Saturday 12 October 2019

இவர் தான் ஸ்டாலின்-நா.வீரபாண்டியன்


நூல் விமர்சனம்:

“இவர் தான் ஸ்டாலின்”

ஆசிரியர்: நா.வீரபாண்டியன்
வெளியீடு: சிந்தன் புக்ஸ் , ஆகஸ்ட்-2019
பக்கங்கள்:  269
விலை : ரூ.250/-





இடது சாரி சிந்தனையை உள்வாங்கி கொண்டவரும்  , BSNL நிறுவனத்தில் அதிகாரியாக இருந்து பணி புரிந்து  ஓய்வு பெற்றவரும் , சிறந்த தொழிற்சங்கத் தலைவருமாக திகழ்ந்த தோழர். நா.வீரபாண்டியன் எழுதிய நூல்  இது. பொதுவாக இடது சாரி கொள்கைகளை கடைபிடிக்கும் ஒரு சாரருக்கு  தோழர். ஸ்டாலின் மீது  கடுமையான விமர்சனம்  உண்டு . தோழர் வீரபாண்டிய னும் அந்த அணியைச் சேர்ந்தவர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தாலும் முடிந்த வரை  நடுநிலையோடு தகவல்களை சொல்ல முயன்று இருக்கிறேன் என்று அவர் தமது முன்னுரையில் கூறியிருப்பது மிகவும் ஆறுதலாக இருந்தது. அதனால் நானும் எந்த முன்சார்பு கருத்தில்லாமல் நூலிருக்குள் பயணித்தேன்.

இந்த நூலிற்கு மார்க்சிய அறிஞர் கோவை.ஞானி அவர்கள் அணிந்துரை ( நூல் குறிப்புகள்) எழுதியுள்ளார். ஞானி அவர்கள் ஸ்டாலினை பற்றி முன்னுரையில் கூறியுள்ள பல கருத்துக்களை  என்னால் ஏற்றுக் கொள்ளும்படியாக   இல்லை . குறிப்பாக ஸ்டாலின் , லெனினுக்கு நெருக்கமானவர்களையும், கட்சியின் மையக் குழுவிலும் , இராணுவத்திலும் பணிபுரிந்தவர்களையும் , அக்டோபர் புரட்சியிலும் பங்கெடுத்தவர்களையும் குற்றம் சாட்டி கொன்றொழித்தார் என்று குருசேவ் தமது ரகசிய அறிக்கையில் கூறியுள்ளதை முக்கியத்துவம் கொடுத்து பதிவு செய்திருக்கிறார். குருசேவ் , ஸ்டாலின் உயிரோடு இருந்தவரை நம்பிக்கையோடு நடந்து விட்டு அவர் இறந்த பிறகு குற்றம் சுமத்திய மனிதர். அது மட்டுமல்லாமல் , ஸ்டாலின் காலத்தில் ஒரு வேளை லெனின் உயிரோடு இருந்திருந்தால் அவரும் ஒரு குற்றவாளி ஆக்கிக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது  என்று அவர் எழுதியிருப்பதை இரசிக்க முடியவில்லை (பக்கம் 18-19 ) . ஸ்டாலின் மீது அவ்வளவு ஞானிக்கு வெறுப்பு. அவர் என்னதான் ஸ்டாலினின் திறமையை மதிப்பதாக எழுதியிருந்தாலும் , அவரை கடுமையாக வெறுக்கிறார் என்பதை அவரின் முன்னுரையிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது. முன்னுரையின் இறுதியில் , "ஸ்டாலின் இல்லையென்றால் லெனின் பற்றிக்கூட நாம் பேசியிருக்க முடியாது . ஓர் எதிர்மறை உதாரணம் என்றும் ஸ்டாலின் பயன்படலாம்" என்று விகடமாக எழுதியிருக்கிறார்.  

