Sunday, 14 July 2013

சோளகர் தொட்டியும் , முத்திரை கவிதைகளும்

13/07/2013, ந் தேதி நடந்த  வாசிப்போர் களத்தில், "சோளகர் தொட்டி",  'முத்திரை கவிதைகள்" என்ற இரண்டு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன.  அதில் சோளகர் தொட்டியின் கருத்துரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

சோளகர் தொட்டி
ச.பாலமுருகன்
எதிர் வெளியீடு
விலை ரூ.120
பக்கங்கள் 240

சோளகர் தொட்டியின் சுருக்கமான கதை:

சோளகர் தொட்டி , முப்பது சோளகர் குடும்பங்களை உள்ளடக்கிய  ஒரு அழகான மலைக்கிராமம் . கொத்தல்லி அந்தக் கிராமத்தின் சோளகர் குலத்தலைவன். கோல்க்காரன் சென்நெஞ்சா அக்கிராமத்தின் பூசாரி மற்றும் மணிராசன் கோவில் நிர்வாகி. பேதன் நல்ல விவசாயி. அவனுடைய மகன் சிவண்ணா தான்  இந்நாவலின் நாயகன். அவனுடைய மனைவி சின்னத்தாய்; மகன் ரேசன். 

கோல்காரனுக்கும் , பேதனுக்கும்  சீர்காடு என்ற பகுதியில் கொஞ்சம்  நிலம் உண்டு. அவற்றில் ராகி  மற்றும் பயறு வகைகள் பயிரிட்டு வாழ்ந்து வருகிறார்கள். அத்தோடு, மலைத்தேன் எடுத்தல், மூலிகை சேகரித்தல் போன்றவைகள் அவர்களுடைய குலத் தொழிலாக உள்ளது. அதேபோல் கஞ்சா புகைப்பதும் தொட்டியில் உள்ள அனைவருக்கும் கை வந்த கலையாக இருக்கிறது. தொட்டி மக்கள் அந்த வனத்தையும்  அதன் சுற்றுப் பகுதிகளையும்  அவர்களின் சொத்தாக கருதி வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு நாள் கோல்க்காரன் சென்நெஞ்சாவின் மகன்  சிக்குமாதா  தேனெடுக்க வனத்திற்குள் சென்றபோது தன்னை தாக்க வந்த கரடியை கொல்ல நேரிடுகிறது.  அவன் அதைத் தூக்கிக் கொண்டு தொட்டிற்கு வருகிறான். அக்கரடியின் கறியை அக்கிராமமே பகிர்ந்து  கொள்கிறது. மான், முயல் போன்ற சிறிய விலங்குகளை வேட்டையாடி உண்பது தொட்டி மக்களுக்கு புதிதல்ல  என்றாலும்  இக்கரடியைக் கொன்றது பெரிய  பிரச்சினையாகி விடுகிறது. வனக்காவலர்கள் சிக்குமாதாவை கைது செய்து நெய்தலாபுரம் வனக்காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விடுகிறார்கள்.  இதுவே , தொட்டி மக்களின் சீர்குலைந்த வாழ்க்கைக்கு பெரிதும் காரணமாகி விடுகிறது.

