Thursday, 10 September 2015

புத்தகத்தூதன் சடகோபன்!




சடகோபன்
கைபேசி : 94433 62300


ஒரு ஐந்து வருடங்களுக்கு முன்பு மதுரை நாராயணபுரம் பகுதியில் "புத்தகத்தூதன்" என்ற பெயரில் சிறிய புத்தகக்கடை ஒன்றை நடத்தி வந்தவர் தான் புத்தகத்தூதன் சடகோபன். எனது நண்பர் ஒருவரின் பணி ஓய்விற்கு பரிசளிக்க ஒரு புத்தகம் வாங்க தேடிப்பிடித்து அந்தக்கடைக்கு சென்றேன். அது ஒரு சிறியகடை என்பதால் அதிக புத்தகங்கள் இல்லை. இருந்தாலும் உங்களுக்கு பிடித்த நூல்களை என்னால் வாங்கித் தர முடியும் என்று புன்னகையோடு கூறினார். இந்தப் பண்பு எனக்கு மிகவும் பிடித்தது. கூடவே அவர் எனது நண்பர் வா.நேருவின்  நெருங்கிய நண்பர் என்றும் தெரிய வந்தது. இப்படிதான் ஆரம்பித்தது எங்கள் நட்பு.

இன்று எனது இல்லத்தில் தரமான ஒரு நூலகம் இருக்கிறதென்றால் அதற்கு நண்பர் சடகோபன் தான் காரணம். அவரின் இனிய குணம்,  நேர்மையான வியாபாரம் , தந்தைப் பெரியாரின் கொள்கைகளின் மீது ஆழ்ந்தபற்று போன்ற காரணங்கள் எங்களின் நட்பை ஆழப்படுத்தியத்தில் ஆச்சரியமில்லைதான். ஆனாலும் புத்தக விற்பனையின் மூலம் மட்டுமே ஒருவர் தமது வாழ்க்கையை அமைத்துக் கொள்வது என்பது மிகச்  சிரமமான காரியம். முதலீட்டுத் தகுந்த இலாபம் கிடைப்பதில்லை.  அதிலும் தான் விற்பனை செய்யும் எல்லாப் புத்தகங்களுக்கும், நண்பர் சடகோபன் 10% கழிவு தருவதில் தயக்கம் காட்டியதில்லை. அவரைப் பொறுத்தவரை அந்த புத்தகக்கடை என்பது ஒரு " தொண்டு" அல்லது ஒரு " சேவை " என்றே மகிழ்ந்து வந்தார். தகவலின் பேரில் பலரின் வீடுகளுக்குச் சென்று கூட புத்தகங்களை கொடுத்து வந்துள்ளார். பல பள்ளிகளைத் தேடித்பிடித்து அங்கு புத்தக அரங்கு போட்டுள்ளார். தரமான 100 புத்தகங்களாவது  ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டும் தணியாத விருப்பம் கொண்டவர்.

ஆனாலும் , எதிர்பார்த்த பலன் இல்லாததால் நாராயணபுரத்தில் இருந்து நத்தம் ரோடு மற்றும் ஆத்திகுளம் பகுதிகளுக்கு தமது கடையை மாற்றிக் கொண்டே இருந்தார். அவரின் சிரமத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மனம் முழுக்க புத்தகங்களும் , சேவையுமே நிறைந்திருந்ததால் அவரால் வேறு பணியிலோ அல்லது வியாபாரத்திலோ ஈடுபட இயவில்லை. ஒரு நாள் புத்தககடைக்குச் சென்றபொழுது கடை பூட்டப்பட்டிருந்து . என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. மனம் மிகவும் வலித்தது. கைபேசியில் தொடர்பு கொண்டபொழுது , திருச்சியில் உள்ள  ஒரு புத்தக்கடையில் தற்காலிகமாக  பணியில் இருப்பதாகத் தெரிவித்தார். இருந்தாலும் , புத்தகங்களை விட்டு தன்னால் விலகி இருக்க முடியாது என்றும் , வேறொரு திட்டம் இருப்பதாகவும் தெரிவித்தார்.

ஆம்!

இன்று  புத்தகத் தூதனின் " நகர்வு புத்தகச் சந்தை "  வந்து விட்டது. 


இந்த நகர்வுச் சந்தையை கடந்த 28/08/2015 ந் தேதி திரு கு. சாமித்துரை, வழக்கறிஞர் மற்றும் தலைவர்,(MMVA) தமிழ் இலக்கிய மன்றம்,  மதுரை துவக்கி வைத்தார். நண்பர் சடகோபனின்  மனத்திட்பமும் ,விடாமுயற்சியும் என்னை மலைக்க வைத்தது. இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நண்பர் வா.நேரு , நல்ல புத்தகங்களை விற்று அதில் தான் வாழ்க்கை நடத்துவேன்  என வாழ்பவர் சடகோபன் என்றும் , கையைச் சுட்டுக் கொண்டாலும் மீண்டும் புத்தக விற்பனையை வேறு வகையில் யோசிப்பவர் என்றும் தெரிவித்தார். தோழர்.சங்கையா , "அறிவு வீடு தேடி வருகிறது" என்று மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

புத்தகதூதன் சடகோபனின் பணி சிறக்கட்டும். அன்பான சகோதர சகோதரிகளே! அவரது சேவையைப் பயன்படுத்தி அவருக்கு ஊக்கம் தாருங்கள்!



Tuesday, 28 July 2015

மாமனிதர் அப்துல் கலாம் மறைவு

தேசமே கண்ணீரில் மிதக்கிறது | 7 நாள் துக்கம்





குடியரசு முன்னாள் தலைவர் அவுல் பக்கீர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் (84) மாரடைப்பால் திங்கள் கிழமை மாலை உயிரிழந்தார்.

இந்த இழப்பை தாங்க முடியாமல் தேசமே கண்ணீரில் மிதக்கிறது. மத்திய அரசு 7 நாள் துக்கம் அறிவித்துள்ளது. குடியரசு தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மேகாலய தலைநகர் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம். கல்வி நிறுவனத்தில் திங்கள் கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலாம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அங்கு நேற்று மாலை 6.30 மணி அளவில் அவர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிக் கொண்டி ருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அருகில் உள்ள பெதானி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு பிராண வாயு செலுத்தப்பட்டது. ஆனால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை. அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மருத்துவமனையின் இயக்குநர் ஜான் சாலியோ ரயான்தியாங் கூறியபோது, 'நாடித்துடிப்பு அடங்கிய நிலையில்தான் கலாம் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார், மாரடைப்பு காரணமாக அவரது உயிர் பிரிந்துள்ளது' என்று தெரிவித்தார்.

தகவல் அறிந்து மேகாலய ஆளுநர் சண்முகநாதன், மாநில தலைமைச் செயலாளர் வாஜ்ரி ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று பார்த்தனர்.

பின்னர் தலைமைச் செயலாளர் வாஜ்ரி நிருபர்களிடம் கூறியபோது, 'அப்துல் கலாமின் உடல் செவ்வாய்க்கிழமை காலை டெல்லிக்கு கொண்டு செல்லப் படுகிறது. இதுதொடர்பாக மத்திய உள்துறை செயலாளர் கோயலுடன் ஆலோசனை நடத்தி அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன' என்று தெரிவித்தார்.

அப்துல் கலாமின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு சார்பில் 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது. கலாமின் மறைவு நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசமே கண்ணீர் வடிக்கிறது.

