Thursday 28 June 2012

பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்


பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும்
எழுதியவர்:முனைவர்.வா.நேரு, Mobile:9443571371
வெளியீடு. மானமிகு பதிப்பகம் ,மதுரை.
விலை: ரூபாய்.60









முனைவர்.வா.நேரு BSNL இல் பணிபுரியும் தந்தை பெரியாரின் உண்மையான சீடர். சமூகப்பார்வையும், பகுத்தறிவுக் கொள்கையையும் கொண்ட இவரின்  பல கவிதைகள் "விடுதலை" ஏட்டில் வெளிவந்தன. அதை தொகுத்து  இந்நூலாக வெளியிட்டுள்ளார். படித்த பார்ப்பன நண்பரே என்ற கவிதையில் ஆரம்பித்து சிரிப்பாய் சிரிக்கிறதுவரை 27  கவிதைகள் இந்த நூலில் இடம் பெறுகின்றன. கவிதைகள் முழுவதும் பெரியாரின் கருத்துக்களை பறைசாட்டுவதாக இருந்தாலும் ,
" காதல் வலு
சேர்க்கும் ,
காதல் சமூகத்தின்
ஜாதி நோய் போக்கும்
காதல் சமூகத்தின்
மதப் பொய்மை நீக்கும்,
ஆதலினால் காதலிப்பீர்

என்று  “ஆதலினால் காதலிப்பீர் என்ற கவிதையில் எழுதியுள்ளார். அவருடைய பார்வை சரியானதே. ஆனால்  அது நடைமுறையில் சாத்தியமா? அப்படியென்றால் ஏன் சாதியின் பெயரால் 2010  ஆம் ஆண்டில் மட்டும் 1600 பேர் கொல்லப்பட்டார்கள். அதனால் இந்தியாவில் காதல் அழிக்கப்படும், வளர்க்கப்படமாட்டாது என்பது தான் உண்மை.இருந்தாலும் நேருவின் ஆசை என்றாவது ஒரு நாள் நிறைவேறும் என்று நானும் நம்புகிறேன்.
ஆனால்,
நகரத்தில் நாங்கள் வகிக்கும்
உயர் பதவியால்
உரிமை பெறுகிறோம்
உவகை கொள்கிறோம்
கிராமத்தில்
இன்னும்
சககிலியாய்
பறையராய்
பள்ளராய்
மட்டுமே
பார்க்கப்படுகிறோம்
என்று அய்ந்தே நிமிடத்தில் கவிதையில் எழுதியிருப்பது மிகச் சரிதான்.

அதேபோல் " பங்குனி உத்திரமும் பள்ளிக்கூடமும் "  என்ற அடுத்த கவிதையில்
தலைக்கட்டுக்கு
ஆயிரம் ரூபாய் வரி
ஆயிரம் தலைக்கட்டு
இருக்கு ஊரில்
ஜாம் ஜாம்னு
நடத்திடலாம்
பங்குனி பொங்கலை  …….

ஊரில் உள்ள
ஒரே ஒரு பள்ளிக்கூடம்
கரும்பலகையும்
இல்லாமல்
ஒழுகும் கூரையோடு
கேட்பாரற்றுக் கிடக்கிறது
ரொம்ப நாளாய்

அறிவைப் பெருக்கும் பள்ளிக்கூடத்தை கவனிக்காமல் , மூடநம்பிக்கையை தரும் கோவில் பண்டிகையை கொண்டாடும் அறிவிலிகளுக்கு இந்தக்கவிதை ஒரு சவுக்கடி. இக்கவிதை தொகுப்பை படித்தால் ஓரளவு சிந்திப்பார்கள் என்பது உண்மையே!

-------
சு.கருப்பையா.



1 comment:

  1. புத்தகம் சிறந்த தொகுப்பு. அதை அறிமுகப்படுத்திய விதமும் அருமை.

    வாழ்த்துகள் தோழர் நேரு !

    ReplyDelete