வரலாற்றில் மாபெரும் புரட்சிக்காரர்களில் ஒருவராக  தனிப் பெருமையுடன் திகழ்ந்தவர் ஸ்டாலின். மார்க்சிய-லெனினிய கோட்பாடுகளை செவ்வனே கடைபிடித்து சோவியத் ரசியாவை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு சென்றவர். வாழ்ந்த காலத்தில் கடவுளுக்கு நிகராக போற்றப்பட்டு , இறந்த பின்பு “தனிநபர் வழிபாட்டு முறை”யை ( CULT OF PERSONALITY) கொண்டு வந்தவர் என்று அவரது சீடர்களாலும், எதிரிகளாலும், திருத்தல்வாதிகளாலும்  மிக மோசமாக தூற்றப்பட்டவர் ஸ்டாலின்.இருந்தாலும்  ஸ்டாலினைப் பற்றி  தோழர் வீரபாண்டியனின் இந்த நூலில் ஏராளமான விபரங்களுடன் ஏறத்தாழ 22  அத்தியாயங்களில் நேர்மறையாகவே எழுதி  இருக்கிறார். அத்தியாயம் 1  முதல் 16 வரை ஸ்டாலினின் இளமைக்கால வாழ்க்கையிலிருந்து ஆரம்பித்து அரசியல் , சமூக, பொருளாதார மேதையாக  திகழ்ந்தது பற்றியும் ,  சோவியத் ரசியாவின் தலைமை பீடத்தை அலங்கரித்ததையும் மற்றும் இரண்டாம் உலகப் போரின் வெற்றி வீரனாக  மிளிர்ந்து அவர் இறக்கும்  வரையிலான வரலாற்றை சொல்லியிருக்கிறார்.

17 -வது அத்தியாயத்தில்  “போல்ஷ்விக் கட்சியும் , அதிகாரமையமும் -லியான் ட்ராட்ஸ்கி” என்பதைப்பற்றியும் , 18 வது அத்தியாயத்தில் ஸ்டாலின் வரலாற்றை சுருக்கமாகவும் , ஸ்டாலின் எழுதிய நூல்கள் பற்றி 19 வது அத்தியாயத்திலும் ,”  புரட்சி தொடர்கிறது- லெலினிடம் திரும்பச் செல்கிறோம் “ என்று 20 வது அத்தியாயத்திலும் , 21 இல் “ஒவ்வொன்றுக்கும் ஸ்டாலினை குற்றம் சொல்வது, வரலாற்று எளிமைவாதம்” என்ற பகுதியாகவும் , 22 இல் “ஸ்டாலின் -ஸ்டாலினிசம்- ஒரு ஆய்வு” என்ற தலைப்பிலும் விவாத நோக்கத்தில் எழுதி  முடித்திருக்கிறார்.  
ஸ்டாலினைப் பற்றி  தோழர் வீரபாண்டியன் பதிவு செய்திருக்கும் தகவல்கள் ஸ்டாலின் என்ற இரும்பு மனிதனை மேலும் கூடுதலாக  புரிந்து கொள்ள நமக்கு உதவுகிறது. அவர் இந்த நூலில் கையாண்டிருக்கும் யுக்தி சற்று வித்தியாசமாக இருக்கிறது. பொதுவாக ஒரு மனிதனின் வாழ்க்கை வரலாற்றை எழுதும் போது , அவர்களின் பிறப்பிலிருந்து ஆரம்பித்து  கல்வி, திறமை, சாதனைகள் , வெற்றி மற்றும் தோல்வி, புகழ்   மற்றும் இறப்பு வரை நேர்கோட்டில் எழுதுவார்கள். ஆனால் , இந்த நூலில் சோவியத் ரஷியாவில் நடந்த பல்வேறு வரலாற்று சம்பவங்களோடு ஸ்டாலினின் பங்களிப்பை  ஒப்பிட்டு  எழுதியிருப்பது புதுமையாக இருக்கிறது. அவற்றில் சில  முக்கியமான சம்பவங்களை மட்டும் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1.       ஸ்டாலின் 1894 இல், கிறித்துவ மதபோதகராக பயிற்சி பெற டிபிலிஸ்(TIFLIS) இளங்குரு மடத்தில் சேருகிறார். ஆனால் , அங்கே மறைமுக சோஷலிச அமைப்பில் சேருகிறார். அதனால் 1899 இல் மடத்தை விட்டு வெளியேற்றப்படுகிறார். 1901 ஆம் ஆண்டு ருஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சியின் டிபிலிஸ் கமிட்டிக்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். மதகுருவான படிக்கப்போனவர் சோஷலிசவாதியாக மாறினார்.

