13/07/2013, ந் தேதி நடந்த வாசிப்போர்
களத்தில், "சோளகர்
தொட்டி", 'முத்திரை
கவிதைகள்" என்ற இரண்டு நூல்கள் அறிமுகம் செய்யப்பட்டன. அதில் சோளகர் தொட்டியின் கருத்துரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
சோளகர் தொட்டி
ச.பாலமுருகன்
எதிர் வெளியீடு
விலை ரூ.120
பக்கங்கள் 240
சோளகர் தொட்டியின் சுருக்கமான கதை:
சோளகர் தொட்டி , முப்பது சோளகர் குடும்பங்களை
உள்ளடக்கிய ஒரு அழகான மலைக்கிராமம் . கொத்தல்லி அந்தக்
கிராமத்தின் சோளகர் குலத்தலைவன். கோல்க்காரன் சென்நெஞ்சா அக்கிராமத்தின் பூசாரி
மற்றும் மணிராசன் கோவில் நிர்வாகி. பேதன் நல்ல விவசாயி. அவனுடைய மகன் சிவண்ணா தான் இந்நாவலின் நாயகன். அவனுடைய மனைவி
சின்னத்தாய்; மகன் ரேசன்.
கோல்காரனுக்கும் ,
பேதனுக்கும் சீர்காடு என்ற பகுதியில்
கொஞ்சம் நிலம் உண்டு. அவற்றில் ராகி மற்றும் பயறு வகைகள் பயிரிட்டு வாழ்ந்து
வருகிறார்கள். அத்தோடு, மலைத்தேன்
எடுத்தல், மூலிகை
சேகரித்தல் போன்றவைகள் அவர்களுடைய குலத் தொழிலாக உள்ளது. அதேபோல் கஞ்சா புகைப்பதும்
தொட்டியில் உள்ள அனைவருக்கும் கை வந்த கலையாக இருக்கிறது. தொட்டி மக்கள் அந்த
வனத்தையும் அதன் சுற்றுப்
பகுதிகளையும் அவர்களின் சொத்தாக கருதி
வாழ்ந்து வருகிறார்கள்.
ஒரு நாள் கோல்க்காரன் சென்நெஞ்சாவின் மகன் சிக்குமாதா
தேனெடுக்க வனத்திற்குள் சென்றபோது தன்னை தாக்க வந்த கரடியை கொல்ல
நேரிடுகிறது. அவன் அதைத் தூக்கிக் கொண்டு
தொட்டிற்கு வருகிறான். அக்கரடியின் கறியை அக்கிராமமே பகிர்ந்து
கொள்கிறது. மான், முயல் போன்ற
சிறிய விலங்குகளை வேட்டையாடி உண்பது தொட்டி மக்களுக்கு புதிதல்ல என்றாலும்
இக்கரடியைக் கொன்றது பெரிய
பிரச்சினையாகி விடுகிறது. வனக்காவலர்கள் சிக்குமாதாவை கைது செய்து நெய்தலாபுரம்
வனக்காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விடுகிறார்கள். இதுவே , தொட்டி
மக்களின் சீர்குலைந்த வாழ்க்கைக்கு பெரிதும் காரணமாகி விடுகிறது.
தொட்டி மக்கள் சிக்குமாதாவை விடுதலை செய்ய உதவுமாறு
அப்பகுதியின் மணியகாரர் மாரப்பாவை வேண்டுகிறார்கள். அவர், தம்முடைய வேலைக்காரன் துரையனை
அனுப்புகிறார். துரையன், சிக்குமாதாவை
விடுதலை செய்ய ரூ.1000 வனத்துறையினர்
கேட்பதாக கூறுகிறான்.
