Friday, 25 December 2015

அசுரன்-வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்


அசுரன்-வீழ்த்தப்பட்டவர்களின் வீர காவியம்
(ராவணன் மற்றும் அவனது இனத்தாரின் கதை)




ஆங்கில ஆசிரியர்: ஆனந்த் நீலகண்டன்
தமிழில் : நாகலெட்சுமி சண்முகம்
பக்கம்: 661
விலை : ரூ.395/-
பதிப்பகம் : மஞ்சுல்

வால்மீகி மற்றும் கம்பர் எழுதிய இராமாயணத்தை படித்திருப்போம் . இராமனின் வீரப் பிரதாபங்களை கவித்தோடு விளக்கிக் கூறப்பட்ட அந்தக்கதை இந்திய பட்டி தொட்டிகளில் எல்லாம் மிகப் பிரபலம். இராமர் பிறந்த இடம் என்று சொல்லப்படும் அயோத்தி இன்றும் நம் மக்களின் மத்தியில் மிகப் பெரிய அச்சத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு இடம் என்றால் அது மிகையில்லை. அந்த  இராமாயணக் கதை  தொலைக் காட்சித் தொடராக ஒலிபரப்பு செய்யப்பட பொழுது  இந்திய மக்கள் தொலைக்காட்சி பெட்டிக்கு தேங்காய் உடைத்து வரவேற்பு செய்தார்கள். அந்த இராமாயணத்தை, இராமனுக்குப் பதிலாக இராவணன் பெருமைகளை விளக்கும் வகையில் நாவல் வடிவில் அசுரன்காவியமாக எழுதினால் எப்படி இருக்கும் என்று ஆறு ஆண்டுகள் ஆழமாக திட்டமிட்டு இதை எழுதியிருக்கிறார் ஆனந்த் நீலகண்டன். புத்தகத்தை வாசித்து முடித்ததும் உண்மையிலே இப்படித்தான் நடந்திருக்குமோ என்று நம்மை நம்ப வைத்து விடுகிறார்.

இராவணன் - எல்லாப் பலவீனங்களும் உள்ளடக்கிய  அசுர குலத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண மனிதன். இவனது அசுர குலத்தை சேர்ந்த மற்றொரு பேரரசன் மகாபலியின் துணையோடு தனது சகோதரன் குபேரனிடமிருந்து இலங்கையின் ஆட்சியை  எடுத்துக் கொள்கிறான். இவனுக்கும் மண்டோதரிக்கும் இலங்கையில் பிறந்த மகள் தான் சீதை. சீதையின் ஜாதகத்தின்படி அவள் இலங்கையில் வளர்ந்தால் இராவணனின் உயிருக்கும் மற்றும் நாட்டிற்கும் ஆகாது என்று  அசுர சோதிடர்கள் கூறியதால் அவளை இராவணனின் இந்திய படையெடுப்பின் போது மிதிலை நாட்டில் போட்டு விடுகிறார்கள்.  அடுத்து , அவள் இராமனை மணந்து வனவாசம் வந்ததை அறிந்த இராவணன் பிள்ளைப் பாசத்தால் வருந்தி தன் மகள் சந்தோசமாக இருக்கட்டும் என்று தன் நாட்டிற்குத் தூக்கி வந்து விடுகிறான்.

அவளை மீட்க இராமன் கிஷ்கிந்தையை சேர்ந்த குரங்கு மனிதர்களின் துணைகொண்டு (வானர இனக்குழு ) இராவணன் மேல் படையெடுத்து வருகிறான். இறுதிப் போரில் இராவணன் தோல்வியுற்று போர்களத்தில் மரணத் தருவாயில் இருக்கும் போது அவனது நினைவுகளாக இந்த அசுர காவியம் எழுதப்படுகிறது.  அத்தோடு அவனது நம்பிக்கைக்கு உரிய வேலைக்காரன் பத்ரன் வாயிலாகவும் இந்த நாவல் நெடுந்தூரம் பயணிக்கிறது.

நாவலில் ஆனந்த் நீலகண்டன் விவரித்திருக்கும் அசுர, தேவ மற்றும் வானர இனக்குழுக்களின் அன்றைய சமூக வாழ்க்கையும் , பழக்க வழக்கங்களும் மிகவும் இயல்பாகவும் , எதார்த்தமாகவும் பின்நவீனத்துவ இலக்கிய வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளது.