2.       1905 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்  பின்லாந்தில் நடைபெற்ற போல்ஷ்விக் மாநாட்டில் முதன்முதலாக லெனினை சந்திக்கிறார். லெனின் எளிமை , தன்னடக்கம், ஆரவாரமில்லாத தன்மை போன்றவை ஸ்டாலினை மிகவும் கவர்ந்ததால் , மனித குலத்தின் எளிய மக்களின் புரட்சித் தலைவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று உணர்ந்தேன் என்று ஸ்டாலின் குறிப்பிடுகிறார்.

3.       1906 இல் மார்க்சியத்தை ஆதரித்து "அராஜவாதமா? அல்லது சோஷலிசமா?" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகளை ஸ்டாலின் எழுதுகிறார். மார்க்சிய-லெனினிய சித்தாந்தத்திற்கு இவரால் அளிக்கப்பட முதலும் , முக்கியமான பங்களிப்பு இது

4.       1912 ஆம் ஆண்டு நடந்த போல்ஷ்விக் கட்சியின் 6 வது மாநாடு   தோழர்கள் லெனின், ஸ்டாலின் , ஸ்வர்கலோவ் ஆகியோர்களை மத்தியக் குழு உறுப்பினர்களாக தேர்வு செய்தது. அப்போது மார்க்சிய தத்துவ ஞானத்தில் தேறிய அறிவார்ந்த பிளக்கனேவ் , லியான் ட்ராட்ஸ்கி , காமனேவ், ஜினோவியேவ் மற்றும் ரைகோவ் ஆகியோர்களும் கட்சியில் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

5.       1914  ஆம்  ஆண்டு "மார்க்சியமும் தேசிய இனப்பிரச்சனையும் " என்ற நூலை எழுதுகிறார் ஸ்டாலின் . இந்த நூல் தான் 1917  அக்டோபர்  புரட்சிக்குப் பிறகு போல்ஷ்விக் கட்சியின் அரசாங்கத்தில் தேசிய இன மக்களுக்கான துறையின் அமைச்சர் பொறுப்பை ஸ்டாலினுக்குப் பெற்றுத் தந்தது.

6.       1914 ஜூலை 28 முதல் 1918 நவம்பர் 18  வரை  முதல் உலகப்போர்.

7.       1917  ஆம் ஆண்டு அக்டோபர் 25( நவம்பர் -7) புரட்சி வெற்றி பெற்றது.  சோவியத் ரஷியா என்ற பாட்டாளி வர்க்க அரசு அமைந்தது. லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சி அதிகாரத்திற்கு வந்தது. ஸ்டாலின் தேசிய இன மக்களுக்கான துறையின் அமைச்சர் பொறுப்பை ஏற்றார்.

8.       கடும் முரண்பாடுகளை உண்டாக்கிய பிரச்சனைகளில் ஸ்டாலின் எப்போதும் லெனினுடைய நிலையையே ஆதரித்து வந்தார். எந்தக்காலத்திலும் , எந்தப் பிரச்சனையிலும் லெனினோடு முரண்பாடற்ற நிலையை எடுத்ததும் , இயற்கையாகவே அவரோடு ஒத்துப் போனதும் , லெனினால் கட்சி மூலம் பணிக்கப்பட்ட பெரும் பொறுப்புகளை தலைமேற்க் கொண்டு செய்து வெற்றி கரமாக நிறைவேற்றியதும் , ஸ்டாலினுக்கு கட்சியின் மத்தியிலும் , மக்கள் மத்தியிலும் செல்வாக்கை அதிகரித்தது.

9.       ருஷ்ய போல்ஷ்விக் கட்சியின் மேல்நிலை தலைவர்களுள் சாமானிய மக்களிடையே வாழ்ந்தும், பழகியும். துயர்களில் பகிர்ந்தும், மக்கள் தலைவராய் உருவானவர் ஸ்டாலின் ஒருவரே.

10.    1922 ஆம் ஆண்டில் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலராக தேர்ந்தெடுக்கப்படுதல்.

