சந்திரஹாசம் - தமிழில் வெளிவந்துள்ள முதல் கிராபிக்ஸ் நாவல்.
தனது முதல் நாவலுக்கே " சாகித்திய அகாடமி " பரிசு பெற்றவரும் , த மு எ ச வின்
மாநிலப் பொதுச்செயலருமான சு. வெங்கடேசன் மற்றும் ஓவியர் க. பாலசண்முகம்
இருவரும் இணைந்து , ஆனந்த
விகடன் கிராபிக்ஸ் மூலம் இந்த நாவலை வெளிக்கொணர்ந்து உள்ளார்கள். ஏறத்தாழ 134 பக்கங்களையும் , 720 (சிறிய.பெரிய) படங்களையும் உள்ளடக்கி உள்ளது.
நாவலைப் பற்றிக் கூறவேண்டுமென்றால் , புகழ் பெற்ற பாண்டிய மன்னர் முதலாம் மாறவர்மன்
குலசேகர பாண்டியனின் ( 1268-1310) ஆட்சி காலத்தில்,அவன் இலங்கை மீது போர் தொடுப்பதில் இருந்து நாவல்
துவங்குகிறது. குலசேகர பாண்டியனுக்கு
இரண்டு மகன்கள். முதல் மனைவியான
பட்டதரசிக்குப் பிறந்த சுந்தரபாண்டியன் . இரண்டாவது மனைவிக்குப் பிறந்தவன் வீரபாண்டியன்.
இவன் சுந்தரபாண்டியனுக்கு ஆறு மாதங்களுக்கு மூத்தவன் . மிகுந்த மதிநுட்பமும்
போர்த்திறனும் கொண்டவன். இலங்கைப்போரின் வெற்றிக்குப் பிறகு குலசேகர
பாண்டியன், வீரபாண்டியனுக்கு
இளவரசன் பட்டம் சூட்டுகிறான். அதனால் வெகுண்டெழுந்த சுந்தரபாண்டியன் , குலசேகர பாண்டியனை
கொலை செய்து மதுரையை கைப்பற்றி விடுகிறான் (1310 இல் நடந்தது
). பிறகு வீரபாண்டியன் தமது ஆதரவாளர்களுடன் சேர்ந்து சுந்தரபாண்டியனுடன்
போரிட்டு மதுரையை மீட்டு விடுகிறான். தப்பியோடிய
சுந்தரபாண்டியன் , அப்போது
தென்னிந்திய படையெடுப்பில் இருந்த அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூரிடம்
சரணடைந்து விடுகிறான். அவனுக்கு ஆட்சியைப் பெற்றுத்தரவும் மதுரை கொள்ளையடிக்கவும் மாலிக்காபூர்
மதுரையை நோக்கித் திரும்புகிறான். இத்துடன் “சகோதர யுத்தம்” என்ற சந்திரஹாசம் நாவல் முடிவடைகிறது.
ஓ! சொல்ல மறந்து விட்டேன் . சந்திரஹாசம் என்பது
பாண்டிய அரசர்களின் பரம்பரை வாள். அதனுடைய அட்டைக் கத்தியையும் நாவலில்
சொருகி கொள்ளக் கொடுத்துள்ளார்கள்.
அடுத்து ," மதுரா விஜயம்" என்ற இரண்டாம் பாகம் வர இருக்கிறது .
ஒருவேளை மூன்றாம் பாகமும் வரும் என்று கருதுகிறேன் .