வாழ்க்கை வரலாறு
தமிழகத்தின் ராமேஸ்வரம் நகரில் கடந்த 1931 அக்டோபர் 15-ம் தேதி அப்துல் கலாம் பிறந்தார். அவரது தந்தை ஜைனுலாபுதீன், தாயார் ஆஷியம்மா.
ராமேஸ்வரத்தில் பள்ளிக் கல்வியை முடித்த அவர் மேற்படிப்புக்காக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1954-ல் இயற்பியலில் பட்டம் பெற்றார்.

1955-ம் ஆண்டில் சென்னை எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தில் விண்வெளி பொறியியல் படிப்பில் சேர்ந்தார். அங்கு படித்தபோது விமானியாக வேண்டும் என்று கலாம் ஆசைபட்டார். அதற்கான தேர்வில் அவர் 9-வது இடம்பெற் றார். ஆனாலும் விமானியாகும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

ஏவுகணை விஞ்ஞானி
சென்னை எம்.ஐ.டி.யில் உயர் கல்வியை முடித்த அவர் 1960-ம் ஆண்டில் மத்திய அரசின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பில் முதன்மை விஞ்ஞானியாக பணியில் சேர்ந்தார்.

முதலில் இந்திய ராணுவத் துக்காக சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்தார். பின்னர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் (இஸ்ரோ) அவர் தனது ஆராய்ச்சி பணிகளைத் தொடர்ந்தார். அங்கு 1980-ம் ஆண்டு எஸ்.எல்.வி.-3 ராக்கெட் மூலம் ரோகினி-1 என்ற செயற்கைக் கோளை விண்ணில் ஏவியதில் முக்கிய பங்காற் றினார். அவரது சேவையைப் பாராட்டி 1981-ல் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. அடுத்து 1990-ல் பத்ம விபூஷண் விருதைப் பெற்றார். 1963 முதல் 1983 வரை இஸ்ரோவில் சிறப்பாகப் பணியாற்றினரா்.
பின்னர் 1999-ம் ஆண்டில் பொக்ரான் அணுஆயுத சோதனை யில் கலாம் முக்கிய பங்காற்றினார். இதேபோல அக்னி, பிருத்வி, ஆகாஷ் உட்பட ஐந்து ஏவுகணை திட்டங்களில் முக்கிய பணியாற்றி உள்ளார்.

அவரை கவுரப்படுத்தும் விதமாக 1997-ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. இவை தவிர 30-க்கும் மேற்பட்ட பல்கலைக் கழகங்கள் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டங்களை வழங்கியுள்ளன. மேலும் ஏராளமான சர்வதேச விருதுகளையும் அவர் பெற்றுள் ளார்.

மக்களின் குடியரசுத் தலைவர்
கடந்த 2002 ஜூலை 25-ம் தேதி நாட்டின் 11-வது குடியரசுத் தலைவராக அவர் பதவியேற்றார். 2007 ஜூலை 25-ம் தேதி வரை அவர் பதவி வகித்தார்.

அவர் விஞ்ஞானியாக பணியாற் றியபோது இந்தியாவின் ஏவுகணை தந்தை என்றும் குடியரசுத் தலைவராக இருந்தபோது மக்களின் குடியரசுத் தலைவர் என்றும் போற்றப்பட்டார்.

குடியரசுத் தலைவர் பதவி காலம் முடிந்த பிறகு நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு இளைய தலைமுறையினருக்காக பயனுள்ள ஆலோசனைகளை வழங்கி வந்தார்.

கலாம் எழுதிய புத்தகங்கள்

சிறந்த எழுத்தாளராகவும் அவர் விளங்கினார். அக்னி சிறகுகள், எழுச்சி தீபங்கள், அப்புறம் பிறந்தது ஒரு புதிய குழந்தை ஆகிய புத்தகங்களை எழுதியுள்ளார்.

இறுதி வரைக்கும் பிரம்மச்சாரியாக வாழ்ந்த கலாம் மறைந்தாலும் அவரது எளிமையான வாழ்க்கை, இனிமையான பேச்சால் இந்திய மக்கள் அனைவர் மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
நன்றி : தி இந்து தமிழ் 28/07/2015

இந்தியாவின் மிகச் சிறந்த குடிமகன்களில் ஒருவரான மாமனிதர் அப்துல் கலாம் அவர்களுக்கு வாசிப்போர்களம் அவரது பாதங்களில் மலர்களைத் தூவி வணங்குகிறது. எம் தேசத்திற்கு நீங்கள் விட்டுச் சென்ற அடையாளங்களை , நாட்டின் இறுதிக் குடிமகன் இருக்கும் வரை நினைவு கொள்வான். எங்கள் நன்றியையும் , இறுதி வணக்கத்தையும் ஏற்றுக் கொள்ளுங்கள். 

சு.கருப்பையா. 
ஒருங்கிணைப்பாளர். 

நகரத்தில் கிடைக்கும் வசதிகள் கிராமத்திலும் கிடைக்கவேண்டும் எனத் தன் வாழ்நாள் முழுவதும் கூறிய , நகரத்தில் குடியரசுத் தலைவராக இருந்தபோதும் கிராமத்து மக்களின் துயரத்தை நினைத்த , சரியான வழிகாட்டுதலும் , உத்வேகமும் கொடுத்தால் நமது மாணவர்கள் சாதிப்பார்கள் , அதற்காகவே எனது வாழ்க்கை என அர்ப்பணித்த அய்யா .அ.பெ. ஜை. அப்துல் கலாம் அவர்களுக்கு வீரவணக்கம்.

முனைவர் வா.நேரு.






Monday, 29 June 2015

நலம் பெற வாழ்த்துக்கள்!!!

அருமைத் தோழர்களே!

நமது தோழர் .வா.நேரு , இருதய நோய்ச்  சிகிச்சைக்காக  (MVR) சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அறுவை சிகிச்சை முடிந்து நலமடைந்து வருகிறார்.  தளராத ஊக்கமும் , கொள்கை நோக்கமும், மனத்தின்மையும் படைத்த தோழர்.நேரு முன்பைவிட ஆரோக்கியத்துடன் திருப்ப வருவார் என்ற  முழு நம்பிக்கை நமக்கு உண்டு.

தோழனே! நீங்கள்  நலமுடன் திரும்பி வர வாசிப்போர்களம் வாழ்த்துகிறது. தங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்க்கிறது.


Tuesday, 23 June 2015

அஞ்சலி !

இளங்காலைப்பொழுதின் இளந்தென்றல் காற்று மனதிற்கு இதமாக இருந்தது. எங்களது இரயில் வண்டி ஸ்ரீரங்கபட்டினத்தை கடக்கும் பொழுது மிதமான சாரல் மழையும் பெய்யத் தொடங்கியது. இருந்தாலும் அந்தக் காலை வேளையிலே என் மனதில் பரபரப்பும் ஆர்வமும் தொற்றிக் கொண்டது. இங்கே தான் மாவீரன் திப்பு சுல்தான் வாழ்ந்து மறைந்தான் என்ற எண்ணம் மேலோங்க எட்டிப் பார்த்தேன்.  இளம் மஞ்சள் நிறத்தில் ஒரு கோவில் பின்புறமாக கடந்து சென்றது. ஒரு வேளை அது ஸ்ரீரங்கநாதர் கோவிலாக இருக்கும் என்று புரிந்து கொண்டேன்.