தொட்டி மக்கள் சிக்குமாதாவை விடுதலை செய்ய உதவுமாறு அப்பகுதியின் மணியகாரர் மாரப்பாவை வேண்டுகிறார்கள். அவர், தம்முடைய வேலைக்காரன் துரையனை அனுப்புகிறார். துரையன், சிக்குமாதாவை விடுதலை செய்ய ரூ.1000 வனத்துறையினர் கேட்பதாக கூறுகிறான். அவர்கள் மிகவும் மலைத்துப் போய்விடுகிறார்கள். அவ்வளவு தொகையை தொட்டி மக்கள் பார்த்ததுகூட இல்லை. இறுதியாக ரூ.500 கொடுத்து சிக்குமாதாவை விடுதலை செய்ததாக துரையன் கூறுகிறான்.  துரையனுக்கு அத்தொகையை அடுத்த விளைச்சலில் ராகி பயிரிட்டுத் தருவதாக கோல்காரனும், கொத்தல்லியும் உறுதி கூறுகிறார்கள். ஆனால் மழை பொய்த்துப் போவதால் அவர்களால் கடனை செலுத்த இயலாமல் போய்விடுகிறது.  துரையன், மணியக்காரர் மாரப்பாவிடம் முறையிடுகிறான். மாரப்பாவிற்கும் துரையன் மனைவி சாந்தாவிற்கும் கள்ளத்தொடர்பு உண்டு. அந்த இரகசிய உறவைப் பயன்படுத்தி கோல்க்காரனின் நிலத்தை அபகரித்து விடுகிறான் துரையன்.  இதனால் , சோளகரின் தொட்டிப் பகுதியில் துரையன் குடியேறுகிறான்.  வனக்காவலரால் அடித்து நொறுக்கப்பட்ட சிக்குமாதவினால் அவனது நிலத்தை காப்பாற்ற முடியாமல் தவித்து மனக் குழப்பத்திற்கு உள்ளாகிறான். அதன் பிறகு துரையன்பேதனின் நிலத்தையும் மாரப்பாவின் உதவியால் பிடுங்கிக் கொள்கிறான். அதுமட்டுமல்லாமல் தொட்டியின் சீர்காடு முழுவதிற்கும் துரையன் வரி செலுத்துவதாக பதிவு செய்து அவனுக்கே சொந்தமாக்கி விடுகிறான் மாரப்பா. பேதனின் மகன் சிவண்ணாவிற்கும் , துரையனுக்கும் பகை ஏற்படுகிறது.   சிவண்ணா, துரையனை கொல்வதற்கு அரிவாளுடன் செல்கிறான். கைகலப்பு ஏற்பட்டு சிவண்ணா கைது செய்யப்படுகிறான்.  பேதனும் , சிவண்ணாவும் கைது செய்யப்பட்டு ஆசனூர் காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு உள்ளாகிறார்கள். பின்னர் வேதனையில் பேதன் இறக்கிறான்.

நாளடைவில் , துரையன் அப்பகுதியில் நன்றாக வேரூன்றி விடுகிறான். பின்னர் சிக்குமாதாவும் அவனுடன் நட்பை ஏற்படுத்திக்  கொள்கிறான். துரையன் , வனப்பகுதிக்குள் உள்ள சந்தன மரங்களை வெட்ட சிக்குமாதாவை பயன்படுத்திக்கொள்கிறான். வனத்திற்குள் ஒரு நாள் யானையினால் தூக்கி எறியப்பட்டு சிக்குமாதா இறக்க நேரிடுகிறது. சில நாட்கள் கழித்து துரையனும்,  அவனால் காட்டில் வன விலங்கை தடுக்க ஏற்படுத்தி இருந்த மின்சார வேலியில் சிக்கி உயிர் இழக்க நேரிடுகிறது.  அதன் பிறகு , துரையனின் மகன் ராஜுவும்  சந்தன மரக் கடத்தலில் ஈடுபடுகிறான். அவனுக்கு அரசியல்வாதிகளுடன் தொடர்பும் ஏற்படுகிறது.  சந்தனமரம் களவு போவதை அறிந்து கொண்ட வனத்துறையினர் , தொட்டி மக்களின் பலசாலியான வாலிபன் சிவண்ணாவை வனக்காவலுக்கு ரூ.100 சம்பளத்தில் தீக்கண்காணியாக நியமிக்கிறார்கள்.  

