Wednesday, 2 November 2016

மௌனத்தின் சாட்சியங்கள்

மௌனத்தின் சாட்சியங்கள்
சம்சுதீன் ஹீரா
பொன்னுலகம் பதிப்பகம்
விலை ரூ.350






1999 ஆம் ஆண்டு கோவையில் நடந்த மதமோதலின் இரத்தக்கறை படிந்த வரலாற்றை பதிவு செய்து ஆவணப் படுத்தப்பட்டுள்ள நாவல் இது. இந்து மற்றும் இஸ்லாமிய மதங்களின் தீவிரவாதக் குழுக்களின் உருவாக்கத்தையும் அதன் செயல்பாட்டையும்  எந்தவித மிகையும் இன்றி இயல்பாக பதிவு செய்திருக்கிறது இந்நூல். ஏறத்தாழ 60 உயிர்களை பறித்த அந்தக் கொடூரமான கோவை சம்பவத்தை (கலவரத்தை) அந்நிகழ்வில் பாதிக்கப்பட்ட " யாசர்"  என்ற பாத்திரத்தின் வாயிலாக சொல்ல வைத்திருக்கிறார் சம்சுதீன் ஹீரா.

மதவாத இயக்கங்கள் , அது இந்துமதமாகட்டும் அல்லது இஸ்லாமியமதமாக்கட்டும் அவர்கள் எப்படி அப்பாவி வாலிபர்களை தங்கள் வலையில் சிக்க வைக்கிறார்கள் என்பதை நாவலில் வரும் செந்தில் மற்றும் ஆசிப் மூலமாக நாம் தெரிந்து கொள்ளலாம். அந்தக் கலவரத்தினால் கொடூரமாக கொல்லப்பட்ட அப்பாவிகளின் கூக்குரல் நம் மனதில் பதிந்து இரணவேதனையைத் தருகிறது. இளகிய மனம் படைத்தவர்கள் கண்ணீர்த்துளிகளுக்கிடையே தான் இந்நாவலை படித்து முடித்திட நேரிடும். சமூகத்தை நேசிக்கும் ஒவ்வொருவரும் தவறாமல் வாசிக்க வேண்டிய நூல் இது. 

சந்தனக் கடத்தல் வீரப்பனின் வேட்டையின் போது அழிந்துபோன மலைவாழ்  மக்களின் கதையைச் சொல்லும் ச.பாலமுருகனின்  " சோளகர் தொட்டி"  போல், வெண்மணி வரலாற்றைச் சொல்லும் பாட்டாளியின் " "கீழைத்தீ" போல் இந்த நாவல் அடக்குமுறைக்கு ஆளாகிப்போன விளிம்புநிலை மக்களின் சோகத்தை அவர்களின் இழப்பை  பதிவு செய்துள்ளது. 


ஆனால்கோவை இன்றும் புகைந்து கொண்டு தான் இருக்கிறது என்பது மிகுந்த வேதனைத் தருகிறது. நம் தவறுகளில் இருந்து  பாடம் கற்றுக் கொள்ள நாம் தவறுகிறோம் என்பதையே இது காட்டுகிறது.  இதற்கு மேல் சொல்லுவதற்கு என்ன இருக்கிறது.


சு.கருப்பையா.




No comments:

Post a Comment