எனது இதயம் இந்தியாவில் பார்க்க துடித்த  ஒரே இடம்  இந்த ஸ்ரீரங்கபட்டினம் தான். திப்புசுல்தான் என்ற மாவீரன் மறைந்த இடத்தில் அவனுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என்ற 25 ஆண்டு கடன் என்னை உறுதிக் கொண்டே இருந்தது . அந்த வாய்ப்பு எனது மகன் மூலமே எனக்கு கிடைத்தது. அவன் தன்னுடைய பணியில் சேருவதற்கு மைசூர் சென்றதால் நானும் எனது மனைவியும் கூடவே செல்ல வேண்டிய கட்டாயம். அவன் பிறப்பதற்கு முன்பே என் மனதில் வேரூன்றி வளர்ந்திருந்த அந்த உணர்வு , அவனின் வளமான வாழ்வு தொடங்க இருக்கும் இந்த நல்ல வேளையிலே எனது நீண்டநாள் கனவும் நிறைவேறப்போவது உண்மையிலே இரட்டிப்பு மகிழ்ச்சியே . மனம் திப்புவின் நினைவுகளில் இருந்து மீள்வதற்குள் மைசூர் வந்தது.

அந்தக் காலை வேளையிலே மழை பெய்து கொண்டிருந்தாலும் மைசூர் நகரம் மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. இரயில் நிலையத்தின் உள்ளையே நகராட்சி மற்றும் காவல்துறையினரால் நிர்வாகிக்கப்படும் ஆட்டோ நிலையம் (PREPAID) இருந்தது. பேரம் பேச வேண்டியதில்லை; சண்டையிட வேண்டிய அவசியமும் , அதிகப் பணம் பிடுங்கி விடுவார்களோ என்ற பயம் இல்லை. மைசூர் நகரம் முழுவதுமே இந்த முன்பணம் செலுத்தும் முறையில் தான் ஆட்டோ இயங்கிறது என்பது மகிழ்ச்சியாக இருந்தது. எனக்கு மதுரை இரயில் நிலையத்தில் முகப்பில் நின்று கொண்டு பயணிகளை வரவேற்கும்  40 அல்லது 50 ஆட்டோ சகோதரர்களையும் , அவர்களை நிராகரிக்கும் நம்மவர்களும் தான் ஞாபகத்திற்கு வந்தார்கள்.
 
அன்று ஒரு நாள்  மைசூரிலே வேலை இருந்ததால் மறுநாள் தான் ஸ்ரீரங்கபட்டினம் செல்ல வேண்டிய நிலை. மாலையில் சிறிது நேரம் கிடைத்ததால் மைசூர் அரண்மனையை பார்த்து விடலாம் என்று என் மணைவி ஞாபகப்படுத்தினார். மிகவும் சிறந்த வேலைப்பாடுகளுடன், பிரமாண்டமாக கட்டப்பட்டிருந்தது மைசூர் அரண்மனை. உண்மையிலே நன்றாக பராமரித்தும் வருகிறார்கள். அரண்மனையின் பின் பகுதியில் மைசூர் இராஜ வம்சத்தினர் வாழ்ந்த பகுதியும் , அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் மிகவும் நேர்த்தியாக பாதுகாக்கப்பட்டு வருகின்றன. எனக்கென்னவோ , அங்கே பார்த்த மகாராஜாக்களின் ஆடம்பர அணிகலன்கள் , அரண்மனை களியாட்டங்கள்,  வீட்டு உபயோகப் பொருள்கள்  போன்றவைகள் வீழ்ந்து மறைந்த இந்திய சமஸ்தானங்களின் வரலாற்றைக் கூறும் திவான் ஜர்மானி தாஸ் எழுதிய " மகாராஜா" என்ற நூலைத் தான் ஞாபகப்படுத்தியது. இரவு எங்களது தங்கும் விடுதிக்கு திரும்பும் போது மைசூர் அரண்மனையின் பிரமாண்டம் என்னை பிரமிக்க வைத்தது என்றால் அது மிகையில்லை.

அடுத்தநாள் , காலை 10 மணிக்கெல்லாம் தயாராகி விட்டேன். மனம் எப்பொழுது ஸ்ரீரங்கபட்டினம் செல்வோம் என்று எதிர்பார்க்க துவங்கி விட்டது. எங்களது கார் காலை 11:30   மணிக்கு வந்தது. காரில் ஏறி அமர்ந்ததும் மனம் சிட்டாக பறந்து திப்புவின் கோட்டையை நோக்கிச் சென்று விட்டது.



அது அழிவு சின்னம் !!!. 

உருத்தெரியாமல் அழிக்கப்பட்டு எச்சங்களே மிஞ்சிப் போன திப்புவின் கோட்டை என்னை வரவேற்றது. அந்த நொடியில் மனம் கல்லாக இறுகிப் போனது. தண்ணீரற்ற அகழியை  முதலில் கடந்து முன்புற பாதுகாப்பு கோட்டைவாயில்  வழியாக நுழைந்து திப்பு என்ற மாவீரன் வாழ்ந்த இடத்திற்கு சென்றோம்.  முதலில் என் மணைவியின் வேண்டுகோளுக்கிணங்க ஸ்ரீரங்கநாதர் கோவிலை வேண்டாவெறுப்பாக சுற்றிவிட்டு , திப்புவின் நினைவிடத்திற்கு செல்லுவோம் எனது ஓட்டுனரிடம் கூறினேன். மனமும் கண்களும் , திப்பு இறுதியாகப் போரிட்ட "நீர்வாயில்" (WATER GATE) எங்கே என்று தேடியது. எங்களது கார் நீர்வாயிலை நோக்கி மெதுவாகச் சென்றது . அங்கே இருவர் அமர்ந்து தேநீர் அருந்தி கொண்டிருந்தார்கள். இப்போது நீர்வாயிலைப் பார்க்க பார்வையாளர்கள் அனுதிக்கப்படுவதில்லை  என்று ஓட்டுனர் தெரிவித்தார். அதனால் வெளியில் நின்று பார்க்க சிறிது நேரம் வண்டியை நிறுத்துமாறு கூறினேன்.

எனது கண்கள் நீர்வாயிலை நோக்கின; அங்கே துரோகியாக மாறிவிட்ட நிதி மந்திரி  மீர்சதிக்கினால் திறந்து விடப்பட்ட நீர் வாயில் வழியாக நுழைந்த  ஆயிரக்கணக்கான ஆங்கிலேயர்களை எதிர்த்து திப்பு போரிட்டுக் கொண்டிருப்பது எனக்குத் தெரிந்தது. கண்களில் கனல் தெறிக்க எதிர்பட்ட வெள்ளையர்களை வெட்டி வீழ்த்திக் கொண்டேயிருந்தான். கைகள் ஓயும்வரை வெட்டினான். எங்கும் பிணக்குவியல்கள் . அவனுக்கும் உடலெங்கும் இரத்தக்காயங்கள் , எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக்குண்டுகள் திப்புவின் கழுத்திலும் தலையிலும் பாய்ந்தன. அவனது கையில் இருந்த கத்தி நான்கு புறமும் சுழல்கிறது. என் கண்கள் முன்னாலேயே அவனது உடல் மெதுவாக சாய்கிறது.  நீர்வாயிலைச் சுற்றி நடந்த அந்தப் போரில் தனது 11000 வீரர்களுடன் சேர்ந்து எதிரிகள், தனது சகோதரர்கள் என்று பல உய்ரற்ற உடல்களுக்குள் சாய்ந்தான் விடுதலைப்போரின் விடிவெள்ளி மாவீரன் திப்பு சுல்தான்.

அந்த நாள் 04-05-1799. இந்தியாவில் சுதந்திரம், சமத்துவம் , சகோதரத்துவம் என்பதை  முதலில் வெளிப்படுத்திய அம்மாவீரனின் சகாப்தம் நிறைவிற்கு வந்தது. வாழ்நாள் முழுவதும் தனது நாட்டு மக்களின் நல்வாழ்விற்க்காகவே  வாழ்ந்தும் , ஜாதி மதமற்ற ஒரு சமுதாயத்தை நிறுவ நினைத்த  ஒரு மாமனிதனின் கனவு அங்கே முறிந்து கிடந்தது.

அவனது உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்ட இடம் இப்போது வரலாறாகிப் போனது. அந்த சிறிய நினைவுத் தூணிற்கு முன்பு நான் மௌனமாக நின்றபோது மானசீகமாக அவனை நினைவு கூர்ந்தேன். ஸ்ரீரங்கபட்டினம்  வீழ்ந்த அந்த கொடிய இரவு மனதில் காயத்தை ஏற்படுத்தியது. எனது காலங்கடந்த நன்றி எனக்கு குற்ற மனப்பான்மையை தந்தது. நான் திரும்பும் போதும் வானம் இன்னமும் நீர்த் தாரைகளைப் ஸ்ரீரங்கபட்டினம் முழுவதும் பொலிந்து கொண்டுதான் இருந்தன.

இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் ஸ்ரீரங்கபட்டினம் வீழ்ந்த அன்று இரவு முழுவதும் கடும்மழை பெய்தது என்று வரலாற்றுக் குறிப்பு தெரிவிக்கிறது.

வாசிப்போர்களம் சார்பாக: சு.கருப்பையா.



Thursday, 14 May 2015

வாசிப்போர் களம் கூட்டம் - 08/05/2015

வாசிப்போர் களம் அமைப்பின் இந்த மாத கூட்டம், கடந்த வெள்ளியன்று (08/05/2015) மாலை நடைபெற்றது. தோழர் கருப்பையா அவர்கள், இராமாயணத்திலுள்ள பெண் கதாபாத்திரங்களை மையமாகக் கொண்ட மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பான “மீட்சி” புத்தகத்தையும், தோழர் சங்கையா அவர்கள் ஜான் பெர்க்கின்ஸ் எழுதிய “ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம்” மொழிபெயர்ப்பு புத்தகத்தையும் உறுப்பினர்களிடம் அறிமுகம் செய்து வைத்து பேசினார்கள். சுருக்கமாகவும், அதே நேரம் புத்தகத்தை வாசிக்கத் தூண்டும் வகையிலும் சுவாரஸ்யமாக அமைந்திருந்தது இருவரின் உரையும். தோழர்களுக்கு வாழ்த்துகள் !. 

மேலும் கூட்டத்தில் நடந்த விவாதத்தில், திருமலை நாயக்கர் மன்னர் ஆட்சிக்காலத்தில் சித்திரை மாதத்தில் மதுரையில் சித்திரைத்திருவிழா எவ்வாறு பெருநிகழ்வாக உருப்பெற்றது என்ற தகவல்  பரிமாற்றம் சுவையானதாக இருந்தது. மதுரை மாநகரிலுள்ள மக்களிடம் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் பொருட்டு பிரபலப்படுத்தப்பட்டது தான் “அழகர் ஆற்றில் இறங்கும் விழா”. சுற்று வட்டாரத்திலிருக்கும் கிராம மக்கள் வண்டி கட்டிக் கொண்டு மதுரைக்கு வந்து, சில நாட்கள் தங்கியிருந்து சாமி தரிசனம் செய்து செல்வது சித்திரைத் திருவிழாவின் முக்கிய அம்சம். பலர் அழகர் கோவிலில் இருந்து அழகர் கிளம்பி, வைகை ஆற்றில் இருங்கி, பின் திரும்பி அழகர் கோவிலுக்கு செல்வது வரை சாமி கூடவே பயணம் செய்த பின்னே தங்கள் கிராமங்களுக்குத் திரும்புவர். அந்த நேரங்களில் மதுரை நகரம், சுற்றியுள்ள ஊர்களுக்கு மிகப்பெரிய வியாபார ஸ்தலமாக இருக்கும். முதலில் தேணூர் கிராமத்தில் தை மாதத்தில் தான் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நடைபெற்றது. திருமலை நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தான் அந்த நிகழ்வை, விவசாயிகள் ஓய்வாக இருக்கும் சித்திரை மாதத்தில், சுற்றியுள்ள ஊர்களில் இருந்து மக்கள் வந்து செல்ல வசதியான பெரிய ஊரான மதுரையில் “சித்திரைத் திருவிழாவாக” மாற்றி அமைத்துள்ளனர். இன்றும் சித்திரைத் திருவிழா என்பது மதுரை மக்களுக்கு ஒரு விழா மட்டுமல்ல, மிகப்பெரிய உள்ளூர் வர்த்தகத்துக்கான தளம்.  

வாசிப்போர் களம் சார்பாக வெளியிடப்பட்ட முதல் நூலான, தோழர் சங்கையா எழுதிய “இலண்டன், ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” நூலுக்கு தமிழக அரசின் விருது கிடைத்திருப்பது குறித்த மகிழ்ச்சியையும் நண்பர்கள் பகிர்ந்து கொண்டார்கள். மேலும் புனைவு சார்ந்த நூல்கள் மட்டுமல்லாது அறிவியல், சட்டம், பொது அறிவு தொடர்பான நூல்களைய் பற்றிய விவாதங்களையும் இனிவரும் காலங்களில் மேற்கொள்ளலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது. வாசிக்கும் பழக்கத்தை பரவலாக்க “வாசிப்போர் களம்” மூலமாக இன்னும் சீரிய முயற்சிகளை மேற்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது. விரைவில், வாசிப்போர் களம் அமைப்பை பதிவு செய்வது குறித்த தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதுடன் கூட்டம் நிறைவு பெற்றது.


-- வாசிப்போர் களம் சார்பாக வி.பாலகுமார்

Monday, 4 May 2015

கார்ல் மார்க்ஸ் பிறந்த நாள் !



பிறப்பு: 05-05-1818
இறப்பு: 14-03-1883


Wednesday, 22 April 2015

உலக புத்தக தினம் ஏப்ரல் 23...!

"வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட, அழகான பொருட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை."
-ஹென்றி வார்ட் பீச்சர்.
நன்றி: கீற்று வலைத்தளம்( www.keetru.com)
(எழுத்தாளர்: பேரா.சோ.மோகனா)

புத்தகமும்..உலக புத்தகதினமும்...! 
 நாம் படிக்கத் தெரிந்த காலம் முதல் புத்தகம் படிக்கிறோம்..! புத்தகம் என்பது ஒரு காலத்தின் வரலாறு. வரலாறு எழுத்துக்கள் மூலம் பதிவு செயப்படுகிறது. புத்தகங்களை சேமிக்கும் இடத்தை நூலகம் என்கிறோம். உளவியல் வல்லுனர்கள் குழந்தைகளுக்குப் பேசத் தெரியாவிட்டாலும் கூட புத்தகம் படித்துக் கட்ட வேண்டும் என்று கூறுகின்றனர். அதனால் அவர்களின் மூளை வளர்ச்சியும், அறிவுத்திறனும், முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர். எப்படியாயினும் புத்தக படிப்பை ஊக்குவிக்க, சில சமயம் ஒரு தூண்டுதல் தேவையாயிருக்கிறது. புத்தகத்தின் தேடலுக்கு, வாசிப்பு ருசிக்கு யாரோ ஒருவர் தூண்டலாக இருந்திருக்கின்றனர். யுனெஸ்கோ (UNESCO) என்ற உலக கல்வி நிறுவன அமைப்பும் கூட, மக்களிடையே புத்தகங்கள் படிக்கும் வழக்கத்தை ஊக்குவிக்கவும், அதற்காக அதிக புத்தகங்களை வெளியிடவும் முடிவு செய்தது. அதன் அடிப்படையில் 1995 முதல் ஏப்ரல் 23, உலக புத்தக தினம் என்று அறிவிக்கப்படுகிறது. அது முதல் ஏப்ரல் 23 உலக புத்தக் தினமாக உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது.
முதலில் புத்தக தினம் தொடங்கப்பட்டபோது, லண்டனில் பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கு ஒரு பவுண்ட் மதிப்புள்ள அடையாள வில்லை தந்தனர். அதனைக் கொண்டு அவர்கள் எங்கு வேண்டுமானாலும் குழந்தை புத்தகங்கள் வாங்கலாம் . நாமும் கூட அதைப் போல குறைந்த விலையில் குழந்தைகளுக்குகாக புத்தகம் அச்சிட்டு, குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்..
எழுத்தாளர்களின் குறியீடான புத்தக தினம்..!
ஏப்ரல் 23 உலக புத்தக தினமாக உருவானதிற்கு ஓர் அருமையான பின்னணி உண்டு. உலகம் முழுவதும் படிக்கத் தெரிந்த மனிதர்கள் அனைவரும் இந்நாளில் புத்தகத்தையும், அவற்றை உருவாக்கியவர்களையும் மிகுந்த மரியாதை செய்கின்றனர். உலகில் பல இலக்கியவாதிகள் இந்த தினத்தில் பிறந்தும் மறைந்தும் இருக்கின்றனர். முக்கியமாக, உலகின் தலை சிறந்த சோக காவியமான லியர் அரசன், காதல் காவியம் ரோமியோ ஜுலியட்' ஜுலியஸ் சீசர், ஒத்தெல்லோ, மாக்பெத் போன்றவைகளையும், மச் அடோ அபவுட் நத்திங் (Much Ado About Nothing) என்ற நகைச்சுவை நாடகத்தையும் எழுதியவர் தலைசிறந்த இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியர். இவர் பிறந்தது மட்டுமல்ல உலகைவிட்டு மறைந்ததும் ஏப்ரல் 23ல் தான்.
அது போலவே, ஸ்பெயின் நாட்டில் (1923) ஏப்ரல் 23ம் நாள் இறந்த பிகுல்டி செர்வேண்டிசின் நினைவாகவும் புத்தக தினம் கொண்டாடுவதாக சொல்லப் படுகிறது. 1616, ஏப்ரல் 23ம் நாள் உலகின் புகழ் பெற்ற எழுத்தாளர்களான ஷேக்ஸ்பியர், செர்வேண்டிஸ், இன்கா கார்கிலாசோ (William Shakespeare, Miguel de Cervantes, Inca Garcilaso de la Vega ) போன்றோர் இறந்தனர். மாரிஸ் டிரியூன் , ஹால்டோர் லேக்சனஸ், விளாதிமிர் நபொகோவ், ஜோசப் பிலா மற்றும் மானுவல் மெஜியா (Maurice Druon, Haldor K.Laxness, Vladimir Nabokov, Josep Pla and Manuel Mejía Vallejo) போன்ற எழுத்தாளர்களும் இந்த உலகத்தைப் பார்த்த நாள் ஏப்ரல் 23 தான். இவர்களை மரியாதை செய்யும் வகையில், ஒரு குறியீடாக ஏப்ரல் 23ஐ உலகப் புத்தக் தினமாகக் கொண்டாட யுனெஸ்கோ அமைப்பு முடிவு செய்தது. உலகம் முழுவதும் உள்ள இளைஞர்கள் வாசிப்பின் நேசிப்பையும், ருசியையும், இன்பத்தையும் கண்டறிய வேண்டியும், அதன் மூலம் சமூக, கலாச்சார முன்னேற்றம் மற்றும் மனித நேய உணர்வை வென்றெடுத்து, மரியாதை செய்ய வேண்டியும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்க புத்தக தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
வாழ்க்கைப் போராட்டத்தில் வென்ற இலக்கியவாதிகள்..!
 வில்லியம் ஷேக்ஸ்பியரும், ஜான் மில்டனும் ஆங்கில இலக்கியத்தின் இரு கண்களாகப் போற்றப்படுகின்றனர். ஆனால், இவர்களின் இளமைக்காலத்தைப் புரட்டிப் பார்த்தால், கதை வேறு மாதிரி இருக்கிறது. கல்விக் கூடத்தில் சரியாகப் போதனை பெற முடியாமல், சமூக நீதிகளும், சமூக காரணங்களும், இவர்கள் இருவரையும், ஓட ஓட விரட்டி இருக்கின்றன. "கல்வி அனைவருக்குமானது; புத்தகம் பொதுவானது" என துண்டுப் பிரசுரம் கொடுத்ததிற்காக, மில்டன் சிறைச்சாலையை சந்திக்க நேரிட்டது. அவருக்கு இந்த வெளி உலகைக் காண முடியவில்லை. அக உலகின் கண்கள் மட்டுமே அவருக்கு திறந்திருந்தன. இந்த நிலையிலும்,கல்வி மேல், மீளாக் காதல் கொண்டவர் மில்டன். எனவே, சிறைக் கம்பிகளுக்கிடையேயும், மற்றவர் வாசிக்கக் கேட்டு, மேதையானார். உலகப் புகழ் பெற்ற கவிதையான "பாரடைஸ் லாஸ்ட்" (Paradise lost) என்ற அழியா நூலை உருவாக்கினார். இது போலவேதான், வில்லியம் ஷேக்ஸ்பியரும் அரச மொழி என்று போற்றப்பட்ட "லத்தீனை" எதிர்த்து, தனது தாய் மொழியான ஆங்கிலத்தை இலக்கியத்தில் நுழைப்பதற்காகவே பல காவியங்கள் புனைந்தவர். வாசிப்பின் லயிப்பில் மனம் ஈடுபட்டு, தூக்கத்தைத் துறந்தவர்..!
முதல் புத்தகம்..குகையும்..எலும்புகளும்..!
 இன்றைய நவீன அறிவியல் யுகத்தில், வலைத்தளமும், தொலைபேசி, கைபேசிகளும், மின்னஞ்சலும், முக்கியமாக தொலைக்காட்சியும், மக்களின் புத்தகம் படிக்கும் பழக்கத்தை பிடுங்கிவிட்டன; புதைகுழிக்குள் தள்ளிக்கொண்டிருக்கின்றன எனலாம். ஆனால் புத்தகம்தான் நிரந்தரமாய் நிலைத்து நின்று சுவையும், இன்பமும், ரசனையும தரவல்லது. படிப்பதன் ஆழ்ந்த அருமையான சுவை என்பது, வலைத் தளத்தில் நிச்சயமாகக் கிடைக்காது. புத்தகம் என்பது ஒருவரின் சொத்து..! படிக்கப் படிக்க இன்பமும் தேடுதலும் கிடைக்கும். புத்தகம் படிக்காமல் ஒருவர் அறிவாளி ஆகிவிட முடியாது. எழுத்துக்களின் சரித்திரம் மற்றும் வயது தெரியுமா? எழுத்துக்களின் முதல் பதிவு குகைச் சுவர்களிலும், இஷாங்கோ (Ishango) எலும்புகளிலும் தான். இவை , சுமார் 37,000 ஆண்டுகளுக்கு முன்பே நிகழ்ந்து விட்டன. பின்னர் களிமண் கலவைகளிலும், பாப்பிரஸ் மரப்பட்டைகளிலும், ஆட்டின் தோலிலும் எழுதப்பட்டன. அவை அனைத்துமே புத்தகங்கள்தான்..! வரலாற்றுப் பதிவுகள்தான்..!
எழுத்தாளர் தினம்...புத்தக தின வரலாறு ..! 
 ஸ்பெயினிலுள்ள காட்டலோனியா (Catalonia) என்ற ஊரில் 1436ம் ஆண்டில், ஏப்ரல் 23 , செயின்ட் ஜார்ஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அது ரோஜாவின் தினம் என்றும் சொல்லப்படுகிறது. அன்று தன் இதயம் கவர்ந்தவர்களுக்கும், விருப்பமானவர்களுக்கும், மரியாதைக்குரிய பெரியவர்களுக்கும் புத்தகத்துடன் ரோஜாவைப் பகிர்ந்து கொண்டனர். அன்றுதான் உலக இலக்கிய தினமாக கருதப்பட்டு, ஒவ்வொரு புத்தகம் விற்கும்போதும், அதனுடன் ஒரு ரோஜாப் பூவினை அன்பளிப்பாகத் தந்தனராம். அன்று எல்லோரும் புத்தகம் வாங்க வேண்டுமாம். இப்படித்தான் புத்தக தினத்துக்கான கரு, காட்டலோனியாவில் ஏப்ரல் 23ல் உருவானது. அது போல, புத்தக தினத்தில் அனைவரும் புத்தகம் வாங்க வேண்டும் என உறுதிமொழி எடுக்க வேண்டும். உலக புத்தக தினம் & காப்புரிமை தினம் கொண்டாட வேண்டும் என்பதன் வெற்றி என்பது புத்தக எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், ஆசிரியர்கள், நூலகர்கள், தனியார் மற்றும் பொது நிறுவனங்கள், மனித நேயமிக்க தன்னார்வல நிறுவனங்கள், ஊடகங்கள் போன்றவர்களால்தான். இவர்கள் அனைவரும் யுனெஸ்கோ அமைப்பை அணுகி, கேட்டுக் கொண்டதற்காகவே இது உருவாக்கப்பட்டது. மிகுந்த வெற்றியுடன் உலகப் புத்தக தினமும், காப்புரிமை தினமும் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது.
•  "மனிதனின் கண்டுபிடிப்புகளில் மிகச் சிறந்தது புத்தகமே..!" என 20 ம் நூற்றாண்டின் சிறந்த விஞ்ஞானியான ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் கூறியுள்ளார். 

மனித நாகரிக வரலாறு..!
 இந்த பூமி உருவாகி சுமார் 450 கோடி ஆண்டுகள் ஆகின்றன. உயிரினம் சுமார் 350 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவானது. மனித இனத்தின் சரித்திரம் மற்றும் பரிணாமத்தின் வயது 50 இலட்சம் ஆண்டுகள்..! நாம் பல நிலைகளைக் கடந்துதான் இன்று "வெள்ளையும் சொள்ளையுமாக" நாகரீக மனிதர்களாய் பரிணமித்துள்ளோம். ஆதி மனிதன் காடுகளிலும், மலைகளிலும், குகைகளிலும் வாழ்ந்திருக்கிறான். மனித இன பரிணமிப்பில் மூன்று நிகழ்வுகள் உலகைப் புரட்டிப்போட்டு சாதனை படைத்தவை.
1 . ஒலி, மொழியான பரிணமிப்பு சுமார் 2,00,000  ஆண்டுகளுக்கு முன்பு. அனைத்து சமூக விலங்குகளும் (தேனீ முதல் திமிங்கலம் வரை )ஒன்றுடன் ஒன்று தகவல் பரிமாற்றம் நடத்தினாலும், மனித இனம் மட்டுமே மற்ற விலங்குகளிலிருந்து மாறுபட்டு அதனை மொழியாக மாற்றியது.
2. ஒலிகளை, எண்ணங்களைப் பதிவு செய்தல் (சுமார் 40,000 ஆண்டுகளுக்கு முன், எலும்பில் பதிவு& குகைப் பதிவு).
3 . புத்தக உருவாக்கம்.
சக்கரம் சுழலத் துவங்கிய பின்னர்தான், மனித தொழில் நுட்பத்தின் பரிணாமத்தின் முதல் அத்தியாயம் துவங்கியது. ஆனால் அதற்கும் முன்பே, பலப் பல வடிவங்களில் மனிதன் தன கருத்துகளை, எண்ணங்களை பதிவு செய்யத் துவங்கிவிட்டான்..!
உலகின் முதல் நூலகம்..!
இதுவரை கண்டறிந்ததில் உலகின் மிகப் பழமையான முதல் நூலகம் சிரியாவிலுள்ள எப்லா (Ebla) என்ற நகரில்தான் இருந்திருக்கிறது. அங்கு குயூநிபாரம் எழுத்துக்களால் எழுதப்பட்ட சுமார் 20,000 சுட்ட களிமண் (20,000 cuneiform tablets) பலகைகள் கிடைத்திருக்கின்றன. அவற்றின் வயது சுமார் கி.மு. 2250 ஆண்டுகள். அவை சுமேரிய எழுத்து வடிவத்தில் எப்லைட் மொழியில் (Eblaite language)செமிடிக் மற்றும் அக்காடியன் மொழி (Semitic language and closely elated Akkadian) கலந்தது. இப்போது அவை சிரியாவின் அலெப்போ, டாமாஸ்கஸ் & இட்லிப் ,(Syrian museums of Aleppo, Damascus, and Idlib)அருங்காட்சியகத்தில் உள்ளன.

முதல் புத்தகம்/முதல் பேப்பர் பணம்!

பேப்பர் பாரம்பரியமாக சீனாவில் காய்லூன் காலத்தில் கி.பி. 105ல் உருவானது. மல்பரி இலை மற்றும் வேறு சில சணல் கழிவுகளைக் கொண்டு பேப்பர் தயாரித்தனர். பின் கி.பி. 3ம் நூற்றாண்டில்தான் இது எழுத பயன்பட்டது. அங்கு தான் முதன் முதலில் கி.பி. 1000த்தில் முதல் பேப்பர் பணத்தை சீன சங் வம்சம் அச்சடித்தது. 9ம் நூற்றாண்டில், டையமண்ட் சூத்திரங்கள் (Diamond suthra) என்ற 868 சூத்திரங்கள் அடங்கிய முதல் அச்சுப் புத்தகம் உருவாக்கப்பட்டது. ஆனால் இவை எல்லாம் உருவாக்கபடுவதற்கு முன், நம் மூதாதையர்கள் உலகில் நடந்த அனைத்தையும் பாரம்பரியமாக வாய் வழி மரபாகவே தன் சந்ததிகளுக்குக் கதையாகச் சொல்லி வந்தனர்.

உலகின் முதல்..பதிவு..!

குகைகளில் எழுதத் தொடங்கு முன்பே, எலும்புகளில் பதிவு செய்துவிட்டனர். ஆம், ஆனால் முதன் முதலில் இதைச் செய்ததும் ஒரு பெண்ணே என தற்போது தெரிய வந்துள்ளது. அதுதான் உண்மை..!.. பபூன் குரங்கின் கை எலும்பில்தான் அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. பெண்கள், மாதத்தின் நாட்களை, குறியீடாக அந்த எலும்பில் தனது மாதவிடாயை, கருக்காலத்தைக் கணக்கில் கொள்ள, வானில் நிலவு வந்து போகும் காலக் கெடுவுடன் தொடர்புடையதாக குறித்து வைத்துள்ளனர். ஆப்பிரிக்காவின் "லேபோம்பா" (Lebombaஅ) எண்ற இடத்தில் அந்த குறியீடு செய்துள்ள எலும்பு கிடைத்தது. எனவே அதன் பெயரிலே லேபோம்பா எலும்பு என்றே அழைக்கப்பட்டது. அதன் வயது என்ன தெரியுமா? சுமார் 37,000 ஆண்டுகள்.! இந்த எலும்பில் 29 கோடுகள்/பட்டைகள் உள்ளன. அதுபோலவே, இஷாங்கோ என்ற இடத்தில் கிடைத்த எலும்பின் பெயர் "இஷாங்கோ எலும்பு". எலும்பின் நுனியில் அதனை எழுதப் பயன்படுத்திய படிகக் குச்சியும்(crystal) உள்ளது. இதுவும் ஆப்பிரிக்க எரிமலைப்படிவுகளில் கிடைத்துதான். இதன் வயது 20,000 -25,000 ஆண்டுகள். இதில் 3 வரிசைகளில் எண்கள் பற்றி "டாலி( Tally )" குறியீட்டில் பதிவு செய்துள்ளனர் அக்கால பெண்கள்! இதில் 6 மாத சந்திர காலண்டர் பொறிக்கப்பட்டுள்ளது.
 எலும்பில் எழுதிய மனிதன், மலையின் குகைகளில் எழுதினான். பிறகு பாப்பிரஸ் மரபட்டைகள், ஆடு மற்றும் கன்றுகுட்டியின் தோல்கள், மரபட்டைகள், களிமண், மண் ஓடுகள் மற்றும் பேப்பர்கள் என எழுத்தின் பதிவு கொஞ்சம் கொஞ்சமாக பரிணாமம் பெற்றது. இன்று மின்னஞ்சலில், வலைதளத்தில், e-எழுத்தாக மாறியுள்ளது.
காலப் பதிவுகள்..மனிதப்..பரிணாமத்தில்...!

1. கி.மு..2,00,000 -1,00,000  பேச்சு பிறந்தது.
2. 
கி.மு...40,000- …. குகை ஓவியம்/கிறுக்கல்கள்.ஐரோப்பாவில் 
3. 
கி.மு.. 30,000 -6,500 விலங்குகளின் எலும்பில் எழுத்து .பிரான்சில் 
4. 
கி.மு ..5,500 - 4.,500 …எழுத்துப் பதிவின் துவக்கம் ஆப்ரிக்கா 
5. 
கி.மு ..3,500 -3,000 ….. சுமேரியப் படப் பதிவு 
6. 
கி.மு ..3,000 - 2,800 ……எகிப்தின் களிமண் பதிவுகள் 
7. 
எகிப்திய பாப்பிரஸ் எழுத்துக்கள்
8. 
கி.மு ..2,500 .. உலகில் கிழக்குப் பகுதி நோக்கி கியுனிபாரம் எழுத்துக்கள் பரவுதல் 
9. 
கி.மு ..2,500     சிந்துசமவெளி நாகரிகம், எழுத்து மற்றும் படப் பதிவுகள் 
10. 
கி.மு ..2,100    களிமண் எழுத்துக்கள்-எலும்பு எழுத்துக்கள் கண்டுபிடிப்பு 
11. 
கி.மு ..1,500   சீனர்களின் குறியீட்டு எழுத்துப் பதிவு 
12. 
கி.மு ..1,400     உகாரிட் பதிவுகள் 
13. 
கி.மு ..1,100 - 900    தமிழ் நவீன எழுத்துக்கள் 
14. 
கி.மு ..8,00     கிரேக்க நவீன எழுத்துக்கள்
நூலக...பிறப்பு...!
எகிப்தின் அலெக்சாண்டிரியாவில், கி. மு 247ல் உலகின் மிக பெரிய நூலகம் இருந்ததாம். சுமார் 7,00,000 க்கும் மேற்பட்ட ஆட்டுத்தோல் புத்தகங்கள் அங்கு இருந்தனவாம்; 5,000 மாணவர்கள் படித்தனராம். இந்தியாவில் கி.பி. 2ம் நூற்றாண்டில் ஆந்திராவில் நாகர்ஜுன அரசன் உருவாக்கிய நூலகம் "நாகார்ஜுன வித்யா பீடம்". இந்த நூலகத்தில் பல விலங்குகளின் வடிவில் 5 மாடிகளும், 1500 அறைகளும் இருந்தன. கி.பி 7ம் நூற்றாண்டில் 68,700 பனை ஓலை நுல்களும், 36,௦058 பாப்பிரஸ் சுருள் புத்தகங்களும் இருந்தன. நாம் யன் படுத்தும் காகிதத்தை சீனர்கள் கண்டு பிடித்தாலும், புத்தகப் புரட்சியைப் செய்தவர்கள் அரேபியர்கள்தான். முகம்மதியர்களிடமிருந்தே பேப்பர் புத்தக பரிமாணம் துவங்கியது. 8ம் நூற்றாண்டில், மொராக்கோவில் 100 புத்தகக் கடைகள் இருந்தனவாம்.
 தமிழ்நாட்டு நூலக வரலாற்றில் பிதாமன் இராமாமிர்தம் ரங்கநாதன். இவர்தான் "சென்னை மாநிலத்தின் நூலகத் தந்தை" என்று அழைக்கப்பட்டு, மரியாதை செய்யப்படுபவர். 1928 ஜனவரியில் சென்னை நூலக சங்கம் ரங்கநாதனால் உருவாக்கப்பட்டது. 1931ல், அக்டோபர் 21ம் நாள் புதன்கிழமை மாலை 5 மணிக்கு மன்னார்குடிக்கு அருகிலுள்ள மேலவாசலில், நடமாடும் நூலக வண்டிப் பயணம் தொடங்கப்பட்டது. அங்கு 72 கிராமங்களில், 275 பயணங்கள் இந்த வண்டி மூலம் நடத்தப்பட்டது..! இதில் 3,782 புத்தகங்கள், 20,000 தடவைகளுக்கு மேல், மக்களுக்குக் கொடுத்து, திரும்பப் பெறப்பட்டன. ! ஆனால் இன்று அரசுப் பள்ளிகளில் கூட நூலகம் இல்லாத நிலைமை..!
1990களில் இந்தியா முழுவதும் அறிவொளி இயக்கம் என்ற மாபெரும் கல்வி இயக்கம் வந்தது. அதன் தொடர்பாக, கிராமத்து மக்களைப் படிக்க வைக்க, அறிவொளித் தொண்டர்கள் மாட்டுவண்டிகளிலும், சைக்கிளிலும் ஊர் ஊராக புத்தகம் எடுத்துச் சென்று விற்பனை செய்தனர். ஊர்க்கூட்டம் போட்டு புத்தகம் வாசிக்க கற்றுக் கொடுத்தனர் . இப்போதும் கூட அறிவியல் இயக்க உறுப்பினர்கள் உலக புத்தக வாரத்தின்போது, ஊர் ஊராக சைக்கிளில், தெருமுனைகளில் புத்தகம் எடுத்துச் சென்று புத்தக விற்பனை செய்கின்றனர். வாசிப்பின் நேசிப்பை உணர, ஊர்களில் வாசிப்பு முகாம்கள் ஏற்பாடு செய்து, புத்தக வாசிப்பும் செய்கின்றனர். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் ஈரோடு மாவட்டம் தொடர்ந்து வாசிப்பு முகாம்களை, குறிப்பாக குழநதைகள் கல்வி குறித்த்து நடத்திக்கொண்டிருக்கிறது.
மனித நாகரிக வளர்ச்சியின் பதிவு நூலகமே..!
"புத்தகங்கள் வெறும் உயிரற்ற காகிதங்களின் குவியல் அல்ல. அவை அலமாரியில் இருந்து நம்மை வழி நடத்தும் உயிரோடு இருக்கும் மனிதங்கள்" என்றார் அமெரிக்க எழுத்தாளர் கில்பர் ஹையாத். . மனிதன் வரலாற்றுக்குரியவன் ..! நேற்று, இன்று, நாளை என்ற மூன்றும் மனிதனுக்குரியவை. சமூகத்தில் நிலவும் கருத்தாக்கங்கள், நம்பிக்கைகள், சந்தோஷங்கள், சவால்கள், மதிப்பீடுகள், நுணுக்கமான கருத்துக்கள் அனைத்தும் கல்விப் பொருளாக, புத்தகங்களாக மாற வேண்டும்..! காலத்தின் நிகழ்வுகள் உரிய, சரியான முறையில் பதிவு செய்யப்பட வேண்டும். அத்தகைய உள்ளடக்கம் கொண்ட கல்விதான் மக்களை விடுதலை செய்யும்.
  ஹுமாயூன் உல்லாசபுரியாக இருந்த ஷேர் மண்டல் மாளிகையை அரிய நூல்களைக் கொண்ட நூலகமாக மாற்றினார்.
   இந்தியநாட்டின் விடுதலைக்காகப் போராடி தனது 23 வது வயதில் தூக்கிலிடப்பட்ட மாவீரன் பகத் சிங் தூக்குக்கயிறு கழுத்தில் அரங்கேறும் வரை படித்துக்கொண்டே இருந்தான்.
  ஒரு புத்தகத்தைக் காப்பாற்றி அடுத்த தலைமுறைக்கு தருபவனே மனித குலத்தின் உண்மையான விடிவெள்ளி --ஜான் மில்டன்.
  ஒரு புத்தகம் 100 நண்பர்களுக்குச் சமம் ‍ சர் ஐசக் நியூட்டன்.
  துப்பாக்கிகளைவிட பயங்கரமான ஆயுதங்கள் புத்தகங்கள்..மார்ட்டின் லூதர் கிங்.
  ஆட்சி அதிகாரத்தையே உலுக்கிவிடும் பேராற்றல் ஒரு புத்தகத்திற்கு உண்டு.
   "மனிதன் இருப்பு மௌனத்தால் கட்டப்படவில்லை. ! அவன் வார்த்தகளால், செயல்களால், எதிர்வினை தூண்டும் ஆழமான நடவடிக்கைகளால் கட்டமைக்கப்படுகின்றான். "--பாவ்லோ பிரையர்
  உலக நாயகனான சார்லி சாப்ளின், ஒவ்வொரு புதிய படம் நடிக்க ஒப்புக்கொள்ளும்போதும், அதன் முன் பணத்தில் முதல் 100 டாலருக்கு புத்தகம் வாங்குவாராம்.
   "ஒரு புத்தகத்தைத் திறக்கும்போது, உலகினை நோக்கிய ஒரு சன்னலைத் திறக்கிறோம்"...தோழர் சிங்காரவேலர்.
   "வேறு எங்கோ ஒரு அற்புத உலகில் வசிக்க விரும்புவோருக்காக கண்டுபிடிக்கப்பட்டது புத்தகம் மட்டுமே"..மார்க் ட்வைன்
   "ஒரு நல்ல வாசகனைக் கொண்டே, ஒரு நல்ல புத்தகம் அடையாளம் காட்டப் படுகிறது" ஜார்ஜ் பெர்னாட்ஷா
   "ஒருவர் மூளைக்கும் இருக்கும் சிந்தனை மகரந்தங்களை மற்றொரு மூளைக்குள் கொண்டு செல்லும் தேனீக்கள்தான் புத்தகம்" -ஜேம்ஸ் ரஸ்ஸல்
  "ஒரு புத்தகத்தை இரவல் தருபவன் முட்டாள்; அதைத் திருப்பித் தருபவன் அதைவிடப் பெரிய முட்டாள்"..-அரேபியப் பழமொழி.
  என் கல்லறையில் மறக்காமல் எழுதுங்கள், இங்கே ஒரு புத்தகம் உறங்குகிறது என்று- பெட்ரண்ட் ரஸ்ஸல்
  புத்தகங்களும், நூலகங்களும் இல்லாத நாடு சிறைச் சாலைக்கு ஒப்பாகும்..நெப்போலியன்
  மொத்த இறந்த காலத்தின் ஆன்மாவும் வசிக்குமிடம் புத்தகம்..தாமஸ் கார்லைல்
  வாசிப்பின் வாசங்களை குழந்தைகளுக்குத் திறந்து கொடுக்கத் தெரிந்த பெற்றோரே வரம் பெற்றோர்
   ஒரு நூலகத்தின் கதவு திறக்கப்படும்போது ஒரு சிறைச் சாலையின் கதவு மூடப்படுகிறது...பைபிள்
 அனைவரும் மூளையை உரசிப் பார்க்கும் புத்தகங்களை வாங்குங்கள்..!
 
குழந்தைகள், நண்பர்கள், நெருங்கியவர்கள் மற்றும் உறவினர்கள் அனைவருக்கும் இன்று புத்தகங்கள் பரிசளியுங்கள்...! 
 நாம் உலகப் புத்தக தினத்தன்று குழந்தைகளையும், பெரியவர்களையும் ஒன்றாகக் கூடி புத்தகம் படிக்க ஏற்பாடு செய்வோம்.

"புத்தகம்தான் சமூக மாற்றத்திற்கான திறவுகோல்..!"


(பின்குறிப்பு: உலக புத்தக தினம் பற்றி எழுதவேண்டும் என்று எண்ணிய வேளையில், இக்கட்டுரையை வாசிக்கும் வாய்ப்பு கீற்று வலைத்தளத்தில் கிடைத்தது. இதை விட சிறப்பாக எழுத முடியாது என்று கருதி அக்கட்டுரையை அப்படியே இங்கே கொடுத்துள்ளேன். கீற்று வலைத்தளத்திற்கும் , கட்டுரை ஆசிரியர் பேரா.சோ.மோகனா அவர்களுக்கும் இதயங்கனிந்த நன்றி.-சு.கருப்பையா)