Monday 18 June 2012

விடுதலைப் போரின் வீர மரபு



வாசிப்போர் களத்தின் இரண்டாவது கூட்டம் 16 /06 /2012  மாலை நடந்தது.  நிறைய  புதிய உறுப்பினர்கள் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. அதுமட்டும்மல்லாமல்  வாசிப்போர் களம் வளருகிறது என்பதையும் இது நிரூபிக்கிறது . இன்று புதிய இரண்டு நூல்களை தோழர் பாலகுமார் அவர்களும் , தோழர் கருப்பையா அவர்களும்  அறிமுகப்படுத்தினார்கள்.

1
புத்தகம்            விடுதலைப் போரின் வீர மரபு!
வெளியீடு        :  கீழைக்காற்று வெளியீட்டகம்
விலை               :  ரூபாய்.65
அறிமுகம்        :   சு.கருப்பையா

 ஆங்கிலேயர்களை இந்தியாவிலிருந்து விரட்டியடிக்க அரும்பாடுபட்ட உன்னதமான வீரர்கள் ஹைதர் அலி முதல் பகத்சிங் வரை மிகச் சுருக்கமாக எழுதப்பட்ட புத்தகம் இது.  புதிய கலாச்சாரம் மாத இதழ் இந்த நூலை தமது  நவம்பர் 2006 இதழில்  சிறப்பு  வெளியீடாக கொண்டு வந்தது ஒருசிலருக்கு தெரிந்திருக்கும்.

ஹைதர் அலி, திப்புசுல்தான் , கட்டபொம்மன், தூந்தாஜிவாக், விருப்பாட்சி கோபால் நாயக்கர், மருது சகோதரர்கள்,ஊமைத்துரை,தீரன் சின்னமலை, ..சி  மற்றும்  பகத்சிங் போன்ற தேச பக்த போராளிகளை பதிவு செய்திருக்கும் அதேவேளையில் , தேச துரோகிகளான தொண்டைமான், ஆர்க்காட்டு நவாபு மற்றும் சரபோஜி போன்ற துரோகிகளையும் அடையாளம் காட்டத் தவறவில்லை இந்நூல்.

தோழர் மருதையன் உள்ளிட்ட பல தோழர்கள் அரும்பாடுபட்டு இவ்வரலாறினை நமக்கு ஞாபக படித்தியுள்ளனர்.துப்பாக்கிகளுக்கு எதிராக வேல்கம்புகளையும் , பீரங்கிகளுக்கு எதிராக நெஞ்சுரத்தையும்  காட்டிப் போரிட்ட இவர்களின் வீரம் நமது  சுவாசக் காற்றை விடும் வரை நெஞ்சில் நிலைத்திருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எனது சிறுவயது முதலே திப்பு என்ற சொல் என் நாடி நரம்புகளில் முறுக்கேற்றி வீரத்தினை புகட்டி இருக்கிறதென்றால் அது மிகையாகாது. திப்புவைப் போன்று ஆங்கிலேயர்களை விரட்டவேண்டும் என்பதையே தன் வாழ்கையின் இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனைகனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை ஆங்கிலேயர்கள் பார்த்திருக்கமாட்டார்கள். தோழர் மருதையன் திப்புவைப்பற்றி நன்றாகவே பதிவு செய்திருக்கிறார்.

அதே போன்று கட்டபொம்மனை தோழர் பாலனும், மருது சகோதரர்களை தோழர் வேல்ராசனும் மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார்கள்.அதுவும் சின்னமருதுவின் திருச்சிப் பிரகடனம் காலத்தால் அழக்க முடியாத பட்டயம். கி.பி.1801 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் 16 ஆம் நாள் சின்னமருதுவால் திருச்சி மலைக்கோட்டையில் ஒட்டப்பட்ட பிரகடனத்தின் ஒரு பகுதி இப்படி இருக்கிறது, " ஐரோப்பியர்களாகிய இந்த ஈனர்களை எவ்விடத்தில் கண்டாலும் கண்ட இடத்தில் அவர்களை அழித்து விட வேண்டும்... இந்த ஈனர்களுக்கு எவனொருவன் தொண்டு ஊழியம் செய்கிறானோ அவனுக்கு இறந்தபின் மோட்சம் கிடைக்காது என்பதை நான் உறுதியாகக் கூறுவேன்...இதை எற்றுகொள்ளதாவன் வைத்திருக்கும் மீசை என்பது என்னுடைய அடிமயிருக்குச் சமமானது... இதனை எற்றுக்கொள்ளதவனுடைய பிள்ளைகள் ஐரோப்பிய ஈனப்பிறவிகளுக்குத் தன்னுடைய மனைவியைக் கூட்டிக்கொடுத்தவன் பெற்ற பிள்ளைகள் ஆவார்கள். எனவே உடம்பில் ஐரோப்பியர்களின் இரத்தம் ஓடாத அனைவரும் ஒன்று சேருங்கள்”.

 என்னே ஒரு தைரியம்!. சின்னமருது உண்மையிலே மானமிகு தம்ழ்குடிமகனே.  வாழ்கஅவனது மங்கா புகழ்பெற்ற வீரம்.

