Sunday, 26 April 2020

கூகை


உலக புத்தக தினம் : ஏப்ரல் 23 /04 /2020 .

கூகை

எழுத்தாளர்: சோ.தர்மன்
பதிப்பகம் : காலச்சுவடு
பக்கங்கள்:319
விலை: ரூ.240
மூன்றாம் பாதிப்பு: டிசம்பர்-2011




"கூகையை இரவில் யாராலும் பிடிக்க முடியாது . சூரியனைக் கண்ணாக்கிக்கொண்டு இரவில் மட்டுமே தலைகாட்டும் பறவையிது. சூரியனே கண்ணாக இருப்பதால் சாமானியமாக யாரும் கிட்டத்தில் நெருங்கிவிட முடியாது. பச்சைப்பிள்ளை கூட பகலில் கூகையைப் பிடித்துவிடலாம். ஏனெனில் இந்த அண்டத்திற்கே ஒளி வழங்கும் சூரியக்கண்ணை பகலில் கடனாக கொடுத்துவிடும். இரவில் இரைதேட வாங்கிக் கொள்ளும்".

சோ.தர்மன்




சோ . தர்மனின்  “கூகை”  நாவலுக்குள் நுழையும் முன்பு  உங்களை ஒரு சாதியற்ற  மனிதனாக உருவகப்படுத்திக் கொள்ளுங்கள்.  அப்படியில்லையென்றால் இந்த நாவல் வெளிக்கொணரும் உண்மைகளை உங்களால் உணர முடியாமல் போய்விடும்.


வாருங்கள் ... கூகையின் குகைக்குள்ளே செல்வோம்!


சித்திரம்பட்டி என்ற அழகான கிராமத்தைக் களமாக கொண்டு இந்த நாவல் பேசுகிறது. பல சாதியினர்  , குறிப்பாக நாயக்கர், தேவர், ரெட்டியார் , பிள்ளைமார் , பள்ளர்  , பறையர்  சக்கிலியர்   மற்றும் பிராமணர்  என்று பலர்  வாழும் கிராமம் இது.  

சீனிக்குடும்பன் பள்ளர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிறான். அவனுக்கு " கூகை " வழிபடும் குலதெய்வமாக இருக்கிறது. ஆனாலும் பள்ளக்குடி எல்லாமே கூகையை வணங்குகிறது.

சித்திரம்பட்டியில் காலமெல்லாம்  நிலமற்றவர்களாகவும் , பண்ணை அடிமைகளாகவும் வாழும் பள்ளர்கள் விவசாயத்தையே முழுமையாக சார்ந்து விவசாயக் கூலிகளாக  வாழ்ந்து வருகிறார்கள். அவர்களுக்கு தனது குத்தகைக்குத் தருகிறார் நடராஜ அய்யர். அதனால் பள்ளர்கள் விவசாயம் செய்து  முன்னேறுகிறார்கள்.


சித்திரம்பட்டி, நாகம்பட்டி ஜாமீனுக்குள் உள்ளடங்கிய ஒரு கிராமம் . முத்தையாபாண்டியன் அக்கிராமத்தின் காவலாளியாக ஜமீன்தாரால் நியமிக்கப்பட்டவன். பெரும் பெண்பித்தன் . கிராமத்தில் உள்ள  பறையர் மற்றும் சக்கிலிய குடி பெண்களை சீரழிப்பதையே வேலையாக கொண்டவன். பள்ளர்களின் வளர்ச்சியைப் பொறுக்காத இவன் ஜமீன்தார் மூலமாக இடைஞ்சல் தருகிறான்.

சண்முகம் பகடையின் மனைவி கருப்பியை அவனே நிரந்தரமாக வைத்துக் கொள்கிறான். அதுமட்டுமல்லாமல் அவர்களது பதினான்கு வயது மகள் வெள்ளையம்மாளையும் (அவனுக்கு பிறந்த குழந்தையே) சீரழிக்க முயலும் போது வெகுண்டெழுந்த சண்முகம் , முத்தையா பாண்டியனை கொலை செய்கிறான். அதனால் சக்கிலியக்குடிகள் சித்திரம்பட்டி கிராமத்தைக் காலி செய்து வெளியேறுகிறது

அதே போல் பள்ளர் சாதியைச் சேர்ந்த அப்புசுப்பன்  அக்கிராமத்தில் பெட்டிக்கடை வைத்து முன்னேற ஆரம்பிக்கிறான்  , ஆதிக்க சாதியைச் சேர்ந்த செந்தூரப்பாண்டி தொல்லை கொடுப்பதால் அவனை கொலை செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அதனால் அப்பு சுப்பனும் , அவன் மகன் அய்யனாரும் சித்திரம்பட்டி கிராமத்தைவிட்டு விட்டு ஓடவேண்டிய நிலை ஏற்படுகிறது. பின்னர் போலீஸ் கிராமத்திற்குள் நுழைகிறது ; பள்ளக்குடி சூறையாடப்படுகிறது. 

போலீஸ் அப்புசுப்பனைப் பிடிக்க அவன் மனைவியை நிர்வாணப்படுத்தி கொடுமைப்படுத்துகிறது தாயை நிர்வாணப்படுத்திய போலீஸ் ஏட்டின் தலையை துண்டிக்கிறான் அய்யனார். அதனால் , அப்புசுப்பனும், அய்யனாரும் மீண்டும் தலை மறைவாகிறார்கள்.

இதற்கிடையில் , கிறித்துவம் ஊருக்குள் நுழைகிறது . பறையக்குடியை பிடித்துக் கொள்கிறது . கிட்ணசாம்பான் அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறான். அவன் மதம் மாறி “பேதுரு”  என்று பெயர் மாறுகிறான். அங்கே ஒரு சர்ச் உருவாகிறது. அவர்களது சப்பரத் திருவிழாவின் போது அவர்களது தேர் பள்ளக்குடி வழியாக செல்கிறது . வெடி வெடிக்கப்படுகிறது. அதன் வழியாக சண்டை உருவாகிறது. பறையக்குடி தீ வைத்து கொளுத்தப்படுகிறது. பேதுரு வெட்டிக் கொல்லப்படுகிறான்.  பறையர்கள்  சித்திரம்பட்டியை விட்டு வெளியேறுகிறார்கள்.

இவ்வாறு சித்திரம்பட்டி தமது அமைதியை இழக்கிறது.

நாளடைவில் கூகையை வழிபட்ட பள்ளக்குடிகளுக்கு அலுப்புத்தட்டி விடுகிறது. ஆகவே , கோபக்கார  புதிய கடவுள் "காளியம்மாளை" வணங்க முற்படுகிறார்கள். அதனால் சித்திரம்பட்டியில் உள்ள கூகைச்சாமி கோவிலை இடித்து விட்டு " காளியம்மன்" கோவில் கட்ட முடிவெடுக்கிறார்கள். மனம் வெறுத்துப்போன சீனிக்கிழவன் கூகைச் சாமியை தூக்கு கொண்டு இரவோடு இரவாக சித்திரம்பட்டியை விட்டு வெளியேறுகிறான்.

இதனைத் தொடர்ந்து போலீசில் இருந்து தப்பிக்க வெளியேறிய அப்புசுப்பன் அழகனேரி முத்துப்பேச்சியிடம் அடைக்கலம் அடைகிறான். இங்கே முத்துப்பேச்சி -காளிதேவரின் துயரமான சோக வரலாறும் வருகிறது.  . பள்ளர் சாதியை சேர்ந்த முத்துப்பேச்சியை ஏற்கனவே திருமணம் ஆகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையான காளிதேவர் மணப்பதும் , அதனால் அவர்களது வாழ்வு திசைமாறுவதும் சுவாரசியமாக சொல்லப்பட்டுள்ளது .

இறுதியில் சித்திரம்பட்டியிலிருந்து வெளியேறிய பள்ள, பறைய மற்றும் சக்கிலியக்குடிகள் கோவில்பட்டிக்கு அருகில் உள்ள சுப்பிரமணியபுரத்தில் மீண்டும் ஒன்று சேருகிறார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் ஜமீன்தாரின் மில்லிலும், கல்குவாரிகளிலும் மீண்டும் அடிமையாகிறார்கள். 

இதுவே " கூகையின் " சுருக்கமான சாரம்.


சோ.தர்மன் இந்த நாவலில் கையாண்டிருக்கும் களமும்,  யுக்தியும்  மற்றும் உரையாடலும் மிகவும் பிரமிக்க வைக்கிறது. கிராமத்து  காமத்தைக் கலைநுட்பத்தோடு சொல்லும் அவரது லாவகம் ஈர்ப்புடன் இருக்கிறது.

நாவல் தரும் சுவாரசியங்கள்:

Ø  பள்ளக்குடியை சேர்ந்த மக்கள் பிற சாதியினரின் வீடுகளுக்கு பதிவாளாக (கொத்தடிமையாக) வேலை செய்கிறார்கள். சீனிக்கிழவனின் மனைவி சின்னக்காளி கங்கையா நாயக்கருக்கு உரியவளாக இருப்பாள். சின்னக்காளி , கங்கையாநாயக்கரை தாலி காட்டாத கணவனாகவே வரித்துக் கொள்கிறாள். அதேபோல்,  லிங்கையா நாயக்கரிடம்  சீனி பதிவாளாய் வேலை செய்கிறான் .  அவர் மனைவி பத்ரராஜம்மாள். லிங்கையா நாயக்கருக்கு குஷ்டரோகம் ; அழுகல் நோய். அவர்களுக்கு ஏழு வருசமாக குழந்தை இல்லை. சீனிதான் அவரை குளிப்பாட்டி கவனித்துக் கொள்வான்.  பத்ரராஜம்மாள் என்ற கிளி அழுகல் பழத்தை சாப்பிடுமா?. பத்ரராஜம்மாள் என்ற கனியை சீனி தான் தின்றான். தீண்டப்படாத கனியை ஏவாள் தின்றாள். கனி தித்தித்தது. இதை பார்த்து விட்ட லிங்கையா நாயக்கர் காலையில் செத்துக் கிடந்தார்.

Ø  கீழக்கடைசி வீட்டுக் குருவம்மாளிடம் படுத்து எந்திரிச்சு காளிப்பரெட்டி போவார். அவள் புருசன் கண்டாங்கியை மூடிக்கொண்டு ஆட்டுத்  தொழுவில் படுத்திருப்பான்.  ஆட்டுக் கொச்சையின் கவுச்சி வாடையில் குருவன் சுணைமாறிப்போய் வீட்டில் படுப்பதே இல்லை. உரோமக் கத்தையின் கதகதப்பில் துயிலுறங்கும் குருவன் துள்ளியெழுந்தா போவான்?. சினையாற்றின் முனகலென ச் சில சமயம் பிதற்றுவான்; பின் அழுவான்; தூங்கிப் போவான்.

Ø  நடராஜ அய்யர் தமது 120 ஏக்கர் நிலத்தையும் 45 பள்ளக்குடிச் சனங்கள் குடும்பங்களுக்கும் குத்தகைக்கு கொடுத்துவிடுவார், வருத்தப்பட்ட கிட்ணசாம்பான் , எங்க தெருவில ஒரு பத்து பேருக்காவது கொஞ்சமாவது வயல் விட்ருக்கலாம்ல சாமி, நாங்க என்ன ஒழைக்கமாட்டமா? என்று கேட்பான்.  அப்போது நடராஜ அய்யர் அவனிடம்,  யாராவது உங்களை மிரட்டி  நிலைத்தைக் கேட்டால் என்ன செய்வாய்? என்று கேட்பார். அதற்கு , நிலத்தைக் கொடுத்துவிட்டு ஓடிப்போவோம் என்பான் கிட்ணசாம்பான். ஆனால் பள்ளக்குடிகள்  , " செத்தாலும் வயக்காட்டுக்குள்ளே சாவமே ஒழிய , சாமானியமா வயக்காட்டை விட்டிட்டு ஓடமாட்டோம்னு சொல்வார்கள்  " .


Ø  “நாவால் உதடு நக்கி உயிர்பிழைக்கக் கத்தியது சீனியின் வம்சம். புயலென பறந்து வந்தது கூகை. நீள் இறக்கைநீட்டி , கண்களை உருட்டிக் காவல் காத்தது கூகை. அத்தனை ஜீவராசிகளும் கூகையை விரட்டியடித்தன. மேலெல்லாம் காயம்பட்டு பயந்து , பறந்து பொந்துக்குள் நுழைந்து கொண்டது கூகை. பதுங்கிப்பதுங்கி வாழ்ந்தே பழக்கப்பட்டுப் போயிற்று. பதுங்குதல் பாய்தலின் சூட்சுமம். அந்தத் தருணம் பார்த்துக் காத்திருந்தது கூகை”.

Ø  கூகை சகுனம்;
ஓருரை உரைக்குமாகில்  உற்றதோர் சாவு சொல்லும் .
ஈருரையுரைக்குமாகில் எண்ணிய கருமம் ஈடேறும்.
மூவுரையுரைக்குமாகில் மோகமாய் மங்கை சேர்வாள் .
நாலுரை உரைக்குமாகில் நாழியில் கலக்கம் வந்திரும்.
ஐயுரையுரைக்குமாகில் ஒரு பயணம் கிட்டும்.
ஆறரையுரைக்குமாகில் அடுத்தவர் வரவு கூறும்.
ஏழுரை யுரைக்குமாகில் இழந்த பொருள்கள் மேலும்.
எண்முறை யுரைக்குமாகில் திட்டென சாவு நேரும்.
ஒன்பதும் பத்தும் உத்தமம்  மிக நன்று.

Ø  இருகால் நீட்டி அடுப்பெரித்துக் கொண்டிருந்தாள் முத்தையாப் பாண்டியனின் மூத்தமகள் ராமலட்சுமி. கால்கள் பற்றி எரியும் அனல் தகிப்பில் சுகமாய் லயத்திருந்தான் சீனியின் மகன் கோவிந்தன். வெந்து தணிந்து கொண்டிருந்தான்.

Ø  தன்னை சக்கிலியன் என்று சொன்னதும் தனக்கு மட்டும் ஓலை வெட்டி  வந்து பட்டை பிடித்துக் கொடுத்துக் காப்பி ஊற்றியதை நினைத்து சிரித்துக்கொண்டான் அப்புசுப்பன். இதைப் போலத்தானே மற்ற ஜாதிக்காரர்களும் நம்மை நடத்துவார்கள் என்று நினைத்த போது   அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

Ø  அத்தனை உடமைகளையும் இழந்து, மானத்தை மட்டுமே சுமையேற்றி நடந்தார்கள் சக்கிலிய சனங்கள்.

Ø  ஜாதிவிட்டு ஜாதி போய்ட்டானு ஏஞ் ஜாதியும் என்னைய ஒதுக்கிருச்சு , புள்ள குட்டிய விட்டிட்டு கீச்சாதிக் காரியக் கூட்டிட்டுப் போய்ட்டார்னு அவரு ஜாதியும் என்னைய ஒதுக்கிருச்சு(முத்துப்பேச்சி).

Ø  போலீசு, என்னைய  நெற அம்மணமா நிறுத்தி , அவங்களையும் அம்மணமா நிறுத்தி ஒங்க சின்னாத்தா கிட்டப் போங்கடான்னான் . எங்க மூணு பேத்தையும் ஒரே ரூமுக்குள்ளே இருட்டுக்குள்ளே விட்டுப் பூட்டிட்டான் .

Ø  பேச்சி,  எட்டையபுரம் ஊருக்குள் நுழைந்தாள். அருள் கெட்டுப்போய் சுவர்களில் செடிகள் முளைத்து விப்போடி, எப்போதும் விழுந்து விடலாம் என்று நிற்கும் அரண்மனையை நின்று பார்த்தாள். தசைவழி இறங்கி சதை தொட்டு அல்குல்களுக்குள் பதுங்கி பஸ்பமாகிப் போன அதிகாரத்தின் மிச்சசொச்ச அடையாளங்களே இந்த அரண்மனைகள்.

Ø  ஜமீனைப் பகைத்துக் கொண்டு வாழ்வது முடியுமா? தன மனசுக்குப் பிடித்த பெண்களையெல்லாம் களவாடிச் சரசமாடி அதிகாரம் புண்ணியத்தில் தெய்வமாகிப் போன பெண்கள் ஏராளம்!.

Ø  " களவாணிப் பயலைப் போயிப் புடிங்கனு சொன்னா , களவாணிப்பயக்கூட போலீஸ் சேக்காளியா ஆயிரான். போலீஸ் கூட ஜமீன்பய சேர்ந்திருக்கிறான் . ஜமீன்கூட காவாலிப் பயகலும் ,கள்ளவாலிப் பயகலும் முடிச்சுமாரி மொள்ளமாரிப் பயகலும் சேர்ந்துக்கிட்டு ஊருக்குள்ளே என்னமா ஆட்டம் போடுறான் பார்த்தியா. நானும் நீயும் என்ன செய்ய முடியுது . ஒன்னும் செய்ய முடியல , கூகையைப் போலப் பேசாமக் கண்ணை மூடிட்டு இருந்துட்டு என்னத்தையாவது தின்னு வயித்த நெறைச்சிட்டுப் படுத்து ஓரங்க வேண்டியது  தான்".

இப்படி பல்வேறு ரசிக்கும்படியான , சுவாரசியமான தகவல்கள் நாவல் நெடுகிலும் பரவியிருக்கின்றன.


நாவலின் சிறப்பு:


Ø  இந்த நாவல் 1960 க்கு முந்தய காலகட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக எழுதப்பட்டிருப்பதால் சாதியின் பிடியையும் அடையாளத்தையும் அப்படியே படம்பிடித்துள்ளது.

Ø  ஒடுக்கப்பட்ட மக்களான பள்ளர், பறையர் மற்றும் சக்கிலியர் இவர்களுக்கிடையில் நிலவும் ஒற்றுமையையும் , ஏற்படும் வேற்றுமைகளையும் பேசுகிறது .

Ø  பள்ளர் சமூகத்தினரின் வீரத்தையும் , அவர்களது  விவசாய அறிவையும் ,  அவர்கள் கடுமையான உழைப்பாளிகள் என்பதையும் படம் பிடித்துக்காட்டுகிறார் நூலின் ஆசிரியர்..

Ø  ஒடுக்கப்பட்ட பெண்களின் மீதான பாலியியல் மீறல்கள் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

Ø  ஆதிக்க சாதியினரில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்பதை நடராஜ அய்யர், காளித்தேவர் மற்றும் ராமையா பிள்ளை போன்ற பாத்திரங்கள் மூலம் தெளிவு படுத்துகிறார் சோ.தர்மன்.

Ø  ஜமீன்களின் பொருளாதார வளர்ச்சியையும் , சுரண்டலையும் மற்றும் சூழ்ச்சியையும்  தெளிவாகக் காட்டுகிறது.

Ø  முதலாளிகளின் மில்களிலும், கல்குவாரிகளிலும் உறிஞ்சப்படும் ஏழைகளின் அவலம் பேசு பொருளாளாக வந்திருக்கிறது.

Ø  பள்ளர் இனமக்களின் குணங்களை ஒப்பீடு செய்து அவர்களை கூகையின் குணத்தோடு பொருந்துகிறார் நூலாசிரியர்.

Ø  போலீசின் செயல்பாடுகளையும்  , எக்காலத்திற்கும்  பொருந்தும் அவர்களின் குரூரத்தையையும் மிக நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

நாவலின் பலவீனங்கள்:

இந்நாவலை வாசிக்கும் போது,  அதன் வேகத்தை குறைக்கும் சில பகுதிகளும் உண்டு. குறிப்பாக ;

Ø  சில இடங்களில் கூகையை பற்றிய மிகைப்படுத்துதல் அதிகமாக இருக்கிறது.

Ø  கிறித்துவ ஆராதனைகளை விவரிக்கும் பக்கங்கள் 207 முதல் 212 வரையிலான செய்திகள்  அலுப்பைத் தருகிறது.

Ø  இந்த  நாவல் , சீனி கூகைச்சாமியை தூக்கு கொண்டு சித்திரம்பட்டியை விட்டு வெளியேறும் வரை , அதாவது 236 பக்கம் வரை ஒரு பாகமாகவும் , 237 முதல் 319 வரை இரண்டாம் பாகமாகவும் எழுதப்பட்டுள்ளது.   அதில் 239  முதல் 251  வரை சீனிக்கிழவனின் மரணம் பற்றிச் சொல்கிறது. அதில் சீனி கூத்தாடி மன்னரை சந்திப்பதாகவும் , மோகனவல்லியால் கொல்லப்படுவதாகவும் வருகிறது.  இப்பகுதியில் நூல் ஆசிரியர் சோ.தருமன் அரசியல் நுழைவு செய்திருக்கிறார் என்று தோன்றுகிறது. அப்பகுதி  மிகவும் குழப்பமாக இருக்கிறது. அப்பகுதியை நீக்கிவிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது.

இறுதியாக சோ.தர்மன் நாவலை இப்படி முடிக்கிறார்; 

 “பட்டிக்காட்ல நாங்க இருந்தப்போ எங்க கையில மம்பட்டியும் களைவெட்டியும், கோடாலியும், பண்ணருவாளும், கடகாப் பெட்டியும் இருந்துச்சு, ஒங்க கையில காடு, தோட்டம், வயக்காடு அம்புட்டும் இருந்துச்சு, நாங்க  ஒழச்சு ஓடாப்போனது தான் மிச்சம். டவுணுக்குப் போய் பொழச்சிகிறலாம்னு ஊர விட்டு வெளியேறிப் போனா  , எங்க கையில சாந்துச்சட்டியும், தார்ச்சட்டியும், ஜல்லி ஒடைக்க சுத்தியலும், சம்மட்டியும் , மூட தூக்குற கொக்கியும் கெடச்சுது, உங்க கைல தீப்பெட்டிக் கம்பெனி, ஜின்னிங் பேக்டரி, காண்ட்ராக்டு,  மெடிக்கல் , ஆஸ்பத்திரி, பைனான்ஸ், கல் குவாரி, மணல் குவாரி, ஆட்டுச் சந்தை, மாட்டுச்சந்தை , பஸ் ஸ்டாண்டு எல்லாம் இருந்துச்சு , இதை எல்லாத்தையும் விட்டுட்டு சீரழிஞ்சது போதும்னு தெகைச்சு நிக்கும் போது, ஒவ்வொருத்தன் கிட்டயும் ஒரு  கையில  கட்சிக் கொடியையும், இன்னொரு கைல ப்ராந்தி பாட்டிலயும் திணிச்சுட்டீக, அதிகாரம் ஒங்க கைல, நாங்க கூகையைப் போல பயந்து, ஒளிஞ்சு, பதுங்கி ...அடக்கடவுளே உனக்கு கண் இல்லையா ? இந்த வேகாரிப் பயகலுக்கு நல்ல புத்தி குடுக்க  மாட்டியா ? காலம் பூராவும் இப்பிடியா சீரழியனும் " என்று முத்துப்பேச்சி குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்”. அப்போது , தூரத்தில் நாலைந்து  சிறுவர்கள் செத்துப்போன கூகை ஒன்றினை ,  காலில் கயிறு கட்டி இழுத்துக் கொண்டே ஓடுவதை  முத்துப்பேச்சி பார்க்கிறாள்.

என் மனக் கண்களிலிருந்தும் கூகையும் , சீனிக்கிழவனும் மறைகிறார்கள். சோ.தர்மன் நினைவிற்குள் வருகிறார்.


சு.கருப்பையா
மதுரை
+919486102431



Monday, 23 December 2019

மதில்கள்-நாவல் .


வைக்கம் முகம்மது பஷீர்
தமிழில்: சுகுமாரன்
வெளியீடு: காலச்சுவடு , 2015
பக்கங்கள்: 71
விலை: ரூ.65 /-





மதில்கள்  ….

இந்த  குறுநாவல் 1962 -63   இல் வைக்கம் முகம்மது பஷீர் அவர்களால் எழுதப்பட்டது. 1942   ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட  பஷீர் அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார். அங்கு சக கைதி நாராயணி மேல் அவருக்கு ஏற்பட்ட காதலும் , சிறை அனுபவங்களும் தான் இந்த குறுநாவலாக வடிவெடுத்திருக்கிறது.


பஷீர் சிறைக்குள் காய்கறித் தோட்டம் போடுவதும் , ரோஜா  பூக்கள் வளர்ப்பதும் , மரங்களில் விளையாடும் அணில்களை ரசிப்பதும்  மிகவும் இயல்பாக இருக்கிறது.

அதேபோல் சிறைச்சாலையின் மறுபக்கத்தில் இருக்கும் பெண்கள் பகுதியிலிருந்து  வரும் " பெண்ணின் மணமும்" அவரை ஈர்க்கிறது. பெண்ணிற்கு மணம் இருப்பதையும் , அதை தமது நுட்பமான மனத்தால் அறிந்துகொள்ள முடியும் என்பதையும் பஷீர் உணர்ந்திருக்கிறார்.


இவருக்கும் , நாராயணிக்கும் இடையே சிறைக்குள் இருக்கும் நீண்ட நெடிய மதில்கள். அதற்கு உயிரூட்டி இருக்கிறார் பஷீர்.  சிறைச்சாலைக்குள் தேநீர் போடுவது , தோட்டவேலை செய்வது மற்றும் ஜெயலரின் தில்லுமுல்லுகள் என்று சாதாரணமாக நகரும் நாவல் , நாராயணி வந்த பிறகு நம்மை வேறு தளத்திற்கு அழைத்துச் செய்கிறது.


மதிலுக்கு இருபுறமும் நின்று கொண்டு அவர்கள் பேசும் சரசம் நமக்கு விரசத்தைத் தரவில்லை; ரசிக்கவே முடிகிறது.

இப்படியாக வளரும் காதல் , அவர்களை சந்திக்கத் தூண்டுகிறது. ஆகவே ,  ஒரு வியாழக்கிழமை  சிறைச்சாலைக்குள் இருக்கும் மருத்துவனையில் சந்திக்கலாம் என்று திட்டமிடுகிறார்கள். அடையாளங்களை பரிமாறிக் கொள்கிறார்கள், நாராயணி  தனது வலது கன்னத்தில் மச்சம் இருக்கும் என்று கூறுகிறாள். பஷீரின் கைகளில் சிவப்பு ரோஜாப்பூ. பஷீர் கனவுகளில் மிதக்கிறார். ஆனால், புதன்கிழமை மதியம் ஜெயிலர் அனியன் வருகிறார். அவர் கையில் ரோஜாப்பூக்கள் . ஆம்! பஷீருக்கு விடுதலை.

அந்த தருணத்தை பஷீர் இப்படி எழுதியிருக்கிறார்," நான் நடுங்கிப் போனேன். என்னுடைய கண்கள் காணாமற் போயின, காதுகள் கேட்காமற்  போயின, மொத்தத்தில் ஒரு திணறல். எனக்கு எதுவும் புரியவில்லை". மகிழ்ச்சி தரவேண்டிய அத்தருணம் பெரும் துக்கத்தைத் தருகிறது.

பஷீர் தமது ரோஜாத்தோட்டத்திற்கு வருகிறார். ஒரு சிவப்பு ரோஜாவைப் பறித்து முத்தமிட்டபடி பார்க்கிறார். ஜெயிலர் அவரின் லாக்கப் கதவை பூட்டுகிறார். பஷீர் , தமது மனக்கதவைப் பூட்டுகிறார்.

ஒரு மனிதனின் உணர்வோடு  கலந்துவிட்ட காதலானது மகத்துவமானது. அக்காதல்  வெற்றி பெறும் பொழுது  அவனுக்கு  மகிழ்ச்சியான வாழ்க்கையைத் தருகிறது; மாறாக , தோல்வியுறும்  போது அழியாத காயத்தைத் தருகிறது.  , அது அவன் மரணிக்கும் வரை உடன் பயணிக்கும் வடுவாகவே  இருக்கிறது  

பஷீர் தமது காதலை இந்த நாவல் மூலம் அப்படியே நம் மனதிற்குள் பதிவேற்றுகிறார். இந்தியாவின் மிகச் சிறந்த இலக்கிய ஆளுமைகளில் ஒருவராக அவர்  போற்றப்படுவதற்கான அடையாளத்தை நாம் இந்த நாவலில் காணலாம்.

இந்த மதிலுக்கு உயிர் இருக்கிறது.

பஷீர் அந்த மதிலையும் நாராயணியையும்  தமது இறுதி காலம் வரை சுமந்து திரிந்திருப்பார்....





Wednesday, 6 November 2019

நூல் மதிப்புரை: அக விடுதலையே பெண் விடுதலை.


ஆசிரியர்: முனைவர் .நா.நளினிதேவி
பக்கங்கள்: 114
வெளியீடு : கைத்தடி பதிப்பகம்
வருடம்: ஜூலை-2019
விலை: ரூ.110/-
தொடர்பு: தொலைபேசி:044-48579357;
               கைபேசி: +919566274503








முனைவர் . நா. நளினிதேவி அவர்கள்  இந்த நூலின் மூலம் பெண்ணின் உரிமைகள்  மற்றும் விடுதலையைப்  பற்றி  தந்தை பெரியாரின் வழியில்     சற்று விரிவாக பதிவு செய்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. அவர் விவாதத்திற்கு உட்படுத்தியிருக்கும் முக்கியமான கருப்பொருள்கள்;


Ø  ஆண் ஆதிக்கத்தால் பூட்டப்பட்ட பெண்களின் அகஉணர்வு கட்டுகளையும் , தளைகளையும் தகர்த்தெறிதல் வேண்டும்.
Ø  கல்வி கற்றால் தான் பெண் விடுதலை பெற முடியும்.
Ø  மரபு  வழியாக வரும் அகச்சிக்கலும் , புறச்சிக்கலும்  பெண்களைப் பாதிக்கிறது ; உதாரணமாக பெண்களுக்கு மட்டுமே உரிய " கற்பு"  மற்றும் குடும்பப்பொறுப்புகள்.
Ø  தடை செய்யப்பட்ட உறவு மற்றும் நட்பு.
Ø  பாலியியல் சுதந்திரமின்மை: கற்பு என்ற கற்பனைப் பொருளுக்குள் அடைத்து வைத்தல்..
Ø  பெண்களை பாலியியல் சின்னமாகப் பார்ப்பது.
Ø  பெண்களுக்கு எதிரான இலக்கியங்களும் , புராணங்களும்,
Ø  பெண்களுக்கு ஆதரவான படைப்புகள்.
Ø  பெண்களின் மீதான பாலியியல் அடக்குமுறை.
Ø  பெண்விடுதலையும் பாலியியல் தளையும்.
Ø  கற்பும் தளையும்.
Ø  காதலும் , திருமணமும்.
Ø  தடைகளை உடைத்தெறிந்து பெண்கள் விடுதலை பெற வேண்டும்; அதற்கு அகவிடுதலை தேவை,

மேற்கண்ட கருத்துக்களை மிக ஆழமாக ஆராய்ந்து, எப்படியெல்லாம் பெண்கள் அடக்குமுறைக்கு உள்ளாகி இருக்கிறார்கள் என்று  தெளிவாக வாதிடுகிறார் முனைவர். நா.நளினிதேவி.

குறிப்பாக, பெண்களுக்கு கல்வி, திருமணம், பாலியியல் உணர்வு போன்றவற்றில் கட்டவிழ்க்கப்பட்ட சுதந்திரம் வேண்டும் என்று நியாயம் கேட்க்கிறார். கற்பு என்ற கற்பனையான கருத்தை பெண்களுக்கு மட்டுமே கொடுத்துவிட்டு , ஆண்கள் பல திருமணங்கள் செய்து கொள்வதும் அல்லது பல பெண்களுடன் உறவு கொள்வதும் எந்தவிதத்தில் நியாயம் என்ற கேள்வியையும் எழுப்புகிறார். இவர் எழுப்பும் வாதங்களுக்கும் , கேள்விகளுக்கும் இந்திய சமூகத்தில் தீர்வு கிடைக்குமா? , ஆண்களுக்கு இணையாக பெண்கள் சுதந்திரமாக செயல்பட  முடியுமா ? என்பது மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

இப்பிரச்னைகளை உலக வரலாற்றோடு பொருத்திப் பார்க்கும் போது , நமக்கு பல உண்மைகள் தெரிய வரும்.

முதலில் தாய்வழிச் சமூகமாக இருந்த மக்கள் கூட்டம் , தந்தைவழிச் சமூகமாக தோற்றமெடுத்து , குடும்பம் , தனிச்சொத்து என்று மாறிய பிறகு நிலப்பிரபுத்துவக்கூட்டமும் , அடிமைச்சாதியினரும் தோன்றுகிறார்கள். அது தான் பெண்களை தங்களுடைய உடைமைப் பொருளாகவும் , அடிமையாகவும் கருதத் துவங்கிய காலம். இந்த சூழலில் , ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்குள் நுழைந்த ஆரியக்கூட்டம் பெண்களை அடிமையாகவே கருதினர்; நடத்தினர். அவர்களை சூத்திரர்களுக்கு இணையாக வைத்து தீண்ட தகாதவர்களாகவே பார்த்தார்கள்   .  அவர்கள் உருவாக்கிய வேதங்களில் இருந்து தோன்றிய வர்ணாசிரமக் கோட்பாடு தான் இன்று வரை இந்திய மக்களை ஆட்சி செய்கிறது. அதுவே மக்களை சாதி , இன ரீதியாக பிரித்து வைத்திருக்கிறது. தனக்கு பிறக்கும் குழந்தைகளுக்கே  சொத்து என்ற கொள்கையை அது கொண்டிருக்கிறது. அதுவே, பெண்களையும் தனக்குரிய சொத்தாக பாவிக்கத் தூண்டியது . பெண்களை தனக்குரிய போகப் பொருளாகவும் , தன்னுடைய  சந்ததியைக் கொடுக்கும் ஒரு கருவியாகவும் பார்த்தது. அவளுக்கு கல்வி போதிக்கப்படவில்லை ; விரும்பிய ஆண்மகனை திருமணம் செய்து கொள்ளமுடியாது; கணவனைத் தவிர பிற ஆண்களுடன் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது. கற்பு அங்கே போதிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது. அதாவது , பெண்களின் யோனி அவளது  கணவனுக்கு மட்டுமே சொந்தம் என்ற நிலை உருவானது!. இதுவே  பெண் அடிமையான வரலாற்றின் ஒரு பகுதியாகும்.   அப்படிப்பட்ட அடக்கு முறையே  இன்றும் பெண்களின் மீது தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது .  இப்படிப்பட்ட ஆணாதிக்க சமூகம் பெண்களின் அக  உணர்வுக்கு எப்படி செவி சாய்க்க முடியும் ? .

ஒரு மனிதனின் பசி, தாக்கம், உறக்கம் போல் பாலியியல் உணர்வும் தனிமனிதன் சம்பந்தப்பட்டது , அதில் தலையிட மற்றவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்கிறார் தந்தை பெரியார். அக்கருத்தையே முன்னிறுத்துகிறார் முனைவர்.நளினிதேவி . தனது காமஇச்சையை தனித்துக் கொள்ள பிற பெண்களுடன் உறவு கொள்ளும் பாலியியல் சுதந்திரம் ஆண்களுக்கு இருக்கும் போது , பெண்களுக்கு மட்டும்  ஏன் இருக்கக்கூடாது ? என்ற ஆசிரியரின் கேள்வியில் நியாயம் தெரிகிறது.  ஆனாலும்  தனது மனைவியை பிற ஆண்களுடன் பகிர்ந்து கொள்ளவும் , அவளுக்குப் பிடித்தவனோடு உறவு வைத்துக் கொள்ள அனுமதிக்கவும் தேவையான பரந்த மனப்பான்மை இன்று வரை எந்த ஆணுக்கும் இருக்கவில்லை.   ஒரு பெண் பிறந்ததிலிருந்து தந்தை, சகோதரன்  பிறகு மகன் என்று அனைவருக்கும் அடிமையாக வாழும் சூழலே இன்றும் நிலவுகிறது. அவளால் சுதந்திரமாக செயல் பட இயலாது (சில விதி விலக்குகள் உண்டு). ஏன் இந்த இழி நிலை?.

இதற்கெல்லாம் அடிப்படை காரணமாக இருப்பது சாதியும் , சொத்தும் தான். இந்தச் சமூகம் பெண்களை தங்கள் சாதியின் குறியீடாகவே பார்க்கிறது . அதில் கலப்பு ஏற்பட ஆதிக்கசாதி மனநிலை அனுமதிப்பதில்லை. கலப்பு மணத்தால் தனது சாதிக்கும் , சொத்திற்கும் இழப்பு வரும் என்ற காரணத்தாலேயே பெண்களையும் , அவர்களின் உணர்வையும் உரிமைகளையும் அடித்து நொறுக்கி கூண்டிலேயே பூட்டி வைத்திருக்கிறார்கள். இந்தப் பூட்டை உடைத்து வெளியேறுவது பெண்களின் கைகளில் தான் இருக்கிறது.  அதற்கு இந்திய குடும்ப அமைப்பில் மாற்றம் ஏற்பட்டு , பெண்களுக்கு முழுச்சுதந்திரமும் , அதிகாரமும் கிடைக்க வேண்டும் .  பெண்கள் தங்களின் விடுதலையை கேட்டுப் பெறுவதை விட எடுத்துக் கொள்வது தான் சிறந்தது. அதற்கு இந்த நூல் உந்து சக்தியாக இருக்கும் என்று கருதுகிறேன். ஐயா கி.வீரமணி அவர்கள் அணிந்துரையில் குறிப்பிட்டவாறு , இந்நூல் பெண்கள் மத்தியில் பெரும் பாய்ச்சலோடு பரவ வேண்டும் என்பதையே நானும் விரும்புகிறேன்.

இருந்தாலும் இந்து மதம் இருக்கும் வரை சாதியையும் , பெண்ணடிமைத்தனத்தையும் களைந்து , பெண்கள் அகவிடுதலை பெறுவது   என்பது மிகவும் கடினம்  என்றே எனக்குத் தோன்றுகிறது. 







இறுதியாக ,  இந்த நூலை எளிமையான  தமிழில் தெளிவாக எழுதியதற்கும் , ஆழமான கருத்துக்களை உள்ளடக்கிய அழகிய ஓவியங்களையும், படத்தையும் புத்தகத்தில் இடம் பெற செய்த முனைவர்  .நா. நளினிதேவிக்கு பாராட்டுக்கள் . குறிப்பாக , தாய் தமது மகளுக்கு சொல்வது போன்ற முதல் பக்க ஓவியமும் , பல கட்டுத்தளைகளை கொண்ட ஆணின்  அகந்தையை  கட்டுடைக்க   அம்பெய்தும் படமும் மிகவும் அர்த்தமுள்ளது .  

ஆனாலும், இந்தியாவில் நிகழும் ஆணவப்படுகொலைகள் ,  தொலைக்காட்சி (தொடர்கள்) மற்றும் ஊடகங்களின் மூலம்   பெண்களை கொச்சைப்படுத்தும் நிகழ்வுகளையும்  , ஆன்மீகத்தின் பெயரால் பெண்களிடமுள்ள மூட நம்பிக்கைகள் போன்றவற்றையும்  முனைவர்.நா. நளினிதேவி கையில் எடுக்கவில்லை என்ற குறையும் உள்ளது.   ஆனாலும் , இந்த நூல் பெண்கள் மத்தியில் மட்டுமல்ல ஆண்களிடத்திலும்  ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை .