Saturday, 12 December 2015

சந்திரஹாசம்-தமிழின் முதல் கிராபிக்ஸ் நாவல்.


சந்திரஹாசம் - தமிழில் வெளிவந்துள்ள முதல் கிராபிக்ஸ் நாவல். தனது முதல் நாவலுக்கே " சாகித்திய அகாடமி " பரிசு பெற்றவரும் , த மு எ ச வின் மாநிலப் பொதுச்செயலருமான சு. வெங்கடேசன் மற்றும் ஓவியர் க. பாலசண்முகம் இருவரும் இணைந்து , ஆனந்த விகடன் கிராபிக்ஸ் மூலம் இந்த நாவலை வெளிக்கொணர்ந்து உள்ளார்கள். ஏறத்தாழ 134 பக்கங்களையும்  , 720 (சிறிய.பெரிய) படங்களையும் உள்ளடக்கி உள்ளது.

நாவலைப் பற்றிக் கூறவேண்டுமென்றால் , புகழ் பெற்ற பாண்டிய மன்னர் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் ( 1268-1310) ஆட்சி காலத்தில்,அவன்  இலங்கை மீது போர் தொடுப்பதில் இருந்து நாவல் துவங்குகிறது. குலசேகர பாண்டியனுக்கு  இரண்டு மகன்கள்.   முதல் மனைவியான பட்டதரசிக்குப் பிறந்த சுந்தரபாண்டியன் . இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவன் வீரபாண்டியன். இவன் சுந்தரபாண்டியனுக்கு ஆறு மாதங்களுக்கு மூத்தவன் . மிகுந்த மதிநுட்பமும் போர்த்திறனும் கொண்டவன். இலங்கைப்போரின் வெற்றிக்குப் பிறகு குலசேகர பாண்டியன், வீரபாண்டியனுக்கு இளவரசன் பட்டம் சூட்டுகிறான். அதனால் வெகுண்டெழுந்த சுந்தரபாண்டியன் , குலசேகர பாண்டியனை கொலை  செய்து மதுரையை கைப்பற்றி விடுகிறான் (1310 இல் நடந்தது ). பிறகு வீரபாண்டியன் தமது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சுந்தரபாண்டியனுடன் போரிட்டு  மதுரையை மீட்டு விடுகிறான். தப்பியோடிய சுந்தரபாண்டியன் , அப்போது தென்னிந்திய படையெடுப்பில் இருந்த அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூரிடம் சரணடைந்து விடுகிறான். அவனுக்கு ஆட்சியைப் பெற்றுத்தரவும்   மதுரை கொள்ளையடிக்கவும் மாலிக்காபூர் மதுரையை நோக்கித் திரும்புகிறான். இத்துடன் சகோதர யுத்தம் என்ற சந்திரஹாசம் நாவல் முடிவடைகிறது.

ஓ! சொல்ல மறந்து விட்டேன் . சந்திரஹாசம் என்பது பாண்டிய அரசர்களின் பரம்பரை வாள். அதனுடைய அட்டைக் கத்தியையும் நாவலில் சொருகி  கொள்ளக் கொடுத்துள்ளார்கள்.

அடுத்து ," மதுரா விஜயம்" என்ற இரண்டாம் பாகம் வர இருக்கிறது . ஒருவேளை மூன்றாம் பாகமும் வரும் என்று கருதுகிறேன் . நாவலின் சிறப்பு என்னவென்றால் ஓவியர் க.பாலசண்முகதின் கடும் உழைப்பு தான். பல படங்கள் உண்மையிலே பிரமிக்க வைக்கிறது. இருந்தாலும், சில படங்கள் உயிர்ப்புச்சக்தி இல்லாமலும் , பல படங்கள் அடர்ந்த கலரில் இருப்பதாலும் கண்களுக்கு நிறைவைத் தரவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.  அடுத்த பாகங்களில் அவர் இதைக் கவனத்தில் கொள்ளலாம்.பார்வைக்கு சில படங்கள் ;