இந்த சூழ்நிலையில் பாலப்படுகையைச் சேர்ந்த மாதி என்ற பெண்ணுடன் சிவண்ணாவிற்கு தொடர்பு ஏற்படுகிறது. அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி சித்தி என்ற பெண்ணும் உள்ளது.  இத்தருணத்தில்  தொட்டிக் காட்டுப்பகுதியில் வீரப்பனின்  நடமாட்டம் அதிகமாகி, ஆள் கடத்தலில் முடிவடைகிறது.  தொட்டி மக்களுக்கு வீரப்பனுடன் தொடர்பு இருக்க வேண்டும் என்று சந்தேகம் கொண்டு  தமிழக காவல் துறையினரும் , வனத்துறையினரும் அவர்களை சித்திரவதை செய்கிறார்கள். தொட்டிப் பெண்கள் பாலியியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். ஆறு மாத கர்ப்பிணி ஈரம்மா மூன்று காவலர்களால் சீரழிக்கப்பட்டு கருச்சிதைவுக்கு ஆளாகிறாள். அதேபோல்சிக்கையா  என்பவன் வீரப்பனுக்கு வெடி மருந்து அனுப்புகிறான் என்று சந்தேகம் கொண்டு அவனது மகனையும் மருமகள் மல்லியையும் விசாரணைக்கு அழைத்து சென்று கணவன் முன்னே மல்லியை இன்ஸ்பெக்டர் சிங்கப்பனும் சில போலிஷ்காரர்களும்  வன்புணர்ச்சி கொள்கிறார்கள். சிவண்ணாவின் மனைவி மாதியும், சித்தியும் போலீஸ்  கொட்டடிக்கு அழைக்கப்பட்டு பல காவலர்களால் , பல நாட்கள் கற்பழிக்கப் படுகிறார்கள். தாயின் அருகிலே மகளும் சேர்ந்து வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்படுவது கொடுமையான நிகழ்வாகவும் , மனிதப் பண்பற்ற விலங்குணர்ச்சி மனிதர்கள் வாழும் இப்பூமியில் நாம் வாழ்ந்து வருகிறோம்  என்ற உணர்வே நமக்கு எழும்.   

மேலும் , மாதேஸ்வரன் மலை கொட்டடியில் நிகழும்  பாலியியல் வன்புணர்ச்சியும் , ஓர்க்சாப் என்று அழைக்கப்படும் மின்சார அதிர்ச்சியும் திகைக்க வைக்கிறது. அதுவும் பெண்களின் இரு மார்பகங்களிலும் , பிறப்புறுப்புகளிலும் மின்சார இணைப்பு கொடுத்து அதிர்வை ஏற்படுத்துவது மனித உரிமை மீறலின் உச்சத்தைத் தொடுகிறது. நூலை வாசிக்கும் நமக்கே  கடுமையான அதிர்ச்சியையும் , துன்பத்தையும் தரும் இச்சம்பவங்கள் , இந் நாவலை பதிவு செய்த பாலமுருகனுக்கு எவ்வளவு வேதனையை தந்திருக்கும் என்பதை கற்பனை செய்து கூட பார்க்க இயலவில்லை.


கடைசியாக, சிவண்ணா மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தவுடன்,  பல இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்த சோளகர் தொட்டியில் அமைதி திரும்புகிறது.  ஆனால் நமது மனம் அமைதி இழக்கிறது.

நாவலின் சாராம்சம்:

இந்த நாவல் சோளகர் தொட்டி பழங்குடி மக்களின் தொன்மம், விவசாயம், கடவுள் வழிபாடுநம்பிக்கை மற்றும் வேட்டையாடுதல் போன்ற அவர்களின்  பாசாங்கற்ற இயல்பான வாழ்க்கையை அழகாக காட்டுகிறது .

சோளகர் இன மக்களின் குடும்பவாழ்க்கை , அதாவது  திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண் , அவன் விரும்பிய பெண்ணை காட்டுக்குள் அழைத்து சென்று விடுவது, இறந்துவிட்ட அண்ணன் மனைவியை மறுமணம் செய்து கொள்வது, மனதிற்குப் பிடித்த அடுத்தவர் மனைவியை கவர்ந்து கொள்வது, அதை அவர்கள் இயல்பாக எடுத்துக்கொண்டு அவளுக்கு மணவிலக்கு அளிப்பது போன்றவைகள் மிக நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  

தொட்டி மக்களின் நிலம் இந்நாவலில் வரும்  மணியக்காரர் மாரப்பா மற்றும் துரையன் போன்றவர்களால் அபகரிக்கப்பட்டது  போல் , இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் நடந்து கொண்டு தான் வருகின்றன  என்பதை நமக்கு நினைவூட்டுகின்றன.