அவர்கள் மிகவும் மலைத்துப் போய்விடுகிறார்கள். அவ்வளவு தொகையை தொட்டி மக்கள்
பார்த்ததுகூட இல்லை. இறுதியாக ரூ.500 கொடுத்து
சிக்குமாதாவை விடுதலை செய்ததாக துரையன் கூறுகிறான். துரையனுக்கு அத்தொகையை அடுத்த
விளைச்சலில் ராகி பயிரிட்டுத் தருவதாக கோல்காரனும், கொத்தல்லியும் உறுதி கூறுகிறார்கள். ஆனால் மழை
பொய்த்துப் போவதால் அவர்களால் கடனை செலுத்த இயலாமல் போய்விடுகிறது. துரையன்,
மணியக்காரர் மாரப்பாவிடம் முறையிடுகிறான். மாரப்பாவிற்கும் துரையன் மனைவி
சாந்தாவிற்கும் கள்ளத்தொடர்பு உண்டு. அந்த இரகசிய உறவைப் பயன்படுத்தி
கோல்க்காரனின் நிலத்தை அபகரித்து விடுகிறான் துரையன். இதனால் ,
சோளகரின் தொட்டிப் பகுதியில் துரையன் குடியேறுகிறான். வனக்காவலரால் அடித்து நொறுக்கப்பட்ட
சிக்குமாதவினால் அவனது நிலத்தை காப்பாற்ற முடியாமல் தவித்து மனக் குழப்பத்திற்கு
உள்ளாகிறான். அதன்
பிறகு துரையன், பேதனின் நிலத்தையும் மாரப்பாவின்
உதவியால் பிடுங்கிக் கொள்கிறான். அதுமட்டுமல்லாமல் தொட்டியின் சீர்காடு
முழுவதிற்கும் துரையன் வரி செலுத்துவதாக பதிவு செய்து அவனுக்கே சொந்தமாக்கி விடுகிறான்
மாரப்பா. பேதனின்
மகன் சிவண்ணாவிற்கும் , துரையனுக்கும்
பகை ஏற்படுகிறது. சிவண்ணா, துரையனை கொல்வதற்கு அரிவாளுடன்
செல்கிறான். கைகலப்பு ஏற்பட்டு சிவண்ணா கைது செய்யப்படுகிறான். பேதனும் ,
சிவண்ணாவும் கைது செய்யப்பட்டு ஆசனூர் காவல் நிலையத்தில் சித்திரவதைக்கு
உள்ளாகிறார்கள். பின்னர் வேதனையில் பேதன் இறக்கிறான்.
நாளடைவில் , துரையன்
அப்பகுதியில் நன்றாக வேரூன்றி விடுகிறான். பின்னர் சிக்குமாதாவும் அவனுடன் நட்பை
ஏற்படுத்திக் கொள்கிறான். துரையன் , வனப்பகுதிக்குள் உள்ள சந்தன மரங்களை
வெட்ட சிக்குமாதாவை பயன்படுத்திக்கொள்கிறான். வனத்திற்குள் ஒரு நாள் யானையினால்
தூக்கி எறியப்பட்டு சிக்குமாதா இறக்க நேரிடுகிறது. சில நாட்கள் கழித்து துரையனும், அவனால் காட்டில் வன விலங்கை தடுக்க ஏற்படுத்தி
இருந்த மின்சார வேலியில் சிக்கி உயிர் இழக்க நேரிடுகிறது. அதன் பிறகு , துரையனின் மகன் ராஜுவும் சந்தன மரக் கடத்தலில் ஈடுபடுகிறான். அவனுக்கு
அரசியல்வாதிகளுடன் தொடர்பும் ஏற்படுகிறது. சந்தனமரம்
களவு போவதை அறிந்து கொண்ட வனத்துறையினர் , தொட்டி
மக்களின் பலசாலியான வாலிபன் சிவண்ணாவை வனக்காவலுக்கு ரூ.100 சம்பளத்தில் தீக்கண்காணியாக
நியமிக்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில் பாலப்படுகையைச் சேர்ந்த மாதி என்ற
பெண்ணுடன் சிவண்ணாவிற்கு தொடர்பு ஏற்படுகிறது. அவளுக்கு ஏற்கனவே திருமணமாகி சித்தி
என்ற பெண்ணும் உள்ளது. இத்தருணத்தில் தொட்டிக் காட்டுப்பகுதியில் வீரப்பனின் நடமாட்டம் அதிகமாகி, ஆள் கடத்தலில் முடிவடைகிறது. தொட்டி மக்களுக்கு வீரப்பனுடன் தொடர்பு இருக்க
வேண்டும் என்று சந்தேகம் கொண்டு தமிழக
காவல் துறையினரும் , வனத்துறையினரும்
அவர்களை சித்திரவதை செய்கிறார்கள். தொட்டிப் பெண்கள் பாலியியல் வன்புணர்ச்சிக்கு
உள்ளாக்கப் படுகிறார்கள். ஆறு மாத கர்ப்பிணி ஈரம்மா மூன்று காவலர்களால்
சீரழிக்கப்பட்டு கருச்சிதைவுக்கு ஆளாகிறாள். அதேபோல், சிக்கையா என்பவன் வீரப்பனுக்கு வெடி மருந்து
அனுப்புகிறான் என்று சந்தேகம் கொண்டு அவனது மகனையும் மருமகள் மல்லியையும்
விசாரணைக்கு அழைத்து சென்று கணவன் முன்னே மல்லியை இன்ஸ்பெக்டர் சிங்கப்பனும் சில
போலிஷ்காரர்களும் வன்புணர்ச்சி
கொள்கிறார்கள். சிவண்ணாவின் மனைவி மாதியும், சித்தியும்
போலீஸ் கொட்டடிக்கு அழைக்கப்பட்டு பல
காவலர்களால் , பல நாட்கள்
கற்பழிக்கப் படுகிறார்கள். தாயின் அருகிலே மகளும் சேர்ந்து வன்புணர்ச்சிக்கு
உள்ளாக்கப்படுவது கொடுமையான நிகழ்வாகவும் , மனிதப்
பண்பற்ற விலங்குணர்ச்சி மனிதர்கள் வாழும்
இப்பூமியில் நாம் வாழ்ந்து வருகிறோம் என்ற உணர்வே
நமக்கு எழும்.
மேலும் , மாதேஸ்வரன்
மலை கொட்டடியில் நிகழும் பாலியியல்
வன்புணர்ச்சியும் , ஓர்க்சாப் என்று
அழைக்கப்படும் மின்சார அதிர்ச்சியும் திகைக்க வைக்கிறது. அதுவும் பெண்களின் இரு
மார்பகங்களிலும் , பிறப்புறுப்புகளிலும்
மின்சார இணைப்பு கொடுத்து அதிர்வை ஏற்படுத்துவது மனித உரிமை மீறலின் உச்சத்தைத்
தொடுகிறது. நூலை
வாசிக்கும் நமக்கே கடுமையான
அதிர்ச்சியையும் , துன்பத்தையும்
தரும் இச்சம்பவங்கள் , இந் நாவலை பதிவு
செய்த பாலமுருகனுக்கு எவ்வளவு வேதனையை தந்திருக்கும் என்பதை கற்பனை செய்து கூட
பார்க்க இயலவில்லை.
கடைசியாக, சிவண்ணா
மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் சரணடைந்தவுடன், பல
இழப்புகளையும் அழிவுகளையும் சந்தித்த சோளகர் தொட்டியில் அமைதி திரும்புகிறது. ஆனால் நமது மனம் அமைதி இழக்கிறது.
நாவலின் சாராம்சம்:
இந்த நாவல் சோளகர் தொட்டி பழங்குடி மக்களின் தொன்மம், விவசாயம், கடவுள் வழிபாடு, நம்பிக்கை மற்றும் வேட்டையாடுதல் போன்ற
அவர்களின் பாசாங்கற்ற இயல்பான வாழ்க்கையை
அழகாக காட்டுகிறது .
சோளகர் இன மக்களின் குடும்பவாழ்க்கை , அதாவது
திருமணம் செய்துகொள்ள விரும்பும் ஆண் ,
அவன் விரும்பிய பெண்ணை காட்டுக்குள் அழைத்து சென்று விடுவது, இறந்துவிட்ட அண்ணன் மனைவியை மறுமணம்
செய்து கொள்வது, மனதிற்குப்
பிடித்த அடுத்தவர் மனைவியை கவர்ந்து கொள்வது,
அதை அவர்கள் இயல்பாக எடுத்துக்கொண்டு அவளுக்கு மணவிலக்கு அளிப்பது போன்றவைகள் மிக
நுட்பமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொட்டி மக்களின் நிலம் இந்நாவலில் வரும் மணியக்காரர் மாரப்பா மற்றும் துரையன்
போன்றவர்களால் அபகரிக்கப்பட்டது போல் , இன்றும் தமிழகத்தின் பல பகுதிகளில்
நடந்து கொண்டு தான் வருகின்றன என்பதை நமக்கு
நினைவூட்டுகின்றன.
அதேபோல் வீரப்பன் தேடுதல் வேட்டை என்ற பெயரில் சோளகர் தொட்டி, பாலப்படுகை மற்றும்
பூதிப்படுகை போன்ற கிராமங்களில் மிக அமைதியாக வாழ்ந்து வந்த பழங்குடி மக்களின் மீது போலீசாரால் நடத்தப்பட்டதாக
சித்தரிக்கப்படும் வன்கொடுமைகளும் , பாலியல்வல்லுறவும்
மிகவும் எதார்த்தமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சத்திய மங்கலம்,
ஆசனூர் , நெயதலாபுரம்
போலீஸ் மற்றும் வனக்காவல் நிலையங்களிலும் , பண்ணாரி மற்றும் மாதேஸ்வரன் மலை போன்ற போலீஸ் கொட்டடியில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படும் சித்திரவதைகளையையும், மல்லி, மாதி, சித்தி
மற்றும் ஈரம்மா போன்ற பெண்களின் மீது நடத்தப்பட்ட பாலியியல் வன்புணர்ச்சியும், ஓர்க்சாப் என்று அழைக்கப்படும் மின்சார
அதிர்வைத்தரும் தண்டனைகளையும் மிகத்
தெளிவாகப் பதிவு செய்துள்ளார் நாவலாசிரியர். இத்தகைய வன்முறைகளை அரங்கேற்றிய போலீசார்
மீது , வாசகனுக்கு மிகப்பெரிய
தாக்கத்தை உருவாக்கி அவனுக்கு அவர்கள் மேல் கோபத்தையும் வெறுப்பையும்
ஏற்படுத்தும்.
சந்தனமரக்கடத்தல் வீரப்பனுக்கு பல கிராம மக்கள் உதவி செய்து வந்தார்கள்
என்றும் , அக்கிராம
மக்களுக்கு வீரப்பன் பண உதவி செய்து வந்தான் என்று பத்திரிக்கைகளில் பரப்பட்ட அல்லது நம்பப்பட்ட செய்தி பொய்யானது என்பதை இந்த நாவல் வெளிக்கொணர்ந்துள்ளது.
ஒடுக்கப்பட்ட மக்களின் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறலை அழகாக பதிவு செய்ததின் மூலம் தான் ஒரு மனித
உரிமை பாதுகாவலாளி என்பதை பதிவு செய்துள்ளார் தோழர்.ச.பாலமுருகன்.
இது போன்ற நாவல்கள்
தான் சமூக விழிப்புணர்ச்சி
ஏற்படுத்தும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. நான் வாசித்த மிகச் சிறந்த பத்து நாவல்களுக்குள் " சோளகர் தொட்டி
" வருகிறது என்பதை பதிவு செய்கிறேன்.
மொத்தத்தில் இந்த நாவல் வெளிக்கொணரும் சமூகத்தளமும், அதன்
எதார்த்த உண்மைகளும் , ஒடுக்கப்பட்ட
மக்களின் மேல் ஆளும் வர்க்கத்தின்
ஒடுக்குமுறையும் , ஆதிக்க மற்றும்
சுரண்டல் பேர்வழிகள் நடத்தும் அடக்குமுறையும், வாசகனுக்கு மனதில் மிக ஆழமான
துன்பதையும் , தாக்கத்தையும் , கோபத்தையும் ஏற்படுத்தும் என்பது
நிச்சயம்.
வாசிப்போர் களத்தில்: சு.கருப்பையா.
Tweet | |||||