இலங்கை போர்க்களம் 

இலங்கை போர்க்களம் 

மதுரை கோட்டை வாயில் 

மதுரை நகரம் 

வீரபாண்டியனும் சந்திரஹாசமும் 


 வீரபாண்டியன் இளவரசு பட்டம் 


 மாலிக்காபூர் 

வீரபாண்டியனும் சந்திரஹாசமும் 


அத்துடன் கைபேசி/மடிகணினியில் பதிவிறக்கம் செய்து தமிழ் மற்றும் ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளிலும் படிக்கும் வசதியும் கொடுத்துள்ளார்கள். பாராட்டுக்கள். எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு அதிகச் சிரமம் இல்லை. ஆங்காங்கே பாலசண்முகத்தின் படங்களுக்குத் தகுந்தவாறு வரலாற்றுக் குறிப்புகளை கத்தரித்துக் கொடுத்து உள்ளார். அவ்வளவே! காவல் கோட்டத்தின் உழைப்பு இங்கே தென்படவில்லை. இந்தக் குறிப்புகளை அவரின் காவல்கோட்டம் நாவலின் மூன்றாம் அத்தியாயத்தில் எழுதியும் உள்ளார். மேலும் இந்த நாவலின் பெரும் பகுதி பேராசிரியர்.ம. ராசசேகர தங்கமணி அவர்கள் எழுதிய "பாண்டியர் வரலாறு" என்ற நூலில் பக்கம் 398 இல் இருந்து 461 வரை ( விகடன் பிரசுரம்) கொடுக்கப்பட்டுள்ளது . அந்த நூலை வாசித்து இருப்பவர்களுக்கு இந்த நாவல் சரளமாகப் புரியும்.

ஆனாலும், இந்த நாவல் என் நினைவுகளைக் கிளறி ஆழமான பாதிப்பை ஏற்படுத்தத் தவறவில்லை என்பதைக் கூறித்தான் ஆக வேண்டும். ஆம்! மாலிக்காபூரின் படையெடுப்பிற்குப் பின்பு மதுரையின் பாண்டிய பேரரசு மீண்டெழவே இல்லை என்பது வரலாற்று உண்மை  . தீரமாக போராடிய வீரபாண்டியன் பாண்டிய நாட்டை மீட்க முடியாமல் தென் தமிழகத்தின் சில பகுதிக்குள்  சுருங்கிப் போனான். இந்தியாவின் மாபெரும் சக்கரவர்த்திகள் சந்திரகுப்தமௌரியன் மற்றும் அசோகராலும் கூட வெல்லமுடியாத பாண்டியபேரரசு, பேராசை கொண்ட சுந்தரபாண்டியனால் தனது சிறப்பை இழந்து முகமதியர்கள் மற்றும் நாயக்கர் வம்சத்திடம் சிக்கியது. அந்த வேதனையான வரலாறு என் மனக்கண்ணில் ஓடி, அது விட்டுச் சென்ற பாடங்களை நாம் இன்னும் கற்றுக் கொள்ளவில்லையே என்ற வருத்தமும் என்னுள் எழுந்தது. அந்த வகையில் சு.வெங்கடேசனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இறுதியாக , நாவலின் விலை ரூ. 999/- என்பது சாமானியர்கள் வாங்கும் விதத்தில் இல்லை என்பதை இடதுசாரி சிந்தனை கொண்ட தோழர்.சு.வெங்கடேசன் அவர்களுக்கு கட்டாயம் தெரிவிக்க வேண்டியுள்ளது. அத்துடன் பதிப்பாளர்களிடம் இது சம்பந்தமாகப் பேசுமாறும் வேண்டுகோள் வைக்கிறேன். இத்தருணத்தில் ஆயிரக்கணக்கான நல்ல நூல்களை மலிவு விலையில் தமிழில் வெளிட்ட இரசியாவின் " ராதுகா பதிப்பகம் " நினைவிற்கு வருவதை  தவிர்க்க இயலவில்லை. வழக்கம் போல் இந்தப் புத்தகத்தை எனக்கு வாங்கிக் கொடுத்த நண்பர் புத்தகத் தூதன் சடகோபனுக்கு நன்றி. 

சு.கருப்பையா.

Thursday, 10 September 2015

புத்தகத்தூதன் சடகோபன்!