அதேபோல் வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில்  சோளகர் தொட்டி, பாலப்படுகை மற்றும்  பூதிப்படுகை போன்ற கிராமங்களில் மிக அமைதியாக வாழ்ந்து வந்த  பழங்குடி மக்களின் மீது போலீசாரால் நடத்தப்பட்டதாக சித்தரிக்கப்படும் வன்கொடுமைகளும் , பாலியல்வல்லுறவும் மிகவும் எதார்த்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சத்திய மங்கலம், ஆசனூர் , நெயதலாபுரம் போலீஸ் மற்றும் வனக்காவல் நிலையங்களிலும் ,    பண்ணாரி மற்றும்  மாதேஸ்வரன் மலை போன்ற போலீஸ் கொட்டடியில்  நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் சித்திரவதைகளையையும், மல்லி, மாதி, சித்தி மற்றும் ஈரம்மா போன்ற பெண்களின் மீது நடத்தப்பட்ட பாலியியல் வன்புணர்ச்சியும்,  ஓர்க்சாப் என்று அழைக்கப்படும் மின்சார அதிர்வைத்தரும் தண்டனைகளையும்  மிகத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார் நாவலாசிரியர். இத்தகைய வன்முறைகளை அரங்கேற்றிய போலீசார் மீது , வாசகனுக்கு மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கி அவனுக்கு அவர்கள் மேல் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தும்.

சந்தனமரக்கடத்தல் வீரப்பனுக்கு  பல கிராம மக்கள் உதவி செய்து வந்தார்கள் என்றும் , அக்கிராம மக்களுக்கு வீரப்பன் பண உதவி செய்து வந்தான் என்று பத்திரிக்கைகளில் பரப்பட்ட அல்லது   நம்பப்பட்ட செய்தி  பொய்யானது என்பதை இந்த நாவல் வெளிக்கொணர்ந்துள்ளது. 

ஒடுக்கப்பட்ட மக்களின்  மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறலை  அழகாக பதிவு செய்ததின் மூலம் தான் ஒரு மனித உரிமை பாதுகாவலாளி என்பதை பதிவு செய்துள்ளார் தோழர்.ச.பாலமுருகன்.

இது போன்ற நாவல்கள்  தான்  சமூக விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.  நான் வாசித்த மிகச் சிறந்த  பத்து நாவல்களுக்குள் " சோளகர் தொட்டி " வருகிறது  என்பதை பதிவு செய்கிறேன்.

மொத்தத்தில் இந்த நாவல் வெளிக்கொணரும் சமூகத்தளமும்அதன் எதார்த்த உண்மைகளும் , ஒடுக்கப்பட்ட மக்களின் மேல்  ஆளும் வர்க்கத்தின் ஒடுக்குமுறையும் , ஆதிக்க மற்றும் சுரண்டல் பேர்வழிகள் நடத்தும் அடக்குமுறையும்,  வாசகனுக்கு மனதில் மிக ஆழமான துன்பதையும் , தாக்கத்தையும் , கோபத்தையும் ஏற்படுத்தும் என்பது நிச்சயம்.

வாசிப்போர் களத்தில்: சு.கருப்பையா.

Friday, 12 July 2013

வாசிப்போர்களம்-14

தோழர்களே!

நமது  இம்மாதக் கூட்டம் 13/07/2013 ந் தேதி மாலை 04-30 மணிக்கு  நாம் சந்திக்கும் வழக்கமான இடத்தில கூடுகிறது.  அனைவரும் தவறாது கலந்து கொள்ளவும்.நல்ல நூல்களின் அறிமுகம் உங்களுக்காக காத்திருக்கிறது.

சு.கருப்பையா
ஒருங்கிணைப்பாளர்


Friday, 14 June 2013

புத்தக வெளியீடு!

