்த்தவேண்டும் .

அடுத்த கூட்டத்தில் புதிய நூல்களை தோழர்கள் அருணாசலம் மற்றும் தெய்வேந்திரன் ஆகியோர்கள் அறிமுகம் செய்வார்கள்.

Friday, 9 November 2012

நமது கூட்டம்



தோழர்களே!  நமது கூட்டம் நாளை 10/11/2012,  மாலை 04 -30  மணிக்கு நடைபெறுகிறது. அணைத்து தோழர்களும் தவறாது கலந்து கொள்ளவும். வாசிப்போர் களத்தை செழுமை படுத்துவது சம்பந்தமாக ஆலோசனை கூட்டமாகவும் இது இருக்கிறது. நாளை சிந்திப்போம்.

Thursday, 8 November 2012

நெஞ்சைப் பிழிந்த கவிதைகள்!


தோழர்களே!

எனக்கு இமெயில் மூலம் வந்த கீழ்காணும் இரண்டு கவிதைகளை உங்களுக்குக் கொடுத்துள்ளேன். வாசியுங்கள்....

முதியோர் இல்லத்தில் தாயின் கண்ணீர்

நீ இருக்க
ஒரு
கருவறை இருந்தது
என்
வயிற்றில்...

ஆனால்
நான் இருக்க 
ஒரு
இருட்டறை கூடவா
இல்லை உன் வீட்டில்...

அன்பு மகனுக்கு அப்பா எழுதுவது

வசதியாகத்தான் இருக்கிறது மகனே
நீ கொண்டு வந்து சேர்த்த
முதியோர் இல்லம்
பொறுப்பாய் என்னை
ஒப்படைத்து விட்டு சலனமின்றி நீ
வெளியேறிய போது, முன்பு நானும்
இது போல் உன்னை
வகுப்பறையில் விட்டு விட்டு
என் முதுகுக்குப் பின்னால்
நீ கதறக் கதறக்
கண்ணீரை மறைத்தபடி
புறப்பட்ட காட்சி
ஞாபகத்தில் எழுகிறது..!

முதல் தரமிக்க
இந்த இல்லத்தை
தேடித் திரிந்து
நீ தேர்ந்தெடுத்ததை அறிகையில்கூட
அன்று உனக்காக நானும்
பொருத்தமான பள்ளி
எதுவென்றே
ஓடி அலைந்ததை
ஒப்பீடு செய்கிறேன்..!

இதுவரையில்
ஒருமுறையேனும்
என் முகம் பார்க்க
நீ வராமல் போனாலும்
என் பராமரிப்பிற்கான
மாதத் தொகையை
மறக்காமல்
அனுப்பி வைப்பதற்காக
மனம் மகிழ்ச்சியடைகிறது
நீ விடுதியில்
தங்கிப் படித்த காலத்தில்
உன்னைப் பார்க்க வேண்டும் என்ற
ஆவல் இருந்தாலும்
படிப்பை நினைத்து
உன்னை சந்திக்க மறுத்ததன்
எதிர்வினையே இதுவென்று
இப்போது அறிகிறேன்..!


இளம் வயதினில்
நீ சிறுகச் சிறுக சேமித்த
அனுபவத்தை
என் முதுமைப் பருவத்தில்
மொத்தமாக எனக்கே
செலவு செய்கிறாய்
ஆயினும்
உனக்கும் எனக்கும்
ஒரு சிறு வேறுபாடு
நான் கற்றுக்கொடுத்தேன்
உனக்கு
வாழ்க்கை இதுதானென்று
நீ கற்றுக் கொடுக்கிறாய்
எனக்கு
உறவுகள் இதுதானென்று..!

உங்கள் இதயம் நொறுங்குவதை என்னால் உணர முடிகிறது. இந்த கவிதைகளை எழுதிய பெயர் தெரியாத அந்தக் கவிஞர்களுக்கு நன்றி!!!. 

Sunday, 4 November 2012

இணைப்பு


தோழர்களே! நமது வாசிப்போர்களத்தின் உறுப்பினர்களும், சிறந்த பதிவர்களுமான தோழர்.பாலா (தென்திசை),தோழர். சமயவேல் ( அகாலம்) , தோழர் அருணாசலம் (எதிர்நீச்சல்)  மற்றும் தோழர் வா,நேரு ஆகியோர்களின் வலைப்பூக்கள் நமது வலைப்பூவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த வலைப்பூக்களில் நுழைந்து சிறந்த கருத்துகளையும், சமூக நலனில் அக்கறையும் கொண்ட பல நல்ல பதிவுகளையும் வாசிக்கும் நல்ல  வாய்ப்பை  வாசிப்போர்களம் உங்களுக்குக் கொடுத்துள்ளது. வாசித்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள்! 

