Sunday, 4 August 2013

முத்திரைக் கவிதைகள்

13/07/2013 அன்று வாசிப்போர் களம் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட “முத்திரைக் கவிதைகள்” புத்தகத்தைப் பற்றிய வாசக பார்வை.

நல்ல வாசிப்பனுபவம் உள்ளவர்களில் கூட பலர் கவிதை என்றால் கொஞ்சம் தூரம் நகர்ந்து கொள்ளும் நிலை தான் இன்றும் இருக்கிறது. அதுவும் கவிதை எழுதுபவனையோ இல்லை கவிதையை சிலாகிப்பவனையோ இந்த சமுதாயம் பார்க்கும் பார்வை கொஞ்சம் “டெரராககத்”தான் இருக்கிறது. உரைநடையைக் காட்டிலும் ஒரு செய்யுளைப் புரிந்து கொள்ள கொஞ்சம் உழைப்பு அதிகமாகவே தேவைப்படுகிறது. அதனாலேயே பெரும்பான்மையினர் கவிதை வாசிப்பின் பக்கம் மழைக்கும் ஒதுங்குவதில்லை. ஆனால் இந்த பஞ்சமெல்லாம் கவிதையை வாசிப்பதற்குத்தான். ஒருவன் பள்ளி வீட்டுப்பாடம் தவிர்த்து பேனாவும் பேப்பரும் எடுக்கிறான் என்றால் சர்வ நிச்சயமாக சொல்லி விடலாம், அவன் கவிதை தான் எழுத முயல்கிறான் என்று. ஆம் எப்படிப் பார்த்தாலும் இன்று கவிதை வாசகப்பரப்பை விட கவிஞர்கள் பரப்பு தான் அதிகமாக இருக்கிறது. அதுவும் புதுக்கவிதைகளின் வரவுக்குப் பின் மடக்கிப் போட்டு எழுதுவது எல்லாமே கவிதை தான்.

இப்படியான சிக்கல்கள் எல்லாம் இல்லாமல், எளிமையை அடையாளமாய்க் கொண்ட உண்மையான 75 கவிதைகளின் தொகுப்பு இந்த “முத்திரைக்கவிதைகள்”. ஆனந்த விகடனின் பவளவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 2001ம் ஆண்டு நடந்த கவிதைப் போட்டியில் வெற்றி பெற்ற 75 கவிதைகளின் தொகுப்பாக வெளிவந்திருக்கிறது இந்நூல். கவிதைகள் வெளிவந்து சுமார் 11 ஆண்டுகளுக்குப் பின் புத்தகமாக தொகுக்கப்பட்டு, குறுகிய காலத்திலேயே இரண்டாம் பதிப்பும் கண்டிருக்கிறது. இந்த முத்திரைக் கவிதைகளின் வயது, இத்தனை ஆண்டுகள் தாண்டியும் அவை இளமையாய் இருப்பதற்கான காரணம் அவற்றில் உள்ள நிதர்சனம். அழகியல் தோரணமாக இல்லாமல், வாழ்வின் நுட்பங்களையும், அபத்தங்களையும், தரிசனத்தையும், ஆச்சர்யங்களையும் உண்மையாக பதிவு செய்திருப்பதாலயே இந்தக்கவிதைகள் சாகாவரம் பெற்றிருக்கின்றன.

நல்ல வாசிப்பனுபவம் விரும்புவோர் முத்திரைக்கவிதைகளை நிச்சயம் வாசிக்கலாம்.

விவரம்:
முத்திரைக் கவிதைகள்
விகடம் பிரசுரம்
விலை: ரூ 70
பக்கம்: 88

-வி.பாலகுமார்.

No comments:

Post a Comment