தோழர்களே! கடந்த 10/06/2013 ந் தேதி நடைபெற்ற தோழர்.சங்கையாவின் புத்தக வெளியீட்டின் சில காட்சிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 








Monday, 10 June 2013

லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்

“லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” - மு.சங்கையா  - புத்தக வெளியீடு
வரவேற்புரை - வி.பாலகுமார்

"ஒரு பொருள் விற்பனைக்கு வருகிறது. அதற்கென்று ஒரு மதிப்பு இருக்கிறது. ஏனெனில் அந்தப் பொருளை உருவாக்குவதற்கு உண்டான சமூக உழைப்பு என்று ஒன்று இருக்கிறது. வணிக மதிப்பு என்பதைத் தாண்டி அந்தப் பொருளுக்கான உண்மையான ஒப்புமை மதிப்பு என்பது அந்தப் பொருளில் நிறைவாகவோ குறைவாகவோ கலந்திருக்கும் சமூக அக்கறை என்ற சாரம்சத்தைப் பொருத்தே அமைகிறது"

இது பொருள், விலை, லாபம் குறித்து கார்ல் மார்க்ஸ் கூறிய வரிகள். வணிக நோக்கில் தயாரிக்கப்படும் ஒரு பொருளுக்கே சமூக அக்கறை தேவையாய் இருக்கையில், வாழ்வியல் அனுபவத்தையோ, ஒரு பயணத்தின் நிகழ்வுகளையோ, ஏன் ஒரு கதையோ இல்லை புதினமோ எதுவாகினும் அதனைப் படைப்பாக பொதுப்பார்வைக்கு வைக்கும் போது அதற்குள் “சமூக அக்கறை” என்பது எந்த அளவில் கலந்திருக்கிறது என்பதே, அந்தப்படைப்பு காலங்களைத் தாண்டி நிலைத்து நிற்பதற்கான சான்று.

அத்தகைய சமூக அக்கறை கொண்ட ஒரு மனிதரின் நூல் வெளியீட்டு நிகழ்விற்கு வந்திருக்கும் அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள். உலகில் மாற்றம் என்பது மட்டும் தான் சாஸ்தவமானது. ஒரு சிறிய முன்னெடுப்பும், சீரிய முனைப்பும், தொடந்த ஈடுபாடும் எத்தகைய மாற்றங்களையும் கொடுக்கவல்லவை. அவ்வாறான மாற்றங்கள வளர்ச்சிப் பாதையில் ஏற்றங்களைத் தரும் தருணங்கள் மகிழ்விற்குரியன ஆகின்றன. தொலைத் தொடர்புத் துறையில் ஒரு சிறந்த அதிகாரியாக, அர்ப்பணிப்பு உணர்வுமிக்க தொழிற்சங்கத் தலைவராக, மனித உரிமை ஆர்வலராக பொதுவாழ்வில் பல முகங்களைக் கொண்ட நம் தோழர் மு.சங்கையா இன்று எழுத்தாளர் என்ற இன்னொரு புதிய முகத்தையும் பெறுகிறார். இன்று அவரது முதல் நூலான “லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” என்ற படைப்பு வெளியிடப்படும் சிறப்பான நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நூல், ஆசிரியரது லண்டன் பயணக்கட்டுரைகளின் தொகுப்பாக வெளிவந்துள்ளது. இதனை வெறும் பயணக்குறிப்பு என்று சுருக்கி விட முடியாத படி, பிரிட்டன் தேசத்தின் வரலாறையும் லண்டன் நகரின் பாரம்பரியத்தையும் உள்ளடக்கிய ஒரு மிகச்சிறந்த ஆய்வு நூலாகவும், அதே சமயம் படிப்பதற்கு சுவாரஸ்யமாக எளிய நடையில் ஒரு புதினத்தைப் போன்ற கதை சொல்லல் முறையில் மிக நேர்த்தியாகவும் எழுதப்பட்டுள்ளது.