11.    1924 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 21 ஆம் தேதியன்று லெனின் காலமானார். தோழர் ஸ்டாலின் கீழ் வருமாறு பேசினார். " கம்யூனிஸ்ட்களாகிய நாம் ஒரு தனி அச்சில் வார்க்கப்பட்டவர்கள். பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான போர்த்தந்திர நிபுணன் ஆகிய தோழர். லெனினுடைய படை நாம். இந்தப் படையில் வீரனாக வாழ்வதைவிட உயர்வானதும் , அவரை தலைவராகக் கொண்ட கட்சியின் உறுப்பினர் என்பதை விட மேலானதும் வேறொன்றும் இல்லை".

12.    லெனின் மறைவிற்குப் பின்பு இரண்டாம்  இடத்தில் இருந்த  ட்ராட்ஸ்கியை  பின்னுக்குத் தள்ளி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தார்.

13.    1924 இல் ட்ராட்ஸ்கியஸத்திற்கு எதிராகவும், லெனினியத்தை விளக்கும் பொருட்டும் , ஸ்டாலின் எழுதிய நூல் " லெனினிசத்தின் அடிப்படைகள்" வெளிவருகிறது.

14.    ஸ்டாலினின் ஐந்தாண்டுத் திட்டமும் , கூட்டுப்பண்ணை இயக்கமும் சோவியத் ருஸ்யாவை வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் சென்றது.

15.    சோவியத் மக்களுக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு 1936 ஆகஸ்ட் 23 அன்று ஜினோவியேவ், காமனேவ், சிமிர்னோவ் ஆகியோர் சுட்டுக் கொல்லப்பட்டனர். 1937 ஜனவரி 23 இல் பியாத்தகோவ் , ராடெக், ஜொகால்நிகோவ் , செஸ்ட்ரோவ் மற்றும் 12 பேர்கள் சுட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 1937 மே மாதத்தில் டாம்ஸ்கி தற்கொலை செய்து கொண்டார். 1937 ஜூன் 11 இல் செஞ்சேனையின் தளகர்த்தர்கள் ஏழுபேர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் 1938  மார்ச் 2  அன்று புகாரின், ரைகோவ், கிரஸ்டென்ஸ்க்கி ஆகிய மூவரும் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார்கள். 

1940  ஆகஸ்ட் 20  இல் லெனினுக்கு இணையான அறிவும், அனுபவமும் கொண்ட ட்ராட்ஸ்கி , நாடுகடத்தப்பட்ட நிலையில்  மெக்சிகோவில் தஞ்சமடைந்திருந்தாலும் , சோசலிச அரசை வீழ்த்த சதி செய்ததாக சொல்லப்பட்டு கொல்லப்படுகிறார். மக்களுடைய இந்த விரோதிகளை , தேசத் துரோகிகளை சோவியத் அரசு தயவு தாட்சண்யம் காட்டாது தண்டித்தது என் போல்ஷ்விக் கட்சி வரலாறு கூறுகிறது.

16.    1939  செப்டம்பர் -1 முதல் 1945 செப்டம்பர் -2  வரை இரண்டாவது உலகப்போர் நடந்தது. .

17.    இரண்டாவது உலகப்போரின் வெற்றியின் மூலம் ஸ்டாலின் உலகமே வியக்கும் மாபெரும் மனிதரானார். ஸ்டாலின் என்னும் பெயர் உலகின் மூளை முடுக்கெல்லாம் வாழ்ந்த மக்களால் உச்சரிக்கப்படும் போது தன்னையறியா உணர்வுச் சிலிர்ப்பை ஏற்படுத்தியது. இரண்டாவது உலகப்போரினால் சோவியத் ருஸ்யா மிகவும் மோசமாக பாதிப்படைந்தது. 2  கோடி மக்கள் இறந்தார்கள்; 2 .5  கோடி மக்கள் வீழ்ந்தார்கள்; 1700  நகரங்களும் , 27000  கிராமங்களும் முற்றாக அழிக்கப்பட்டும் , 38000  மைல் நீள இரயில் பாதைகள் தகர்க்கப்பட்டு, நாடே உருமாறிப்போனது. அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இழப்பைவிட நூறு மடங்கு இழப்பை சோவியத் யூனியன் சந்தித்தது.

18.    ஸ்டாலின் மகன் யாக்கோப்பு செம்படையில் கர்னலாகப் பணிபுரிந்தார். இரண்டாம் உலகப்போரில் நாஜிக்களால் சிறைபிடிக்கப்பட்டார். அதேபோல் நாஜிப்படைத் தளபதி பிரடெரிக் பவுலோஸ் சோவியத் படையினால் சிறைபிடிக்கப்பட்டார். ஹிட்லர் அவரை விடுவிக்க , பதிலாக ஸ்டாலின் மகனை விடுதலை செய்ய முன்வந்தார். ஆனால் ஸ்டாலின் மறுத்துவிட்டார். இறுதியில் நாஜிகளின் முகாமில் யாக்கோபு சுடப்பட்டு இறந்தார். ஸ்டாலின் ஊருக்கு மனிதர் என்பதற்கு இதைவிட சான்று எதுவுமில்லை.

19.    தொழில் துறை வளர்ச்சி: இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் சோவியத்தை புனரமைப்பதற்கு மிகுந்த அக்கறை எடுத்தார் ஸ்டாலின். அதனால் ,1949  ஆம் ஆண்டில் போருக்கு முந்தைய நிலையை விட தொழில் துறையில் 41  சதவீத வளர்ச்சி அடைந்தது. 1950  ஆண்டு தொழிற்துறை உற்பத்தி நம்பமுடியாத அளவிற்கு 73  சதவீதத்திற்கு மேல் உயர்ந்தது.

20.    1953  மார்ச் 1  ந் தேதி மூளையில் இரத்தக்குழாய் வெடித்து நினைவிழந்தார்.   மார்ச் 5  ந் தேதி இரவு மரணமடைந்தார். ஸ்டாலின் என்ற ஒரு மாபெரும் மனிதனின் சகாப்தம் நிறைவிற்கு வந்தது.

மேலே குறிப்பிட்ட சம்பவங்கள் ஸ்டாலினின் சிறப்பை விவரிக்கும்  சில உதாரணங்களே! 

திருத்தல்வாதிகளால் ( REVISIONIST) கொடுங்கோலன் , சர்வாதிகாரி என்று கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான  தோழர் ஸ்டாலின் வாழ்ந்த காலம்  சோசலிச ரஷ்யா உருவெடுத்து வளர்ச்சிப் பாதையில் நடைபோட்ட  காலம். ரஷ்யபுரட்சி வெற்றி பெற்ற சில ஆண்டுகளுக்குள் மாமேதை லெனின் மரணமடைந்தார். அவர் மறைவிற்கு பின் ஏழே வயதாகியிருந்த சோசலிச ரஷ்ய குழந்தையை சுற்றிலும் வட்டமிட்ட ஏகாதிபத்திய வல்லூறுகளிடமிருந்து பாதுகாக்க வேண்டிய கடமை ஒருபுறம்; ஏகபோகமாக அனுபவித்து வந்த சுகங்களை இழக்க மனமில்லாமல் எதிர் புரட்சியை ஊக்குவித்து வந்த பெருமுதலாளிகள் மற்றும் நிலப் பிரபுக்கள் கூட்டத்தை வென்றெடுக்க வேண்டிய பொறுப்பு மறுபுறம்; இப்படி சிக்கல்களும், சிரமங்களும் நிறைந்த காலத்தை மனதில் கொண்டு தோழர் ஸ்டாலினின் நடவடிக்கைகளை மதிப்பீடு  செய்ய வேண்டும். மாறாக, ஸ்டாலின் கொடுங்கோலன், தனிமனித வழிபாட்டை விரும்புவர் என்ற கண்ணாடியை அணிந்து கொண்டு பார்த்தால் அவர் குற்றவாளியாகத் தான் தெரிவார்.