நாவலின் சிறப்பு என்னவென்றால் ஓவியர்
க.பாலசண்முகதின் கடும் உழைப்பு தான். பல படங்கள் உண்மையிலே பிரமிக்க
வைக்கிறது. இருந்தாலும், சில
படங்கள் உயிர்ப்புச்சக்தி இல்லாமலும் , பல படங்கள் அடர்ந்த கலரில் இருப்பதாலும் கண்களுக்கு நிறைவைத்
தரவில்லை என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. அடுத்த பாகங்களில் அவர் இதைக் கவனத்தில்
கொள்ளலாம்.பார்வைக்கு சில படங்கள் ;
இலங்கை போர்க்களம்
இலங்கை போர்க்களம்
மதுரை கோட்டை வாயில்
மதுரை நகரம்
வீரபாண்டியனும் சந்திரஹாசமும்
வீரபாண்டியன் இளவரசு பட்டம்
மாலிக்காபூர்
வீரபாண்டியனும் சந்திரஹாசமும்
அத்துடன் கைபேசி/மடிகணினியில் பதிவிறக்கம் செய்து
தமிழ் மற்றும் ஆங்கிலம் என்று இரண்டு மொழிகளிலும் படிக்கும் வசதியும்
கொடுத்துள்ளார்கள். பாராட்டுக்கள். எழுத்தாளர் சு.வெங்கடேசனுக்கு அதிகச் சிரமம்
இல்லை. ஆங்காங்கே பாலசண்முகத்தின் படங்களுக்குத் தகுந்தவாறு வரலாற்றுக்
குறிப்புகளை கத்தரித்துக் கொடுத்து உள்ளார். அவ்வளவே! காவல் கோட்டத்தின்
உழைப்பு இங்கே
தென்படவில்லை. இந்தக் குறிப்புகளை அவரின் காவல்கோட்டம் நாவலின் மூன்றாம் அத்தியாயத்தில்
எழுதியும் உள்ளார். மேலும் இந்த நாவலின் பெரும் பகுதி பேராசிரியர்.ம. ராசசேகர தங்கமணி
அவர்கள் எழுதிய "பாண்டியர் வரலாறு" என்ற நூலில் பக்கம் 398 இல்
இருந்து 461 வரை (
விகடன் பிரசுரம்) கொடுக்கப்பட்டுள்ளது . அந்த நூலை வாசித்து இருப்பவர்களுக்கு இந்த நாவல் சரளமாகப்
புரியும்.
ஆனாலும், இந்த நாவல் என் நினைவுகளைக் கிளறி ஆழமான பாதிப்பை
ஏற்படுத்தத் தவறவில்லை என்பதைக் கூறித்தான் ஆக வேண்டும். ஆம்!
மாலிக்காபூரின் படையெடுப்பிற்குப் பின்பு மதுரையின் பாண்டிய பேரரசு மீண்டெழவே
இல்லை என்பது
வரலாற்று உண்மை . தீரமாக போராடிய
வீரபாண்டியன் பாண்டிய நாட்டை மீட்க முடியாமல் தென் தமிழகத்தின் சில
பகுதிக்குள் சுருங்கிப் போனான். இந்தியாவின்
மாபெரும் சக்கரவர்த்திகள் சந்திரகுப்தமௌரியன் மற்றும் அசோகராலும்
கூட வெல்லமுடியாத பாண்டியபேரரசு, பேராசை கொண்ட சுந்தரபாண்டியனால் தனது சிறப்பை இழந்து
முகமதியர்கள் மற்றும் நாயக்கர் வம்சத்திடம் சிக்கியது. அந்த வேதனையான வரலாறு
என் மனக்கண்ணில் ஓடி, அது
விட்டுச் சென்ற பாடங்களை நாம் இன்னும் கற்றுக் கொள்ளவில்லையே என்ற வருத்தமும் என்னுள்
எழுந்தது. அந்த வகையில் சு.வெங்கடேசனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இறுதியாக , நாவலின் விலை ரூ. 999/- என்பது சாமானியர்கள் வாங்கும் விதத்தில் இல்லை
என்பதை இடதுசாரி சிந்தனை கொண்ட தோழர்.சு.வெங்கடேசன் அவர்களுக்கு கட்டாயம்
தெரிவிக்க வேண்டியுள்ளது. அத்துடன் பதிப்பாளர்களிடம் இது சம்பந்தமாகப்
பேசுமாறும் வேண்டுகோள் வைக்கிறேன். இத்தருணத்தில் ஆயிரக்கணக்கான நல்ல நூல்களை மலிவு
விலையில் தமிழில் வெளிட்ட
இரசியாவின் " ராதுகா பதிப்பகம் " நினைவிற்கு வருவதை தவிர்க்க இயலவில்லை.
வழக்கம் போல் இந்தப் புத்தகத்தை எனக்கு
வாங்கிக் கொடுத்த நண்பர் புத்தகத் தூதன் சடகோபனுக்கு நன்றி.
சு.கருப்பையா.
Tweet | |||||
தெளிவான, விரிவான விமர்சனம் சார். இந்த நாவலின் விளம்பரத்திற்கே நிறைய செலவு செய்கிறார்கள். அதற்கும் சேர்த்து தான் விலை போல.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete