Saturday, 17 December 2016

இலட்சுமி விலாஸ் அரண்மனை - ஒரு கம்பீரம்

இந்திய மன்னர்களால் உருவாக்கப்படட அரண்மனைகளையும் , கோவில்களையும்கோட்டைகளையும் பார்த்து மகிழ்வதில் எனக்கொரு தனியான ஆவல் உண்டு. அதன் வேலைப்பாடுகளும் , கலைநுட்பமும் , கம்பீரமும் என்னை பெரிதும்  ஈர்ப்பதுண்டு. மனிதகுல வரலாற்றைத் தெரிந்து கொள்வதில் எனக்கு மிகுந்த ஆர்வமுண்டு. அந்த வகையில் ஜெய்ப்பூர், மைசூர், பத்மநாபபுரம், மதுரை (திருமலை) நாயக்கர் மகால் போன்ற அரண்மனைகளையும் ஆம்பர், ஆக்ரா , பதேப்பூர் சிக்ரி , செங்கோட்டை மற்றும் ஸ்ரீரங்கப்பட்டினம் போன்ற கோட்டைகளையும் ஆர்வத்துடன் சென்று பார்த்திருக்கிறேன். அந்த வகையில் குஜராத் மாநிலம் , பரோடா ( தற்போது வதோதரா) நகரில் மராத்திய மன்னர் ஷாயாஜிராவ் கெய்க்வாட் அவர்களால் கட்டப்பட்ட " லட்சுமி விலாஸ் அரண்மனை " நீண்டநாட்களாக பார்க்கப்படாத பட்டியலில் இருந்தது.





நான் இந்த அரண்மணையைப் பார்க்க விரும்பியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவது காரணம் மன்னர் ஷாயாஜிராவ் கெய்க்வாட் (1875-1939) சமூகத்தையும் , கலைகளையும் நேசித்த நல்ல மனிதர் என்பது ஒன்று. அடுத்து , அவர் தான் அண்ணல் அம்பேத்கர் அவர்களுக்கு கல்வி உதவிப் பணம் கொடுத்து அமேரிக்கா சென்று படிக்க உதவினார் என்பது மற்றொரு காரணம். அதற்கான வாய்ப்பு எனக்குக் கடந்த10/12/2016  ந்தேதி தான் கிடைத்ததுநான் கண்டு களித்ததையும் , கேட்டு அறிந்ததையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.

இந்த பிரமாண்டமான அரண்மனை,  மராத்திய அரச பரம்பரையைச் (1721-1947) சேர்ந்த  மன்னர் ஷாயாஜிராவ் கெய்க்வாட் அவர்களால் கி.பி. 1890  இல் , சுமார் 700 ஏக்கர் நிலப்பரப்பில் கட்டப்பட்டுள்ளது.  இங்கிலாந்தின் பிரபலமான  பக்கிங்காம் அரண்மனையை   விட நான்கு மடங்கு பெரியது. இதைக் கட்டிமுடிக்க ஏறத்தாழ 12 ஆண்டுகளும்,  1,28,000 /- பவுண்டுகளும் செலவாகியுள்ளது (இந்திய மதிப்பில் ரூபாய் 76,80,000)  . மேஜர்.சார்லஸ் மாண்ட் என்ற வெள்ளைக்கார அதிகாரியால் வரைபடம் தயாரிக்கப்பட்டு  இந்த அரண்மனை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதன் தற்போதைய மதிப்பு ரூ. 20,000/- கோடி என்று குறிப்புகள் கூறுகின்றன.





அரண்மனையின் எல்லைக்குள் நுழைந்தவுடன்  கண்ணுக்கு எட்டியதூரம் வரை தெரிந்த பச்சைப் பசேலென்று பறந்து விரிந்த   புல்வெளிகளும் , மரங்களும் கண்களுக்கு மிகவும்  அழகாகத் தெரிந்தது. அந்த பரந்த புல்வெளிகளில் பல கோல்ப் மைதானங்கள் அமைக்கப்பட்டிருந்தது. பல விளையாட்டு வீரர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இங்கு வந்து கோல்ப் விளையாடிக் செல்வதாக தகவல் கிடைத்தது. அரண்மனையைச் சுற்றிப் பார்ப்பதற்கு நுழைவுக் கட்டணமாக  ரூ, 225 /- ( வெளிநாட்டவருக்கு ரூ.400 /- ) செலுத்தும் போது கொஞ்சம் அதிகம் என்று தோன்றியது . ஆனால் அரண்மனையைப்  பற்றிய குறிப்புகள் அடங்கிய ஒலி அமைவு கருவி ( AUDIO USB) தருகிறார்கள். அது இந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் ஆங்கிலம் என்ற நான்கு மொழிகளில் தனித்தனியாக உள்ளது. விரும்பிய மொழியை நாம் தேர்வு செய்து கொள்ளலாம். அநேகமாக இத்தகைய வசதியை இங்கு தான் முதன் முதலாகப் பார்க்கிறேன். மிகவும் பயனுள்ளதாக இருந்தது. அரண்மணையைப் பார்த்து விட்டு திரும்பும் போது அதை வாங்கிய இடத்தில் திரும்பவும் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அரண்மனையின் உட்பகுதிகளை படம் பிடிக்கவோ அல்லது போட்டோ எடுக்கவோ அனுமதி இல்லை.

அரண்மனையின் உள்ளே பார்ப்பதற்கென்று அதன் நுழைவுப் பகுதி, மயிலாசனப்பகுதி, மாடிப்படிக்கட்டு, வரவேற்பறை , போர்க்கருக்கருவிகள் அறை, மன்னரின் அரசவை , பொது மக்களை சந்திக்கும் அரங்கு என்று மொத்தம் பதினோரு பகுதிகள் உள்ளன. மிகவும் வேலைப்பாடுகள் நிறைந்த கலைப் பொக்கிஷங்கள் , ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் போன்ற பொருள்கள்  அனைத்தும் மிகவும் கவனத்துடனும் அழகாகவும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக இராணுவப் போர்த்தளவாடங்கள் அனைத்தும் அதற்குரிய குறிப்புகளுடன் மிகவும் நேர்த்தியாக வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும்  நம் கையில் கொடுப்பட்டிருக்கும் ஒலிஅமைவு கருவி மூலம் அந்தந்த பகுதிக்கான விளக்கத்தைத் தெரிந்து கொள்ளலாம். அநேகமாக மராத்திய மன்னர்கள் பயன்படுத்திய வாட்கள், கேடயங்கள் , கட்டாரி, வேல் மற்றும் துப்பாக்கிகள் அனைத்தும் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது என்று கருதுகிறேன்,முகலாயத் தளபதி அப்சல்கானைக் கொல்ல மாவீரன் சத்ரபதி சிவாஜி பயன்படுத்திய உண்மையான ஆயுதமான " புலிநகம்" இங்கே தான் வைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்ததும் அந்த வரலாற்று  நிகழ்ச்சி  என் மனக்கண்ணில் தோன்றியதை நான் இங்கே குறிப்பிட்டுத்தான் ஆக வேண்டும்.





மன்னரின் தர்பார் அறை சதுர வடிவில்  அடக்கமாகவும் , நேர்த்தியாகவும் இருந்தது. மயில் வடிவில் செதுக்கப்பட்டிருந்த குடையின் கீழே அவரது பஞ்சு மெத்தையிலான ஆசனம் இருந்தது. சுவரில் மன்னரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின்  ஓவியங்களும் , அவரது பட்டமேற்பு நிகழ்வும் அழகாக வரையப்பட்டிருந்தது. நான் சிறு வயதிலிருந்து பார்த்து ரசித்து வந்திருந்த அழகான வெள்ளை நிறத்திலானஇலட்சுமிமற்றும்சரஸ்வதிஓவியங்கள் இங்கு தான் பொருத்தப்பட்டிருந்தது. உண்மையில் கொள்ளை அழகு. இவை எல்லாம் ராஜா ரவிவர்மாவின் ஓவியங்கள் என்று தெரிய வந்தது. இந்த அறைக்குள் செல்லும் போது மட்டும் நாம் காலணிகளை கழட்டிவிட்டுச் செல்ல வேண்டும் ; இது மன்னருக்கு நாம் செய்யும் மரியாதையாகக் கருதப்படுகிறது.


அடுத்து, மக்களைச் சந்திக்கும் பொது அரங்கு . செவ்வக வடிவில் அமைந்த  இந்த மிகப் பெரிய அரங்கம், தரைதளத்திலிருந்து மேற்கூரை   வரை  மத்தியில்  தூண்கள் எதுவும் இல்லாமலேயே  இத்தாலிய நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட பளிங்கு கற்களாலும் , பெல்ஜிய நாட்டு அலங்கார விளக்குகள் பொருத்தப்பட்டு பிரமாண்டமாக கட்டப்பட்டிருக்கிறது. அரசகுலப் பெண்கள் அமரும் உப்பரிகைப்பகுதி கண்ணாடியில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களுடன் கண்களை மயக்கின. மராத்திய மன்னர் குலத்தைச் சேர்ந்த மகாராணிகள் , இளவரசிகள் ஆகியோர்களின்  படங்கள்  மற்றும் போட்டோக்களை இங்கு தான் பார்வைக்கு வைத்திருக்கிறார்கள். கி.பி. 1940 இல் இந்த அரங்கில் தான் இந்தியாவின் முதல் இசை கச்சேரி நடைபெற்றதாக குறிப்புகள் தெரிவிக்கின்றன.


இந்த அரண்மனைக்கு ஏன் " இலட்சுமி விலாஸ் அரண்மனை " என்று பெயர் வந்தது என்று ஆராயும் போது மிகவும் சுவாரசியமான தகவல்கள் கிடைத்தன. மன்னர் ஷாயாஜிராவ் கெய்க்வாட் அவர்களின் முதல் மனைவி ராணி சிம்னாபாய்-I. ( 1864-1884) அவர்கள் இளம் வயதிலேயே காசநோயால் இறந்து விட்டார். அவரது மூன்றாவது மனைவி (இரண்டாவது என்று சில குறிப்புகள் தெரிவிக்கிறது) தான் இராணி இலட்சுமிபாய் ( 1864-1958) . மிகவும் நல்ல குணம் படைத்தவராகவும்  அதே சமயத்தில் அழகாகவும்  இருந்திருக்கிறார். இவரே ராணி சிம்னாபாய்-II என்றும் அழைக்கப்படுகிறார். இவர்களுக்கு நிறைய குழந்தைகள் பிறந்திருக்கின்றன ( சரியான கணக்கு கிடைக்கவில்லை). அந்த அளவிற்கு மன்னர் இவரை விரும்பியிருக்கிறார்!. இராணி இலட்சுமிபாய் சமூக சேவையில் மிகவும் நாட்டமுள்ளவர். அந்தக் காலத்தில் வழக்கத்தில் இருந்த சிறுமிகள் திருமணத்திற்கு எதிராகவும்  மற்றும் பெண்களுக்கு கல்வி கற்பிக்க  வேண்டும் என்று பிடிவாதமாகவும் இருந்திருக்கிறார்கி.பி 1927 இல் இந்தியாவில் நடைபெற்ற முதல் அகில இந்திய பெண்கள் மாநாடு (AIWC) இவர் தலைமையில் தான் நடைபெற்றது என்பது சுவாரசியமான தகவல். ஆக, மனைவியின் மேல் கொண்ட அன்பினால் முகலாய மன்னர் ஷாஜகான் கட்டிய " தாஜ்மகாலுக்கு " இணையாகத்  தான்   மன்னர் ஷாயாஜிராவ் கெய்க்வாட் இந்த அரண்மனையை காட்டியிருக்கலாம் என்று கருதலாம்!.



இந்த அரண்மனையோடு  இணைந்த மற்ற மாளிகை பகுதியில் தான் மன்னர் ஷாயாஜிராவ் கெய்க்வாட் அவர்களின் தற்போதைய வாரிசுகள் வாழ்ந்து வருகிறார்கள். மன்னர் குல வாரிசும் , முன்னாள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சிங் கெய்க்வாட் அவர்கள் (1938-2012) கடந்த 09/05/2012 ந்தேதி தான் இறந்திருக்கிறார். தற்போது அவரது  தம்பி சாம்ராஜ்சிங் கெய்க்வாட் அவர்கள் தான் தற்போது  குடும்ப நிர்வாகத்தை தலைமை ஏற்று நடத்தி வருகிறார்இவர்களுக்கும் , இவர்களது மாமா சங்கராம் சிங் வாரிசுகளுக்கும் இடையே நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த சொத்து தகராறு வழக்கு கடந்த 2013 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. ஒரு வழியாக அரண்மனை அமைதியாக செயல் படுகிறது.

இந்த அரண்மனை மைசூர் , ஜெய்ப்பூர் அரண்மனைகள் போன்று அலங்காரத்துடனும் , பகட்டுடனும் கட்டப்படாவிடினும் மிகவும் கலைநுட்பத்துடன் கட்டப்பட்டுள்ளது என்பது உண்மை. இதில் ஒரு  கம்பீரம் தெரிந்தது. அது என்னைப் பெரிதும்  கவர்ந்தது. இருந்தாலும் இது ஆண்டான் அடிமைச்சமூகத்தின் அடையாளச்சின்னம் என்பதையும் நான் மறக்கவில்லை.  இந்த அரண்மனைக்குள் எத்தனை ரகசியங்கள் புதைந்து கிடக்கிறது என்பதையும் கணக்கிடமுடியாது.  எல்லாவற்றையும் விட அம்பேத்கர் என்ற ஒரு மாபெரும் மனிதனை   , புரட்சியாளனை உலகமெல்லாம் தெரிந்திட காரணமாக இருந்த மன்னர் ஷாயாஜிராவ் கெய்க்வாட் அவர்கள் வாழ்ந்த இந்த மாளிகை என் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.

சு.கருப்பையா

பின் குறிப்பு:


இந்த அரண்மனையைக் காண்பதற்கு எனக்கு உதவி செய்த எனது நண்பர் R.J. படேல் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறு வயதிலிருந்தே இந்த நகரத்தில்  வாழ்ந்து வரும் அவர் இப்போது தான் முதல் முதலாக " இலட்சுமி விலாஸ் அரண்மனையை" பார்க்கிறேன் என்று வெட்கத்துடன் கூறியது சுவாரசியமாக இருந்தது.  

No comments:

Post a Comment