சடகோபன்
கைபேசி : 94433 62300


ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு மதுரை நாராயணபுரம் பகுதியில் "புத்தகத்தூதன்" என்ற பெயரில் சிறிய புத்தகக்கடை ஒன்றை நடத்தி வந்தவர் தான் புத்தகத்தூதன் சடகோபன். எனது நண்பர் ஒருவரின் பணி ஓய்விற்கு பரிசளிக்க ஒரு புத்தகம் வாங்க தேடிப்பிடித்து அந்தக்கடைக்கு சென்றேன். அது ஒரு சிறியகடை என்பதால் அதிக புத்தகங்கள் இல்லை. இருந்தாலும் உங்களுக்கு பிடித்த நூல்களை என்னால் வாங்கித் தர முடியும் என்று புன்னகையோடு கூறினார். இந்தப் பண்பு எனக்கு மிகவும் பிடித்தது. கூடவே அவர் எனது நண்பர் வா.நேருவின்  நெருங்கிய நண்பர் என்றும் தெரிய வந்தது. இப்படிதான் ஆரம்பித்தது எங்கள் நட்பு.

இன்று எனது இல்லத்தில் தரமான ஒரு நூலகம் இருக்கிறதென்றால் அதற்கு நண்பர் சடகோபன் தான் காரணம். அவரின் இனிய குணம்நேர்மையான வியாபாரம் , தந்தைப் பெரியாரின் கொள்கைகளின் மீது ஆழ்ந்தபற்று போன்ற காரணங்கள் எங்களின் நட்பை ஆழப்படுத்தியத்தில் ஆச்சரியமில்லைதான். ஆனாலும் புத்தக விற்பனையின் மூலம் மட்டுமே ஒருவர் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது மிகச்  சிரமமான காரியம். முதலீட்டுத் தகுந்த இலாபம் கிடைப்பதில்லை.  அதிலும் தான் விற்பனை செய்யும் எல்லாப் புத்தகங்களுக்கும், நண்பர் சடகோபன் 10% கழிவு தருவதில் தயக்கம் காட்டியதில்லை. அவரைப் பொறுத்தவரை அந்த புத்தகக்கடை என்பது ஒரு " தொண்டு" அல்லது ஒரு " சேவை " என்றே மகிழ்ந்து வந்தார். தகவலின் பேரில் பலரின் வீடுகளுக்குச் சென்று கூட புத்தகங்களை கொடுத்து வந்துள்ளார். பல பள்ளிகளைத் தேடித்பிடித்து அங்கு புத்தக அரங்கு போட்டுள்ளார். தரமான 100 புத்தகங்களாவது  ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் தணியாத விருப்பம் கொண்டவர்.

ஆனாலும் , எதிர்பார்த்த பலன் இல்லாததால் நாராயணபுரத்தில் இருந்து நத்தம் ரோடு மற்றும் ஆத்திகுளம் பகுதிகளுக்கு தமது கடையை மாற்றிக் கொண்டே இருந்தார். அவரின் சிரமத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மனம் முழுக்க புத்தகங்களும் , சேவையுமே நிறைந்திருந்ததால் அவரால் வேறு பணியிலோ அல்லது வியாபாரத்திலோ ஈடுபட இயவில்லை. ஒரு நாள் புத்தககடைக்குச் சென்றபொழுது கடை பூட்டப்பட்டிருந்து . என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மனம் மிகவும் வலித்தது. கைபேசியில் தொடர்பு கொண்டபொழுது , திருச்சியில் உள்ள  ஒரு புத்தக்கடையில் தற்காலிகமாக  பணியில் இருப்பதாகத் தெரிவித்தார். இருந்தாலும் , புத்தகங்களை விட்டு தன்னால் விலகி இருக்க முடியாது என்றும் , வேறொரு திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆம்!

இன்று  புத்தகத் தூதனின் " நகர்வு புத்தகச் சந்தை "  வந்து விட்டது. 


இந்த நகர்வுச் சந்தையை கடந்த 28/08/2015 ந் தேதி திரு கு. சாமித்துரை, வழக்கறிஞர் மற்றும் தலைவர்,(MMVA) தமிழ் இலக்கிய மன்றம்,  மதுரை துவக்கி வைத்தார். நண்பர் சடகோபனின்  மனத்திட்பமும் ,விடாமுயற்சியும் என்னை மலைக்க வைத்தது. இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் வா.நேரு , நல்ல புத்தகங்களை விற்று அதில் தான் வாழ்க்கை நடத்துவேன்  என வாழ்பவர் சடகோபன் என்றும் , கையைச் சுட்டுக் கொண்டாலும் மீண்டும் புத்தக விற்பனையை வேறு வகையில் யோசிப்பவர் என்றும் தெரிவித்தார். தோழர்.சங்கையா , "அறிவு வீடு தேடி வருகிறது" என்று மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

புத்தகதூதன் சடகோபனின் பணி சிறக்கட்டும். அன்பான சகோதர சகோதரிகளே! அவரது சேவையைப் பயன்படுத்தி அவருக்கு ஊக்கம் தாருங்கள்!



Tuesday, 28 July 2015

மாமனிதர் அப்துல் கலாம் மறைவு

தேசமே கண்ணீரில் மிதக்கிறது | 7 நாள் துக்கம்





குடியரசு முன்னாள் தலைவர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) மாரடைப்பால் திங்கள் கிழமை மாலை உயிரிழந்தார்.

இந்த இழப்பை தாங்க முடியாமல் தேசமே கண்ணீரில் மிதக்கிறது. மத்திய அரசு 7 நாள் துக்கம் அறிவித்துள்ளது. குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் திங்கள் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அங்கு நேற்று மாலை 6.30 மணி அளவில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டி ருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு பிராண வாயு செலுத்தப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையின் இயக்குநர் ஜான் சாலியோ ரயான்தியாங் கூறியபோது, 'நாடித்துடிப்பு அடங்கிய நிலையில்தான் கலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார், மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்துள்ளது' என்று தெரிவித்தார்.

தகவல் அறிந்து மேகாலய ஆளுநர் சண்முகநாதன், மாநில தலைமைச் செயலாளர் வாஜ்ரி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தனர்.

பின்னர் தலைமைச் செயலாளர் வாஜ்ரி நிருபர்களிடம் கூறியபோது, 'அப்துல் கலாமின் உடல் செவ்வாய்க்கிழமை காலை டெல்லிக்கு கொண்டு செல்லப் படுகிறது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் கோயலுடன் ஆலோசனை நடத்தி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார்.

அப்துல் கலாமின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கலாமின் மறைவு நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசமே கண்ணீர் வடிக்கிறது.

வாழ்க்கை வரலாறு
தமிழகத்தின் ராமேஸ்வரம் நகரில் கடந்த 1931 அக்டோபர் 15-ம் தேதி அப்துல் கலாம் பிறந்தார். அவரது தந்தை ஜைனுலாபுதீன், தாயார் ஆஷியம்மா.
ராமேஸ்வரத்தில் பள்ளிக் கல்வியை முடித்த அவர் மேற்படிப்புக்காக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1954-ல் இயற்பியலில் பட்டம் பெற்றார்.

1955-ம் ஆண்டில் சென்னை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்தார். அங்கு படித்தபோது விமானியாக வேண்டும் என்று கலாம் ஆசைபட்டார். அதற்கான தேர்வில் அவர் 9-வது இடம்பெற் றார். ஆனாலும் விமானியாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஏவுகணை விஞ்ஞானி
சென்னை எம்.ஐ.டி.யில் உயர் கல்வியை முடித்த அவர் 1960-ம் ஆண்டில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார்.

முதலில் இந்திய ராணுவத் துக்காக சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்தார். பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) அவர் தனது ஆராய்ச்சி பணிகளைத் தொடர்ந்தார். அங்கு 1980-ம் ஆண்டு எஸ்.எல்.வி.-3 ராக்கெட் மூலம் ரோகினி-1 என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவியதில் முக்கிய பங்காற் றினார். அவரது சேவையைப் பாராட்டி 1981-ல் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அடுத்து 1990-ல் பத்ம விபூஷண் விருதைப் பெற்றார். 1963 முதல் 1983 வரை இஸ்ரோவில் சிறப்பாகப் பணியாற்றினரா்.
பின்னர் 1999-ம் ஆண்டில் பொக்ரான் அணுஆயுத சோதனை யில் கலாம் முக்கிய பங்காற்றினார். இதேபோல அக்னி, பிருத்வி, ஆகாஷ் உட்பட ஐந்து ஏவுகணை திட்டங்களில் முக்கிய பணியாற்றி உள்ளார்.

அவரை கவுரப்படுத்தும் விதமாக 1997-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவை தவிர 30-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. மேலும் ஏராளமான சர்வதேச விருதுகளையும் அவர் பெற்றுள் ளார்.

மக்களின் குடியரசுத் தலைவர்
கடந்த 2002 ஜூலை 25-ம் தேதி நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக அவர் பதவியேற்றார். 2007 ஜூலை 25-ம் தேதி வரை அவர் பதவி வகித்தார்.

அவர் விஞ்ஞானியாக பணியாற் றியபோது இந்தியாவின் ஏவுகணை தந்தை என்றும் குடியரசுத் தலைவராக இருந்தபோது மக்களின் குடியரசுத் தலைவர் என்றும் போற்றப்பட்டார்.

குடியரசுத் தலைவர் பதவி காலம் முடிந்த பிறகு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இளைய தலைமுறையினருக்காக பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

கலாம் எழுதிய புத்தகங்கள்

சிறந்த எழுத்தாளராகவும் அவர் விளங்கினார். அக்னி சிறகுகள், எழுச்சி தீபங்கள், அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

இறுதி வரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த கலாம் மறைந்தாலும் அவரது எளிமையான வாழ்க்கை, இனிமையான பேச்சால் இந்திய மக்கள் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
நன்றி : தி இந்து தமிழ் 28/07/2015

இந்தியாவின் மிகச் சிறந்த குடிமகன்களில் ஒருவரான மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு வாசிப்போர்களம் அவரது பாதங்களில் மலர்களைத் தூவி வணங்குகிறது. எம் தேசத்திற்கு நீங்கள் விட்டுச் சென்ற அடையாளங்களை , நாட்டின் இறுதிக் குடிமகன் இருக்கும் வரை நினைவு கொள்வான். எங்கள் நன்றியையும் , இறுதி வணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள். 

சு.கருப்பையா. 
ஒருங்கிணைப்பாளர். 

நகரத்தில் கிடைக்கும் வசதிகள் கிராமத்திலும் கிடைக்கவேண்டும் எனத் தன் வாழ்நாள் முழுவதும் கூறிய , நகரத்தில் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் கிராமத்து மக்களின் துயரத்தை நினைத்த , சரியான வழிகாட்டுதலும் , உத்வேகமும் கொடுத்தால் நமது மாணவர்கள் சாதிப்பார்கள் , அதற்காகவே எனது வாழ்க்கை என அர்ப்பணித்த அய்யா .அ.பெ. ஜை. அப்துல் கலாம் அவர்களுக்கு வீரவணக்கம்.

முனைவர் வா.நேரு.






Monday, 29 June 2015

நலம் பெற வாழ்த்துக்கள்!!!

அருமைத் தோழர்களே!

நமது தோழர் .வா.நேரு , இருதய நோய்ச்  சிகிச்சைக்காக  (MVR) சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அறுவை சிகிச்சை முடிந்து நலமடைந்து வருகிறார்.  தளராத ஊக்கமும் , கொள்கை நோக்கமும், மனத்தின்மையும் படைத்த தோழர்.நேரு முன்பைவிட ஆரோக்கியத்துடன் திருப்ப வருவார் என்ற  முழு நம்பிக்கை நமக்கு உண்டு.

தோழனே! நீங்கள்  நலமுடன் திரும்பி வர வாசிப்போர்களம் வாழ்த்துகிறது. தங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.


Tuesday, 23 June 2015

அஞ்சலி !

இளங்காலைப்பொழுதின் இளந்தென்றல் காற்று மனதிற்கு இதமாக இருந்தது. எங்களது இரயில் வண்டி ஸ்ரீரங்கபட்டினத்தை கடக்கும் பொழுது மிதமான சாரல் மழையும் பெய்யத் தொடங்கியது. இருந்தாலும் அந்தக் காலை வேளையிலே என் மனதில் பரபரப்பும் ஆர்வமும் தொற்றிக் கொண்டது. இங்கே தான் மாவீரன் திப்பு சுல்தான் வாழ்ந்து மறைந்தான் என்ற எண்ணம் மேலோங்க எட்டிப் பார்த்தேன்.  இளம் மஞ்சள் நிறத்தில் ஒரு கோவில் பின்புறமாக கடந்து சென்றது. ஒரு வேளை அது ஸ்ரீரங்கநாதர் கோவிலாக இருக்கும் என்று புரிந்து கொண்டேன்.

