Monday 23 January 2017

ஜல்லிக்கட்டு-தமிழக மாணவர்களின் புரட்சி.

தமிழர்களின் வீர விளையாட்டான ஏறுதழுவுதல் அல்லது மஞ்சுவிரட்டு அல்லது ஜல்லிக்கட்டு தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக  நடைபெறவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். இந்திய அரசு எருதுகள் அல்லது ஜல்லிக்கட்டுக்கு காளைகளை காட்சிப்படுத்தப்படும் விலங்குகள் பட்டியலில் சேர்த்ததால் , மிருகங்களைப் பாதுகாக்கும் “PETA “ அமைப்பு ( மற்றும் சில அமைப்புகள் உட்பட )ஜல்லிகட்டுக் காளைகள் துன்புறுத்தப்படுகின்றன என்று கூறி வழக்குத் தொடர்ந்ததால்  " ஜல்லிக்கட்டு " நிறுத்தப்பட்டது. இதில் இந்திய காளைகள் , பசுக்களை ஒழித்து , அந்நிய நாட்டின் "ஜெர்சி" இன மாடுகளை புகுத்தி அதன் மூலமாக இந்திய பால் உற்பத்தியை அழிக்க PETA வின்  சதி இருப்பதாக நம்பப்படுகிறது. அதனால் ஜல்லிக்கட்டை நடத்துவதில் தொடர்ந்து முட்டுக்கட்டை இருந்தது; அல்லது நடத்த முடியவில்லை. இருந்தாலும் தமிழக மக்கள் தொடர்ந்து நல்லவர்களாகவே இருந்து வந்தார்கள்.


தமிழத்தின் கலாச்சாரத்தின் மேல் மட்டுமல்லாமல் , வளர்ச்சியின் மீதும்  மத்திய அரசின் தொடர்ந்த  தாக்குதல் இருந்து கொண்டே இருப்பதற்கு கீழ்காணும்  சில உதாரணங்களைப் பார்க்கலாம்:

Ø  இலங்கை தமிழர்கள் அழிக்கப்பட்டதால் இந்தியாவின் பங்கு இருக்கிறது. அழியாத வடு!
Ø  தமிழக மீனவர்கள் , இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படும் போதெல்லாம் இந்திய அரசு தலையிடுவதில்லை. ஊடகங்கள் கூட தமிழக மீனவர்கள் என்று போடுவார்களேயொழிய " இந்திய மீனவர்கள் " என்று சொல்லுவதில்லை.
Ø  தமிழகமே எதிர்த்தாலும் கூடங்குளம் அணுஉலை நிறுவப்பட்டது.
Ø  தாமிரபரணி ஆற்றை  பெப்சி மற்றும் கொக்ககோலா   நிறுவனங்களுக்கு தாரை வார்த்தது.
Ø  நியூட்ரினா திட்டம் தேவாரத்தில் கொண்டுவரப்பட்டது. விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டன.
Ø  தஞ்சை வயல் வெளிகளை அழிக்க "மீத்தேன் வாயுத் திட்டம் " கொண்டுவரப்பட்டது. கடும் எதிர்ப்பிற்குப் பிறகு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Ø  காவிரி நீர் பங்கீட்டில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுவிட்டது . கர்நாடக அரசு உயர்மன்றத்தின் தீர்ப்பை மதிக்கவில்லை. தண்ணீரும் கிடைக்கவில்லை . சுமார் 250௦ விவசாயிகள் தற்கொலையும், மனம் வெதும்பி இறந்தும் விடடார்கள் .
Ø  புயல், மழை , வறட்சி போன்ற   இயற்கைச் சீற்றங்களின் போது தமிழகத்திற்கு மத்திய அரசின் போதுமான உதவி கிடைப்பதில்லை. 

மேற்கண்ட பிரச்சனைகளில் தமிழக அரசும் , மக்களும் சகிப்புத்தன்மையை கடைபிடித்து வந்தார்கள். குறிப்பாக , காவிரி நீர் பிரச்சனைக்காக கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்படட போது தமிழக மக்கள் கூனி குறுகி ஒன்றும் செய்ய இயலாதவராக இருந்தார்கள்.  இதெல்லாம் என்மனதில் தோன்றி பலமுறை அழுதிருக்கிறேன். வந்தவரையெல்லாம்   வாழ வைத்த /வைக்கும்   எம்மக்களுக்கா இந்தக் கதி  ?. அந்தோ பரிதாபம் !!  இதற்கு முடிவே இல்லையா? . தவித்திருக்கிறேன்.

ஏ  தாழ்ந்த தமிழக மக்களே ! நீங்கள் வஞ்சிக்கப்பட்டு விட்டீர்கள் ! எப்போது தான் போராட போகிறீர்கள் ? உங்கள் உரிமையை மீட்டெடுக்க என்ன செய்யப்  போகிறீர்கள்? இது தான் என் கேள்வியாக இருந்தது. கூடவே , நவீன தகவல்  தொழில்நுட்பமான முகநூல் , வாட்ஸஅப் , செல்பி  போன்றவற்றிற்குள் மூழ்கி கிடக்கும் இளம் தலைமுறையின் மீது கடுமையான கோபமும் , ஆழ்ந்த வருத்தமும் இருந்தது. தமிழகத்தில்  சாதீய ஆணவக்கொலைகள் நடக்கும் பொழுது கண்டுகொள்ளாமல் இருப்பது, கண்முன் நடக்கும்  அக்கிரமத்தை தட்டிக் கேட்க்காமல் கடந்து செல்வது, விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயலாமல் போட்டோ எடுத்து வாட்சப்பில் பகிருவது போன்ற செயல்கள் என்னை மிகவும் பாதித்திருக்கிறது. அவர்களை சபித்தும் இருக்கிறேன்!

ஆனால் இன்று.....!!!

என் இளம் தலைமுறையினர்கள் விழித்துக் கொண்டு விட்டார்கள் ! . "ஜல்லிக்கட்டு"  வேண்டும் என்ற ஒற்றைக் கோரிக்கையை முன்வைத்து கடந்த 17-01-17 ந்தேதி முதல் தமிழகமெங்கும்  அமைதி போராட்டம் இல்லை...புரட்சி வெடித்தது. சாதி , மதம் கடந்த ஒற்றுமை . நாடே மிரண்டது! உலகமே பிரமித்தது! 21-01-17 ந்தேதி ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசால் அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டது.  மாபெரும் வெற்றி ! இந்தியாவின் போராட்ட வரலாறு திருத்தி எழுதப்பட்டது.

மனம் மகிழ்ந்தது. ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் கொண்டுவரப்பட்டதற்காக அல்ல!!!

இந்த போராட்டக்களத்தில் ஜல்லிக்கட்டு மட்டும் பேசப்படவில்லை . பி.ஜே.பி அரசின் செல்லாத நோட்டு பேசப்பட்டது. காவிரி நீரை பகிர்ந்தளிக்காத கர்நாடகத்தின்  வஞ்சகம் பேசப்பட்டது. முல்லை பெரியாறு பேசப்பட்டது . கோக் , பெப்சி தூக்கி எறியப்பட்டது. தமிழனின் பண்பாடும் , கலாச்சாரமும் மற்றும் வீரமும் பட்டை தீட்டப்பட்டது. எம்மக்கள் விழித்துக் கொண்டார்கள். இதுவே என் மகிழ்ச்சிக்கான காரணம்!!!

இனி ஊழல் அரசியல்வாதிகள் தூக்கி எறியப்படுவார்கள்! சாதீயம் கடந்த சமுதாயம் என் அகக்கண்களில் தெரிகிறது. புதியபாதையும்  தெரிகிறது....... !

சு.கருப்பையா.
மதுரை.


No comments:

Post a Comment