Thursday, 18 October 2012

வாசிப்போர்களம்-6



13/10/2012இன்று தோழர். சங்கையா இரண்டு நூல்களை அறிமுகம் செய்து  வைத்து உரையாற்றினார். அந்த நூல்கள்;

 கூடங்குளம் -விழித்தெழும் உண்மைகள்!
 ஆசிரியர்: அ.முத்துகிருஷ்ணன்
 வெளியீடு உயிர்மை பதிப்பகம்
 பக்கங்கள்  : 64
 விலை       : Rs.15

ஏன் இந்த உலைவெறி?   அணு உலை வரமா சாபமா?
ஆசிரியர் : ஞானி 
வெளியீடு : ஞானபானு
பக்கங்கள் :  48
விலை      : Rs.10









தமிழகத்தை !  ஏன் இந்திய நாட்டையே உலுக்கி எடுக்கும் கூடங்குளம் அணுஉலை பற்றி தெளிவான பார்வையோடு சரியாக எழுதப்பட்ட நூல்களே இவைகள். இந்த நூல்கள் ,  425  நாட்களாக  தமிழகத்தின்  தென் மாவட்டங்களில்  நடைபெறும் தீவிரமான போராட்டத்தை நியாயப் படுத்துகின்றன என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.


·          இந்த நூல் கூடங்குளம் அணு உலை உருவான கதையை கூறுகிறது.
· செர்நோபில் அணு உலையின் அதே மாதிரி வடிவமான கூடங்குளம் அணு உலையின் பாதுகாப்பின்மையை எச்சரிக்கிறது.
·    கூடங்குளம் அணு உலையினால் நாம் இழக்கப்போகும் மீன்பிடி தொழிலையும், ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதையும் சுட்டிக்காட்டுகிறது.
·     பாதுகாப்பான வழிமுறையான காற்றாலை மற்றும் சூரியஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஏன் நாம் செயல் படுத்தக்கூடாது என்ற கேள்வியை எழுப்புகிறது.

அதேபோல் ஞானியின் நூலை படித்திருக்கவிட்டால் ஜார்கண்ட் மாநிலத்தில் இருக்கும் திறந்தவெளி யுரேனியம் சுரங்கத்தைப்பற்றியும்  (ஜாதுகுடா) அங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு பிறவி ஊனம், மலட்டுத்தன்மை, மரபணுச் சிதைவு ஏற்படுவதை பற்றியும் அறிந்திருக்க முடியாது. செர்நோபில்(ரசியா) மற்றும் புகுசிமா (ஜப்பான்) அணு உலை விபத்தை பார்த்தபிறகும் நமது இந்திய அரசு கூடங்குளம் அணு உலையில் குறியாக இருப்பது கேலிக்கூத்தானது.

தமிழகத்தின் தென்மாவட்டங்கள் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டும் இந்தியஅரசு, கூடங்குளம் அணுஉலை செயலாக்கத்தில் உறுதியாக இருப்பது மக்களின் நலனுக்கு விரோதமாக இருப்பதையே காட்டுகிறது. ஆனாலும், கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கி அணு உலையை ஆளும் அரசு செயல்படுத்திவிடும் என்றாலும், அடுத்த அணுஉலை கட்டுவதற்கு இனிவரும் எந்த அரசும் முயற்சிக்காது என்பது கூடங்குளம் மற்றும் இடிந்தகரை மக்களுக்கு கிடைக்கப்போகும் வெற்றியாகும்.  

(குறிப்பு:தோழர்.சங்கையா தெரிவித்த சில புள்ளி விபரங்கள் இங்கே கொடுக்கப்படவில்லை. தேவைபட்டால் பின்னர் கொடுக்கப்படும்)  
       

Wednesday, 10 October 2012

வாசிப்போர்களம்-6


வணக்கம் தோழர்களே!

வாசிப்போர்களம் வருகிற 13/10/2012ந் தேதி  மாலை 04-30 மணிக்கு இரண்டாவது  சனிக்கிழமை கூடுகிறது. உங்களை சிந்திக்க வைக்க நல்ல நூல்கள் தயாராக உள்ளது. கேளிக்கைமயமாகிப்போன இந்த இயந்திரயுகத்தில் தரமான நூல்களை வாசிப்பதோ அல்லது தெரிந்து கொள்வதோ மகிழ்ச்சியான விஷயம். வாருங்கள் தோழர்களே.

Sunday, 23 September 2012

கடம்பவனம்


வாசிப்போர் களத்தின் 5  வது கூட்டம், 22 /09 /2012 ந் தேதி மாலை 0530 மணிக்கு  சிறப்பாக நடைபெற்றது. கடுமையான மழையும், கடமையும் சில தோழர்களை வர விடாமல் தடுத்து விட்டது. அந்த மழையிலும் தோழர்.கருப்பையா நம்மை கடம்ப வனத்திற்குள் அழைத்துச் சென்றார்.

கடம்பவனம்
(நாவல்)
நாவல் ஆசிரியர்: அருணன்.
வெளியிடு: வைகை வெளியிடு, மதுரை.
ஆண்டு: 2001
விலை: ரூ.100 /-
பக்கங்கள்: 396 

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஏறத்தாழ 43 ஆண்டுகளுக்கு முன்பு வைத்தியநாத அய்யர் தலைமையில் ஹரிஜன நுழைவைப் பற்றிச் சித்தரிக்கும் நாவல் இது. ( 08/07/1939) .