எனது இதயம் இந்தியாவில் பார்க்க துடித்த  ஒரே இடம்  இந்த ஸ்ரீரங்கபட்டினம் தான். திப்புசுல்தான் என்ற மாவீரன் மறைந்த இடத்தில் அவனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற 25 ஆண்டு கடன் என்னை உறுதிக் கொண்டே இருந்தது . அந்த வாய்ப்பு எனது மகன் மூலமே எனக்கு கிடைத்தது. அவன் தன்னுடைய பணியில் சேருவதற்கு மைசூர் சென்றதால் நானும் எனது மனைவியும் கூடவே செல்ல வேண்டிய கட்டாயம். அவன் பிறப்பதற்கு முன்பே என் மனதில் வேரூன்றி வளர்ந்திருந்த அந்த உணர்வு , அவனின் வளமான வாழ்வு தொடங்க இருக்கும் இந்த நல்ல வேளையிலே எனது நீண்டநாள் கனவும் நிறைவேறப்போவது உண்மையிலே இரட்டிப்பு மகிழ்ச்சியே . மனம் திப்புவின் நினைவுகளில் இருந்து மீள்வதற்குள் மைசூர் வந்தது.

அந்தக் காலை வேளையிலே மழை பெய்து கொண்டிருந்தாலும் மைசூர் நகரம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இரயில் நிலையத்தின் உள்ளையே நகராட்சி மற்றும் காவல்துறையினரால் நிர்வாகிக்கப்படும் ஆட்டோ நிலையம் (PREPAID) இருந்தது. பேரம் பேச வேண்டியதில்லை; சண்டையிட வேண்டிய அவசியமும் , அதிகப் பணம் பிடுங்கி விடுவார்களோ என்ற பயம் இல்லை. மைசூர் நகரம் முழுவதுமே இந்த முன்பணம் செலுத்தும் முறையில் தான் ஆட்டோ இயங்கிறது என்பது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு மதுரை இரயில் நிலையத்தில் முகப்பில் நின்று கொண்டு பயணிகளை வரவேற்கும்  40 அல்லது 50 ஆட்டோ சகோதரர்களையும் , அவர்களை நிராகரிக்கும் நம்மவர்களும் தான் ஞாபகத்திற்கு வந்தார்கள்.
 
அன்று ஒரு நாள்  மைசூரிலே வேலை இருந்ததால் மறுநாள் தான் ஸ்ரீரங்கபட்டினம் செல்ல வேண்டிய நிலை. மாலையில் சிறிது நேரம் கிடைத்ததால் மைசூர் அரண்மனையை பார்த்து விடலாம் என்று என் மணைவி ஞாபகப்படுத்தினார். மிகவும் சிறந்த வேலைப்பாடுகளுடன், பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்தது மைசூர் அரண்மனை. உண்மையிலே நன்றாக பராமரித்தும் வருகிறார்கள். அரண்மனையின் பின் பகுதியில் மைசூர் இராஜ வம்சத்தினர் வாழ்ந்த பகுதியும் , அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் மிகவும் நேர்த்தியாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனக்கென்னவோ , அங்கே பார்த்த மகாராஜாக்களின் ஆடம்பர அணிகலன்கள் , அரண்மனை களியாட்டங்கள்,  வீட்டு உபயோகப் பொருள்கள்  போன்றவைகள் வீழ்ந்து மறைந்த இந்திய சமஸ்தானங்களின் வரலாற்றைக் கூறும் திவான் ஜர்மானி தாஸ் எழுதிய " மகாராஜா" என்ற நூலைத் தான் ஞாபகப்படுத்தியது. இரவு எங்களது தங்கும் விடுதிக்கு திரும்பும் போது மைசூர் அரண்மனையின் பிரமாண்டம் என்னை பிரமிக்க வைத்தது என்றால் அது மிகையில்லை.

அடுத்தநாள் , காலை 10 மணிக்கெல்லாம் தயாராகி விட்டேன். மனம் எப்பொழுது ஸ்ரீரங்கபட்டினம் செல்வோம் என்று எதிர்பார்க்க துவங்கி விட்டது. எங்களது கார் காலை 11:30   மணிக்கு வந்தது. காரில் ஏறி அமர்ந்ததும் மனம் சிட்டாக பறந்து திப்புவின் கோட்டையை நோக்கிச் சென்று விட்டது.



அது அழிவு சின்னம் !!!. 