எடுத்துக்காட்டாக நாவலின் சில பகுதிகளைப் பார்க்கலாம்;

1 . தேவ இனக்குழுவைச் சேர்ந்த விஷ்ணு கேரளப் பகுதியை ஆட்சி செய்யும் சிறந்த நீதிமான் மகாபலியிடம் தங்களது தேவ மொழியைப் ( சமஸ்கிருதம்) பயிற்று விக்க ஒரு இடம் வேண்டி மூன்று அடி நிலம் கேட்கிறார். கருணையாக கொடுத்த அந்த இடத்தில் தமது வேதபள்ளியைத் துவக்கிய விஷ்ணு நாளடைவில் கேரளா மக்களைத் கவர்ந்து மகாபலியை  நாட்டை விட்டு விரட்டுகிறான். நாடிழந்து வனத்தில் வாழும் மகாபலி , இலங்கை அரசன் குபேரனால் விரட்டப்பட்ட இராவணனுக்கு போர்பயிற்சி அளித்து அவனுக்கு அசுர சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கும் எண்ணத்தை விதைக்கிறான்.

2. இந்த தேவ இனக்குழுவின் படையெடுப்பில் தமது மகளையும் மனைவியையும் பறிகொடுத்த பத்ரன் இந்தியாவிலிருந்து இலங்கை செல்கிறான் , தன் மனைவியை தன் கண் முன்னால் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற தேவர்களை பழி வாங்க இராவணனுடன் சேர்ந்து கொள்கிறான். அங்கே அவன் வாழ்வதற்காக படும் சிரமங்கள் இன்றைய அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை அப்படியே பிரதிபளிக்கிறது. ஆக , போரின் போது பாலியல் பலாத்காரம் என்பது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இதையே தான் அசுரப் படைகள் அயோத்திப்போரின் போதும், வானரப்படைகள் இலங்கை வீழ்ந்த பிறகும் பெண்களின் மீது பிரயோகம் செய்கிறது..

3. இலங்கை அரண்மனையில் குபேரனின் சமையல்காரனாக சேரும் பத்ரன் , இராவணன் இலங்கையின் மீது படையெடுக்கும் தருணத்தில் குபேரனின் வீரர்கள் சாப்பிடும் உணவில் விஷத்தைக் கலந்து விடுகிறான். அதனால் இராவணன் சுலபமாக இலங்கையை வெற்றி பெறுகிறான். குபேரனை இலங்கையை விட்டுத் துரத்தி விடுகிறான். குபேரனின் பொறியியல் பிரிவுத் தலைவன் மயன் கண்டுபிடித்திருக்கும் புஷ்பக விமானத்தை இராவணன் பறித்துக் கொள்கிறான். அவன் மகள் தான் மண்டோதரி.  அவளையும் மணந்து அசுர அரசின் அரசனாகிறான் இராவணன்.

4. இராவணின் தம்பி கும்பகர்ணன்  மது , கஞ்சா போன்ற மதுப் பழக்கத்திற்கு அடிமையானவன் . எப்போதும் மயக்கத்திலே சுழலுபவன். ஆனால் அண்ணன் மீது மிகுந்த பாசமுடையவன் . வழக்கமான இராமாயணத்தில் கும்பகர்ணன் ஆறு மாசம் தூங்குபவன் என்று சித்தரிக்கப்பட்டுள்ளது உங்கள் ஞாபகத்திற்கு வரலாம். ஆனால் அசுரன் சுட்டிக்காட்டும் கும்பகர்ணன் நாம் அன்றாடம் பார்க்கும் குடி மகன்களில் ஒருவனாகத் தான் இருக்கிறான். அவன் இராவணனுக்கு விசுவாசம் உள்ள தம்பியாக வாழ்ந்து அவனுக்காக உயிரை விடுகிறான்.

5. இராவணின் மனைவி மண்டோதரி , அவனின் அன்பிற்கு உகந்த மனைவி அல்ல . இராவணின் முரட்டுத்தனமும் , கர்வமும் அவளை தள்ளியே வைத்துள்ளது. இடையில் சீதை மூத்த மகளாகப் பிறந்ததும் இராவணன் மனைவியையும் மகளையும் மிகவும் நேசிக்க ஆரம்பிக்கிறான். ஆனால் , சீதையால் அவன் உயிருக்கும் , நாட்டிற்கும் ஆபத்து ஏற்படும் என்று சோதிடர்கள் கூறியதால் அவளை எங்காவது விட்டு விடலாம் என்று மந்திரிகள் அறிவுரை கூறுகிறார்கள். ஆனால் இராவணன் மறுத்து விடுகிறான். அவளை தன்னுடன் வைத்துக் கொள்ளவே விரும்புகிறான். அதனாலே தேவர்கள் ஆளும் இந்திய படையெடுப்பின் போதும் மூன்று வயது சீதையை  தன்னுடன் தூக்கி வருகிறான். தமது சாம்ராஜ்ஜியத்தை விரிவாக்க அவன் குபேரனின் அலகாபுரி மீது படையெடுத்து வந்து பல பகுதிகளைப் பிடித்து பேரரசன் ஆகிறான். அயோத்தி அரசர் அனர்னியனையும் கொன்று அயோத்தியை கைப்பற்றுகிறான். அந்தசமயத்தில் அயோத்தி குப்பைகள் நிறைந்த அழுக்கான நகரமாக இருந்தது என்றும், அங்கு வாழ்ந்த மக்கள்அசுரர்கள் தங்களை தொடுவதை விரும்பாமல் ஒதுங்கிச் சென்றதையும் உயிரை விடுவதைவிட தங்களை தொட்டுவிடுவார்கள் என்றே அவர்கள் பெரிதும் பயந்ததாக இராவணன் சொல்கிறான். அது தான் வருணாசிரமக் கொள்கை என்று அப்போது இராவணனுக்குத் தெரியாது. அவர்கள் தேவ குழுக்களைச் சார்ந்த பிராமணர்கள் என்றும் , தனது தந்தையும் பிராமணன் தானே என்றும் தன்னைப் பார்த்து ஏன் அவர்கள் பயந்து ஓடுகிறார்கள் என்பதும் அவனுக்கு அதிசயமாகத் தெரிகிறது.. அந்தக் காலகட்டத்தில் அயோத்தியின் அரசராக இராமனின் தந்தை தசரதன் இல்லை என்பதும் ஆச்சரியமாக இருக்கிறது.

இராவணனின் பேரரசை கீழ்க்காணும் படத்தின் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.



அவனது தம்பிகள் விபிஷணன் , கும்பகர்ணன் , பிரதம   மந்திரி பிரகஸ்தன் , கடற்க்கொள்ளையன் வருணன் போன்றவர்கள் இராவணனுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள்.  ஆனால் பிரதம மந்திரி பிரகஸ்தான் ரகசிய உத்தரவுப்படி இராவணனுக்குத் தெரியாமல் பத்ரன் சீதையை மிதிலைப் பகுதியில் போட்டு விடுகிறான். அங்கே வேட்டைக்கு வரும் ஜனகன் நீர் குட்டைக்குள் கிடக்கும் சீதையை கலைப்பையைக் கொண்டு நெம்பித் தூக்குகிறான்.

6. பின்னாளில் மிகப் பெரிய பேரரசனாக விளங்கும் இராவணனுக்கு சீதையின் பிரிவு மிகுந்த வேதனையைத் தருகிறது  இந்த சமயத்தில் மிதிலையில் சீதைக்கு சுயம்வரம் நடத்த ஜனகன் முடிவு செய்கிறான். அதை விரும்பாத இராவணன்,  ஜனகனிடம் சீதை தன் மகள் தான் என்ற உண்மையைக் கூறி சீதையை திரும்பப் பெற மாறுவேடத்தில் மிதிலைக்கு மாமன் மாரிசனோடு புஷ்பக விமானத்தில் வருகிறான். ஆனால் சூழ்நிலையால் அவனால் ஜனகனை சந்திக்க முடியாமல் போய் விடுகிறது அதனால் சீதை கருப்பான இராமனை கணவனாக தேர்ந்தெடுப்பதை அவனால் தடுக்கவும் முடியவில்லை, தாங்கிக் கொள்ளமுடியவில்லை. சிறிய பகுதியான அயோத்தியை ஆளும் சாதாரண தசரதனின் அரசன் மகன்  இராமனால் தன் மகளுக்கு சந்தோசத்தைக் கொடுக்க முடியாதே என்று வருந்துகிறான். இருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் இலங்கைக்கு கவலையுடன் திரும்புகிறான்.

7. பிறகு,  இராமன் வனவாசம் வந்த பிறகு  அங்கு வாழும் இராவணனின் தங்கை சூர்பணங்கு  இராமனின் மேல் ஆசைப்பட்டு,  அதனால் லட்சுமணனால் மூக்கும் , மார்பகமும் அறுக்கப் படுகிறாள். அதை அவள் இராவணனிடம் முறையிடுகிறாள். சீதையும் , இராமனும் தன் எல்லைக்குள் வாழ்வதை அறிந்த இராவணன் , தன் மகளை இப்போதாவது அழைத்து வர வேண்டும் என்று திரும்பவும் மாரிசனோடு புஷ்பக விமானத்தில் வருகிறான். ஆனால் , சீதையை மட்டும் இராமனிடமிருந்து பிரித்து வர வேண்டும் என்று விரும்புகிறான். அவனுக்கு ஏனோ இராமனைப் பிடிப்பதில்லை, அந்த சமயத்தில் மாரிசன் ஒரு திட்டத்துடன் இராவணனிடம் சொல்லாமல் செல்கிறான். சிறிது நேரத்தில் ஒரு அழகான பொன் நிறமான மான் சீதையின் குடிலுக்கு அருகில் நிற்கிறது. அதன் அழகு சீதைக்கு மிகவும்  பிடித்துப் போகிறது.  அதைப் பிடிக்க இராமன் விரைகிறான். இராவணன் அப்போது தான் பார்க்கிறான்; அது அவனது மாமன் மாரிசன். அந்த அழகான பொன் மானைப் பிடித்து கொன்று அதன் தோலை உரித்து மாறுவேசம் போட்டிருந்தான். முடிவில் மாரிசன் கொல்லப்பட்டு , இராவணன் சீதையைத் தூக்கிக் கொண்டு புஷ்பக விமானத்தில் பறக்கிறான். அந்தச் சமயத்தில் ஒரு பெரிய கழுகு ஒன்று விமானத்தின் இறக்கையில் சிக்கிக் கொள்கிறது. அதனால் விமானம் பறக்க முடியாமல் திணறுகிறது. அதை தனது வாளால் வெட்டி  துண்டாக்குகிறான் . அது கீழே விழுந்த பின்னரே விமானத்தால் பறக்க முடிகிறது. இதைத்தான் சீதையை மீட்க ஜடாயு இராவணனுடன் போரிட்டது என்று கதை விட்டு உள்ளார்கள் என்பதை  நம்மால் தெரிந்து கொள்ளமுடிகிறது. 

8. இராவணன் , சீதையை  இலங்கைக்கு தூக்கிக் கொண்டு வந்தது அவனது மந்திரிகள் பிரகஸ்தன் , வஜ்டமுக்கிரன் , ஜம்புமாலி, தம்பிகள் கும்பகர்ணன் , விபிஷணன் போன்றவர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களுக்கு சீதை இராவணின் மகள் என்பதும்  தெரியாது. அந்த இரகசியம் பத்ரனுக்கும் மண்டோதரிக்கும்  மட்டுமே தெரியும். சீதையை சிறை மீட்க இராமன் வானர இனக்குழுவைச் சேர்ந்த அரசன் சுக்கிரவனோடும் அவனது வீரர்களுடன் இலங்கை வருகிறான். பெரும் போர் நிகழ்கிறது.

9. இராவணின் தம்பி விபிஷணன், கடற்படைத் தலைவன் வருணன், இந்தியாவின் தென்முனையில் வாழும் இராவணின் இந்தியப்பிரதிநிதி லங்கிணி போன்றவர்கள் இராமனுடன் சேர்ந்து கொள்கிறார்கள். போரில் இராவணின் மகன்கள் மேகநாதன், அதிகாயன் , அட்சயகுமாரன் மற்றும் பிரதம மந்திரி பிரகஸ்தன் , தம்பி கும்பகர்ணன் போன்றவர்கள் வீரமரணமடைகிறார்கள். பிரகஸ்தனின் மரணம் இராவணனை தெரிதும் பாதிக்கிறது, அவன் இறந்தவுடன் அவனது வீட்டிற்கு வரும் இராவணன் அவனது எளிமையான வாழ்க்கையை நினைத்து கண்ணீர் வடிக்கும் காட்சியை  மிக அற்புதமாக எழுதி இருக்கிறார் ஆனந்த் நீலகண்டன்.  இறுதியில்,  தனித்து விடப்பட்ட இராவணன் போருக்குச் செல்வதற்கு முன் தன் மகள் சீதையை பார்க்க வருகிறான். கடும் மழை கொட்டுகிறது. தான் அவளது தந்தை என்பதையும் , அவளைப்  பிரிந்த துன்பம் தாங்காமலே அவளைத்  தூக்கி வந்ததாகவும் , அவள் அசுர பேரரசின் இளவரசி என்பதையும் மனம் நெகிழ கூறுகிறான். இவையெல்லாம் மழையின் வேகத்தில்  சீதைக்கு கேட்டிருக்கலாம் அல்லது கேட்காமலும் இருக்கலாம். ஆனால் இராவணை அவள் கடைசி வரைத் திரும்பிப் பார்க்கவேயில்லை . மிகப் பெரிய சோகத்துடன் இராவணன் போர்க்களம் புகுகிறான்.

10. இராவணனுக்கு மிகப் பெரிய தளர்ச்சி ஏற்படுகிறது. தன்னால் போரிட முடியுமா என்ற சந்தேகம் எழுகிறது. நீண்ட நாட்கள் போரிடாமல் அரச வாழ்க்கையை அனுபவித்தால் இந்த நிலை என்பதையும் உணருகிறான். இருந்தாலும் தான் அசுர குலத்தின் பேரரசன் என்ற உணர்வு மேலோங்க இராவணன் போர்களத்தில் இராமனுடன்  மிக வீரமாகப் போரிடுகிறான். போரில் தம்பி விபிஷணனால் பின்புறமாக தாக்கப்பட்டும் , இராமனின் அம்புகளால் முன்புறமாகத் தாக்கப்பட்டும் இராவணன் காயத்துடன் வீழ்கிறான். அவனோடு அசுரப்பேரரசும் வீழ்ச்சி அடைகிறது என்பதும் வருணாசிரம கொள்கைகளைக் கொண்ட தேவர்களின் இராஜ்ஜியம் அங்கே உருவாகப் போவது நமக்கு புரிகிறது.

11. இலங்கையைக் கைப்பற்றிய வானர வீரர்கள் அதன் செல்வத்தைக் கொள்ளை அடிக்க ஆரம்பித்தார்கள். இலங்கை மீண்டும் தீக்கிரையாக்கப்பட்டது.   பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டார்கள். இராமனின் படைகளும் மற்ற படைகளைப் போல நடந்து கொள்வது இயல்பாக எழுதப்பட்டுள்ளது. பின்னர் இராமனுடன் வந்த பிராமணத் துறவிகள்  இலங்கைக்குள் நுழைகிறார்கள். மக்களை சாதிரீதியாக பிரிக்கிறார்கள். அதுவரை இல்லாத வகையில் இலங்கை மக்கள் தாங்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்கள்  என்று கண்டுபிடிக்க வேண்டிய துர்பாக்கிய நிலை வந்தது. சாதி தெரியாதவர்களுக்கு அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையில் சாதி ஒதுக்கப்பட்டது. சாதியற்ற சமத்துவ அசுரப் பேரரசு தூக்கி எறியப்பட்டது. கடைசியில் பத்ரன் சலவைத் தொழில் செய்யும் சூத்திரனாக கண்டு பிடிக்கப்பட்டான். இதெல்லாம் இராமனின் வெற்றிக்கு கிடைத்த பரிசு தான்.

12. அடுத்த நாள் இலங்கையின் அரசனாக விபிஷ்ணனுக்கு மகுடம் சூட்டப்பட்டது. இராவணனுக்கு இறுதிச்சடங்கு செய்யவும் ஏற்பாடாகி இருந்தது. அத்துடன் அங்கே பிராமணத் துறவிகள் பெரும் சந்தனக் கட்டைகளைக் அடுக்கி இன்னொரு சிதையும் ஏற்பாடு செய்து வந்தார்கள். ஆம்! சீதை , அங்கு எழுப்பப்படும் தீயில் உட்புகுந்து உயிரோடு வெளிவந்து தனது கற்புத் தன்மையை நிருபிக்கவேண்டும். அது தான் பிராமணத்  துறவிகள் விதித்த நிபந்தனை.  இராமனால் அதை எதிர்க்கமுடியாத கையறு நிலையில் தான் இருந்தான். சீதை அங்கு அழைத்து வரப்படும் போது மிகவும் சோர்ந்து காணப்பட்டாள். இந்தச் சோதனை அவளது தூய்மையை உலகிற்கு காட்டத்தான் என்று பொய்யுரைக்கப்பட்டது. கூட்டத்தில் ஒருவனாக நின்று  இருந்த  பத்ரனுக்கு சீதையின் முகத்தில் தென்பட்ட அந்த வேதனை பெரும் துன்பத்தைத் தருகிறது. மூன்று வயதில் தான் தூக்கி சுமந்த அந்த அசுர இளவரசியின் சோகம் அவன் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது. அப்போது சிதைக்கு தீ மூட்டப் பட்டதும் சீதை அப்பா என்று அழைத்துக் கொண்டே சிதைக்குள் பாய்ந்தாள் என்று பத்ரனின் காதுகளுக்கு கேட்டது. இடியுடன் பெரும் மழை பெய்தது. தீ அணைந்து காயமின்றி வெளி வந்தாள் சீதை. சீதை தூய்மையானவள் என்று கூறி ராமன் அவளை ஏற்றுக் கொள்கிறான். அதன் பிறகு இராவணனின் இறுதி சடங்கு நடைபெற்ற இடத்திற்கு வருகிறான் பத்ரன். அந்த மாபெரும் அசுரப் பேரரசன் சாம்பலாகவும் , சிறு சிறு எலும்புத் துண்டுகளாகவும் மழையில் நனைந்து முடை நாற்றத்துடன் சேறாகவும் கிடந்தான். தன் மகள் மேல் கொண்ட பாசத்தால் இறந்து போன அப்பேரரசனின் முகம் பத்ரனுக்கு கண்ணீரை வெளிக்கொணர்ந்தது. அவன் முகம் இறுகியது. பேரரசரே ! உங்கள் சாவிற்கு நான் பழி வாங்கியே தீருவேன் என்று வீர சபதம் எடுத்துக் கொள்கிறான் அந்தச் சாமானியன்.

அவன் தான் பல ஆண்டுகளுக்கு பிறகு அயோத்தியில் குடித்துவிட்டு தனது மனைவியிடம் தகராறு செய்யும் போது   ." தன் மனைவியின் கற்பு சந்தேகத்திற்கு இடமாகி இருந்தும் கூட , அவளை ஏற்றுக் கொள்வதற்கு இராமனுக்கு இருந்த பெரிய மனம் எனக்கு இல்லை " என்று கூறி அயோத்தி அரசையே ஆட்டம் காண வைத்தவன். சீதை இராமனிடமிருந்து மீண்டும் பிரிகிறாள். இறுதியாக பத்ரன் இராவணனுக்காக இராமனையும் அயோத்தி மக்களையும் இவ்வாறு பழி தீர்த்துக் கொண்டான். அதன் பிறகு அயோத்தியில்  வாழப் பிடிக்காமல் தனது 90 வயதில் கேரளாவில் உள்ள தனது கிராமத்திற்கு வருகிறான் பத்ரன். அந்தக் கிராமத்தில் அழகாகப் பாயும் நதியில் ஆசை தீர குளிக்க குதிக்கிறான் பத்ரன். ஆனால் அவனுக்கு நெற்றியில் ஒரு கல்லெறி கிடைக்கிறது. கூடவே , " பறையா, நீ எப்படி பாதுகாக்கப்பட்ட நீரில் குளிக்கலாம் " என்ற குரலும் வருகிறது. தான் எல்லாவற்றையும் இழந்து விட்டதாக அந்த வயோதிகன் உணருகிறான். ஆம்! அங்கே பரசுராமனின் ஆட்சியில் பார்ப்பனீயம் தலை தூக்கி உள்ளதைப் பார்கிறான். இத்துடன் நாவல் முடிவடைகிறது. நமது மனமும் கனத்துப் போகிறது.

உண்மையிலே இந்த நூல் இராமனின் புனிதம் பேசும் கதையல்ல! இராவணன் என்னும் அசுரன் தனது உணர்வுகளைப் பேசும் சொந்தக்கதை! அவனும் அவனது இனமும் அழிக்கப்பட்ட வேதனையான வரலாறு.


வாசிப்போர்களத்திற்காக

சு.கருப்பையா.

1 comment:

  1. சிறப்பு, மிக சிறப்பு

    ReplyDelete