Friday 29 June 2012

மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்


புத்தகம்: மின்னிப் புற்களும் மிதுக்கம் பழங்களும்
நூல் ஆசிரியர் :  சமயவேல்        Mob.9486102498
பதிப்பகம்: ஆழி பப்ளிசர்ஸ்
விலை :  ரூபாய் :50


கவிஞர் சமயவேல், BSNL இல் ஒரு உதவி பொறியாளர். ஏற்கனவே " காற்றின் பாடல்" மற்றும் " அகாலம்" என்ற இரண்டு  கவிதை தொகுப்பினை வெளியிட்டு இருக்கிறார். இந்நூல் அவரது மூன்றாவது தொகுப்பு. தன்னுடைய கடுமையான பணிகளுக்கிடையிலும்அவருக்கு இவ்வளவு ஆழமான கவிதைகள் எழுத நேரமும் , உத்வேகமும் இருந்திருக்கிறது. பிரபல எழுத்தாளர் கோணங்கி   இவருடைய நூல்களை பாராட்டியுள்ளது இவருக்கு எழுத்துலகில் கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரம். சக தோழன் என்ற வகையில் பெருமிதம் கொள்கிறேன்.

மனிதனின் அக உணர்வையும் , இயற்கையையும் கலை நயத்துடன் தமது கவிதைகளில் செதுக்கியுள்ளார் சமயவேல்.உண்மையிலே அவரின் பல கவிதைகள் யதார்த்தமாக இருக்கிறது. குறிப்பாக , " அவளது  மழை" என்ற கவிதையில் விரகதாபத்தைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்;


பயனற்ற அவனுடன்
துவண்ட இரவு
தராத தூக்கம்
தினமும் தொலைந்தது

மார்பில் ததும்பும் தீயில்
எந்த பண்பாட்டையும்
எரிக்க முடியும்.


தகித்தெடுக்கும் நிறைவேறாத காமத்தால் பாதை தவறும் பெண்கள் எத்தனை பேர்! . அந்த பண்பாட்டுச் சிதைவினால் எத்தனை கொலைகள்.அதை  எப்படியெல்லாம் தமிழ் தினசரிகள்  வெளிச்சம் போட்டுக்காட்டி வியாபாரம் செய்கின்றன.

அதேபோல் தினசரி மனிதன் என்ற கவிதையில் ;

புரளப் புரள
தூக்கம், கனவு, விழிப்பு மூன்றும்
புரண்டு புரண்டு விடியத் தொடங்குகிறது
அதிகாலையும், வெயிலும்  இருட்டும்
தினசரி தொடர
அழிந்தது அழிகிறது
கடந்தது கடக்கிறது
காலம் ஒரு பட்டுப்போர்வையை எடுத்து
எல்லாவற்றையும் அழகாக மூடி விடுகிறது

ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையை இதைவிட எவ்வாறு அழகாக சொல்லிவிடமுடியும்? . இந்தநூல் பற்றி வாசிப்போர்களத்தில் இன்னும் விரிவாக பேச வேண்டியுள்ளது.

------
சு.கருப்பையா.

No comments:

Post a Comment