அதேபோல் திப்புவின் மறைவிற்குப் பிறகு அவரின் புதல்வர்களை சிறை வைத்திருந்த வேலூர் கோட்டையில் கி.பி.1806 ஆம் ஆண்டு  நிகழ்ந்த வேலூர் சிப்பாய் புரட்சியைப் பற்றித் தோழர் சாத்தனும், அதற்குப் பிறகு கி.பி.1857 இல்  நடைபெற்ற வடஇந்திய சுதந்திரப்போரைப் பற்றி தோழர் குப்பண்ணனும் எழுதி இருக்கிறார்கள். இந்த இரண்டு புரட்சிகளும் மிகப்பெரிய நூல்களாக தனித்தனியாகவே வெளி வந்துள்ளது. படியுங்கள் தோழர்களே ! அப்பொழுதுதான் ஜான்சிராணி, நானாசாஹிப் ,தாத்தியாதொபே போன்ற சுதந்திரப்போராட்ட வீரர்களின் வீரத்தைப்பற்றியும் அவர்களை  காட்டிகொடுத்த துரோகிகளைப்பற்றியும் ,அப்போது நிலவிய ஒற்றுமையின்மையை பற்றியும் நாம் அறிந்து கொள்ளமுடியும்.

 அடுத்து, உ.சி பற்றி நிறைய செய்திகளை வெளி கொணர்ந்திருக்கிறார் தோழர் மதிவாணன். வ.உ.சி , ஆங்கிலேயருக்கு எதிராக கப்பல் கம்பெனி  உருவாக்கியது   , தூத்துக்குடி கோரல் ஆலைக்கு எதிராக அவர் நடத்திய போராட்டம்கப்பல் கம்பெனி நஷ்டமடைந்து  போனதால் அவரின் ஏழ்மை நிலை , கோவைச்சிறையில் செக்கு இழுத்ததுகாங்கிரசின் துரோகம் போன்றவை அப்பெருமகனார்க்கு நேர்ந்த அவலத்தை படம் போட்டுக் கட்டுகிறது.   அதே போல் அவர் பெரியாரை தமது தலைவராக ஏற்றுக்கொண்டதும், அதை தந்தை பெரியார் அவர்கள் பெருந்தன்மையாக மறுத்து காங்கிரசிலே தொடர்ந்து இருக்க அவரை வேண்டிக்கொண்ட விஷயம் ஆச்சரியமான ஒன்று. மேலும் , ..சி அவர்கள் கோவைச் சிறையில் , ' பார்ப்பான் அல்லது பாண்டிய வேளாளன் சாப்பாடாக்கித் தந்தால்தான் உண்பேன்" என்று கூறியதையும் , பிற்காலத்தில் அவரின் மனமாற்றத்தையும் பதிவு செய்திருக்கிறார் மதிவாணன்.

இறுதியாக பாஞ்சால  சிங்கம்  பகத் சிங் !

எப்படி மறக்க முடியும் இவனை!  பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு ...இந்தப் பெயர்கள் இளைஞர்களின் வேதவாக்கல்லவா? கேளாத செவிகள் கேட்பதற்காக இந்தியப் பாராளுமன்றத்தில் வெடிகுண்டு வீசியதையும் , இவர்களுக்கு காந்தி மற்றும் காங்கிரஸ் செய்த துரோகத்தையும்  , கி.பி. 1931 ஆம் ஆண்டு   மார்ச் 23 ந் தேதி பகத் சிங்கை தூக்கிலிடும் போது அவன் கட்டிய நெஞ்சுரம் போன்றவற்றை அறியாத இந்தியன் யாராவது இருப்பார்களா ? .

இந்நூலை வாசித்து முடித்தவுடன் நெஞ்சு கனத்தது மட்டுமல்லாமல் கோபமும் வந்தது உண்மை;  ஆம்!. இந்தப்போர் எங்களோடு தொடங்கவும் இல்லை, எங்கள் வாழ்நாளோடு முடியப் போவதுமில்லை என்ற பகத் சிங்கின் குரல் என் செவிமடல்களுக்குள் ஒலித்து கொண்டே இருக்கிறது!

சு . .கருப்பையா., email: vasipporkalam@gmail.com , skaruppiah.bsnl@gamil.com

2
நாவல்: வேள்வித் தீ
ஆசிரியர்: எம்.வி.வெங்கட்ராமன்
பதிப்பு: காலச்சுவடு கிளாசிக் வரிசை
அறிமுகம்   . வி.பாலகுமார்

சௌராஸ்ட்ரா சிறுபான்மை சமூகத்தைப் பற்றிய முக்கியமான பதிவுகளை தன் எழுத்தின் மூலம் அழுத்தமாக பதிந்தவர் எம்.வி.வெங்கட்ராமன். இவரது “காதுகள்” நாவல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. எழுபதுகளின் மத்தியில் வெளியான நாவல் “வேள்வித் தீ” கும்பகோணத்தில் கடைநிலையிலிருந்து மத்தியதரத்துக்கு உயர்ந்த ஒரு நெசவாளனது வாழ்க்கை முறையையும் அவனது அகஅலைச்சலையும் பேசுகிறது. இடையே நெசவாளர்கள் மற்றும் அவர்களுக்குத் தொழில் தரும் முதலாளிகள் இவர்களுக்கு இடையே நடக்கும் தொழில்முறை சிக்கல்கள், போராட்டங்கள், மந்தமாகும் சந்தை நிலை, அதிலிருந்து மீண்டு வர அவர்கள் எடுக்கும் முயற்சிகள் என இந்த சமூகத்தின் அன்றைய வாழ்நிலையையும் தொட்டுச் செல்கிறது. ஆனால் கணவனைப் போற்றிப் பேணும், விகல்பமில்லாத மனதையுடைய, தன் உரிமைகளை பிறந்த இடத்தில் விட்டுக் கொடுக்காத, “நீங்க இங்க வந்தா என்ன கொண்டு வருவீங்க.. நான் பிறந்த வீடு வந்தா எனக்கு என்ன செய்வீங்க” என காரியக்காரச் சுட்டியாக இருக்கும் ஒரு இளம்பெண் ஒரு துரோகத்திற்கு பழி வாங்க என்ன முடிவெடுக்கிறாள் என்பது தான் “வேள்வித்தீ”யில் உள்ள தீ.
--- வி.பாலகுமார்



No comments:

Post a Comment