Sunday, 23 September 2012

கடம்பவனம்


வாசிப்போர் களத்தின் 5  வது கூட்டம், 22 /09 /2012 ந் தேதி மாலை 0530 மணிக்கு  சிறப்பாக நடைபெற்றது. கடுமையான மழையும், கடமையும் சில தோழர்களை வர விடாமல் தடுத்து விட்டது. அந்த மழையிலும் தோழர்.கருப்பையா நம்மை கடம்ப வனத்திற்குள் அழைத்துச் சென்றார்.

கடம்பவனம்
(நாவல்)
நாவல் ஆசிரியர்: அருணன்.
வெளியிடு: வைகை வெளியிடு, மதுரை.
ஆண்டு: 2001
விலை: ரூ.100 /-
பக்கங்கள்: 396 

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் ஏறத்தாழ 43 ஆண்டுகளுக்கு முன்பு வைத்தியநாத அய்யர் தலைமையில் ஹரிஜன நுழைவைப் பற்றிச் சித்தரிக்கும் நாவல் இது. ( 08/07/1939) .

ஹரிஜன இளைஞன் முனியனின் தற்கொலையில் துவங்கி கோவில் நுழைவுவரை எழுதியுள்ளார்  அருணன்.

நாவலின் மாந்தர்களாக ஈஸ்வரன்-அம்பிகா; தியாகு-மரகதம்; வெங்கட் என்ற வெங்கடசாரி போன்ற இளைஞர்களும் , மகாலிங்க பட்டர் , கணேசபட்டர், அலங்காரத்தம்மாள், சாமிநாதன், வஜ்ரவேலு போன்ற கற்பனைப் பாத்திரங்களும் , ஆர்.எஸ்.நாயுடு,, வைத்தியநாத அய்யர் போன்ற நிஜமான  பாத்திரங்களும் சித்தரிக்கப்பட்டுள்ளன.

பிராமண வாலிபர்களான ஈஸ்வரன்,  வெங்கட் மற்றும் ஹரிஜன முனியன்  முதலியோரின் நட்பு மற்றும் கல்லூரி வாழ்க்கை; கல்லூரி ஹாஸ்டலுக்குள் இருந்த சாதீயகுறிகளான தனி தண்ணீர்ப் பானையை ஒழித்தல்,தனிமைப் படுத்துவதை எதிர்ப்பது போன்றவற்றை தைரியமாக கையாண்டுள்ளார்.

வெங்கட்டின் இடதுசாரிச் சிந்தனை மற்றும் அவரது இரகசிய தொடர்புகள் , ஈஸ்வரன்- பொட்டுக்கட்டிய பெண்ணான அம்பிகாவின் காதல்;  திருமணம் , தோல்வி மற்றும் அவர்களது பிரிவு. தியாகு- பிராமண விதவை மரகதம் காதல்  திருமணம் போன்ற புரட்சிகரமான எண்ணங்களை இந்த நாவலில் செயல் படுத்தி இருக்கிறார் அருணன்.

கணிகை குலத்தை சேர்ந்த அலங்காரத்தம்மாள் குடும்ப வாழ்க்கை, தமது மகள் அம்பிகா திருமணம் செய்து கொண்டவுடன் மகிழ்ச்சி அடைவதற்குப் பதிலாக , தங்களது எதிர்காலம் போய்விடும் என்ற பயத்துடன் கூடிய தவிப்பு  போன்றவை எதார்த்தமாகவே இருக்கிறது.  

அம்பிகாவை காப்பாற்ற முடியாத ஈஸ்வரனின் கோழைத்தனம்  மற்றும் அவன் சார்ந்த காங்கிரசின் இயலாமை போன்றவை கதை நிகழும் காலத்திற்கு பொருத்தமாகவே உள்ளது. அம்பிகா திரும்பவும் தனது குலத் தொழிலுக்கு திரும்பியது ஈஸ்வரனுக்குப் போலவே எனக்கும் வலித்தது. நல்லவேளை தியாகு-மரகதம் தம்பதியினரை அருணன் பிரிக்கவில்லை. அவர்களது திருமணத்தை கணேசபட்டர் ஏற்றுக் கொள்ளவில்லை என்றாலும் , தியாகுவின் தந்தை வஜ்ரவேலு தமது பேரனுக்காக முடிவில் ஏற்றுக் கொள்கிறார்.

மதுரை ஹார்வி மில் பிரச்னை,   ஆலைய நுழைவு போராட்டத்தில் வைத்தியநாத அய்யரின் தளராத முயற்சி,  அதில் பங்கேற்றவர்கள் யார்  ( மேலூர் கக்கன், மதுரை முத்து, ஆலம்பட்டி முருகானந்தம் , மதிச்சியம் சின்னையன், விருதுநகர் சண்முக நாடார்) போன்றவற்றை இந்த நாவல் மூலமாக தெரிந்து கொண்டேன் என்பதும் உண்மை.

இருந்தாலும்,  நாவலில் உள்ள கீழ்காணும் சில குறைபாடுகளை என்னால் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை;
·          உயிரோட்டமில்லாத தன்மை.
·          முனியனின் தற்கொலையில் எந்த நோக்கமும் சுட்டிக்காட்டப்படவில்லை.
·          கோவில் நுழைவுக்கான அழுத்தமான காரணங்கள் சித்தரிக்கப் படவில்லை.
·          இடதுசாரி சிந்தையுள்ள வெங்கட்டின் அழுத்தமில்லாத பாத்திரத்தன்மை.

ஆனாலும்  நாவல் காட்டிடும் சுயமரியாதை மற்றும் இடதுசாரி சிந்தனைகளுக்கு ஆதரவு, விதவைத் திருமணம், பொட்டுக்கட்டும் முறைக்கு எதிர்ப்பு, சாதீய ஒழிப்பு போன்ற சமூகச் சிந்தனைகள் இத்தகைய நாவலை மக்கள் ஊக்கப் படுத்த வேண்டும் என்பதை நமக்குப் புரிய வைக்கிறது.

மதுரை நகரின் (கடம்ப வனத்தின்) அழகான பதிவுகள் மிகவும் மகிழ்ச்சி அளித்தது.

No comments:

Post a Comment