Thursday, 10 September 2015

புத்தகத்தூதன் சடகோபன்!




சடகோபன்
கைபேசி : 94433 62300


ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு மதுரை நாராயணபுரம் பகுதியில் "புத்தகத்தூதன்" என்ற பெயரில் சிறிய புத்தகக்கடை ஒன்றை நடத்தி வந்தவர் தான் புத்தகத்தூதன் சடகோபன். எனது நண்பர் ஒருவரின் பணி ஓய்விற்கு பரிசளிக்க ஒரு புத்தகம் வாங்க தேடிப்பிடித்து அந்தக்கடைக்கு சென்றேன். அது ஒரு சிறியகடை என்பதால் அதிக புத்தகங்கள் இல்லை. இருந்தாலும் உங்களுக்கு பிடித்த நூல்களை என்னால் வாங்கித் தர முடியும் என்று புன்னகையோடு கூறினார். இந்தப் பண்பு எனக்கு மிகவும் பிடித்தது. கூடவே அவர் எனது நண்பர் வா.நேருவின்  நெருங்கிய நண்பர் என்றும் தெரிய வந்தது. இப்படிதான் ஆரம்பித்தது எங்கள் நட்பு.

இன்று எனது இல்லத்தில் தரமான ஒரு நூலகம் இருக்கிறதென்றால் அதற்கு நண்பர் சடகோபன் தான் காரணம். அவரின் இனிய குணம்நேர்மையான வியாபாரம் , தந்தைப் பெரியாரின் கொள்கைகளின் மீது ஆழ்ந்தபற்று போன்ற காரணங்கள் எங்களின் நட்பை ஆழப்படுத்தியத்தில் ஆச்சரியமில்லைதான். ஆனாலும் புத்தக விற்பனையின் மூலம் மட்டுமே ஒருவர் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது மிகச்  சிரமமான காரியம். முதலீட்டுத் தகுந்த இலாபம் கிடைப்பதில்லை.  அதிலும் தான் விற்பனை செய்யும் எல்லாப் புத்தகங்களுக்கும், நண்பர் சடகோபன் 10% கழிவு தருவதில் தயக்கம் காட்டியதில்லை. அவரைப் பொறுத்தவரை அந்த புத்தகக்கடை என்பது ஒரு " தொண்டு" அல்லது ஒரு " சேவை " என்றே மகிழ்ந்து வந்தார். தகவலின் பேரில் பலரின் வீடுகளுக்குச் சென்று கூட புத்தகங்களை கொடுத்து வந்துள்ளார். பல பள்ளிகளைத் தேடித்பிடித்து அங்கு புத்தக அரங்கு போட்டுள்ளார். தரமான 100 புத்தகங்களாவது  ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் தணியாத விருப்பம் கொண்டவர்.

ஆனாலும் , எதிர்பார்த்த பலன் இல்லாததால் நாராயணபுரத்தில் இருந்து நத்தம் ரோடு மற்றும் ஆத்திகுளம் பகுதிகளுக்கு தமது கடையை மாற்றிக் கொண்டே இருந்தார். அவரின் சிரமத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மனம் முழுக்க புத்தகங்களும் , சேவையுமே நிறைந்திருந்ததால் அவரால் வேறு பணியிலோ அல்லது வியாபாரத்திலோ ஈடுபட இயவில்லை. ஒரு நாள் புத்தககடைக்குச் சென்றபொழுது கடை பூட்டப்பட்டிருந்து . என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மனம் மிகவும் வலித்தது. கைபேசியில் தொடர்பு கொண்டபொழுது , திருச்சியில் உள்ள  ஒரு புத்தக்கடையில் தற்காலிகமாக  பணியில் இருப்பதாகத் தெரிவித்தார். இருந்தாலும் , புத்தகங்களை விட்டு தன்னால் விலகி இருக்க முடியாது என்றும் , வேறொரு திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆம்!

இன்று  புத்தகத் தூதனின் " நகர்வு புத்தகச் சந்தை "  வந்து விட்டது. 


இந்த நகர்வுச் சந்தையை கடந்த 28/08/2015 ந் தேதி திரு கு. சாமித்துரை, வழக்கறிஞர் மற்றும் தலைவர்,(MMVA) தமிழ் இலக்கிய மன்றம்,  மதுரை துவக்கி வைத்தார். நண்பர் சடகோபனின்  மனத்திட்பமும் ,விடாமுயற்சியும் என்னை மலைக்க வைத்தது. இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் வா.நேரு , நல்ல புத்தகங்களை விற்று அதில் தான் வாழ்க்கை நடத்துவேன்  என வாழ்பவர் சடகோபன் என்றும் , கையைச் சுட்டுக் கொண்டாலும் மீண்டும் புத்தக விற்பனையை வேறு வகையில் யோசிப்பவர் என்றும் தெரிவித்தார். தோழர்.சங்கையா , "அறிவு வீடு தேடி வருகிறது" என்று மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

புத்தகதூதன் சடகோபனின் பணி சிறக்கட்டும். அன்பான சகோதர சகோதரிகளே! அவரது சேவையைப் பயன்படுத்தி அவருக்கு ஊக்கம் தாருங்கள்!



3 comments:

  1. மிக நல்ல,புத்தகத் தூதனுக்கு உற்சாகமூட்டும் பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. மிக நல்ல,புத்தகத் தூதனுக்கு உற்சாகமூட்டும் பதிவு.வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நண்பா் சடகோபனின் இந்த புதிய முயற்சி நிச்சயமாக வெற்றியடையும்.
    கல்லூரிகள்,அலுவலகங்களைநோக்கி அறிவுச் சோலை நகரும் போது வரவேற்க பலரும் காத்திருப்பாா்கள் என்று நான் நம்புகிறேன்.நம்பிக்கையோடு பயணம் தொடரட்டும்....மு.சங்கையா.

    ReplyDelete