உருத்தெரியாமல் அழிக்கப்பட்டு எச்சங்களே மிஞ்சிப் போன திப்புவின் கோட்டை என்னை வரவேற்றது. அந்த நொடியில் மனம் கல்லாக இறுகிப் போனது. தண்ணீரற்ற அகழியை  முதலில் கடந்து முன்புற பாதுகாப்பு கோட்டைவாயில்  வழியாக நுழைந்து திப்பு என்ற மாவீரன் வாழ்ந்த இடத்திற்கு சென்றோம்.  முதலில் என் மணைவியின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீரங்கநாதர் கோவிலை வேண்டாவெறுப்பாக சுற்றிவிட்டு , திப்புவின் நினைவிடத்திற்கு செல்லுவோம் எனது ஓட்டுனரிடம் கூறினேன். மனமும் கண்களும் , திப்பு இறுதியாகப் போரிட்ட "நீர்வாயில்" (WATER GATE) எங்கே என்று தேடியது. எங்களது கார் நீர்வாயிலை நோக்கி மெதுவாகச் சென்றது . அங்கே இருவர் அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருந்தார்கள். இப்போது நீர்வாயிலைப் பார்க்க பார்வையாளர்கள் அனுதிக்கப்படுவதில்லை  என்று ஓட்டுனர் தெரிவித்தார். அதனால் வெளியில் நின்று பார்க்க சிறிது நேரம் வண்டியை நிறுத்துமாறு கூறினேன்.

எனது கண்கள் நீர்வாயிலை நோக்கின; அங்கே துரோகியாக மாறிவிட்ட நிதி மந்திரி  மீர்சதிக்கினால் திறந்து விடப்பட்ட நீர் வாயில் வழியாக நுழைந்த  ஆயிரக்கணக்கான ஆங்கிலேயர்களை எதிர்த்து திப்பு போரிட்டுக் கொண்டிருப்பது எனக்குத் தெரிந்தது. கண்களில் கனல் தெறிக்க எதிர்பட்ட வெள்ளையர்களை வெட்டி வீழ்த்திக் கொண்டேயிருந்தான். கைகள் ஓயும்வரை வெட்டினான். எங்கும் பிணக்குவியல்கள் . அவனுக்கும் உடலெங்கும் இரத்தக்காயங்கள் , எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக்குண்டுகள் திப்புவின் கழுத்திலும் தலையிலும் பாய்ந்தன. அவனது கையில் இருந்த கத்தி நான்கு புறமும் சுழல்கிறது. என் கண்கள் முன்னாலேயே அவனது உடல் மெதுவாக சாய்கிறது.  நீர்வாயிலைச் சுற்றி நடந்த அந்தப் போரில் தனது 11000 வீரர்களுடன் சேர்ந்து எதிரிகள், தனது சகோதரர்கள் என்று பல உய்ரற்ற உடல்களுக்குள் சாய்ந்தான் விடுதலைப்போரின் விடிவெள்ளி மாவீரன் திப்பு சுல்தான்.

அந்த நாள் 04-05-1799. இந்தியாவில் சுதந்திரம், சமத்துவம் , சகோதரத்துவம் என்பதை  முதலில் வெளிப்படுத்திய அம்மாவீரனின் சகாப்தம் நிறைவிற்கு வந்தது. வாழ்நாள் முழுவதும் தனது நாட்டு மக்களின் நல்வாழ்விற்க்காகவே  வாழ்ந்தும் , ஜாதி மதமற்ற ஒரு சமுதாயத்தை நிறுவ நினைத்த  ஒரு மாமனிதனின் கனவு அங்கே முறிந்து கிடந்தது.

அவனது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் இப்போது வரலாறாகிப் போனது. அந்த சிறிய நினைவுத் தூணிற்கு முன்பு நான் மௌனமாக நின்றபோது மானசீகமாக அவனை நினைவு கூர்ந்தேன். ஸ்ரீரங்கபட்டினம்  வீழ்ந்த அந்த கொடிய இரவு மனதில் காயத்தை ஏற்படுத்தியது. எனது காலங்கடந்த நன்றி எனக்கு குற்ற மனப்பான்மையை தந்தது. நான் திரும்பும் போதும் வானம் இன்னமும் நீர்த் தாரைகளைப் ஸ்ரீரங்கபட்டினம் முழுவதும் பொலிந்து கொண்டுதான் இருந்தன.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஸ்ரீரங்கபட்டினம் வீழ்ந்த அன்று இரவு முழுவதும் கடும்மழை பெய்தது என்று வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது.

வாசிப்போர்களம் சார்பாக: சு.கருப்பையா.