உண்மையில் தனது பணிநிறைவுக் குறிப்பையே கவிதைக்கான நேர்த்தியுடன் செழுமையாக தயார் செய்து ஒரு சிறு கையேடாக வெளியிட்டவர் தோழர் சங்கையா. "பணி ஓய்வு என்பது ஏற்றுக் கொண்ட பணிக்குத் தான். இன்னும் காலம் இருக்கிறது. களம் மாறுகிறது. மிண்டும் மற்றொரு தளத்தில் சந்திப்போம்" என்ற குறிப்புடன் தான் இருந்தது அவரது “விடைபெறுகிறேன்” என்ற பணிஓய்வுக் கையேடு. அந்த சொற்கள் எத்தனை உண்மை மிக்கதாக இருக்கிறது!. சிறந்த வாசிப்பனுபவமும், நுன்பார்வையும், பொதுவுடைமை சிந்தனையும் உள்ள தோழர் சங்கையா அவர்கள் தனது படைப்பை வாசிப்போர் களத்தின் முதல் வெளியீடாக வெளிவர சம்மதித்திருப்பதை “வாசிப்போர் களத்திற்கான” மிகப்பெரிய அங்கீகாரமாகவும் கௌரவமாகவும் கருதுகிறோம்.

தாங்கள் வாசித்த படைப்புகள் பற்றிய ஆக்கப்பூர்வமான விமர்சனத்திற்காகவும், நேர்மறையான விவாதங்களுக்காகவும், பலதரப்பட்ட கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் பி.எஸ்.என்.எல் தோழர்களின் ஒருங்கிணைப்பில் துவங்கப்பட்ட “வாசிப்போர்களம்” அமைப்பு பிறந்த ஒரு வருடத்திற்குள்ளாகவே பதிப்பகமாக வளர்ந்து தனது முதல் வெளியீட்டை நடத்துகிறது. இதன் வளர்ச்சியில் உறுதுணையாக இருக்கும், உரிய நேரத்தில் தக்க ஆலோசனை சொல்லும், கூட்டங்களில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நண்பருக்கும் இணைய வெளியில் கூட்டங்களின் விவாதங்களை, நூல் மதிப்புரைகளை வாசிக்கும், தொடர்ந்து இயங்குவதற்கான உந்துசக்தியை வழங்கும் ஒவ்வொரு வாசகருக்கும், வாசிப்பின் பால் ஆர்வம் கொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் “வாசிப்போர் களம்” சார்ப்பாக சிரம் தாழ்ந்த வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

“லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்” புத்தகத்தின் சில துளிகள்.

1. ”லண்டன் என் கனவில் வராத பிரதேசம். கனவில் வராதது நிஜத்தில் வந்தது காலத்தின் அதிசயம்” - இது தான் இந்தப்புத்தகத்தின் முதல் வரிகள். முதல் வரியில் தொற்றிக் கொள்ளும் சுவாரஸ்யம் நூல் நெடுக காணக்கிடைப்பது நல்ல வாசிப்பனுபவம்.
2. ஆங்கிலம் என்பது நம்மில் பலருக்கு மேட்டுக்குடியினரின், சீமான் சீமாட்டிகளின் மொழி. ஆனால் ஒரு காலத்தில் பிரிட்டனில் “ஆங்கிலம் ஒரு நீச மொழி, குதிரைக்காரன் மொழி” என்று எண்ணப்பட்ட காலங்களும் இருந்தன. அது பற்றிய சுவையான தகவலை புத்தகத்தை வாசிக்கையில் தெரிந்து கொள்ளலாம்
3. வளங்களை, நேரத்தை மிச்சப்படுத்த கடிகாரத்தை ஒரு மணிநேரம் முன்நோக்கி அல்லது பின்நோக்கி நகர்த்தினால் போதும். இது என்ன விளையாட்டு என்கிறீர்களா.. இதற்கான விடையும் புத்தகத்தில் இருக்கிறது.
4. குழந்தை வளர்ப்பில் நிறைய கண்டிப்புகள் கொண்ட நாட்டில் இந்தியப் பெற்றோர்கள் என்ன பாடுபடுகிறார்கள். அவர்களின் மன அழுத்தத்தின் வெளிப்பாடாய் இந்தியாவிற்கு வந்து இறங்கி விமான நிலையத்திலிருந்து வெளிவருவதற்குள் ஏன் குழந்தைகளை மொத்தி எடுத்திறார்கள் என்பதற்கான உளவியல் காரணம் தெரிய வேண்டுமா.. இந்த புத்தகத்தை வாசியுங்கள்
5. லண்டன் டவர் அரண்மனை என்று சொன்னவுடன் நமக்குத் தோன்றுவது என்ன... மாட மாளிகைகள், ஆடம்பர வாழ்க்கை முறை, அந்தப்புரங்கள் இவை தானே... அவற்றின் மறுபக்கமாய், சித்தரவதைக் கூடங்களாய், கொலைக்களங்களாய், மரண ஓலங்களின் வாசல்களாய் இருந்ததைப் பற்றித் தெரிய வேண்டுமா..அதுவும் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.
6. லண்டன் மெழுகு மியூசியத்தில் “ஐஸ்வர்யா ராயின்” சிலை அவரது நிஜ அழகுக்கு பக்கத்தில் கூட வரவில்லை. அந்த அழகிய முகத்தின் நுண்ணிய பிரதிபலிப்பற்று பொம்மையாய் நின்ற சிலையைப் பார்த்த ஆசிரியரின் ஏமாற்றத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா, அதுவும் இருக்கிறது.
7. “கார்ல் மார்க்ஸின் சமாதி” லண்டனில் இருக்கிறது. உலகில் மிகச்சிறந்த பொதுவுடைமைவாதியான அவரின் கல்லறை எவ்வளவு சிறப்பாக பராமரிக்கப்பட்டிருக்கும் என்ற கற்பனையுடன் சென்ற ஆசிரியருக்கு அங்கே ஏற்பட்ட மன உணர்வுகளும் புத்தகத்தில் பதியப்பட்டுள்ளன.

இப்படி சுவாரஸ்யமாக, எளிய மொழியில் அழகாக கதை கொல்லும் பாணியில் எழுதப்பட்டுள்ள இந்த நூலை படித்தது ஒரு இனிய வாசிப்பனுபவமாகவே இருந்தது.

நூல்: “லண்டன் - ஒரு பழைய சாம்ராஜ்யத்தின் அழகிய தலைநகரம்”
ஆசிரியர்: மு.சங்கையா
வெளியீடு: வாசிப்போர்களம், மதுரை
தொடர்புக்கு: 94861 02431, 94861 00608
மின்னஞ்சல்: skaruppiah.bsnl@gmail.com

******

Friday, 7 June 2013

நூல் வெளியீடு - அழைப்பிதழ்

நண்பர்களே !
நமது வாசிப்போர்களம் அமைப்பின் முதல் புத்தக வெளியீட்டிற்கு நண்பர்கள், உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.


Wednesday, 17 April 2013

உப்பு நாய்கள் - நாவல் - வாசிப்பனுபவம்

கடந்த 13/04-2013 அன்று நடந்த வாசிப்போர் களம் கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட லக்ஷ்மிசரவணகுமார் எழுதிய “உப்புநாய்கள்” நாவல் குறித்த எனது பார்வை “மலைகள்” இணைய இதழில் வெளியாகியுள்ளது.

அதன் சுட்டி: http://malaigal.com/?p=1905

நண்பர்கள் வாசித்து கருத்து கூறவும்.

-- வி.பாலகுமார்.

Tuesday, 16 April 2013

வாசிப்போர் களம் - 13/04/2013 கூட்டம்

வாசிப்போர் களத்தின் மாதாந்திரக் கூட்டம் 13/04/2013 அன்று சிறப்பாக நடைபெற்றது.

மிக முக்கிய நிகழ்வாக, களத்தின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கான பதிவு மிக விரைவில்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே:





******