ஹரிஜன இளைஞன் முனியனின் தற்கொலையில் துவங்கி கோவில் நுழைவுவரை எழுதியுள்ளார்  அருணன்.

நாவலின் மாந்தர்களாக ஈஸ்வரன்-அம்பிகா; தியாகு-மரகதம்; வெங்கட் என்ற வெங்கடசாரி போன்ற இளைஞர்களும் , மகாலிங்க பட்டர் , கணேசபட்டர், அலங்காரத்தம்மாள், சாமிநாதன், வஜ்ரவேலு போன்ற கற்பனைப் பாத்திரங்களும் , ஆர்.எஸ்.நாயுடு,, வைத்தியநாத அய்யர் போன்ற நிஜமான  பாத்திரங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

பிராமண வாலிபர்களான ஈஸ்வரன்,  வெங்கட் மற்றும் ஹரிஜன முனியன்  முதலியோரின் நட்பு மற்றும் கல்லூரி வாழ்க்கை; கல்லூரி ஹாஸ்டலுக்குள் இருந்த சாதீயகுறிகளான தனி தண்ணீர்ப் பானையை ஒழித்தல்,தனிமைப் படுத்துவதை எதிர்ப்பது போன்றவற்றை தைரியமாக கையாண்டுள்ளார்.

வெங்கட்டின் இடதுசாரிச் சிந்தனை மற்றும் அவரது இரகசிய தொடர்புகள் , ஈஸ்வரன்- பொட்டுக்கட்டிய பெண்ணான அம்பிகாவின் காதல்;  திருமணம் , தோல்வி மற்றும் அவர்களது பிரிவு. தியாகு- பிராமண விதவை மரகதம் காதல்  திருமணம் போன்ற புரட்சிகரமான எண்ணங்களை இந்த நாவலில் செயல் படுத்தி இருக்கிறார் அருணன்.

கணிகை குலத்தை சேர்ந்த அலங்காரத்தம்மாள் குடும்ப வாழ்க்கை, தமது மகள் அம்பிகா திருமணம் செய்து கொண்டவுடன் மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக , தங்களது எதிர்காலம் போய்விடும் என்ற பயத்துடன் கூடிய தவிப்பு  போன்றவை எதார்த்தமாகவே இருக்கிறது.  

அம்பிகாவை காப்பாற்ற முடியாத ஈஸ்வரனின் கோழைத்தனம்  மற்றும் அவன் சார்ந்த காங்கிரசின் இயலாமை போன்றவை கதை நிகழும் காலத்திற்கு பொருத்தமாகவே உள்ளது. அம்பிகா திரும்பவும் தனது குலத் தொழிலுக்கு திரும்பியது ஈஸ்வரனுக்குப் போலவே எனக்கும் வலித்தது. நல்லவேளை தியாகு-மரகதம் தம்பதியினரை அருணன் பிரிக்கவில்லை. அவர்களது திருமணத்தை கணேசபட்டர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் , தியாகுவின் தந்தை வஜ்ரவேலு தமது பேரனுக்காக முடிவில் ஏற்றுக் கொள்கிறார்.

மதுரை ஹார்வி மில் பிரச்னை,   ஆலைய நுழைவு போராட்டத்தில் வைத்தியநாத அய்யரின் தளராத முயற்சி,  அதில் பங்கேற்றவர்கள் யார்  ( மேலூர் கக்கன், மதுரை முத்து, ஆலம்பட்டி முருகானந்தம் , மதிச்சியம் சின்னையன், விருதுநகர் சண்முக நாடார்) போன்றவற்றை இந்த நாவல் மூலமாக தெரிந்து கொண்டேன் என்பதும் உண்மை.

இருந்தாலும்,  நாவலில் உள்ள கீழ்காணும் சில குறைபாடுகளை என்னால் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை;
·          உயிரோட்டமில்லாத தன்மை.
·          முனியனின் தற்கொலையில் எந்த நோக்கமும் சுட்டிக்காட்டப்படவில்லை.
·          கோவில் நுழைவுக்கான அழுத்தமான காரணங்கள் சித்தரிக்கப் படவில்லை.
·          இடதுசாரி சிந்தையுள்ள வெங்கட்டின் அழுத்தமில்லாத பாத்திரத்தன்மை.

ஆனாலும்  நாவல் காட்டிடும் சுயமரியாதை மற்றும் இடதுசாரி சிந்தனைகளுக்கு ஆதரவு, விதவைத் திருமணம், பொட்டுக்கட்டும் முறைக்கு எதிர்ப்பு, சாதீய ஒழிப்பு போன்ற சமூகச் சிந்தனைகள் இத்தகைய நாவலை மக்கள் ஊக்கப் படுத்த வேண்டும் என்பதை நமக்குப் புரிய வைக்கிறது.

மதுரை நகரின் (கடம்ப வனத்தின்) அழகான பதிவுகள் மிகவும் மகிழ்ச்சி அளித்தது.