தோழர் ஸ்டாலின் தவறுகள் ஒருவேளை செய்திருக்கலாம். ஆனால் , எவர்தான் தவறுகளே செய்யாதவர்?. அதேபோல் ஸ்டாலினும் விமர்சங்களுக்கு அப்பாற்பட்டவரல்ல. ஒரு கம்யூனிஸ்டுக்கு சுயவிமர்சனம் என்பது எவ்வளவு  முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தோழர்களுக்கு எடுத்து காட்டியவர் தான் தோழர் ஸ்டாலின். சுயவிமர்சனம் குறித்து ஸ்டாலின் கூறியது;

”நமது கட்சியின் தொண்டர்களில் பலர் சுயவிமர்சனத்தை விரும்புவதில்லை என்பதை நான் அறிவேன். நமது கட்சியின் உணர்வுக்கு முற்றிலும் மாறுபட்டவர்கள் இவர்கள். சுயவிமர்சனம் என்ற கோசத்தைப் புதிய ஒன்றாக கருத முடியாது. கட்சியின் அடைப்படையாக அது உள்ளது. ஒரு கட்சியால் கம்யூனிஸ்டு கட்சியால் வழி நடத்தப்படும் ‘பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்’ நமது நாட்டில் உள்ளதால் நாம் முன்னேற விரும்பினால் நமது குறைகளை நாமே வெளிப்படுத்தி சரி செய்து கொள்ள வேண்டும். நமது வளர்ச்சியின் மிக முக்கிய உந்து சக்தியாக சுயவிமர்சனம் இருக்க வேண்டும்.

இதையும் தோழர் வீரபாண்டியன் இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். இப்படி சொன்னவர் எப்படி தனிநபர் வழிபாட்டை விரும்பியிருப்பார் என்பதை அவரது விமர்சகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சிந்தியுங்கள்!.

உண்மையைக் கூற வேண்டுமானால் தோழர் வீரபாண்டியன், ஸ்டாலின் பற்றிய ஏராளமான விபரங்களை இந்த நூலில் பதிவு செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.  நிறைகள் அதிகமாக இருந்தாலும் கீழ்காணும் சில குறைகளும் இருப்பதாக  எனக்குத் தெரிகிறது.

1.       சில கால விபரங்கள் தவறாக இருக்கிறது. சில இடங்களில் மாதம் , தேதி உள்ளது ஆனால் வருடமில்லை.

2.       வரலாற்றுச் சம்பவங்கள் காலவரிசைப்படி இல்லை. பல அத்தியாயங்கள் குழப்பத்தைத் தருகிறது.

3.       சித்தாந்த நோக்கில் எழுதப்பட்ட  சில அத்தியாயங்கள்   விறுவிறுப்பாக இல்லை. சராசரி வாசகர்களுக்கு சிரமத்தைத் தரும்.

4.       ஒவ்வொரு அத்தியாயமும் பல வரலாற்று சம்பவங்களைச் சொல்கிறது. புரிந்து கொள்வதில் சிரமம் தெரிகிறது.  

5.       ஸ்டாலினுக்கும் மற்ற உலக நாடுகளுக்குமான இராஜாங்க உறவுகள்  அதிகமாக பதிவு செய்யப்படவில்லை.


மொத்தத்தில் , ஸ்டாலின் என்ற ஒரு ஏழை செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் சோவியத் ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்ததை சோவியத் அறிவாளிகளும் , உலக முதலாளித்துவ அதிகாரமும்  , இந்திய சாதீய அமைப்புக்குள் வாழும் மேல்தட்டு மக்களாலும் ஏற்றுக் கொள்ளமுடியவில்லை என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும் ஸ்டாலினை புறந்தள்ளிவிட்டு உலக வரலாற்றை பேச முடியாது. உலகில் கம்யூனிசம் இருக்கும் வரை மார்க்ஸ்,ஏங்கல்ஸ் மற்றும் லெனினோடு ஸ்டாலினும் பேசப்படுவார். மாபெரும் சோவியத் தேசத்தை காக்கத் தவறிய குருசேவ் முகத்தில் காரி உமிழ்வார்கள்.

இந்த நூல் மூலம் ஸ்டாலினைப் பற்றி மேலும் சில தகவல்களை அறிய செய்த தோழர் வீரபாண்டியனுக்கும் ,  "சிந்தன் புக்ஸ் " வெளியீட்டாளருக்கும் மிகவும் நன்றி. ஆனாலும் இந்த நூல் பட்டை தீட்டப்படாத ஒரு வைரமாக என் கைகளில் இருப்பதாகவே எனக்குத்  தோன்றுகிறது!

சு.கருப்பையா
மதுரை
+919486102431

No comments:

Post a Comment